1.ஹோன் டோன் (Hoan Doan)

நீங்கள் எதை வெளிப்படுத்த விரும்புகிறீர்களோ அதைவிட வெளிப்பாடு முக்கியமானது.

– என்று சொல்லும் ஹோன் டோன் தன் உடலையே கலைப்படைப்பாக மாற்றுகின்ற Cai No  என்று காணொளி வடிவத்தில் புதுமையான ஒரு கலை படைப்பை உருவாக்குவதில் ஈடுபாடு கொண்ட கலைஞர். Cai No என்பதற்கு (The Slavery) அடிமைத்தனம் என்று பொருள். அந்தகைய புதுமையான கலையின் வழியாக பெண்ணுடல் மீது திணிக்கப்பட்டுள்ள வலியை பாடுகளை பிரச்சனைகளை மாறுபட்ட கோணங்களில் உடலோடு சேர்க்கும் எளிய பொருட்களைக் கொண்டு காட்சிப்படுத்துகிறார்.

அவரது கலைப்படைப்பின் எதிர்மறைத்தன்மை மற்றும் சோகமே அடிநாதமாக இருப்பது குறித்து பின்வருமாறு கூறுகிறார்.

இவ்வளவு அநியாயம் நடக்கும் போது, ​​மனித உயிர்களுக்கான பாதுகாப்பு இல்லாமலாகும் போது, ​​காட்டுமிராண்டித்தனமாக மிதிக்கப்படும் போது, ​​​​சட்டத்தை வளைக்கும்போது, ​​​​நியாயமாக சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து சிரிக்க என்ன இருக்கிறது?

என் நாட்டவர்கள் கொரியாவில் வீட்டு வேலை செய்பவர்களாகவும், ஜப்பானில் கொத்தனார் வேலை செய்பவர்களாகவும், சீனாவில் வயதான ஆண்கள் மனைவியாகத் தேர்ந்தெடுக்க இளம் பெண்கள் அலட்சியமாக வரிசையில் நிற்கும்போதும் சிரிக்க என்ன இருக்கிறது?

கோடிக்கணக்கான மக்கள் கோபத்தில் வெளியேறும்போது, ​​தங்கியிருப்பவர்கள் சொந்த நாட்டிலேயே வீடற்றவர்களாக இருக்கும்போது சிரிக்க என்ன இருக்கிறது? என்று கேட்கிறார்.

கலை வேடிக்கையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை மறுக்கும் ஹோன்டோன், நீங்கள் குறிப்பிடும் அழகான, மகிழ்ச்சியான விஷயங்கள் போலியாகவும், என்னைப் புண்படுத்துவதாகவும் உணர வைக்கின்றன. கலைஞர்களின் மனிதாபிமானத்தையும் நேர்மையையும் கூட நான் கேள்விக்கு உள்ளாக்குகிறேன், அவர்கள் வாழ்க்கையின் யதார்த்தத்தை விட்டு வெளியேறும்போது, ​​​​புத்திஜீவிகள் மயக்கமடைந்து, குழுக்களைப் புகழ்ந்து பாராட்டுகிறார்கள், பணத்திற்காக வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லோருக்கும் உணவும் பணமும் தேவை, அலங்காரத்தை வாழ்வாதாரமாக தேர்ந்தெடுப்பது பரவாயில்லை, ஆனால், ஒழுக்கத்தைப் பிரசங்கிக்கவோ, நெஞ்சில் அடித்துக்கொள்ளவோ ​​நிற்காமல், கணக்கில் செலுத்தப்படும் பணத்தின் அடிப்படையில் மட்டுமே நீங்கள் படைப்பாளிகள். அப்படிப்பட்டவர்கள் ஒரு கலை வியாபாரியாக மிகவும் வெற்றிகரமாக இருக்க முடியும், ஆனால் ஒரு கலைஞராக இருப்பதில்லை, ஒருபோதும் கலைஞராக இருக்கமாட்டார்கள்!

