கல்யாணராமன்: டி.எம்.கிருஷ்ணாவையும் உங்களையும் இணைக்கும் நட்புக் கண்ணி எப்படி உருவாயிற்று? அவர் வாழ்வுப் பின்புலமும் உங்கள் வாழ்வுப் பின்புலமும் வெவ்வேறானவை. பூகோள ரீதியாகவே வெவ்வேறு இட, நிலப் பின்னணியிலிருந்து வரும் உங்கள் இருவரையும் எது இணைத்தது?

பெமு: எங்கள் நட்புக்கண்ணி கலைதான். இசைக் கலைஞரான அவர் சமூகப் பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். 2015இல் ‘மாதொருபாகன்’ பிரச்சினையின் போதும் கருத்துரிமை சார்ந்து காத்திரமாகக் குரல் எழுப்பியவர் அவர். அப்பிரச்சினையால் மாநிலக் கல்லூரிக்கு இடமாறுதல் பெற்றுச் சிலகாலம் சென்னையில் வசித்தேன். அமிதாவ் கோஷ் எழுதிய நூல் அறிமுகக் கூட்டம் ஒன்று அப்போது சென்னையில் நடந்தது. நண்பர் கண்ணனுடன் அக்கூட்டத்திற்குச் சென்றேன். அதற்கு டி.எம்.கிருஷ்ணாவும் வந்திருந்தார். இருவரையும் ஆ.இரா.வேங்கடாசலபதி அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அதிகம் பேசிக் கொள்ள முடியவில்லை.

மாதொருபாகன் வழக்கில் சென்னை, உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஓரிரு மாதங்களில் அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. 2016 செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன். மதுரைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டிக் காலச்சுவடு நடத்திய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சிறப்புரையாற்ற அவர் வந்தார். பொதுநிகழ்ச்சி எதிலும் பங்கேற்காதிருந்த நான் முதன்முதலாக அதில் மேடையேறிச் சில கவிதைகளை வாசித்தேன். அவர் தங்கியிருந்த விடுதியில் தான் நானும் இருந்தேன்.

அவரைத் தனியாகச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு அமைந்தது. இலக்கியத்திலிருந்து ஒதுங்கியிருந்த நாட்களில் எனக்காக நான் எழுதிக்கொண்ட விருத்தங்கள் ஏறத்தாழ நாற்பது இருந்தன. ஒவ்வொன்றும் ‘மாதொருபாகனே’ என்று முடியும். மாதொருபாகனிடம் என் குறைகளைச் சொல்லிப் புலம்பும் விதத்தில் எழுதியவை. விருத்தங்களின் படியை அவரிடம் கொடுத்தேன். அவற்றில் பாட ஏற்ற நான்கைந்தைத் தேர்ந்தெடுத்து பாடி கொடுத்தால் எனக்கு உதவியாக இருக்கும் என்று சொன்னேன். அவ்விருத்தங்களை இசையோடு கேட்டால் ஒரு ஆறுதல் கிடைக்கும் என்னும் எண்ணத்தில், எனது தனிப்பட்ட கேட்புக்காக அவரிடம் கோரிக்கை வைத்தேன்.

அங்கேயே ஓரிரு விருத்தங்களை வாசிக்கக் காட்டச் சொன்னார். சிலவற்றை உரிய வகையில் சந்தத்தோடு வாசித்தேன். மெட்டுக்கு ரொம்பவும் பொருந்தும் வகையில் இருக்கிறது என்று சொன்ன அவர் ‘நான் மேடையிலேயே பாடுகிறேன்’ என்றார். அப்போதும் பொதுவெளியில் என் பெயரும் மாதொருபாகன் பெயரும் வருவது குறித்துத் தயக்கம் இருந்தது. ‘மாதொரு பாகனே’ என்று முடியும் சொல்லுக்குப் பதிலாகப் ‘பேருடை ஈசனே’,  ‘என்மன நேசனே’ என்பது போல வேறு சொல்லை அவ்விடத்தில் போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டேன். ‘எதற்கு மாற்ற வேண்டும்? மாதொருபாகனே என்றே பாடுகிறேன்’ என்று அழுத்தமாகச் சொன்னார்.

அவர் தைரியம் எனக்குப் பெருநம்பிக்கை தந்தது.  சொன்னது போலவே அடுத்த ஓரிரு நாட்களில் கோயம்புத்தூரில் நடந்த கச்சேரியில் ஒரு விருத்தத்தைப் பாடி அரங்கேற்றினார். ‘முடியாத துயரில்நான் மூழ்கிக் கிடக்கின்றேன்’ என்று தொடங்கும் விருத்தம் அது. ரசிகர்களிடமும் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வேறு சில விருத்தங்களையும் கச்சேரிகளில் அவ்வப்போது பாடினார். அவை இசை ரசிகர்களிடையே ‘மாதொருபாகன் விருத்தங்கள்’ எனப் பெயர் பெற்றன.

மதுரைச் சந்திப்பின் போது  ‘இப்போது பாடும் கீர்த்தனைகளில் 99 விழுக்காடு பக்தி சார்ந்துதான் இருக்கின்றன. ஒரு இசை வடிவம் ஒருபொருளுக்கு மட்டுமே உரியதல்ல. அதில் பலவகைப் பொருள்கள் இடம்பெற வேண்டும். பக்தி அல்லாத பொதுவான ஆன்மீகம் தொடர்பாகவோ சமூகப் பிரச்சினைகள் பற்றியோ நீங்கள் கீர்த்தனைகள் எழுதலாம். உங்களுக்குத் தோன்றும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள். பாட நான் தயார்’ என்று சொன்னார். அவர் சொன்னதைப் பற்றிக்கொண்டு சிலவற்றை எழுதினேன். பஞ்சபூதங்கள், பறவைகள், காதல் என்றெல்லாம் வெவ்வேறு பொருள்களில் அவை இருந்தன. அவற்றை மிகுந்த உவப்போடு அவர் பாடினார். இப்படி இயலையும் இசையையும் இணைத்தது கலை என்னும் நட்புக்கண்ணிதான்.

கல்யாணராமன்: டி.எம்.கிருஷ்ணா ஒரு பாடகர். அவர் ஒன்றும் அரசியல்வாதியோ யோகா சாமியாரோ கார்ப்பரேட் தாதாவோ கிடையாது. அப்புறம் ஏன் அவரையே தொடர்ந்து குறி வைக்கிறார்கள்? உங்கள் சேர்க்கையால்தான் டி.எம்.கிருஷ்ணா கெட்டுவிட்டாரோ?

