மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு சாதாரண நடைமுறை மாற்றமாகத் தெரியும் அக்னிபாதை என்ற ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் திட்டம் மிக ஆழமான பிரச்சினைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 17 முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 45 ஆயிரம் பேர் முதல் 1.25 லட்சம் பேர் வரை நாலாண்டுகளுக்கு ராணுவப் பணியில் அக்னிவீர் என்ற பெயரில் சேர்க்கப்பட்டு அவர்களில் கால்வாசிப் பேர் ராணுவத்தில் தொடர முக்கால் வாசிப் பேர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதே இந்த திட்டம். நாடெங்கும் ராணுவப் பணியினை வேலை வாய்ப்பாகக் கருதி காத்திருக்கும் இளைஞர்கள் இந்த நான்காண்டு தற்காலிக பணி நியமனம் என்ற கருத்தால் கொந்தளித்து எழுந்தார்கள். குறிப்பாக பீஹார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மிகப்பெரிய கலவரங்கள் வெடித்துள்ளன. எதிர்கட்சிகள் பலவும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இவ்வளவு முக்கியமான திட்ட த்தை பாராளுமன்றத்திலோ, பாராளுமன்ற நிலைக்குழுவிலோ விவாதிக்காமல் அரசு நடைமுறைபடுத்துவதென்பது மக்களாட்சிக்கு எதிரானது என்பதை முதலில் நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.

 

நிலையான ராணுவம் எதற்குத் தேவை?

பண்டைய காலத்தில் அரசர்கள், பேரரசர்கள் நிலையான படை அணியினரை வைத்துக்கொண்டதில்லை. சிறிய அளவில் மெய்க்காவல் படையொன்று அரசருடன் இருக்கும். மற்றபடி அன்னிய அரசர்கள் படையெடுத்தாலோ அல்லது அயல் நாட்டின்மீது அரசர் படையெடுத்துச் சென்றாலோ முரசறிவித்து படைக்கு ஆட்களை சேர்ப்பார்கள். விவசாயிகள், போரில் நாட்டமுள்ளவர்கள், ஏற்கனவே ஓரளவு ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பார்கள். வேல் கம்புகளையும், வாள், கேடயங் களையும் எடுத்துக்கொண்டு போருக்கு செல்வார்கள். வேறு வகையில் சொன்னால் குடிமக்களே போர்க் காலத்தில் ராணுவமாக மாறுவார்கள். மற்ற நேரத்தில் அவர்கள் விவசாயம் உள்ளிட்ட பல்வேறுப் பணிகளை பார்ப்பார்கள். முழுமையான தொழில் முறை போர் வீரர்கள் என அதிகம் பேர் இருக்கமாட்டார்கள் என்பதே வரலாறு வரலாற்று ஆசிரியர்கள் பின்னாளில்அப்படி உருவானவர்கள். அவ்வப்போது வெவ்வேறு நாட்டு மன்னர்களின் படைகளில் பணியாற்றும் கூலிப் போர் வீரர்கள் ஆனார்கள். ஒட்டுமொத்தமான இத்தகைய வரலாற்றுக் காலகட்டத்திலும் போர் என்பது ஒரு தனி மனிதன் கையாளும் வேல், வில், வாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித்தான் நிகழ்ந்தது. யானைகளும், குதிரைகளும், ரதங்களும் படை நகர்விற்கு அதிக ஆற்றலை வழங்குபவையாக அமைந்தன. அந்தக் காலங்களில் ஒரு அரசர் வசிக்கும் நகரம் என்பது கோட்டை கொத்தளங்களால் சூழப்பட்டிருந்தது. அது அவரது அரசாட்சியின் மையமாக இருந்தது. அவர் அரசாட்சி செய்யும் நிலபகுதியின் எல்லைகள் திட்டவட்டமாக இருந்ததில்லை. மலைத்தொடர்கள், நதிகள், காடுகள், நீர் நிலைகள், பாலைவனங்கள் போன்றவை இயற்கையான எல்லைகளாக அமைந்தன. ஆனால் இறையாண்மை முழுவதும் அரசனிடம் குவிக்கப்பட்டிருந்ததால், ஒரு பண்டைய அரசிற்குக் குடிகள் உண்டே தவிர குடி நபர் என்ற கருத்தாக்கம் கிடையாது. சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வாழ்தல் வேண்டி ஊழ்வினைத் துரப்ப கண்ணகி குடிபெயர்ந்தால் அந்த அரசரின் ஆளுகைக்குள் வந்துவிடுவார்; அவ்வளவுதான். ஒருவர் எந்த நிலப்பகுதியை சேர்ந்தவர் என்பது அரசரை வைத்து மட்டும் அடையாளம் கொண்டதில்லை. உதாரணமாக, காவிரி தீரத்தில் வாழ்பவன் பாண்டிய மன்னனால் ஆளப்பட்டாலும் சோழ நாட்டானாக அறியப்படலாம். பாண்டிய நாட்டுக் குடி நபராக மாறுவதில்லை. ஆங்கிலத்தில் சிட்டிசன்ஷிப் எனப்படும் கருத்தாக்கம் அந்த காலத்தில் கிடையாது; சப்ஜெக்ட் அல்லது குடி என்ற அரசனுக்குப் பணிந்த நிலையே உண்டு.

