எழுவர் விடுதலை விவகாரம் தொடர்பாகத் தமிழக ஆளுநர் உரிய முடிவெடுக்க வலியுறுத்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, இன்று (ஜூலை 29) நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர் எம்.பி. திருமாவளவன் மற்றும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் 28 ஆண்டுகளாக சிறையிலுள்ளனர். இதுதொடர்பான வழக்கில், ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்திருந்தது உச்ச நீதிமன்றம். இதைதொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் ஒன்றை இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திவருகிறார்.
இந்நிலையில், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் மற்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் மனு அளித்தனர்.
”பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விவகாரத்தில் ஆளுநர் கையொப்பமிட்டால் விடுதலை என உச்ச நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. தாமதித்தால் வேறெங்கு செல்ல முடியும்?” எனத் தெரிவித்த அற்புதம்மாள், “எனது மகன் விடுதலை ஆவான் என நம்பியே 28 ஆண்டுகளைக் கழித்துவிட்டேன்; ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.” எனப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.