ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றிய சர்ச்சைகளை நாமெல்லாம் படித்திருப்போம். இது ஏன் நடக்கிறது? இதன் விளைவுகள் என்னென்ன? போன்றவற்றைப் பார்ப்போம்.
ஜெ.என்.யூ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் பல்கலைக்கழகம் தில்லியில் அமைந்துள்ளது. இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களில் மிக முக்கியமானது. குறிப்பாக சமூகவியல் போன்ற விஷயங்களில் பி.ஹெச்.டி. ஆய்வு நடத்துவதற்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி நிலையம் இதுதான்.
மேற்கத்திய நாடுகளில் ஆய்வுப் பல்கலைக்கழகங்கள் என்று இருக்கும். அங்கே பாடம் எடுப்பது, அட்டெண்டென்ஸ் போடுவது போன்றவற்றை எல்லாம் சீரியசாக கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு மாணவன் அல்லது மாணவி பொதுவாக விஷயங்களை எப்படி அணுகுகிறார்கள், பிரச்சினைகளை எப்படித் தீர்க்க முனைகிறார்கள், புதிய சிந்தனாவாதங்களைக் கொண்டு வருகிறார்களா (Original Research) போன்றவைதான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும். இந்தியாவில் அந்த ரேஞ்சுக்கு கூறத்தக்க கல்விநிலையங்களில் முதலிடத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ் (IISc) மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்த இரண்டையும் குறிப்பிட்டு சொல்லலாம். அந்த அளவுக்கு புகழ் வாய்ந்தது ஜெ.என்.யூ.. கல்வி நிலையங்களின் தரம்குறித்து ஆண்டுதோறும் இந்திய அரசின் மனிதவளத்துறை நடத்தும் சர்வேயில் ஜெஎன்யூ தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் இருந்து வருகிறது. 2016இல் மூன்றாமிடம். 2018இல் ஒட்டுமொத்த கல்வி நிலையங்களில் ஏழாமிடம் மற்றும் பல்கலைக்கழகங்களின் வரிசையில் இரண்டாமிடம் பெற்றிருக்கிறது.
அது போதாதென்று, 2017ஆம் ஆண்டில் ஆகச்சிறந்த பல்கலைக்கழகம் என்ற ஜனாதிபதி விருதை ஜெ.என்.யூ. பெற்றிருக்கிறது.
ஜெ.என்.யூ.வில் படித்த நிறைய பேர் வாழ்வில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இருவரும் ஜெ.என்.யூ. மாணாக்கர்கள்தான். சமீபத்தில் பொருளாதாரத்தில் நோபல் பரிசுபெற்ற அபிஜித் பானர்ஜி படித்ததும் இங்கேதான். சஞ்சய் பாரு, பி சாயநாத், தலத் அஹ்மத் என்று பட்டியல் நீளுகிறது.
சரி, அப்படிப்பட்ட சிறப்புமிக்க ஜெ.என்.யூ. மேல் மத்திய அரசுக்கு என்ன கோபம்? பிரச்சினை மத்திய அரசுக்கு அல்ல. பாஜவுக்குத்தான். ஏனெனில் தொடங்கிய நாள் முதல் ஜெ.என்.யூ. இடதுசாரி சிந்தனைகளின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. அதனால் அந்தக் கல்வி நிலையத்தின்மேல் ஒரு கண் வைத்தே இருந்தது. ஆட்சிக்கு வந்ததும், ஜெ.என்.யூ.வில் நடந்த ஒரு மாணவர் கூட்டத்தில் ‘பாரதத்தைத் துண்டு துண்டாக்குவோம்,’ என்று கோஷங்கள் ஒலித்ததாக பாஜக குற்றம் சாட்டியது. (‘பாரத் தேரே துக்டே துக்டே கரேங்கே’).
அந்த சர்ச்சையில்தான் ஜெ.என்.யூ. மாணவர் கன்னையா குமார் கைதாகி நாடெங்கும் புகழ்பெற்றார். பின்னர் குறிப்பிடத்தக்க கம்யூனிஸ்ட் தலைவராக உருமாறினார். இந்த கோஷத்தை வைத்துதான் பிரதமர் மோடி பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இயக்கங்களை எல்லாம் ‘துக்டே துக்டே கேங்’ என்று அழைக்க ஆரம்பித்தார். தேர்தல் பிரச்சார மேடைகள் எங்கும் இந்த கோஷத்தைச் சுட்டிக்காட்டி செய்த பிரச்சாரம் வடஇந்தியாவில் வாக்கு அறுவடை செய்ய உதவியது.