சமீபகாலமாக பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய படைப்புகளை வெளிப்படுத்தும் புதுமையான காட்சிக் கலைஞராக ஹோன்டோன் இருந்தபோதும், எழுத்தில் வெளிப்படும் ஆன்மா தன் உடலையும் மனதையும் ஒளியூட்டுவதாகக் குறிப்பிடுகிறார்.

கவிதைகளில் எழுத்துக்களைப் பயன்படுத்துவதுபோல எண்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் இவர் பொதுவாக எந்தக் கவிதைக்கும் பெயரிடுவதில்லை, ஆனால் எல்லா கவிதைகளும் தேதியுடன் மட்டுமே தொடங்குகின்றன. அதையே நாம் தற்காலிகமாக ஒவ்வொரு படைப்பின் தலைப்பாக கருதுகிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட தலைமுறையின் மன உலகிலிருந்து வெளிவந்துள்ள இளைய தலைமுறை கம்யூனிச அரசின் அதிகாரத்தையும் சுற்றுச்சூழல் கேடுகளையும் சமகால வாழ்வு எதிர்கொள்ளும் பாடுகளையும் தனக்கேயான வேறுபட்ட கவிதை மொழியில் எழுதுவதால் தனித்துவமாகத் விளங்குகிறார். “பாதி எரிந்த இலை” இவருடைய முதல் கவிதைத்தொகுப்பு. இவரது கவிதைகள் ஆங்கிலம் கொரியன் உள்ளிட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில்- Nguyen Bach

2/10/2021

நான் உடைந்து நொறுங்கி

கண்ணாடி மீது

அமர்ந்து

பாடுகிறேன்

சிவப்பு கோங்கு* பூக்களின்

சாயம் பூசப்பட்ட வெள்ளை மல்லிகைகள்

உதிர்ந்து

அழவில்லையா?

வலி

கடல் அளவு குவிந்துள்ளதே

நீங்கள் அழவில்லையா?

கண்ணீர் பிசாசு ஆன்மாவின் முகமூடியாகி

பைத்தியம் உருட்ட

ஏமாற்றங்கள்

ஆயிரம் அலைகள் போல

எழுகின்றன

நான் ஏன் கத்தக்கூடாது?

ஓ…

உன்னை காதலிக்கிறேன்

வடு கருப்பாகிவிட்டாலும்

வலியின் சுவடுகளும் இருக்கின்றன

ஓ…

உன்னை காதலிக்கிறேன்

காட்டில் வாழும் ஒரு குழந்தையின் தலைவிதியைப் போல நம்பிக்கை சிதைந்துவிட்டது

கண்ணாடி மீது

அமர்ந்து

பாடுகிறேன்

இதயம் உடைந்து துடிக்கிறது

என் கண்கள் பாதி இறந்துவிட்டன

அன்பே

சோர்வில்

மெல்லிய

பயம் என்னைக் குளிருடன் பிணைக்கிறது

குளிர்

குளிர்

எங்கும் குளிர்

கனவை அடக்கிய

காட்டுமிராண்டி குரங்கு

திடீரென்று மருத்துவராகிவிட்டது

தேரை

நீதிபதி நாற்காலியில் அமர்ந்துவிட்டது

வாத்துகள் ஆசிரியராக மாறிவிட்டன

பைத்திய தீவு

இந்த உலகம்

(Bombax ceiba_ நம்மூர் சாலை ஓரங்களில் இருக்கும் மஞ்சள் கோங்கு பூ போல வியட்நாம் சாலை ஓரம் இருக்கும் மரத்தில் உள்ள அடர் சிவப்பு பூக்கள்)

 

03/10/2021

என்ன ஏரி இது?

இப்படி கலங்கிய நீரோடு இருக்கிறது

என்ன ஏரி இது?

இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனத்தோடு இருக்கிறது

சிறிய மீன்கள்

முகத்தை வானம் வரை சாய்த்துக் கொள்கின்றன

பெரிய மீன்கள் அங்குமிங்கும் துள்ளுகின்றன

என்ன ஏரி இது?

மிகவும் இருண்டதாக இருக்கிறது

என்ன ஏரி இது?

இப்படி அழுகி இருக்கிறது

இந்த ஏரியில்

பொய் நிரம்பிய குப்பை பைகள் உள்ளன?

அற்புதங்களை

வடிகட்டி தந்திரமாக

துரோகம் செய்திருக்கிறார்கள்

வெளிச்சம் இல்லை

உண்மை இல்லை

வாழ தகுதி இல்லை

மாசு மட்டுமே மிச்சம்

சாம்பல் மட்டுமே மிச்சம்

புலம்பியபடி

அழுதபடி

குழந்தைகளோடு

இன்னும் ஏரியில் குளிக்கிறேன்

ஏரியில் அழுக்கு நீர் சேர சேர

எத்தனை விதிகளை நீக்குகிறார்கள்

எப்பொழுதும்

இருளில் ஒளி பாய்கிறது

எப்பொழுதும.

பயத்தில் தைரியம் பாய்கிறது

அன்புடன்

வலியில் பாய்ந்து

இந்த அழுக்கு ஏரியை உடைத்துவிடுங்கள்

கிராமக் குளங்களில் கிணறுகளில் நீர் திறக்கட்டும்.

 

03/10/2021

ஆற்றைக் கடக்கின்றன் எறும்புகள்

விரைந்து பாயும் நீரிலும்

ஆற்றைக் கடக்கின்றன் எறும்புகள்

அருவி

தூரத்தில் அலையை

வைத்திருப்பது போல சில பூச்சிகளை தானியங்களை  தூரத்தில் வைத்திருக்கிறது தாய் எறும்பு

நீரில் அடிபட்ட முகத்துடன் தந்தை எறும்பு ஊர்கிறது

தனிமையை

இழந்த எறும்பு கூட்டமே

இதை ஏற்றுக்கொள்க

சிறிய

பலவீனமான எறும்புகளே

வாழ்வின் ஆதாரம் வறண்டது!

மரபு வறண்டது!

(மனித வாழ்க்கையும் கூட வறண்டது)

ஓ! அன்புள்ள எறும்புகளே

மேலிருந்து வெள்ளம் குதிக்கிறது

உங்களைப் போல எனக்கும் பசிக்கிறது

தாகமெடுக்கிறது

கரும் பச்சை வயல் விரைவாக முதிர்ந்து பழுப்பு மஞ்சளாக நடுவில் புதைக்கப்படுவது போல

சம்பந்தப்பட்ட எல்லாமே

ஒரு நாள் மாறிவிடும் அதனால்

கடவுளிடம் சொல்லுவோம்

உலகம் என்பது சிறியோருக்குமானது

இரத்தம் சிவப்பாக இல்லாவிட்டாலும்!

 

04/10/2021

இறைச்சி!

இறைச்சி!

இறைச்சி!

இறைச்சி நிறைந்த (முட்டு)சந்துகள், இறைச்சி நிறைந்த தெருக்கள், இறைச்சி குறைந்த தெருக்கள், இறைச்சி நிற்கிறது, இறைச்சி அமர்ந்திருக்கிறது

எனவே சதையாக இருங்கள்!

இறைச்சி வரிசைகளில் அமர்ந்திருக்கிறது, இறைச்சி ஒரு மந்தையில் அமர்ந்திருக்கிறது, இறைச்சி திட்டுகளில் நிரப்புகிறது, இறைச்சி துண்டுகளாக ஒட்டிக்கொண்டுள்ளது.

பெண்கள் ஹை ஹீல்ஸ் ஆக அணிந்திருப்பது ஒருவகை இறைச்சி!

