தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம், தற்போது கோளாறுகள் எல்லாம் சரிசெய்யப்பட்டு இன்று(22.07.2019) மதியம் 2:43 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான கவுண்டவுன் நேற்று மாலை 6:43 மணிக்குத் தொடங்கியது.
சந்திராயன் 2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) என்று மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. முதலில் பூமியை நீள்வட்டப்பாதையில் வலம் வந்து பின்னர் நிலவின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்துவதை Lunar Orbit Insertion (நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்துதல்) என்பர். பின்னர் நிலவினை வலம்வருதல் Lunar Bound Orbit என்று அழைக்கப்படும். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதே சந்திராயன் 2-இன் பணி. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் உலகின் முதல் விண்கலம் இதுவே.
பழைய அட்டவணைப்படி சந்திராயன் 2 பூமியை 17 நாட்கள் வலம்வருவதாக இருந்தது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட அட்டவணைப்படி பூமியை 23 நாட்கள் வலம்வரும். பின்னர் நிலவின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டு நிலவினைச் சுற்றிவரும். லேண்டர் ஆர்பிட்டரிலிருந்து 43வது நாளில் பிரிந்து நிலவின் மேற்பரப்பை 48வது நாளில் (செப்ட் 7) சென்றடையும். லேண்டர் மற்றும் ரோவர் தரையிறங்கும் பகுதியில் மேன்சினஸ் – சி (Manzinus C) மற்றும் சிம்பிளியஸ் – என் (Simpelius N) ஆகிய இரண்டு பெரும் நிலவுப் பள்ளங்கள் உள்ளன. இவற்றின் இடைப்பட்ட சமதளத்தில்தான் விக்ரம் என்ற லேண்டரும், பிரக்யான் என்ற ரோவரும் தரையிறங்க உள்ளன. தரையிரங்கும் நாளில் நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி படரத்தொடங்கும். லேண்டர் மற்றும் ரோவர் 14 நாட்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளன. இவை இரண்டுமே சூரியசக்தியால் இயங்குபவை என்பதால் இவற்றை இயக்க சூரிய ஒளி மிகவும் அவசியம்.
உலகமே உற்றுநோக்கும் சந்திராயன் இன்னும் சிலமணிநேரங்களில் விண்ணில் பாய உள்ளது. இந்த சாதனைப் பயணம் வெற்றியடையும்பட்சத்தில் இந்தியா விண்வெளியி ஆய்வில் புதிய மைல்கல் பதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.