ழ்துளைக்கிணற்றில் ஒரு சிறுவன் விழுந்ததும் வழக்கம்போல ‘அந்த ஆளைத் தூக்கில் போடு’, ‘80 வருஷத்துக்கு ஜெயிலில் வை’, ‘ஜாமீனே இல்லாத செக்சனில் புக் பண்ணு’ என்றெல்லாம் கருத்துகள் வரத்துவங்கிவிட்டன. ‘எவன் காண்ட்ராக்டரோ அவன் வீட்டுக் குழந்தையைப் பிடிச்சி இன்னொரு கிணத்தில போடு,’ என்று மட்டும்தான் இன்னும் யாரும் சொல்லவில்லை.

இன்னொருபுறம் ‘அந்தக் குழியை வெட்ட காண்டிராக்ட் கொடுத்ததே அந்த அப்பாதான். அவரையே ஜெயிலில் வை, அவருக்கு ஏன் உதவித்தொகை கொடுக்கறீங்க,’ என்று குரல்கள்.

இந்தத் துடிப்பான கோப எதிர்வினைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு வன்புணர்வு சம்பவம் நடந்தால் ‘பொது இடத்தில் தூக்கில்போடு’, ‘அவன் உறுப்பை வெட்டு’ என்பன போன்றவைதான் இவையும்.

என்னைப்பொறுத்தவரை ஆழ்துளைக்கிணறு தோண்டும் யாரும் அங்கே சில மாதங்கள் கழித்து ஒரு இரண்டு வயதுக் குழந்தை வந்து விழும் என்று யோசித்து இருக்க மாட்டார்கள். அப்படித்தெரிந்து வேண்டுமென்றே விட்டு வைப்பது சைக்கோத்தனம். அந்த மாதிரி சைக்கோத்தனம் இருப்பவர்கள் உலகில் மிகவும் குறைவு. அவர்களுமேகூட சித்திரவதை அல்லது கொலை செய்வதற்கு வேறு சுலபமான நேரடி வழிகளை மேற்கொள்வார்கள். வேலை மெனக்கெட்டு செலவு பண்ணி ஆழ்துளைக்கிணறு தோண்டிக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

அப்படியானால் இந்த மாதிரி சம்பவங்கள் ஏன் நடைபெறுகின்றன? அவற்றுக்கு தீர்வே கிடையாதா? நாம் இப்படியே கையறு நிலையில் இருக்க வேண்டியதுதானா?

இந்தக் கேள்விகளை நான் வேறு கோணத்தில் இங்கே விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆழ்துளைக்கிணறுகள் பற்றிய விவாதமாக இல்லாமல் பொதுவான கோணத்தில் பேசலாம்.

என்னைப்பொறுத்தவரை பிரச்சினை ‘பொதுவிட அபாயங்கள்’ எனப்படும் விஷயம் பற்றியது. ஆங்கிலத்தில் Hazardous Public Spaces என்று சொல்லலாம். இந்தியாவில் எல்லாப் பொதுவிடங்களும் அபாயப்பகுதிகள்தான். நீங்கள் வீட்டைவிட்டு வெளியே இருக்கும் எல்லாக் கணங்களிலும் உங்களுக்கு அபாயம் காத்திருக்கிறது. (வீட்டிலும் இருக்கிறது; ஆனால் அது வேறு விஷயம்; வேறு கட்டுரை.) வீட்டைவிட்டு வெளியே வரும் பொழுது பயன்படாமல் அறுத்துப்போடப்பட்ட கேபிள் வயர் உங்களைத் தடுக்கி நீங்கள் கீழே விழலாம். சாலையில் உள்ள குழியில் உங்கள் பைக் தடுக்கி பைக் கவிழலாம். சாலையில் ஒரு விளம்பரத் தட்டி டிராஃபிக் சிக்னலை மறைத்து உங்களை ஏமாற்றி நீங்கள் பைக்கை கிளப்பும் நேரம் எதிர்திசையில் இருந்து ஒரு லாரி விரைந்து வந்து உங்களைத் தட்டலாம் அல்லது நடைபாதையில் நீங்கள் செல்லும் பொழுது ரிப்பேர் நடந்து மூடாமல் இருக்கும் சாக்கடை துளை ஒன்றில் நீங்கள் விழலாம் அல்லது நடைபாதை முடிந்து போய் நீங்கள் சாலையில் இறங்கும் நேரம் பெருத்த அவசரத்துடன் விரைந்து கொண்டிருக்கும் ஒரு கார் மோதலாம். சாலை நடுவே மெட்ரோ வேலைக்காக கட்டப்பட்டு தொங்கிக்கொண்டு இருக்கும் இரும்பு ராடு அவிழ்ந்துபோய் உங்கள் தலையில் விழலாம்.

