Julio Ramón Ribeyro - Wikipediaகாலை ஆறு மணிக்கு நகரம் தரையில் கால் நுனிகள் மட்டும் பதிய எழுந்து மெல்ல அசைய ஆரம்பிக்கிறது.  எதிரே இருக்கும் பொருள்களின் துல்லியங்களைக் கரைத்த மூடுபனி மாயாஜாலச் சூழலை உருவாக்குகிறது. இந்நேரத்தில் நகரத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பவர்கள் வேறொரு பொருளால் செய்யப்பட்டவர்கள்போல். ஆவியுலகத்தின் பிரஜைகளைப்போல் தோற்றமளிக்கிறார்கள். தெய்வ பக்தி நிறைந்த பெண்கள் சிலர் கால்களைத் தேய்த்தபடி மெல்ல நடந்து இறுதியில் தேவாலயங்களின் முகப்புகளில் புகுந்து காணாமல் போகிறார்கள். இருளால் அலைக்கழிக்கப்பட்ட இரவு நேர ஊர்சுற்றிகள் மப்ளர்களாலும் சோகத்தாலும் போர்த்தப்பட்டவர்களாக வீடு திரும்புகிறார்கள். குப்பைகளை அள்ளிக் கொண்டு போகிறவர்கள் கையில் கூட்டுமாறுகளோடும் தள்ளுவண்டிகளோடும் தோன்றி பார்தோ சாலையில் தங்கள் மர்மமான நடையை ஆரம்பிக்கிறார்கள். டிராலி வண்டிகளில் ஏறப் போகும் தொழிலாளர்கள், மரங்களின் ஓரமாகக் கொட்டாவி விடும் போலீஸ்காரர்கள், குளிரில் உடல் நீல நிறமாய் மாறிப் போன செய்தித்தாள் விநியோகிக்கும் பையன்கள், குப்பைத் தொட்டிகளைத் தெருவில் கொண்டு வந்து வைக்கும் வேலைக்காரிகள் என்று சகலரும் அங்கு இருக்கிறார்கள். இறுதியாக, இந்த நேரத்தில் ஏதோ அமானுஷ்யமான கடவுச்சொல்லுக்குக் கட்டுப்பட்டவையாகச் சிறகில்லாத பருந்துகள் காட்சி தருகின்றன.

அதே நேரத்தில் டான் சாண்டோஸ் மரத்தாலான தனது செயற்கைக் காலை எடுத்து மாட்டிக் கொண்டு மெத்தையில் அமர்ந்தபடி “எஃப்ராயின், என்ரிகே! எழுந்திருங்கள்! இப்போதே!” என்று கத்துகிறார்.

பையன்கள் இருவரும் தூக்கம் நிறைந்த கண்களைத் தேய்த்து விட்டபடியே அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்த கால்வாய்க்கு ஓடுகிறார்கள். அமைதியான இரவு தண்ணீரில் படர்ந்து அதற்குள்ளிருக்கும் நீர்த்தாவரங்களையும் களைகளையும் தெளிவாய்க் காட்டிக் கொண்டிருக்கிறது. முகத்தைக் கழுவிய பிறகு பையன்கள் கையில் டின்களை எடுத்துக் கொண்டு தெருவுக்கு ஓடுகிறார்கள். இதற்கிடையில் டான் சாண்டோஸ் பன்றிகளை அடைத்து கொட்டகைக்குப் போய் அங்கு சேற்றில் புரண்டு கொண்டிருக்கும் பன்றியின் முதுகில் தனது கையிலிருக்கும் நீண்ட குச்சியால் ஒரு சாத்து சாத்துகிறார்.

”உனக்கு இன்னும் கொஞ்சம் காலம் போகணும், திருட்டுப் பயலே! ரொம்ப நாளாகாது, உன் கதை முடிய.”

எஃப்ராயினும் என்ரிகேயும் தெருவில் இலக்கில்லாமல் அலைபவர்களாக மரங்களில் ஏறிப் பெர்ரிப் பழங்களைப் பறித்தும் குறி பார்த்து வீசினால் காற்றைக் கிழித்துக் கொண்டுபோய் முதுகைத் தாக்கி வலி ஏற்படுத்தக்கூடிய கூரிய முனையுடைய கற்களைப் பொறுக்கியும் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வத்தன்மை வாய்ந்த அந்தப் பொழுதை அனுபவித்துக் கொண்டே தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதி என்று அவர்கள் கருதும் இரண்டு பக்கமும் அழகிய வீடுகளையுடைய கடற்கரையை நோக்கிச் செல்லும் அந்த நீண்ட தெருவைச் சென்று அடைகிறார்கள்.

அவர்கள் மட்டும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்று இல்லை. நகரத்தின் மற்ற குடியிருப்புகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் எச்சரிக்கை சங்கொலி எழுப்பப்பட்டுப் பலரும் எழுந்து விட்டிருக்கிறார்கள். சிலர் கைகளில் டின்களையும் மற்றவர்கள் அட்டைப் பெட்டிகளையும் வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் பழைய செய்தித்தாளின் பக்கங்கள் மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. ஒருவர் இருப்பை மற்றவர் அறிந்து கொள்ளாமலேயே அவர்கள் நகரத்தைச் சுற்றிவரும் ரகசியமான மாபெரும் மனித வலையாகச் செயல்படுகிறார்கள். அவர்களில் சிலர் பொது இடங்களிலும், மற்றவர்கள் பார்க்குகளிலும் குப்பைக் குவியல்களிலும் கிடைக்கும் பொருள்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறார்கள்.  நாய்கள்கூட வறுமையால் பழக்கப்படுத்தப்பட்டு சில பழக்கவழக்கங்களையும் நேர அட்டவணைகளையும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன.

