மும்பை நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.கே.சிவகுமாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக அரசியலில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டு, 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். ஆனால், இவர்களின் பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துள்ளார் சபாநாயகர். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஆட்சி நீடிக்குமா? இல்லை ஆட்சியில் மாற்றம் ஏற்படுமா? என்று கர்நாடக அரசியல் களத்தில் பதட்டமான சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எம்.எல்.ஏவுமான டி.கே.சிவக்குமார், ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை சந்திக்க மும்பை சென்றார். இன்று காலை முதல் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்று காத்திருந்தார் டி.கே.சிவக்குமார். ஆனால், எம்.எல்.ஏக்கள் யாரும் அவரை சந்திக்க விருப்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து டி.கே.சிவகுமார் மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா ஆகியோர் ஓட்டலுக்கு வெளியே காத்திருந்தனர்.
இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு மும்பை காவல் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனையடுத்து, ஹோட்டலுக்கு வந்த மும்பை காவல் துறையினர் டி.கே சிவக்குமார் உள்ளிட்ட சிலரைக் கைது செய்தனர்.
இதற்கிடையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு தரவேண்டும் என்றும் காங்கிரஸ், ஜனதா தளம் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்கச் சபாநாயகர் மறுத்து வருவதாகவும் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார்.