இவை அனைத்தில் இருந்தும் தப்பித்தால் சாலை நடுவே வைக்கப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு தலைவரின் கட் அவுட் கழன்று உங்கள் மேல் விழுந்து பைக் தடம் புரளலாம்.

இங்கே நான் மிகைப்படுத்தி பிரச்சினையை நாடகப்படுத்திச் சொல்லுவதாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் இவை எல்லாமே இங்கே நடந்திருக்கின்றன. இந்தியாவில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் இறக்கிறார்கள். தினமும் 16 சிறுவர் சிறுமியர் விபத்துகளில் இறக்கிறார்கள். ஒவ்வொரு நான்கு நிமிடத்துக்கும் ஒரு இறப்பு நிகழ்கிறது. அதாவது நீங்கள் இந்தக் கட்டுரையை இதுவரை படித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு இந்தியர் விபத்தில் சிக்கி இறந்து போயிருக்கிறார்.

இதுபோல்தான் சரியாகக் கட்டப்படாத வீட்டு சுவர் சரிவது, சரிவர பராமரிக்கப்படாத தண்டவாளம் ரயிலைத் தடம் புரளவைப்பது, அலுவலகங்களில் தீவிபத்தில் மாட்டி உயிரிழப்பது, கட்டுமானப் பணிகளில் சாரக்கட்டில் இருந்து விழுந்து சித்தாள்கள், பெயிண்டர்கள் சாவது, மூடப்படாத ஆழ்துளைக் கிணறு குழந்தைகளை விழுங்குவது போன்றவையும் நிகழ்கின்றன.

இது என்ன கூத்து? எல்லாவற்றையும் ஒன்றாக எப்படி பாவிக்க முடியும் என்று கேட்கலாம். இங்கே ஒன்றைக் கவனியுங்கள். மேலே சொல்லப்பட்ட எல்லாமே அஜாக்கிரதை சம்பந்தப்பட்டவை. கேபிள் அறுந்து கிடப்பது, கட்டிடங்களில் தீவிபத்து நிகழ்ந்தால் பாதுகாப்பாக வெளியேறும் வழி அமைக்காதது, சாலையில் நடைபாதை இடைவெளியின்றி அமையாதது போன்றவை எல்லாம் அஜாக்கிரதையாக, எந்த திட்டமிடலும் இன்றி செயல்படுவதால் வருபவை. என்ன, முன்னர் சொன்னபடி, இப்படி செய்யும் யாருமே இதனால் நாளைக்கு ஒருவர் இறக்கக் கூடும் என்று நினைப்பதில்லை..

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: நீங்கள் சொந்த வீடு ஒன்று கட்டுகிறீர்கள். ‘இங்கே நாளைக்கு ஒரு தீவிபத்து நடந்தால் எப்படி எல்லாரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது?’ என்று கேள்வி கேட்பீர்களா? மாட்டீர்கள். வீடு வாங்கும் பொழுது உங்கள் நண்பர் யாராவது ‘வீட்டில பயர் ஆக்சிடெண்ட் நடந்தா தப்பிக்க வழி இருக்குதா மச்சி?’ என்று கேட்டால் அவர் குமட்டில் குத்துவீர்களா மாட்டீர்களா? ‘இன்னும் அட்வான்ஸே குடுக்கலை; அதுக்குள்ள அபசகுனமா பேசாதய்யா!’ என்று அவரைக் கடிந்து கொள்வீர்கள்தானே.

