அதுவரைக்கும், நினைவு தரும் மகிழ்ச்சிகளில் ஒருபோதும் அவர் தேங்கி நின்றதில்லை. உளப்பதிவுகள் எப்போதும் அவரைக் கடந்து போகத்தான் செய்தன. கணப்பொழுதில் மறைவதாகவும் தெளிவாகவும். செந்தூர நிறத்தில் ஒரு குயவன் வரைந்த உருவரைப்படம்; கடவுள்களாகவுமிருந்த நட்சத்திரங்களின் திரள்களால் நிறைந்திருக்கும் சொர்க்கத்தின் நிலவறைக்கூடம்; நிலா, அதிலிருந்து ஒரு சிங்கம் வீழ்ந்திருக்கிறது; ஒருவரின் தயங்கும் விரல்களுக்குக் கீழிருக்கும் சலவைக்கல்லின் வழவழப்பு; கரடி மாமிசத்தின் சுவை, விரைந்த தொடர்ச்சியான கடிகளால் அதைப் பிய்த்தெடுக்க அவர் விரும்புவார்; ஒரு ஃபீனீசிய1 வார்த்தை; மஞ்சள் மணலின் மீது ஓர் ஈட்டி உருவாக்கும் கருத்த நிழல்; கடல் அல்லது பெண்களின் அருகாமை; திண்மையான மதுரசம், தேனைக்கொண்டு அதன் கடுமையை அவர் முறிப்பார் – இவற்றில் எது வேண்டுமானாலும் அவரது மனதின் புறவெளிகளை மொத்தமாகச் சூழ்ந்திடலாம். அச்சத்தால் அவர் ஆட்கொள்ளப்பட்டிருந்தார், உடன் சினத்தாலும் துணிச்சலாலும் கூட, ஒருமுறை எதிரிகளின் சுவரின் மீது அவர்தான் முதலாவதாக ஏறினார். ஆவலோடு, பேரார்வத்தோடு, கேள்விகள் ஏதுமின்றி, எந்த விசயத்தையும் அனுபவித்துப் பின் அவற்றை மறப்பது என்பதைத் தவிர வேறெந்தச் சட்டத்தையும் பின்பற்றாமல், எண்ணற்ற நிலங்களின் மீது அவர் அலைந்து திரிந்தார், மேலும், கடலின் ஒருபுறத்தில் அல்லது அதன் மறுபுறத்தில், மனிதர்களின் நகரங்களையும் அவர்களின் அரண்மனைகளையும் பார்த்தார். ஆரவாரமிக்க சந்தைகளில் அல்லது வனதேவதைகளுக்குப் புகலிடமாயிருக்கும் மறைவான குன்றுகளைக் கொண்ட ஒரு மலையின் பாதத்தில், சிக்கலான கதைகளை அவர் கேட்டிருக்கிறார், நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டது போலவே அவற்றையும் ஏற்றுக்கொண்டார். அவை உண்மையா அல்லது கற்பனையா என்பதைக் கண்டுபிடிக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல்.

மெல்ல மெல்ல, இந்த அழகிய உலகம் அவரை நீங்கத் தொடங்கியது; ஒரு நிரந்தரப் பனிமூட்டம் அவருடைய கரத்தின் வரிகளை அழித்தது, இரவு அதன் திரளான நட்சத்திரங்களை இழந்தது, அவரது காலடிகளுக்குக் கீழிருந்த பூமி திடமற்றதாக மாறியது. யாவும் தொலைவாகவும் தெளிவற்றதாகவும் மாறின. தான் குருடனாகி வருவதை அறிந்தபோது, அவர் அலறித்துடித்தார்; ஸ்டோயிக்2 மனவலிமை அப்போது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, எவ்வித அவமரியாதையுமின்றி ஹெக்டாரால்3 ஏக்கிலிஸிடம்4 இருந்து தப்பியோட முடிந்தது. இனிமேல் நான் வானத்தையும் அதன் புராணீக மர்மத்தையும் பார்க்கவியலாது (அவர் உணர்ந்தார்), கூடவே காலங்கள் உருமாற்றக்கூடிய இந்த முகத்தையும். அவரது உடலின் இந்த அச்சங்களின் மீது பகல்களும் இரவுகளும் கடந்து சென்றன, ஆனால் ஒரு காலையில் அவர் விழித்தார், (தற்போது திகைப்பின்றி) தன்னைச் சுற்றியிருந்த மங்கலான சங்கதிகளைப் பார்த்தபோது, விவரிக்கமுடியாதவொன்றை உணர்ந்தார் – ஓர் இசையின் இழையை அல்லது ஒரு குரலை ஒருவர் உணர்ந்திடும் வழிமுறையில் – அதாவது இவை யாவுமே அவருக்கு ஏற்கனவே நிகழ்ந்திருப்பதாகவும் அத்துடன் அதைப் பீதியோடு எதிர்கொண்டதாகவும், ஆனால் அதேநேரம் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும், பேரார்வத்தோடும். பிறகு அவர் தனது கடந்தகாலத்துக்குள் ஆழமாகச் சென்றார், அது அவருக்கு முடிவேயற்றதாகத் தோன்றியது, தலைசுற்றச் செய்யும் அந்தக் கீழ்நோக்கிய பயணத்திலிருந்து தனது தொலைந்துபோன ஒரு நினைவை மீட்டெடுக்க அவருக்குச் சாத்தியமானது, தற்போது மழையில் நனைந்த நாணயம் போல அது மினுங்கியது, அனேகமாக ஏனென்றால் அவர் அதற்கு முன் ஏதொவொரு கனவில் என்பதைத்தவிர ஒருபோதும் அதை நினைவுகூர்ந்ததில்லை.

இதுதான் அந்த நினைவு. மற்றொரு பையன் அவனோடு வம்பிழுத்திருக்க தன் தந்தையிடம் சென்று அவன் அந்தக் கதையைக் கூறினான். அவன் தந்தை, அவனைப் பேச அனுமதித்தவராக, அதை அவர் கேட்டதாக அல்லது புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை, அழகானதாகவும் ஆற்றல் ஊட்டப்பட்டதாகவும் தெரிந்த ஒரு வெண்கலக் குத்துவாளை சுவரிலிருந்து எடுத்தார், சிறுவனும் கூட ரகசியமான முறையில் அதன் மீது நாட்டம் கொண்டிருந்தான். அது இப்போது அவன் கையில் வீற்றிருக்க சட்டென்று உடைமையாகப் பெற்ற உணர்வு அவனுடைய காயத்தைத் துடைத்தழித்தது, ஆனால் அவன் தந்தையின் குரல் அவனிடம் சொன்னது, “நீ ஓர் ஆண்மகன் என்பதை அவர்கள் அறியட்டும்.” மேலும் அந்தக்குரலில் ஓர் ஆணையும் இருந்தது. இரவு பாதைகளைக் குருடாக்கியது. குத்துவாளை இறுகப்பற்றி, அதில் ஒரு மந்திரசக்தியை அவன் உணர்ந்தவனாக, வீட்டைச் சுற்றியிருந்த சரிவான மலைப்பாதையில் விரைந்து கீழிறங்கி கடலின் முனைக்கு ஓடினான், அயாக்ஸும்5 பெர்சியஸுமாகத்6 தன்னை எண்ணிக்கொண்டு, உடலில் காயங்கள் பல்கிப்பெருக, கருத்த உப்புக்காற்றோடு அவன் சண்டையிடுகிறான். மிகத்துல்லியமாக அந்தத் தருணத்தின் சுவைக்காகத்தான் இப்போது அவன் ஏங்கினான். மற்றதெல்லாம் அதன்பிறகு அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை – சவாலுக்கு இட்டுப்போன அவமதிப்புகள், அருவருப்பான சண்டை, உதிரம் சொட்டும் கத்தியோடு வீட்டுக்குத் திரும்பியது என எதுவும்.

