தர்ஷன் சிங் இன்னும் எப்படி பைத்தியமாகாமல் இருக்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. அவனுடைய அப்பா வீட்டிலேயே இறந்து போனார். குருத்வாராவின் இடிபாடுகளில் அம்மாவை தொலைத்தான்.ஷாஹ்னி இரட்டையர்களை பிரசவித்திருந்தாள். இரண்டும் ஆண் குழந்தைகள். அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. விதி அவனிடம் ஒரு விசித்திரமான பேரம் நிகழ்த்தியது – ஒரு கையால் கொடுத்து மறு கையால் பிடுங்கியது.

விடுதலை வருகிறது என்று பேசிக்கொண்டார்கள், ஆனால் அது லாயல்பூரை எப்போது வந்தடையும் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்துக்களும் சீக்கியர்களும் ரகசியமாக குருத்வாராவில் கூடத் தொடங்கினர். ஷாஹ்னிக்கு இது முதல் பிரசவமானதால் இரவும் பகலும் வலியால் முனங்கிக் கொண்டிருந்தாள்.

தர்ஷன் சிங் அண்மைக் கலவரங்களைப் பற்றிய செய்திகளைக் கண்டறிந்து வருபவனாக இருந்தான்.

அவனை சமாதானம் செய்யும் வகையில் அவனுடைய அப்பா “ஒன்றும் ஆகாது மகனே, இதுவரையில் ஒரு இந்து வீடோ, சீக்கிய வீடோ தாக்கப் பட்டிருக்கிறதா?’’ என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஆனால் அப்பா குருத்வாரா தாக்கப்பட்டிருக்கிறதே. இரு முறை அதை கொளுத்தியிருக்கிறார்களே” என்றான்

“இருந்தும் நீங்கள் எல்லோரும் அங்குதானே கூட விரும்புகிறீர்கள்?”

இது அப்போதைக்கு அவனுடைய வாயை அடைத்தது. இருந்தாலும் மக்கள் எல்லோரும் வீட்டை விட்டு குருத்வாராவில் தஞ்சமடையவே விரும்பினார்கள்.

“ஒரு கூட்டமாக இருக்கும்போது மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் அப்பா. நம் தெருவில் சீக்கியனோ, இந்துவோ ஒருவன் கூட இல்லை. நாம் மட்டும் இங்கேதனியாக இருக்கிறோம்.”

பத்து பதினைந்து நாட்களுக்கு முன் மாடியிலிருந்து அப்பா கீழே விழும் சத்தம் இரவில் கேட்டது. திடுக்கிட்டு எழுந்தனர். குருத்வாராவின் திசையிலிருந்து- “ஜோ போலே ஸோ நிஹால்”* ( ) என்ற கோஷங்கள் எழுந்தன. இந்த சத்தத்தால் முழிப்பு தட்டிய அப்பா அது என்னவென்று பார்க்க மாடிக்குச் சென்றிருக்கிறார். கீழே இறங்கி வரும் போது கால் தவறி முற்றத்தில் இருந்த கோடரியின் மீது விழுந்து இறந்துபோனார்.

அவருடைய இறுதிச் சடங்குகளை எப்படியோ முடித்து, அவர்களது முக்கியமான பொருட்களை ஒரு தலையணை உறையில் அடைத்துக் கொண்டு, மூவரும் குருத்வாராவில் தஞ்சம் புகுந்தனர். அங்கே இவர்களைப் போல பீதியடைந்த மக்கள் அநேகம் பேர் இருந்ததால் தர்ஷன் சிங் இங்கு பாதுகாப்பாக உணர்ந்தான்.

“இங்கு நாம் தனியாக இல்லை, மேலும் ‘வாஹே குரு’ நம்முடன் இருக்கிறார்” என்றான் தர்ஷன் சிங்.

தன்னார்வ தொண்டு புரியும் இளைஞர்கள் சிலர் நாள் முழுவதும் குருத்வாராவினுள் பல வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து கோதுமை மாவு, பருப்பு, நெய் போன்றவற்றை கொண்டுவந்திருந்தனர்.இரவும் பகலும் அங்குள்ள சமுதாய சமையலறையில் அடுப்பு எரிந்துக் கொண்டிருந்தது. ஆனால் எத்தனை காலம் தான் இங்கு தங்க முடியும்? இந்த கேள்வி எல்லோர் மனதிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. அரசாங்கம் ஏதாவது உதவி செய்யும் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.

“எந்த அரசாங்கம்?” என்றார் அங்கிருந்த ஒருவர். ”ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள்.”

“பாகிஸ்தான் என்ற நாடு புதிதாக பிறந்துள்ளது, ஆனால் அதற்கு அரசாங்கம் இன்னும் அமைக்கப்பட வில்லை.”

“எல்லா இடத்திலும் ராணுவம் மக்களுக்கு உதவி செய்கிறது என்று கேள்விப்பட்டேன் அகதிகள் எல்லையைத் தாண்டி செல்வதற்கு.”

“அகதிகளா? யார் அவர்கள்?”

