(அறிமுகக் குறிப்புகளும், கவிதை மொழியாக்கமும்:- கௌதம சித்தார்த்தன்)

 

நியூஸ்டாட் விருது (The Neustadt Prize) என்பது அமெரிக்காவில் தோன்றிய முதல் சர்வதேச இலக்கிய விருது. சர்வதேச மொழிகளில் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் இலக்கிய ஆளுமைகளை அங்கீகரிக்கும் செயல்பாடாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தீவிர இலக்கிய தளங்களில் புகழ்பெற்ற இந்த விருதுக்கான நிதி உதவியை, ஓக்லஹோமா பல்கலைக்கழகம் மற்றும் World Literature Today இதழும் வழங்குகின்றன. மார்க்வெஸ், அக்டேவியா பாஸ், செஸ்லோ மிலோஸ், தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமார் போன்ற மிகப்பெரும் இலக்கிய ஆளுமைகள் கடந்த வருடங்களில் இந்தப் பரிசைப் பெற்றுள்ளார்கள். பெரும் இலக்கிய கௌரவத்திற்குரிய இந்த விருது, இந்த வருடத்திற்காக (2019–2020) அல்பேனிய எழுத்தாளரான இஸ்மாயில் கதாரேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சர்வதேச மேன் புக்கர் விருது பெற்றுள்ளதும் இங்கு குறிக்கத் தக்கது.

“சர்வாதிகாரமும் உண்மையான இலக்கியமும் என்றைக்கும் இணையாது… எழுத்தாளன் சர்வாதிகாரத்தின் இயல்பான எதிரி.” என்று பிரகடனப்படுத்தும் இஸ்மாயில் கதாரே (Ismail Kadare : 1936 ) புகழ்பெற்ற அல்பேனிய நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார், அவர் அல்பேனியாவில் தனது கவிதைகளின் வலிமை குறித்துப் புகழ் பெற்றார். ஃபிரான்ஸ் காஃப்கா மற்றும் ஜார்ஜ் ஆர்வெல் போன்ற இலக்கிய தீர்க்கதரிசிகளின் வரிசையில் பேசப்படும் இவர், தன்னைச் சுற்றியுள்ள தார்மீக, அரசியல் மற்றும் இன மோதல்களைக் கவனித்து உலகியல் வாழ்வை மறுபரிசீலனை செய்கிறார். 1963இல் அல்பேனிய மொழியில் வெளியிடப்பட்ட முதல்நாவலான, The General of the Dead Army போர் மற்றும் சர்வாதிகாரத்தின் விளைவுகள் பற்றிய கதை. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, நாவலில் பெயரிடப்படாத ஒரு இத்தாலிய ஜெனரல் – தனது நாட்டின் இறந்தவர்களை மீட்க அல்பேனியாவுக்கு அனுப்பப்படுகிறார். அவர், இறந்தவர்களை வீட்டிற்கு அழைத்து வருதல் குறித்த நவீன கதை சொல்லலுடன் நாவல் விரிகிறது. இதன் நவீன கதை சொல்லல் உத்தி பெரும் கவனிப்பை பெற்று, இந்நாவல் பல மொழிகளில் வெளிவந்தது.

“நான் ஒரு அரசியல் எழுத்தாளர் அல்ல, மேலும், உண்மையான இலக்கியத்தைப் பொறுத்தவரை, உண்மையில் அரசியல் எழுத்தாளர்கள் இல்லை என்பதும் எனது கருத்து. எனது எழுத்து பண்டைய கிரேக்க நாடகத்தை விட அரசியல் இல்லை என்று நினைக்கிறேன். எந்தவொரு அரசியல் ஆட்சியிருந்தாலும் நான் எழுத்தாளராக மாறியிருப்பேன். ” என்று பிரகடனம் செய்யும் இவர், அரசின் தணிக்கைகளில் இருந்து தப்பிக்க, இரும்புத் திரைக்குப் பின்னால் உள்ள வாழ்க்கையை விவரிக்க பெரும்பாலும் கட்டுக்கதை, நையாண்டி மற்றும் உருவகங்களை எடுத்துக் கொள்கிறார்.

ஒட்டோமான் துருக்கிய ஆட்சியின் ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக பால்கன் மக்களின் பொதுவான துன்பங்களைத் தனது மிகச் சிறந்த கதையாடல்களில் வலியுறுத்துகிறார்.