                எஃப்ராயினும் என்ரிகேயும் கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு தங்கள் வேலையைத் தொடங்குகிறார்கள். ஒவ்வொருத்தரும் சாலையின் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கதவுகளின் வெளியே குப்பைத் தொட்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. சாகசக் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதற்கு முன்னால் அவை முதலில் காலி செய்யப்பட வேண்டும். குப்பைத் தொட்டி என்பது ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு பெட்டியைப் போன்றது. அவற்றுக்குள் சார்டீன் டின்கள், பழைய சப்பாத்துகள், ரொட்டித் துண்டுகள், செத்த கிளிகள், அழுக்கேறிய பஞ்சுகள் என்று எல்லாம் இருக்கும். ஆனால் இந்த இருவருக்கும் உணவுப் பொருள்களின்மேல்தான் நாட்டம் இருக்கிறது. பாஸ்குவால் கொட்டகைக்குள் எதைத் தூக்கிப் போட்டாலும் சாப்பிடும் என்றாலும்கூட அதன் விருப்ப உணவு என்றால் அது பாதி அழுகிய காய்கறிகள்தான். இருவரும் அவரவர் கையிலிருந்த டின்னை அழுகிய தக்காளிகள், மாமிசத் துண்டுகள், எந்தச் சமையல் புத்தகங்களிலும் தலைகாட்டாத குழம்புகள் ஆகியவற்றால் நிரப்புகிறார்கள். எப்போதும் மிக அபூர்வமாகத்தான் சொல்லிக் கொள்ளும்படி ஏதேனும் கிடைக்கிறது. ஒருமுறை ஆடைகளைத் தோள்களோடு இணைக்கும் வார்களைக் கண்டெடுத்த எஃப்ராயின் அவற்றைக் கொண்டு கவண் செய்து கொண்டான். மற்றொரு முறை அவன் கிட்டத்தட்ட உண்ணத் தகுந்த நிலையில் இருந்த ஒரு பேரிக்காயைக் கண்டெடுத்து அதை அந்த இடத்திலேயே தின்று தீர்த்தான். என்ரிகே தன் பங்குக்கு சின்ன மருந்து பெட்டிகள், பளிச்சென்ற நிறத்தையுடைய பாட்டில்கள், பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்பட்ட பல் தேய்க்கும் குச்சிகள் போன்ற பொருள்களைக் கண்டெடுத்துச் சேகரித்து வைத்துக் கொள்வதில் சமர்த்தனாய் இருக்கிறான்.

குப்பைத் தொட்டியிலிருக்கும் பொருள்களை ஆராய்ந்த பிறகு குப்பைகளை மீண்டும் தொட்டிக்குள்ளேயே போட்டுவிட்டு அவர்கள் அடுத்த குப்பைத் தொட்டிக்குப் போகிறார்கள். எதிரிகள் கண்கொத்திப் பாம்புகளாகப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஒரு குப்பைத் தொட்டியில் அதிக நேரம் செலவழிப்பதும் நல்லதல்ல. சில சமயங்களில் அவர்கள் கவனம் வேறிடத்தில் திரும்பி இருக்கும்போது வீடுகளிலிருந்து வேலைக்காரிகள் அவர்களைத் துரத்திக் கொண்டு வருவார்கள். அவர்கள் அதுவரை சேகரித்த பொருள்களைத் தெருவில் சிதறவிட்டபடி அவர்கள் ஓடி ஒளிய வேண்டியதாக இருக்கும். ஆனால் வேலைக்காரிகள் அவர்களைப் பிடிப்பதைக் காட்டிலும் சுகாதாரத் துறை வண்டி அவர்களைத் தந்திரமாகப் பின்னாலிருந்து நெருங்கி வந்து பிடித்துக் கொள்வதே அதிகமாக நடந்திருக்கிறது, அப்படி நடந்தால் ஒரு நாள் வேலை முழுவதும் வீணாகும்.

சூரிய வெளிச்சம் சுற்றியிருக்கும் குன்றுகளின் உச்சியைத் தாண்டி எட்டிப் பார்க்கும்போது ஒரு நாளின் தெய்வத்தன்மை வாய்ந்த அந்தக் கணம் முடிவுக்கு வந்துவிடும். பனிமூட்டம் விலகும் நேரத்தில், விசுவாசமுள்ள பெண்கள் பக்திப் பரவசத்தில் திளைத்துக் கொண்டிருப்பார்கள். இரவு ஊர்ச் சுற்றிகள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். செய்தித்தாள்களை விநியோகிக்கும் பையன்கள் செய்தித் தாள்களை விநியோகித்து முடித்திருப்பார்கள். தொழிலாளர்கள் டிராலி மேடைகளில் ஏறியிருப்பார்கள். சூரிய வெளிச்சம் உதய காலத்தீன் மாயா ஜாலத்தை முற்றிலும் அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது, சிறகில்லா பருந்துகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிப் போயிருக்கின்றன.

டான் சாண்டோஸ் காபியோடு அவர்களுக்காகக் காத்திருந்தார்.

”சொல்லுங்கள். இன்று எனக்கு என்ன கொண்டு வந்தீர்கள்?”

பையன்களின் கையிலிருந்த டின்களை முகர்ந்து பார்த்து அதிலிருக்கும் உணவுக்கழிவுகள் உருப்படுவதுபோல் தோன்றினால் அவர் எப்போதும் ஒரே வாசகத்தையே திரும்பவும் சொல்வார்: “பாஸ்குவாலுக்கு இன்று நல்ல வேட்டைதான்.”

ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவர் சொல்வதெல்லாம் இப்படித்தான் இருக்கும்: “முட்டாள்களே! ஒழுங்காகக் குப்பை பொறுக்கினீர்களா இல்லையா? தெருவில் இறங்கிச் சும்மா விளையாடி இருப்பீர்கள். பாஸ்குவால் பட்டினி கிடந்தே சாகப் போகிறான்.”

காதுகளில் வாங்கிய அறைகள் எரிய பையன்கள் திராட்சைக் கொடிகள் இருக்கும் இடத்துக்குப் பையன்கள் ஓடிப் போவார்கள். கிழவன் தன் கால்களை இழுத்தபடியே பன்றிக் கொட்டகைக்குச் செல்வார். அங்கிருந்தபடியே டான் சாண்டோஸ் உணவுத் துணுக்குகளை வீசி எறிய பாஸ்குவால் கொட்டகையின் அடுத்த மூலையிலிருந்து உறுமும்.

”நீ பாவம்டா பாஸ்குவால். இந்தச் சோம்பேறிப் பிள்ளைகளால நீ இன்னைக்குப் பட்டினி கிடக்கப் போற. நான் உன்னக் கவனிக்கிறது மாதிரி இவங்க கவனிக்க மாட்டீங்குறாங்க. அவங்க ரெண்டு பேரையும் ஒரு சாத்து சாத்தி பாடம் கற்பிச்சே ஆகணும்.”