அப்படிப்பட்ட அந்த ஜெ.என்.யூ. கோட்டையை ஆக்கிரமிக்க வெகு காலமாக பாஜகவின் மாணவர் அணியான கிஙிக்ஷிறி முயன்று வருகிறது. ஆனால் பெரிய முன்னேற்றம் காண இயலவில்லை. சமீபத்தில் கூட நடந்த மாணவர் யூனியன் தேர்தலில் கிஙிக்ஷிறி தோற்றுப்போனது. எனவே கோட்டையில் நுழைய முடியாவிட்டால் அதனைத் தகர்த்துவிட வேண்டியதுதான் என்று இறங்கி இருக்கிறது.
இதன் முதல் கட்டம் ஜெ.என்.யூ.வுக்கு ‘துக்டே துக்டே’ பட்டம் சூட்டியது. அது ஓரளவுக்கு நிலைத்து ஜெ.என்.யூ. என்றாலே பிரிவினைவாதம் பேசும் நிறுவனம் என்று வடஇந்தியாவில் நிறைய பேரை நம்ப வைத்தார்கள். ஜெ.என்.யூ. மாணவ மாணவிகள் பிஸியாக செக்ஸ் புரிவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள், படிப்பதில்லை என்று பேசினார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் மூவாயிரம் ஆணுறைகள் குப்பையில் வீசப்படுகின்றன என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பேசினார்.
அடுத்ததாக ஜெ.என்.யூ.வின் பேராசிரியர்களை மதிப்பிழக்க வைக்க முயற்சி செய்தார்கள். ரொமிலா தாப்பர் ஒரு புகழ்பெற்ற வரலாற்றறிஞர். இவர் டஜனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருப்பவர். விருதுகள் பெற்றிருப்பவர். இவரின் வரலாற்று புத்தகங்கள் இந்துத்துவத்தின் பிரச்சாரங்களைக் கிழித்து தொங்கப்போடும் வகையில் இருக்கும். இவர் ஜெ.என்.யூ.வில் கௌரவ பேராசிரியராக இருக்கிறார். தாப்பரின் பதவி நீட்டிப்பு முறை வரும் பொழுது இவரின் பயோ டேட்டாவைக் கேட்டு பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியது. அது பெரும் அவமானப்படுத்தும் விஷயம். எப்படி என்றால் இதை யோசித்துப்பாருங்கள்: ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்போன ஒரு இயக்குனர் ‘உங்க சிடி ரெண்டு மூணு அனுப்புங்க. கேட்டுட்டு முடிவு செய்யறேன்!’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதைவிட அசிங்கம் தாப்பரின் பயோ டேட்டா ஜெ.என்.யூ.வின் இணையத்தளத்திலேயே இருக்கிறது. கடிதம் எழுதுவதற்குப் பதில் நிர்வாகம் அவர்களின் இணையத்தளத்துக்கே போய் பயோ டேட்டாவை தரவிறக்கம் செய்திருக்கலாம்.
இந்த ‘தகர்ப்புத்’ திட்டத்தின் அடுத்தகட்டம்தான் கட்டணங்களை உயர்த்திவிடுவது. ஹாஸ்டல், மெஸ் கட்டணங்கள் அதிகரித்தது போதாதென்று நடைமுறைக்கு ஒவ்வாத பல்வேறு நிபந்தனைகளை விடுதிகளில் தங்கும் மாணாக்கர்களுக்கு விதித்து கடுப்பேற்றி இருக்கிறது நிர்வாகம். இவற்றை எதிர்த்துதான் மாணவர்கள் கடந்த இரண்டுவாரமாக போராடி வருகிறார்கள்.
இந்தப் போராட்டம் துவங்கியதுமே பாஜகவின் ஐடி செல் வழக்கம் போல தீயாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. வாதங்களுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக வாதம் செய்பவரை அவமானம் செய்வதுதான் சரியான அணுகுமுறை என்பதை கற்று வைத்திருப்பவர்கள் ஆயிற்றே? விடுவார்களா?
முதலில் மாணவ மாணவிகளின் வயதை வைத்து பஞ்சாயத்தை ஆரம்பித்தார்கள். கன்னையா குமார் 29 வயதில் பி.ஹெச்.டி. பண்ணிக்கொண்டு இருந்தது அவர்கள் கண்ணை உறுத்தியது. ‘30 வயசுல ஒருத்தன் ஸ்டூடண்டாம்!’ என்று கிண்டல் செய்யத் துவங்கினார்கள். சொல்லப்போனால் கன்னையா குமார் 30 வயதில் பி.ஹெச்.டி. முடித்தது ஒரு சாதனைதான். உலக அளவில் மாணவர்களுக்கு சராசரியாக 32 முதல் 35 வரை ஆகிவிடுகிறது. பின்லாந்து போன்ற மிக வளர்ந்த நாடுகளில் பி.ஹெச்.டி. முடிக்கும் சராசரி வயது 37. அமெரிக்காவில் 35. அதாவது ஒரு நாடு பொருளாதார மற்றும் கல்விரீதியாக வளர வளர அவர்களின் பி.ஹெச்.டி.யின் கடினம் கூடுகிறது.
