ராஜஸ்தான் மாநிலத்தில் ஆணவக்கொலைக்கு மரண தண்டனையும், கும்பல் வன்முறைக்கு ஆயுள்தண்டனையும் வழங்கம் சட்ட முன்வரைவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் சட்டமன்ற அமைச்சர் சாந்தி தாரிலால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு சட்ட முன்வரைவுகளை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்து உரையாற்றினார். கும்பல் கொலைகளுக்கு ஆயுள்தண்டனையும், ஆணவ கொலை குற்றங்களுக்கு மரணதண்டனையும் வழங்கும் இந்த சட்டவரைவுகளை ஆளும் காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
The Rajasthan Prohibition of Interference with the Freedom of Matrimonial Alliances in the Name of Honour and Tradition Act, 2019 என்ற இந்த சட்டம் மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனையும் 5லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது. கும்பல் படுகொலைக்கு எதிரான – The Rajasthan Protection from Lynching Bill, 2019 என்ற சட்டத்தின்படி ஆயுள்தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதமும் அதனை வீடியோ எடுத்து வெளியிடுபவருக்கு 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
சாதி மத மறுப்பு திருமணம் செய்வோருக்கு அச்சுறுத்தலோ கொலை மிரட்டலோ விடுப்பவர்களுக்கு இந்த சட்டம் கடும் தண்டனையை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கனவே உரிமையியல் வழக்கு எண் 754/2016 தேஹஸின் பூனே வாலா Vs இந்திய ஒன்றியம் வழக்கில், உச்சநீதிமன்றம் நாட்டில் நிகழும் கும்பல் கொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டுமென கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாதி மத வெறுப்புணர்வை பரப்புவதை முளையிலேயே கிள்ளி எறியவகையில் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளைக் காக்கவும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. குற்றவாளிகளை பிடியாணை இல்லாமலே கைது செய்யலாம் என்பதும் அவர்களுக்கு பிணை கிடையாது(non-bailable) என்பதும் இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.