பெமு: கிருஷ்ணா பன்முகச் செயல்பாட்டாளர். இசைத்துறையில் செய்திருக்கும் சாதனைகள் போலவே எழுத்துத் துறையிலும் நல்ல நூல்கள் எழுதிச் சாதித்திருக்கிறார். ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ நூலே அதற்குச் சாட்சி. இதுவரை யாரும் கவனம் செலுத்தாத ஒருபக்கத்தில் அவர் கவனம் சென்றது. தாள வாத்தியக் கருவிகளில் முக்கியமானதாகிய மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் பற்றி ஆய்வு செய்து அந்நூலை எழுதினார். அதே போல பல ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். அரசியல், கருத்துரிமை உள்ளிட்ட சகலத்திலும் ஒரு கலைஞரின் பார்வை என்ன என்பதை முன்வைத்து எழுதுகிறார்.

அதேபோல அவர் ஒரு களச் செயல்பாட்டாளர். பல்வேறு அமைப்புகளோடு இணைந்து களத்தில் இறங்கிச் செயலாற்றக் கூடியவர். ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒரு கலைஞராகத் தம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்த்து அவ்வழியில் இயங்குகிறார். எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினை தொடர்பாகக் களத்திற்குச் சென்றதோடு ‘பொறம்போக்குப் பாடல்’ பாடி வெளியிட்டார். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்களோடு இணைந்து தம் பங்களிப்பையும் செலுத்தி வருகிறார். அருணா ராய், பெஜவாடா வில்சன் உள்ளிட்ட பலரோடு அவருக்கு நல்ல தொடர்பு உண்டு. அவர்கள் முன்னெடுக்கும் விஷயங்களில் தன்னையும் கிருஷ்ணா இணைத்துக் கொள்கிறார்.

கொரானோ காலத்தில் இசை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. அதனால் பல கலைஞர்கள் வருமானமின்றிப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்காகப் பல லட்சம்  நிதி திரட்டி உதவினார். கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு மட்டும் அவர் உதவவில்லை. நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், கூத்துக் கலைஞர்கள் எனப் பலதரப்புக்கும் அவர் உதவி சென்றது. நாமக்கல் மாவட்டக் கூத்துக் கலைஞர்களோடு ஒரு இணைப்பை நான் ஏற்படுத்திக் கொடுத்தேன். இசை, கூத்து தவிர வேறு எவ்வேலையும் செய்யத் தெரியாமல் அன்றாடப் பாட்டுக்கே தவித்து வந்த பல கலைஞர்களுக்கு உதவி கிடைத்தது. அதுபோலத் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பேர் அவர் மூலமாக உதவி பெற்றனர். அவர் முன்னெடுத்துச் செய்த உதவிகள் பற்றி பொதுவெளியில் எதுவும் தெரியாது. அப்படி எந்த விளம்பரமும் இல்லாமல் அவர் செய்யும் செயல்கள் ஏராளம்.

அவர் பன்முகத்தன்மை கொண்டவர். அவரது செயல்பாடுகளில் தேவைப்படும் போது பெரும்பாலும் எழுத்து சார்ந்து என்னையும் இணைத்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். என் சேர்க்கை அவரைக் கெடுத்துவிட என்ன இருக்கிறது? இருவருமே சமூக விழுமியங்களின் மீது கேள்வி எழுப்புபவர்கள் என்னும் ஒற்றுமை  இருக்கிறது. அப்படிக் கேள்வி கேட்பது கெட்டது என்றால் இருவருமே கெட்டவர்கள்தான். இரண்டு கெட்டவர்களின் சேர்க்கை இது என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்படித்தான் ஏற்கனவே சிலர் சொல்கிறார்கள்.

கல்யாணராமன்: நீங்கள் பனைமரம் பற்றிக் கீர்த்தனை எழுதியுள்ளீர்கள். அதை டி.எம்.கிருஷ்ணா பாடுகிறார். பெரியாரைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். அதையும் பாடுகிறார். பனைமரத்தையும் பெரியாரையும் பாடுவது அவ்வளவு பெரிய குற்றமா?

பெமு: பனைமரத்தையும் பெரியாரையும் பாடுவது குற்றமா என்றால் குற்றம்தான். பக்திதான் கர்நாடக சங்கீதத்தின் ஒரே உரிப்பொருள் என்று கருதி அதை இன்றைய மதவாத அரசியலுக்குப் பயன்படுத்த முயல்கிறவர்கள் ஒருபுறம். அந்த அரசியலைக் கைக்கொண்டு இந்த இசை தங்கள் சொத்து என்று தூய்மைவாதப் பார்வையில் தமது உயர்நிலை மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கிறவர்கள் ஒருபுறம். மத அடிப்படைவாத அரசியல் அதிகாரமும் சாதி அடிப்படைவாத சமூக அதிகாரமும் கூட்டுச் சேர்ந்து தங்களைத் தக்க வைத்துக்கொள்ளப் பலவிதமாக முயல்கின்றன. அதன் ஒரு வெளிப்பாடுதான்  ‘கர்நாடக சங்கீதம் என்றால் பக்திதான்’ எனத் தூய்மைவாதம் பேசுவதும். அவர்களுக்குப் பனைமரமும் ஆகாது; பெரியாரும் ஆகாது. பனைமரமும் தமிழர் அடையாளம்; தந்தை பெரியாரும் தமிழர் அடையாளம்.

கர்நாடக சங்கீதத்தில் தூய்மைவாதம் பேசும் பார்ப்பனக் கருத்தியலுக்கு எதிரானது தமிழ் அடையாளம். இவர்கள் சொல்லும் பக்திகூடப் பெருந்தெய்வங்களைப் போற்றும் பக்திதான். நாட்டுப்புறத் தெய்வங்களை வழிபடும் பார்ப்பனர் அல்லாதார் பக்திக்குக் கர்நாடக சங்கீதத்தில் கீர்த்தனைகள் இல்லை. நாட்டுப்புறத் தெய்வ பக்திக் கீர்த்தனைகளோ பக்தி அல்லாத பல்வேறு விஷயங்களோ கர்நாடக சங்கீதத்திற்குள்  வந்துவிட்டால் பார்ப்பனர் அல்லாத பிற தரப்பினரும் உள்ளே நுழைந்துவிடுவர் என்னும் அச்சம். தங்கள் கோட்டை தகர்வதை அனுமதிப்பார்களா? டி.எம்.கிருஷ்ணா செய்வது வெறுமனே பனைமரத்தையும் பெரியாரையும் பாடுவது அல்ல. அவர் செய்வது சகல பக்கங்களிலும் மூடுண்ட ஒரு கோட்டையைத் தகர்க்கும் வேலை. அதனால் தான் அதைக் குற்றமாகக் காண்கிறார்கள். அவரைக் குறி வைக்கிறார்கள்.