குளிர்காலத்தீன் தொடக்கத்தில் அந்தப் பன்றிக்கு உடம்பெல்லாம் வயிறாக மாறியிருந்தது. அதற்கு எவ்வளவு உணவு கொடுத்தாலும் போதாமல் இருந்தது. அந்த எரிச்சலை டான் சாண்டோஸ் தன் பேரன்களிடம் காட்டினார். இன்னமும் சீக்கிரமாக எழுந்து நகரத்தின் பரிச்சயமில்லாத பகுதிகளிலுக்குப் போய் அவர்களை உணவு தேடி வரச் சொன்னார். கடைசியில் சமுத்திரக் கரையிலிருந்த பெரிய குப்பை மேட்டுக்கே போய் அவர்களை உணவு சேகரித்து வர வற்புறுத்தினார்.

”அங்கே இன்னும் நிறைய பொருள்கள் கிடைக்கும். எல்லாம் அங்கே போய்ச் சேர்வதால் ஒரே இடத்திலேயே எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வந்து விடலாம்.”

ஒரு ஞாயிற்றுக்கிழமை எஃப்ராயினும் என்ரிகேயும் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சாலையில் படர்ந்திருந்த அழுக்கில் சக்கரத் தடங்கள் பதிய ஏற்பட்ட பாதைகளின் வழியாகச் சுகாதாரத் துறை வாகனங்கள் கடற்கரைக்கு அடுத்திருந்த ஒரு மேட்டில் குப்பையைக் கொட்டிக் கொண்டிருந்தன. கரையிலிருந்து பார்க்கும்போது குப்பை மேடு பருந்துகளும் நாய்களும் எறும்புகளாய்க் கூடும் இருட்டான புகைமலிந்த செங்குத்தான பாறையாகக் காட்சி தந்தது. தூரமாய் நின்று கொண்டு தங்களுக்குப் போட்டியாக வந்து சேர்ந்திருக்கும் பருந்துகளின்மீதும் நாய்களின்மீதும் பையன்கள் கல்லெறிந்தார்கள். ஊளையிட்டுக் கொண்டே ஒரு நாய் பின்வாங்கியது. பையன்கள் குப்பை மேட்டைச் சென்றடைந்தபோது நுரையீரல்கள்வரை சென்று தாக்கிய துர்நாற்றத்தால் அலைக்கழிக்கப்பட்டார்கள். சிறகுகள், மலம், அழுகிய பொருள்கள், எரிந்த பொருள்கள் ஆகியவற்றால் உருவான ஒரு குவியலுக்குள் அவர்கள் பாதங்கள் புதைந்தன. கைகளை நீட்டி அந்தக் குவியலை அலசியபடி அவர்கள் தங்கள் தேடலைத் தொடங்கினார்கள். அவ்வப்போது மஞ்சள் நிறமாய் மாறிப் போன ஒரு செய்தித்தாளுக்கு அடியில் பாதி தின்ற நிலையிலிருக்கும் அழுகிய மாமிசத்தைக் கண்டெடுப்பார்கள். பக்கத்திலிருந்த பாறைகளில் அமர்ந்திருக்கும் பருந்துகள் அவர்களை எரிச்சலோடு கவனித்துக் கொண்டிருக்கும். சில பருந்துகள் அவர்களைச் சுற்றி வளைக்க நினைப்பவைபோல் ஒரு பாறையிலிருந்து மற்றொன்றுக்குத் தாவி அவர்களை நோக்கி வரும். உரக்கக் கத்தி எஃப்ராயின் அவற்றை விரட்ட முயன்றான். அவன் குரல் பள்ளத்தில் எதிரொலித்து அங்கிருந்த சில பெரிய கூழாங்கற்களைக் கடலை நோக்கி உருண்டோடச் செய்தது. ஒரு மணி நேர வேலைக்குப் பிறகு அவர்கள் நிரம்பி வழியும் டின்களோடு தங்கள் குடியிருப்புக்குத் திரும்பினார்கள்.

”சபாஷ்,” என்று டான் சாண்டோஸ் பெருங்குரலெடுத்து அவர்களைப் பாராட்டினார். “இப்படியே வாரத்துக்கு இரண்டு மூன்று முறை போய்வர வேண்டியதிருக்கும்.”

அன்றிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் எஃப்ராயினும் என்ரிகேயும் கடற்கரைக்குச் சென்று வந்தார்கள். விரைவிலேயே அவர்கள் அந்த விசித்திரச் சூழலின் ஒரு பகுதியாகவே மாறினார்கள். அவர்கள் இருவரின் வருகைக்கும் பழகியிருந்த பருந்துகள் அவர்களின் பக்கத்திலேயே குப்பை மேட்டில் நின்றபடி கதறலாய்க் கத்தியும் இறக்கைகளை விசிறி அடித்தும் அந்த விலை மதிப்பில்லாத அழுக்கில் பையன்களுக்காகப் புதிய பொருள்களைத் தேடித் தருபவைபோல் குப்பைகளைத் தமது மஞ்சள் அலகுகளால் கிளறின.

ஒரு நாள் எஃப்ராயின் கடற்கரையிலிருந்து வீடு திரும்பியபோது அவன் பாதத்தின் அடியில் ஒரு புடைப்பைக் கண்டான். ஏதோ கண்ணாடி துண்டு அவன் பாதத்தைக் குத்திக் காயம் ஏற்படுத்தி இருந்தது. அதற்கு அடுத்த நாள் அவன் பாதம் வீங்கியது. ஆனாலும் அவன் வேலைக்குப் போவதை நிறுத்தவில்லை. பையன்கள் இருவரும் வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய போது அவனால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. ஆனால் அந்த நேரத்தில் டான் சாண்டோஸ் ஒரு விருந்தினரை உபசரித்துக் கொண்டிருந்ததால் அவர் அவனைக் கவனிக்கவே இல்லை. கைகளில் ரத்தக்கறை படிந்த ஒரு தடித்த மனிதரோடு அவர் பன்றிக் கொட்டகையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

”இன்னும் இருபது முப்பது நாளில் திரும்ப வருகிறேன்” என்றான் அந்த மனிதன். “அதற்குள் இவன் தயாராகி விடுவான்.”

அவன் கிளம்பிப் போனபோது டான் சாண்டோஸின் கண்களில் பொறிகள் பறந்தன.

”வேலைக்குப் போங்கள்! வேலைக்குப் போங்கள்! இன்றிலிருந்து பாஸ்குவாலுக்கு இன்னும் நிறைய உணவு தர வேண்டும்! இந்த வியாபாரம் எப்படியாவது படிந்தே தீர வேண்டும்.”