“அகதிகள். இந்த வார்த்தையை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லையே”?

அங்கு நிலவும் சூழ்நிலையின் அழுத்தம் தாங்காமல் இரண்டு மூன்று குடும்பங்கள் கிளம்பினர்.

“நாங்கள் ரயில் நிலையத்திற்கு செல்கிறோம். ரயில்கள் பழையபடி இயங்கத் தொடங்கிவிட்டன என்று கேள்விப்பட்டோம். இல்லையென்றாலும் எவ்வளவு நாள் தான் இங்கேயே இருக்க முடியும்?”

“ நாம் தான் தைரியமாக ஏதாவது முடிவெடுக்க வேண்டும் . வாஹே குரு வந்து நம்மை தோள்களில் தூக்கிச் செல்வாரா என்ன?”

“நாநக் நாம் ஜஹாஸ் ஹ, ஜோ சட்டே ஸோ உத்தறே பார்” என்று ஒருவர் கத்தினார்.

இப்படியான புறப்பாடுகள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கின. வெளியிலிருந்து வேறு புதிய மக்கள் புதிய செய்திகளுடன் உள்ளே வரும் போது மட்டுமே இந்த வெற்றிடம் நிரப்பப்படும்.

“ரயில் நிலையத்தில் ஒரு பெரிய கூட்டமே தங்கியுள்ளது”.

“அங்கே பசியால் சிலரும், உணவு மிகுதியால் சிலரும் இறந்துள்ளனர். மேலும் ஏதோ நோய்தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது”

“ஐந்து நாட்களுக்கு முன் ஒரு ரயில் இந்த நிலையத்தைக் கடந்து சென்றது. ஒரு விதை எள்ளிற்கு கூட இடமில்லாது அவ்வளவு கூட்டம். அதன் கூரையில்கூட மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது”.

அன்று சங்கராந்தி பண்டிகை. குருத்வாராவில் காலையிலிருந்து இரவு வரை பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த சுபதினத்தில்தான் ஷாஹ்னி இரட்டையர்களைப் பிரசவித்தாள். ஒரு குழந்தை மிகவும் சவலையாக இருந்தது. அதன் உயிரைக் காப்பாற்ற மிகவும் போராடிக் கொண்டிருந்தாள்.

அன்றிரவு யாரோ சொன்னார்கள் “அகதிகளுக்காக ஒரு பிரத்யேக ரயில் ஒன்று வந்துள்ளது. நாம் அனைவரும் இங்கிருந்து வெளியேறலாம், வாருங்கள்”

ஒரு பெரிய கூட்டம் அங்கிருந்து புறப்பட்டது. தர்ஷன் சிங்கும் புறப்பட முடிவு செய்தான். ஷாஹ்னி மிகவும் பலவீனமாக இருந்தாலும் குழந்தைகளுக்காக கிளம்பினாள். ஆனால் தர்ஷனின் அம்மா கிளம்பமறுத்து விட்டார்.

“நான் அடுத்த ரயிலில் வருகிறேன் மகனே. நீ உன் மனைவியையும் குழந்தைகளையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்.”
தர்ஷன் அம்மாவுடன் பேசிப் பார்த்தான், சண்டை யிட்டுப் பார்த்தான். அங்குள்ள மதகுருவும் அம்மாவை அனுப்பிவைக்க முயன்றார். ஆனால் அம்மா எதற்கும் மசியவில்லை.

“சர்தார்ஜி, முடியும் போது நீங்கள் கிளம்புங்கள். எல்லோரும் ஒவ்வொருவராக எல்லையை கடந்து வந்து விடுவோம். அம்மாவை எங்களுடன் அழைத்து வருகிறோம். கவலைப்படாதீர்கள்” என்று அங்குள்ள இளைஞர்கள் சொல்லி தர்ஷனையும், ஷாஹ்னியையும் அனுப்பி வைத்தனர்.
தர்ஷன் அவனுடைய பிள்ளைகளை ஒரு கூடையில் வைத்து தன் குடும்பத்திடம் எஞ்சியுள்ள ஒரே சொத்து போல தலையில் சுமந்து வந்தார்.

ரயில், நிலையத்தில் நின்றிருந்தது. ஆனால் அதில் சிறிது கூட இடமில்லை. அதன் கூரையிலிருந்து கூட மக்கள் புல் போல முளைத்திருந்தனர். பச்சைப் பிள்ளைகளையும் சோர்ந்திருந்த ஷாஹ்னியையும் பார்த்து பரிதாபப்பட்டு மக்கள் அவர்களுக்கு ரயிலின் கூரையில் சிறிது இடமளித்தனர்.

பத்து மணி நேரத்திற்கு பின் ரயில் நகரத் தொடங்கியது. இரவின் வானம் சிவந்து குருதியாகத் தகித்தது.ஷாஹ்னியின் மார்புகள் நன்கு உறிஞ்சப்பட்டு பால் வற்றியிருந்தன.இரு பிள்ளைகளுக்கும் மாறி மாறி பாலூட்டிக் கொண்டிருந்தாள். இரண்டு அழுக்குத் துணிகளில் சுற்றப்பட்டு அப்பிள்ளைகள் குப்பையிலிருந்து பொறுக்கி எடுத்ததுபோல் இருந்தன.