நவீன தேசிய அரசு தோன்றியவுடன் இறையாண்மை குடிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எல்லோரும் இன்னாட்டு மன்னர் என்ற கருத்தாக்கத்தில் ஒவ்வொருவரும் குடி நபர்கள் ஆகிறார்கள். இவர்கள் இந்த தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது பிறப்பு சார்ந்த அடையாளமாக மாறுகிறது. அதன் முக்கிய தகுதி அந்த நாட்டின் எ ல்லைக் குள் பி ற க்க வேண் டு ம் . அதனால் நிலத்தின் ஒவ்வொரு அடியும் இந்த நாட்டை சேர்ந்தது என்று வரையறுக்கப்பட வேண்டும். தேசத்தின் இருப்பு என்பது அதன் எல்லைகளின் இருப்புதான். அதனால் இது நிலப்பரப்பு தேசியமாகிறது (territorial nationalism). நவீன காலத்தில் வரைபடங்களை உருவாக்கும் அறிவியல் துல்லியமடைந்தபோது, தேசத்தின் எ ல்லைகள் திட்டவட்ட மாக வகுக்கப்பட்டன. அவ்விதம் கோடு போட்டுத் தேசங்களைப் பிரித்தபி ற கு, அந்த எல்லைகள் பாதுகாக்கப்படுவது நாட்டின் இறையாண்மைக்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றது. இந்த எல்லைகளைப் பாதுகாக்கவே நிலையானதொரு ராணுவம் பல்வேறு நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. பாகிஸ்தானோ, சீனாவோ டில்லியைக் கைப்பற்றினால்தான்இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து என்பது இல்லை. அவை கார்கில் போன்ற உறைபனி சிகரத்தைக் கையகப்படுத்தினாலோ, லடாக்கிலோ, அருணாசல் பிரதேஷிலோ யாரும் வசிக்க முடியாத மலைப்பகுதிகளைக் கைப்பற்றினாலோ கூட இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்தான். ஏனெனில் தேசத்தின் எல்லைகளே, தேசத்தின் இருப்பு. ஒரு இஞ்ச்நிலம் பறிபோனால் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். இதனால் பல லட்சம் ராணுவ வீரர்கள் சதா சர்வ காலமும் எல்லைகளைக்காத்துக்கொண்டு நிற்க வேண்டும் என்பது நியதி. இது தவிர உள் நாட்டுக் கலவரங்களைக் கட்டுப்படுத்தவும் ராணுவம் தேவைப்படலாம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, 1965-ஆம் ஆண்டு, தமிழத்தில் பொள்ளாச்சி என்ற சிறு நகரத்தில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களைச் சுட்டுக்கொன்றதை நாம் மறக்க முடியாது. ராணுவம் தேசிய இறையாண்மையின் வெளிப்பாட்டு வடிவம். குடி நபர்கள் அதன் உள்ளீட்டு வடிவம்.

