உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்னால்

    எனக்கிருந்த முகத்தை 

    நான் தேடிக்கொண்டிருக்கிறேன்

Yeats, A Woman Young and Old

 

1829, ஃபிப்ரவரி ஆறு அன்று, காச்சோ ராணுவத்தினரின் ஒரு படைப்பிரிவு, லோபெஸின் கட்டளையின்கீழ் இயங்கிய படையோடு இணைந்துகொள்ளும் வடக்குநோக்கிய தங்களின் வீறுநடையில் நாளெல்லாம் லாவாசேயால் (Lavalle) விரட்டப்பட்டவர்கள், பெர்காமினோவில் இருந்து ஒன்பது அல்லது பத்து மைல்கள் தொலைவில், அதன்பெயர் தாங்கள் அறிந்திராத கால்நடை வளர்ப்புப்பண்ணையில் தங்கினார்கள். ஏறத்தாழ விடியற்பொழுதில், அவர்களுள் ஒருவன் அச்சுறுத்தும் ஒரு தீக்கனாவைக் கண்டான், மேலும், உறங்குவதற்கென அவன் படுத்திருந்த லாயத்தின் மங்கலான நிழல்களுக்குள், குழப்பமிகுந்த அவனது கூக்குரல் அவனோடு படுக்கையைப் பகிர்ந்திருந்த பெண்ணையும் உலுக்கி எழுப்பியது. அவன் என்ன கனா கண்டானென்பது ஒருவருக்கும் ஒருபோதும் தெரியவரவில்லை. ஏனென்றால் அன்று மதியம் நான்குமணிபோல காச்சோக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள், சுவாரெஸ்ஸின் குதிரைப்படையைச் சேர்ந்த தனிப்பிரிவால். இருபது மைல்களுக்கும் அதிகமாக நீடித்துப் பின் முடிவுற்ற ஒரு துரத்தலில், உயரமான சதுப்புநிலப் புற்களுக்கு மத்தியில், அங்கு அந்த மனிதன் ஒரு சேற்றுப்பள்ளத்துக்குள் செத்துப்போனான். பெருவிய மற்றும் பிரேசிலியப் போர்களில் பயன்பாட்டில் இருந்ததொரு கொடுவாளால் அவனுடைய கபாலம் பிளக்கப்பட்டு. அந்தப்பெண்ணின் பெயர் இஸியோரோ க்ரூஸ். அவளுக்குப் பிறந்த மகனுக்கு தாதியோ இஸியோரோ எனும் பெயர் வழங்கப்பெற்றது.