அது போலவேதான் ஏறக்குறைய எல்லா விஷயங்களும் நம் ஊரில் நடக்கின்றன. சாலை காண்ட்ராக்டர் நாளை இங்கே நடைபாதையில் இருந்து ஒருவர் சாலையில் இறங்கும் போது காரில் அடிபட்டால் என்ன ஆவது என்று கேட்க மாட்டார். அப்படியே யாராவது கேட்டாலும் ‘இறங்கறவன் பாத்து கவனமா இறங்கணும்!’ என்று சமாதானம் சொல்லி விட்டுப் போய் விடுவார்.

இது அலட்சியமோ அல்லது திமிரோ இல்லை. இது அறிவின்மையின் ஒரு நிலை அவ்வளவுதான். நமக்கு யாருக்கும் பொதுவிடங்கள் இவ்வளவு அபாயகரமாக இருக்கின்றன என்பது தெரியவில்லை. அதுபற்றிய தெளிவு இல்லை. நிறைய நேரங்களில் அந்த அபாயங்களைக் கண்டறிந்து சரி செய்வதற்கான பணவசதியும் கூட இல்லை.

அப்படிப்பட்ட அறிவோ, தெளிவோ இருந்தால் கண்டிப்பாக நம்மில் நிறைய பேர் அதற்கான முயற்சிகளை எடுத்திருப்போம். ஒரு உதாரணத்துக்கு பார்ப்போம்: சுதந்திரத்துக்கு முன்பு தட்டம்மை வந்து ஒரு குழந்தை இறந்தால் அந்த அம்மாவை நாம் குற்றம் சொல்லி இருந்திருப்போமா? மாட்டோம். அது இயற்கையாக நிகழும் விபத்து என்றுதான் அனுதாபம் காட்டி வருந்தி இருந்திருப்போம். ஆனால் இப்போது தட்டம்மைக்குத் தடுப்பூசி கிடைக்கிறது. அதைப் போட்டால் குழந்தை காப்பாற்றப்படும். இன்றைக்கு தட்டம்மை தாக்கி குழந்தை இறந்தால் அந்த அம்மாவைத் திட்டுவோம்: ‘ஏம்மா ஒரு தடுப்பூசி போட்டுத் தொலைச்சி இருக்க வேண்டியதுதானே?” என்று கேட்போம்.

ஆனால் இது அவ்வளவு சுலபமான தீர்வு அல்ல. சம்பந்தப்பட்ட அந்த தாய்க்கு தடுப்பூசிகள் பற்றி தெரிய வேண்டும். அவை அந்தப்பெண் இருக்கும் ஊரிலோ கிராமத்திலோ கிடைக்க வேண்டும். ஒரு தடுப்பூசி பத்தாயிரம் ரூபாய் என்றால் போட மாட்டாள். ‘எல்லாம் என் குழந்தையை முப்பாத்தம்மன் காப்பாத்துவா!’ என்று சொல்லி விட்டுப் போய் விடுவாள். அந்த ஊசி மிகக்குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ கிடைக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மருத்துவமனை போகும் போதெல்லாம் மருத்துவர் தொடர்ந்து தடுப்பூசி பற்றி பேசிக்கொண்டே வர வேண்டும். போதாததற்கு டிவியில் ரஜினிகாந்த் அல்லது அமிதாப் பச்சன் அது பற்றிப் பேசி விளம்பரத்தில் நடிக்க வேண்டும்.

இவ்வளவு இருந்தும் கூட மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் பெண்ணுக்குத்தான் இந்த விழிப்புணர்வு கிடைக்கும். வீட்டிலேயே ஆயா வைத்து பிரசவம் பார்த்தால் பிரச்சினைதான். அப்போது என்ன செய்ய வேண்டும்? மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். பிரசவத்துக்கு அட்மிட் ஆக வரும் பெண்களுக்கு உதவித்தொகை அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான ஊட்ட மாவு, பால் புட்டி இவை இலவசமாக கொடுக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு மருத்துவமனையில் அட்மிட் ஆவதற்கு உந்துதல் கிடைக்கும்.