ரயில் இரவினுள் நீராவியை கக்கிக் கொண்டு சீறியது. சில மணி நேரங்களுக்குப் பின் ஒரு குழந்தை மட்டுமே கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்தது.மற்றொன்று உறைந்து கிடந்தது. இதை தர்ஷன் கவனித்தான். அக்குழந்தையை தொட்டுப் பார்த்தான். இறந்து சில மணி நேரங்கள் ஆகி சில்லிட்டிருந்தது அந்தச் சிறிய உடம்பு.

சத்தமாக அழத் தொடங்கினான்.சுற்றியுள்ள மக்கள் என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதை யூகித்தனர். ஷாஹ்னியிடமிருந்து இறந்த குழந்தையை வாங்க முயன்றனர். ஆனால் அவள் அந்தக் கூடையை இறுக கட்டிக் கொண்டு சிலையாய் சமைந்திருந்தாள்.

“சகோதரன் இல்லையென்றால் இவனும் பால் குடிக்க மாட்டான்.”

எவ்வளவு முயன்றும் இறந்த குழந்தை இருந்த கூடையை விட மறுத்துவிட்டாள் ஷாஹ்னி.

ரயில் பல முறை நின்றது, பல முறை புறப்பட்டது . இரவின் இருட்டில் மக்கள் தாங்கள் எங்கிருக்கிறோம் என யூகிக்க முற்பட்டனர்.

“கைராபாத்தை கடந்து விட்டோம்.”

“நிச்சயமாக இது குஜ்ரன்வாலாவாகத் தான் இருக்க வேண்டும்.”

“இன்னும் ஒரு மணி நேரத்தில் லஹோர் வந்துவிடுவோம்.. பின் ஹிந்துஸ்தான் தான்.”

சிலர் மிகவும் நம்பிக்கையாக உற்சாகமாக “ஹர் ஹர் மகாதேவ்” என்று கோஷமிடத் தொடங்கினர்.

“ஜோ போலே ஸோ நிஹார்.”

ரயில் ஒரு பாலத்தை அடைந்ததும் அங்குள்ளவர்களின் உற்சாகம் கட்டுக்கடங்காமல் ஏறியது.

“ராவி நதியை அடைந்துவிட்டோம்.”

“இது ராவிதான். லஹோரில் உள்ளோம்.”

இந்த குழப்பத்திற்கிடையில் தர்ஷனின் காதில் அங்குள்ள ஒருவன் “சர்தார்ஜி, இறந்த குழந்தையை ராவியில் தூக்கிப் போட்டுவிடுங்கள். நமக்கு வேறு வழியில்லை. குழந்தையும் நற்கதி அடைந்துவிடும். எதற்காக எல்லையை தாண்டி நீங்கள் அதை சுமந்துசெல்ல வேண்டும்?” என்று முணுமுணுத்தான்.

தர்ஷன் மெதுவாக அவன் மனைவியின் பிடியில் இருந்த கூடையை விடுவித்தார். அவள் விழிப்பதற்குள் இதை செய்துவிட வேண்டும் என்ற அவசரத்தில், சட்டென்று அந்த அழுக்குப் பொதியை வெளியே எடுத்து வாஹே குரு என்று பிரார்த்தித்தபடி ராவி நதியில் அதைத் தூக்கி வீசினார்.
இருட்டில் வெகு தூரத்திலிருந்து மெல்லியதாக குழந்தையின் அழுகுரல் கேட்டது .பெரும் பீதியுடன் அவருடைய மனைவியைப் பார்த்தார். அவள் இறந்துப் போன குழந்தையை இன்னும் பாதுகாப்பாக மார்பில் அணைத்துக் கொண்டிருந்தாள்.

“வாகா வாகா.”

“ஹிந்துஸ்தான் ஸிந்தாபாத்” என்ற கோஷங்கள் விண்ணை முட்டின.

இயற்பெயர் சம்பூரன் சிங்க் கால்ரா. இவர் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், திரைக்கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஹிந்தி திரையில் பன்முகம் காட்டியவர். முதன்முதலில் எஸ்.டி. பர்மனிடம் பாடலாசிரியராக 1963 இல் பாந்தினி என்ற படத்தில் அறிமுகமானார்.1970 இல் ஆந்தி மௌஸம் என்ற இரு படங்களை இயக்கியுள்ளார். 1980 இல் மிர்ஸா காலிப் என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கியுள்ளார். 2002 இல் சாகித்திய அகாதெமி விருது, 2004 இல் பத்ம பூஷன், 2008 இல் அகெதமி விருது, 2010 இல் க்ராமி அவார்ட், 2013 இல் தாதா சாஹிப் பால்கே என்று இந்தியாவிலும், உலக அளவிலும் உயரிய விருதுகளை வென்றவர்.

anuradha69anand@gmail.com