அவனுடைய ஒட்டுமொத்த தனிப்பட்ட வரலாற்றையும் விவரிப்பது இங்கு எனது நோக்கமல்ல. அவன் வாழ்க்கையை முழுமைசெய்யும் பற்பல பகல்களிலும் இரவுகளிலும், ஒற்றையிரவு மட்டுமே எனக்கு முக்கியம்; மற்றதைப் பொறுத்தமட்டில், அந்த இரவைப்பற்றிய முழுமையான புரிதலுக்குத் தேவையானதை மட்டும் நான் சொல்வேன். புகழ்பெற்ற ஒரு கவிதையின் அங்கமாக இந்த உட்கதை விளங்குகிறது – துல்லியமாகச் சொல்வதெனில், “அனைத்து மக்களுக்கும் அனைத்து சங்கதிகளும்” (முதல் கொரிந்தியன்ஸ் 9:22) எனும் அர்த்தத்தை வந்தடைந்திருக்கும் ஒரு கவிதையின் அங்கம், அப்போதிருந்து கிட்டத்தட்ட முடிவேயற்ற மாறுபாடுகளோடும் வடிவுருக்களோடும் சில நெகிழ்பிறழ்வுகளும் அதன் பக்கங்களுக்குள் வாசிக்கப்பட்டு வருகின்றன. தாதியோ இஸியோரோவின் கதையை ஆவணப்படுத்திய பலரும் – அவர்கள் நிறைய உள்ளனர் – அவனுடைய குணநலத்தின் மீது பரந்து-விரிந்த சமவெளிகளுக்கு இருந்த பாதிப்பை அழுத்தமாகச் சொல்கிறார்கள், ஆனால் மிகச்சரியாக அவனைப்போன்ற காச்சோக்கள் பிறந்ததும் இறந்ததும் பரான்யாவின் வனங்களடர்ந்த ஆற்றங்கரைகளிலும் மலைகளை முதுகெனக்கொண்ட உருகுவே நாட்டிலும்தான். அவன் வாழ்ந்தது, அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும், மீட்சியேயற்ற காட்டுமிராண்டித்தனம் நிறைந்தவோர் உலகில். 1874-இல், திடீரென்று பரவிய சின்னம்மையால் அவன் மரித்தபோது, ஒரு மலையின் மீதோ அல்லது வாயு விமானத்தின் மீதோ அல்லது காற்றாலைக்குழாயையோ அவன் கண்கொண்டு ஒருபோதும் பார்த்ததேயில்லை. 1848-இல், ஃப்ரான்சிஸ்கோ சேவியர் அசீவீடோவின் கால்நடைப்பண்ணையில் இருந்து கிளம்பிய கால்நடைகளோடு அவன் ப்யூனஸ் ஐருக்குச் சென்றான். மற்ற கால்நடைஓட்டிகள் நகருக்குள் சென்று கண்மூடித்தனமாகச் செலவழித்தார்கள்; க்ரூஸோ, ஓரளவு எச்சரிக்கையானவனாக, கால்நடைப்பட்டிகளுக்கு அருகாமையிலிருந்த ஒரு கீழ்த்தர விடுதியை விட்டு விலகி வேறெங்கும் சுற்றப் போகவில்லை. அங்கு பலநாட்களை அவன் கழித்தான், தன்னந்தனியாக, தரையில் படுத்துறங்கி, தனக்கான மதுவை வடித்துக்கொண்டு, புலர்காலையில் எழுந்து, பிறகு அந்திப்பொழுதில் படுக்கைக்குச் சென்றான். அவன் புரிந்து கொண்டிருந்தான் (வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு, சொல்லப்போனால், புரிதலுக்கும் அப்பாற்பட்டு) தன்னால் நகரத்துக்கு ஈடுகொடுக்கமுடியாதென்பதை. கால்நடைஓட்டிகளுள் ஒருவன், மிதமிஞ்சிக் குடித்திருந்த காரணத்தால், அவனைக் கிண்டல் செய்யத்தொடங்கினான். க்ரூஸ் அவனைக் கண்டுகொள்ளவில்லை, ஆனால் வீடுதிரும்பும் வழியில் பலமுறை, நெருப்புக்களியாட்டத்தில் அமரும் இராப்பொழுதுகளில், மற்றவன் தனது ஏளனங்களைத் தொடர்ந்தபடி இருந்தான், ஆகவே க்ரூஸ் (அதுவரைக்கும் அவன் சினத்தையோ எரிச்சலையோ வெளிக்காட்டியிருக்கவில்லை) அவனைத் தனது கத்தியால் குத்திச்சாய்த்தான்.