இந்திய ராணுவத்திற்கு அக்னி வீர்கள் தேவையா?

இந்திய ராணுவம் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ராணுவம். பதினாலு லட்சம் பேர் இதில் பணியாற்றுகிறார்கள். அதில் பன்னிரெண்டு லட்சம் பேர் தரைப்படையினர்தான். இதைத் தவிர அவசர தேவைக்கு அழைக்கும் வண்ணம் ரிசர்வ் ஆர்மி அல்லது டெர்ரிடோரியல் ஆர்மி என்ற பெயரில் எட்டு லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஓரிரு மாதங்கள் பயிற்சி கொடுத்து வைத்துக்கொள்வார்கள். பொதுவாக ஜவான்கள் அல்லது சிப்பாய்கள் எனப்படும் அதிகாரிகள் அல்லாத கீழ்ப்படிதல் நிலையில் மட்டும் இருப்பவர்களின் பணிக் காலம் 15 ஆண்டுகள். ஓரிரு ஆண்டுகள் நீடிக்கும் முயற்சி இருந்தது.

பல ஆண்டுகளில் ஐம்பதாயிரம் பேர் வரை பணியிலிருந்து விடுப்பு பெற இன்னொரு ஐம்பதாயிரம் பேர் வரை பணியில் சேர்க்கப்படுவது நடந்துள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு நிலைத்த ராணுவம் நமது வட நாட்டு எல்லைகளைக் காக்கவே முக்கியமாக தேவைப்படுகிறது. இயற்கை அரணாக இமாலய மலைத்தொடர் இருந்தாலும் அங்கும் தொடர்ந்த காவலும், ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பாகிஸ்தான் மற்றும் சீனா ஊடுருவல் நிகழ்த்தக் கூடாது என்ற அச்சம்தான் காரணம். இந்த இரண்டு நாடுகளுடனும் இந்தியாவிற்கு கடந்த காலத்தில் போர் மூண்டுள்ளது என்பதால் இவற்றை அண்டை நாடுகள் மட்டுமல்ல, எதிரி நாடாகவும் பார்க்க வேண்டும் என்பதே பாதுகாப்பு வல்லுனர்களின் கருத்து.

இப்படி தேசத்தின் எல்லைகளைப் பாதுகாப்பதுதான் மிக முக்கியமானது என்றால் இப்போது இருப்பது போலவே பதினைந்து ஆண்டுகாலப் பணியில் சேர்க்கலாம்தானே? ஏன் நாலாண்டுகால பணியாகக் குறைக்க வேண்டும்? அதற்கு முக்கிய காரணம் நாலாண்டு பணியில் தொகை ஊதியம்தான்; அதைவிட முக்கியம், ஓய்வூதியம் கிடையாது. அதாவது 18 வயதில் அக்னிவீராக சேரும் இளைஞன் மாதம் முப்பதாயிரம் ரூபாய் தொகுப் பூதியத்தில் துவங்கி, 22 வயதில் மாதம் 40 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்துடன் விடுவிக்கப்படுவான். அவன் கையில் பத்து லட்ச ரூபாய் விடுவிப்பு தொகையாக வழங்கப்படும். அதற்குப் பின் அவன் வேறு பணிகளில் ஈடுபட்டுப் பிழைத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு காரணமாக சொல்லப்படுபவை இரண்டு. ஓய்வூதியத்திற்கு ஆகும் செலவை மிச்சப்படுத்தலாம் என்பது முக்கியமானது. ஒன்றேகால் லட்சம் கோடி ஓய்வூதியமாக செலவாவதாக வலைத்தள செய்திகள் சொல்கின்றன. நாட்டின் மொத்த பட்ஜெட் செல்வினம் 35 லட்சம் கோடி. அதில் ஒன்றேகால் லட்சம் கோடி என்பது கிட்டத்தட்ட 4% எனலாம். இது விரயமான செலவா என்பது முக்கிய கேள்வி. ராணுவத்தில் சேரும் வீரன் உயிரைப் பணயம் வைக்கிறான். இதுவரை நமக்கு சொல்லப்பட்ட தேசபக்த கதையாடல் எல்லாம் இந்த எல்லையில் வாடும் வீரனைக் குறித்த பிரலாபங்கள்தான். அவ்வளவு முக்கியமான பணியில் தேசத்திற்கு சேவை செய்து வருபவனுக்கு மீதமுள்ள வாழ்நாளுக்கு ஓய்வூதியம் வழங்குவது குற்றமா என்ன? மேலும் அந்த ஓய்வூதியம் என்பதை அவன் செலவு செய்யத்தானே போகிறான்? அது பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கத்தானே செய்யும்? நூறு நாள் வேலை திட்டம், மற்றும் வறியவர்களுக்கான உதவித்தொகை எனப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மக்களிடையே பணப்பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தையும் உள்ளடக்கியவைதானே? அப்படியிருக்கையில் ஏன் திடீரென்று ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்? இது தேசபக்தி கதையாடலுக்கு நேர் எதிரான சிந்தனையாக்த்தானே இருக்கிறது? நாட்டின் மொத்த செலவில் நான்கு சதவீதத்தைக் கூட எல்லையில் இறையாண்மையைக் காப்பற்றுபவர்களுக்குத் தரக்கூடாதா? இது என்ன வகையான தேசபக்தி? இதன் பொருள் என்னவென்றால் நாட்டின் ஏழைகள் தேசபக்தியுடன் தொகுப்பூதியத்தில் நாலாண்டுகாலம் வேலை செய்துவிட்டு ஓய்வூதியமும் இல்லாமல் வீதிக்க வரவேண்டும். வசதி வாய்ந்த சமூகத்தினர் அதிகாரிகளாகப் பதவி வகித்து நல்ல ஊதியம், ஓய்வூதியத்துடன் தேசத்திற்கு சேவை செய்வார்கள். ஜாதி சமூகத்தின் சிந்தனை ராணுவத்தில் தொடர்வதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது.