மற்றொரு நினைவு, இரவையும் சாகசத்தை எதிர்நோக்குவதையும் உள்ளடக்கியதாக, அதிலிருந்து கிளம்பியது. ஒரு பெண், கடவுள்களால் முதன்முதலாக அவருக்குத் தரப்பட்டவள், ஒரு நிலவறையின் நிழலில் அவள் அவருக்காகக் காத்திருந்தாள், கற்களால் செய்த வலைகளைப் போன்றிருந்த நுழைமாடங்கள் மற்றும் இருளுக்குள் மூழ்கியிருந்த கீழ்நோக்கிய சரிவுகளின் வழியாக அவர் அவளிடம் சென்று சேரும் வரைக்கும். ஏன் இந்த நினைவுகள் அவருக்கு மீண்டும் வர வேண்டும், அதுவும் ஏன் எந்தக் கசப்புமின்றி, ஏதோ வரவிருக்கும் நிகழ்வுகளை முன்னறிவிப்பது போல? மெல்ல வியப்பு மேலேழுந்து வர, அவர் புரிந்து கொண்
டார். அவருடைய அழிவுறக்கூடிய கண்களின் இந்த இரவுப்பொழுதுக்குள், அதற்குள்தான் அவர் தற்போது வீழ்ந்து கொண்டிருந்தார், காதலும் ஆபத்தும் கூட அவருக்
காகக் காத்து நின்றன – ஏரிஸும்7 அஃப்ரோடைட்டும்8 – ஏனென்றால் அவர் ஏற்கனவே இவற்றை முன்னுணர்ந்திருந்தார் (ஏனென்றால் அவர் ஏற்கனவே இவற்றால் எல்லாம் சூழப்பட்டிருந்தார்) ஹெக்ஸாமீட்டர்களும்9 கீர்த்தியும் பற்றிய ஒரு வதந்தியை, கடவுள்களால் கூட காப்பாற்ற முடியாத ஒரு கோயிலைத் தற்காத்து நிற்கும் ஆட்கள் மற்றும் நேசத்துக்குரிய தீவைத் தேடி கடல்களைச் சுற்றி வந்த கறுப்புநிறப் கப்பல்கள் பற்றிய ஒரு வதந்தியையும், மனிதகுலத்தின் உள்ளீடற்ற நினைவுகளில் நித்தியமாக நிலைத்திருக்கும் வகையில் அவற்றை அவர் பாடித்தான் ஆக வேண்டுமென்கிற அவருடைய தலைவிதியாக மாறியிருந்த ஆடிஸிக்களையும் இலியட்களையும் பற்றிய ஒரு வதந்தியையும். இந்த விசயங்களை எல்லாம் நாம் அறிவோம், ஆனால் தனது கடைசி இருண்மைக்குள் வீழ்ந்த போது அவர் என்ன உணர்ந்தாரென்பதை அல்ல.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
ஹோமரின் பார்வையிழப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை மறைமுகமாக போர்ஹேஸின் பார்வையிழப்பையும் அதை அணுகும் விதத்தில் இருவருக்கும் இருக்கும் முரண்களைக் குறித்தும் பேசுகிறது.

குறிப்புகள்:
1. ஃபீனிசியன் (Phoenician) – கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தில் பண்டைய லெபனானும் சிரியாவும் இணைந்திருந்த ஃபீனிசியா எனும் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் மொழி
2. ஸ்டோயிக் (Stoic) – சீனோ என்கிற பண்டைய கிரேக்க அறிஞரின் மாணவர். உள்ளொடுக்கவாதத்தை ஒரு தத்துவமாக முன்வைத்தவர்.
3. ஹெக்டார் (Hector) – ட்ரோஜன் இளவரசன். ட்ராய் நகரைக் காப்பாற்ற ட்ரோஜன்களைத் திரட்டிப் போராடியவன்.
4. ஏக்கிலிஸ் (Achilles) – ஒற்றைக்கு ஒற்றைச் சண்டையில் ஹெக்டாரைக் கொன்றவன்.
5. அயாக்ஸ் (Ajax) – கிரேக்கப் புராண நாயகன். ட்ரோஜன் போரில் பெரும்பங்கு ஆற்றியவன். இலியாட்டில் இவனுடைய புகழைப் பாடும் பல பகுதிகளை ஹோமர் இயற்றியிருக்கிறார்.
6. பெர்சியஸ் (Perseus) – கிரேக்கக் கடவுளான சூயஸின் (Zeus) மகன். மெடூசாவின் தலையைக் கொய்தவன்.
7. ஏரிஸ் (Ares) – கிரேக்கப் போர்க்கடவுள்.
8. அஃப்ரோடைட் (Aphrodite) – காதலுக்கும் அழகுக்குமான கிரேக்கக் கடவுள்.
9. ஹெக்ஸாமீட்டர் (Hexameter) – பண்டைய கிரேக்கப் பாடல் வடிவம்.
karthickpandian@gmail.com