ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலை குறித்து இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
1991ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இதுதொடர்பான வழக்கில், ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
இதைதொடர்ந்து, தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி ஏழு பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அத்தீர்மானம் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஏழுபேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காமால் காலதாமதம் செய்துவருகிறார் எனவும், உடனே ஏழுபேரையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி கட்சிகள், மாணவர்கள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்திவந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 9) கூடிய சட்டப்பேரவையில், ”எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானம் குறித்து ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினீர்களா?” என எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் தங்கள் வேலையை சரியாக செய்தோம் எனத் தெரிவித்தார்.
மேலும், “எங்கள் அதிகாரத்திற்குட்பட்டு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். அத்துடன் எழுவர் விடுதலை குறித்து இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்காலத்தில் செய்யாததை தாங்கள் செய்தோம்.” என்று குறிப்பிட்டார் முதல்வர்.