சரி, மற்றொரு காரணமாகக் கூறப்படுவது என்னவென்றால் ராணுவத்தில் பணிபுரிபவர்களின் சராசரி வயது இப்போது முப்பத்திரெண்டாக இருக்கிறது. இவ்வாறு நாலாண்டுகள் பணிபுரியும் முறை அதிகரித்தால் சராசரி வயது குறையும் என்பதாகும். எந்த நாலாண்டு பணியில் சேர்பவர்கள் அதிக பட்சம் 23 வயதுக்குட்பட்டு இருப்பார்கள்; குறைந்த பட்சம் 17 வயது என்பதால் சராசரி வயது முப்பதுக்குக் கீழாக வந்துவிடும். இளம் ராணுவமாக மாறிவிடும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இந்த வாதத்தில் ஏற்படும் குழப்பம் என்னவென்றால் ராணுவத்துக்குத் தேவை அனுபவம் வாய்ந்த வீரர்களா, இளம் வீரர்களா என்பதுதான். பல ஆண்டுகள் எல்லைப்பகுதிகளில் வாழ்ந்து, காவல் பணியாற்றியவர்கள் அதிக பயனுள்ளவர்களாக இருப்பார்களா அல்லது பணியில் சேர்ந்து ஓரிரு ஆண்டுகளே ஆனவர்கள் அதிக பயனுள்ளவர்களாக இருப்பார்களா? இளமையாக இருப்பதால் என்ன ஆதாயம் கிடைக்கப் போகிறது முப்பது வயதானால் ராணுவ வீரர்கள் உடல் தளர்ந்து விடுகிறதா என்ன? இதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்களே?

இது போல அக்னி வீர் என்ற பெயரில் நாலாண்டு பணி புரியும் தற்காலிக ராணுவ வீரர்களால் எந்த வகையில் ராணுவத்தின் ஆற்றல் அதிகரிக்கும் என்பது முற்றிலும் தெளிவற்று இருக்கிறது. பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இது ராணுவத்தின் ஆற்றலைப் பன்மடங்கு குறைக்கும் என்று கூறுகிறார்கள். சற்றே யோசித்துப் பார்த்தால் இது போன்ற காரணங்கள் எல்லாம் சப்பைக் காரணங்கள் என்று தோன்றும். காரணம் இதுதான்.

