சபாநாயகர் முடிவுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 17 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து, ஆளும் கட்சியான மஜத-காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தன்னுடைய பெரும்பான்மையை இழந்தது. குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினமா செய்தார். அதன்பின் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், ஆளுநர் அழைப்பை ஏற்று பாஜக தலைவர் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.

இதனிடையே அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில் சபாநாயகரின் முடிவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ், மகேஷ், சுயேச்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.