கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்குநாள் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. உயிரிழந்தவர்களில் தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேடு பணியில் ஈடுபட்ட மீட்பு படையினரிடம் பல உடல்கள் உருக்குலைந்த நிலையில் கிடைக்கின்றனர்.
இந்நிலையில் மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர். இங்கு 60-க்கும் மேல் உயிருடன் புதைந்து போய் இருக்கலாம் என்கிறார்கள். இதுவரைக்கும் இங்கு 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து ரொம்ப மோசமாக உள்ளது. அதனால் போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆஸ்பத்திரிக்கு கூட கொண்டு செல்ல முடியவில்லை. மிகவும் உருக்குலைந்த அந்த உடல்களை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முடியவில்லை. கண்டெடுத்த இடத்தில் வைத்தே போஸ்ட் மார்ட்டம் செய்யலாம் என்றால் தீவிரமாக பெய்யும் மழையில் அச்செயலை மேற்கொள்ளமுடியவில்லை. போஸ்ட் மார்ட்டம் செய்யவும் வேற இடம் இல்லை!
இந்நிலையில் போலிஸார் அருகில் இருந்த மஸ்ஜித்துல் முஜாகிதீன் பள்ளிவாசலுக்குச் சென்று, கமிட்டி தலைவர் முகமது அப்துல் ரகுமானிடம் போஸ்ட்மார்ட்டம் செய்ய ஏதாவது இடம் பக்கத்தில் கிடைக்குமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அப்துல் ரகுமான், “என்ன இப்படி கேட்டுட்டீங்க.. நம்ம பள்ளிவாசல் இருக்கும்போது, வேற இடம் ஏன் தேடி அலையறீங்க?” என்று சிறிதும் பதிலளித்தார்.
இதையடுத்து, பள்ளிவாசல் அருகில், ஒரு மேஜையை இழுத்து போட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்ய வசதி செய்து தந்துள்ளனர் அங்கிருக்கும் முஸ்லிம்கள். 2 உடல்கள் இங்குவைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டன. ஆனால் நாளுக்கு நாள் புதைந்த உடல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கவும், அதற்கு இடம் இல்லாமல் போனதால் உடனே பெண்கள் தொழுகை நடத்தும் இடத்தையும் விட்டுகொடுத்தனர். இதுவரைக்கும் 30 பேரின் உடல்கள் இந்த பள்ளிவாசலில் வைத்துதான் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.
இச்செயலால் கேரள மக்கள் நெகிழ்ந்து போய்யுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன்கூட நேற்றைய சுதந்திர தினவிழாவில் இதை மேற்கொள் காட்டி எடுத்து பேசி, மதசார்பின்மைக்கு உன்னத எடுத்துக்காட்டு என்று இதை பாராட்டி உள்ளார்.