செலவு அதிகம், ஏவுகணைகள், டிரோன் விமானங்களின் காலத்தில் நிலைப்படைக்குத் தேவை அதிகம் இல்லையென்றால் ஆள் சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாமே? அக்னிவீர்களில் கால்வாசிப்பேர் நீண்ட காலப் பணியில் சேர்வார்கள் என்றால், அந்தக் கால்வாசிப் பேரை மட்டும் தேர்ந்தெடுத்தால் போதுமே? ஏன் நாற்பத்தையாயிரம் பேரை எடுத்துவிட்டு முப்பத்திரண்டாயிரம் பேரை நாலாண்டுகளில் விடுவிக்க வேண்டும்? இதனை ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இந்த திட்ட த்தின் முக்கியமான அம்சமே விடுவிக்கப்படும் அக்னிவீர்கள்தான் என்று தோன்றுகிறது.

நாஜி ஜெர்மனி முன்னுதாரணம்

இந்த வயது வரம்பு, நான்காண்டு பணி, அதன்பின் விடுவிப்பு ஆகியவை நாஜி ஜெர்மனியின் SS என்ற சிறப்புப் படையின் முன்மாதிரியைக் கொண்டிருப்பது அனைவர் கவனத்தையும் ஈர்க்கிறது. ஹிட்லர் மேற்பார்வையில் இயங்கிய இந்தப் படைப்பிரிவு இளைஞர்களை நாஜி கருத்தியலுக்குத் தகவமைப்பதில் பெரும் பங்கு ஆற்றியது. ஜெர்மனி மொத்த ஐரோப்பாவையும் தன்கைப்பிடியில் கொண்டுவர முனைந்ததால் அதற்கு ஏராளமான வீரர்கள் தேவைப்பட்டார்கள்; உள் நாட்டிலும் முழு கட்டுப்பாட்டை நிலைபடுத்தவேண்டியிருந்தது. யூதர்களைத் தனிமைப்படுத்தி அழித்தொழிக்க வேண்டியிருந்தது. இதற்கெல்லாம் வசதியாக பணி புரியும் படைப்பிரிவை உருவாக்கும் தேவை இருந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் அறிந்தும், அறியாமலும் சேர்ந்து பின்னர் வாழ்நாள் முழுவதும் அதற்காக வெட்கப்பட வேண்டி வந்தது.

ஒன்றிய அரசை இன்று ஆள்வது பாரதீய ஜனதா கட்சி என்பதும், அவர்கள் மத அடையாளவாதம், எந்த மதத்தவர் உண்மையான இந்தியன் என்பது போன்ற சிந்தனைகள் கொண்டவர்கள் என்பதால் இந்த நாஜிகால ஒற்றுமை பலரையும் தொந்தரவு செய்வது இயல்பு. ஒவ்வொரு ஆண்டும் விடுவிக்கப்படும் முப்பதாயிரம், நாற்பதாயிரம் அக்னிவீர்கள் இந்தியாவில் ஒரு பாசிச படையணியாக மாற்றப்படுவார்களோ என்ற ஐயப்பாடு எழத்தான் செய்கிறது.

இந்த ஒப்பீடு அதீதமானது என்று தோன்றலாம். ஆனால் ஏற்கனவே ராம் சேனா, அனுமான் சேனா என்று பல பெயர்களில் அமைப்புகள் இயங்குகின்றன. இவற்றின் பேரால் தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷ் உள்ளிட்ட பல சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் அரசியல் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த அமைப்புகள் இந்துத்துவ கருத்தியலை ஆளும் கட்சியுடன் பகிர்ந்துகொள்கின்றன. இந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு கட்சித் தலைவர்களுடன் தொடர்புகள் உள்ளன. இதெல்லாமே ஒரு பாசிச சமூகம் உருவாக முயல்வதின் அறிகுறிகள்.