நமக்கே தெரியும். மேலே சொன்னவை எல்லாமே நடந்தது. அவைதான் மாற்றங்களை விளைவித்தது. யோசித்துப்பாருங்கள்: நாற்பது வருடங்கள் முன்பு இதெல்லாம் இல்லாத காலகட்டத்தில் இந்த யோசனைகளை முன்வைக்கும் பொழுது ஒரு அதிகாரி, ‘இதெல்லாம் உருப்படாத ஐடியா. பெத்த தாய்க்கு அக்கறை இருந்தா அவ வந்து ஊசி போட்டுட்டு போறா, இதெல்லாமா ஊக்குவிச்சிக்கிட்டு இருப்பாங்க?’ என்று கேட்டிருந்தால் என்ன ஆயிருக்கும்? இன்றும் தட்டம்மை இறப்புகளைக் கையறு நிலையில் பார்த்துக்கொண்டு இருந்திருப்போம். சொல்லப்போனால் இன்றும் கூட இந்த மேற்சொன்னவற்றில் நிறைய விஷயங்கள் நடைமுறையில் இல்லாத மாநிலங்கள் இருக்கின்றன. குறிப்பாக உபி, பீகார் போன்றவை. இங்கெல்லாம் பார்த்தால் பிறப்பில் தாய் மரணம், ஊட்டச்சத்து குறைவில் அல்லது தடுப்பூசி சரிவர போடாத காரணங்களால் குழந்தை மரித்தல் ஆகியவை நிகழ்கின்றன.

இதெல்லாம் எதற்கு சொல்கிறேன்? பிரசவத்தில், தடுப்பூசிகளில், குழந்தை மரணங்களில் பெரும்பாலான இந்தியா, குறிப்பாக தமிழகம், ஒரு புரட்சியே செய்திருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இதனை நாம் சாதித்து இருக்கிறோம்.

அது போலவே இந்தப் பொதுவிட அபாய விஷயத்திலும் நாம் சாதிக்க வேண்டும். இங்கும் ஒரு புரட்சி நிகழ வேண்டும். இதனைப் பொதுவிட அபாயம் என்று பொதுவாக சொல்லாமல் குறிப்பிட்ட ஒரு சொற்றொடரால் குறிக்கலாம். ‘உடல்நலம் மற்றும் பாதுகாப்பு’ என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் Health and Safety என்று சொல்லலாம்.

பாதுகாப்பு சரி, ஆனால் உடல்நலம் இங்கே எங்கே வருகிறது, என்று கேட்கலாம். இங்கேதான் விபத்துகள் பற்றி மேலும் பேச வேண்டும். நாம் மேலே பேசியதெல்லாம் நேரடி விபத்துகள் வகையில் வரும். இங்கே மறைமுக விபத்துகள் என்றும் நிறைய இருக்கின்றன.

ஒரு உதாரணம் எடுத்துக்கொள்வோம்: நாமெல்லாரும் பார்த்திருப்போம். தெருமுனையில் நான்கு நாட்களாக வாரப்படாமல் குப்பை அப்படியே தொட்டியில் கிடக்கும். பல்வேறு விதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் அங்கே பல்கி பெருகிக்கொண்டு இருக்கும். அதன் அருகிலேயே டீக்கடை, காய்கறிக்கடை, டிபன் சென்டர் ஆகியவை எந்த சலனமுமின்றி இயங்கிக்கொண்டு இருக்கும். அது அப்படியே கிடந்து ஒரு வாரத்தில் அங்கே மலேரியா வந்து ஒரு நான்கு பேர் இறப்பார்கள். சீதபேதி வந்து மூன்று குழந்தைகள் சாகும். ஆனால் என்ன, அங்கே நான்கு நாட்களாக அள்ளப்படாமல் கிடந்த குப்பைதான் அதற்குக் காரணம் என்பது யாருக்கும் தெரியாது. குப்பையை அள்ளுவதில் சுணக்கம் காட்டிய நகராட்சி ஊழியரோ அல்லது அவர் வராத பட்சத்தில் தாங்களே முனைந்து அவற்றை அகற்றாமல் விட்ட தெருவாசிகளோதான் அந்த சாவுகளுக்கு காரணம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அதாவது

