உன்னாவ் பாலியல் வழக்கை இன்னும் 7 நாட்களில் முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்திருந்தார். அதைதொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார் மற்றும் வழக்கறிஞர் பயணித்த கார் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில், அப்பெண்ணின் தாயார் மற்றும் உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அப்பெண்ணும் அவரது வழக்கறிஞரும் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்குக் காரணம் சிறையிலுள்ள எம்.எல்.ஏ குல்தீப் எனக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதனிடையே சிறையிலடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ குல்தீப் செங்காரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது பாஜக தலைமை. இந்நிலையில், இன்று உன்னாவ் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, வழக்கு விசாரணையை அடுத்த 7 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டது.
விசாரணைக்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் பெண் ஒரு முறை பாலியல் வன்கொடுமைக்கும், மற்றொரு முறை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டார் என உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது சிபிஐ.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாவலர்களான 3 போலீசாரை இடைநீக்கம் செய்து உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், லக்னோவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணை, விமானம் மூலம் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றவும் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்காலிக நிவாரணத் தொகையாக 25 லட்சம் ரூபாயை உத்தரப் பிரதேச அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அத்துடன் இப்பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், டெல்லி நீதிமன்றத்தில், இந்த வழக்கை தினசரி விசாரித்து 45 நாட்களுக்குள் முடிக்கவேண்டும் எனவும் மேலும் இந்தப் பெண்ணின் விபத்து தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.