ஏப்ரல் 23 உலக புத்தக தினம். புத்தக வாசிப்பை ஊக்குவிக்க யுனெஸ்கோஅமைப்பால் ஏற்படுத்தப்பட்ட தினம். புத்தகங்களின் அருமை குறித்து நினைவுகூர்ந்து பல நண்பர்கள் பதிவிடுவதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் இன்னும் சில ஆண்டுகளில் புத்தகங்கள் வாசிப்பதையே மக்கள் நிறுத்தி விடுவார்களோ என்ற பொதுவான ஒரு அச்சம் இங்கே நிலவுவதையும் உணர முடிகிறது. உண்மையிலேயே புத்தக வாசிப்பு குறைந்திருக்கிறதா, அப்படிக் குறைந்திருந்தால் அது குறித்து அறிவார்ந்த சமுதாயம் என்ன செய்ய வேண்டும், புத்தகங்களின் எதிர்காலம் என்ன என்பது போன்ற உரையாடல்கள் இந்தக் காலகட்டத்தில் அவசியமானவை.

நெட்ஃபிளிக்ஸ், கணினி விளையாட்டுகள், யூடியூப், ஸ்ம்யூல், டிக்டாக், சமூக வலைதளங்கள் என்று நமது கவனத்தையும் நேரத்தையும்கோரும் புதிய பொழுதுபோக்கு வடிவங்கள் ஒவ்வொரு நாளும் உருவாகத்தொடங்கிய பிறகு நம் வாழ்வில் புத்தகங்களுக்கான இடம் குறித்த ஒரு கேள்வி எழுகிறது. இது புத்தகங்கள் குறித்த கேள்வி மட்டுமல்ல. வாசிப்புக்கான நேரத்தை நம்மால் ஒதுக்க முடிகிறதா, அதற்கான ஒரு மனநிலையை இன்றைய வாழ்க்கை முறை நமக்கு அளித்திருக்கிறதா என்ற சுய அலசலும் கூட. புதிய பொழுதுபோக்கு வடிவங்கள் துரித உணவு மாதிரியானவை. விரைவில் செரித்து நமக்கு மயக்கத்தை ஊட்டக்கூடியவை. பெரும்பாலான மக்களின் விருப்பமாக துரித உணவுதான் இருக்கும். வாசிப்பு என்பது உடற்பயிற்சி போல. பழகவேண்டும். ஆரோக்கியமானது என்றாலும் முனைப்பு தேவைப்படும். முனைப்பு தேவைப்படும் எதையும் மனிதர்கள் அத்தனை எளிதில் தொடுவதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேதான் வருகிறது. அதன் பொருள் வாசிக்கத்தெரிந்தவர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது. அப்படியானால் புத்தகங்களைத் தேடுபவர்கள் அதிகரித்திருக்க வேண்டும். புத்தகங்களின் சந்தை பல மடங்கு உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் மூடப்படும் பதிப்பகங்களின் எண்ணிக்கைதான் உயர்ந்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவை மனித சமுதாயத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த போதும்கூட புத்தகங்கள் தனக்கான இடத்தை விட்டுவிடவில்லை. ஆனால் கணினி, இணையம், கைபேசி ஆகியவற்றின் மிகப்பெரிய தாக்கம் மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் புரட்டிப் போட்டது. தொலைத்தொடர்பு, வங்கிப் பரிமாற்றங்கள், வியாபாரம் செய்யும் முறைகள் என்று மனித வாழ்வின் அன்றாட நியமங்கள் அனைத்தும் மாறிப் போயின. இதற்குப் புத்தகங்களும் விதிவிலக்கல்ல.

ஆரம்பத்திலேயே கணினிகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட துறைகளில் பதிப்புத்துறைதான் முக்கியமான பங்கு வகித்தது. 1970ஆம் ஆண்டு டெஸ்க்டாப் பப்ளிஷிங் (டிடிபி) அறிமுகமானது. இதன்மூலம் சுலபமாகவும் எளிமையாகவும் அதே நேரம் முன்னெப்போதையும்விட அழகாகவும் புத்தகங்கள் வரத்தொடங்கின. ஆனால் புத்தகங்களின் வடிவம் மாறவில்லை. முதன்முதலாக பைபிள்கள் அச்சடிக்கப்பட்ட அதே வடிவத்தில்தான் புத்தகங்கள் தொடர்ந்து வெளிவந்தன. பல நூறு ஆண்டுகளாக இதே வடிவத்தில்தான் நூல்கள் வெளிவந்தன. ஏனெனில் அந்த வடிவத்தில் எந்தக் குறையும் இல்லை. மனிதர்கள் செப்புத்தகடுகளில் பட்டயங்களை செதுக்கியபோதும், பனை ஓலைகளைப் பயன்படுத்தியபோதும்கூட அதே வடிவம்தான். 90களில்தான் மின்னூல் என்ற வடிவம் பயன்பாட்டு அளவில் பேசப்பட்டது.

