அவளின்ர பெயர் கூடத் தெரியாது. அம்பகாமம் காட்டுக்க தான் முதல் முதலா அவள சந்திச்சனான். 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சண்டைல எல்லாம் ஆமிக்காரனுக்கு பெரிய பலமாவும் எங்களுக்குப் பெரிய தலையிடியாவும் அவங்களின்ர  ஆழ ஊடுருவும் படையணி

(LRRP) இருந்தது. அம்பகாமம் காடு எங்களுக்கு மட்டுமில்ல, அவங்களுக்கு நல்ல பாதுகாப்பான இடமா இருந்துச்சு. உவங்கள அடிக்கிறதுக்கென்டே ஆமிக்காரன்ட லைனுக்கும் எங்கட லைனுக்கும் இடையில இருக்கிற சூனியப் பிரதேசத்தில,  இல்லாட்டி சில நேரம் அவன்ர லைனத் தாண்டி உள்ளுக்க போயும் அம்பூஸ் படுப்பம். அம்பூஸ் படுக்கிறதென்டால் வழமையா அவன் போய்வார பாதையில மறைவா படுத்துக்கிடந்து திடீர் தாக்குதல் நடத்துறது.

அப்பிடியொருக்கா சூனியப் பிரதேசத்துக்குள்ள மூன்டு நாள் ஒழுங்கான சாப்பாடில்லாமல் அம்பூஸ் படுத்துக்கிடந்தும் அஞ்சு சதத்துக்கும் பிரியோசனமில்லாமல் கொலைப்பட்டினியில கிடந்தோம். எங்கட நிலையில நான், முகிலன், பூவேந்தன் மூன்டு பேரும் பக்கத்து நிலையில அங்கால மாறன், வேல்மறண்ணா,  மணி இஞ்சாலப் பக்கம் மெய்யரசன்,  நிறோ அண்ணா, கயல் தொங்கலில ரீம் லீடர் N3 (November-3 சங்கேத குறியீட்டுப் பெயர்) யும் ரெண்டு பெடியலும் மொத்தம் 12பேர். மெயின்ல இருந்து சாப்பாட்டு ஒடுங்கும் கிடைக்கேல்ல. திரும்பி வரச்சொல்லியும் தகவல் வரேல்ல.

பூவேந்தன் நல்லவன், ஆனால் படு மொக்கன். பசி தாங்க மாட்டான். சாப்பாட்டுக்காக ஒரு தாட்டான் குரங்கச் சுட்டுப் போட்டான். ரெண்டு லைனுக்கும் நடுவில என்டதால பயமில்லாமல் ரவுண்ஸ் அடிக்கலாம். ஆமிக்காரனின்ட லைனுக்குப் பின்னுக்கென்டால் குரங்கக் கூட சுட்டிருக்க ஏலாது. முகிலனும் அவனும் சேர்ந்து மரத்தில கட்டிப்போட்டு உரிச்சாங்கள். எனக்கு குரங்கு இறைச்சி தின்ன விருப்பமில்ல. ஒருக்கா சும்மா எட்டிப் பார்த்தன். கவலையா போயிற்று. தோலில்லாமல் பார்க்கும்போது யேசுநாதர கட்டி வைச்சு இருந்த மாதிரி இருந்துச்சு. வாழ்க்க வெறுத்துப்போச்சு ஒருக்கா. பேந்து அவங்கள் பங்கிட்டுச் சாப்பிட்டாங்கள். பக்கத்து நிலைகளில இருந்தவங்களுக்கும் குடுத்து விட்டாங்கள்.

