2014-இல் ஆட்சிக்கு வந்த பின் மோடி இந்திய பொருளாதாரத்தினை மேம்படுத்துவார் என்றுதான் 31% மக்கள் வாக்களித்து இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலான ஆட்கள், பாஜகவினர் கிடையாது. காங்கிரசின் மீதான ஊழல் குற்றசாட்டுகளால் புழுங்கிப் போய் இருந்த சாமான்யர்களுக்கு மோடி தேவ தூதராகத் தெரிந்தார். மோடி முன் வைத்த “வளர்ச்சி”, “10% ஜிடிபி சாத்தியங்கள்”, ”மாற்றத்திற்கான விதை”, “கறைபடாத கரங்கள்” என பலவும் இளைஞர்களாலும், நடுநிலை வாக்காளர்களாலும் கொண்டாடப்பட்டன. நாம் இப்போது 2019-இல் இருக்கிறோம். கோஷங்களும், பார்வைகளும், வளர்ச்சியும் நடந்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மையான பதில். மாறாக முன்பு இருந்ததை விட மிக மோசமான நிலைக்கு இந்தியாவை தன்னுடைய சுயமோகத்தால் மோடி தள்ளி இருக்கிறார் என்பதுதான் சார்பற்ற, தரவுகளின் வழியே நமக்குக் கிடைக்கக் கூடிய பார்வை.
1) ஆயில் ஜாக்பாட்டினை வீணடித்தது:
மன்மோகன் சிங் ஆட்சியில் கச்சா எண்ணெயின் பேரல் விலை சர்வதேச சந்தையில் $160ஆக உயர்ந்திருந்தது. அதனால் அன்னியச் செலவாணி கட்டுக்கு அடங்காமல் எகிறியது. பெட்ரோல், டீசல் விலை வேறு வழியில்லாமல் உயர்த்தப்பட்டது. காங்கிரசின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம். பெட்ரோல் விலையினைக் கட்டுப்படுத்த முடியாத, திராணியற்ற அரசு என்று மோடி தன்னுடைய ட்விட்டரில் அப்போது குறிப்பிட்டு இருந்தார். மோடி பதவியேற்ற முதல் வருடத்திலேயே சர்வதேச சந்தை விலை அதல பாதாளத்தில் வீழ்ந்தது. $140ல் இருந்து அது $40 வரைக்கும் கீழிறங்கியது. இன்றைக்கு வரைக்கும் விலை $60-னைத் தாண்டவே இல்லை. சடாலென நான்கில் ஒரு பங்காக விலை குறைந்ததால், நாம் வெளிநாட்டு ஆயில் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய அன்னியச் செல்வாணியும் நான்கில் ஒரு பங்காகக் குறைந்தது. நியாயமாய், இந்த பயன் பயனாளர்களுக்கு போக வேண்டியது. ஆனால், மோடி இந்திய ஆயில் நிறுவனங்கள் ஏற்கனவே பட்ட நட்டங்களைச் சரி கட்டவும், லாபத்தினைப் பார்க்கவும் விலையைக் குறைக்கவே இல்லை. நிதியமைச்சரும் இனி ஆயில் விலை மேலேறாது என்கிற நம்பிக்கையில் எல்லா கணக்கினையும் போட்டார். 2018 ஜூலையிலிருந்து விலை மேலேற தொடங்கியது. இந்தியாவில் பெட்ரோல் ரூ.90 வரைக்கும் போய், கரித்துக் கொண்டே போட்டதினை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அடுத்த பொய்யானது, மன்மோகன்சிங் ஆட்சியில் வெளியிடப்பட்ட “ஆயில் கடன் பத்திரங்களை” அடைக்க வேறு வழி தெரியாமல், விலையினைக் குறைக்காமல், கடனை அடைத்தோம் என்று மோடி அரசு சொன்னது. கிட்டத்தட்ட 1.44 லட்சம் கோடிகளுக்கு மன்மோகன் சிங் அரசு கடன் பத்திரங்களை வெளியிட்டு இருந்தது. ஆனால், உண்மையில் வெறும் 3,500 கோடிகள் மட்டும்தான் மோடி அரசின் ஆட்சிக் காலத்திற்குள் (2014 – 2019) கொடுக்கப்பட வேண்டியது. பலவும் 2021க்குப் பிறகுதான் சந்தைக்கு வரும்.