‘சமூகத்தில் நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதி மேலாண்மை எண்ணத்தைக் கைவிட்டு மாறிக் கொள்ள வேண்டும்; பார்ப்பனர்களும் மாறிக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்லது’ என்பதைப் பலவிதமாகப் பெரியார் சொன்னார். கிட்டத்தட்ட டி.எம்.கிருஷ்ணாவும் அதையேதான் சொல்கிறார்.  ‘கர்நாடக சங்கீதம் பரவலாக வேண்டும்; எல்லாத் தரப்பினரும் கலைஞர்களாகவும் பார்வையாளர்களாகவும் அதற்குள் வர வேண்டும். அப்போதுதான் கர்நாடக சங்கீதம் எதிர்காலத்தில் வாழும்’ என்கிறார் டி.எம்.கிருஷ்ணா. அதைப் புரிந்து கொண்டாலும் கூடத் தங்கள் ஆதிக்கமும் அதிகாரமும் தகர்ந்து போய்விடுமோ என்னும் அச்சமே டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுகிறது.  ‘அச்சமே கீழ்களது ஆசாரம்.’

கல்யாணராமன்:  கர்நாடக சங்கீதம் முழுமையாகப் பக்தியின் பாற்பட்டது என்று சொல்வது சரியாகுமா? பக்திதான் கர்னாடக சங்கீதத்தின் உயிர்நாடி, ஆன்மா என்கிறார்களே?

பெமு: கர்நாடக சங்கீதத்தைத் தன்வயப்படுத்திக் கொள்ளச் செய்த சதியின் வெளிப்பாடுதான் பக்தியை அதன் உயிர்நாடி என்று சொல்வது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இசையுலகம் பற்றிப் பல பதிவுகளை உ.வே.சாமிநாதையர் செய்திருக்கிறார். அவற்றைப் பார்த்தோமானால் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கர்நாடக சங்கீதத்தின் உரிப்பொருள் பெரிதும் காமம் என்றே சொல்ல வேண்டும். அக்கால வித்துவான் கனம் கிருஷ்ணையர் எழுதிய கீர்த்தனைகளைப் பற்றி ‘அவர் இயற்றிய கீர்த்தனங்களிற் பல சிருங்கார ரசத்தை மிகுதியாகக் கொண்டு இருக்கும்’ என்கிறார் உ.வே.சாமிநாதையர். ஜமீன்தாரைப் பாடினாலும் சரி, கடவுளைப் பாடினாலும் சரி, அவர்கள் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி காமம் மீறிப் பாடும் நாயக – நாயகி பாவத்தில் பாடுவதுதான் வழக்கம். அதாவது சரசத்துக்கு அழைப்பது போல அக்கீர்த்தனைகள் அமைந்திருக்கும்.

‘வாராரோ வந்து முத்தம் தாராரோ’ என்னும் பல்லவியில் அமைந்த கனம் கிருஷ்ணையர் எழுதிய கீர்த்தனை உடையார்பாளையம் ஜமீன்தார் கல்யாணரங்கர் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி காமம் மீதூரப் பாடுவது. ‘பருவ வயதில் என்னை மருவ வந்தால் அவர்க்குப் பலனுண்டாகும் என்று பாங்கியே சொல்லடி’ என்றும் ‘காமரச வல்லியென்றும் கண்ணே கண்மணி என்றும் கற்கண்டு அதரத்தைச் சுவைத்து மண்டலாதிபரும் இங்கே வாராரோ’ என்றும் அக்கீர்த்தனை அடிகள் சொல்கின்றன.

திருக்குன்றம் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள சௌந்தரராஜப் பெருமாள் மீது அவர் பாடிய ஒரு கீர்த்தனை ‘நல்ல நல்ல நிலவு பறி போகுதே, நானென்ன செய்வேனடி பாதகி’ என்னும் பல்லவியைக் கொண்டது. அகப்பொருள் இலக்கண மரபில் சொன்னால் அது ‘காமம் மிக்க கழிபடர் கிளவி.’ காமத்தைக் கட்டுப்படுத்த இயலாத தலைவி தன் தோழியை நோக்கிப் பேசும் கூற்று. ‘சல்லாப மாகவே வசந்த காலத்தில் சௌந்தர ராஜரைக் காணாமல் வீணே நல்ல நல்ல நிலவு பறி போகுதே’ என்று செல்கிறது அது. சரணத்தில் ‘செண்டு நகில்கள் திரண்டு விம்முதடி, செண்பகப் பூவாசனையும் கம்முதடி, பண்டு நினைத்த பருவம் கும்முதடி, பார்க்கில் உடம்பு மயிர்க்கூச் சம்முதடி’ என்று செல்கிறது. இப்படி ஏராளம் உள்ளன.

அந்தக் கால நாட்டியப் பதங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால் முழுக்க முழுக்கக் காமம்தான். சிறுகுழந்தைகளுக்கே அத்தகைய காமப் பாடல்களுக்கு அபிநயம் பிடிக்கக் கற்றுத் தருவார்கள். அதன் தொடர்ச்சியை நம் தொடக்க காலத் திரைப்படப் பாடல்கள் பலவற்றில் காணலாம். ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்’, ‘பழமுதிர்ச் சோலையிலே பார்த்தவன் வந்தானடி’ போன்ற பாடல்கள் எல்லாம் அந்த மரபின் தொடர்ச்சிதான். தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அதில் இடம்பெற்ற ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’, ‘நலந்தானா’ ஆகிய இருபாடல்களும் அம்மரபைப் பின்பற்றி எழுதப்பட்டவைதான்.  ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் பரதநாட்டியம் கற்றுக் கொண்டு அரங்கேற்றம் செய்யும் போது வரும் பாடல் ‘அறியாப் பருவமடா – மலர் அம்பையே வீசாதடா, மதனா’ என்பது. மன்மதனைப் பார்த்துச் சொல்வதாக எழுதிய பாடல். இப்படி எத்தனை எத்தனையோ இருக்கின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சில் வெளியான கீர்த்தனை நூல்கள் பலவற்றை ஒருமுறை புரட்டினாலே அக்காலக் கீர்த்தனைகளின் உரிப்பொருள் காமம் என்பது தெரியவரும். எல்லாக் காலத்திலும் கலைகளின் தீராத உரிப்பொருள் காதலும் காமமும்தானே. கர்நாடக இசைக் கீர்த்தனைகளிலும் அவைதான் இருந்தன. அதன்பின் தியாகையரின் தெலுங்குக் கீர்த்தனைகளையும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளையும் பெரிதும் பாட ஆரம்பித்துப் பரவலாக்கிக் கர்நாடக சங்கீதம் என்றாலே பக்திதான் என்னும் எண்ணம் ஏற்படும்படி செய்துவிட்டார்கள். அப்படிச் சொல்வதும் பரப்புவதும் இன்றைய ஆதிக்க அரசியலுக்கும் உகந்ததாக இருக்கின்றன. சாருநிவேதிதா போன்றவர்கள் எதையும் வாசிக்காமல், வரலாற்று உணர்வு இல்லாமல் பொதுப்புத்திக்கு உட்பட்டு இந்தப் ‘பக்தி’ மந்திரத்தைக் கிளிப்பிள்ளை போலச் சொல்கிறார்கள்.

