நான்காண்டுகளுக்கு முன், எனக்குத் தெரிந்த மாணவி ஸ்ப்லிட்ஸ்வில்லா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கேள்விப்பட்டபோதுதான் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் ஒரு குழு தங்கும்வகையிலான ரியாலிட்டி ஷோக்கள் இருப்பது தெரியவந்தது. அதற்கு முன்னால் டிரூமேன் ஷோ (1998) என்ற திரைப்படத்தின் மூலம் எந்த அளவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‘உண்மையை’ உருவாக்க எல்லையற்ற ஜோடிப்புகளை செய்யக்கூடியன என்ற சிந்தனை ஏற்பட்டதுண்டு.

உலகின் பல பகுதிகளிலும் குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் பிரபலமடையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் தயாரிக்கப்படுவதை அறிவோம். உலகில் நடப்பவற்றை அறிய நேர்ந்தாலும் பெரும்பாலும் நான் தமிழ்ச் சமூகம், கலாசார வெளி சார்ந்துதான் எழுதுகிறேன். ஏனெனில், என் ஆய்வுப்புலம் தமிழ் வாழ்க்கைதான் என்பது மட்டுமல்ல; நான் தமிழ்ச் சமூகத்தின் அங்கம் என்பதும்தான்.

தமிழில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி துவங்கியபோது கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர், பல கருத்து மாறுபாடுகள், விமர்சனங்கள் இருந்தாலும் நான் மதிக்கும் கலைஞர், அதைத் தொகுத்து வழங்க முன்வந்தது எனக்கு மிகுந்த வியப்பளித்தது. அவருக்கு என்ன அழுத்தம் அல்லது நெருக்கடி அல்லது தேவை- இதுபோன்ற இளையோர் நிகழ்ச்சியை முதிர்ந்த வயதில் தொகுத்து வழங்க என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் சரி, தமிழ் பிக்பாஸில் என்ன நடக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று முதல் சீசன் துவக்கத்திலிருந்து பத்து, பன்னிரண்டு வாரங்கள் விடாமல் பார்த்தேன்.

இந்த விஷயம் தெரியவந்த என் மாணவர்கள் சிலர், “நீங்களா இப்படி? இதுபோன்ற மலினமான நிகழ்ச்சிகளைப் பார்க்கலாமா” என்று நேரடியாகவே என்னைக் கேட்டனர். நான் தமிழ் வெகுஜன வெளியில் நடப்பவற்றை அறிந்துகொள்ளும் கடமை எனக்கு இருக்கிறது என்று வாதிட்டேன். ‘எப்படியோ தொலையுங்கள்’ என்று விட்டுவிட்டார்கள். நானும் ஜூலி, ஓவியா வெளியேறியபிறகு பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அதற்கு முன்னரே முகநூலில் என் கண்டனங்கள், விமர்சனங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தேன். அதன்பிறகு நான் பார்ப்பதில்லை என்பதுடன் யாராவது முகநூலில் அதுபற்றி அதிகம் எழுதினால் அவர்களை அன்ஃபாலோ செய்துவிடும் அளவு இந்த நிகழ்ச்சியை அருவருக்கிறேன் என்பதுதான் உண்மை.

இந்தக் கட்டுரை, என்னுடைய தனிப்பட்ட ரசனையை மேம்பட்டது என்று நிறுவுவதற்காக எழுதப்படுவதல்ல. ஒரு மானுடவியல், ஊடகவியல் ஆய்வாளனாக, கோட்பாட்டாளனாக நான் ஏன் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி சமூகத்திற்கு தீங்கு பயப்பது என்று கருதுகிறேன் என்பதை விளக்குவதை நோக்கமாகக் கொண்டது. உயிர்மை போன்ற இதழ்கள் இதுபோன்ற சிந்தனைகளுக்கு இடமளிப்பதால் சற்றே விரிவாகவே கோட்பாட்டுரீதியாக இதைக் குறித்து சிந்திக்க விழைகிறேன். இந்த நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும், விஜய் டிவியை கண்டிக்க வேண்டும் என்பதையெல்லாம்விட மக்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏன் அவலமானவை, ஏன் கலாசார வறுமைகொண்டவை, வக்கரிப்புகளை தோற்றுவிப்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். பொதுவாக, வெகுஜன கலாசாரத்தை அருவருக்கும் மேட்டிமைவாதி அல்ல நான் என்பதை என் எழுத்துகளை வாசிப்பவர்கள் அறிவார்கள். ஆனால் முதலீட்டிய கலாசார தொழில்துறை, தொலைக்காட்சி சேனல்கள் பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கும் எந்த ஒரு மலினமான நிகழ்ச்சியையும் மக்கள் பார்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக விமர்சிக்காமல் இருக்க முடியாது. ‘கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்ற வள்ளுவர் ஆணையை புறக்கணிக்க முடியாது.

நல்லது. இந்தக் கட்டுரையை மூன்று பகுதிகளாக பிரித்துக்கொள்வோம். முதல் பகுதி நிகழ்கலை ஆய்வுகள் என்ற புதிய துறையைப் பற்றியது. இதில், எப்படி அன்றாட வாழ்வில் நமது செயல்களும் நிகழ்த்தும் தன்மைகொண்டதாக அல்லது நாடகீயமாக அமைகின்றது என்பதை குறித்து ஆராய்வோம். அதன் அடிப்படையில் இயல்பாக இருப்பது, நேர்மையாக இருப்பது என்பதெல்லாம் எப்படி அடையாளப்படுத்த கடினமானவை என்பதை புரிந்துகொள்வோம்.

இரண்டாம் பகுதியில் சுயத்தின் பதட்டம் என்பது என்ன, அதனால் நமது உறவுகளில் எப்படிப்பட்ட உரசல்கள் ஓயாமல் எழுகின்றன என்பதை பரிசீலிப்போம். அதன் காரணமாக, எப்படி வாழ்க்கை வழக்காக மாற முயற்சிக்கிறது. ஆனால் வழக்கு வாழ்க்கையின்போக்கில் கலந்துபோகிறது என்பதை புரிந்துகொள்வோம்.

மூன்றாம் பகுதியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி எப்படி உறவுகளின் நாடகத்தன்மையை இயல்பாக்கமாக மாற்ற முயற்சிப்பதன்மூலம், உறவுகளையே, சகவாழ்வையே போட்டியாக மாற்றுவதன்மூலம், மேலும் நம் சமூக உறவுகளைச் சிதைக்கும் ஆபத்து உருவாகிறது என்பதை யோசிப்போம்.

முதல் பகுதி: நிகழ்கலை ஆய்வுகள்

நிகழ்கலை ஆய்வுகள் என்பதை ஆங்கிலத்தில் பர்ஃபார்மன்ஸ் ஸ்டடீஸ் என்கிறோம். இது பல்வேறுவிதமான நிகழ்த்துகலைகளை, அதாவது நாடக வடிவங்கள், தெருக்கூத்து, கதகளி போன்றவை, சடங்குகள் ஆகியவற்றை மட்டும் ஆராய்வதில்லை. அதன் எல்லைகளை மிக விரிவாக்கி எப்படி வாழ்வின் பல்வேறு அம்சங்களில் நிகழ்த்துதல் அல்லது நாடகீயம் என்பது இடம்பெறுகிறது என்பதை ஆராய்கிறது. உதாரணமாக, ராணுவ அணிவகுப்பு என்பது ஒருவகை நிகழ்த்துதல். ஆசிரியர் பாடம் எடுப்பது ஒருவகை நிகழ்த்துதல். அரசியல்வாதிகள் கூட்டத்தில் பேசுவது, ஓட்டு சேகரிப்பது எல்லாம் நிகழ்த்துதல். குழந்தையை தாலாட்டுப் பாடி தூங்க வைப்பது, நிலாவைக்காட்டி சோறூட்டுவது, கதைசொல்லி தூங்கவைப்பது எல்லாமே நிகழ்த்துதல் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

இதை நாம் தொடர்ந்து ஆராய்ந்தால், ஒருவர் எப்படி பேசுகிறார், எப்படி சிரிக்கிறார், நடக்கிறார் என்பதெல்லாம் அவரது பழக்கமாக இருந்தாலும் அவர் தன்னை ஒரு குறிப்பிட்டவகையில் நிகழ்த்திக்கொள்கிறார் எனலாம். அவரைப்போலவே இன்னொருவர் செய்துகாட்டுவதும் சாத்தியமாகிறது. கூர்மையாக கவனிப்பவர்கள் அவ்விதமாக செய்து காட்டும்போது அனைவரும் சிரித்து ரசிப்பதும் வழக்கம்தானே. குழந்தைகள்கூட பெரியவர்களது பாவனைகளை செய்து காட்டிவிடும். அதாவது, நமது சுபாவத்தில் வெளிப்படும் பாவங்கள் பாவனைகளாகவே அர்த்தமாகின்றன. அதனால் பிறர் அந்த பாவனைகளை செய்து காட்டுகிறார்கள். ஒருவரது ஆளுமை என்பதே அவர் தன்னை எப்படி நிகழ்த்திக்கொள்கிறார் என்பதாக மாறுகிறது.