தப்பியோடும்போது, க்ரூஸ் ஒரு சதுப்புநிலப் புதர்க்காட்டுக்குள் ஒளியும் நிலைக்குத் தள்ளப்பட்டான். சில இரவுகளுக்குப் பின்னர், திடுக்கிட்டு வீறிட்ட ஒரு ப்ளோவரின்1  அலறல்கள் காவலர்களால் அவன் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதைச் சொல்லி அவனை எச்சரித்தன. புற்களின் அடர்செறிவில் தன்னுடைய கத்தியைப் பரிசோதித்தான், பிறகு, பாதங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமலிருக்க, குதிமுள்களை அவன் கழற்றியெடுத்தான். சிறைப்படுவதைவிட சண்டையிடுவதை அவன் தேர்ந்தெடுத்த காரணத்தால், தானாகவே அவனுடைய முன்னங்கையில் காயப்பட்டுக்கொண்டான், தோளிலும், பிறகு இடதுகையிலும். தனது விரல்களுக்கிடையில் உதிரம் சொட்டுச்சொட்டாக வடிவதை அவன் உணர்ந்தபோது; முன்னெப்போதையும்விடத் தீவிரமாகச் சமர்புரிந்தான், தேடுதல்குழுவின் மிகக் கடினமான உறுப்பினர்களைப் படுமோசமாகக் காயப்படுத்தினான். புலர்காலையை நெருங்கும் நேரத்தில், உதிர இழப்பால் சோர்வுற்றவனாக, அவனுடைய ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. ராணுவம் அந்நாட்களில் ஒருவிதத் தண்டனைஅமைப்புபோல் இயங்கியது; வடமுனையின் ஒரு புறக்காவல் அரணில் பணிபுரிய க்ரூஸ் அனுப்பப்பட்டான். எளிய வீரனாக, குடிமைப்போர்களில் அவன் பங்குபெற்றான், சிலநேரங்களில் அவன் பிறந்த மாகாணத்துக்கு ஆதரவாகவும், சிலநேரங்களில் எதிராகவும். ஜனவரி இருபத்து-மூன்றில், 1856, கார்டோசோ புதர்க்காடுகளில், சார்ஜெண்ட் மேஜர் யூசிபியோ லாப்ரிதா தலைமையில் இருநூறு இந்தியர்களோடு போரிட்ட முப்பது வெள்ளையர்களில் அவனும் ஒருவன். இந்த நிகழ்வின்போது ஓர் ஈட்டியால் அவன் காயமுற்றான்.

தெளிவற்றதும் கடினமானதுமான அவனுடைய வாழ்வின் கதை முழுக்க இடைவெளிகளால் நிரம்பியது. 1868 வாக்கில், மீண்டும் ஒருமுறை பெர்காமினோவில் அவனைப்பற்றி நாம் கேள்விப்படுகிறோம், ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அல்லது சேர்ந்து வாழ்ந்ததாக, ஒரு மகனுக்குத் தகப்பனாக, உடன் சிறு கைப்பிடி நிலத்தின் உரிமையாளனாக. 1869-இல், உள்ளூர்க்காவலர்களின் தலைவனாக அவன் நியமிக்கப்பட்டான். தனது கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக்கொண்டிருந்தான், மேலும், அந்நாட்களில், தன்னை ஒரு மகிழ்ச்சியான மனிதன் எனவும் அவன் எண்ணியிருக்கக்கூடும், உண்மையில் உள்ளூர அப்படி இல்லாதபோதும். (அங்கு அவனுக்காகக் காத்திருந்தது, எதிர்காலத்துக்குள் மறைந்து, முழுமுற்றான பிரகாசத்துடன் கூடிய ஓர் இரவு – இறுதியாக தனது முகத்தைத் தானே கணநேரம் அவன் பார்க்க நேர்ந்த ஓர் இரவு, இறுதியாக தனது பெயரைத் தானே அவன் கேட்ட ஓர் இரவு. முழுக்கப் புரியும்போது, அந்தயிரவு அவனுடைய கதையை வெறுமையானதாக்குகிறது அல்லது உண்மையைச் சொன்னால், அவ்விரவின் ஒருகணம், ஒருசெயல், ஏனென்றால் செயல்களே நமக்கானக் குறியீடுகள்.) எந்த வாழ்வும், எத்தனை நீளமானதாகவும் அல்லது குழப்பமானதாகவும் இருந்தாலும், குறிப்பிட்டுச்சொன்னால் ஒரேயொரு கணத்தால் நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கும் – அந்தக்கணத்தில்தான் ஒரு மனிதன் கண்டுபிடிப்பான், என்றென்றைக்குமாக, தான் யாரென்பதை. மாவீரன் அலெக்ஸாண்டர் தன்னுடைய எஃகுபோன்ற உறுதியான எதிர்காலத்தை அக்கிலிஸ் பற்றிய இட்டுக்கட்டிய கதையில் கண்டடைந்ததாகச் சொல்வார்கள், மேலும் ஸ்வீடனைச் சேர்ந்த பனிரெண்டாம் சார்ல்ஸ், அலெக்ஸாண்டரின் கதையில் தன்னுடையதை தாதியோ இஸியோரோ குரூஸுக்கு, எப்படி வாசிப்பதென்று தெரியாதவனுக்கு, இவ்வெளிப்பாடு ஒரு புத்தகத்தால் வழங்கப்படவில்லை; அதுவொரு மனிதவேட்டையில் அதுவும் தான் வேட்டையாடிக் கொண்டிருந்த ஒரு மனிதனிடம் இருந்தே தான் யாரென்பதை அவன் கற்றுக்கொண்டான். அந்தச் சங்கதி இவ்வகையில்தான் நிகழ்ந்தது:

1870, ஜூன் மாதத்தின் இறுதிநாட்களின்போது, இரண்டு மனிதர்களைக் கொன்ற ஒரு குற்றவாளியைப் பிடித்து வரும்படி அவனுக்கு ஆணைகள் கிட்டின. அந்த மனிதன் தெற்குமுனையிலிருந்த கலோனல் பெனிடோ மாச்சாடோவின் படைகளை விட்டுத் தப்பியோடியவன்; ஒரு விபச்சாரவிடுதியில், குடியின் ஆதிக்கத்தின்கீழ் நிகழ்ந்த தகராறில் அவன் ஒரு கருப்பனைக் கொன்றிருந்தான், மேலும், இன்னொரு தகராறில், ரோஜாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவனையும். கடைசியாக லகூனா கொலோராடாவுக்கு2 அருகில் அவன் தென்பட்டான் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. காச்சோ ராணுவத்தினர் ஒன்றுகூடியிருந்ததும் இதே இடத்தில்தான். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு, தங்களின் சதையை வல்லூறுகளுக்கும் நாய்களுக்கும் அவர்கள் நல்கிய துயர சாகசத்திற்குக் கிளம்புவதற்கு முன்னால். இந்தக் குறிப்பிட்ட இடத்திலிருந்துதான் மேனுவெல் மெசாவும் கிளம்பிவந்தான், பிற்காலத்தில் ப்யூனஸ் ஐரின் மத்தியசதுக்கத்தில் சுடுபடையணிக்கு முன்னால் நிறுத்தப்பட்டபோது அவனது வார்த்தைகளை மூழ்கடிக்க முரசுகள் முழங்கப்பட்டன; இந்தக் குறிப்பிட்ட இடத்திலிருந்துதான் க்ரூஸைப் பெற்றவனும் சேற்றுப்பள்ளத்தில் செத்துப்போனவனுமான யாரென்றறியாத மனிதனும் கிளம்பிவந்தான், பெருவிலும் பிரேசிலிலும் போர்க்கள நிகழ்வுகளைப் பார்த்திருந்த ஒரு கொடுவாளால் அவனுடைய கபாலம் பிளக்கப்பட்டது. க்ரூஸ் அந்த இடத்தின் பெயரை மறந்திருந்தான். தற்போது, தெளிவற்றதும் குழப்புவதுமான ஓர் அசௌகர்யத்திற்குப்பிறகு, அது அவனுக்கு நினைவுவந்தது.