உலகத்தில் எந்த இசை வடிவமாவது ஒரே ஒரு உரிப்பொருளைக் கொண்டிருக்குமா? அப்படி இருந்தால் அது நிலைபெறுமா? காலத்தைக் கடந்து வருமா? பாரதியார் பாடல்களும் பாரதிதாசன் பாடல்களும் கர்நாடக இசைக்குள் வந்திருக்க முடியுமா? காதலும் காமமும் நிலைபெற்ற உரிப்பொருள்கள் என்றாலும் காலந்தோறும் வெவ்வேறு விஷயங்கள் வந்து சேரத்தான் செய்யும். உணர்வுள்ள கலைஞர்கள் அதை உணர்வார்கள். பக்திப் பாடலுக்குக்கூட சமகாலம் சார்ந்து வெவ்வேறு பொருள் கொடுக்க இயலும்.

கல்யாணராமன்: எப்படி? பக்திப் பாடலுக்கு வேறு பொருள் கொடுக்க முடியும் என்பது குழப்பமாக இருக்கிறதே?

பெமு: ஒரு இலக்கியத்திற்குச் சூழல் சார்ந்து பொருள் கொடுக்கலாம் அல்லவா? ‘யாயும் ஞாயும் யாரா கியரோ’ என்னும் குறுந்தொகைப் பாடல் சாதிப் பிரிவினைகள் இல்லாத காலத்தில் எழுதியது. அதை இன்று சாதிக்கு எதிரான காதலர் குரலாகக் காண முடிகிறதல்லவா? ‘வெள்ளைக் கொக்கு பறக்குது’ என்று விடுதலைப் போராட்டக் காலத்தில் நாடக நடிகர்கள் பாடினார்கள்.  நாடகக் கதைச் சூழலில் அது வெள்ளைக் கொக்கைக் குறிக்கலாம். பார்வையாளர்களுக்கு அது வெள்ளையர்களைக் குறிக்கும். இப்படிக் கலைஞர்கள் சூழல் சார்ந்து தம் குரலை வெளிப்படுத்துவார்கள். அது போலத்தான் பக்திக் கீர்த்தனையைப் பாடினாலும் அதில் அரசியல் குரலைக் கொண்டுவரும் திறம்பெற்றவர்கள் கலைஞர்கள்.

2017 அல்லது 2018 என்று நினைக்கிறேன். மதுரையில் நடந்த ஒரு கச்சேரியில் ‘வழி மறைத்திருக்குதே மலை போல ஒரு மாடு படுத்திருக்குதே’ என்னும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை சஞ்சய் சுப்பிரமணியம் பாடினார். அப்போது ‘பசுமாடு’ தொடர்பான சம்பவங்கள் பல நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று சிலரை அடித்தே கொன்ற சம்பவங்களும் நடந்திருந்தன. ‘மாடு படுத்திருக்குதே – ஒரு மாடு படுத்திருக்குதே’ என்று சஞ்சய் அவ்வடியை மீண்டும் மீண்டும் பாடினார். ஒரு சமயத்தில் ‘மாடு படுத்திருக்குதே – கிழ மாடு படுத்திருக்குதே’ என்று ‘ஒரு’வின் இடத்தில் ‘கிழம்’ என்பதைப் போட்டுப் பாடினார். ‘கிழம்’ என்பதை ஆசூயை கலந்த உணர்ச்சி கொடுத்துப் பாடினார். ‘கிழம்’ என்பது மூலத்தில் இல்லை. அந்தச் சூழலுக்கு அவர் சேர்த்துக் கொண்ட சொல் அது. கிழம் என்பது பழமைவாதத்தைக் குறிக்கும் பொருள் தருகிறது. சிவபெருமானைத் தரிசிக்க விடாமல் தடுப்பது மாடு. சமூக முன்னேற்றத்தைத் தடுப்பதும் மாடுதான். ‘கிழமாடு’ என்று அவர் மாற்றிப் பாடியதன் பொருளைக் கச்சேரிக்கு வந்திருந்தோரில் பலர்  புரிந்து கொண்டு சிரித்தனர்.

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு நடந்தபோது கேரளத்தில் ஒரு கச்சேரியில் தியாகையரின் ‘நடச்சீ நடச்சீ சூசிரா அயோத்தி நகரமு காணரே’ என்னும் கீர்த்தனையை டி.எம்.கிருஷ்ணா பாடினார்.  ‘நடந்து நடந்து அயோத்தி நகரத்திற்குச் சென்றாலும் ராமனைக் காண முடியாது’ என்பது போன்ற பொருள் கொண்ட கீர்த்தனை அது. உள்ளார்ந்த பக்தி இல்லாமல் வெகுதூரம் நடந்து போய் அயோத்தி நகரத்தை அடைந்தாலும் ராமனைக் காண முடியாது என்பது சமகால அரசியலை விமர்சிக்கப் பயன்படுகிறது. அது தெலுங்குக் கீர்த்தனை. தியாகையர் கீர்த்தனைகள் பலவற்றிற்குப் பொருள் தெரியாமல்தான் பலரும் ரசிக்கிறார்கள். எல்லோருக்கும் புரியும் மொழியில் இப்பாடலைக் கிருஷ்ணா பாடியிருந்தால் பிரச்சினையில்லை. தெலுங்கு புரியாத பார்வையாளர்கள். எனவே பாடலை இடைநிறுத்தி அதற்குப் பொருள் மட்டும் சொன்னார் கிருஷ்ணா. உடனே பார்வையாளர்கள் சமகால அரசியலோடு இணைத்துப் புரிந்து கொண்டனர். அக்கீர்த்தனை அப்போது ஒரு அரசியல் சொல்லாடலாக மாறிப் போயிற்று. தியாகையரின் கீர்த்தனையையே சமகால அரசியலுக்குப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவர்கள் உண்டு.

இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் குறைந்தபட்ச அறிமுகம்கூட இல்லாமல் தமதுதான் சரி என்னும் நோக்கில் வலுவாகக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். பாரதிதாசன் என்றால் அவர் நாத்திகத்தை எழுதக் கூடியவர் என்று ஒருபிம்பம் வைத்துக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி வருவதில்லை. அவர் நாத்திகத்தையும் எழுதினார்; பக்தியையும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய முதல் பாடலே ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதுதானே. தமிழிசை இயக்கம் பரவலான போது, ராமனைப் புகழ்ந்து பாடும் தியாகையரின் தெலுங்குக் கீர்த்தனைகள் பலவற்றைப் பாரதிதாசன் தமிழில் மொழிபெயர்த்தார். ராகம், தாளம் எதுவும் சிதையாமல் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார். தியாகையர் கீர்த்தனையைப் பாடும் அதேமுறையில் பாரதிதாசன் மொழிபெயர்ப்பையும் பாடமுடியும் என்று டி.எம்.கிருஷ்ணா சொல்கிறார். அதற்கான முயற்சியும் செய்து வருகிறார்.