இந்தக் கோட்பாட்டில் மிக முக்கியமான அங்கம்வகிப்பது பால்நிலை கட்டுமானம் என்று சொல்லவேண்டும். ஆண் எப்படி நடந்துகொள்ளவேண்டும், பெண் எப்படி நடந்துகொள்ளவேண்டும், மூன்றாம் பாலினத்தவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதெல்லாம் சில பாவங்களாக, பாவனைகளாக நிலைப்படுத்தப்பட்டுள்ளன. பெண் என்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று வாழ்வியல் இலக்கணமாகவே கூறியிருந்தார்கள். இப்படி பெண்மை, ஆண்மை என்பதெல்லாம் முக்கியமான நிகழ்த்தல் வடிவங்களாக, நாடகீயமாக ஆக்கப்பட்டது அந்த பாத்திரங்களை மேடையில் ஏற்று நடிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒரு ஆண், பெண் வேடமிடுவது, பெண் ஆண் வேடமிடுவது என்பதெல்லாம் நடையுடை பாவனைகள் என்பவற்றால் எளிதில் சாத்தியமாகியது அல்லவா? உதாரணமாக, பாய்ஸ் கம்பெனிகள் அப்படித்தானே இயங்கின.

இப்படியாக, பாவங்கள் பாவனைகளாகும் சாத்தியத்தால் நாம் எப்போதுமே பிறரை சந்தேகிப்பது சாத்தியமாகிறது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் குறித்த அச்சம் நமக்கெல்லாம் இருக்கிறது. ஏனெனில் வெகுசுலபமாக நாம் துக்கப்படுவதாகவோ, கவலைப்படுவதாகவோ, அன்பு செய்வதாகவோ நிகழ்த்திக்காட்டி விடுகிறோம். ஏன், குழந்தைகளே இவற்றை சுலபத்தில் பழகிக்கொள்கிறார்கள். நாமும் அதை உற்சாகமாக பாராட்டுகிறோம். கோபமாக இருப்பது போல நடிக்கிறார்கள்; சோகமாக இருப்பதுபோல நடிக்கிறார்கள்; உற்றோரோ, சுற்றோரோ என்ன என்று பதறிப்போய் கேட்கும்போது விளையாட்டு எனச் சிரிக்கிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால் உண்மையிலேயே கோபமாக இருப்பதற்கோ, அல்லது கொஞ்சுவதற்கோ உரிய பாவங்களும், அவ்வாறு நடிப்பதற்கான பாவங்களும் ஒன்றேதான். சிலர் மிகையாக வெளிப்படுத்துவார்கள்; சிலர் குறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் இந்த வித்தியாசத்தை வைத்து ஒருவர் மற்றவரை விமர்சிப்பது சுலபம். சாவு வீட்டிற்குப் போனால் நிச்சயம் யாராவது ஒருவர் மற்றொருவரது சோகத்தை மிகையானது, போலியானது, நடிப்பு என்று விமர்சிப்பதை நிச்சயம் கேட்கலாம். அந்த விமர்சனத்தைக் கேட்பவர் அதை மறுத்து என்னதான் இருந்தாலும் சொந்தம் விட்டுப்போகுமா என்றும் அதனால் துக்கத்தை சந்தேகிக்க முடியாது என்றும் சொல்வதையும் கேட்கலாம். இதனால் நாம் மிகையாக துக்கப்பட்டாலும், குறைவாக துக்கப்பட்டாலும் ஒருவரால் நமது வெளிப்பாட்டை, மெய்ப்பாட்டை விமர்சித்துவிட முடியும். ஏனெனில் யாராலும் ஐயத்திற்கு அப்பால் துக்கத்தை நிகழ்த்திக்காட்ட முடியாது. உதாரணமாக, ஒப்பாரி வைப்பதை எடுத்துக்கொள்வோம். ஒப்பாரி வைப்பது என்பது நிகழ்த்துகலையா, துக்கத்தின் வெளிப்பாடா? கூலிக்காக ஒப்பாரி வைப்பதை கூலிக்கு மாரடிப்பது என்ற சொலவடையால் குறிப்பிடுவோம். ஆனால் சொந்தக்காரர்களே ஒப்பாரி வைத்து அழும்போது அது நிகழ்கலையா? சோகத்தின் வெளிப்பாடா? இரண்டும்தானே? அதேபோலத்தான் பல உணர்ச்சிகளும் அவற்றின் வெளிப்பாடுகளும். இன்னம் எவ்வளவோ கூறலாம். அனைவர் வாழ்விலும் அன்றாடம் நிகழ்வதுதான். அதனால் உலகம் என்பதே நாடக மேடை என்பது போன்ற வசனங்கள் உருவாயின. செய்வது (to do). செயல்படுவது (to act), நிகழ்த்துவது (to perform) என மூன்று பரிமாணங்களில் நமது செயலை கணிக்க முடியும். விரிக்கில் பெருகும்.

எனவேதான் நிகழ்கலை ஆய்வுகளின் கோணத்தில் மிகவும் சவாலான நிகழ்த்துதல் இயல்பாக இருப்பதை அல்லது நேர்மையாக இருப்பதை நிகழ்த்துவதுதான். இவற்றிற்கான வெளிப்பாட்டு வடிவங்கள் என்ன என்பதை தீர்மானிப்பது கடினம். எப்போதும் நிறையப் பேசுபவர் ஒருநாள் பேசாமல் இருந்தால் அவர் இயல்பாக இல்லை என்று விடுவோம். அவர் என்ன இயந்திரமா, எப்போதும் ஒரே போல பேசிக்கொண்டிருக்க? நகைச்சுவையாகப் பேசுபவர் சோகமாக இருந்தால் இயல்பாக இருக்காது.

இதைவிட, பெரிய சிக்கல் நேர்மையாக இருந்து காட்டுவது. இதற்கான பாவங்கள் என்ன? முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்வதா? மெல்லிய குரலில் உறுதிபடப் பேசுவதா? நேர்மையை சிறப்பாக நிகழ்த்திக்காட்டுபவர் அந்தக் காரணத்தினாலாயே நேர்மை குறைவானவராக மாறிவிட மாட்டாரா? நேர்மை என்பது நிகழ்த்துதலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும் அல்லவா? அப்படி நிகழ்த்தப்படாத நேர்மையை நாம் எப்படி உணரமுடியும்? ஒருவரது நேர்மை தொடர்ந்து அவர் சொற்களின்படி செயல்படுவதில் தெரியவரலாமே தவிர, ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நேர்மையை நிகழ்த்திக்காட்டுவது கடினம். கோபப்பட்டுக் காட்டலாம். துக்கப்பட்டுக் காட்டலாம். ஆனால் இயல்பாக இருந்து காட்டுவது; நேர்மையாக இருந்து காட்டுவது போன்றவை மிகவும் சவாலானவை. ஒருவர் தன்னிச்சையாக மனம்போனபடி நடக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அது மிகப்பெரிய நிகழ்த்துதலாக மாறிவிடும். அதன்பிறகு அவர் அந்த பிம்பத்தைக் காப்பாற்றவே ஏதாவது விநோதமாக செய்யவேண்டி வந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் ,நாம் நடிக்கவில்லை என்பதை நடித்துக்காட்டுவது சாத்தியமில்லை எனலாம்.

நடைமுறை வாழ்க்கையில் உண்மைத்தன்மை என்பது செயல்களிலும் அவற்றின் விளைவுகளிலும்தான் புலனாகிறது. நீங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் பேசாமல் இருப்பது, உணவருந்தாமல் இருப்பது என்றெல்லாம் செயல்படும்போதுதான் உங்கள் துணைவருக்கு உங்கள் கோபம் துல்லியமாகப் புலப்படும். அதேபோல, அன்பாக இருப்பதை அன்பளிப்பு வாங்கித் தருவதுதான் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. அல்லது ஏதாவது மற்றவருக்காகச் செய்வது. அவருக்குப் பிடித்ததை சமைத்துத் தருவது. அவர் விரும்பும் பாடலை ஒலிக்கச்செய்வது என்று செயல்களே பாவங்களை, வெறும் பாவனைகள் அல்லவென்று நிரூபிக்கின்றன.

