(வளரிளம் பருவத்தில் மனநலம்)

வளரிளம் பருவத்தினரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிப்பதுதான் இன்றைய காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால் என்று நினைக்கிறேன். பெற்றோர்களாக, நவீன சமூகமாக நாம் தினம் தினம் இந்தப் பதின்பருவத்தினரின் மாறிவரும் புதிய நடவடிக்கைகளைப் பார்த்து அச்சப்படுகிறோம். அவர்களின் மீது ஏராளமான புகார்களை மனத்துக்குள் சொல்லிக்கொள்கிறோம். மனித உறவுகளை அலட்சியமாகக் கையாளும் அவர்களின் புதிய பழக்கவழக்கங்கள் அவர்களின் மீது கோபம் கொள்ள வைக்கிறது, ஆண்-பெண் உறவுகளில் இத்தனை காலங்கள் நாம் பாதுகாத்து வந்த மதிப்பீடுகளையெல்லாம் அவர்கள் மிகச் சாதாரணமாக ஒதுக்கி வைத்து விட்டுச் செல்வது நம்மை பதற்றப்படுத்துகிறது. அத்தனை ரகசியமான அவர்களின் உலகத்தின் திரை மெதுவாக விலக்கி உள்ளே என்ன நடக்கிறது என்ன அறிந்து கொள்ள முற்படுகிறோம். ஆனால், அங்கும் இங்கும் கலைந்து கிடக்கும் அந்த சித்திரத்தில் எதுவும் புரியாமல் விரக்தியுடன் திரும்பி நடக்கிறோம்.

நவீன காலத்தில் மிக அதிகமான உளவியல் பிரச்சினைகளும், வன்முறைகளும், வெறுப்பும், தற்கொலைகளும் வளரிளம் பருவத்தில்தான் நடக்கின்றன. தினம், தினம் அப்படி ஏதாவது ஒரு சம்பவம் நமது வாழ்க்கையில் குறுக்கிட்டுகொண்டே இருக்கிறது. அறம் குறித்த பழைய மதிப்பீடுகளெல்லாம் காலாவதியாகிவிட்ட புதிய காலமொன்றில் வளரிளம் பருவத்தினரின் நடவடிக்கைகளும் அந்தக் காலத்தின் மாற்றங்களையெல்லாம் பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த புற மாறுதல்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வளரிளம் பருவத்தினரின் புதிய சிக்கல்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. உண்மையில் இந்தக் காலத்தில் உருவான இந்தத் தலைமுறையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் அவர்களின் அக மற்றும் புறமாற்றங்களையே இன்னும் செறிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

வளரிளம் பருவத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

வளரிளம் பருவத்தில்தான் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகவும் துரிதமான வளர்ச்சியடைகிறோம்.  அதற்குக் காரணம் இந்தப் பருவத்தில் சுரக்கும் ஹார்மோன்களே! இந்த ஹார்மோன்கள் விளைவால் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உடல் ரீதியாக ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

வளரிளம் பருவத்தில் ஏற்படக்கூடிய உடல் ரீதியான மாற்றங்கள் மிகவும் துரிதமாக இருக்கும். மிக அதிகமான அளவிலான  ஹார்மோன் திடீரெனச் சுரப்பதே அதற்குக் காரணம்.

உடல் ரீதியான மாற்றங்கள்:

உயரம் சடசடவென அதிகரிக்கும்

குரலின் தன்மை மாறும்

புதிய இடங்களில் ரோமங்கள் வளரும்

உடலின் தசைகள் வலுவாக மாறும்

எலும்புகள் உறுதியடையும்

பாலுறுப்புகள் வளர்ச்சியடையும், பெண்களுக்கு மார்பகங்கள் வளரத்தொடங்கும்

உளவியல் ரீதியான மாற்றங்கள்:

வளரிளம் பருவத்தில் புதிதாகச் சுரக்கும் ஹார்மோன்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல உளவியல் ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்தும். வளரிளம் பருவத்தினரின் சிந்தனைகள், நடவடிக்கைகள் மற்றும் உணர்வுகளில் இந்த மாற்றங்கள் வெளிப்படும்.