இந்த முப்பது வயது வாதத்தை முறியடித்த பின், நாற்பது நாற்பத்தைந்து வயதுக்காரர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று சில ட்வீட்கள் பரவ ஆரம்பித்தன. அப்படிப் பகிரப்பட்ட போட்டோக்களில் இருந்தவர்கள் மாணவர்களே அல்ல என்று விபரங்கள் வெளிவந்த பின்னும் அவர்கள் நிறுத்தவில்லை. தவிர, இந்த ‘நாற்பது வயது கும்பல்’ எத்தனை பேர் ஜெ.என்.யூ.வில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஓரிருவர் இருக்கலாம். நிறைய பேர் டிகிரி முடித்து விட்டு கொஞ்ச நாள் வேலை செய்துவிட்டு பின்னர் வேலையை விட்டுவிட்டு படிக்கப் போகிறார்கள். நானே என் 33 வயதில்தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இங்கிலாந்து போய் மேற்படிப்பு படித்தேன். ஆனால் நானே ‘யூத்’ என்ற ரேஞ்சுக்கு என் வகுப்பில் 52 வயது வெள்ளையர் ஒருவர் ஆர்வமுடன் அசைன்மென்ட் எல்லாம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே பழக்கமான மலேசியத் தமிழர் ஒருவர், என்னைவிட மூன்று வயது மூத்தவர், பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை பெற்றுக்கொண்டு பி.ஹெச்.டி. செய்து கொண்டிருந்தார். வளர்ந்த நாடுகளில் இது சகஜம். இந்தமாதிரி படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் ‘விணீtuக்ஷீமீபீ ஷிtuபீமீஸீts’ என்று அழைப்பார்கள்.
அடுத்ததாக பி.ஹெச்.டி.க்கு அரசு கொடுக்கும் உதவிப்பணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ‘ஒருத்தன் வருஷக்கணக்கில பி.ஹெச்.டி. பண்றதுக்கு கவர்மெண்டு பணம் கொடுக்கணுமா?’ என்று கேட்டார்கள்
பி.ஹெச்.டி. செய்வது என்பது இந்தியாவில் முதுகலை முடித்து எம்.ஃபில். படித்த பின்னர்தான் துவங்க முடியும். அப்போது ஒருவருக்கு கிட்டத்தட்ட 26-27 வயதாகிவிடும். நம் நாட்டில் முக்கால்வாசி பேரை இளங்கலை படிக்கவைப்பதே பெரிய கஷ்டம். நாலு இடத்தில் கடன் வாங்கி நகையெல்லாம் விற்றுத்தான் அதையே செய்ய முடிகிறது. இளங்கலை முடித்ததும் அந்த மாணவனோ மாணவியோ வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் பெற்றோர் எதிர்பார்ப்பார்கள். சம்பாதிக்காமல் மேலும் படித்து மேலும் நகைகளை அடகு வைப்பதை எந்தப் பெற்றோரும் விரும்பமாட்டார்கள். எனவே இந்த பி.ஹெச்டி. உதவிப்பணம் என்பது படிப்பு என்றில்லாமல் வேலை என்ற அளவில் கருதப்படுவது அதற்கு உதவுகிறது. குறிப்பாக ஊரகப் பகுதிகளில் இருந்தும், ஒடுக்கப்பட்ட பிரிவில் இருந்தும் பி.ஹெச்.டி. கனவு காணுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
சரி, அப்படி அரசு உதவிப்பணம் பெற்று பி.ஹெச்.டி. படிப்பதன் பயன்தான் என்ன என்று கேட்கலாம். அந்த உதவிப் பணத்தை வேறு ஏதாவது உருப்படியான திட்டங்களுக்குச் செலவிடலாம்தானே என்று தோன்றலாம். நல்ல கேள்விதான்.
பி.ஹெச்.டி-க்கு செலவு செய்வது என்பது ஒரு தேசத்தின் முன்னேற்றத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசின் ஒரு துறை நடத்திய ஆய்வில் உலக நாடுகளில் பி.ஹெச்.டி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அந்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சியும் (நிஞிறி) அதிகரிக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். நீங்கள் இப்போதும் பி.ஹெச்.டி. அதிகமாகப் படித்த நாடுகளை பட்டியலிட்டால் அந்த நாடுகளின் பொருளாதாரத்தை வைத்து ஒப்பிட முடியும். 1) அமெரிக்கா 2) ஜெர்மனி 3) பிரிட்டன் 4) இந்தியா 5) ஜப்பான் 6) ஃபிரான்ஸ், இப்படி போகிறது அந்தப்பட்டியல்.