எனக்குக் கொலைபசி சுருண்டு போயிற்றன். இதுதான் இயக்கத்துக்கு வந்ததுக்கு முதல் தடவையா சாப்பாடு இல்லாமல் மாட்டுப்பட்ட நாள். ஆனால் இதுவே கடைசியா இருக்கனுமென்டு நினைச்சன். இந்த நிமிசம் அம்மான்ர நினைப்புத்தான் அதிகமா இருந்துச்சு. பள்ளிக்கூடம் போகமுதல் பழஞ்சோத்த குழைச்சு இன்னொரு வாய் இன்னொரு வாயென்டு தீத்தி விடுவா. சில நேரம் மீன்குழம்பென்டால் வெடுக்கு மணக்குமென்டு கத்தக்கத்த ஒருவாய் ஒருவாயென்டு கெஞ்சிக்கெஞ்சி தீத்துவா. இன்னொரு தடவை அம்மாவப் பார்ப்பனா என்டதே சந்தேகம்தான். காட்டையே வெறிச்சுப் பார்த்துக்கொண்டு இருந்தன். கொஞ்சத் தூரத்தில ஒரு விக்ஸ் மரம் இருந்துச்சு. அது எங்கட லைன் பக்கம் இருந்துச்சு.

பொதுவா விக்ஸ் மரத்தில மெல்லிய பட்டை மேலால உரிஞ்சு உரிஞ்சு நீள்வட்டம்  நீள்வட்டமா வந்து நடுவில ஒரு புள்ளி போல இருக்கும். பசி களைப்பு எல்லாம் சேர்த்து மண்டை பிசகின நிலையிலதான் இருந்தனான். அந்தப் புள்ளிக்கு நேர துவக்க நீட்டிக் குறி பார்த்துக்கொண்டு இருந்தன். முகிலன் என்ர முதுகில தட்டி என்னடா என்டான். நான் அந்தப் புள்ளியக்காட்டி “Target மாதிரி இருக்கடா” என்டன். அவன் உடன “எங்க சுடு பார்ப்பம்“ என்டான். “என்ர சுடும் திறன பார்க்க ஆசைப்படுறியோ” என்டு கேட்டன். கதை நல்லா முத்தீட்டு. சரியென்டு நானும் sitting positionல இருந்து அந்தப் புள்ளிய குறி வைச்சு சுட்டன். புள்ளிக்குப் பக்கத்தால பட்டு சறுக்கிக்கொண்டு போயிற்று. பத்துக்கு ஒன்பது குடுக்கலாம் அந்த சுட்டுக்கு.

கொஞ்ச நேரத்தால சலசலப்புச் சத்தம். துவக்க இயங்குநிலைக்குத் திருப்பிப்போட்டு காப்பு மறைப்பு எடுத்துகொண்டு பதுங்கீட்டம்.  எங்கட லைன் பக்கமிருந்து ரெண்டு இயக்கப்பெட்டையல் வந்தாளவ. எப்பவும் எங்கட பெட்டையல் வடிவா கம்பீரமா இருப்பாளவ. அதிலயும் அவள் அப்பிடியொரு  வடிவும் கம்பீரமும். சொல்லி வேலையில்ல. K56 தோளுக்கு குறுக்கால கொழுவிக் கொண்டு,  நெஞ்சுக்கோல்சர் கட்டிக்கொண்டு கிப்பி வெட்டின தலையோட குப்பி,  தகடுகட்டின கறுப்புக் கயிறு வெளிய தெரிய துறுதுறுவென்ட கூர்மையான ஆனால் இரக்கமும் ஓர்மமும் நிரம்பி வழியும் பெரிய முட்டைக் கண்களோடு இருந்தாள் அவள். சரியென்டு வெளிய வந்து முகிலன் என்னன்டு கேட்டான். அந்த முட்டைக் கண்காரி இனிமேலில்லையென்ட கெட்ட கோவத்தில “ஆர் இப்ப இஞ்ச இருந்து சுட்டது?’’ என்டு கேட்டாள். முகிலனுக்கு விசயம் விளங்கீட்டுது. நைசா என்னைக் காட்டீட்டு மரத்தையும் காட்டீட்டு ஒதுங்கீட்டான்.