பெரும்பாலான துறைகளில் கணினி நுழைவதற்கு முன்பாகவே கணினிகளின் பாதிப்பால் காகித நூல்கள் மின்னணு வடிவில் மாறும் என்று கணித்தார்கள் மின்னணு விஞ்ஞானிகள். இது தொடர்பான விவாதங்கள் 1930களிலேயே தொடங்கிவிட்டன என்றாலும் 1971இல் உருவாக்கப்பட்ட ப்ராஜக்ட் கூட்டன்பெர்க்தான் பெரிய அளவில் மின்னூல்கள் குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தது. காப்புரிமையற்ற 54000 பழைய படைப்புகளை மின்னூல் வடிவில் சேகரித்து வைத்திருக்கும் இதுதான் உலகின் மிகப் பழைய மின் நூலகம். அனைத்து நூல்களும் இலவசம்தான். புத்தகப் பிரியர்களை மின்னூல்களின் பக்கத்தில் இழுத்துவந்த முக்கியமான ஒரு முயற்சி இது.

மின்னூல்களின் வளர்ச்சி அச்சுக் காகிதங்களுக்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையைக் குறைத்து வனங்களைக் காக்கும் என்ற வகையில் ஒரு சுற்றுச்சூழலைக் காக்கும் முன்னேற்றமாகவும் காணப்பட்டது. தொடர்ந்து பயணத்தில் இருப்பவர்கள் ஒரு கிண்டில் கருவியை வாங்கிவிட்டால் தங்களோடு 40000 புத்தகங்கள் வரை சுமந்து திரிய முடியும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திலிருந்து தாங்கள் நினைத்த புத்தகத்தை வாங்க முடியும். அது தவிர கிண்டில் அன்லிமிடெட் போன்ற புத்தகத்தை வாடகைக்கு எடுக்கும் திட்டங்களும் உள்ளன. ஒரு மாதத்துக்கு ஒரு சிறிய தொகை கட்டிவிட்டால் பல நூல்கள் உங்களுக்குப் படிக்கக் கிடைக்கும். சந்தா காலம் முடிவடைந்த பிறகு அவை நம்முடைய கிண்டில் கருவியில் இருக்காது. புத்தகப்பிரியர்களுக்கு இதைவிட பொற்காலம் ஒன்று இருந்திருக்க முடியாது. 2020ம் ஆண்டு அமெரிக்கப் பதிப்பாளர்களின் வருமானத்தில் 50% மின்னூல்கள்வழியாகவே வரும் என்று கணித்திருக்கிறார்கள். உலக அளவில் மின்னூல் சந்தையானது தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தியாவில் இப்போதைக்கு 10% சந்தை மதிப்பைக் கொண்டிருக்கும் மின்னூல்கள் 2020 வாக்கில் 20% அளவை அடையும் என்று கணிக்கிறார்கள்.

இது தவிர ஆடிபிள் போன்ற ஒலி வடிவப்புத்தகங்களும் இப்போது பரவலான வரவேற்பைப் பெற்று வருகின்றன. காலை நேர நடையின்போதோ, வாகனத்தைச் செலுத்தும்போதோ, நீண்ட ஒரு பயணத்தின்போதோ கண்களுக்கு வலிக்காமல் ஒரு புத்தகத்தைக் கேட்டுவிட முடிகிறது. இது தவிர ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பணம் செலுத்திப் படிக்கும் செயலிகள் இப்போது வந்திருக்கின்றன. சீரியல் பாக்ஸ் என்ற செயலி மூலம் வாரம் ஒரு அத்தியாயம் என்று நமது கைபேசிக்கு அனுப்பி விடுகிறார்கள். டிவி சீரியல்களைப்போல புத்தக சீரியல்கள் இவை. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இரண்டாவது அத்தியாயத்துடன் நிறுத்திக்கொண்டு விடலாம். முன்னூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கி முன்னுரை மட்டும் படிக்கத் தேவையில்லை. இந்தியாவிலும் பிரதிலிபி போன்ற முன்னெடுப்புகள் நிகழ்ந்து வருகின்றன. எனவே புத்தகம் என்ற பழைய வடிவத்தின் வளர்ச்சி வேண்டுமானால் தடைபட்டிருக்கலாம். ஆனால் வாசிப்பு என்ற செயல்பாடு வேறு வடிவங்களில் வளர்ந்து கொண்டுதான் வருகிறது.