Effect(விளைவு): குழியில் குழந்தை விழுகிறது

Cause(காரணம்): குழியை வெட்டியவன் மூடவில்லை.

ஆனால்

Effect(விளைவு): மலேரியா, டயரியாவில் நாலு பேர் அட்மிட் ஆகிறார்கள்.

Cause(காரணம்): கொசு, பாக்டீரியா (அதாவது மனிதக் குற்றம் அல்ல.)

இங்கேதான் இந்த மறைமுக விபத்து வருகிறது. இதுவும் ஆழ்துளைக்கிணறு போல மனிதர்களின் அஜாக்கிரதை, அலட்சியம், அறிவின்மையால் நிகழ்வதுதான். ஆனால் அவை பெரும்பாலும் அப்படி பார்க்கப்படுவது இல்லை. ஆழ்துளைக்கிணறு, மெட்ரோ இரும்பு ராடு போன்ற நேரடியான விபத்துகளில் டஜன் கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் மறைமுக விபத்துகளான டயரியா, மலேரியா போன்ற விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள். முதல் வகை சம்பவங்கள் மக்கள் அனுதாபத்தை சம்பாதித்து பெரும் செய்திகளாகின்றன. இரண்டாவது, பெரிய கவனம் பெறப்படாமல் மறைந்து போகின்றன. (அதாவது இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் வரை பிரச்சினையாக பார்க்கப்படுவது இல்லை. தமிழகத்தில் 10 பேர் சீதபேதி கேஸ்களில் அட்மிட் ஆனால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஐந்தாயிரம் குழந்தைகள் சீதபேதியினால் பாதிப்பு என்றால் தலைப்பு செய்தியாகி விடும்.)

அது ஒருபுறம் இருக்கட்டும்: நேரடியோ மறைமுகமோ இந்த இரண்டுக்கும் காரணம் பொது உடல் நலம் மற்றும் பாதுகாப்பு பற்றிய நமது அறிவின்மைதான். அப்படியானால் ஏன் இவை பெரிய கவனம் பெறப்படவில்லை?

என்னைக் கேட்டால் அதற்கு முக்கிய காரணம் இந்த மாதிரி விபத்துக்களை ‘குற்றப்படுத்துதல்’தான் என்று கருதுகிறேன். Criminalisation of accidents. இரும்பு ராடு விழுந்து பைக்கில் போகும் ஒருவர் இறந்து விட்டாரா, அந்த சீஃப் இன்ஜினீயரை ஜெயிலில் போடு. சாலையில் கட் அவுட் விழுந்து ஒரு பெண் செத்துப்போய் விட்டாளா, அந்த கட் அவுட் வைத்த கட்சி செயலாளரை ஜெயிலில் போடு. என்று பிரச்சினையின் மூலத்தைப் பார்க்காமல் அந்த சம்பவத்தைக் குற்றப்படுத்தி விடுகிறோம். அதில் நமக்கு விரைவான திருப்தி (instant gratification) கிடைத்து விடுகிறது.. சம்பந்தப்பட்டவர் ஜெயிலுக்குப் போனாலோ அல்லது சஸ்பெண்ட் ஆனாலோ நம் கோபத்துக்கு வடிகாலும் கிடைத்து விடுகிறது

ஆனால் நிரந்தர தீர்வு எதுவும் வருவதில்லை. அடுத்த ஆறு மாதம் கழித்து இன்னொரு சிறுவன் இன்னொரு குழியில் விழுகிறான். சாலையில் கேபிள் வயர் தடுக்கி இன்னொரு பைக் கவிழ்கிறது.