மேன் புக்கர் விருதுக் குழுவின் நடுவர்களில் ஒருவரான ஜான் கேரி, கதாரேவை விருதுக்குத் தேர்ந்தெடுத்த பின் சொல்கிறார் : “இஸ்மாயில் கதாரே, முழுமையான கலாச்சார வாழ்வியலை, அதன் வரலாறு, அதன் ஆர்வம், அதன் நாட்டுப்புறவியல், அரசியல் மற்றும் பேரழிவுகள் என்று வரைபடப்படுத்தும் ஒரு எழுத்தாளர்.”

அந்த விருது ஏற்புரையில் கதாரே சொல்கிறார்: “நான் ஐரோப்பாவின் ஒரு பகுதியான பால்கன் விளிம்பில் இருந்து வரும் ஒரு எழுத்தாளர், இது நீண்ட காலமாக மனித துன்மார்க்கத்தின் இழிவான செயல்கள் நிரம்பியது. எனது உறுதியான நம்பிக்கை என்னவென்றால், எனது நாடும் அல்பேனியாவைச் சேர்ந்த இந்த பிராந்தியமும் பிற வகையான போர் எதிர்ப்புச் செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் இலக்கியச் சாதனைகளின் தாயகமாக இருக்க முடியும் என்பதை ஐரோப்பிய மற்றும் உலகளவிலான பார்வைகள், கருத்துகள் இனிமேல் உணரக்கூடும்.”

பால்கன் பிரச்சினைகள் குறித்து சுருக்கமாகத் தெரிந்து கொண்டால்தான், கதாரேவின் இலக்கியங்களில் நாம் பயணம் செய்ய முடியும்.

நூற்றாண்டுகளாக நடந்துகொண்டிருக்கின்ற பால்கன் பிரச்சினைகளின் வேர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன்பே தோன்றிவிட்டன. அல்பேனியா, போஸ்னியா, ஹெர்ஸஹோவ்னியா, பல்கேரியா, கொசோவா, கிரீக், செர்பியா, மாண்டி நீக்ரோ… ஆகியவை பால்கன் நாடுகள் என்று அழைக்கப்பட்டன. துருக்கியை ஆண்டு வந்த ஒட்டோமான் பேரரசு பால்கன் நாடுகளில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், மெல்ல அதன் பிடி நழுவிக்கொண்டிருந்தது. காரணம், பால்கன் நாடுகளிடையே தோன்றி வளர்ந்து பரவியிருந்த தேசிய உணர்வு. ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் பிடியில் இருந்து விலகி தனி நாடுகளாக மாறவேண்டும் என்னும் பெரு விருப்பம் உருவாகியிருந்தது.

குறிப்பாக செர்பியாவில் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. ஆஸ்திரிய, ஹங்கேரி நாடுகளுக்கு இதில் விருப்பமில்லை. தமது எல்லையில் செர்பியர்களின் செல்வாக்கு உயர்வது, அவர்கள் தனி நாடு பெறுவது குழப்பத்தை விளைவிக்கும் என்று ஆஸ்திரியா கணித்தது. பால்கனில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்னும் பெரும் கனவுடன், 1908 ஆம் ஆண்டு போஸ்னியா ,- ஹெர்ஸஹோவ்னியா பகுதிகளைத் தன்னுடன் ஆஸ்திரியா இணைத்துக் கொண்டது.

செர்பியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகள் இவை. இவை எங்களுக்குத்தான் சொந்தம், ஆஸ்திரியா ஆக்கிரமித்துக்கொண்டது சரியல்ல என்று, ரஷ்யாவிடம் முறையிட்டது செர்பியா. செர்பியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரஷ்யா, ஆஸ்திரியாவுக்குத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆஸ்திரியாவுக்கு ஜெர்மன் ஆதரவு தந்தது. அதன்பிறகு போர்கள் மூண்டன. இந்தப் போர்கள் அவ்வப்பொழுது, கடுமையாக ஒடுக்கப்படும். முழுக்க முழுக்க போர்களின் பின்னணியில் பால்கன் மக்கள்! (இது குறித்து இன்னும் விரிவாக நோபல் விரித்தாளர் ஹேண்ட்கே குறித்த கட்டுரையில் எழுதியுள்ளேன்)

