நேற்று (ஜூலை 16) போக்குவரத்து அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, “சுங்க வரிகள் என்பது அவ்வப்போதைய மாறுதலுக்கு உட்பட்டது; ஆனால் அது எப்போதும் நிறுத்தப்பட வாய்ப்பேயில்லை; அரசிடம் பணம் இல்லை; மக்களுக்கு நல்ல சேவை வேண்டுமானால் அதனை பணம் செலுத்தித் தான் பெற வேண்டும்”. மேலும் “கடைசி 5 ஆண்டுகளில் மட்டும் 40,000 கிலோமீட்டர்களுக்கு நெடுஞ்சாலைகள் அமைத்துள்ளோம். சாலைகள் அமைக்க நிலம் கையகப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது; மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளன. அனைத்து மாநில அரசுகளும் நிலம் கையகப்படுத்த திட்டங்கள் வகுத்து ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “புது தில்லி முதல் மும்பை வரை புதிய பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம்; இச்சாலை ராஜஸ்தான், குஜராத் மற்றும் மஹாராஸ்டிரா மாநிலங்களின் மிகவும் பின் தங்கிய மற்றும் பழங்குடியினர் பகுதிகள் வழியே அமைக்கப்படும்; நிலம் கையகப்படுத்தலில் ரூபாய் 16,000 கோடிகள் சேமிக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே சுங்க வரிகள், நிலம் கையகப்படுத்தலின் போது சரியான இழப்பீடு வழங்கப்படாமல் இழுத்தடித்தல், விவசாய நிலங்களைக் கையகப்படுத்தல் போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் அமைச்சரின் இவ்வாறான கரார் பேச்சு பாசிச போக்கை உறுதிப்படுத்துகிறது.