பெட்ரோலிய பொருட்களின் மீதான மத்திய அரசு வரி மற்றும் மாநில அரசு வரிகள் 46% ஆகும். இதில் வழக்கம் போல நிதியமைச்சரும், ஊடகங்களும் சொன்னது, மாநில அரசு வரிகளைக் குறைக்க வேண்டும் என்பதுதான்.
2014–&15 காலகட்டத்தில் குறைக்கப்படாத வரிகளின் மூலமாக 1,22,200 கோடிகளும், 2017 – 18 காலகட்டத்தில் இதுவே 2,80,000 கோடிகளுமாக உயர்ந்தது. 2014 – 2018 காலகட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 11 இலட்சம் கோடிகள் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் வழியாக பெற்று இருக்கிறது. அனைத்து மாநில அரசுகளும் சேர்த்து 2017- – 18ல் 1,86,000 கோடிகள் வரி வருவாய் பெற்றன. ஆனால் அதே கால கட்டத்தில் மத்திய அரசு 2.88 லட்சம் கோடிகள் பெற்றது. ஆக, மக்களுக்கும் தராமல், மாநிலங்களுக்கும் தராமல் ஆளும் பாஜக ஒன்றிய அரசு மக்களின் மீது நிதிச்சுமையை சுமத்தி, தங்களுடைய வருவாயினை பெருக்கிக் கொண்டது என்பதுதான் இதன் மூலம் தெளிவாய் தெரிகிறது.
கேள்வி: விலை குறைந்தபோது குறைக்கப்படாத நுகர்வோர் விலை, விலை உயரும்போது மட்டும் நுகர்வோருக்கு ஏற்றியது ஏன்? அப்போது நுகர்வோர் தான் அரசின் சுமையை சுமக்க வேண்டுமா? அரசு லாபம் சம்பாதிப்பதற்காக குடிமக்கள் எல்லா நிதி சுமைகளையும் தாங்க வேண்டுமா?
2) பணமதிப்பிழப்பு
டீமானிடைசேஷன் என்கிற பணமதிப்பிழப்பு விவகாரம் சந்தி சிரித்தது இன்றைக்கு ஊரறிந்தது. ஆனால் அதன் குரூர துயரங்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டன. மக்களுக்கு இப்போதைக்கு நினைவிருப்பது 99% பணம் திரும்பி வந்து விட்டது. அரசாங்கம் சொன்ன 3-4 லட்சம் கோடிகள் வராமல் போகும் என்கிற வாக்குறுதி பொய்யானது. ஆனால், மக்கள் மறந்த விஷயங்கள் கீழே:
அ ) 140க்கும் மேற்பட்ட சாமான்யர்கள் இறந்தார்கள்.
ஆ) தீவிரவாதம் மட்டுப்படும் என்று கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக யூரியில் ஆரம்பித்து புல்வாமா வரைக்கும் எந்த தீவிரவாத தாக்குதலும் நிறுத்தப் படவில்லை.
இ) மக்கள் டிஜிட்டலுக்கு மாறுவார்கள் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது.
ஈ) ஏராளமான ரொக்கம் சார்ந்த சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டன. அவை இன்றைக்கு வரைக்கும் மீளவே இல்லை.
உ) கூலி தொழில்கள், வாரக் கூலி வழங்கும் கட்டுமானத் துறைகள் அன்றைக்கு வீழ்ந்ததிலிருந்து இன்று வரை எழவே இல்லை
பல்வேறு தரவுகளில், அமித் ஷாவுக்கு நெருக்கமான குஜராத், மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கிகளில் 750 கோடிகளுக்கும் மேலான பணம் டீமானிடைசேஷன் காலத்தில் கை மாற்றப்பட்டு இருக்கிறது. மக்கள் ஒரே ஒரு இரண்டாயிரம் தாளுக்காகவும், புதிய ஐநூறு ரூபாய் தாளுக்காகவும் நாயாய் அலைந்த காலகட்டத்தில் தான் சென்னையில் சேகர் ரெட்டி மாதிரியான ஆளுங்கட்சி, பாஜகவிற்கு நெருக்கமான ஆட்களிடத்தில் புதிய கரன்சி தாட்கள் கட்டுக்கட்டாக மீட்கப்பட்டன. யார் இவர்களுக்கு இதையெல்லாம் கொடுத்தார்கள் என்பதற்கு இன்றைக்கு வரைக்கும் பதில் இல்லை. பல்வேறு பெரும் தொழிலதிபர்களின் கறுப்புப் பணம், ஆளுங்கட்சிக்கு இணக்கமான ஆட்களால் இந்தியா முழுக்க மாற்றிக் கொடுக்கப்பட்டு, அதற்கு எதிராக கட்சி நிதி வாங்கப்பட்டு இருக்கிறது. அசோசியேஷன் ஆஃப் டெமாக்கரடிக் ரிஃபார்ம்ஸின் கணக்குப்படி, இந்தியாவிலேயே அதிக கட்சி நிதி, கார்ப்பரேட்களால் வழங்கப்பட்டு இருப்பது பாஜகவுக்குதான். 1000 கோடி வரைக்கும் கட்சி நிதி பொது வெளியிலேயே பகிரங்கமாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால், சொல்லாமல் எவ்வளவு சேர்த்து இருப்பார்கள் என்பதை மக்களே யூகிக்கலாம்.