கர்நாடக சங்கீதத்தில் பக்திக்கும் இடமுண்டு என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப் பக்தியிலும் பன்முகத்தன்மை உண்டு. வேதநாயகம் பிள்ளையும் வேதநாயக சாஸ்திரியாரும் கிறித்துவைப் பற்றிக் கீர்த்தனைகள் எழுதியுள்ளனர். பெண்கள் நிலை பற்றியும் சமூகப் பிரச்சினைகள் பற்றியும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கீர்த்தனைகள் எழுதிய முன்னோடி வேதநாயகம் பிள்ளை. எதையும் அறிந்துகொள்ளும் வேட்கையில்லாமல், ஒருதுறை சார்ந்த அறிவைப் பெறாமல் கவன ஈர்ப்புக்காகவும் ஆதிக்க அரசியலுக்குத் துணை போகவும் கருத்துத் தெரிவிப்பவர்கள்தான் ‘கர்நாடக சங்கீதத்தின் உயிர்நாடி பக்தி’ என்று  சொல்வார்கள்.

கல்யாணராமன்: டி.எம்.கிருஷ்ணாவுக்குச் சங்கீத கலாநிதி விருது வழங்குவதை எதிர்ப்போர் சிலர் அவர் பெரியாரைப் புகழ்ந்து பாடுகிறார் என்பதைக் குற்றமாகச் சொல்கிறார்கள்.  வெறுப்பாளர் பெரியார் என்கிறார்களே நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பெமு: பெரியாரை ஓரளவேனும் படித்தவர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருந்தவர் பெரியார். அன்றாடம் கூட்டங்களில் பேசியவர்; பத்திரிகைகளில் எழுதியவர்; மக்களோடு உரையாடியவர். அவருடைய அடிப்படைக் கொள்கை சாதி ஒழிப்பு என்பதுதான். சாதி ஒழிப்பு நோக்கிலிருந்தே மதம், கடவுள், இலக்கியம், கலைகள் என எல்லாவற்றையும் காண்கிறார். எது சாதியைக் காப்பாற்றுகிறதோ அதைக் கடுமையாக எதிர்ப்பார். சாதியைக் கடந்து அவற்றில் இருக்கும் தத்துவமோ கலை நுட்பங்களோ அவருக்குப் பொருட்டேயில்லை.

அன்றாட அரசியலில் இயங்கியவர் என்பதால் அவ்வப்போதைய சூழல் தரும் உணர்ச்சிக்கு ஏற்ப சிலசமயம் கடுமையான சொற்களைப் பயன்படுத்திப் பேசியிருப்பார். தம் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டிருப்பார். அவற்றை எல்லாம் வரலாற்றில் வைத்துக் காண வேண்டும். அப்படியில்லாமல் சூழலிலிருந்து பிடுங்கியெடுத்து ஒற்றை வரியை, ஒற்றைத் தொடரைப் பிடித்துக் கொண்டு பெரியாரை வெறுப்பாளராகக் காட்டலாம். முரண்பாடுகள் கொண்டவராகச் சொல்லலாம். யாருக்கு வேண்டுமானாலும் எதிரானவராக நிறுத்தலாம். பெரியாரைப் புரிந்துகொள்ள முழுமைப் பார்வை வேண்டும். அதற்கு அவரது நீண்ட காலச் செயல்பாடுகளையும் எழுத்துக்களையும் விரிவாகக் காணவும் வாசிக்கவும் வேண்டும்.

பெரியார் மனிதர் எவரையும் வெறுத்தவர் அல்லர். மனிதத்திற்கு எதிரான கருத்துருவமாக மனிதர்கள் மாறி நிற்கும் நிலையைத்தான் வெறுத்தார். அதனால் தான் அவர் பார்ப்பனியத்தை எதிர்த்தார்; பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை என்று சொல்கிறோம். சில சூழல்களில் கோபத்தோடு அல்லது எரிச்சலோடு அவர் பேசியதைத் தவறாகப் பொருள் கொண்டால் பெரியாரின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ‘சாதி ஒழிப்பு’ ஒன்றே பெரியாரின் சாரம் என்றே நான் எண்ணுகிறேன்.

கல்யாணராமன்: பெரியாரின் மொழி இழிமொழியா?

பெமு: அவர் பயன்படுத்திய மொழியை இழிமொழி என்று சொல்வோர் உள்ளனர். இப்போது ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள்கூட அப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளனர். பெரியார் எதிலுமே இயல்பானவர். சிறுவயது முதல் பல்லாண்டுகள் ஈரோடு சந்தைப் பகுதியில் வியாபாரம் செய்து வந்தவர் பெரியார். ஆகவே மக்கள் மொழியாகிய பேச்சு மொழி அவருக்கு இயல்பாக வரும். பழமொழிகளும் உவமைகளும் நிறைந்த மொழி அது. குத்தலும் கிண்டலும் இயல்பாகக் கொண்ட மொழி அது. கெட்ட வார்த்தைகள் என்று பலர் ஒதுக்கும் சொற்கள் எல்லாம் தானாக வந்து விழும். வட்டாரச் சொற்கள் நிறைந்த மொழி அது. அதையே பொதுமேடைக்கும் பயன்படுத்தினார். தம்மைச் சார்ந்த ஒருவர் தம்மோடு உரையாடுவதாக மக்கள் எண்ணினர். அவருடைய வெற்றிக்கு முக்கியமான காரணம் அவர் பயன்படுத்திய மொழி. அவரைப் பின்பற்றிய மேடைப் பேச்சாளர்கள் எவரும் இல்லை. காரணம் அது அவருக்கே உரிய தனித்தன்மை. பேச்சு மொழியை இழிமொழியாகக் காண்பது பெருந்தவறு; அது ஆதிக்க சாதிக் கருத்தியல்.

நம் தொடக்க காலத் திரைப்படங்களில் கதாநாயக நாயகியர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பேசும் மொழி எழுத்துத் தமிழாக இருக்கும். வேலைக்காரர்கள், மாட்டுவண்டி ஓட்டுவோர், விவசாயிகள் போன்றோர் பேசும் மொழி பேச்சு மொழியாக இருக்கும். பின்னர் அப்போக்கில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் ஆதிக்க சாதியின் மொழி உயர்வானது; ஒடுக்கப்பட்ட சாதியின் மொழி இழிவானது என்னும் சாதிப் பார்வை இன்னும் மாறவில்லை. பெரியாரின் மொழியை இன்றைக்கும் இழிமொழி என்று காணும் ஆதிக்க சாதிப் பார்வை பொதுவெளிக்கு வருகிறதே. என்னதான் செய்வது?

கல்யாணராமன்: டி.எம்.கிருஷ்னா பாடிய பெரியார் பற்றிய பாடலை எழுதியவர் நீங்கள். அதை எழுதிய சூழல் என்ன?