இந்தச் சிக்கலின் மிகச்சிறந்த வெளிப்பாடுதான், ஷேக்ஸ்பியரின் லியர் மன்னன் நாடகம். தன்னுடைய மூன்று மகள்களையும் கூப்பிட்டு தன்னை எவ்வாறு நேசிக்கிறார்கள் என்பதை சபையில் கூறச்சொல்கிறான் லியர் மன்னன். அவர்கள் கூறுவதை வைத்து தன் நாட்டை அவர்களுக்கு பிரித்துத் தருவதாகச் சொல்கிறான். முதலிரண்டு பெண்களும் நாடகீயமாக அவர்கள் அன்பை அலங்காரமாகச் சொல்கிறார்கள். மூன்றாவது பெண் கார்டீலியாவிடம் ‘நீ என்ன சொல்லப் போகிறாய்’ என்கிறான். தன் மனதில் உள்ள அன்பை சொற்களால் நிகழ்த்திக்காட்ட வேண்டுமா என்று நினைக்கும், நாடகீயமான நிகழ்த்துதலை அருவருக்கும் கார்டீலியா ‘ஒன்றுமில்லை’ (நத்திங்) என்கிறாள் அவள். ஒன்றுமில்லாததில் இருந்து எதுவும் வராது (நத்திங் வில் கம் ஃபிரம் நத்திங்) என்கிறான் லியர் மன்னன். ஒரு பெண், தன் தந்தையை எப்படி நேசிக்கவேண்டுமோ அப்படி நேசிக்கிறேன் என்கிறாள் கார்டீலியா. லியர் மன்னன் தன் சொத்துக்களை முதல் இரண்டு பெண்களுக்கும் கொடுத்துவிடுகிறான். கார்டீலியாவைப் பிடித்துப்போன வேற்றுநாட்டு இளவரசன் அவளை மணந்து கூட்டிச்செல்கிறான். தங்கள் அன்பை நாடகீயமாகப் பேசிக்காட்டிய முதல் இரண்டு பெண்களும் லியர் மன்னனை நடுத்தெருவில் விடுகிறார்கள். மூன்றாவது பெண், அவனைக் காப்பாற்ற ஓடோடி வருகிறாள். தன் தவறுக்கு வருந்தும் லியர் மன்னனுடன் சேர்ந்து அவளும் மரிக்கிறாள். இங்கே உண்மை அன்பை வெளிப்பாட்டு முறைகளை வைத்துக் கணக்கிடுவது கடினம் என்பதும் நீண்டகாலச் செயல்பாடுகளே அதை உணர்த்தும் என்பது தெளிவாகிறது. அதுதான் வாழ்வெனும் நதி.

நிகழ்த்துதலின் பிரச்சினையை ஜெயகாந்தன் ஓரிடத்தில் ‘தாடி வைத்தாலும் வேஷம்; மழித்தாலும் வேஷம்’ என்று குறிப்பிட்டார். முடி முகத்தில் பலருக்கும் இயல்பாக முளைக்கிறது. அதை மழிக்கலாம் என்ற ஒரு சாத்தியம் வருகிறது. அப்போது இயற்கையாக வளர்வதை மழிப்பது வேஷமாகிறது. மழிக்க சாத்தியமானதை மழிக்காமல் வளர்த்துவதும் வேஷமாகிறது. இதுதான் நிகழ்த்துதலின் பிரச்சினை. நாம் பாவனை செய்யமுடியும் என்றானபிறகு, உண்மையான பாவ வெளிப்பாடா, வெறும் பாவனை வெளிப்பாடா என்று அதை வெளிப்படுத்தும் நபர் உட்பட யாருமே தீர்மானிப்பது கடினம் என்றாகிவிடும்.

இரண்டாம் பகுதி: வாழ்க்கை எப்படி வழக்காகிறது?

நம்முடைய சுயம் முழுமையானதல்ல. காரணம் ,அதனால் தன்னுடைய உருவாக்கத்தையோ, அழிவையோ புரிந்துகொள்ள, தெரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, தனக்கு அப்பால் ஏதோவொன்று இருக்கலாமோ என்ற எண்ணம் அதனை முழுமையற்றதாக்குகிறது. மேலும் அதன் சமூக பங்கெடுப்பு என்பதும் தனக்கு வெளியே நிறைந்துள்ள மற்றமையினை எப்படி எதிர்கொள்வது என்ற பதட்டத்தால் கட்டப்பட்டுள்ளது. அதாவது, தன்னை எப்படி பிறர் காண்கிறார்கள், தன் எண்ணங்களை உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார்களா, இல்லையா என்பதெல்லாம் நிச்சயமற்று பதட்டம் ஏற்படுகிறது. பாதி நேரம் ,நான் சொல்வது புரிகிறதா என்று கேட்பதிலேயே செலவாகிறது.

பெரும்பாலும் அன்பு என்ற உணர்ச்சியைக் கொண்டுதான் நாம் உறவுகளைக் கட்டுகிறோம். ஒருவர்மீது பலவகைகளில் அன்பை வெளிப்படுத்துகிறோம். பதிலுக்கு அவரிடமிருந்து நமக்கு அன்பு கிடைக்கிறது. மேரியின் ஆடு, அவள் வகுப்பறைக்கு வெளியே காத்து நிற்கிறது. அந்த ஆடு ஏன் மேரியின்மீது ஏன் அவ்வளவு அன்பாயிருக்கிறது என்று பிற குழ்ந்தைகள் ஆசிரியரை கேட்கின்றன. ஆசிரியர், மேரி அந்த ஆட்டின்மீது அன்பு செலுத்துவதால்தான் என்று கூறுகிறாள் என்று “மேரியிடம் ஒரு ஆட்டுக்குட்டியிருந்தது” என்ற சிறார் பாடல் முடிகிறது. செல்லப் பிராணிகள், வளர்ப்பு மிருகங்கள் நாம் செலுத்தும் அன்பை நமக்குத் திருப்பித் தருகின்றன.

சக மனிதர்களும் அப்படித்தான். ஆனால் சக மனிதர்கள் நிகழ்த்துக்கலையில் திறமை பெற்றிருப்பதால் நமக்கு பல சமயங்களில் அவர்கள் அன்பை திருப்பித் தருகிறார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. மனிதர்களிடம் இயல்பாக ஊறும், பெருகும் அன்பைக் கெடுப்பதாக பல தீயகுணங்கள் தோன்றுவதாகக் கருதப்பட்டாலும் அவற்றின் ஆதாரமாக மூன்றைச் சொல்லலாம்.

ஒன்று அகங்காரம் அல்லது ஆணவம். இது தன் விருப்பப்படி பிறர் இருக்கவேண்டும் என்று நினைக்கும் அதிகாரம் தொடர்பானது.

இரண்டாவது, பொறாமை. இது, பிறருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டோ, தனக்குரியது பிறரிடம் இருப்பதாக நினைப்பதாலோ உருவாவது.

மூன்றாவது, சுயநலம். தன்னுடைய பாதுகாப்பும், நலன்களும் பிறருடையதைவிட முக்கியம் என்று நினைப்பது.

இந்த மூன்று குணங்களும் பிறரிடம் அன்பு செலுத்தும் ஆற்றலைக் குறைக்கின்றன என்பதே பொதுவான புரிதல். அடிப்படையில் இந்த மூன்றுமே சுயத்தின் முழுமையின்மை சார்ந்த பதட்டங்களால் விளைவது என்று கூறலாம். எப்படியானாலும் அன்பின் எதிரிகள், சகவாழ்வின் எதிரிகள் இவை என்பதில் ஐயமில்லை.

நம் சக மனிதர்களிடம் இந்த குணங்கள் இருக்கின்றனவா, அவர்கள் உண்மையாக அன்பு செய்கிறார்களா என்பதை நாம் எப்போதும் பரிசீலிக்கிறோம். நாகரிகத்தின் பாற்பட்டு எல்லோரும் நல்லவர்களாகவே பாவனை செய்தாலும், அவர்கள் ரகசியமாக தீய குணங்களை வைத்துள்ளார்கள், அவற்றை மறைத்து நடிக்கிறார்கள் என நினைக்கிறோம். அதனால் ஒருவரை ஒருவர் சந்தேகித்தும், விமர்சித்தும் வாழ்கிறோம்.

நிகழ்கலை கோட்பாடுகள் கூறுவதுபடி பாவமும், பாவனையும் ஒன்றா இல்லையா என்று சதா பரிசீலிக்கிறோம், விசாரணை செய்கிறோம். நாம் உண்மையிலேயே எப்படி உணர்கிறோம் என்று நம்மையே கேட்டுக்கொள்ளத் துவங்குகிறோம். நம் சிரிப்பையும், அழுகையையும் நாமே ஐயுறுகிறோம். இது நமக்காகவே நம்மால் நிகழ்ந்ததா அல்லது பிறர் நம்மிடம் தோற்றுவித்ததா என்றும்கூட யோசிக்கிறோம்.

இதனால் நாம் குற்றவாளி, நீதிபதி, வக்கீல் என்ற மூன்று பாத்திரங்களில் எப்போதும் மாறி, மாறி தோன்றுகிறோம். வாழ்க்கை முழுவதும் ஒரு வழக்குரை காதையாகிறது. யாரிடமாவது யாரைக் குறித்தாவது நியாயம் கேட்டுக்கொண்டேயிருக்கிறோம். குறைந்த பட்சம் நம் மனதினுள் புலம்பிக்கொண்டு இருக்கிறோம். இந்த குற்றவாளி, நீதிபதி, வக்கீல் என்ற மூன்று பாத்திரங்கள் எப்படி உருவாகின்றன என்று பார்ப்போம்.

நாம் குற்றவாளி ஆகும் தருணம்

வாழ்வில் நம்முடைய பெரிய கவலையே அடுத்தவர்கள் நம்மை எப்படி நினைத்துக்கொள்வார்கள் என்பதுதான். நம்மை யாராவது சந்தேகித்து விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். அதனால் நம்மை எப்போதும் நியாயப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். நான் சொல்வது சரிதானே, நான் செய்வது சரிதானே என்று உறுதிப்படுத்திக் கொள்கிறோம் அல்லது கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்கிறோம்.