ஜனவரி 2019 ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, பணமதிப்பிழப்பு காலகட்டத்தினைவிட 20% அதிகமான ரொக்க பணப்புழக்கம் இப்போதைய இந்தியாவில் இருக்கிறது. ரொக்க மதிப்பிழப்பு நடந்த காலகட்டத்தில் மேலேறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள் படிப்படியாகக் குறைந்து, 2016 காலகட்டத்தில் எப்படி இருந்ததோ அப்படியேதான் இருக்கிறது. புதியதாக வந்திருக்கும் தகவல்களின் படி, அந்தக் கொடிய இரவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகக்கூட ரிசர்வ் வங்கி, இந்த நடவடிக்கை தேவை இல்லை என்று வலியுறுத்தி இருக்கிறது என்பது ஆர்.டி.ஐ.யில் தெரிய வந்திருக்கிறது. ஆனால், மோடியும், அவரின் சகாக்களுக்கும் தான்தோன்றித்தனமாக எல்லா மரபுகளையும் மீறி இதை அறிவித்து நாட்டினைப் புதைகுழிக்குத் தள்ளினார்கள்.
கேள்வி: இது நடக்கும், அது நடக்கும் என்று மோடி சொன்ன எதுவுமே நடக்கவில்லை என்பது பல்வேறு அறிக்கைகள், திரும்பி பணம் என்பதிலிருந்து தெரிகிறது. யாருடைய ஈகோவினைத் திருப்திப்படுத்த, யாருடைய ஆண்மையை நிரூபிக்க இவையெல்லாம்?
130 கோடி மக்கள் செத்தாலும் பரவாயில்லை, தானொரு ரட்சகன் என்று நிறுவ மோடி எடுத்த இந்த முடிவு சர்வ தேச அளவில் இந்திய ஆட்சி அதிகாரத்தின் மீதான நம்பிக்கையைத் தகர்த்து எறிந்த, சவக்குழிக்கான முதல் படி.
3) திட்ட கமிஷனிலிருந்து நிதி ஆயுக்
1991-இல் உலகமயமாக்கலுக்குப் பின், இந்திய பொருளாதாரத்திற்கு திட்டகமிஷன் ஆற்றிய பணிகள் ஒரு கட்டுரையில் எழுதி முடிக்க முடியாது. திட்ட கமிஷனின் தலைவர்களாகவும், பொருளாதார ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் மாநிலங்களின் குழுக்களோடு பேசி இந்தியாவிற்கான திட்டங்களை முன் வைப்பார்கள். அதை ஒவ்வொரு மாநிலங்களும் நிறைவேற்றும். மோடி ஆட்சிக்கு வந்தபின், முதலில் ஒழித்தது திட்ட கமிஷனை. திட்ட கமிஷனுக்கு பதிலாக, நிதி ஆயுக் என்கிற ஒற்றைத் தன்மை வாய்ந்த, அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட ஒரு தேசிய ஆலோசனை நிறுவனத்தினை உருவாக்கினார். பாஜக மற்றும் சங் பரிவாருக்கு ஆதரவான பொருளாதார நிபுணர்கள் இதில் நியமிக்க பட்டார்கள். அவர்கள் மோடியின் கட்டளைப் படி, சென்ட்ரலைசான ஒரு திட்ட முன் வரைவினை உருவாக்க முனைந்தார்கள். மாநிலங்களின் பங்களிப்போ, பார்வையோ, அவர்களின் தேவைகளோ இதில் கேட்டுக் கொள்ளப்படவில்லை. நிதி ஆயுக் ஒரு திட்டத்தினை முன்வைக்கும். மாநிலங்களை அவற்றை பின்பற்ற சொல்லும். பாஜக ஆண்ட மாநிலங்கள், நிதி ஆயுக்கின் தாசானுதாசனாக மாறின. பாஜக ஆளாத மாநிலங்கள், அதை முழுமையாக எதிர்க்க ஆரம்பித்தன. நீட் தகுதித் தேர்வு ஒரு உதாரணம்.
