தமிழகத்தைச் சேர்ந்த மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா ஆகிய 5 எம்பிக்களின் பதவிக்காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. இவர்களோடு சேர்ந்து தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்யும் கவிஞர் கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றதையடுத்து தன் மாநிலங்களவை பதவியிலிருந்து முன்னரே விலகிவிட்டார். இதனையடுத்து இன்று தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டனர்.
அஇஅதிமுக உறுப்பினர்களான ஏ.முகமதுஜான், என்.சந்திரசேகரன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் திமுக உறுப்பினர்களான என்.சண்முகம், பி.வில்சன், மதிமுகவின் தலைவர் வைகோ ஆகிய 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் பாமகவைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தவிர மற்ற அனைவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் என்று அழைக்கப்பட்ட வைகோ 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார். அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோதே பலரும் கரவொலியெழுப்பி அவரை வாழ்த்தினர். மேலும் அவர் பதியேற்றவுடன் சிலர் ஒன்ஸ்மோர் கேட்டது அவையில் கலகலப்பை உண்டாக்கியது.
வைகோ மாநிலங்களவைக்குத் தேர்வானதையடுத்து கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துப்பா ஒன்றை பதிவிட்டுள்ளார். வடக்கிலே நீயோர் கிழக்கு என்றும் சிறுத்தையெனவும் வர்ணித்து அவர் வெளியிட்ட கவிதை:
“வாழ்த்துக்கள் வைகோ…
சிறுத்தைபோல் நடந்து சென்றாய்
செம்மொழி உறுதி பூண்டாய்
நிறுத்தவே முடியவில்லை
நீள்விழி வடித்த கண்ணீர்.
போர்த்திறம் பழக்கு – விட்டுப்
போகட்டும் வழக்கு – உன்
வார்த்தைகள் முழக்கு – நீ
வடக்கிலே கிழக்கு”
இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது சிலாகிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.