பலவீனமானவர்கள், அதிகாரமற்றவர்கள் தாங்கள் எப்போதுமே ஏதாவது தவறிழைத்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வில் மூழ்குகிறார்கள் அல்லது மூழ்கடிக்கப் படுகிறார்கள். அடிமைகளை, பணியாளர்களை தொடர்ந்து கண்டித்துக்கொண்டே இருந்தால்தான் அவர்கள், தங்கள் செயல்களைக் குறித்து குற்றவுணர்ச்சி கொண்டு தங்களைத் தாங்களே கண்காணித்துக் கொள்வார்கள் என்பது ஒரு உளவியல். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் நம் செயல்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று சொல்வார்கள். பிரபஞ்ச அளவில் கடவுளே சிசிடிவி காமரா போலத்தான். அதனால் நாம் நம்மை தவறுகள் செய்யாமல் பார்த்துக்கொள்வோம் என்பது கருத்து.

இதை உளவியலில் ‘உள்வயப்பட்ட உற்றுநோக்கல்’ (Internalized gaze) என்கிறார்கள். அதாவது, மற்றமையின் சார்பாக நம்மை நாமே கண்காணித்துக் கொள்கிறோம். சிறைகளில் எல்லாக் கைதிகளின் அறையையும் பார்க்கமுடியும் கண்காணிப்புக் கோபுரங்களை சமூக ஒழுங்கின் உருவகமாகச் சொன்னார் ஃபூக்கோ (Michel Foucoult, 1926-1984). லக்கானிய உளவியல் அறிஞர்கள், அந்த கண்காணிப்புக் கோபுரத்தின் இருப்பு நம் மனங்களில் புகுந்துகொள்கிறது. நாமே நம்மை கண்காணித்துக்கொள்ளத் துவங்குகிறோம் என்கிறார்கள். இதனால் நாம் குற்றவாளிகளோ என்ற எண்ணம் நம்மிடம் இடம்பெறத் தோன்றுகிறது. ஆண்களை கவரும் உடல் தன்னிடம் இருப்பதையே பெண்கள் குற்றமாகக் கருதவைக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் தங்களை முழுவதும் ஆடைகளால் மறைத்துக்கொண்டு மறைந்து வாழவேண்டும் என்பது போன்ற சிந்தனைகள்கூட பரவலாயின. இன்றுவரை பாலியல் வன்கொடுமையை சந்தித்த பெண்ணையே குற்றவாளியாகப் பார்க்கும் பார்வையும் நிலவத்தானே செய்கிறது. தன் உடல் குறித்தும் தோற்றம் குறித்தும் ஒரு பெண் குற்றவுணர்ச்சி கொள்வது, நாம் குற்றவாளியாகும் தருணத்திற்கு நல்ல உதாரணம். பலரிடம், ஆண்களிடம்கூட, ஒரு இனம்புரியாத குற்றவுணர்ச்சி நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது.

நாம் நீதிபதியாகும் தருணம்

குற்றவாளிக் கூண்டிலிருந்தது தப்பவேண்டுமென்றால் நாம் நீதிபதியின் இருக்கையில் சென்று அமர்வதுதான் புத்திசாலித்தனம். அதனால் பலரும் தாங்கள் நீதிபதிகளாகி பிறரின் குற்றங்களுக்கு நீதி வழங்கத் துவங்கிவிடுவார்கள். என்னதான் இருந்தாலும் அவன் இப்படி செய்திருக்கக்கூடாது என்பார்கள். தங்களாலான சிறு தண்டனையை, சில சமயங்களில் பெரிய தண்டனையைக்கூட பிறருக்குத் தரலாம் என நினைப்பார்கள். பேச மறுப்பார்கள். உறவைத் துண்டிப்பார்கள். விலகிப் போவார்கள். ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண மறுப்பார்கள்.

நாம் முதலில் கூறிய கண்காணிப்புக் கோபுர உருவகத்தைப் பின்பற்றினால், அந்த கோபுரத்தின்மீது ஏறி பிறரை கண்காணிக்கத் துவங்குவதுதான் நீதிபதியாகும் தருணம். நம்மிடம் உள்ள பிரச்சினையை ஒருவர் கண்டு சொல்லும் முன்பாகவே நாம் அவர்களிடம் உள்ள பிரச்சினைகளைக் கண்டு பேசிவிடவேண்டும். நம்மை நீதிபதியாக பாவித்துக்கொண்டு விட்டால் நம் குற்றவுணர்ச்சியை குறைத்துக்கொள்ளலாம்; தவிர்க்கலாம். ஒருவிதத்தில் இது குற்றவுணர்ச்சியின் மறுபக்கமாக இருந்தாலும்கூட வசதியானது. சுயநியாயப்பாடு சுகமாக இருக்கவேண்டுமென்றால் பிறரை குற்றவாளியாக்கி தீர்ப்பு எழுதவேண்டும்.

சதாசர்வ காலமும் பிறர் குற்றங்களை விமர்சித்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கும் மனநிலை மிக ஆபத்தானது. குற்றவுணர்ச்சியைவிட ஆபத்தானது. பிறர்மீதான பரிவை துடைத்தெறியும் குணம் இது. தர்ம அடி மனப்பான்மை; லிஞ்சிங் எனப்படும் கும்பல் கொலைகள் எல்லாம் இப்படிப்பட்ட பரிவற்ற மனநிலையிலிருந்துதான் பிறக்கின்றன. சுயநியாயப்பாடு எந்த குற்றத்தையும் செய்ய நம்மை தயார் செய்துவிடும். அது மிகப்பெரிய அறவீழ்ச்சியாகும். அந்த வகையில்தான் மானசீக குற்றவாளிக் கூண்டைவிட ஆபத்தானது நம் மனதில் உருவகம் செய்துகொள்ளும் நீதிபதி ஆசனம்.

நாம் வக்கீலாகும் தருணம்

நாம் நேரடியாக தொடர்புகொள்ளாத செயல்களில் நாம் குற்றவாளியாகவோ, நீதிபதியாகவோ உணராமல் இரண்டு பக்கமும் உள்ள நியாயங்கள் அலசி நியாயம் பேசுவதில் சுகம் காணுகிறோம். பொதுவாக, வம்பு பேசுபவர்களின் இன்பம் இதுதான். ‘தெரியுமா உனக்கு?’ என்று கேட்டு செய்தி சொல்பவர்கள் ஒரு விரும்பத்தகாத நடத்தையை கூறுவார்கள். கேட்பவர் அதை கண்டித்துப் பேசினால் சொன்னவரே அதற்கு மாறாக நில நியாயங்களைச் சொல்வார்கள். “என்னது கட்டின பொண்டாட்டிய வீட்டைவிட்டு போகச் சொல்லிட்டானா, படுபாவி” என்றால் மற்றவர் “பாவம், அவள் எந்த அளவு புண்படுத்தியிருந்தால் அவன் இந்த அளவு போவான். ஆனாலும் அவளுக்கு வாய் அதிகம்” என்று எதிர்வாதம் கூறுவார். இவர் மீண்டும் “இருக்கலாம். அதற்காக திருப்பிப் பேசலாம், அடிக்கலாம். ஆனால் வீட்டைவிட்டு போகச் சொல்வது மகாபாவம்” என்பார். இப்படியான உரையாடலில் சமயத்தில் அவர்கள் இடங்களை மாற்றிக்கொண்டும் பேசுவார்கள். நியாயம் பேசுவதில்தான் ருசியே தவிர, யார் நியாயம் என்பது இரண்டாம்பட்சம்தான்.

இந்த வக்கீலாகும் தருணம் என்பது நம்மை குற்றவாளிக் கூண்டு, நீதிபதி ஆசனம் இரண்டிற்கும் தயார் செய்வது. உதாரணமாக, ஒரு பிரச்சினையில் நாம் நம் தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்போம். அடுத்தவர் நாம் எதிர்பார்த்த அளவு இறங்கிவரவில்லையென்றால், பதிலுக்கு அவர்மீது கடுமையாக குற்றம்சாட்டி பேசத் துவங்கிவிடுவோம். இரண்டு பக்கமும் நியாயம் பேசும் ஆற்றல் என்பது மிகவும் அவசியமானது. அப்போதுதான் நாம் எங்கே நிற்க நேரிட்டாலும் திறம்படச் சமாளிக்கலாம்.

ஒவ்வொரு அலுவலகத்திலும், கல்லூரியிலும், பள்ளியிலும், கிராமத்து மந்தைகளிலும், நகரத்து சங்கங்களிலும், ஒவ்வொரு வீட்டிலும், வீதியிலும், குடும்பத்திலும் உறவுகள் தொடர்ந்து உரசலுக்குள்ளாகிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் வாழ்க்கையும் தொடர்ந்து சென்றுகொண்டுதான் இருக்கிறது. சமாதானம் ஏற்படுகிறது. மகிழ்ச்சியான சகவாழ்வும் சாத்தியமாகத்தான் செய்கிறது. அது எப்படி என்பதைக் காண வேண்டும்.

வாழ்க்கை என்பது வழக்கு அல்ல

வாழ்வின் ஆகச்சிறந்த தர்மம், அதன் செயல்வடிவத்தில்தான் இருக்கிறது. செயலுக்கான, கூட்டுச் செயல்பாட்டிற்கான தேவைதான் உறவுகளைப் பாதுகாக்கிறது. எத்தனை உரசல்கள் ஏற்பட்டாலும் மறந்து, மன்னித்து பயணிக்க வைக்கிறது. சகவாழ்வு நம்மீது நிர்பந்திக்கப்படுவதாகத் தோன்றினாலும் அது ஒருவகையில் பழகியும் போகிறது. அனுசரிப்பு என்ற குணம் தலையெடுக்கிறது. ‘சரி’ அவங்கதான் இப்படின்னா, நீயுமா. அனுசரிச்சு போங்க, என்ற குரல் கேட்கிறது.