பெமு: நான் எழுதிய கீர்த்தனைகளை மட்டும் டி.எம்.கிருஷ்ணா பாடிய ஒரு கச்சேரிக்கு ஸ்டாலின் ராஜாங்கம் வந்திருந்தார். கச்சேரி முடிந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது ‘எங்கள் கிராமத்திற்கு வந்து நீங்கள் பாட வேண்டும். அம்பேத்கார் பிறந்த நாளில் ஏற்பாடு செய்கிறேன்’ என்று ஸ்டாலின் சொன்னார்.  ‘அப்போது அம்பேத்கார் பற்றிய பாடல் ஒன்றைப் பாடிவிடுவோம். முருகன் எழுதட்டும்’ என்று கிருஷ்ணா சொன்னார். அந்தக் கச்சேரி ஏற்பாடு நடக்கவில்லை. நானும் எழுதவில்லை. 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிருஷ்ணா சொன்னார், ‘இந்த ஆண்டு அம்பேத்கார் பிறந்த நாளின் போது ஒரு பாடல் பாடி வெளியிடுவோம். எழுதுங்கள்.’ அப்போது அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துப் பாடல்களைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இடைச்சியூர் முருகேசன் என்பவர் அப்பாடல்களை மிகவும் அற்புதமாகப் பாடியிருந்தார்.

காவடிச் சிந்து என்பது முருகக் கடவுளோடு தொடர்புடையது. முருகன் கோயிலுக்குக் காவடி எடுத்து நடந்து செல்வோர் இடையிடையில் காவடியாட்டம் ஆடுவர். அவ்வாட்டத்திற்குப் பாடும் பாடல்தான் காவடிச் சிந்து. இது நாட்டுப்புறப் பாடல் வடிவத்தைச் சேர்ந்தது. அண்ணாமலை ரெட்டியார் பாடிய பிறகு இலக்கண ஆசிரியர்களும் அதை ஏற்றுக்கொண்டு சிந்து வகைகளில் ஒன்றாகக் காவடிச் சிந்துக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர். பெ.தூரன் போன்ற கீர்த்தனை ஆசிரியர்களும் இந்த வடிவத்தில் எழுதியுள்ளனர். ஒருவரைப் போற்றிப் பாடுவதுதான் காவடிச் சிந்தின் அமைப்பு முறை. அது கடவுளாக இருந்தால் என்ன, மனிதராக இருந்தால் என்ன? அதுவும் அம்பேத்கார் போன்ற பேராளுமையைப் போற்றுவதற்கு இதைவிடப் பொருத்தமான வடிவம் ஏது என்று தோன்றியது. அப்படிக் காவடிச் சிந்து வடிவத்தில் ஈர்க்கப்பட்டு அம்பேத்காரைப் பற்றி அவ்வடிவத்தில் ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றேன். அது எனது கன்னி முயற்சி. ‘கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்’ என்று தொடங்கும் அக்காவடிச் சிந்தைப் பாடி டி.எம்.கிருஷ்ணா 2022 ஏப்ரலில் வெளியிட்டார். அதற்கு நல்ல கவனிப்பும் வரவேற்பும் இருந்தன. அப்பாடலை வேறு மேடைகளில் சிறுவர் சிறுமியர் எல்லாம் பாடினர்.

அதைத் தொடர்ந்து பெரியார் பற்றி ஒருபாடல் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். அம்பேத்கார் பாடலைக் கேட்டு அதில் பயன்படுத்தியிருந்த சொற்களை எல்லாம் பாராட்டிய நண்பர் ஆ.இரா.வேங்கடாசலபதி ‘பெரியார் பற்றி எழுத மாட்டீர்களா?’ என்று கேட்டார். எண்ணம் இருக்கிறது என்று சொன்னேன். ‘பெரியார் பற்றியும் பாடி நீங்கள் வெளியிட வேண்டும்’ என்று அவர் டி.எம்.கிருஷ்ணாவிடமும் வலியுறுத்தினார். பெரியார் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். எனினும் ஒரு கீர்த்தனையில் பெரியாரை எப்படிக் கொண்டு வருவது என்று குழம்பினேன். நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு பிடிமானம் கிடைத்தது. ‘நான் சொல்கிறேன் என்று எதையும் கேட்காதே. உன்னுடைய சொந்த புத்தியைக் கொண்டு யோசித்து நான் சொல்வது சரி என்று பட்டால் ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டுவிடு’ என்னும் பொருள்படப் பெரியார் தம் பேச்சுக்களில் அடிக்கடி மக்களை நோக்கிச் சொல்வார். அதிலிருந்துதான் ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார், சொந்தப் புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்னும் பல்லவி கிடைத்தது.

பாடலை எழுதிக் கிருஷ்ணாவிடம் கொடுத்துவிட்டேன். அவருடைய வேலைகளுக்கு இடையே மெட்டமைக்கச் சிலகாலம் எடுத்துக் கொண்டார். ஒருசமயம் ‘பாடல் தயார். நீங்கள் சொல்லும்போது வெளியிடலாம்’ என்றார். பழ.அதியமான் தான் வைக்கம் நூற்றாண்டு தொடக்கத்தைப் பற்றிச் சொன்னார். ஆகவே அதை ஒட்டி 2023 மார்ச் மாதத்தில் பழ.அதியமான் தொடக்கவுரை வழங்க டி.எம்.கிருஷ்ணா பாடிய அப்பாடலை வெளியிட்டோம். ஆயிரக்கணக்கானோர் அப்பாடலைக் கேட்டுள்ளனர். பலருக்கும் அப்பாடல் பிடித்திருக்கிறது. அப்பாடலைப் பாடியதால் டி.எம்.கிருஷ்ணா நாத்திகர் ஆகிவிட மாட்டார். தான் ஆத்திகமும் இல்லை, நாத்திகமும் இல்லை என்னும் இடைநிலையாளராகக் கிருஷ்ணா தம்மைக் கூறிக்கொள்கிறார். நான் என்னை நாத்திகன் என்று சொல்லிக் கொண்டாலும் பெரியார் அளவுக்கு என்னால் தீவிரமாக அதைப் பின்பற்ற முடிந்ததில்லை. இருந்திருந்தால் ஏன் ‘மாதொருபாகன் விருத்தங்கள்’ எழுதும் நிலை நேர்ந்திருக்கப் போகிறது? பெரியார் என்றாலே நாத்திகம் தான் என்று நினைப்பது தவறு. பெரியார் என்றால் ‘சாதி ஒழிப்பு’ என்பதுதான்.

காந்தியைப் பற்றி எத்தனையோ பேர் பாடியுள்ளனர். கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளாகவே பாடியிருக்கின்றனர். மனிதர்களைப் பற்றிக் கர்நாடக சங்கீதத்தில் பாடல்களே இல்லையா? காஞ்சி சங்கராச்சாரியாரைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன் டி.எம்.கிருஷ்ணாவே பாடியிருக்கிறார். யோகி ராம்சுரத்குமார் பற்றிப் பெ.தூரன் எழுதிய பாடல்களைப் பலர் பாடியுள்ளனர். திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் பற்றிய கீர்த்தனைகளைப் பற்றி உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து கணக்கெடுத்தால் தனிமனிதர்களைப் பாடிய துதிப் பாடல்கள் எத்தனையோ இருக்கின்றன. அப்படியிருக்க அம்பேத்காரும் பெரியாரும் கர்நாடக சங்கீதத்திற்குள் வந்தால் என்ன?