சுய அடையாளத் தேடல்:

ஒருவரின் அடையாளம் என்பது இந்தப் பருவத்தில்தான் உருவாகத்தொடங்கும்.

நான் யார்?

எனக்கு என்ன பிடிக்கிறது?

எனது திறமைகள் என்ன?

எனக்கு எது சுலபமாக வருகிறது?

என்பதையெல்லாம் இந்தப் பருவத்தில்தான் கவனிக்கத் தொடங்குவார்கள். ஒட்டுமொத்தமாகத் தன்னை உணர்ந்து கொள்வதுதான் இந்தப் பருவத்தில் முதன்மையான ஒன்று.

தன்னை அறிந்து கொள்வதில் இவர்களிடம் என்ன சிக்கல் ஏற்படும் என்றால், தங்களை அச்சு அசலாக, தாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே தங்களை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, எப்படி இருந்தால் பிறரின் கவனம் கிடைக்குமோ அல்லது அடிமனத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அப்படித்தான் தாங்கள் உண்மையில் இருப்பதாக உணர்ந்து கொள்கிறார்கள். இதனால் இந்தப் பருவத்தில் தாங்கள் என அவர்கள் உணர்ந்து கொள்வது உண்மையில் அவர்களே அல்லர் அவர்கள் அப்படி இருப்பதும் அல்ல.

உதாரணத்திற்கு, ஒருவனுக்கு கிரிக்கெட் விளையாடவே பிடிக்கும் என வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அவனது வகுப்பில் அல்லது அவனது நண்பர்களுக்கு மத்தியில் கால்பந்து கிளப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் என்றால் தனக்கு அதுவே பிடிக்கிறது எனக் கட்டாயப்படுத்தி அதைப் பார்க்க முயற்சி செய்வான், ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் கால்பந்துதான் தனக்கு பிடித்த விளையாட்டு என நம்ப தொடங்கிவிடுவான். இந்தத் தவறான புரிதலின் விளைவாக எழும் பிரச்சினைகளே அவனது வளரிளம் பருவத்தில் முதன்மையான சிக்கல்களாக இருக்கும்.

வளரிளம் பருவத்தினருக்குச் சுய அடையாளத்தை உணர வைப்பதில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆனால், நம் பெற்றோர்கள் தங்களின் ஆசைகளைக் குழந்தைகளிடம் திணிக்க முற்படுவதால் அது இன்னும் இந்தப் பருவத்தைக் கடினமாக்குகிறது.

தன்னிச்சையாகச் செயல்பட முயற்சித்தல்:

குழந்தைப் பருவத்திலிருந்து வளரிளம் பருவத்திற்கு மாறும் போது,அதுவரை தன் மீது இருந்த கட்டுப்பாடுகளை உதறிவிட்டு எழுந்து வருவதுதான் முதல் மாற்றமாக இருக்கும். ஏனென்றால் குழந்தைப் பருவத்தில்  அத்தனைக்கும் பெற்றோர்களையும், மற்றவர்களையும் சார்ந்திருக்கும் நிலையே இருக்கும். அப்படியில்லாமல் தன்னிசையாகச் செயல்படத் தொடங்குவதுதான் இந்தப் பருவத்தின் தொடக்கமாக இருக்கும்.  போதிய அனுபவங்களும், தர்க்க ரீதியான அறிவும், பக்குவமும் இல்லாத காரணத்தினால் தன்னிசையாகச் செயல்பட முயற்சிப்பதன் விளைவாகப் பல்வேறு சிக்கல்கள் வரும். இந்தப் பருவத்தில் பெற்றோர்களுடன் ஏற்படும் முரண்களுக்குப் பெரும்பாலும் இதுவே காரணமாக இருக்கும்.

பெற்றோர்கள் என்ன சொன்னாலும் அதற்கு எதிராகச் செய்து பார்க்கலாம் என்ற மனநிலை இந்தப் பருவத்தில் ஏற்படும். அதுவும் பெற்றோர்களுடன் முரண்களை ஏற்படுத்தும். புதிய விஷயங்களை முயற்சித்துப் பார்த்து, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளலாமே தவிர முற்றிலும் தன்னிசையாகச் செயல்படுவது இந்தப் பருவத்தில் அவசியமற்றது. வளரிளம் பருவத்தின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இந்த மனநிலையே காரணமாகயிருக்கிறது.

அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில், அனைவரிடம் இருந்தும் துண்டித்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படுவது இன்னும் ஆபத்துகளை உருவாக்கும். அதனால் பெற்றோர்கள் இந்த மன நிலையை உணர்ந்துகொண்டு படிப்படியாக அவர்களை தற்சார்பான நிலைக்குக் கொண்டு செல்ல முற்படலாம். அதுவரை கொஞ்சம் மேற்பார்வையோடு அவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளை அனுமதிக்கலாம். அதே நேரத்தில் அதில் ஏதாவது தவறுகள் நடக்கும் போது அதை வெளிப்படையாகத் தங்களிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நம்பிக்கையையும் உருவாக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராத சிக்கல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.

எதிர்மனநிலை:

வளரிளம் பருவத்தினரைப் பொறுத்தவரை அவர்களுக்குள் உள்ளேயும், வெளியேயும் திடீரென ஏற்படும் மாற்றங்களின் விளைவாகப் பல புதிய முயற்சிகளை அவர்கள் தொடர்ச்சியாகச் செய்துகொண்டேயிருப்பார்கள். அதனால் ஏற்படும் எதிர்மறையிலான விளைவுகள் பற்றி அவர்களிடத்தில் எந்த அச்சமும் இருக்காது. அதைத்தான் தமிழில் “இளங்கன்று பயமறியாது” எனச் சொல்வார்கள். இந்தப் பருவத்தில் எப்போதுமே அனைத்தையுமே எதிர்த்து நிற்கும் மனநிலை இருந்து கொண்டேயிருக்கும். மற்றவர்களைப் புரிந்து கொள்வதோ அல்லது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோ இந்தப் பருவத்தில் பெரும்பாலும் இருக்காது. தன்னிச்சையாகவும், தன்னலம் சார்ந்து மட்டுமே சிந்தனை இருக்கும். இதன் விளைவாகவே பெரும்பாலும் அனைவருடனுமே ஒரு மோதல்போக்கு இருந்து கொண்டேயிருக்கும்.

மிதமிஞ்சிய ஆற்றல், எதற்கும் அஞ்சாத துணிவு:

வளரிளம் பருவத்தில் திடீரென உருவாகும் அளவற்ற ஆற்றலும், ஆபத்தை உணராத புதிய முயற்சிகளும் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பதற்றபட வைக்கும். இதன் விளைவாக இரண்டு தரப்பிற்குமிடையே முரண்கள் உருவாகும், இதனால் பெரியவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு எதிராகச் செய்திடவே விளைவார்கள்.

இந்தப் பருவத்தில் இருக்கக்கூடிய ஆபத்துகளுக்கு அஞ்சாத துணிவையும், மிதமிஞ்சிய ஆற்றலையும் எதிர்மறையான செயல்களில் வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதைத் திட்டமிட்டு செயல்படுத்தினால் பல வெற்றிகளை இந்தப் பருவத்திலேயே அடைய முடியும்.

பிறரின் கவனத்தையும், அங்கீகாரத்தையும் கோருதல்:

இந்தப் பருவத்தினுடைய முதன்மையான பண்பு, மற்றவர்களின் கவனத்தையும், அங்கீகாரத்தையும் கோருவது. அதிலும் குறிப்பாக எதிர்பாலினத்தவரின் கவனத்தை ஈட்டும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது. இந்தப் பருவத்தின் அத்தனை செயல்களிலும் இந்தப் பண்பே பிரதானமாக இருக்கும். வித்தியாசமான சிகையலங்காரம் செய்வது முதல் மிகவும் வேகமாக பைக் ஒட்டுவது வரை பிறரின் கவனம் உடனடியாகக் கிடைக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள். சமூக வலைத்தளங்களின் வரவிற்குப் பிறகு அதில் கிடைக்கும் லைக்குகளுக்காகப் பல்வேறு வித்தியாசமான, விபரீதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் தூண்டுதல் இருந்து கொண்டேயிருக்கும். அது அவர்களது சமூக வலைத்தளக் கணக்குகளில் தொடர்ச்சியாக வெளிப்படும். சமூக வலைத்தளங்களில் மற்றவர்களின் கவனத்திற்காக மிகைப்படுத்தப்பட்ட அடையாளங்களையெல்லாம் நிஜமான அடையாளங்களென நம்பும் ஆபத்து இந்தக் காலத்தில் உருவாகியிருக்கிறது, வளரிளம் பருவத்தின் அடையாளச் சிக்கல்களுக்கு இதுவும் ஒரு காரணமாகயிருக்கிறது.