வாழ்வின் செயல்வடிவம் அன்றாடத்தன்மையில் புதைந்துள்ளது. தினசரி இருப்பிற்கான செயல்களில் ஈடுபடுகிறோம்; மற்றவர்களின் உடனிருப்பை ஏற்றுக்கொள்கிறோம். ஒருவர் செய்த தவறை மன்னிக்க முடியாவிட்டால் மறக்கிறோம். மறக்க முடியாவிட்டால் மன்னிக்கிறோம். இரண்டுமே நடக்காவிட்டால் தொடர்ந்து வாழ்வது சாத்தியமில்லை. அதனால் மறதியே வாழ்வின் ரகசிய ஆற்றலாக இருக்கிறது. ஒரு சேஃப்டி வால்வாக செயல்படுகிறது. சுத்தமாக மறக்காவிட்டாலும் நாம் விரும்பி நினைவுபடுத்திக்கொள்ளக் கூடாது. அதனால்தான் ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்று சொல்வார்கள்.

பொதுவாக, பள்ளிகளில் ஒரு கல்வியாண்டு துவங்கும்போது வகுப்பில் எதிரிகளாக இருப்பவர்கள் அந்த ஆண்டு முடியும்போது நண்பர்களாகிவிடுவார்கள். அதேபோல நண்பர்கள் எதிரிகள் ஆவதும் உண்டு. உறவுகளின் கோலங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அலுவலகங்களிலும் இதே நிலைதான். நாம் மாற்றலாகி வந்தபின் பல ஆண்டுகள் கழித்து பழைய அலுவலகத்திற்குச் சென்றால் அங்கே எலியும் பூனையுமாக இருந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். நமக்கு டீ வாங்கி கொடுப்பார்கள். நமக்கே குழப்பம் வரும். நம் நினைவுதான் பிசகிவிட்டதா என்று. இப்படியாக வாழ்க்கையில் ‘நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர பகைவர்களும் கிடையாது’ என்றபடிதான் சென்றுகொண்டிருக்கும். இந்த சொலவடை அரசியலுக்காக சொல்லப்படுவதற்குக் காரணம், அரசியல் அதிகம் செயல்பூர்வமானது, அதிகாரத்தைச் செயல்படுத்துவது என்பதால்தான். செயல்தான் உறவுகளை இணைக்கும் என்பதால் எங்கெல்லாம் வாழ்க்கை செயல்பூர்வமாக இருக்கிறதோ அங்கெல்லாம் இணைப்பு தோன்றும்.

இதையெல்லாம்விட ஒரு பெரிய ரகசியம் இருக்கிறது. அது என்னவென்றால், நாம் முதலில் பயன்படுத்திய நீதிமன்ற உருவகம் கற்பிதமானது. வாழ்க்கையில் நீதிமன்றங்கள் கிடையாது. நமக்கு நம் உறவுகளில் ஏற்படும் அன்றாட உரசல்கள், சிக்கல்களுக்கு எந்த தீர்ப்பையும் யாரும் வழங்கமாட்டார்கள். பிரச்சினை அதிகமாகி நாமாக பஞ்சாயத்தைக் கூட்டினால்தான், நீதிமன்றம் போனால்தான் வழக்குபோல ஒன்று நடக்குமே தவிர, அன்றாடப் பிரச்சினைகளுக்கு யாரும் தீர்ப்போ, தண்டனையோ வழங்க முடியாது. நம்மை ஒருவர் புண்படுத்தினால், நாம் மன்னிக்கலாம், பொருட்படுத்தாமல் விடலாம், பதிலுக்குப் புண்படுத்தலாம். இப்படியாக, பெரும்பாலும் உறவுகளுக்குள்ளேயே உரசலும் ஏற்பட்டு, தீர்வுகளும் ஏற்பட்டு, காயங்களுக்கு களிம்புகளும் போடப்பட்டுவிடும். எவ்வளவுதான் நியாயம் பேசினாலும் அவரவர் பிரச்சினையை அவரவர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். பல சமயங்களில் நீதிமன்றமே பேசித் தீர்த்துக்கொள்ளச் சொல்வதும் உண்டு. அதை ஆர்பிட்ரேஷன் என்பார்கள். வாழ்வின் தர்மம் செயல்பூர்வமான சகவாழ்வுதானே தவிர வழக்குகளோ, தீர்ப்புகளோ கிடையாது. இதை உணர்வதே முதிர்ச்சி என்பார்கள்.

எப்போதுமே சண்டையிடும் இருவர், தவறோ குற்றமோ செய்தவரும், அதனால் பாதிக்கப்பட்டவரும் அவர்களுக்குள்ளாகவே ஒரு தீர்வுக்கு வருவதுதான் வாழ்க்கை. அதைவிடுத்து, மூன்றாவது மனிதர் தீர்ப்புக்குப் போவது வழக்கு. வாழ்க்கையை வழக்காக குழப்பிக்கொள்வதால்தான் பலர் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாகிறது. வாழ்க்கை வழக்கல்ல என்று புரிந்துகொள்பவர்களே சுலபத்தில் மன்னித்தும், மறந்தும், தண்டித்தும், கண்டித்தும் உறவுகளைக் கடந்து செல்கிறார்கள்.

ஒரு தரிசனமிக்க, செயல்பூர்வமான மனிதருக்கு யாருடனும் வழக்காடிக் கொண்டிருக்க நேரம் இருக்காது. அடுத்ததாக வாழ்வை மேம்படுத்த என்ன செய்யலாம் என்றே சிந்திக்கத் தோன்றும். ஒரு கிருஷ்ணம்மாள் ஜெகதீசனோ, பேராசிரியர் பிரபா கல்விமணியோ பிறரை குற்றம் சொல்வதிலோ, தங்களை நியாயப்படுத்திக் கொள்வதிலோ நேரம் செலவிடுவதில்லை. அடுத்து செய்வதற்கு ஏதோவொரு வேலை அவர்களுக்கு இருக்கிறது. விமர்சனத்தையே தொழிலாகக் கொண்டவர்கள்கூட, விமர்சித்த கணமே அதைக் கடந்து சிந்தனையைக் கொண்டு செல்லவேண்டுமே தவிர அதிலேயே தேங்கி நிற்கக்கூடாது. விமர்சனமும் ஒரு சிந்தனை நிகழ்த்துதல்தானே தவிர வழக்கு கிடையாது.

மூன்றாம் பகுதி: வாழ்வின் வக்கரிப்பே பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள், அதன் ஆங்க்கர் எனப்படும் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன், பங்கேற்பாளர்கள், ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அது வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது; வாழக் கற்றுக்கொடுக்கிறது; புதிய அனுபவத்தை, புரிதலைத் தருகிறது என்றெல்லாம் கூறுகிறார்கள். மற்ற மொழிகளைவிட தமிழில் இந்த மீக்கூற்றுகள் அதிகமாகவே உள்ளனவோ என்று தோன்றுகிறது. ஆனால் இது சிறிதும் உண்மையல்ல என்பதுடன், அப்படி பார்வையாளர்களை நம்பவைப்பது பெரும் தீங்கையே சமூகத்திற்குச் செய்கிறது. ஏன்? என்று பார்ப்போம்.

முதலில் இது ஒரு விளையாட்டு என்கிறார்கள். அதாவது, வெற்றி – தோல்வி உள்ள விளையாட்டு. வெற்றிக்காக போட்டியிடும் விளையாட்டு. இந்த விளையாட்டில் ஒருவர் இறுதியாக வெற்றி பெறுவார். இந்த விளையாட்டில் எப்படி வெற்றி பெறுவது? எந்த திறமைக்காக வெற்றி பெறுவது என்பதே முக்கியக் கேள்வி. அதற்கான பதில், ஒருவர் தொடர்ந்து அந்த விளையாட்டில் நீடிக்க வேண்டும் என்பதுதான். அதாவது, அந்த வீட்டில் தொடர்ந்து வாழவேண்டும். நம்முடன் இருப்பவர்கள் நம்மை வெளியேற்றுவதற்காக பரிந்துரை செய்யக்கூடாது. அப்படிச் செய்தாலும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் நாம் தொடர்ந்து நீடிக்க நமக்கு வாக்களிக்க வேண்டும். இறுதிவரை நீடிக்கும் நால்வரில் அல்லது இருவரில் ஒருவரை பார்வையாளர்கள் வாக்களித்து வெற்றியாளராகத் தேர்வு செய்வார்கள்.

நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தும், அதாவது குளிப்பது, காலைக்கடன் கழிப்பது தவிர மற்ற அனைத்தும் காமிராக்களால் கண்காணிக்கப்படும், பதிவு செய்யப்படும். அவற்றில் சில காட்சிகளைத் தொகுத்து மக்களுக்குக் காட்டுவார்கள். எனவே நம் செயல்கள் பிற போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நம்மீது நல்ல எண்ணம் தோன்றும்படி இருக்க வேண்டும். நம்மை அவர்கள் ஆதரிக்க வேண்டும். அப்படி அனைவர் ஆதரவையும் பெற்றால் தொடர்ந்து நிகழ்ச்சியில் நீடித்து இறுதியில் வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்படுவோம்.

