பாபர் மசூதி-அயோத்தி வழக்கில் மூன்று பேர் கொண்ட சமரசக் குழுவின் இடைக்கால அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 18) தாக்கல் செய்யப்பட்டது.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி கட்டப்பட்டு இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் என இந்துக்கள் கூறிவரும் நிலையில், அங்கு ராமர் கோயில் கட்ட இந்துத்துவவாதிகள் முயற்சி செய்துவருகின்றனர். இந்த சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி பிரச்சினையில் சமரசம் பேச மத்தியஸ்தர் குழுவை அமைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் இக்குழு செயல்படும் என்றும், இதில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கைக் கடைசியாக ஜூலை 11ஆம் தேதி விசாரித்தது. அப்போது, இன்று (18ஆம் தேதி) சமரசக் குழு, தாங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வந்த சமரசக் குழு தனது இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 18) தாக்கல் செய்துள்ளது. இதைதொடர்ந்து, வரும் 31ஆம் தேதி சமரசக் குழு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.