கிட்ட வந்தவள் “ அறிவிருக்கே உமக்கு..?? பச்ச மரத்தில சுட்டால் சறுக்குமென்டு தெரியாதே..?? அங்கால LP  (முன்னிலை அவதானிப்பு) கிடந்த எங்களுக்கு பக்கத்தில நின்ட மரத்தில பட்டுக்கொண்டு போகுது நீர் சுட்ட ரவுண்ஸ். ஆருக்கேன் எங்களுக்கு கொழுவி இருந்தால் என்ன நிலம..?? ஒரு ரவுண்ஸ்ன்ட விலை தெரியுமோ உமக்கு..?? எங்கட போராட்டத்தில எத்தின பேரின்ட உயிர ஒவ்வொரு ரவுண்ஸ்க்காகவும் விலையா குடுத்து இருக்கிறமென்டு தெரியாதே..?? இயக்கத்தின்ர சொத்த உப்பிடி தேவையில்லாமல் அழிக்கிறதுக்கே இயக்கதுக்கு வந்தனியல்..??’’ அங்கயோ இஞ்சயோ என்டு நிப்பாட்டுற பாடில்ல அவள். வேற வழியில்லாமல் நான் தொடங்க வேண்டியதா போச்சு.

“நிப்பாட்டுங்கோ கொஞ்சம், ஆர் நீங்கள்..? விட்டால் பேசிக்கொண்டே போறீங்க. ரெண்டு மூன்டு நாளா சாப்பாட்டு ஒழுங்கு வரேல்ல எங்களுக்கு. பசியில சாப்பாட்டுக்காக ஒரு குரங்கச் சுட்டன். நான் புதுப்பெடியன் ஒழுங்கா சுடத்தெரியாது. அது மரத்தில பட்டு சறுக்கீட்டுது. விசயம் தெரியாமல் வாயில வந்ததெல்லாம் கதைக்காதீங்கோ” என்டு சொல்லி மழுப்பிட்டன். பேந்து கொஞ்ச நேரம் அமைதியா நின்டாள் குறுக்கும் நெடுக்கும் ஒருக்கா தலையாட்டிப்போட்டு. “உம்மமட பேரென்ன…” என்டு கேட்டாள் “இ..இ… இசைப்பிரியன்” கொஞ்சம் இழுத்தடிச்சு நாக்கு தடுமாறப் பேரைச் சொன்னதும் திருப்பியும்  தலையாட்டிப் போட்டு ஒன்டும் சொல்லேல்ல. போயிற்றாள்.

மார்கழி மசமென்டதால தண்ணிக்குக் குறையில்லை. அந்தப் பெட்டையல் வந்த பக்கமா கொஞ்சதூரம் போனால் சின்ன அருவி ஒன்டு ஓடும். அதில தான் குடிக்க தண்ணி அள்ளுறது. அந்தப் பக்கமா தண்ணி அள்ள கொஞ்ச நேரத்தால போகேக்க நான் பொய் சொல்லாமல் இன்னும் கொஞ்ச நேரம் அவளத் திட்ட விட்டிருக்கலாமென்டொரு நினைப்பு சிரிப்போட சேர்ந்து வந்துச்சு. தண்ணி எடுத்துக்கொண்டு திரும்பேக்க அவள ஒரு மரத்தடியில திருப்பியும் கண்டுட்டு தெரியாத மாதிரி வந்தன். “இசைப்பிரியன்” அவள்தான் கூப்பிட்டாள், திருப்பியும் கூப்பிட்டாள்.

“இஞ்ச ஒருக்கா வாங்கோவன்.’’

கிட்டப்போனன். ஒரு நீல நிற நெகிழிப்பை (சொப்பிங் பாக்) ஒன்டை நீட்டி “இதில சோறும் பருப்புக் கறியும் இருக்கு. எங்கட வழங்கல் சாப்பாடு. கொண்டுபோய்ச் சாப்பிடுங்கோ’’ என்டாள். நானும் வாங்கிக்கொண்டு வந்துட்டன். கொண்டு வந்து இவங்களிட்ட விசயத்தச் சொல்லி சாப்பாட்ட நீட்டினன். “பேயா பெட்டையலிட்ட சாப்பாட்ட வாங்கீட்டு வந்திருக்கியே வெக்கமா இல்லையோ உனக்கு..?? குடடா கொண்டுபோய் அவளுகளுக்கு சாப்பாடு இருக்கோ தெரியேல்ல” என்டு கத்த வெளிக்கிட்டாங்கள். சரியென்டு திருப்பிக் கொண்டுபோய் குடுத்தன். என்ர கடவுளே மறுபடி பேசத்தொடங்கிட்டாள். “உங்கட இந்த லெவல் காட்டிற வேலையெல்லாம் இஞ்ச வேணாம். ரவுண்ஸ்ன்ட அருமையும் விளங்கேல்ல, சாப்பாட்டுன்ர அருமையும் விளங்கேல்ல. பெடியலென்டாலே உங்களுக்கெல்லாம் பெரிய நினைப்பு.” கண்ட பாட்டுக்குக் கதைக்க வெளிக்கிட்டாள். வேற வழியில்லாமல் ரெண்டாவது தடவையும் அவளிட்ட தோத்துப்போய் சாப்பாட்ட தூக்கிக் கொண்டு எங்கட இடத்துக்கு வெளிக்கிட்டன்.