நிகழ்கலை கோட்பாடுகள் கூறுவதுபடி பாவமும், பாவனையும் ஒன்றா இல்லையா என்று சதா பரிசீலிக்கிறோம், விசாரணை செய்கிறோம். நாம் உண்மையிலேயே எப்படி உணர்கிறோம் என்று நம்மையே கேட்டுக்கொள்ளத் துவங்குகிறோம். நம் சிரிப்பையும், அழுகையையும் நாமே ஐயுறுகிறோம். இது நமக்காகவே நம்மால் நிகழ்ந்ததா அல்லது பிறர் நம்மிடம் தோற்றுவித்ததா என்றும்கூட யோசிக்கிறோம். தன் உடல் குறித்தும் தோற்றம் குறித்தும் ஒரு பெண் குற்றவுணர்ச்சி கொள்வதுபோலத்தான். இந்த நிகழ்ச்சியின் ஆதாரப் பிரச்சினை இப்படியான விசாரணைகள், சுய விசாரணைகள்தான்.

இந்த நிகழ்ச்சி குறித்த பல விமர்சனங்கள் அது தொலைக்காட்சி நிர்வாகத்தால் ஓரளவு வழிநடத்தப்படுகிறது என்பதுதான். அதாவது, நீங்கள் இருவரும் காதலிப்பதுபோல நடியுங்கள், நீங்கள் இருவரும் சண்டையிடுவதுபோல நடியுங்கள் என்று நிரல் / ஸ்கிரிப்ட் ஒன்றைத் தருகிறார்கள் என்ற ஐயம் பரவலாக இருக்கிறது. இதற்குப் பலரும் ஸ்கிரிப்ட் செய்தால் இவ்வளவு இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது. எனவே நிகழ்வுகள் தானாகவேதான் நிகழ்கின்றன என்று சொல்கிறார்கள். கிரிக்கெட் மேட்ச்சில் அவுட் ஆனால் அதற்கு பெட்டிங் காரணமா என்று யோசிப்பதைப் போல இங்கேயும் நிகழ்வது ‘உண்மையாகவே’ நிகழ்கிறதா என்பது ஒரு பிரச்சினையாகிறது.

உண்மையில் இந்த ஸ்கிரிப்ட்டா, இல்லையா என்பது முக்கியமான பிரச்சினையல்ல. அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் அதைவிட பெரிய பிரச்சினை ஒரு மெடாஸ்கிரிப்ட் இருக்கிறது. இது எழுதப்படாதது. அது என்னவென்றாலும் எல்லோரும் காமிராவின் முன்னால் தங்களை ஒரு குறிப்பிட்டவிதத்தில் நிகழ்த்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. எனவே, மணமாகாத பல ஆண்களும், பெண்களும் இருந்தால் யாராவது இருவர் தங்களுக்குள் காதலை வெளிப்படுத்திக்கொள்வதன் மூலம் தங்களை நிகழ்த்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கத்தான் செய்வார்கள். இது உண்மையா, பொய்யா, நீடிக்குமா நீடிக்காதா என்பதில் எல்லாம் பொருளில்லை. அந்த நேரத்தில் இந்த பாவங்களும், பாவனைகளும் வெளிப்படுகின்றன என்பதுதான் முக்கியம். அதேபோல ஒருவர் அதிகாரம் செய்பவராக, அதிகம் சண்டையிடுபவராக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதும் ஒரு சாத்தியம்தான். இதையும் யாரேனும் தேர்ந்தெடுப்பார்கள். விதிகளுக்குக் கட்டுப்படாத சுதந்திரப் பறவை என்ற வெளிப்பாடும் சுவாரசியமானது. அதையும் ஒருவர் தேர்ந்தெடுப்பார். இப்படியாக, தங்களை காமிராவின் முன்னால் நிகழ்த்திக்கொள்வதுதான் விளையாட்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை அவர்கள் ‘இயல்பாக’ காமிராவை மறந்துவிட்டுச் செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். ஏனெனில் பார்வையாளர்களே இறுதியில் நீதிபதிகள். எனவேதான் ஒரு மெடாஸ்கிரிப்ட் என்பது பிக்பாஸ் வீட்டில் வசிக்கும்போது செயல்படத் துவங்கிவிடுகிறது. இது பங்கேற்பாளர்களே எழுதிக்கொள்வதான பாத்திரங்களாக இருந்தாலும் இதன் சாத்தியங்களுக்கு சில வகைமாதிரிகள்தான் இருக்கின்றன. சண்டைக்கோழி, சமாதானப்புறா, பலவீனமானவர், உறுதியானவர், உண்மையானவர், போலியானவர் என்றெல்லாம் வகைமாதிரி பாத்திரங்கள் உருவாகிவிடும்.

இந்த மெடாஸ்கிரிப்ட்டின் மற்றொரு முக்கியமான அம்சம், காட்சித் தொகுப்பு. இருபத்து நான்கு மணி நேரம், முப்பது காமிராவோ ஐம்பது காமிரோவோ ஷூட் செய்தால் பல நூறு மணி நேர பிம்பங்கள் கிடைக்கும். அதிலிருந்து ஒரு மணிநேரத்திற்கான பிம்பங்கள் தொகுக்கப்பட்டு பார்வையாளர்களுக்குக் காட்டப்படும். அனைவரும் சேர்ந்திருக்கும் தருணங்கள், டாஸ்க் எனப்படும் சவால் விளையாட்டுகள், சமையல் சாப்பாடு, துப்புரவு செய்தல் தவிர கொஞ்சம் தமக்குள் கூடிப்பேசும் காட்சிகளும் வரும். இதில் இடம்பிடிக்கும்படி சிலவற்றை செய்வதும் அவசியம். சும்மா படுத்துக்கொண்டு காலை ஆட்டிக்கொண்டிருந்தால் காட்சியிலும், மக்கள் மனதிலும் இடம்பிடிக்க முடியாது. ரொம்பவும் துருத்திக்கொண்டு செயல்பட்டாலும் அது தெரிந்துவிடும். எனவே, ஓவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை திறம்பட வடிவமைத்துக்கொள்ள வேண்டும். இப்படியாக, ஒரு ஸ்கிரிப்டை நோக்கியே பிக்பாஸ், நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் செயல்படுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து ஸ்கிரிப்டை உருவாக்குகிறார்கள். ஆனால் அதை ‘இயல்பு’ வாழ்க்கை எனவும், அவர்களுடைய இயற்கையான, இயல்பான சுபாவம் வெளிப்படுவதாகவும் நினைக்கிறார்கள்.

இப்படி மனிதர்களை, அவர்களின் சேர்ந்தியங்கும் திறனை நுட்பமாக ஆராய்வது, செதுக்குவது என்பது முதலீட்டியத்தின் முக்கியமான பரிமாணம். இதை நுண் மேலாண்மை, மைக்ரோ மேனேஜ்மெண்ட் என்பார்கள். இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள், மென்பொருள் துறை, விற்பனை நிலையங்கள் ஆகியவையெல்லாம் தங்கள் பணியாளர்களின்  ‘இயல்பான’ ஆற்றல்களைச் செதுக்கி அவர்களிடமிருந்து அதிகபட்ச உற்பத்தியை ஈட்ட விரும்புகின்றன. இவை சகவாழ்வை வலியுறுத்தும் அதே நேரத்தில், வாழ்க்கையை வெற்றியை நோக்கிய போட்டியாக மாற்றுகின்றன. டீம் லீடர் பதவிகள், பிராஜக்ட் மேனேஜர் பதவிகள், பரிசுகள், ஊதியங்கள் என ஒரு பணியிடம் பரமபதமாக மாறுகிறது. உங்களுடைய ஒரு தவறான தருணம் உங்கள் முன்னேற்றத்தை பல ஆண்டுகள் தேக்கிவிடலாம். ஒரு சரியான தருணம் உங்களை ஏணியில் பலபடி ஏற்றிவிடலாம். இந்தச் சூழலில் ஏற்படும் மன அழுத்தங்கள், அவற்றிலிருந்து விடுபட கேளிக்கைகள், போதைப்பொழுதுகள் என்ற தப்பிக்கும் தருணங்கள், உறவுமுறைச் சிக்கல்கள் என பதட்டம் நிறைந்த ஆனால் ஆடம்பரமான ஒரு வாழ்க்கை உருவாகிறது. ஆரம்பகால வேட்டைச் சமூகங்கள் ஆபத்தானவை; ஆனால் அவை எளிமையானவை. அவற்றில் உளவியல்ரீதியான நுண்ஆதிக்கங்கள் கிடையாது. ஆனால் இன்றைய கண்காணிப்புக் கோபுர வாழ்வில், உள்வயப்பட்ட உற்றுநோக்கலில் யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

இந்த நசிவுக் கலாசாரத்தை, உறவுகள் முதலீட்டிய பண்டமயமாதலைத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி பெருமிதத்துடன் வழங்குகிறது. வாழ்க்கையை வழக்காக்கும் நம் பலவீனம் நம்மை அதை ஆதரிக்கச்செய்கிறது. குற்றவாளியாகும் தருணத்தை ரசிப்பவர்கள் சில பாத்திரங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு குற்ற உணர்ச்சி கொள்ள முடிகிறது. நீதிபதியாகும் தருணத்தை ரசிப்பவர்கள் தினசரி வாக்களித்து மகிழலாம்.  ‘ஆஹா, இதுவல்லவோ மக்கள் சக்தி’ என பெருமை கொள்ளலாம். இது இரண்டையும் விட வக்கீலாகும் தருணத்திற்குத்தான் கொண்டாட்டம். ஒன்றரை மணி நேரம் இரவு பார்த்துவிட்டால் நாள் முழுவதும் நியாயம் பேசி மகிழ எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். முகநூலில் நியாயம் பேசலாம். அலுவலகத்தில் பேசலாம். பள்ளியில் பேசலாம். கல்லூரியில் பேசலாம். பேருந்தில் பேசலாம். ரயிலில் பேசலாம். டீக்கடையில் பேசலாம். பிக் பாஸ். பிக் பாஸ் என்று எல்லோரும் கண்காணிப்புக் கோபுரத்தில் பாய்ந்து பாய்ந்து ஏறலாம். வாழ்க்கையை வழக்காக்கி மகிழ்ந்து பூரிக்கலாம்.