இந்தப் பருவத்தின் ஹார்மோன்களினால் உண்டாகக்கூடிய இந்த மிதமிஞ்சிய ஆற்றலை நேர்மறையான செயல்களில் திருப்பி விட்டால் அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படித்திக்கொள்ள முடியும். சிறுவயதிலிருந்தே ஏதேனும் ஒரு விளையாட்டினிலோ அல்லது வேறு ஏதாவது ஒன்றில் இருக்கக்கூடிய தனித்துவமான திறன்களில் இந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொண்டால் அதில் அவர்களை வெற்றிகரமானவர்களாக மாற்றமுடியும். ஆக்கப்பூர்வமான செயல்களுக்காக நிதானமாக்க் கிடைக்கும் பிறரின் கவனங்களும், அங்கீகாரங்களுமே ஆரோக்கியமானது என்பதை அவர்களுக்கு பெற்றோர்கள் உணர்த்த வேண்டும்.

எதிர்பாலின ஈர்ப்பு:

இந்தப் பருவத்தில் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் பாலியல் அடையாளங்களுக்கும், வளர்ச்சிக்கும் காரணமாகயிருக்கின்றன. துரிதமாக நடக்கும் இந்தப் பாலியல் வளர்ச்சியின் காரணமாக எதிர் பாலினத்தாரின் மீது கவர்ச்சியம், ஈர்ப்பும் இந்த வயதில் இயல்பாகவே உருவாகும். இப்படி உருவாகும் இந்த ஈர்ப்பு ஒருவித ரகசியக் கிளர்ச்சியை இந்தப் பருவத்தினருக்குக் கொடுக்கிறது. முதல் முறையாக ஏற்படும் இந்த உணர்வுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே எதிர்பாலினத்தாரின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். இப்படி ஏற்படும் ஈர்ப்பும், கவர்ச்சியும் தற்காலிகமானது. ஒரு நீடித்த உறவை வெறும் இது போன்ற தற்காலிக ஈர்ப்பை வைத்து மட்டும் தொடங்க முடியாது. அதற்கு நிறைய பக்குவமும், முதிர்ச்சியும், தன்னலமற்ற பிறரின் மீதான அக்கறையும் வேண்டும். அவை, எதுவும் இந்த வயதில் தோன்றியிருக்காது. அதனால் இந்த ஈர்ப்பையும், கவர்ச்சியையும் காதல் எனக் குழுப்பிக்கொள்ளாமல் அதைத் தற்காலிகமானது என உணர்ந்து கடந்து போய்விட வேண்டும். இதற்கு அடுத்தடுத்த பருவங்களில் உருவாகும் முதிர்ச்சியான பண்புகளின் விளைவாகவே ஒருவர் மீது காதல் கொள்ள முடியும் என இந்தப் பருவத்தினர் உணரவேண்டும்.

வளரிளம் பருவத்தில் மனநலத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள்:

வளரிளம் பருவத்தில் மனநலத்தைப் பாதுகாப்பது எவ்வளவு அவசியமானது எனப் பார்த்தோம். என்னென்ன காரணங்களினால் இந்தப் பருவத்தில் மனநலம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்:

ஊட்டச்சத்து இல்லாத உணவு:

மனநல வளர்ச்சி என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துகளுடன் நேரடித் தொடர்புடையது. சரிவிகித உணவுகள் எடுத்துக்கொள்ளாத போதும், ஊட்டச்சத்துகள் குறையும் போது, சரியான நேரத்திற்குச் சாப்பிடாத வாழ்க்கை முறைகளினாலும் மனநலம் பாதிக்கப்படுகிறது. சரியான விகிதத்தில் கிடைக்கும் கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்புச் சத்துகள், விட்டமின்கள், தாதுப்பொருட்கள் மனநல வளர்ச்சிக்கு அவசியமானது. அதற்கு ஏற்றவாறு நமது உணவுப் பழக்கத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