நிரந்தர தீர்வு என்பது பொதுவிட உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பற்றிய நமது அறிவின்மை ஒழிவதுதான். அதற்குப் பெரும் விழிப்புணர்வு மற்றும் திட்டங்கள் அரசு-சார்ந்த வழிகாட்டிகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு மாற்றங்கள் வரவேண்டும்.

அது என்ன எல்லாவற்றையும் அரசுதான் செய்ய வேண்டுமா, தனிமனிதனுக்கு இதில் பொறுப்பில்லையா என்று கேட்கலாம். இருக்கிறது; ஆனால் எனக்கு என்ன பொறுப்பு இருக்க வேண்டும் என்பது பற்றியே எனக்கு அறிவில்லை என்றால் நான் என்ன பொறுப்பை ஏற்றுக்கொள்வது? மேலே பார்த்தோம்: தடுப்பூசி பற்றி எல்லாரையும் விட பெற்ற தாய்க்குத்தானே பொறுப்பு இருக்க வேண்டும். ஆனால் அதற்கான அறிவு, விழிப்புணர்வு, முக்கியத்துவம் மற்றும் கட்டுமான வசதிகள் இவற்றை அரசுதான் மேற்கொள்ள வேண்டும். படித்த மற்றும் பணக்கார வீட்டுப் பெண்கள் இவற்றுக்கு அரசை நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் பெரிய அளவு படிக்காத மற்றும் வசதியற்ற பெண்கள் அரசை நம்பித்தான் செயல்பட வேண்டி இருக்கிறது.

பொதுவிட உடல்நலம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் விதிவிலக்கின்றி நாம் எல்லாருமே படிக்காத அறிவிலிகள்தான். இதில் அவமானம் எதுவுமில்லை; தெரியாத விஷயம் தெரியாதுதானே? ராக்கெட் சயன்ஸ் பற்றி நாம் முக்கால்வாசி பேருக்குத் தெரியாது; அதற்காக நாம் அவமானப்பட்டு கூனிக்குறுகியா உட்கார்ந்து இருக்கிறோம்?

இன்னொரு உதாரணம் தருகிறேன். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பதில் ஊக்கம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். தொடர்ந்து அவர்களை ஊக்குவித்துக்கொண்டு, அவர்களுக்கு படிப்பில் நேரும் சோர்வு மற்றும் இடர்ப்பாடுகளை கண்காணித்து அதற்கு தீர்வு கண்டுகொண்டே இருப்பதுதான் பெற்றோரின் முக்கிய வேலை.

‘அதென்ன அவன் பின்னாடியே 24 மணி நேரம் சுத்தணுமா என்ன, பொறுப்புள்ள பிள்ளை படிக்காதா?’ என்றால் என்ன பதில் சொல்ல முடியும். ஒரு சிறு விகித அளவில் மாணவர்களுக்கு தானாகவே ஒரு ஆர்வம் மற்றும் அக்கறை இருக்கக் கூடும். வசதியும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் அந்த நிலையை அடைய வேண்டுமெனில் தொடர்ந்த கண்காணிப்பு, பின்பற்றுதல், பிரச்சினைகளைக் கண்டறிந்து களைதல் என்று பெற்றோரும் சமூகமும் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் அந்த ‘படிக்கிற பசங்க’ விகிதத்தை அதிகரிக்கும் வழிமுறை.

தவிர, மாணவ மாணவிகளுக்கு எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவு இருக்காது. இன்னும் பத்து வருஷம் ராப்பகலா படிச்சி என்ன கிழிக்கப் போறோம் என்பதிலேயே நிறைய சோர்வடைவார்கள். அந்த இளவயதில் படிப்பின் பலன்கள், அதன் எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றி ஆழ்ந்த புரிதல் இருப்பது கடினம்.

