உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உள்பட 30 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், தனக்கு 16 வயதாக இருந்த போது எம்.எல்.ஏ குல்தீப்பை வேலை நிமித்தமாக சந்திக்கச் சென்றபோது, அவரை குல்தீப், பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அப்பெண் தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து, அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற அப்பெண்ணின் தந்தை இறந்தார். அதற்கு சாட்சியாக இருந்தவரும் மர்மமான முறையில் இறந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண், அவரது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, அவர் வந்த காரின் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் அந்த பெண்ணின் தாயார் மற்றும் உறவினர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான வழக்கு நேற்று சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 10 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிஐ. மேலும் கிரிமினல் சதி, கொலை, கொலை முயற்சி மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகியவற்றின் கீழ் 30 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இதற்கிடையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று (ஜூலை 31) உன்னாவ் பாலியல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குடும்பத்தார் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.