அது உயர்ந்திருக்கிறது

சமூக மேசையில் கலாச்சார மேசையில் நீதி மேசையில் அரசியல் மேசையில் இறைச்சி உள்ளது.

பீன்ஸ் விதையளவு கொண்ட கண்கள் ஒருபோதும்

ஈக்கள் இறைச்சியில் இறங்குவதைத் தொந்தரவு செய்யாது

இறைச்சியில் பீன்ஸ்.

அதிக இறைச்சி… மேலும் பீன்ஸ்.

அதிக வெண்டை… அதிக இறைச்சி.

வீடு முழுவதும் இறைச்சி நிறைந்துள்ளது.

இறுக்கமான இறைச்சி

இறைச்சியை இறக்குமதி செய்யும் நகரம் இறைச்சியால் நிறைந்துள்ளது.

அன்பு தொலைந்தது, மதிப்புகள் தொலைந்துவிட்டன, இலட்சியங்கள் தொலைந்துவிட்டன, ஆன்மாக்கள் தொலைந்தன, நீங்கள் வெறும் சதைக் கூட்டமே!

அன்பு செய்வதற்கு அதிகமாக

இறைச்சியை விரும்புகிறேன்

இறைச்சி இறைச்சி இறைச்சி…

அடுக்கு அடுக்காக

இறைச்சி

இறைச்சி இறைச்சி இறைச்சி…

 

04/10/2021

சேறும் சகதியும் கலந்த

பெருவெள்ளம்

திகைத்தேன்!

சே..ரு…ம் சக…தி…யு…ம்

எப்போதும் தெறிக்கிறது

கண் கூசும்.. பளிச்சிடும்

பளபளக்கும் தங்கக் கீற்றாக

செங்குத்தாக

கொஞ்சம்

கொஞ்சம்

கொஞ்சம்

முழுமையாக

சந்திரன் நகர்ந்தபடி கிடக்கிறது

தெளிவான

மேகங்கள் தொங்குகின்றன சுருண்ட முடி அசைவது போல.

எளியவர்களின்

சத்தம் எழ

சில இழைகள் விழ சில மின்னும் தூளிகளுடன் பாடி விளையாடுகிறது காற்று.

இரவில் சட்டை அணிய மறந்து விடுவது ஏன்?

இயற்கையின் ஆயிரக்கணக்கான சகாப்தங்கள் எப்போதும் அழகாகவும் முடிவற்றதாகவும் இருக்கும் என்பதால்.

மிக நல்லதை

ஏன் நேசிக்கக்கூடாது, பொறுத்துக்கொள்ளக்கூடாது

மிக நல்லது என்று

உலகம் மாயையை நிறுத்தும், விமர்சிப்பதை நிறுத்தும்,

பேராசை என்பது வெறும் பொறி வன்முறை என்பது வெறும் பயத்தின் பேய், அதிகாரம் என்பது சிவப்பு சட்டைக்குள் ஒளிந்திருக்கும் பேய்.

அதை

அனுமதிக்க

வேண்டாம்

அதைக் கொண்டு செல்லுங்கள்

வலுகட்டாயமாக

இழுத்துச் செல்லுங்கள்

இப்போதும்

தெரு இன்னும் நிர்வாணமாக தூங்குகிறது …

 