“ஒவ்வொரு உணர்வு அல்லது சிந்தனை, ஒவ்வொரு துன்பம் அல்லது குற்றம், ஒவ்வொரு கிளர்ச்சியும் அல்லது பேரழிவும் கொண்ட அதன் நிழலை வெளிப்படுவதற்கு நிஜ வாழ்க்கையின் கூறுகள் அவசியம்.” என்று தனது நாவலான The Palace of Dreams நூலில் சொல்கிறார். இந்நாவல் போராட்டக் கனவுகளைத் தேடி ஒடுக்கும் அரசின் நீள் கரங்கள் பற்றிய பின்நவீனத்துவப் படைப்பு. பிற நாவல்கள் குறித்து விரிவாக இன்னொரு தருணத்தில் எழுதலாம். இப்போதைக்கு, இவரது முழுமையான கவிதைகள் தமிழ்மொழியில் வெளிவரவேண்டும் என்று விரும்புகிறேன். அரசியல் பிரக்ஞை கொண்ட யமுனா ராஜேந்திரன் போன்ற மொழிபெயர்ப்புப் படைப்பாளிகள் இதை சாத்தியமாக்கவேண்டும்.

இஸ்மாயில் கதாரே கவிதைகள்

இந்த மலைகள் எதைப் பற்றிச் சிந்திக்கின்றன…

1

இந்த உயர்ந்த மலைகள் எதைப் பற்றிச் சிந்திக்கின்றன

நெடுஞ்சாலைக்கு அப்பால் தொலைவில் சூரியன் மறைந்தவுடன்?

இரவு கவிழும் அந்தியில் ஒரு மலையேறுபவர் புறப்படுகிறார்,

அவரது நீண்ட துப்பாக்கி,

நூறு மைல் நீள நிழலைத் தரையில் வீசுகிறது..

 

துப்பாக்கி நிழல் விரைகிறது

மலைகள், சமவெளிகள், கிராமங்கள் மீது;

அதன் குழாய்களின் நிழல் அறையிருளாக விரைகிறது.

நானும் புறப்பட்டேன் மலையடிவாரத்தை நோக்கி

என் மனதில் எழும்பும் ஒரு சிந்தனையின்

அலைக்கழிப்பில்.

 

சிந்தனையின் நிழல் மற்றும் துப்பாக்கியின் நிழல்

குறுக்கும் நெடுக்குமாக மோதிக் கொள்கின்றன அந்திக் கருக்கலில்

2

அல்பேனியா, நீ எப்போதுமே இப்படித்தான் புறப்படுகிறாய்

உன் விரையும் கால்களில்

மற்றும் தோள்களில் தாங்கிய துப்பாக்கியுடன்.

நீ எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் அலைகிறாய்,

மேகங்களும் மூடுபனியும் நிறைந்த காலையை நோக்கி,

சாம்பல் பூத்த திரட்சியான, இரவில் பிறந்ததைப் போல.

3

மேகமூட்டங்கள் நிலத்தைத் தின்றன

மற்றும் செங்குத்தான குன்றின் தளங்களை வெட்டின.

இவ்வாறு, பல நூற்றாண்டுகள் உங்கள் உடலைக் கொறித்தன

உங்கள் தசைநார்களும் விலா எலும்புகள் வெளிப்படும் வரை.

 

தசைகள், தசைநார்கள் மற்றும் விலா எலும்புகள்,

கற்பாறைகள், பாறைகள் மற்றும் மலைகள் மட்டுமே,

சிறிய சமனான நிலம்,

ஓ, எவ்வளவு சிறிய சமவெளி

பல நூற்றாண்டுகள் உங்களை விட்டுச் சென்றன !

பல நூற்றாண்டுகள் உங்களை வேட்டையாடுகின்றன

எங்கிருந்தாலும் அவர்கள் உங்களை அணுகலாம்.

 

நீங்கள் அவர்களை சந்தித்தபோது

அவர்கள் உங்களைத் தாக்கினர்,

காலத்தின் பற்கள்

உங்கள் தொடையில் பதிந்தன,

ஆனால் நீங்கள் பின்வாங்கவில்லை,

நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.

4

நீண்ட துப்பாக்கியை அகற்றவில்லை, நீ

உன் தோள்களில் இருந்து,

காயங்களால் மூடப்பட்ட தோள்களிலிருந்து,

சதையும் எலும்புகளும் பிய்ந்துபோன தோள்களிலிருந்து.

 

நீ உப்புநீரில் ரொட்டி சாப்பிட்டாய்,

ஒவ்வொரு இரவும் உப்புநீரும் மக்காச்சோளமும்,

நீங்கள் கொஞ்சம் கொழுப்பை சேமித்தீர்கள்,

ஓ, அந்த சிறு துண்டுக் கொழுப்பு

நண்பர்களுக்கும்

நீண்ட துப்பாக்கிக்கான எண்ணெய்ப் பசைக்கும்.