ஆனால், நவீன காலத்தில், எந்த நேரத்திலும், எந்த உணவையும் மிகச் சுலபமாகப் பெற முடியும் என்ற நிலையில் இதுவரை உணவின் மீதிருந்து ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. நடு இரவில் அதிக கலோரிகள் உடைய உணவை உண்பது, காலை உணவைத் தவிர்ப்பது போன்ற பழக்கவழக்கங்கள் இன்றைய இளைய தலைமுறையினரிடம் உருவாகியிருக்கிறது. இது அவர்களின் உடல் நலனை மட்டுமல்லாமல் மனநலனையும் பாதிக்கிறது.

சமீபத்தில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை அவருடைய அம்மா அழைத்து வந்தார், “வீட்டில் சமைக்கும் எதையும் சாப்பிடுவதில்லை, எல்லாவற்றையும் ஆர்டர் செய்துதான் சாப்பிடுகிறார். அதுவும் நேரம் காலம் எதுவுமில்லாமல் கண்ட நேரத்திற்கெல்லாம் ஏதேதோ ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்” என அழைத்து வந்தார். அந்தப் பெண்ணிடம் கேட்டதற்கு, “நான் என்ன சாப்பிடணும் என்ற உரிமை கூட எனக்கில்லையா?” எனக் கோபப்பட்டார். அப்போதுதான் பிரச்சினை சாப்பாட்டில் அல்ல, வேறு ஏதோ இருக்கிறது என்று சந்தேகம் வந்தது. அம்மாவிற்கும், மகளுக்கும் வேறு எதிலோ கருத்து வேறுபாடு இருக்கிறது, அதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக மகள் இதைச் செய்துகொண்டிருக்கிறாள் என அவர்களிடம் பேசியதற்குப் பிறகே புரிந்தது.

சமீப காலங்களில் நிறைய இளைய தலைமுறையினர், மனச்சோர்வில் இருக்கும் போது மிக அதிகமாக ஏதேதோ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதைக் கவனித்து வருகிறேன். “இப்போதெல்லாம் டிப்ரஷன் ஆனா நிறைய ஆர்டர் பண்ணி சாப்பிடறேன் சார், அதுதான் கொஞ்சம் ரிலீவ்டா இருக்கு” என கல்லூரி மாணவி ஒருவர் சமீபத்தில் சொன்னார்.

சம நிலையற்ற உணவுப் பழக்க வழக்கங்களால் மன நிலை பாதிப்பது ஒரு புறம் இருந்தாலும், மனநல பாதிப்புகள் இருக்கும்போது இதுபோல அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரமும் உருவாகி வருகிறது.

அதனால் சிறு வயதிலிருந்தே உணவு தொடர்பான ஒரு அடிப்படை அறிவை குழந்தைகளுக்குக் கொடுப்பது அவசியம். அதற்குக் பெற்றோர்களாகிய நாம்தான் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறைகள்:

வளரிளம் பருவத்தில் ஏராளமான ஆற்றல் தினம் தினம் உருவாகும் என்று பார்த்தோம் இந்த அளவுக்கதிகமான ஆற்றலையெல்லாம் தொடர் உடற்பயிற்சியின் வழியாகச் செலவிட வேண்டும்.  இல்லையென்றால் அந்த ஆற்றல் ஆபத்தான வழிகளில் பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்படும். இரண்டுமே மன நலத்தைப் பாதிக்கக்கூடியன. வளரிளம் பருவத்தைப் பொறுத்தவரை தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்வது உடல் நலத்திற்கும் முக்கியம், மனநலத்திற்கும் முக்கியம்.

