வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மகன் கதிர் ஆனந்த் இன்று (ஜூலை 17) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேலூர் மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்ததாக அத்தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தொகுதிக்குத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்திலும் களத்தில் இருக்கின்றனர்.

கடந்த 11ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை அதிமுக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நாளை (ஜூலை 18) வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளாகும்.

இந்நிலையில், இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். வரும் 19ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 22ஆம் தேதி கடைசி நாள்.