6/10/2023

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட சவக்குழிகளைப் போல தெருக்களில் சோம்பேறித்தனமாக நடந்து செல்கிறது குரோதம், தண்ணீர் வடிந்த தொட்டியின் மணல் மற்றும் சரளைகளை விட அடர்த்தியான தூசியால் மூடப்பட்டிருக்கிறது தெரு, வறண்ட இரவில் சத்தமிட்டு, சலசலக்கிறது தெரு, இரு பொழுதிலும் விழுந்து கறுப்பு மண் சாலையை மூடி கால் சுவடுகளை கறைபடுத்துகின்றன மற்றதை விட அதிக உப்பு கலந்த அழுகிய பீன்சின் வெள்ளை விதைகள் உள்ளன. கூடையில் இருந்து தவறிய எள் தானியம் வைக்கோல் மீது சிதறி மறைகிறது, எதிர் புறம் மழைத் தூறல்கள் உலர்ந்த மீனின் இரத்தத்த வாசனையை ஏற்படுத்துகிறது, கண் குழிகளில் ஊதா நிற காயங்கள் நான்கு பக்கங்களிலும் மங்கலான திசை, பாலைவனம் போன்ற வறண்ட இரவில் ஒளி இல்லை, மனிதநேயம் இல்லை, வெறித்தனமான மிருகங்கள் மட்டுமே உள்ளன

கண்ணை பிடுங்குவது, கழுத்தை பிடித்து நெரிப்பது, கழுதைப்புலி போல கடித்து கிழிப்பது என்று இதுவரை சண்டை தொடர்கிறது 42 45 905 1000 1001 1008 1014 1015 1016 1035 1042 1046 1084 1308 10511061 1091 1101 1113 1113 11271 711 711 83 1185 1187 1191 1197 1201 1219 1261 1249 1254 1258 1270 1274 1281 1297 1300 1399 1400 1401 7901   1815 1846 1848 1858 1861 1865 1898 1899 1900 1902 1914 1917 1918 1922 1923 1936 1939 1941 1944 19845 1944 19845151 959 1962 1964 1966 1967 1968 1969 1975 1979 1990 1998 1999 2002 200  2006 2010 2012 2014 2017 … 2017…

13/ 08/ 2023

வானம் கிழிந்துவிட்டது

காடாக

வடுவாக

நிலம்

சாகாதவன் துக்கத்தில் இருக்கிறான்

மனக்கசப்பும்

வலியும்

வன்முறையும் நிறைந்த வாக்குமூலங்களால்

தன் மகன் அநியாயமாக கொல்லப்பட்டதால் வயசான தாய் வலியால் அழும் கண்களோடு தன் வாழ்நாள் முழுவதும் தூக்கிலிடப்படுகிறாள்

விலங்கிடப்பட்ட கால்களுக்காகவும் விலங்கிடப்பட்ட மானுக்காகவும் சிறுவன் உதவிக்காக அழுகிறான்

காழ்ப்புணர்ச்சியோடும்

கவலையோடும்

இருக்கும் இளைஞர்களே

சுதந்திரம் பற்றி பேச வேண்டாம்

அமைதி பற்றி பேச வேண்டாம்

மகிழ்ச்சியைப் பற்றி பேச வேண்டாம்

உங்கள் சக நாட்டு மக்களிடம்

எங்கும்

மனக்கசப்பு

வெறுப்பு.

வானத்தைப் பார்த்தும்

நீ நலமாக இருக்கிறாய் என்று சொல்லாதீர்கள்

நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லாதீர்கள்

நம் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நல்லா இருப்பார்கள் என்று சொல்லாதீர்கள்

நம்மில் சிலர் மட்டுமே ஒட்டுமொத்தமாக மோசமாக இருக்கும்போது

5.3 மில்லியன் இமைக்காத கண்கள்

5.3 மில்லியன் இமைக்காத கண்கள்

5.3 மில்லியன் இமைக்காத கண்களுக்கும் அதிகமாகவும் இருக்கலாம்.

ஆத்மா இல்லாத

உணர்வில்லாத

நாத்திகர் போல

பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறார்கள்

பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறார்கள்

பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறார்கள்

மின்னல்

நரக நெருப்பு என

காத்திருக்கும்

காட்டுமிராண்டி அரசாங்கம் தன்னையே கேலி செய்துகொள்கிறது

காட்டுமிராண்டி அரசாங்கம்  தன்னையே கேலி செய்துகொள்கிறது

காட்டுமிராண்டி அரசாங்கம்  தன்னையே கேலி செய்துகொள்கிறது.