இந்திய அரசியலை விவாதிக்கும் பல மத்தியதர வர்க்க சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் உண்மையிலேயே இந்த அரசியல் படுகொலைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டபோது டில்லியில் சிந்தனையாளர்கள், கலை இலக்கியவாதிகளெல்லாம் பேரணி நடத்தினார்கள். பலர் சாகித்திய அகாடெமி விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் கூட எத்தகைய அரசியல் சூழலில் இப்படிப்பட்ட அரசியல் கொலைகள் நடக்கின்றன என்பதைக் குறித்து ஊடக வெளியில் செயல்படுபவர்கள் கவலைப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. இன்றைக்கு கெளரி லங்கேஷுக்கு நடப்பது நாளை நமக்கே நடக்கலாமே என்று அவர்கள் நினைப்பதில்லை. காரணம், எந்தக் கருத்தியலுடன் நாம் சமரசம் செய்துகொண்டு பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை என்றுதான் தோன்றுகிறது. இதுதான் இந்த நாட்டின் மிகப்பெரிய பலவீனம்.

இப்படிப்பட்ட அரசியல் சூழலில் ஒவ்வொரு ஆண்டும் விடுவிக்கப்படும் அக்னிவீர்கள் எவ்வாறெல்லாம் பயன்படலாம் என்பதைக் குறித்து நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது. அவர்களிடம் நிறைவேறாத ராணுவக் கனவுகள் இருக்கலாம். தாங்கள் நீண்டகாலப் பணிக்குத் தேர்வு செய்யப் படாதது குறித்த தாழ்வு மனப்பான்மை அவர்களை வன்முறைப் பாதையில் செலுத்தலாம். நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகள் பணி செய்து வெளியில் வருபவர்களால் பிரச்சினை இருக்காது. ஆனால் என்னுடன் பணியில் சேர்ந்த இன்னொருவன் நீண்டகாலப் பணிக்குத் தேர்வாகிவிட்டான், நான் நிராகரிக்கப்பட்டுவிட்டேன் என்ற எண்ணம் தோற்றுவிக்கும் உளவியல் ஆபத்தானது. அது கருத்தியல் பயிற்சிக்கும், சமூக ராணுவ குழுக்களுக்கும் வழி வகுக்கலாம் என்ற அச்சம் தவிர்க்கவியலாதது.

அக்னிவீர்களுக்கு வேலை தருவதாகப் பல கார்ப் பெரேட் முதலாளிகள் கூறுகிறார்கள். என்னவேலை கொடுப் பார்கள் என்பதில் தெளிவில்லை. ஒரு வேளை கார்ப்ப ரேட் தனிப்படைகளைத் தங்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கிக் கொள்வார்களோ என்னவோ. இதெல்லாமே தவிர்க்கவியலாத ஐயங்கள்தான். ஏனெனில் இந்த அக்னிவீர் திட்டம் தேவையற்று புகுத்தப்படுவதாக இருப்பதுதான்.

எந்த அடிப்படையில் பணி நீடிப்பு செய்யப்படும்?

இறுதியாக இந்த திட்ட த்தின் மிகப்பெரிய பலவீனம் அதனுள் பொதிந்திருக்கும் நிறுவன ரீதியான ஆபத்துதான். கால்வாசிப்பேர் நீண்டகாலப் பணிக்கு செல்வார்கள், முக்கால்வாசிப்பேர் நாலாண்டுகள் முடிவில் விடுவிக்கப்படுவார்கள் என்றால் எந்த அடிப்படையில் இந்த தேர்வு நடக்கும்? யார் இந்தத் தேர்வினை செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில் காவலர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சியின்போது நிகழும் கொடூரமான அரசியல் குறித்து “டாணாக்காரன்” என்ற ஒரு திரைப்படம் வெளியாகியிருந்தது. அதைப் பார்த்தவர்களுக்கு இந்தப் பயிற்சிக்காலத்தில் செயல்படும் அதிகாரம் எவ்வளவு கூர்மையானது என்பது புரிந்திருக்கும். ராணுவத்தில் கேட்கவே வேண்டியதில்லை. நாலாண்டுகள் முடிவில் தன் வாழ்வின் எதிர்காலம் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் இளைஞர்கள் எவ்விதமான பாதிப்புகளுக்கு உட்படுவார்கள், அதிகாரிகளால் எந்த விதமாகவெல்லாம் சுரண்டப்பட வாய்ப்பு உண்டாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