அடுத்த நாள் காலை டான் சாண்டோஸ் தனது பேரன்களை எழுப்பியபோது எஃப்ராயினால் எழவே முடியவில்லை.

”அவன் கால் வீங்கி இருக்கிறது,” என்று என்ரிகே விளக்கினான். “நேற்று தரையில் கிடந்த ஏதோ கண்ணாடியை மிதித்து விட்டான்.”

டான் சாண்டோஸ் பேரனின் பாதத்தைத் திருப்பிப் பார்த்தார். புண்ணில் சீழ்கட்ட ஆரம்பித்திருந்தது.

”சுத்த பேத்தல்! சாக்கடையில் அவன் பாதத்தைக் கழுவி அதைச் சுற்றிப் பழைய துணியைச் சுற்றிக் கட்டுப் போட்டால் போதும்.”

”ஆனால் அவனுக்கு உண்மையிலேயே ரொம்ப வலிக்கிறது,” என்றான் என்ரிகே. “அவனால் சரியாக நடக்கவே முடியவில்லை.”

டான் சாண்டோஸ் ஒருகணம் யோசித்தார். பாஸ்குவால் பன்றிக் கொட்டகையில் உறுமிக் கொண்டிருப்பது கேட்டது.

”அவனுக்கு வலிக்கிறது என்றால், எனக்கு எப்படி இருக்கும்,” டான் சாண்டோஸ் மரத்தாலான தனது பொய்க்காலைக் கையால் தட்டியபடி பேசினார். “என் காலுக்கு வலிக்காது என்று நினைத்தீர்களா? எனக்கு எழுபது வயதாகிறது, ஆனாலும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். முதலில் உங்கள் புலம்பலை நிறுத்துங்கள்.”

எஃப்ராயின் கையில் டின்னை எடுத்துக் கொண்டு தன் தம்பியின் தோளில் சாய்ந்தபடி தெருவுக்குப் போனான். ஆனால் அரைமணி நேரத்துக்கு உள்ளாகவே கிட்டத்தட்ட காலியாகவே இருந்த டின்களோடு இருவரும் திரும்பி விட்டார்கள்.

”அவனால் நடக்கவே முடியவில்லை,” என்று என்ரிகே தன் தாத்தாவிடம் சொன்னான். “பாதி முடவனாகி விட்டான்.”

அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு வழங்குவதைப்போல் டான் சாண்டோஸ் தனது பேரன்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

”சரி, சரி,” என்று உதிரிந்து போன தனது தாடியைச் சொறிந்தபடியே சொன்னார். பின்பு எஃப்ராயினின் பிடறியைப் பிடித்து உலுக்கி அவனை அவர்கள் வசித்து வந்த குடிசையின் ஒற்றை அறைக்குள் தள்ளினார். “நோயாளிகள் படுக்கையில் கிடக்க வேண்டும்! அங்கேயே கிடந்து நாசமாய்ப் போ! என்ரிகே உன் அண்ணனின் பங்கையும் நீயே செய்ய வேண்டும். கிளம்பு! குப்பை மேட்டுக்குப் போ!”

நண்பகலில் நிரப்பப்பட்ட இரண்டு டின்களோடு என்ரிகே வீடு திரும்பினான். அவனைப் பின்தொடர்ந்து விசித்திரமான ஒரு விருந்தாளியும் வந்தது.  அழுக்கேறிய சொறி நாய். “குப்பை மேட்டில் அவனைப் பார்த்தேன்,” என்றான் என்ரிகே, “என் பின்னாலேயே வந்து விட்டான்.”

டான் சாண்டோஸ் கையில் குச்சியை எடுத்துக் கொண்டார். “இருக்கும் கொஞ்சத்தையும் தின்ன மேலும் ஒரு வாய்.”

என்ரிகே நாயை மார்போடு அணைத்துக் கொண்டபடியே குடிசையின் வாசலுக்கு ஓடினான். “அவனை ஒன்றும் செய்யாதீர்கள், தாத்தா! என் உணவிலிருந்தே நான் அவனுக்கு எதையாவது கொடுத்துக் கொள்கிறேன்.”

குடிசையின் சேற்றுத் தரையில் தன் பொய்க்கால் கனமாகப் பதிய டான் சாண்டோஸ் அவனை நோக்கி நடந்தார்.

”இங்கு நாய்கள் கூடாது! உங்கள் இருவரையும் பார்த்துக் கொள்வதே எனக்குச் சிரமமாக இருக்கிறது.”

என்ரிகே தெருவிற்கு இட்டுச் செல்லும் கதவைத் திறந்தான். “இவன் போனால், நானும் போவேன்.”

அவனுடைய தாத்தா தயங்கினார். அந்தத் தயக்கத்தைச் சாதகமாக்கிக் கொண்டு என்ரிகே வற்புறுத்துவதுபோல் தொடர்ந்து பேசினான். “அவன் கொஞ்சமாகத்தான் சாப்பிடுவான். இவனைப் பாருங்கள். எவ்வளவு ஒல்லியாக இருக்கிறான் என்று. மேலும் எஃப்ராயின் சீக்காய் இருப்பதால் இவன் எனக்கு நல்ல உதவியாக இருப்பான். இவனுக்குக் குப்பை மேட்டைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது. நல்ல நல்ல உணவுத் துண்டுகளை வாசத்தாலேயே தேடி எடுத்துத்  தருகிறான்.”

டான் சாண்டோஸ் மழைத்தூறல் வரும் அறிகுறியாகச் சாம்பல் நிறமாகி இருந்த வானத்தை அண்ணாந்து பார்த்து சிறிது நேரம் யோசித்தார். எதுவும் பேசாமல் குச்சியைக் கீழே போட்டுவிட்டு என்ரிகே கொண்டு வந்திருந்த டின்களைக் கையில் எடுத்துக் கொண்டு பன்றிக் கொட்டகையை நோக்கி நடந்தார்.

என்ரிகே மகிழ்ச்சியோடு புன்னகைத்து, தனது நண்பனை மார்போடு அணைத்தபடி தன் அண்ணனைப் பார்க்கப் போனான்.