எனவே நிறைய ஊக்கம் தேவைப்படும். படிப்பதை மகிழ்வான அனுபவமாக ஆக்க வேண்டியிருக்கும். படித்தலில் உள்ள சிக்கல்கள், தடைகளை களைய வேண்டி இருக்கும். ‘உனக்கே அக்கறை இருந்தா படி, இல்லேனா மாடு மேய்க்கப் போ’ என்று விட்டு விடுவோமா என்ன? கூடவே ‘நீ படிச்சா நாளைக்கு கலெக்டர் ஆகலாம்,’ என்பதை விட ‘இந்த வாட்டி Mathsல சென்டம் ஸ்கோர் பண்ணா , உனக்கு ஒரு பிளே ஸ்டேஷன் வாங்கித் தர்றேன்,’ என்பது பெரிய ஊக்கமாக இருக்கும்.

அதுபோலத்தான் இங்கேயும். பொதுவிடத்தில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பேணுதலின் அவசியம், முக்கியத்துவம், அப்படி செய்யாமல் இருப்பதன் அபாயம் குறித்த தெளிவும் ஆழ்ந்த புரிதலும் நமக்கு வேண்டும். அப்படியே வந்தாலும் அதை செயல்படுத்துவதற்கான கொள்கை வழிகாட்டிகள், கட்டமைப்புகள், வசதிகள் வேண்டும். மூன்றாவது அப்படி செயல்படுத்துவதற்கான ஊக்கம் தேவைப்படும்.

அதாவது:

விழிப்புணர்வு, தெளிவு, ஆழ்ந்த புரிதல்

கட்டமைப்புகள், வசதிகள், கொள்கை வழிமுறைகள்

செயல்படுவதற்கான ஊக்கம், உணர்வூக்கம்

இந்த மூன்றுமே வெவ்வேறு வழிமுறைகளில் அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டும். சமூக ஆர்வலர்களும், அரசு-சாரா இயக்கங்களும் (NGO) கூட இதனை முன்னெடுக்கலாம். ஆனால் அரசிடம் இருந்து இதற்கான உந்துதல் கிடைக்கும் பொழுது சமூக ஆரவாளர்கள் மற்றும் NGOக்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கலாம். ஆங்காங்கே பக்கெட் பக்கெட்டாக தண்ணீர் சிதறுவது போய் ஒட்டு மொத்தமாக வெள்ளமாக இந்த முயற்சி பாயும் போது அதன் பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.

சரி, இந்தப் பொதுவிட உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ள என்னென்ன ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்? எப்படி இவற்றை முன்னெடுப்பது?

இதில் ஆறுதல் தரும் விஷயம் என்னவெனில், இதனை நாம் புதிதாக ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. முன்னேறிய நாடுகள் பலவற்றில் இது பற்றி தொடர்ந்த ஆராய்ச்சிகள் நடத்தி பல்வேறு வழிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் நாம் அப்படியே பெரும்பாலும் இங்கே கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி விடலாம். என்ன, அவற்றில் சில விஷயங்கள் ரொம்பத் தீவிரமாக இருக்கும். இந்தியா போன்ற சமூகத்தில் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். நாம் அவற்றை அப்படியே வரிக்கு வரி பின்பற்ற வேண்டும் என்பதில்லை. நமக்கு அரசியல் ஆட்சி முறை தேவைப்பட்ட பொழுது புதிதாக எதையும் கண்டுபிடிக்க முனையாமல் மேலை நாட்டு ஜனநாயகத்தைக் கொண்டு வந்து அதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். போலவே பொருளாதாரக் கொள்கை தேவைப்பட்ட பொழுது ஆரம்பத்தில் சோஷலிசம், பின்னர் சந்தைப்பொருளாதாரம் என்று முன்னெடுத்தாலும் அதிலும் பெருமளவு இந்தியாவுக்கு ஏற்றப்படி நிறைய விஷயங்கள் மாற்றப்பட்டு பயனுக்கு கொண்டு வந்து பலன்களைக் காண ஆரம்பித்து விட்டோம்.