வீரர்களால் துரத்தப்படுபவனாக, குதிரையின் முதுகிலமர்ந்து முன்பின்னாக மாறிமாறிப் பயணிப்பவனாக, வேட்டையாடப்பட்ட அந்த மனிதன் நீளமான ஒரு புதிர்ப்பாதையை நெய்திருந்தான், ஆனால் எல்லாவற்றையும் மீறி, ஜூலை பனிரெண்டின் இரவில், படைகள் அவனைத் தேடிக்கண்டடைந்தன. உயரமான நாணற்புதர்களுக்குக் கீழே அவன் புகலிடம் தேடிக்கொண்டிருந்தான். இருள் கிட்டத்தட்ட ஊடுருவமுடியாததாக இருந்தது; க்ரூஸும் அவனுடைய ஆட்களும், மறைவாகவும் கால்நடையாகவும், புதர்ச்செறிவுகளை நோக்கி முன்னேறினார்கள், தளும்பியவாறிருந்த அதன் மத்தியப் பகுதியில்தான் மறைந்திருந்த அம்மனிதன் காத்திருந்தான் அல்லது உறங்கிக்கொண்டிருந்தான். திடுக்கிட்ட ஒரு ப்ளோவர் ஓர் அலறலை வெளிப்படுத்தியது. இந்தத்தருணத்தை ஏற்கனவே வாழ்ந்திருக்கும் உணர்வு தாதியோ இஸியோரோ க்ரூஸுக்கு இருந்தது. வேட்டையாடப்பட்ட மனிதன் தனது மறைவிடத்தை விட்டு வெளியேறி அவர்களோடு சண்டையிட வெட்டவெளிக்கு வந்தான். க்ரூஸ் அந்த விகாரமான மனிதனை உற்றுணர்ந்தான் – அதீதமாக வளர்ந்த கேசமும் வெளுத்ததாடியும் அவனது முகத்தைத் தின்றழிப்பதாகத் தோன்றியது. அதன்பிறகு தொடர்ந்த சண்டையை விவரிப்பதில் இருந்து ஒரு வெளிப்படையான காரணம் என்னைத் தடுக்கிறது. படையிலிருந்துத் தப்பியோடியவன் க்ரூஸின் ஆட்களில் பலரையும் மோசமாகக் காயப்படுத்தினான் அல்லது கொன்றான் என்பதை மட்டும் நான் வெறுமனே சுட்டிக்காட்டுகிறேன். க்ரூஸ், இருளுக்குள் அவன் சண்டையிட்டபோது (அவனுடைய உடல் இருளுக்குள் சண்டையிட்டபோது), புரிந்துகொள்ளத் தொடங்கினான். ஒரு விதி மற்றொன்றைவிடச் சிறந்ததல்ல என்பதை அவன் புரிந்துகொண்டான், ஆனால் ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளிருப்பது எதுவோ அதற்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்பதையும். தன்னுடைய தோளின் புரிகுழலும் தன்னுடைய சீருடையும் தற்போது தனது பாதையின் நடுவேயிருப்பதை அவன் புரிந்துகொண்டான். தனது உண்மையான விதி ஒரு தனித்த ஓநாயாக இருப்பதுதான், மந்தையை வழிநடத்தும் நாயாக இருப்பதல்ல என்பதையும் அவன் புரிந்துகொண்டான். எல்லைகளற்ற சமவெளியின் மீது பொழுது புலர்ந்தது. மற்ற மனிதனும் தானே என்பதை அவன் புரிந்துகொண்டான். தனது கெபியை3 க்ரூஸ் கீழே எறிந்தான், தைரியமான ஒரு மனிதனைக் கொல்லும் குற்றத்துக்குத் தான் உடந்தையாக இருக்கமாட்டேன் என்று உரக்கச்சொல்லி, தன்னுடைய சொந்த வீரர்களுக்கு எதிராகப் போரிட ஆரம்பித்தான், படையிலிருந்து தப்பியோடியவன் ஆகிய மார்ட்டின் ஃபியர்ரோவோடு தோளோடு தோள் நின்று.

 

குறிப்புகள்:

  1. Plover – ஆட்காட்டிக் குருவியினத்தைச் சேர்ந்த பறவை
  2. Laguna Colorada – பொலிவியாவின் ஆல்டிப்ளானோவிற்கு தென்மேற்கில் அமைந்திருக்கும் உப்புநீர் ஏரி. ரெட் லகூன் என்றும் அழைக்கப்படுகிறது.
  3. Kepi – ஃபிரெஞ்சு ராணுவத்தொப்பி