”பாஸ்குவால்….பாஸ்குவால். பாஸ்குவாலித்தோ,” என்று அவன் தாத்தா பன்றியைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

”உன்னைப் பெத்ரோ என்று அழைக்கப் போகிறேன்.” நாயின் தலையை வருடிக் கொடுத்துப் பேசியபடியே என்ரிகே தன் அண்ணன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.

ஆனால் எஃப்ராயின் மெத்தையில் வலியால் துடித்துக் கொண்டிருப்பதையும் அவன் உடம்பு வியர்வையில் முழுக்க நனைந்திருந்ததையும் பார்த்தபோது அவன் மகிழ்ச்சி முற்றாக வற்றிப் போனது. எஃப்ராயினின் வீங்கிய பாதம் காற்றடைத்த ரப்பர் பொருள்போல் காட்சி தந்தது. அவனுடைய கால் விரல்கள் அவற்றின் வடிவத்தைக் கிட்டத்தட்ட இழந்திருந்தன.

என்ரிகே அவனிடம் நாயைக் காட்டி, “உனக்காக ஒரு பரிசைக் கொண்டு வந்திருக்கிறேன், பார்” என்றான். “இவன் பெயர் பெத்ரோ. அவன் உனக்குத்தான். உனக்கு அவன் துணையாக இருப்பான், நான் குப்பை மேட்டுக்குப் போகும்போது அவனை உன்னிடம் விட்டுப் போகிறேன், நீ அவனோடு நாள் முழுக்க விளையாடலாம். உனக்காகக் கறகளைக் கொண்டுவரக் கூட நீ அவனைப் பழக்கலாம்.”

”தாத்தா எதாவது சொல்வாரா?” என்று நாயிடம் கையை நீட்டியபடியே எஃப்ராயின் கேட்டான்.

”இதில் அவர் சொல்வதற்கு ஒன்றுமில்லை,” என்று என்ரிகே ஒரு பெருமூச்சோடு சொன்னான்.

இருவரும் கதவைப் பார்த்தார்கள்.  தூறல் விழ ஆரம்பித்திருந்தது. ”பாஸ்குவால்….பாஸ்குவால். பாஸ்குவாலித்தோ,” என்று அவர்கள் தாத்தா அழைக்கும் சத்தம் அவர்கள் இருவருக்கும் கேட்டது.

              அன்றிரவு முழுநிலவு இருந்தது. பௌர்ணமி நாள்களில் தாத்தாவின் நடவடிக்கைகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு மோசமாகும் என்பதால் பையன்கள் இருவரும் கவலையோடே இருந்தார்கள். பிறபகலில் இருந்தே கையிலிருந்த குச்சியை திராட்சைக் கொடிகளை நோக்கி ஆட்டியபடி அவர் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வருவதை அவர்கள் பார்த்தார்கள். அப்போதுக்கு அப்போது அவர் அறைக்குள் வந்து சுற்றும் முற்றும் பார்ப்பார். தனது பேரன்கள் எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்து தரையில் ஆத்திரத்தோடு காறித் துப்புவார். பெத்ரோகூட தாத்தாவைப் பார்த்துப் பயந்து போயிருந்தான். அவரை ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் தன் உடலைப் பந்தாய்ச் சுருக்கு கொஞ்சம்கூட அசையாமல் உறைந்து போய் விடுவான்.

”குப்பை, எல்லாம் குப்பை,” என்று இரவு முழுவதும் பௌர்ணமி நிலவைப் பார்த்தபடி கிழவன் தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தார்.

அடுத்த நாள் காலை என்ரிகே ஜுரத்தோடு எழுந்தான். அவன் உடல் குளிரில் நடுங்கியது. என்ரிகே தொடர்ந்து தும்முவதைக் கிழவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் கேட்டிருந்தாலும் அவர் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் தனது மனதுக்குள் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதை அவர் உணர்ந்துதான் இருந்தார். என்ரிகேயும் நோயில் படுத்தால், பாஸ்குவாலின் கதி என்னாகும்? பன்றி தடிக்கத் தடிக்க அதன் பசியும் வளர்ந்து கொண்டே வந்தது.  பிற்பகல் நேரங்களில் அது சேற்றில் தனது மூக்கைப் புதைத்துக் கொண்டு முனக ஆரம்பிக்கும். ஒரு தெரு தள்ளி குடியிருந்த நெமெஸியோகூட அதன் முனகலைக் கேட்டுக் கிழவனிடம் புகார் அளிக்க வந்து போனான்.

இரண்டாம் நாள் பயந்ததுபோலவே நடந்தது. என்ரிகேயினால் எழ முடியவில்லை. இரவு முழுக்க அவன் இருமிக் கொண்டிருந்தான். காலையில் அவனுக்குக் காய்ச்சல் முற்றி அவன் உடம்பு அனலாய்த் தகித்தது.

”நீயுமா?” என்று அவன் தாத்தா அவனைக் கேட்டார்.

என்ரிகே சளி அடைத்திருந்த தனது மார்பைச் சுட்டிக் காட்டினான்.  தாத்தா கோபத்தோடு அறையை விட்டு வெளியேறினார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அறைக்குள் வந்தார்.

”இப்படி எல்லாம் என்னை ஏமாற்றுவது நியாயமே இல்லை!” என்று புலம்பினார். “என்னால் நடக்க முடியாது என்பதால்தானே நீங்கள் இருவரும் என்னை இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்கள். எனக்கு வயதாகி விட்டது என்பதும் நான் முடவன் என்பதும் உங்களுக்குத் தெரியும்தானே. என் உடம்பு மட்டும் சரியாக இருந்தால் உங்கள் இருவரையும் அடித்துத் துரத்திவிட்டுப் பாஸ்குவாலை நானே பார்த்துக் கொள்வேன்.”

எஃப்ராயின் முனகியபடி எழுந்தான். என்ரிகே இரும ஆரம்பித்தான்.

”போய்த் தொலையட்டும்! அவனை நானே பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இரண்டு பேரும் என்னைப் பொறுத்தவரையில் வெறும் குப்பைகள்! ஒன்றுக்கும் உதவாத இரண்டு சிறகில்லா பருந்துகள்! நான் எப்படி நிலைமையைச் சமாளிக்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். உங்கள் தாத்தனுக்கு அப்படி ஒன்றும் முடியாமல் போய்விடவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். உங்கள் இரண்டு பேருக்கும் இன்று சாப்பாடு இல்லை. நீங்கள் எழுந்து வேலைக்குப் போகும்வரைக்கும் உங்கள் இருவருக்கும் நான் உணவு தரப் போவதில்லை!”