வன்முறையின் வர்ணங்கள்

மானுட சமூகம் என்றுமே வன்முறையின் வட்டத்திற்குள்தான் இருக்கிறது. வன்முறையின் வர்ணங்கள் மாறுகின்றனவே தவிர வன்முறையற்றுப் போவது என்பது சாத்தியமில்லை. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையை தவிர்த்தது, ஆன்ம பலமே அரசியல் பலம் என்ற எண்ணத்தை உருவாக்கியது, காந்தியின் சாதனை. ஆனால் அவரால் தவிர்க்கமுடியாமல் மிகப்பெரிய மத அடையாளவாத வன்முறை உருவாகி, இந்திய சுதந்திரத்தை ரத்தக்களறியில் பிறந்ததாக மாற்றியதை என்னவென்று சொல்வது? இப்படியாக மனிதனின் சகமனிதனை அகற்றும் வன்முறை, எலிமினேட் செய்யும் வன்முறை என்பது ஆதிமனிதனிடம் தோன்றி இன்றுவரை தேசிய ராணுவ வன்முறையாக நீடிக்கத்தான் செய்கிறது. எல்லா நாகரிக தேசங்களும் கொலைக்கருவிகளை உற்பத்தி செய்யவே மிக அதிகமான செல்வத்தைச் செலவிடுகின்றன என்பதை எண்ணிப்பார்த்தால் தெரியும், நம் மானுடப் பண்பாட்டின் உண்மைச் சொரூபம்.

ஆனால் இந்த கொலையென்னும் எலிமினேஷனைவிட பன்மடங்கு கூறான ஆயுதம் உளவியல்ரீதியான வன்முறை. தனக்கான அங்கீகாரம் மறுக்கப்படுவதை கொலை செய்யப்படுவதைவிட பயங்கரமானதாகவே மனிதர்கள் உணர்கிறார்கள். நம் காலம் முதலீட்டிய நவீனத்தின் காலம். இங்கே கொலைசார்ந்த வன்முறை தேசிய அரசுகளின் உரிமையாக மாறிவிட்டது. அதனால் குடிமைச் சமூகத்தில் வன்முறை உளவியல் கண்காணிப்பாக, குற்ற உணர்ச்சி தூண்டலாக, போட்டிகளாக, அவமானங்களாக, வெற்றி தோல்விகளாக பலவிதமான வர்ணங்களில் வெளிப்படுகிறது.

மிஷேல் ஃபூக்கோ என்ற பிரெஞ்சு சிந்தனையாளர் குறித்து தமிழில் பல பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. சில மொழிபெயர்ப்புகளும் நிகழ்ந்துள்ளன. அவருடைய மிகப்பெரிய பங்களிப்பே எப்படி உடல்ரீதியான வன்முறை, சமூக கட்டமைப்பின், உளவியலின் வன்முறையாக மாறுகிறது என்பதை ஆராய்ந்ததுதான். எனவேதான் அவர் இறையாண்மையுள்ள அரசு (Sovereign State) என்பதைவிட, மக்கள் வாழ்க்கையை நிர்வகிப்பது (Governmentality) என்பதை நவீன அரசின் முக்கியப் பண்பாக கணித்தார். கண்காணிப்புக் கோபுரத்தின் உருவகமாகக் கொண்டு அரசும் சமூகமும் மாறுவதை விரிவான ஆய்வுகளில் வெளிப்படுத்தினார்.

ஃபூக்கோ மனிதனிடம் உள்ள மிருக உணர்வுகளை, நாகரிகம் பண்படுத்தி மனித உணர்வாக மாற்றியுள்ளது என்ற வழக்கமான பார்வையை ஏற்கவில்லை. நாகரிகம் என்ற பெயரால் வன்முறையின் வர்ணங்கள் மாறி, மக்கள் புதியதாக கட்டமைக்கப்படுகிறார்கள் என்றுதான் பார்த்தார். இத்தனைக்கும் அவர் ஜாதீய சமூகத்தைக் கூட ஆய்விற்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும்கூட மனித இயல்புக் கட்டமைப்பின் ஆபத்துகளை தெளிவாக உணர்ந்தார். இதனால் அவர் நாகரிகத்திற்கு எதிரானவர் என்றெல்லாம் பழிக்கப்பட்டதும் உண்டு. ஆனால் இந்த மிருக உந்துதல் என்ற கற்பிதம் மனிதர்களை கட்டமைக்கவே உருவாக்கப்பட்டது என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்.

உதாரணமாக, மக்கள் எல்லோரும் வெற்றியாளராக ஆசைப்படுகிறார்கள் என்ற கற்பிதத்தை நாம் ஏன் நம்புகிறோம்? பெரும்பாலான மக்கள் அப்படியெல்லாம் வெற்றியாளராக வேண்டும் என்று துடிப்பதில்லை. ஜக்கி வாசுதேவ்தான்  ‘அனைத்துக்கும் ஆசைப்படு’ என்று பிரச்சாரம் செய்கிறார். மிருகங்கள் இரைதேடும், இரையுண்ட பின் அதன்பாட்டிற்கு இருக்கும். இனப்பெருக்கம் செய்யும். ஆனால் மனிதனை அப்படியிருக்க விடுவதில்லை நாகரிகம். அதிகாரத்தை ஆதிக்கமாக்க நிலைநிறுத்தும் முயற்சியில் மனிதனை எப்போதும் செலுத்துகிறது.

நாம் நவீன கால உளவியல் வன்முறைகளை புரிந்துகொள்ளும்போது. அதன் நவீன ஆதிக்க வடிவங்களை காணும்போது, நாம் எப்படி கட்டமைக்கப்படுகிறோம் என்பதையும் விமரசிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். நாம் எதை பெருமிதம் என்று நினைக்கிறோம், எதை இழிவு என்று நினைக்கிறோம், இந்த எண்ணங்கள் நம்மிடம் எப்படி உருவாகின்றன என்பதையெல்லாம் விமர்சனபூர்வமாக ஆராய கற்க வேண்டும்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதை எலிமினேஷன் என்று சொல்கிறார்கள். முதல் சீசனில் இறுதி எபிசோடில் கஞ்சா கருப்பு எலிமினேஷன் என்றால் என்னவென கேட்டபோது கமல் சிரித்தபடியே “எலிகளுக்கும் நமக்கும் பொதுவானது” என்றார். போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்படுவது ஏன் எலிகளுக்கும் நமக்கும் பொதுவானது என்று நாம் கேட்டால் நகைச்சுவை உணர்வு போதாமையைக் குறிப்பதாக அவர் நினைக்கலாம். ஆனால் அவரே அறியாமல் எலிமினேஷன் என்பதன் உடலியல் அர்த்தத்தை, கொல்லப்படுவதை சுட்டுகிறாரோ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் அனைவரும் தனியாக ரகசிய அறைக்குச் சென்று யாரை எலிமினேட் செய்யவேண்டும் என்று ஒரு தேர்வைச் சொல்வார்கள். அதற்கான காரணமும் சொல்வார்கள். இது, பிற போட்டியாளர்களுக்குத் தெரியாது. பார்வையாளர்களுக்குத் தெரியும். அதிகம் பேர் குறிப்பிடும் மூவரோ, நால்வரோ எலிமினேஷன் பட்டியலில் இருப்பதாக அறிவிக்கப்படுவார்கள். போட்டியாளர்களுக்கும் அது ஒரு எச்சரிக்கையாகத் தெரிவிக்கப்படும். அவர்கள் ஒவ்வொருவரையும் காப்பாற்ற விரும்பும் பார்வையாளர்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். யார் குறைந்த வாக்குகள் பெறுகிறாரோ அவர் வெளியேற்றப்படுவார். தன் பெயர் எலிமினேஷனுக்கான பட்டியலில் இடம்பெறுவதைக் கண்ட போட்டியாளர்கள் யாரெல்லாம் தன் பெயரை பரிந்துரை செய்திருப்பார்கள் என்பதை யூகிக்கத்தான் முடியும். தன்னுடன் இருக்கும் அனைவரையுமே அவர் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்க முடியும். தன்னை அகற்றுபவர்கள், தன்னை விரும்பாதவர்கள் யாராக வேண்டுமானால் இருக்கலாம் என்ற எண்ணம் அவர்களை துன்புறுத்தத்தானே செய்யும்.

