மாநிலங்களவை தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லை நிராகரிக்கப்படுமா? என்ற சந்தேகங்கள் நிலவிவந்த நிலையில், வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல், வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முடியும். திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையைச் சேர்ந்த சண்முகமும், வழக்கறிஞர் வில்சனும் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. பின்னர் இந்த தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட எவ்வித சிக்கலும் இல்லாத நிலையில், திட்டமிட்டப்படி வேட்பு மனுத்தாக்கல் செய்தார் வைகோ.

வைகோவின் மனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தநிலையில், இன்று அவரின் மனு ஏற்கப்பட்டுள்ளது.