வாசல் வழியாக அவர் டின்களைக் கைகளில் உயரத் தூக்கிக் கொண்டு தெருவுக்குள் இறங்குவது தெரிந்தது. அரைமணி நேரம் கழித்து அவர் குலைந்துபோய் வீட்டுக்குள் நுழைந்தார். அவருடைய பேரன்களைப்போல் அவரால் விரைவாக நடக்க முடியவில்லை. சுகாதாரத் துறை வாகனங்கள் அவரைவிட விரைவாக வந்து குப்பைத் தொட்டிகளைக் காலி செய்துவிட்டுப் போயிருந்தன. தெருநாய்களாலும் அவர் தாக்கப்பட்டிருந்தார்.

”குப்பைகளே! வேலை செய்யும்வரை சாப்பாடு இல்லை – இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”

அடுத்த நாளும் அவராகவே போய் உணவு பொறுக்கி வர முயன்றார். ஆனால் கடைசியில் அவர் அந்த முயற்சியைக் கைவிட வேண்டியதானது. கல்பதித்த கடுமையான நடைபாதைகளில் அவரால் பொய்க்காலை வைத்துக் கொண்டு நடக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை நடக்க முயலும்போதும் அவரது கால்களுக்கு நடுவே கடுமையான வலி ஏற்பட்டது. மூன்றாவது நாளின் அந்தத் தெய்வத்தன்மை வாய்ந்த நேரத்தில், அவர் மெத்தையில் பொத்தென்று விழுந்தார். பேரன்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்ட மாத்திரம் அவருக்கு வலு மிஞ்சி இருந்தது.

”அவன் பட்டினியால் செத்தால் அந்தப் பாவம் உங்களைத்தான் சேரும்,” என்று அவர் கத்தினார்.

முடிவே இல்லாததுபோல் தோன்றிய சில கொடுமையான நாள்களுக்கு இந்த நிகழ்வு ஆரம்பப் புள்ளியாகத் தோன்றியது. ஒரே இடத்தில் இருக்கக் கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக மூவரும் அறைக்குள் முடங்கிக் கிடந்தார்கள். எஃப்ராயின் படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டே இருந்தான். என்ரிகே இருமினான். பெத்ரோ எழுந்து குடியிருப்பைச் சுற்றி ஒருமுறை ஓடிவிட்டுத் தன் எஜமானனின் கையில் ஒரு கல்லைக் கொண்டு வந்து போட்டது. மெத்தையில் சாய்ந்திருந்த டான் சாண்டோஸ் தன் பொய்க்காலைத் தடவிக் கொடுத்தபடியே தனது பேரன்களைச் சுட்டெரிப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தார். நண்பகலான போது குடியிருப்பில் சில செடிகள் வளர்ந்திருந்த இடத்துக்கு மெல்ல நகர்ந்து போய் அவற்றை ரகசியமாகப் பிடுங்கித் தின்றார்.  அவ்வப்போது தன் பேரன்களின் பசியைத் தூண்டவும் அவர்களுக்குத் தந்து கொண்டிருக்கும் தண்டனையின் தீவிரத்தை அதிகப்படுத்தவும் அவர்களுடைய கட்டிலில் துண்டுக் கீரையையோ பச்சை காரட்டையோ தூக்கி எறிந்தார்.

இதைப் பற்றி முறையிடக் கூட எஃப்ராயினுக்கு உடம்பில் வலு இல்லை. என்ரிகேக்கு மட்டும் அவனுடைய தாத்தாவின் கண்களைப் பார்க்கும்போது பெயர் அறியாத ஓர் அச்சம் ஏற்பட்டது. அவை தனது தாத்தாவின் கண்களாகவே அவனுக்குத் தோன்றவில்லை. அவருடைய கண்கள் எல்லா மனித உணர்வுகளையும் இழந்திருந்தன. ஒவ்வொரு இரவும் வானத்தில் நிலவு தோன்றியபோது என்ரிகே பெத்ரோவைத் தன் கைகளில் அணைத்துக் கொண்டு அது முனகும்வரை பாசத்தோடு அதைத் தனது மார்போடு இறுக்கிக் கொள்வான். அந்த நேரத்தில் பன்றி உறும ஆரம்பிக்கும். கிழவன் யாரோ தன்னைத் தூக்கில் தொங்க விடுவதுபோல் பெரும்குரலெடுத்து அழுவார். சில சமயங்களில் தனது பொய்க்காலை எடுத்துப் பொருத்திக் கொண்டு குடியிருப்புக்குள் போய் வருவார். நிலவின் வெளிச்சத்தில் அவர் பத்து முறை காய்கறித் தோட்டத்திற்கும் பன்றிக் கொட்டகைக்கும் தனது முஷ்டிகளைக் காற்றில் உயர்த்தி ஆட்டியபடி தன் வழியில் எதிர்படும் அனைத்தையும் நெட்டித் தள்ளிவிட்டு நடப்பதை என்ரிகே கவனித்தான்.  இறுதியாக அவர் அறைக்குள் மீண்டும் வந்து பாஸ்குவாலின் பசிக்கு அவர்களே காரணம் என்பதுபோல் அவர்களைக் கோபத்தோடு வெறித்துப் பார்ப்பார்.

முழுநிலவின் கடைசி இரவில் யாராலும் தூங்க முடியவில்லை. பாஸ்குவாலின் உறுமல்கள் எல்லோருடைய காதையும் செவிடாக்கின. பன்றிகளுக்குப் பசி ஏற்பட்டால் அவை மனிதர்களைப்போலவே பைத்தியமாகி விடும் என்று என்ரிகேவுக்குச் சொல்லப்பட்டிருந்தது. தாத்தா ஒரு நிமிடம் கூட அசரவில்லை. அவர் விளக்கைக்கூட அணைக்காமல் இருந்தார். மெத்தையில் புதைந்து அமர்ந்தபடி அவர் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மன ஆழத்தில் கோபம் மெல்ல மெல்ல பொங்குவதுபோலவும் அதை ஒரேயடியாக வெளிப்படுத்த அவர் தன்னைத் தயார் செய்து கொள்வதைப்போலவும் தோன்றியது. குன்றுகளின்மீது நாள் வெளுக்க ஆரம்பித்தபோது கருப்பு ஓட்டையைப் போலிருந்த அவர் வாயைத் திறந்து பேரன்களைப் பார்த்துக் கத்தினார். “எழுங்கள்! எழுங்கள்! எழுங்கள்!” என்று அவர்களைக் கைகளால் மீண்டும் மீண்டும் அடித்து எழுப்பினார். “சோம்பேறிகளா, எழுங்கள்! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருக்க முடியும்? இனிமேல் முடியாது. எழுந்து நில்லுங்கள்!”