 

குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள் பெண்கள்,

ஆனால் ஒரு துப்பாக்கி பெற்றெடுக்கிறது, தோட்டாக்களை.

புனிதமான சேவையில் இரண்டும் சமம்.

அல்பேனியருக்கு:

தோட்டாக்கள் மற்றும் குழந்தைகள்.

 

குழந்தை நாளை உழவுக்கு அழைத்துச் செல்லும்

மேலும் இரவில் துப்பாக்கி அவனைப் பாதுகாக்கும்.

காலம், அல்பேனியாவின் தோள்களில் தோட்டாக்களை வீசும்,

மணமகளின் தோள்களில் போடும் அரிசி போல.

5

உரத்த மணியோசை

இரவில் ஆரவாரிக்கிறது

மலை முகடுகளில் எதிரொலிக்கும் .

அதன் நாவுகள் என்ன சொல்கின்றன,

பூசாரிகள் என்ன முணுமுணுத்தார்கள்

உயர்ந்தோங்கிய தேவாலயங்களில்

ஒலிப்பது மேற்கத்திய நாவுகளா?

அவர்களின் உயர் தேவாலயங்களுக்கு

அவர்களின் வெளிநாட்டு மொழிகளில்?

லத்தீன் தர்க்கப்படி, நீண்ட வாக்கியங்களில் சொன்னால்,

நீண்ட துப்பாக்கியை வளைக்கப் பாடுபடுங்கள்.

*இந்தக் கவிதை அல்பேனிய மொழியில் மிகவும் பிரசித்தம் பெற்றது. கவிதையின் அல்பேனியத் தலைப்பான “Pērse mendohen kēto male” என்ற பெயரில் விக்கிபீடியா பக்கமே உள்ளது. 24 பகுதிகளாகக்கொண்ட இந்தக்கவிதையின் 5 பகுதிகள் மட்டுமே இங்கு மொழியாக்கம் பெற்றுள்ளன. இதன் மூலமான அல்பேனிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள ராபர்ட் எல்ஸி எழுதிய முக்கியமான நூல்: Albanian Literature: A short History. அவசியம் படிக்க வேண்டிய நூல்.

ஏக்கம்

மழைத்துளிகள் ஜன்னல்கண்ணாடியில் வழிகின்றன

ஈரத் தெறிப்பில் உன் அருகாமையை உணர்ந்தேன்

நாம் இருவரும் ஒரே நகரத்தில் வசிக்கிறோம்,

ஆனால் மிக அரிதாகவே சந்திக்கிறோம்.

 

வினோதமாகத் தோன்றிய அந்த நினைவுகள்,

எப்படி இந்த ஈரத்தில் பிசுபிசுக்கின்றன.

மந்தமான வானத்தில் நாரைகள் இல்லை

மழைக்குப் பின் தோன்றும் வானவில்லும் இல்லை.

 

ஓ, ஹெராக்ளிட்டஸின் பழைய பழமொழி,

இன்று என் மனம் வழியாக ஓடுகிறது.

“விழித்திருப்பவர்கள் உலகில் ஒன்றாக உள்ளனர்,

தூங்குபவர்கள் பிரிக்கப்படுகின்றனர்.”

எந்தக் கனவில் நாம் மிகவும் ஆழமாக விழுந்தோம்,

நடனமாட நாம் எழுந்திருக்க முடியாதா? …

சில மழைத்துளிகள் கண்ணாடி மீது விழுகின்றன,

நான் உன்னை எப்படி இழக்கிறேன் என்று உணர்கிறேன்.

*இந்தக் கவிதை அல்பேனியாவில் எளியமக்களும் பாடும் பாடல்போல் பிரசித்தமானது. உலகின் பழமொழிகளில் வெளியாகியுள்ளது.

நீ மற்றும் நிலவு

இலையுதிர் கால நிலவுடன் இந்த இரவு

நான் ஆசுவாசமாக வயல் வெளிகளில் நடந்தேன்

சீராக நகரும் மேகங்களினூடே

நிலவு கலைந்து மறைந்து தோன்றுகிறது.

 

என் எண்ணங்களின் மேகங்களைப் போல

அடிக்கடி நினைவுகள் அலைகின்றன

அவைகளுக்குப் பின்னால் நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள்

மேகங்களுக்கு இடையில் தோன்றும் இந்தப் பிறை நிலவு போல.

 

நிலவு மறைந்து இரவுகள் மறைந்தாலும்,

நீங்கள் இருக்கிறீர்கள்,

என் கனவுகளில் என்றென்றும்

மேற்கு திசை தோன்றுவதில்லை.