பெர்னார்ட் லீவிஸ் என்னும் அமெரிக்க வரலாற்று அறிஞர் 9/11க்கான பின்னணிக் காரணங்களை ஆய்ந்து What Went Wrong என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் வளைகுடா நாடுகளில் உள்ள பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகையில் அங்கே பி.ஹெச்.டி. படித்தவர்கள் எண்ணிக்கை உலகிலேயே மிகக் குறைவாக உள்ளது என்கிற விஷயத்தையும் அந்தப் பகுதிகளை பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்சனையாகக் குறிப்பிடுகிறார்.
அதாவது அரசு பி.ஹெச்.டி.க்களுக்கு செய்யும் செலவு என்பது தேசவளர்ச்சிக்குச் செய்யும் ஒரு முதலீடுதான். உலக அளவிலான ஆய்வுகளை வைத்துப் பார்க்கும் பொழுது இன்னமும் இந்த முதலீடு அதிகரிக்கப்படவே வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். நான் பிரதமராக இருந்தால் ஜெ.என்.யூ. போல நிறைய சமூகவியல் ஆய்வு பல்கலைக்கழகங்கள் முக்கிய நகரங்கள் எங்கும் அமைப்பேன். பி.ஹெச்.டி.க்கு கொடுக்கப்படும் உதவிப் பணத்தை இரட்டிப்பாக்குவேன்.
அதுவுமின்றி, ஜெ.என்.யூ.வுக்குப் போகும் மக்களின் வரிப்பணம் சுமார் 600 கோடிதான். ஒப்பீட்டளவில் இது ஒன்றுமே இல்லை. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள், வங்கிகளின் வாரக்கடன் ரத்து, விவசாயக்கடன் ரத்து என்று ஆயிரக்கணக்கான கோடியில் வரிப்பணம் செலவிடப்படுகின்றது. இவையெல்லாம் கூட தவிர்க்க முடியாதவை என்று வைத்துக்கொண்டால் உத்திரப்பிரதேசத்தில் ராமர் சிலை நிறுவ அந்த அரசு கிட்டத்தட்ட 3,000 கோடி செலவு செய்ய இருக்கிறது. இதற்கு வரிப்பணம் போவது குறித்து மத்திய அரசுக்கு பெரிய வருத்தம் இருப்பதாக தெரியவில்லை. இந்தமாதிரி வீணான செலவுகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
ஆனால் அதெல்லாம் இவர்களுக்கு வீணாக உறுத்தவில்லை சுமார் 500-600 கோடி மட்டும் உறுத்துகிறது என்றால் அதற்குக் காரணம் வரிப்பணத்தில் மேலுள்ள அக்கறை என்று எடுத்துக்கொள்ள முடியாது. போகிற வருகிறவன் எல்லாம் பி.ஹெச்.டி. பண்ணும் நிலை வந்துவிட்டதே என்ற ஆத்திரமாக வேண்டுமானால் இருக்கலாம்.
ஏனெனில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்புவரைகூட இந்தியாவில் கல்வி என்பது செல்வந்தர்களின், உயர் சாதியினரின் சொத்தாக இருந்தது. அதை மாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. கல்வியறிவற்ற, ஏழைப் பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவத்தை தெரிய வைக்க பாடுபட வேண்டி இருந்தது. பள்ளியில் சேர்ந்தும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடாமல் இருக்க முனைய வேண்டி இருந்தது.
இதையெல்லாம் பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள், சமூகப் போராளிகள் எல்லாம் செய்தும்தான் இன்று பெருமளவு முன்னேறி இருக்கிறோம்.
ஜெ.என்.யூ. மீதான தாக்குதல் போன்ற மத்திய அரசின் முயற்சிகளால் அந்த முன்னேற்றம் குறைந்து போகவே செய்யும். செல்வந்த நிலை உள்ளோர் மட்டுமே பி.ஹெச்.டி. போன்ற படிப்புகளைக் கனவுகாண இயலும். அந்த அளவுக்கு ஏன் இவர்களைக் கொண்டு போக வேண்டும். பள்ளி முடித்தால்தானே அவர்கள் கல்லூரிக்கே போக முடியும் என்று ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ஆரம்பப் பள்ளியிலேயே அந்தப் பிள்ளைகளை நிறுத்திவிட்டால் பின்னர் நாளைக்கு பிரச்சினை வராதுதானே?
‘குலக்கல்வி பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கிறோம்,’ என்றுதான் இன்னமும் சொல்லவில்லை. அதையும் தொடங்கிவிட்டால் ப்ராஜக்ட் முழுமை பெற்றுவிடும்.