கொண்டுபோன சாப்பாட்ட ஒன்டுமே கதைக்கேல்ல. என்ர பாட்டுக்குச் சாப்பிட வெளிக்கிட்டன். ரெண்டாவது வாய் வைக்கேல்ல, முகிலனும் பூவேந்தனும் சேர்ந்து சாப்பிட வெளிக்கிட்டாங்க. பிறகு சிரிப்புத்தான்

அன்டைக்கு இரவு எங்களுக்கு உலர் உணவு வந்துட்டு. மூன்டு பேருக்கும் சேர்த்து ஒரு கிலோ பேரீச்சம்பழப் பை ஒன்டும் வந்துச்சு. அதை விடிஞ்சதும் அவளிட்ட குடுக்கிறதென்டு மூன்டு பேரும் முடிவெடுத்தாச்சு. ஆனால் விடிய நாலு மணிக்கு எங்கட ஆக்கள திருப்பி எடுக்கச்சொல்லி மெயின்ல இருந்து சொல்லீட்டாங்க. அவசர அவசரமா வெளிக்கிட்டாச்சு. எங்கட லீடரிட்ட விசயத்தச்சொல்லவோ விளக்கம் குடுக்கவோ நேரமில்ல. அவரும் கேட்கப்போறதில்ல. இஞ்ச இப்ப போராட்டமும் அதனூடே விடுதலையும் தான் முக்கியம். மனசு முழுக்க அவளையும் பருப்புக்கறி சோறையும் சுத்தி சுத்தி வந்துச்சு. ஒரு வார்த்தை சொல்லீட்டுக்கூட வர முடியேல்ல. அந்த துப்பாக்கி ரவைக்கூடுகளோட பாரத்தை விட மனசு முழுக்க பாரமா இருந்துச்சு.

இயக்கத்துக்கென்டு வீட்டவிட்டு வெளிக்கிட்டு வரேக்க இருந்த அதே வேதனை அப்பேக்க அந்த இடத்த விட்டு வெளிக்கிடேக்கயும் இருந்துச்சு. ஆனால் இண்டைக்கு வரைக்கும் ஏன் என்ர மனசு கிடந்து அந்தப்பாடு பட்டுச்சு. அந்த உணர்வுக்குப் பெயர் நன்றியா…?? அன்பா…??காதலா..?? இல்ல, இதையெல்லாம் தாண்டி மேலானதொன்றா எதுவுமே விளங்கேல்ல.

அவளோட அந்த அன்பு, தாயகப்பற்று, வரிச்சீருடையில் அவளோட கம்பீரமான அழகு, என்ர துவக்கு ரவுண்ஸ் பட்டுச்சறுக்கிய மரம் எல்லாமே அப்பிடியேதான் இருக்கும். ஆனால் அவள் இருப்பாளா…??? இருந்தாலும் அப்பிடியே இருப்பாளா…??? கால், கை, கண், கர்பபப்பை, எல்லாதோடையும் முழுமனுசியா இருப்பாளா..?? இல்லாட்டி யுத்தம் தின்ற மிச்சமா இருப்பாளா..??

ந.பிரதீப். ஈழத்தின் மன்னார் பகுதியைச் சேர்ந்த இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் போராளி. இரவல் தேசம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டவர்.

ஓவியங்கள் :கிரிஜா ஹரிஹரன்