கல்யாணராமன்: ஒரு பாடகருக்கான சமூகப் பொறுப்புணர்வின் அடையாளமாகக் கிருஷ்ணாவைப் பலர் பார்க்கிறார்கள். அவரை ஒரு பாசாங்குப் போராளியாகக் கண்டு கேலி செய்பவர்களும் இருக்கிறார்கள். அவரோடு கிட்டத்தட்டப் பத்தாண்டு நட்பு உள்ளவர்கள் நீங்கள். உண்மையில் கிருஷ்ணா எப்படிப்பட்டவர்?

பெமு: நம் பிறப்பு, வளர்ப்பு, வாழும் சூழல் அடிப்படையில் சில இயல்புகள் வந்து சேர்வதுண்டு. நம்முடையது சாதியச் சமூகம் என்பதால் அந்த இயல்புகளில் பல சாதி சார்ந்தவையாக இருக்கின்றன. நம் செயல்பாட்டு எல்லைகளையும் சாதி குறுக்குகிறது. ஒருவர் தம் சாதியிலிருந்து வெளியேறி இன்னொரு சாதியில் இணைந்து கொள்ளவும் முடியாது. சாதிதான் பிறப்போடு ஒட்டிக்கொண்டு வருகிறதே? சாதியிலிருந்து வெளியேறியவர்கள் எல்லாம் சேர்ந்து வாழும்படியான ஏதோ ஒரு அமைப்பு முறை இங்கிருக்குமானால் பலர் அப்படி வெளியேறி வர முடியுமோ என்னவோ. நீங்கள் என்னதான் செய்தாலும் உங்கள் உறவுகள் சாதி வட்டத்துக்குள்தான் இருக்கின்றன. கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் அதிகபட்சம் இருசாதி உறவுகளைப் பெறுகிறார்கள். அவ்வளவுதான்.

இந்தச் சூழலில் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எல்லைக்குள்தான் தம் செயல்பாட்டுத் தளத்தை அமைத்துக்கொள்ள முடிகிறது. சிலரால் பேச மட்டும் முடிகிறது. சிலரால் தம் துறை சார்ந்து சில மாற்றங்களை முன்னெடுக்க முடிகிறது. சிலரால் தம் குடும்பத்திற்குள் ஓரளவு மாற்றத்தைக் கொண்டு வர முடிகிறது. சிலரால் பொதுச்சமூகத்திற்குள் நுழைந்து சில செயல்களைச் செய்ய முடிகிறது. எதுவுமே செய்யாமல் தேடிச் சோறு நிதம் தின்று வாழும் வேடிக்கை மனிதர்களுக்கு நடுவில் தம்மால் இயன்ற அளவு செயல்படுபவர்களை அதற்கேற்ப அங்கீகரிக்க வேண்டும். செயல்படுபவர்கள் மீது நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் சுமத்தி ‘ஏன் அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை’ என்று விமர்சனம் செய்வது மிக எளிது. அல்லது ஒருவரின் பிறப்பு சார்ந்து ஐயத்தைக் கிளப்புவதும் சுலபம்.

டி.எம்.கிருஷ்ணா ஒரு கலைஞராகத் தம் எல்லைக்கு உட்பட்டுப் பல செயல்பாடுகளை முன்னெடுக்கிறார். அதை முதலில் நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் செயல்பாடுகளைப் பற்றி எதுவுமே அறியாமல் அல்லது அரைகுறையாகக் கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு ‘போலிப் போராளி’ என்று விமர்சிப்பது சரியல்ல.   ‘கிருஷ்ணா சேரிக்குப் போய்க் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார். சேரி மக்களுக்குக் கலைகள் கிடையாதா?’ என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர் சேரிக்குப் போய்க் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுப்பதைப் பார்த்துவிட்டுத்தான் பேசுகிறார்களா?

ஊரூர் ஆல்காட் குப்பம் என்பது கடற்கரையோரம் இருக்கும் மீனவர் குப்பம். அவ்வூரைத் தத்தெடுத்துச் சில செயல்பாடுகளை முன்னெடுக்கும் குழுவினரோடு கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார். இசை சார்ந்து சில விஷயங்களை அப்பகுதியில் அவர் செய்கிறார். எல்லாரும் சமம் என்பது போல ‘எல்லா இசையும் சமம்’ என்னும் கருத்துள்ளவர் அவர். ஆண்டுக்கு ஒருமுறை அவ்வூரில் கலைத் திருவிழா நடத்துகிறார்கள். அதில் பல்வேறு இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றை ஏற்பாடு செய்வதற்கும் நிதி திரட்டுவதற்கும் கிருஷ்ணா முன்னிற்கிறார். எல்லா ஆண்டும் அவர் பாடுவதில்லை. வெவ்வேறு கலைஞர்களை அழைத்து வந்து பாட வைக்கிறார். அப்பகுதி மக்கள் தம் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். யாருக்காவது ஓர் இசைக்கலையையோ நடனக் கலையையோ கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் அதற்கு உரிய உதவிகளைச் செய்கிறார். பல ஆண்டுச் செயல்பாட்டில் அவ்வூர் மக்களில் ஒருவராகவே கிருஷ்ணா மாறியிருக்கிறார். அம்மக்களும் அப்படித்தான் கருதுகின்றனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் அந்தத் திருவிழாவை ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டு வந்து அதைப் பற்றிக் கருத்துச் சொன்னால் சரியாக இருக்கும். அல்லது விசாரித்து அறிந்துகொண்டாவது பேசலாம். ஓராண்டு நிகழ்ச்சிக்குச் சென்று வந்த கவிஞரும் பத்திரிகையாளருமான ஆசைத்தம்பி அதைப் பற்றி விவரமாகக் கட்டுரை எழுதியிருக்கிறார். பல செய்திகள் வந்திருக்கின்றன. கிருஷ்ணாவும் முகநூலில் பலவற்றைப் பகிர்ந்திருக்கிறார். ஒருவரைப் பற்றிக் கருத்துச் சொல்வதற்கு முன் குறைந்தபட்சத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இன்று வாய்ப்புகள் இருக்கின்றன.