அதீத திரைநேரம்:

இன்றைய காலத்தில் நமது மனநிலையைப் பாதிக்கும் முக்கியமான செயல் அதிக நேரம் திரையில் செலவிடுவதே. அது கணிணித் திரையாக இருக்கலாம், தொலைகாட்சியாக இருக்கலாம் அல்லது ஸ்மார்ட் போனாக இருக்கலாம். அனைத்து திரைகளும் மூளை வளர்ச்சியை, மூளையின் திறனை, மன நிலையை, உணர்வுகளைப் பாதிக்கின்றன எனப் பல்வேறு ஆராய்ச்சிகள் சொல்கின்றன. எவ்வளவு நேரம் திரையைப் பார்க்கிறோம் என்பதை நமது கட்டுக்குள் வைத்துக்கொள்வது மனநலத்திற்கு மிகவும் அவசியமானது. வளரிளம் பருவத்தில் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் வரை திரைநேரம் இருக்கலாம், அதைத் தாண்டும்போது மனநலம் பாதிக்கப்படும்.

சமூக வலைத்தளங்களில் நடந்து கொள்ளும் முறைகள்:

சமூக வலைத்தளங்களில் நாம் எப்படி இயங்குகிறோம் என்பது நமது மனநலத்தைப் பாதிக்கும் முக்கியமான காரணியாக இருக்கிறது. சமூக வலைத்தளம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அங்கு நீங்கள் பார்க்கும், படிக்கும் அத்தனையிலும் மிகைப்படுத்தல் இருக்கின்றன. அங்கு எதுவுமே அசலானது கிடையாது. அதனால் சமூக வலைத்தளங்களில் நாம் பார்ப்பவற்றோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது, அங்கு கிடைக்கும் அங்கீகாரத்தை நிஜவுலகில் நமக்குக் கிடைக்கும் அங்கீகாரமே உண்மையானது.  அதனால் சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் அங்கீகாரத்தை முக்கியமானதாக நினைக்க கூடாது. சமூக வலைதளங்களில் நேரில் தெரியாத யாருடனும் உணர்வுப்பூர்வமாகப் பழகக்கூடாது. அங்குக் கிடைக்கும் எதிர்மறையான விளைவுகளைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்ல வேண்டும். இதையெல்லாம் செய்ய முடிந்தால் மட்டுமே சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் கணக்கை மூடிவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

சிக்கலான உறவுகள்:

இந்தப் பருவத்தில் உருவாகும் எண்ணங்களும், நம்பிக்கைகளும், விருப்பு, வெறுப்புகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டேயிருக்கும். அதற்கு ஏற்றவாறு நாம் மற்றவர்களுடன் பழகும் முறைகளும் மாறிக்கொண்டேயிருக்கும். அதீத ஹார்மோன்களால் ஏற்படும் உணர்வுகளினால் மற்றவர்களுடனான உறவு என்பது எப்போதும் சீராக இருக்காது. இதையெல்லாம் உணர்ந்து சீரான உறவை மற்றவர்களுடன் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். நமக்கு உள்ளே ஏற்படும் உணர்வு மாற்றங்களைப் பெரும்பாலும் வெளிப்படுத்தாமல் நமக்குள்ளே கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த உணர்வுகளைச் சரியாகக் கையாளக் கற்றுக்கொண்டாலே மற்றவர்களுடன் ஏற்படும் பெரும்பாலான உறவுச் சிக்கல்களைத் தவிர்த்து விடலாம். அவற்றைத் தவிர்த்து விட்டாலே முழுமையான மனநலத்துடன் இருக்கலாம்.

போதைப் பொருள்கள்:

வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களில் ஆபத்தான மாற்றமென்றால் அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்துவிடத் துணியும் மனநிலையே. அதே போல இந்தப் பருவத்தில் சகவயதினரின் நடவடிக்கைகளைப் பார்த்து இவர்களும் அதே போலச் செய்யத் துணிவார்கள்.  இதன் காரணமாகவே வளரிளம் பருவத்தினர்ப் போதை பொருள்களை நாடிச் செல்கிறார்கள். தொடக்கத்தில் போதைப் பொருள்களினால் உண்டாகக்கூடிய மோசமான விளைவுகளைப் பற்றி அச்சமின்றி இருப்பதாலேயே இதைத் தொடர்ந்து உபயோக்கிக்கும் நிலைக்கும் செல்கிறார்கள். இந்த வயதில் போதை பொருள்கள் எடுத்தால் அது அவர்களின் ஆளுமையை மொத்தமாக மாற்றிவிடும், இந்தப் போதை பொருள்கள் மூளையில் ஏற்படுத்தக்கூடிய நிரந்தரமான பாதிப்புகளின் விளைவாக இந்தப் பருவத்தில் உருவாகக்கூடிய ஆளுமையும்,அடையாளமும் பிறழ்வாக உருவாகிவிடும் அதன் பாதிப்பு வாழ்நாள் முழுக்க இருக்கலாம். அதனால், போதைப் பொருள்களைத் தற்காலிக கிளர்ச்சிக்காக, அது தரும் தவறான கவனத்திற்காகப் பயன்படுத்தி அதன் வழியாக நிரந்தர பாதிப்பை உருவாக்கிக்கொள்ளாமல் இருப்பதில் வளரிளம் பருவத்தினர் கவனமாக இருக்க வேண்டும்.