2018-இல் தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர் ராவ் பகிரங்கமாக பொதுவெளியில் நிதி ஆயுக் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் எதிராக இயங்குகிறது என்று அறிவித்தார். மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, நிதி ஆயுக்கினை கலைத்து விட்டு மீண்டும் திட்ட கமிஷனைக் கொண்டு வந்தால்தான் மத்திய அரசிடமிருந்து வங்கத்திற்கு நிதியுதவிகள் வரும் என்றார். மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கான பாலமாகச் செயல்பட வேண்டிய நிதி ஆயுக், பெரு முதலாளிகளின் லாபிகளுக்கான இடமாக மாறிவிட்டது. ஆதார் மீதான வழக்கு உச்சநீதி மன்ற சிறப்பு அமர்வில் நடந்து கொண்டு இருக்கும் போதே, நிதி ஆயுக்கின் தலைவர்கள் பொதுவெளியில், ஆதார் இல்லாமல் போனால் மத்திய அரசால் சமூக திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்று மிரட்டினார்கள். இத்தனைக்கும் நிதி ஆயுக்கின் தலைவராக மோடியின் வலதுசாரி, இந்துத்துவ பார்வைகளை ஆதரித்த அர்விந்த் பனஜாரியாவே பாதியில் கழண்டு கொண்டு போய் விட்டார். தேர்தல் சூழலில் காங்கிரசின் தலைவரான ராகுல் காந்தி முன் வைத்த ‘நியாய்’ திட்டம் செயல்படுத்தவே முடியாது என்று முந்திக் கொண்டு நிதி ஆயுக்கின் தலைவரான ராஜீவ் குமார் பேட்டி கொடுக்கிறார். நிதி ஆயுக் என்பது தனிப்பட்ட கருத்தியல் களமா அல்லது பாஜகவின் கொள்கை பரப்பு செயலகமா என்று பிரிக்க முடியாத அளவிற்கு அது பாஜக காவி ஆட்களால் பலவீனப் படுத்தப்பட்டு இருக்கிறது. சர்வதேச வெளியில் இன்றைக்கு யாருமே நிதி ஆயுக்கின் அறிக்கைகளை பொருட்படுத்துவதில்லை. அவர்களின் சர்வே முடிவுகளை கண்டு கொள்வதில்லை. காரணம், எல்லா அறிக்கைகளும், சர்வேக்களும், புள்ளி விவரங்களும் ஆளும் கட்சிக்குத் தோதாக, அசூர சாதனை படைத்து இருப்பதாக மட்டுமே வெளியாகின்றன. அதை யாருமே நம்பத் தயாராக இல்லை.
கேள்வி: மாநிலங்களில் பணியாற்றாத, மாநிலங்களோடு ஒருங்கிணையாத, பாராசூட்டில் இறக்கப்பட்ட அமெரிக்க வாழ் சங் பரிவார் பொருளாதார நிபுணர்களுக்கு இந்தியா எப்படிப் புரியும்? தங்களுடைய செல்ல திட்டங்களை எல்லாம், மாநிலங்களுக்குத் தேவை இருக்கிறதா, இல்லையா என்பது தெரியாமலேயே, அவர்கள் மீது திணிக்க முற்பட்டால், அது பன்முக தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. கோ–ஆபரேட்டிவ் பெடரலிசம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, ஒற்றைத் தன்மையை நோக்கி நகர முயற்சிப்பது எப்படி பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும்?
