இந்திய விண்வெளி ஆய்வு மையம் உலக அரங்கில் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்திராயன், மங்கள்யானைத் தொடர்ந்து தற்போது விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் -2 ஒரு மைல்கல் சாதனை. செவ்வாய், சந்திரன் என்று தொடரும் இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் மற்றுமொரு சாதனையாக சூரியனை ஆய்வு செய்யப்போகிறது இஸ்ரோவின் “ஆதித்யா எல்-1”.
2019 – 2020ஆம் ஆண்டிற்குள் இந்த ஆதித்யா எல்-1 தயாரிப்புப் பணிகளை முடித்து விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னர் நாசா, ஜெர்மனி விண்வெளி மையம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இதில் வெற்றிகண்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியா முதன்முறையாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர் ரக செயற்கைக்கோளை தயாரித்துவருகிறது. இத்திட்டத்திற்கு ஆதித்யா எல்-1 என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
ஆதித்யா எல்-1: எல்-1 என்றால் என்ன?
எல்-1 எனப்படுவது லெக்ராஞ்சியன் புள்ளி 1 என்பதன் சுருக்கம். வான்வெளியில் இரண்டு பெரும் வான்பொருட்களுக்கு இடையில் உள்ள ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் அவற்றின் இடையேயுள்ள ஓர் சிறிய வான்பொருள் நிலையான இடம் ஒன்றை தக்கவைத்துக்கொள்ளும் இடமே லெக்ராஞ்சியன் புள்ளி எனப்படும். எல்-1, எல்-2, எல்-3, எல்-4 மற்றும் எல்-5 என ஐந்து லெக்ராஞ்சியன் புள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் எல்-1 என்ற பகுதியில் இருந்து இந்திய செயற்கைக்கோள் ஆதித்யா-1 தனது ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளவுள்ளதனால் தான் ஆதித்யா எல்-1 என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
என்ன செய்யப்போகிறது ஆதித்யா எல்-1?
சூரியன் ஒளிக்கோளம் – Photosphere (உள்ளடுக்கு), நிறக்கோளம் – Chromosphere (இரண்டாம் அடுக்கு), வளிக்கோளம் – Corona (வெளிப்பகுதி) என்று மூன்று அடுக்குகளைக் கொண்டது. அதன் உட்கருவின் வெப்பநிலை 15 இலட்சம் கெல்வின். சூரியனின் வெளிப்புறத்திலுள்ள “கொரோனா – Corona” பகுதியை ஆய்வு செய்யவுள்ளது. இந்த கொரோனா சூரியனின் வளிமண்டலமாகக் கருதப்படுகிறது. சூரியனின் ஒளிக்கோளத்தைச் (Photosphere) சுற்றி பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்குப் பரந்துள்ள ப்ளாஸ்மா நிறைந்த பகுதியே கொரோனா. கொரோனாவின் வெப்பநிலை 10 இலட்சம் கெல்வின் என்று அளவிடப்பட்டுள்ளது. ஆனால் சூரியனின் ஒளிக்கோளத்தின் (Photosphere) வெளிப்புற வெப்பநிலை 6000 கெல்வின் தான். ஒளிக்கோளத்தைவிட அதனைச் சுற்றியுள்ள ப்ளாஸ்மா நிறைந்த கொரோனா எப்படி இவ்வளவு அதிகமான வெப்பநிலையை அடைகிறது என்பது இன்னும் விடைகாணப்படாத கேள்வியாக எஞ்சியுள்ளது. இதுபற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே ஆதித்யா எல்-1 திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சூரியனின் ஒளிக்கோளம், நிறக்கோளம் பற்றியும் கூடுதல் ஆராய்சிகளை மேற்கொள்ளும் நோக்கிலே ஆதித்யா எல்-1 வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா எல்-1 கொண்டுசெல்லும் தாங்குசுமைகள்:
ஆதித்யா எல்-1 ஆய்வு செய்வதற்காக சில முக்கியமான தாங்குசுமைகளை விண்ணிற்குக் கொண்டுசெல்கிறது. அவற்றுள் முக்கியமானது Coronograph எனப்படும் ஒளிவட்ட வரைவியே. இது கொரோனாவை ஆய்வு செய்யப் பயன்படும் கருவி.
- இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) உருவாக்கிய Visible Emission Line Coronograph (VELC) – கொரோனா பெருந்திரள் உமிழ்வு வரைவி.
- பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம் தயாரித்த Solar Ultraviolet Imaging Telescope (SUIT) – சூரிய புற ஊதா உருவரைவுத் தொலைநோக்கி
- இயற்பியல் ஆராய்ச்சியகம் உருவாக்கிய Aditya Solar wind Particle Experiment (ASPEX) – ஆதித்யா சூரிய காற்றுத்துகழ் ஆராய்ச்சிக் கருவி
- விக்ரம் சாராபாய் வானியல் மையத்திலுள்ள வானியற்பியல் ஆய்வகம் (SPL, VSSC) உருவாக்கிய Plasma Analyser Package for Aditya (PAPA) – ஆதித்யா ப்ளாஸ்மா பகுப்பாய்வித் தொகுப்பு
- இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் (ISAC) உருவாக்கிய Solar Low Energy X-ray Spectrometer (SoLEXS) – குறைந்த ஆற்றல் எக்ஸ்ரே நிறமாலைமானி
- இஸ்ரோச் செயற்கைக்கோள் மையம் (ISAC) மற்றும் உதய்பூர் சூரிய ஆய்வகம் (USO) இணைந்து தயாரித்த High Energy L1 Orbiting X-ray Spectrometer – அதிக ஆற்றல் எல்-1 சுற்றுப்பாதை எக்ஸ்ரே நிறமாலைமானி
- மின் ஒளியியல் அமைப்புகள் ஆய்வகம் (LEOS) தயாரித்த Magnetometer – காந்தமானி
இவையெல்லாம் ஆதித்யா எல்-1 விண்ணுக்குக் கொண்டுசெல்லும் தாங்குசுமைகள்.
இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் இஸ்ரோவால் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்ற ஆதித்யா எல்-1, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தில் பெரும் சாதனையாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.