அவரோடு பழகியது, அவர் செயல்பாடுகளை அறிந்தது, சிலவற்றில் பங்கு பெற்றது ஆகிய அனுபவங்களின் அடிப்படையில் சொன்னால் கிருஷ்ணாவின் பேச்சிலோ செயல்பாடுகளிலோ போலித்தனம் என்பது துளியும் இல்லை என்பேன். அவர் நிறைய வாசிப்பவர். தமக்கென சுயசிந்தனையை உருவாக்கிக் கொள்பவர். ஆகவே தம் சிந்தனைப்படி செயல்படுகிறார். மனதில் நினைப்பதை யாருக்காகவும் மறைத்துக் கொள்ளாமல், எந்தப் பாசாங்கும் இல்லாமல் நேரடியாகச் சொல்லும் இயல்பு கொண்டவர். எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னைச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொள்பவர். வெளிப்படப் பேசும் அவ்வியல்பு சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சிலருக்கு அதிரடியாகத் தோன்றுகிறது. ஆனால் அதுதான் அவர் இயல்பு. அதேபோல விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக அணுகுபவர் அவர். ஒரு விமர்சனம் எந்தப் பின்னணியிலிருந்து வருகிறது என்பதைச் சட்டென ஊகித்து விடுவார். எதை எடுத்துக்கொள்ள வேண்டும், எதற்கு மதிப்பளிக்க வேண்டும், எதைப் புறந்தள்ள வேண்டும் என்பதைச் சரியாகச் செய்வார்.

அதே போல தம் செயல்பாட்டின் எல்லைகளையும் அறிந்தவர் அவர். ஒரு இசைக்கலைஞர் எவற்றைச் செய்ய முடியுமோ அவற்றைச் செய்யலாம் என்னும் தெளிவு உள்ளவர். அவர் செயல்பாடுகளில் போலியோ பாசாங்கோ கிடையாது; அதுதான் அவர் இயல்பு. விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அல்லது கவலைப்படாமல் பொதுவெளியில் தம் கருத்துக்களை முன்வைப்பார். ஆனால் விளைவுகளைப் பற்றி யோசித்து அல்லது கவலை கொண்டு தம் செயல்பாடுகளை முன்னெடுப்பார். என் புரிதலில் டி.எம்.கிருஷ்ணா தம் மீதான கவனக் குவிப்பை விரும்பாதவர். ஆனால் நிகழ்த்து கலைஞராக இருப்பதாலும் செயல்பாடுகளாலும் கவனக் குவிப்பு வரும்போது என்ன செய்வது என்று தவிப்பவராகவும் இருக்கிறார்.

கல்யாணராமன்: ஓர் அமைப்பு விருது கொடுக்கிறது. அந்த அமைப்பு யாருக்குத் தகுதி இருப்பதாகக் கருதுகிறதோ அவருக்கு விருது கொடுக்கிறது. டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது கொடுத்ததில் மட்டும் ஏன் இத்தனை பிரச்சினைகள்? பணமும் புகழும் சம்பாதிக்க நினைக்கும் சராசரிப் பாடகர்களின் நோக்கத்திலிருந்து எந்த அம்சம் கிருஷ்ணாவை வேறுபடுத்துகிறது? அவரைச் சுற்றிச் சர்ச்சைகள் தொடர்ந்து சுழன்றடிப்பதற்கு உண்மையான காரணம்தான் என்ன?

பெமு: டி.எம்.கிருஷ்ணாவுக்கு 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை மியூசிக் அகாதமி வழங்கியிருப்பது அந்த அகாதமியின் பார்வையில் நேர்ந்திருக்கும் மிகப் பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது. விருது அறிவிப்பில் “Known for his powerful voice and his adherence to tradition when it comes to the art, he has experimented widely with its format. He has also worked towards expanding the listener base of the art by taking it to varied social settings and focusing on its exploratory as opposed to tightly defined structures. He has used music as a tool for social reform” என்னும் வாசகம் இடம்பெற்றுள்ளது. டி.எம்.கிருஷ்ணாவின் ஒட்டுமொத்த இசையுலகச் செயல்பாட்டைக் கூர்ந்து அவதானித்து அங்கீகரித்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று. கர்னாடக இசை வடிவத்தில் பரிசோதனைகள் செய்வது, பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கும் விரிவுபடுத்துவது என்பவற்றைக் குறிப்பிடுவது மட்டுமல்ல. ‘இசையைச் சமூகச் சீர்திருத்தத்திற்கான கருவியாகப் பயன்படுத்துகிறார்’ என்று சொல்கிறது அறிக்கை. கெட்டிதட்டிப் போன மரபைப் பேணும் அமைப்பு என மியூசிக் அகாதமியைக் கருதுகிறோம். ஆனால் அதன் பார்வையில் நெகிழ்ச்சி உண்டாகியிருப்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.

டி.எம்.கிருஷ்ணா என்னும் தனியாள் மாறினால் பிரச்சினையில்லை. தங்கள் மரபைக் காப்பாற்றும் ஓர் அமைப்பின் போக்கில் மாற்றம் வருகிறது என்பதை அதனால் பயன்பெறும் பலரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது தொடர்ந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் அவர் தலைமையிலான நிகழ்வில் பங்கு பெற மாட்டோம் என்று அறிவிப்பது உள்ளிட்ட எதிர்ப்புகள். அதைச் சாதகமாக்கி எடுத்துச் சென்று பரவலாக்கும் அரசியல் சூழல் இப்போது நிலவுகிறது. சிறுதுரும்பு கிடைத்தாலும் அதை ஊதிப்  பெருக்கிப் பயனடையும் வெறுப்பு அரசியல் இதைக் கையிலெடுத்துக் கொண்டது. பேனைப் பெருமாளாக்கும்  அரசியல் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள் அவர்கள். இதில் பெரியார் பெயரும் அடிபடுவது அந்த வெறுப்பு அரசியலுக்கு வசதியாகிவிட்டது.

ஆகவே இந்த விருதைப் பிரச்சினையாக்கி ஒரு அரசியல் திட்டத்தைப் பின்னி விட்டார்கள். கிருஷ்ணாவுக்கு இத்தகைய சர்ச்சைகளால் எந்தப் பயனும் இல்லை. சர்ச்சைகளை யார் உருவாக்குகிறார்களோ அவர்கள் பலனை எதிர்பார்க்கிறார்கள். ‘சர்ச்சையை உருவாக்கு; பலனைப் பெறு’ என்பது அவர்களது புதிய கீதை வாசகம். இந்தத் தேர்தல் நேரத்தில் இந்தச் சர்ச்சை குறிப்பிட்ட சாதியினர் வாக்குகளைச்  முழுமையாகத் தம்பக்கம் திருப்ப முடியும் என்று நம்பக் கூடும். இதில் பெரியாரையும் சம்பந்தப்படுத்துவதால் திராவிட அரசியலை எதிர்க்க உதவும் என நினைக்கலாம். எப்படியோ இந்நேரத்தில் தங்கள் கருத்தியலுக்கு இந்த சர்ச்சை வலு சேர்க்கும் என்னும் புரிதல் அவர்களுக்கு இருக்கிறது.

ஆகவே இந்தச் சூழலில் டி.எம்.கிருஷ்ணாவை ஆதரிப்பது வெறுப்பரசியலுக்கு எதிரான நடவடிக்கை என்றே கருதுகிறேன்.

—–