போட்டியாளர்கள் யாரையாவது எலிமினேட் செய்யச் சொல்வதுடன் காரணங்களையும் சொல்லவேண்டும் என்னும்போது நீதிபதி, குற்றவாளி, வக்கீல் விளையாட்டு தொடங்குகிறது. எல்லா நேரமும் போட்டியளார்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்வதும், பிறரை விமர்சிப்பதுமாக ‘ஆட்டம்’ சூடுபிடிக்கிறது. பலரும் இந்த அழுத்தத்தில் மனமுடைந்து அழுவது சகஜம். ஒருவர் சுவர் ஏறிக்குதித்து தப்ப முயன்றார் (இதுபோன்ற சம்பவம் இந்தியிலும் நடந்ததாக கேள்விப்பட்டேன். ஸ்கிரிப்ட் என்று வாதிடுபவர்கள் இதெல்லாம் ஸ்கிரிப்டில் ஒரு பகுதி என்றார்கள்). சமீபத்தில், மதுமிதா என்ற பெண் தன் கையை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்து வெளியேற்றப்பட்டார். இது ஸ்கிரிப்ட் போலத் தெரியவில்லை.

நிஜ வாழ்க்கையிலும் எவ்வளவோ போட்டி பொறாமைகள், புறங்கூறல்கள், பழி சொல்லல்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் இதுபோல எலிமினேஷன் கிடையாது. யாரும் வாக்களித்து தீர்ப்புக் கூறுவதில்லை. கார்ப்பரேட் அலுவலகத்தில் வெளியேற்றப்படுவது கூட வேலையில் எவ்வளவு திறன் வெளிப்படுகிறது என்பது குறித்த மதிப்பீடாகத்தான் இருக்கும். ஆனால் பிக்பாஸில் வெளியேற்றப்படுவது பலவிதமான குணவியல்புகள் குறித்த மதிப்பீடுகளால் நிகழ்கிறது. மிக மோசமான கார்ப்பரேட் அலுவலகத்திலும் உற்பத்தி என்று ஏதோவொன்று இருக்கும். பிக்பாஸில் உறபத்தியே இந்த புறம்கூறும் பொழுதுபோக்கும், நியாயம் பேசும் வாய்ப்புகளும்தான். பிறர்மீது ரகசியமாக குற்றம் சொல்லி அவர்களை எலிமினேட் செய்வதன் குரூரம் விளையாட்டின் முக்கியப் பகுதி.

நாம் காமிராவாக மாறலாமா?

காமிரா கற்பனையான நிகழ்வுகளைப் படம்பிடித்து சினிமாவாக்கலாம். அல்லது உண்மையான அபூர்வமான நிகழ்வுகளைப் படம்பிடித்து அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையும், பேச்சு நடவடிக்கைகளையும் பார்ப்பதற்கு உதவும்போது நம்முடைய நிலை என்னவாகிறது? மிகவும் வக்கிரமான, அடுத்த வீட்டுச் சண்டையை சுவற்றில் காதுவைத்துக் கேட்டு ரசிப்பதுபோன்ற மனநிலையைத்தானே உருவாக்குகிறது? அதைச் செய்துவிட்டு, பெருமையாக அதைக் குறித்து நியாயம் பேசுவதும், போட்டியாளர்களுக்கு வாக்களித்து பெருமைகொள்வதும் முற்றிலும் ஆரோக்கியமற்ற போக்குகள் அல்லவா?

நான் ஒரு அலுவலகத்தில் பணியாற்றியபோது, அங்கே இரண்டு ஊழியர்களுக்கு இடையே அதிகாரப் போட்டி இருந்தது. ஒருநாள், ஒருவருடன் நான் சென்றுகொண்டிருந்தபோது மற்றொருவர் எதிர்பட்டார். இருவரும் முகமலர்ச்சியுடன் முகமன் கூறி, நலம் விசாரித்துக்கொண்டனர். மற்றவர் கடந்து சென்றதும் இவர் மெல்லிய குரலில் அவரை மிக மோசமான பாலுறுப்பு, பாலியல் வசைமொழிகளைக் கூறி திட்டினார். அருகில் சென்று கொண்டிருந்த நான் அதிர்ச்சியடைந்து ‘ஏன், இப்படி திட்டுகிறீர்கள்’ என்று கேட்டேன். அவர் என்னை வியப்புடன் பார்த்து “நீங்கள் இப்போது அவனுடன் போய்க்கொண்டிருந்தால் அவன் இதைவிட மோசமாக என்னைத் திட்டுவதை கேட்பீர்கள். நீங்கள் ஏன் காமிராபோல இருக்கிறீர்கள்?” என்றார். நான் புரியாமல் ‘காமிராவா?’ என்று கேட்டேன். அவர் சொன்னார், “கிரிக்கெட்டில் முன்னமெல்லாம் அவுட்டா இல்லையா என்பதை அம்பயர்தான் சொல்வார். இப்போது காமிரா வந்தபிறகு அது மீண்டும் ரீபிளே செய்து அவுட்டா இல்லையா என்று சொல்கிறது. நீங்கள் அதைப்போல நான் கோபத்தில் திட்டுவதை அருகிலிருந்து கேட்டுவிட்டு ஏன் திட்டுகிறேன் என்று கேட்கிறீர்கள்” என்று சொன்னார். நான் அம்பயர்கூட இல்லை; சூப்பர் அம்பயர் காமிரா போல இருக்கிறேன் என்று அவர் சொன்னது எனக்கு பொட்டில் அறைந்தாற்போல இருந்தது. அவர்கள் புழங்கும் வெளியில் நாலு வசவுகளை போட்டியாளர்களைப் பார்த்துச்சொல்வது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்குப் புதியவனான நான், அவர் ஏதோ பெரிய வன்மமாக இருப்பதாக நினைக்கிறேன். இதைத்தான் காமிரா பொருள்வயப்படுத்துவதாக (Obejectification) சொல்வார்கள்.

நாம் நியாயம் பேசுதல், வாழ்க்கையை வழக்காக மாற்றுதல், குற்றவாளி-நீதிபதி-வக்கீல் பாத்திரமேற்றல், காமிராவாக மாறுதல், கண்காணிப்பு கோபுரமாக மாறுதல் ஆகிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்த நிகழ்ச்சியின்மூலம் ஆட்படுகிறோம் என்பதுதான் இதன் சமூக அவலம்.

இந்த நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள் இதெல்லாம் விளையாட்டுதானே, கடைசியில் எல்லோரும் அன்பாகப் பேசிக்கொள்கிறார்களே என்று கூறலாம். இது, கடினமான வாழ்க்கைச்சூழலை புரிந்துகொள்ள மக்களைத் தயார்ப்படுத்துகிறது என்று சொல்லலாம். மக்களின் மனோவியல் வாழ்க்கையை வழக்காக மாற்றாமல் இருக்க அவர்களுக்குத் தேவையான கலையும், இலக்கியமும் நெடுங்காலமாக படைப்பூக்கமிக்க மனங்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளன. இதுபோன்ற மலினமான சிறுபிள்ளைத்தனமான ரியாலிட்டி ஷோக்ககளால் வாழ்வை புரிந்துகொள்ளவேண்டிய அளவுக்கு கலாசார வறுமையில் தமிழ்ச் சமூகமில்லை.

இறுதியாக ஒன்று. அப்படியே ஏதோ விதவிதமாக நிகழ்ச்சிகளை உருவாக்க வேண்டிய தேவை தொலைக்காட்சி சேனல்களுக்கு இருப்பதாகக் கொண்டால்கூட இதுபோன்ற நிகழ்ச்சியை பதின்ம வயதுக்காரர்களைக் கொண்டு நடத்தினால் ஏதோ முதிராப் பருவத்து கோபதாபங்கள் என வைத்துக்கொள்ளலாம். நான் கூறும் தீய விளைவுகளும்கூட சிறுவயது முதிர்ச்சியின்மையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் குறைவாக இருக்கும். ஆனால் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட வயது முதிர்ந்த கலைஞர்கள் இதில் பங்கேற்பதும், சிறுபிள்ளைகள்போல உரசிக்கொள்வதும், உணர்ச்சிவசப்படுவதும், நான் வாழ்க்கையில் படிப்பினைப் பெற்றேன் என்று சொல்வதும் வாழ்க்கையையே கேவலப்படுத்துவதாக இருக்கிறது. சேரன் போன்ற முன்னணி இயக்குனர் பிக்பாஸ் வீட்டில் புதிய அனுபவங்களைப் பெற்றேன் என்று சொல்வதெல்லாம் பரிதாபமாக இருக்கிறது. ஏற்கனவே சொல்லியபடி அவர் படங்களின்மீது விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவின் பல அறிவார்த்தமான முயற்சிகளுக்குப் பின்னால் நின்ற கமல்ஹாசன் இது போன்ற முதலீட்டிய நச்சுக் கலாசார நிகழ்ச்சிக்கு முகம் கொடுத்து தாங்கி நிற்பது வருந்தத்தக்கதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.