ஆணவக் கொலையை தடுக்க தமிழக அரசு துண்டு பிரசுரம் கூட வழங்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதியன்று தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அன்றைய தினம் நடைபெற்ற விசாரணையில், தமிழகத்தில் ஆணவக்கொலைகளை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஆணவப் படுகொலையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கையளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப்பிரிவு அமைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக நலத்துறையின் கீழ் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆணவக்கொலையை தடுக்க விழிப்புணர்வுக்காகத் தமிழக அரசு ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கூட வெளியிடவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஆணவக்கொலை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், காவல் நிலையங்களில் சிறப்புப் பிரிவு அமைப்பது சாத்தியமில்லாத விஷயம் எனவும் நாளை உதவி ஐ.ஜி பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறி வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.