எப்ஃராயின் அழ ஆரம்பித்தான். என்ரிகே எழுந்து சுவற்றோடு ஒட்டி நின்றான். கிழவனின் கண்களில் பார்த்துக் கொண்டே இருந்தததில் அவன் ஒருவித மயக்க நிலைக்கு உள்ளாகித் தன் வலியையே மறந்திருந்தான். கிழவனின் கையிலிருந்த குச்சி அவன் தலையைக் குறிவைத்து வருவது அவனுக்குத் தெரிந்தது, ஒரு கணம் அந்தக் குச்சி மரத்தால் ஆனதாக இல்லாமல் அட்டைக் காகிதத்தால் ஆனதுபோல் அவனுக்குத் தோன்றியது. இறுதியில் அவனால் பேச முடிந்தது. “எப்ஃராயின் வேண்டாம்! அவன்மீது எந்தத் தவறும் இல்லை! என்னைப் போக விடுங்கள். நான் போகிறேன். குப்பை மேட்டுக்கு நான் போகிறேன்!”

மூச்சிரைத்தபடி அவன் தாத்தா ஓரடி பின்னால் நகர்ந்தார். அவரது மூச்சு சீராகக் கொஞ்ச நேரம் எடுத்தது.

”இப்போதே….குப்பை மேட்டுக்கு…இரண்டு டின்களை எடுத்துக் கொண்டு போ… நான்கு டின்கள்.”

என்ரிகே பின்னால் நகர்ந்து கைகளில் டின்களை அள்ளிக் கொண்டு ஓடினான்.

பசி மயக்கமும் நோயினால் ஏற்பட்ட பலவீனமும் அவனை ஒருமுறை தடுமாற வைத்தன. கதவைத் திறந்தபோது பெத்ரோ அவனோடு போக முனைந்தது.

”நீ வரக் கூடாது. இங்கேயே இருந்து எஃப்ராயினைப் பார்த்துக் கொள்.”

                காலை நேரத்துக் காற்றை ஆழமாகச் சுவாசித்தபடி அவன் தெருவுக்குள் ஓடினான். போகும் வழியில் கொஞ்சம் புல்லைப் பிடுங்கி மென்று தின்றான் அதோடு சேர்த்துக் கொஞ்சம் மண்ணையும் தின்னும் தறுவாயில் இருந்தான். அவனைச் சுற்றியிருந்த எல்லாமும் மாயாஜாலம் நிறைந்த பனிமூட்டத்தின் வழியாகத் தெரிவதுபோல் தோன்றின. அவன் உடலின் பலவீனத்தால் தலை சுற்றியது. பறவையைப்போல் காற்றில் பறப்பதாக நினைத்துக் கொண்டான். குப்பை மேட்டைச் சென்று சேர்ந்தபோது அங்கு வந்திருந்த பருந்துளில் தானும் ஒரு பருந்து என்று அவனுக்குத் தோன்றியது. டின்கள் நிரம்பிய உடனேயே வீட்டுக்கு ஓடினான். பக்திமான்கள், இரவு ஊர்சுற்றிகள், வெறுங்காலோடு பத்திரிகை விநியோகிக்கும் பையன்கள்  என்று அதிகாலை புறப்பாடுகள் அனைத்தும் நகரம் முழுவதும் சிதற ஆரம்பித்திருந்தன. தெய்வத்தன்மை வாய்ந்த அந்தப் பொழுதின் மாயத்தால் வசியம் செய்யப்பட்டவனாக மீண்டும் இந்தப் பூமிக்குத் திரும்பி இருந்த என்ரிகே நாய்களாலும் பேய்களாலுமான தனது உலகத்தில் மகிழ்ச்சியோடு நடந்து போய்க் கொண்டிருந்தான்.

குடியிருப்பை நெருங்கியபோது காற்றில் அச்சானியமாய் கெட்ட சகுனம் நிறைந்ததாய் ஏதோ ஒன்றை உணர்ந்து அப்படியே நின்றான். அந்த வாசலில் அவன் உலகம் முடிந்து சேற்றினாலும், உறுமல்களாலும், தண்டனைகளாலும் நிரம்பிய உலகம் தொடங்குவதாக அவனுக்குப் பட்டது. ஆனால் இம்முறை உலகத்தில் உள்ள வன்முறை எல்லாம் அடக்கப்பட்டுச் சட்டென்று தாக்குவதற்குத் தயாராக இருப்பதுபோல் குடியிருப்பு முழுவதும் அவலம் நிறைந்த ஆச்சரியமான அமைதி ஒன்று நிறைந்திருந்தது. பன்றிக் கொட்டகையின் தூரத்து மூலையைப் பார்த்தபடி தாத்தா அதன் ஓரமாக நின்றிருந்தார். மரத்தாலான பொய்க்காலிலிருந்து வளர்ந்த மரம்போல அவர் கண்களுக்குத் தோன்றினார். என்ரிகே மெல்ல சத்தம் எழுப்பியும் கிழவன் திரும்பாமல் இருந்தார்.

”இதோ டின்கள்.”

டான் சாண்டோஸ் அவனுக்கு முதுகு காட்டியபடி திரும்பி அசையாமல் இருந்தார். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட என்ரிகே டின்களைப் போட்டுவிட்டு அறைக்குள் ஓடினான். அவனைப் பார்த்த உடனேயே எஃப்ராயின் ‘பெத்ரோ, பெத்ரோ’ என்று சொல்லியபடி விசும்ப ஆரம்பித்தான்.

”என்ன நடந்தது?”

”பெத்ரோ தாத்தாவைக் கடித்தான்…தாத்தா குச்சியை எடுத்து…பிறகு பெத்ரோ கதறுவது கேட்டது.”

என்ரிகோ அறையை விட்டு வெளியேறினான். “பெத்ரோ! இங்கே வா! பெத்ரோ, எங்கே போனாய்?”

