முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (வயது 67) மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவித்து, பிரதமர் மோடி உள்ளிட்ட எம்பிக்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுஷ்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவு பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவிற்குப் பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்திய அரசியலின் மிகச்சிறப்பான அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளதாக இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களின் துயரத்தையும் துடைத்தவர் சுஷ்மா எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுஷ்மா சுவராஜின் மறைவிற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது சேவை இந்திய மக்களின் நினைவுகளில் நீங்காமல் கலந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பாகுபாடுகளைக் கடந்து அனைவருடனும் நட்பு பாராட்டிய சிறந்த தலைவர் என ராகுல் காந்தி தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். “ஒரு பெண்ணாகத் தனது பொதுவாழ்வில் உயரத்தை எட்டி, சிறப்பாகச் செயலாற்றியவர் சுஷ்மா சுவராஜ்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“பெண் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக பெண்மையோடு கூடிய ஆளுமை அந்த நாட்டின் தலைவிக்குள்ளே ஒரு குடும்பத்தலைவியை நான் சுஷ்மா சுவராஜ் மேடம் அவர்களிடம் கண்டிருக்கிறேன். அன்பு அறிவு ஆற்றல் ஆளுமை எளிமை அனைத்தும் கொண்ட தலைவி. என் நெஞ்சம் கண்ணீர் வடிக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.

டெல்லியில் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர். 7 முறை நாடாளுமன்ற எம்பியாக இருந்தார். கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், பின்னர் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். இந்திரா காந்திக்குப் பின்னர் வெறியுறவுத் துறை அமைச்சராக இருந்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ்.

1977ஆம் ஆண்டில் எம்.எல்.ஏ.வாகத் தேர்வுபெற்று, 25 வயதிலேயே அமைச்சராக நியமிக்கப்பட்டார் சுஷ்மா. ஹாரியானா மாநில பாஜக தலைவராக இருந்த சுஷ்மா, பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கேபினட் அமைச்சர், பாஜக பொதுச்செயலாளர், செய்தித் தொடர்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த பாஜகவின் முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் சுஷ்மா சுவராஜ்.

2014-19 காலகட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா இருந்தபோது, வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட பல்வேறு இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வந்தார். ஈரானில் மாட்டிக் கொண்டிருந்த 168 இந்தியர்களை மீட்கப் பெரும்பணியையும், விதிகளை தளர்த்தி பாகிஸ்தான் சிறுமிக்கு ஓராண்டு விசா கொடுத்து இதய அறுவ சிகிச்சை மேற்கொள்ளவும் வழி செய்தவர் சுஷ்மா சுவராஜ்.

இன்று கூடிய மாநிலங்களவையில், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமர் மோடி உள்ளிட்ட எம்பிக்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.