4) ஜி.எஸ்.டி. குளறுபடிகள்
ஜூலை 1, 2017 என்று நள்ளிரவு பாராளுமன்ற கூட்டத்தில் ஜி.எஸ்.டி. என்கிற பொருள் மற்றும் சேவை வரியினை மோடி அரசு அறிவித்தது. அறிவித்த அன்று அதில் ஏழு அடுக்குகளும், சில பல செஸ் என சொல்லக் கூடிய கூடுதல் வரி விதிப்பாணைகளும் இருந்தன. 2017இல் முழுமையான ஜி.எஸ்.டி. போர்ட்டல் என்று சொல்லக் கூடிய மத்திய அரசின் இணைய தளம் தயாராகவில்லை. இன்றைக்குவரைக்கும் அந்த இணைய தளம் நம்பக தன்மையோடு இயங்கவில்லை என்பதுதான் யதார்த்தம். இந்தியாவின் ஒட்டுமொத்த வணிகத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி அது. சுய புகழுக்காக அவசரகதியில் அறிவித்த மறைமுக வரி, ஏகப்பட்ட குழப்பங்களை உருவாக்கியது. இதே மோடிதான் குஜராத்தின் முதல்வராக இருந்த போது, காங்கிரஸ் முன் வைத்த ஜி.எஸ்.டி.யினை மூர்க்கமாக எதிர்த்தவர் என்பது வரலாறு. இப்படி திணிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. இடைநிலை, கடைநிலை நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கியது. சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிப்பினைத் தள்ளி வைத்த கதையெல்லாம் நடந்து இருக்கிறது. 1,00,000 கோடிகள் மாதம் வசூலிக்கும் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வரை 2-3 முறை தான் இதற்கு பக்கத்தில் வந்திருக்கிறது. இதில் ஏராளமான ட்ராப் அவுட்கள் நடந்தன. நிறுவனங்கள் மூடப்பட்டன. கள்ள சேனல்களில் பொருட்களின் விற்பனை முன்பை விட அதிகமானது. பல்வேறு மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, பாஜக அரசு பல்வேறு சலுகைகளையும், அடுக்குகள் குறைப்பையும் அறிவித்தது. இன்றைக்கு வரை தெளிவான சட்டமோ, அடுக்குகளுக்கான முறைமையோ சீர்ப்படுத்த படவில்லை.
இது வரைக்கும் ஜி.எஸ்.டி.யினை செலுத்த தேவையான ஜி.எஸ்.டி.யின் மென்பொருள், வலைப்பின்னல்கள் சரியாகவே இல்லை. ஈ-வே பில் என்று அழைக்கப்பட்ட மின் – இன்வாய்ஸ்கள் முழுமையாக செயல்பட முடியாதவாறு கட்டமைப்பு இருக்கிறது. ஏற்றுமதியாளர்களான ரீபண்ட் பல நிறுவனங்களுக்கு வரவே இல்லை. ரீபண்ட் வராததால் வொர்க்கிங் கேப்பிடலில் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன. ஏகப்பட்ட மாற்றங்கள் மாதத்துக்கு மாதம் நடந்து வருவதால், ஆடிட்டர்களே திணறிக் கொண்டு இருக்கிறார்கள். எது வணிகத்தை சீரமைத்து மறைமுக வரி வருவாயைப் பெருக்குமென்று சொல்லப்பட்டதோ, அதுவே வரி ஏய்ப்பிற்கான வழியாகவும், ஏராளமான வணிகர்கள் வணிகத்தை விட்டு விலகுவதற்கான காரணமாகவும் மாறியதும்தான் முரண்நகை.
கேள்வி: மாநிலங்களுக்கான வருவாய் ஆதாரங்களை முழுமையாகப் பிடுங்கிவிட்டு, வரும் வருவாயில் 50% என்று சொல்லுதல் எப்படி கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் வரும்? மாநில / மத்திய அரசு உறுப்பினர்கள் இருக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஏன் ஒருமித்த கருத்துக்கள் எழாமல் தொடர்ச்சியாக சிக்கல்கள் இருந்து வருகிறது? ஏன் இன்னும் மது ஜி.எஸ்.டி.யின் கீழ் வரவே இல்லை?
5) ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மீதான சர்வாதிகாரம்
ரகுராம் ராஜன் முந்தைய மன்மோகன்சிங் ஆட்சியில் முதலில் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், பின்பு ரிசர்வ் வங்கி கவர்னராகவும் உயர்ந்தார். மோடியின் ஆட்சியில் அவருக்கான நீட்டிப்பு மறுக்கப்பட்டது. சர்வதேச சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க ஒருவரான ரகுராம் ராஜனோடு, தொடர்ச்சியாக நிதி அமைச்சகம் சண்டையில் இருந்தது. ராஜன் சொல்வதை அரசு மறுக்கும். அரசு சொல்வதை ராஜன் காரண காரியங்களோடு நிராகரிப்பார். ரிசர்வ் வங்கி கவர்னர்களுக்கு நீட்டிப்பு கொடுப்பது என்பது மரபு. ஆனால், தொடர்ச்சியான கருத்து மோதல்களால் மோடி அரசு, ராஜனோடு தொடர விரும்பவில்லை என்பதை கோடிட்டு உணர்த்தியது. ராஜனும் புரிந்துகொண்டு நீட்டிப்பு கேட்காமல் அமெரிக்காவில் பேராசிரியர் வேலை பார்க்கப் போய்விட்டார்.
ராஜனுக்குப் பதிலாக துணை கவர்னராக இருந்த உர்ஜித் படேலை கவர்னராக மாற்றியது. உர்ஜித் வந்த சில மாதங்களிலேயே பணமதிப்பிழப்பு நடந்தது. உர்ஜித்தால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆனால் அடுத்தடுத்த காலாண்டுகளில் உர்ஜித்திற்கும், அரசுக்குமே முட்டிக் கொண்டது. ஒரு கட்டத்தில் ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் கையிருப்பு தேவை என்று பகிரங்கமாக மோடி அரசு பேசி, பிரஷர் கொடுத்ததில் உர்ஜித் தன்னுடைய பதவிக் காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்தார். சுதந்திரத்திற்குப் பின்பான 70 ஆண்டுகால ரிசர்வ் வங்கி வரலாற்றில் ஒரு ரிசர்வ் வங்கி கவர்னர் அரசோடு முரண்பட்டு, பதவிக் காலத்திற்கு முன்பாகவே விலகுவது இது இரண்டாவது தடவை.
உர்ஜித் வெளியேறுவதற்கு முன்பாக ஒரு சம்பவம் நடந்தது. துணை கவர்னரான விர்ரல் ஆச்சார்யா ஒரு நினைவு நாள் உரையில் எப்படி மத்திய அரசு வரம்பு மீறுகிறது என்றும், எப்படி அது ரிசர்வ் வங்கியினை நிர்ப்பந்திக்கிறது என்றும் பொதுவெளியில் ஒளிவு மறைவில்லாமல் பேசி விட்டார். அதை உர்ஜித் ஆதரிக்கவோ, நிராகரிக்கவோ இல்லை. இதை உணர்ந்து கொண்ட மத்திய அரசு, பல்வேறு வழிகளில் உர்ஜித்தின் மீது அழுத்தத்தினை செலுத்தியது. அதில் ரிசர்வ் வங்கியின் லாப டிவிடெண்டும் முக்கியமானது.
உர்ஜித் வெளியேறுவதற்கான காரணமாக சொல்லப்பட்டது என்னமோ அவருடைய உடல்நிலையும், குடும்பமும். ஆனால், உண்மையில், உர்ஜித் டீமானிடைசேஷனுக்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் கேட்டது போல மாற்ற மறுத்து விட்டார். மேலும், ரிசர்வ் வங்கியின் லாபத்தின் பங்கினை மத்திய அரசு தடாலடியாக கேட்டது. வழக்கமாய் ரிசர்வ் வங்கியிலிருந்து மத்திய அரசுக்குக் கொடுக்கப்படும் டிவிடெண்டினைவிட அதிகமாய் கேட்டது. அதையும் உர்ஜித் தீர்க்கமாக மறுத்தார். அதனாலேயே நிதியமைச்சகம் கிட்டத்தட்ட புழக்கத்தில் இல்லாத 1938ல் விதிக்கப்பட்ட ஒரு சட்டத்தினை கையில் எடுக்கக்கூடும் என்று பயமுறுத்தியது. இந்தத் தலைவலியே தேவையில்லை என்று தன்னுடைய பதவிக் காலம் முடியும் முன்னரே வெளியேறினார்.