பதில் இல்லை. தாத்தா அசையாமல் மண் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தார். என்ரிகேக்குத் திடீரென்று குமட்டிக் கொண்டு வந்தது. கிழவனை நோக்கித் தாவினான். “பெத்ரோ எங்கே?”

அவன் பார்வை பன்றிக் கொட்டகைக்குள் போனது. சேற்றில் குந்தியபடி பாஸ்குவால் எதையோ தின்று கொண்டிருந்தது. நாயின் கால்களும், வாலும் மட்டுமே மிச்சமிருந்தன.

”ஐயோ!” என்று தன் கண்களைக் கைகளால் மறைத்தபடி என்ரிகே கத்தினான். “ஐயோ, ஐயோ!” கண்ணீர் நிறைந்த கண்களால் தனது தாத்தாவின் முகத்தை ஆராய்ந்தான். அவர் இவனது பார்வையை எதிர்கொள்ள முடியாதவராகத் தனது பொய்க்காலில் உடலின் கனத்தைப் போட்டபடி தடுமாறித் திரும்பினார். என்ரிகே அவருடைய சட்டையைப் பிடித்து இழுத்தபடி, கூச்சலிட்டபடி, அவரை எட்டி உதைத்தபடி, அவரிடமிருந்து பதிலை எதிர்ப்பார்த்து அவரைச் சுற்றிச் சுற்றி வந்தான். “ஏன் இப்படிச் செய்தீர்கள்? ஏன்?”

அவன் தாத்தா பதில் சொல்லவில்லை. இறுதியில் கிழவன் பொறுமை இழந்து என்ரிகேயைப் பளார் என்று அறைந்தான். பையன் தரையில் சுருண்டு விழுந்தான். தரையிலிருந்தபடியே என்ரிகே கிழவன் ராட்சசன்போல் நிமிர்ந்து நின்று பாஸ்குவாலின் விருந்தைப் பார்ப்பதைப் பார்த்தான். என்ரிகே தனக்கருகே கிடந்த ரத்தம் தோய்ந்த குச்சியைக் கையில் எடுத்துக் கொண்டான். மெல்ல எழுந்து கிழவனை நெருங்கினான். “திரும்பு,” என்று கத்தினான். “திரும்பு.”

டான் சாண்டோஸ் திரும்பியபோது குச்சி காற்றைக் கிழித்துக் கொண்டு வருவதைப் பார்த்தார். பிறகு தனது கன்னத்தில் அடி விழுந்ததை உணர்ந்தார்.

”இதை வாங்கிக் கொள்,” என்று என்ரிகே உச்சக் குரலில் கத்திவிட்டு மீண்டும் தனது கையை உயர்த்தினான். தான் என்ன செய்கிறோம் என்று திடீரென்று உணர்ந்ததுபோல் உயர்த்திய கையைத் தொங்கவிட்டான். தன் கையிலிருந்த குச்சியைக் கீழே போட்டான். வருத்தப்படுவது போன்ற ஒரு பார்வையோடு தனது தாத்தாவின் முகத்தைப் பார்த்தான். தனது முகத்தைக் கையால் பொத்தியபடி நின்று கொண்டிருந்த கிழவன் தனது பொய்க்காலில் உடம்பின் கனத்தைத் தாங்கியபடி ஓரடி பின்னால் எடுத்து வைத்தார். பெரிய கூக்குரலோடு வழுக்கிப் பன்றிக் கொட்டகைக்குள் மல்லாக்க விழுந்தார்.

என்ரிகே சில அடிகள் பின்னால் எடுத்து வைத்தான். முதலில் அவன் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். ஆனால் அவனால் எந்தச் சத்தத்தையும் கேட்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பன்றிக் கொட்டகைக்குப் பக்கத்தில் போனான். மரத்தாலான பொய்க்கால் உடைந்து தாத்தா சேற்றில் மல்லாக்கக் கிடந்தார். அவர் வாய் பிளந்திருந்தது. அவர் கண்கள் கொட்டகையின் ஓர் ஓரமாகப் பதுங்கிச் சேற்றைச் சந்தேகத்தோடு முகர்ந்து கொண்டிருந்த பாஸ்குவாலைத் தேடிக் கொண்டிருந்தன.

என்ரிகே எப்படி வந்தானோ அப்படியே சத்தமில்லாமல் கொட்டகையை விட்டுப் பின்னால் அடியெடுத்து வைத்து வெளியேறினான். அவன் போனதை அவன் தாத்தா பார்க்கவில்லை போலும். ஏனென்றால் என்ரிகே அறைக்கு ஓடும்போது அவர் அவனை முன் எப்போதுமில்லாத மிருதுவான குரலில் “என்ரிகே, திரும்பி வா, திரும்பி வா…” என்று கூப்பிடுவது அவனுக்குக் கேட்டது.

தன் அண்ணனிடம் ஓடிய என்ரிகே அவனைச் “சீக்கிரம்!” என்று சொல்லி அவசரப்படுத்தினான். “சீக்கிரம் கிளம்பு, எஃப்ராயின்! கிழவன் பன்றிக் கொட்டகைக்குள் விழுந்து விட்டான். நாம் இங்கிருந்து கிளம்பிவிடுவதுதான் நல்லது!”

”எங்கே?” என்று கேட்டான் எஃப்ராயின்.

”எங்காவது, குப்பை மேட்டுக்கு, எங்காவது உணவு கிடைக்கும் இடத்துக்கு, பருந்துகள் எங்கே போகின்றனவோ அங்கே!”

”என்னால் நிற்க முடியவில்லை.”

என்ரிகே தனது அண்ணனை இரண்டு கைகளாலும் எழுப்பி அவனைத் தனது மார்போடு அணைத்துக் கொண்டான்.  இருவரும் அப்படி இறுக்கமாக அணைத்துக் கொண்டே நடந்ததால் ஒரே ஒரு ஆள் குடியிருப்பைத் தாண்டிப் போவதுபோல் தோன்றியது. தெருவுக்குள் இட்டுச் செல்லும் வாசல் கதவை அவர்கள் திறந்தபோது தெய்வத்தன்மை வாய்ந்த அந்த பொழுது முடிந்து முற்றாக எழுந்து கவனத்தோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த நகரம் அவர்களின் முன்னால் தனது ராட்சச வாயைப் பிளந்தபடி இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

பன்றிக் கொட்டகையிலிருந்து மரணப் போராட்டத்தின் சத்தங்கள் வந்து கொண்டிருந்தன