திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையைத் தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும் எனச் சுதந்திர தின விழாவில் அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

முதல்வராகப் பதவியேற்று மூன்றாவது முறையாகச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் பழனிசாமி. பின்னர் விழாவில் உரையாற்றிய முதல்வர், அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். இரண்டு புதிய மாவட்டங்கள் சேர்க்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்கிறது.

இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி திணிக்கப்படக் கூடாது என்று பேசிய முதல்வர், இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மக்களைப் பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அரசு அதனை எதிர்த்து மக்கள் நலனைப் பாதுகாக்கும் என்றார் அவர்.

“கங்கை சீரமைப்பு திட்டம் போல் காவிரி ஆற்றை சீரமைக்க ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி, ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதுபோல் நீர்மிகை மாநிலமாக விரைவில் உருவாகும்” என்று உரையாற்றினார் முதல்வர்.

”சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் ரூ.15,000 லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு தாரர் குடும்ப ஓய்வூதியம் ரூ.7,500 லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்படும்” எனத் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, சுமார் 1 கோடி பக்தர்கள் அத்தி வரதரைத் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.