அது போலவே, Health and Safetyயிலும் மேற்கத்திய வழிமுறைகளில், வழிகாட்டிகளில் பாதியை பின்பற்றினாலே பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படலாம். இவற்றில் தேவைப்படும் விஷயங்களை முன்னெடுத்துப் பின்னர் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்து மாற்றங்கள் செய்து கொண்டு இருக்கலாம். அப்போது எது பலனளிக்கிறது, எது அளிக்கவில்லை என்பது தெரியும்.

முதல் முயற்சியாக இந்த Health and Safetyஐ உணர்வுபூர்வமான விஷயமாக மாற்ற வேண்டும். அதற்கு முதல் காரியமாக குழந்தை சுஜித் இறந்த அக்டோபர் 29ஆம் தேதியை ‘பொதுப் பாதுகாப்பு தினம்’ என்று அறிவிக்கலாம் (Health and Safety Day). ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் பொதுவிடங்களில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள், விவாதங்கள் போன்றவற்றை நடத்தலாம். கொள்கை மற்றும் கட்டமைப்பு முன்னெடுப்புகளை அறிவிக்கலாம் அல்லது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டலாம்.

இது சம்பந்தப்பட்ட திட்டவடிவங்களுக்கு சுஜித்தையே சின்னமாகப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு ஆழ்துளை கிணற்றின் மூடியை இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த விலையிலோ வழங்கலாம். அந்த மூடியின் பேக்கேஜிங்கில் சுஜித்தின் உருவப்படத்தை பொறிக்கலாம். (மூடியில் படம் இருக்கக் கூடாது.) அப்படி பேக்கேஜிங்கில் இருப்பது அந்த மூடியை வாங்குபவருக்கு ஆழ்துளைக் கிணற்றை பொறுப்புடன் மூடுவதற்கு பெரும் உந்துதலாக இருக்கும்.

அதே போல ‘சுஜித் நிதி’ (Sujith Fund) என்று அறிவித்து பொதுவிடப் பாதுகாப்பு பணிகளுக்கு அதில் நிதி ஒதுக்கலாம். பொதுவிடப் பாதுகாப்பு சம்பந்தமான கட்டமைப்பு பணிகள், விழிப்புணர்வு படங்கள், விளம்பரங்கள், விவாத நிகழ்வுகள் போன்றவற்றுக்கு அந்த நிதியில் இருந்து செலவழிக்கலாம். சுஜித் விருது என்று அறிவித்து பொதுப் பாதுகாப்பு குறித்து பெரும் சாதனை புரிவோருக்கு விருதுகள் அறிவிக்கலாம்.

இப்படி தொடர்ந்த அழுத்தமும், உந்துதலும் சேர்ந்து முனைவுகள் நடைபெற்றால் சமூகத்தில் பெருத்த மாற்றங்கள் நிகழவும் சாத்தியக்கூறு இருக்கிறது. இது பற்றி நாம் எல்லோரும் தொடர்ந்து பேச வேண்டும், நம் வீட்டில், அலுவலகத்தில் இது குறித்த குறைந்த பட்ச முயற்சிகள் செய்ய வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வு முடிந்த வரை எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். அப்படி நிறைய பேர் பேசத் துவங்கிய பின் இது ஒரு அரசுக் கொள்கையாக மாறும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

‘சுர்ஜித் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று நிறைய குரல்கள் வருகின்றன. செய்வோம். கூடவே பொது உடல் நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து முன்னேறிய தேசங்கள் வகுத்துள்ள வழிகாட்டல்களை மாநில அரசுகள் பின்பற்ற திட்டங்கள் வகுக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வோம். சுஜித்தின் வாழ்வு அக்டோபர் 29உடன் முடிவதற்கு அனுமதிக்க வேண்டாம்; அவன் வாழ்க்கையை இப்போதுதான் துவக்கி இருக்கிறான்; சமூகத்தில் ஒரு மாபெரும் பாதுகாப்பு புரட்சி கொண்டு வருவோம். அந்தப் புரட்சியின் புரட்சியின் தலைவனாக சுஜித் உருவாகி இருக்கிறான் என்று வரலாற்றை மாற்றுவோம்.