சமீபத்தில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் அடர்ந்த காட்டு பகுதியில் படமாக்கப்பட்டது. நாடே புல்வாமா தாக்குதலால் நிலை குலைந்திருந்தபோது இந்திய பிரதமர் மோடி மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியின் படபிடிப்பில் இருந்தார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடியின் செயல்பாடுகள் பலவும் நெட்டிசன்களுக்கு வைரல் கண்டெண்ட்டாக மாறியுள்ளது.

முதலைக் குஞ்சும் நரேந்திரமோடியும்:

நிகழ்ச்சியில் மோடி சொன்ன ஒரு கதை ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. ‘சின்ன வயதில் ஒரு முதலைக் குஞ்சை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததாகவும் அதற்கு மோடியின் தாய் அந்த முதலைக் குஞ்சை ஏன் தாய் முதலையிடமிருந்து பிரித்து எடுத்து வந்தாய் என்று கடிந்துகொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் முதலைக் குஞ்சை மீண்டும் எடுத்த இடத்திலேயே விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கதைத்தான் நெட்டின்சன்களுக்கு தீனிபோடுவதாக அமைந்துள்ளது. இந்தக் கதையை ஏற்கனவே மோடி, கடந்த 2012-ஆம் ஆண்டு சொல்லியிருக்கிறார். அப்போது இந்த விஷயம் இவ்வளவு ட்ரெண்டாகவில்லை. இணைய சேவை, நாட்டின் பல பகுதிகளில் வளர்ந்துள்ளதால் சமூகவலைத்தளங்களில் செயல்படுவோரின் எண்ண்ணிக்கையும் அதிகரித்துள்ளது இதன் காரணமாக,  எவ்வளவு பெரிய தலைவரானாலும் எளிதில் கேலிக்குள்ளாகின்றனர். இச்சூழலில் மோடி அந்தப் பட்டியலில் முன்னரே இருந்துவருவதால் மீண்டும் வைரல் கண்டெண்ட்டாகியுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் ஆமைக்கறி, அரிசிக் கப்பல் போன்ற கதைகள் மிகவும் பிரபலம். இந்தக் காவியக் கதைகளின் வரிசையில் மோடியின் முதலைக் கதையும் தற்போது இணைந்துள்ளது.