இதன் விளைவாக ராணுவத்தில் ஊழலும், ஒழுங்கீனமும் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்பதை மறுக்கவே முடியாது. நாலாண்டு முடிவில் பணி நீடிப்பு நிகழாவிட்டால் ஊரில் நம்மைத் தாழ்வாக நினைப்பார்கள், குடும்பத்தினர் தாழ்வாக நினைப்பார்கள் என்ற அச்சம் ஒரு இளைஞனை எதற்கும் தயாராக இருக்கும் சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும். அப்போது அவனை சுரண்ட விரும்பும் வல்லூறுகளுக்கு வேட்டைக் காடாக மாறுவான். இந்தியாவில் நீக்கமற நிறைந்திருக்கும் ஜாதீய மன நிலைக்கு மீண்டும் தன் கொடூரங்களை அரங்கேற்ற புதியதொரு களம் உருவாகும். இது ராணுவத்தைப் பலவீனப்படுத்துவதில்தான் முடியும்.

நம் முன் உள்ள கேள்வி

மேலே தொகுக்கப்பட்டுள்ளவை துவக்க நிலை கேள்விகள்தான். ஆனால் இதைத் தொடர்ந்து நீங்கள் சிந்தித்தால், தரவுகளைத் தொகுத்துப் பரிசீலித்தால் மேலும் மேலும் பல ஆழமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். சுருங்கச்சொன்னால் மக்களாட்சியில் ராணுவமும், சிவில் சமூகமும் கலக்கக் கூடாது. ஏனெனில் ராணுவம் வன்முறையைப் பயிற்றுவிக்கும் அமைப்பு. சிவில் சமூகம் எந்த ஒரு கருத்து மாறுபாடானாலும் வன்முறையற்று விவாதிக்கவேண்டிய பண்பினை வளர்த்துக்கொள்ளும் இடம். சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் இடம். இதில் ஏற்கனவே காவல்துறை என்ற ஒன்று கடுமையான பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டுதான் உள்ளது. சிவில் சமூகத்தின் அங்கமாகவும், அதே சமயம் ஓரளவு வன் முறையை செலுத்தக் கூடியதாகவும் உள்ள காவல் துறையைக் கட்டுப்பாடில் வைக்க அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சாத்தான்குளம் லாக்-அப் மரணங்கள் மிக சமீபத்திய உதாரணம்.

இத்தகைய நிலையில் பணியிலிருந்து நாலாண்டுகளில் விடுவிக்கப்படும் அக்னிவீர்களின் பெருக்கம் சிவில் சமூகத்தின் சம நிலையைக் குலைக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இது தேவையற்ற, ஆபத்தான் முயற்சி.

இது போன்ற தவறான முன்னெடுப்புகளைக் குறித்து மிகுந்த பொறுப்புடனும், ஆழமாகவும் சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் இன்றைக்குத் தொடங்கும் இந்த முயற்சியின் விளைவுகள் சமூகத்தில் வெளிப்பட பத்தாண்டுகள் ஆகலாம். அதற்கு மேலும் ஆகலாம். ஆனால் இது மெதுவாகச் செயல்படும் விஷம். இதைத் தவிர்ப்பதே நாட்டுக்கு நல்லது.

இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் நாம் காந்தியை நினைவுகூர வேண்டியுள்ளது. இந்த தேசத்தின் நெறியாக அஹிம்சையை உருவாக்க நினைத்தார். தன் உயிரையும் அதற்காக ஈந்தார். ஆனால் வன்முறையின் கவர்ச்சி யாரையும் விடுவதாக இல்லை. வெறும் நாலாண்டுகாலப் பணிக்காக ஒரு இளைஞன் ராணுவப் பயிற்சி பெறுவதன் அபத்தம் ஒருவருக்கு உறைக்கவில்லையென்றால் அதுவே நமது பலவீனத்தின் ஊற்றுக்கண்.