நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரே தீர்ப்பாயத்தை அமைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அமைச்சரவை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூலை 10) மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் 1956ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தீர்ப்பாயம் அமைந்தால், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளை அதிகபட்சமாக ஓராண்டிற்குள் தீர்வு காணத் திட்டமிட்டுள்ளது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட தீர்ப்பாயங்களின் நிலை கேள்விக்குறியாகும்.
தீர்ப்பாயத்தின் உத்தரவை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் எனச் சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் உத்தரவு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நிகரானது எனச் சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.