மீண்டும் நிதியமைச்சகத்தில் இருந்து தங்களுடைய கைப்பாவையான ஷக்தி கந்தா தாஸினை ரிசர்வ் வங்கி கவர்னராக அரசு நியமித்தது. ஷக்தி கந்தா தாஸ், நிதித்துறை செயலராக இருந்த காலத்தில் தான் பணமதிப்பிழப்பு நடந்தது. அப்போது அரசு சார்ப்பில், ஊடகங்களிலும், பொது வெளியிலும் பணமதிப்பிழப்பினை ஆதரித்து பேசியவர்தான் இவர். முதல் முறை பணிந்த தாஸ், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அரசின் நிலைப் பாட்டிலிருந்து விலக ஆரம்பிக்கிறார். சர்வதேச முதலீடுகள், பரஸ்பர ஒப்பந்தங்கள், பன்னாட்டு வர்த்தக உறவுகள் என எல்லாமே ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தினை நம்பியும், அதன் பார்வைகளை நம்பியும்தான் இருக்கிறது. ரிசர்வ் வங்கி மாதிரியான ஒரு நிறுவனத்தினையே குலைக்க ஆரம்பித்த மோடி அரசு, தங்களுக்கான சவபெட்டியின் கடைசி ஆணியையும் அடித்துக் கொண்டுவிட்டது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர்களுக்கு இணையான பொறுப்பு தான் தலைமைப் பொருளாதார ஆலோசகர். அதிலும் பாஜக அரசு சறுக்கியது. இது நாள் வரை பெரும் பாலும் பொருளாதார ஆலோசகர்கள்தான் ரிசர்வ் வங்கி கவர்னர்களாக மாறுவார்கள். மன்மோகன் சிங், ரங்கராஜன், சுப்பாராவ், ரகுராம் ராஜன் என பல முன்னோடிகள் உண்டு. ஆனால், அரசின் தலையீட்டினை ஓரளவிற்கு மேல் பொறுக்க முடியாமல், பொருளாதார ஆலோசகரான அர்விந்த் சுப்ரமணியனும் பதவிக் காலம் முடியும் முன்பே பதவி விலகி வெளியேறினார்.
கேள்வி: சுப்ரமணியம் சுவாமி மாதிரியான பாஜக தலைவரே பகிரங்கமாகப் பொது வெளியில் அருண் ஜெட்லிக்கும், மோடிக்கும் பொருளாதாரம் தெரியாது என்கிறார். யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்ற வாஜ்பாய் காலத்திய பாஜக அரசின் நிதியமைச்சர்களும், மோடி அரசின் முடிவுகள் முட்டாள்தனங்கள் என்கிறார்கள். மன்மோகன்சிங், ப. சிதம்பரம் உள்ளிட்ட பலரும் சொல்லி விட்டார்கள். இன்னமும், எதை அடிப்படையாக வைத்து இன்னொரு முறை ஆட்சிக்கு வருவோம் என்கிற மிதப்பில் பாஜக இருக்கிறது?
ஆக, இந்த ஐந்து மெகா தவறுகளில் இந்தியாவே படு பாதாளத்தில் தள்ளிய சாதனையைத்தான் பாஜக செய்து இருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நால்வர் நீதிமன்றத்தில் அரசும், பணமும் விளையாடி ஜனநாயகப் படுகொலைகள் நிகழ்கிறது என்று சொன்னதும், வீட்டு வாசலில் கவுரி லங்கேஷ் மாதிரியான மாற்று சிந்தனையாளரைப் படுகொலை செய்ததும், ஒன்றுக்கு மூன்று முறைக்கு மேல் அரசு தரப்பிலிருந்து வரும் சர்வே டேட்டாக்களையும், வளர்ச்சி விகிதங்களையும் மாற்றி அமைத்ததும் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றைத்தான். ஜிலீமீ சிஷீuஸீtக்ஷீஹ் ணீs ஷ்மீறீறீ ணீs tலீமீ நீவீtவீக்ஷ்மீஸீs ணீக்ஷீமீ ஸீஷீ றீஷீஸீரீமீக்ஷீ sணீயீமீக்ஷீ uஸீபீமீக்ஷீ tலீவீs ணீutலீஷீக்ஷீவீtணீக்ஷீவீணீஸீ ரீஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீt. ளிuக்ஷீ ஷீஸீறீஹ் லீஷீஜீமீ வீs tஷீ ஸ்ஷீtமீ யீஷீக்ஷீ tலீமீ ணீறீtமீக்ஷீஸீணீtவீஸ்மீ யீஷீக்ஷீநீமீs.