கொசோவா

கொசோவா, உங்கள் வானத்தை நான் எத்தனையோ முறை கடந்திருக்கிறேன்,

இன்று, உங்கள் திரண்ட மேகங்களுக்கிடையில், மழையுடன் கூடிய இடி.

விமானத்தின் ஜன்னலில் வழிகின்றன மழைத் துளிகள். ஏதோ சொல்வதுபோல,

(அவைகளை என்னால் தொட முடியாது; அவைகள் வெளியே உள்ளன),

ஏதோ சமிக்ஞையில் சொல்வது போல கடந்து செல்லும் மின்னல்.

 

எனவே : உங்கள் மழை, உங்கள் மேகங்கள், உங்கள் இடி.

ஒளிரும் எண்ணங்களாய், சில சமிக்ஞைகள்.

உங்கள் நிலத்தின் பரந்த பின்புறம் கீழே ஓடுகிறது,

அதன் பளபளப்பு, மேகங்களின் பள்ளத்தாக்குகளுக்கிடையில்

இருண்டு மறைந்துவிடும்.

 

தொடர் பயணத்திற்காக ஆயத்தமாய் இருங்கள்.

இப்போது, நூற்றுக்கணக்கான விமான இறக்கைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

நிலத்தோற்றம்

இறந்த மொழியைப் பேசும் அந்த வயதான கருப்புப் பெண்கள்

உழவு வயல்களில் அலைகிறார்கள்

அவர்களின் திரண்ட பாதங்கள்

உறைந்த பனியை நசுக்குகின்றன.

அவர்களது தலைக்கு மேலே,

அச்சுறுத்தியபடி, காகங்கள் கரைகின்றன.

 

அக் கரைவு

பண்டைய மொழியின் குறியீடாக

உறைகிறது பனி நிலத்தில்

 

இறந்த மொழியின் முதிர் பெண்கள்.

உறைந்த வயலுக்கு மேல் காக்கைகள்.

ஆபத்து நிறைந்த காட்டு முதலைகள்.

கவிதை

கவிதையே,

என்னிடம் வருவதற்கான வழியை நீ எவ்வாறு கண்டுபிடித்தாய்?

என் அம்மாவுக்கு அல்பேனிய மொழி நன்றாகத் தெரியாது,

அவர் *அரகோனுக்கு எழுதும் கடிதங்களில்

கமாக்கள் வைக்காமல், பத்தி பிரிக்காமல் எழுதுகிறார்

என் தந்தை தனது இளமைப் பருவத்தில் கடல்களில் சுற்றித் திரிந்தார்,

ஆனால் நீ வந்திருக்கிறாய்,

என் அமைதியான கல் நகரத்தின் நடைபாதையில் நடந்து,

அச்சுறுத்தும் மூன்று மாடி வீட்டின் வாசலில்,

எண் 16க்கு.

 

வாழ்க்கையில் நான் நேசித்த மற்றும் வெறுத்த பல விஷயங்கள் உள்ளன,

பல பிரச்சினைகளுக்கு நான் ஒரு ‘திறந்த வெளி ‘,

எப்படி இருந்தாலும்…

இரவு தாமதமாக வீடு திரும்பும் ஒரு இளைஞனைப் போல,

தனது இரவு நேர அலைச்சல்களால் சோர்ந்துபோய், உடைந்து,

நானும் இங்கே உன்னிடம் திரும்பி வருகிறேன்,

மற்றொரு தப்பித்தலாக உன்னை அணிகின்றேன்.

வாழ்வின் மீதான என் நம்பிக்கையின்மையை ஒதுக்குவது போல்

என் தலைமுடியை மென்மையாக ஒதுக்கி விடும்

கவிதையே,

நான் வந்து நிற்கும் என் இறுதி நிறுத்தம்

நீ

*அரகோன்: ஸ்பெயினில் ஒரு தன்னாட்சி சமூகம், இடைக்கால அரகோன் இராச்சியத்துடன் இணைந்து செயல்படுகிறது. வடகிழக்கு ஸ்பெயினில் அமைந்துள்ள அரகோனிய தன்னாட்சி சமூகம் மூன்று மாகாணங்களை உள்ளடக்கியது: ஹுஸ்கா, ஸராகோசா மற்றும் டெரூயல். இதன் தலைநகரம் ஸராகோசா. தற்போதைய சுயாட்சி சட்டம் அரகோனை ஸ்பெயினின் வரலாற்றுத் தேசியமாக அறிவிக்கிறது.