வளரிளம் பருவத்தினரைப் புரிந்துகொள்வோம்!

ஒவ்வொரு காலத்திலும், புதிய தலைமுறையினரின் செயல்பாடுகளின் மீது அதற்கு முந்தைய தலைமுறையினருக்கு ஏராளமான புகார்கள் இருந்திருக்கின்றன. ஏதோ ஒரு வகையில் அவர்களின் புதிய நடவடிக்கைகள் இவர்களை அச்சம் கொள்ள வைத்திருக்கின்றன, அவர்களது விழுமியங்களைப் புறந்தள்ளுவதால் ஏற்படும் தவிப்புகூட இந்த அச்சத்திற்குக் காரணமாக இருக்கலாம். தங்களுக்கு மறுக்கப்பட்டவையெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கிறது என்ற பொறாமையின் விளைவாக்க் கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் புதிதாக உருவாகி வரும் தலைமுறையினரை ‘மற்றவர்கள்’ என அவர்களைத் தங்களில் இருந்து பிரித்துப் பார்ப்பதன் வழியாக அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்வதை முந்தைய தலைமுறையினர் திட்டமிட்டுத் தவிர்க்கிறார்கள். வளரிளம் பருவத்தினரைப் பற்றி எதிர்மறையான செய்திகளைக் கடக்கும்போதெல்லாம் “இவர்களைத் திருத்த முடியாது” என்று உள்ளுக்குள் பெருமிதங்களுடன் கடந்து செல்கின்றனர். “இவர்களைத் திருத்த முடியாது” என்பது உண்மையில் ஒரு தந்திரம், அதிகரிக்கும் இன்றைய தலைமுறையினரின் பிரச்சினைகளுக்குத் தாங்களும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து தப்பித்துக்கொள்ளும் தந்திரம். அடுத்த தலைமுறையினரை அவர்களின் புதிய காலத்தோடு புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப அவர்களைப் பாதுகாக்க வேண்டியது முந்தைய தலைமுறையினராகிய நம்முடைய கடமைதான். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக நாம் எதுவுமே செய்யவில்லையென்பது உண்மையில் எல்லோருக்கும் தெரியும். அந்த இயலாமைகளையே, அதனால் வரும் குற்றவுணர்ச்சிகளையே நாம் அவர்களைக் குறைசொல்வதன் வழியாக மறைத்துக்கொள்கிறோம். உண்மையில் அதிலிருந்து வெளியே வந்து இன்றைய மாறிவரும் கலாச்சார, பண்பாட்டு உணர்வுகளின் பின்ணணியில் அவர்களை புரிந்துகொள்ள முற்படுவோம். அவர்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பிடிவாதமான அனுமானங்களையெல்லாம் உதறிவிட்டு எந்த ஒரு முன்முடிவுகளுமில்லாமல் அவர்களைப் புரிந்து கொள்ள முற்படுவோம். உண்மையில் அப்படிப்பட்ட ஒரு புரிதலும் அதன் வழியாக அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதையும்தான் இன்றைய வளரிளம் பருவத்தினர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். வேறு எந்த முந்தைய காலத்துப் போலிப் பெருமித அனுபவங்களையும் விட இதுதான் அவர்களுக்குத் தேவையானதாகவும் இருக்கிறது.

sivabalanela@gmail.com