கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில், தங்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவிடக் கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது ஜூலை 16ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், “சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை நாங்கள் உத்தரவிட முடியாது” என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. தங்களின் ராஜினாமா கடிதம் மீது ஏன் இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்த வழக்கில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பு வழங்கியது. மேலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வது அதிருப்தி எம்.எல்.ஏக்களின் விருப்பம் எனக்கூறிய நீதிபதிகள், அவர்களை யாரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நாளை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கர்நாடக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.