இத்தனை தொழில்நுட்பங்கள் இருந்தும் வாசிப்பு ஏன் எதிர்பார்த்த அளவு வளரவில்லை என்ற கேள்விக்கும் விடை தேட வேண்டியிருக்கிறது. வாசிப்பை ஊக்குவிக்க வேண்டிய அரசுகள் இதற்கான எந்த முன்னெடுப்பையும் செய்வதாகத் தெரியவில்லை. அரசு நூலகத்திற்குத் தரமான நூல்கள் வாங்குவதைவிட அதன் வாயிலாக எவ்வளவு பணம் பார்க்கலாம் என்பதே பிரதான நோக்கமாகியிருக்கிறது. யாரிடம் புத்தகம் வாங்குகிறார்கள், எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதே பெரிய மர்மமாக இருக்கிறது. வாங்கும் நூல்களும் சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் வகையறாவாக இருக்கின்றன. இது குறித்த ஆர்டிஐ கேள்விகளுக்கு மௌனத்தையே பதிலாக அளிக்கிறது மாநில அரசு. புத்தக வாசிப்பையும் விமர்சனத்தையும் மேற்கு நாடுகளில் பள்ளிக் கல்வித் திட்டத்திலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் ஆசியாவிலேயே சிறந்த நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற முயன்ற அரசிடமிருந்து இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இவை தாண்டி நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஏப்ரல் 23 என்பது உலக புத்தக தினம் மட்டுமல்ல. உலக காப்புரிமை தினமும் கூட. துரதிருஷ்டவசமாக காப்புரிமை குறித்த தீவிரமான ஒரு பார்வை இந்திய சமுதாயத்தில் இல்லை. மின்னூல்கள் வளர்ச்சியோடு மின்னூல்களைத் தரவிறக்கி அவற்றை சட்டத்துக்குப் புறம்பாக இலவசமாகத் தரும் ஆட்களும் கூடவே வளர்ந்து வருகிறார்கள். அமேசான் உட்பட எந்தத் தளத்தில் நூல் வெளியானாலும் உடனே வாங்கி அதன் பாதுகாப்பை உடைத்து அதை பிடிஎப் வடிவத்தில் மாற்றி ஒரு குறைந்தபட்ச தொகையை மாதம் வாங்கிக் கொண்டு தங்கள் கொள்ளையைப் பலருக்கும் பகிர்கிறார்கள். தமிழ் தினசரிகள், மாத இதழ்களை இப்படி வாட்ஸ்ஆப் மூலமாக அளித்துவந்த ஒருவர் மாதம் லட்ச ரூபாய்வரை சம்பாதித்திருக்கிறார். சினிமா, இசை உலகம் போன்றவை டிஜிட்டல் மயமானதால் சந்திக்கும் அதே சோதனையைத்தான் நூல்களும் சந்தித்து வருகின்றன. இது தொடர்பாக எந்த வலிமையான சட்டமும் இல்லாத இந்தியாவில் மின்னூல்களின் பரவல் மிகவும் மந்தமாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இணையம் செய்த ஒரு காரியம் முதலில் அனைத்தையும் இலவசமாக்கி வைத்தது. இணையத்தில் நேரடியாக நாம் எந்தத் தகவலுக்கும் பணம் செலுத்துவதில்லை. புத்தகம் வாங்கினால் பணம் தரவேண்டும். அது வீண் செலவு என்று பலரும் நினைக்கிறார்கள். எப்படியும் தமிழ் ராக்கர்ஸில் கிடைக்கும் என்பதுபோல எப்படியும் பிடிஎஃப் கிடைக்கும் என்று நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். எழுதியவரிடமே வந்து பிடிஎஃப் கிடைக்குமா என்று கேட்கும் அளவுக்கு அது ஒரு திருட்டு என்ற விஷயமே நமக்குப் புரியாமல் இருக்கிறது. அப்படியானால் இதை மாற்றமுடியுமா என்றால் முடியாது என்பதுதான் கசப்பான பதில். அதே நேரத்தில் எல்லாவற்றையும் இலவசமாகவே வாசகர்கள் எதிர்பார்த்தால் தரமான எழுத்தைத் தருபவர்கள் எதற்காக எழுத வேண்டும்? நல்ல எழுத்தாளர்கள் எழுத்தைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்?

வாசகர்கள் அப்படி இருந்தால் ராயல்டி என்ற ஒரு சொல்லே நகைச்சுவையாகப் பார்க்கப்படும் சூழல் பதிப்புத்துறையில் உருவாகியிருக்கிறது என்பதையும் இந்த நாளில் நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தொலைநோக்கில் பார்த்தால் இது குறித்த பிரக்ஞை இன்றி இருப்பது பதிப்புத்துறையை மெல்லக் கொன்றுவிடும். பெருகி வரும் தயாரிப்பு செலவுகள், சுருங்கி வரும் விற்பனை என்பதெல்லாம் பதிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்றாலும் இத்தனை பிரதிகள், இத்தனை விற்பனை, இவ்வளவுதான்ராயல்டி என்று வெளிப்படையாக அறிவித்து பத்தே ரூபாய் என்றாலும் அந்த எழுத்தாளருக்கு அனுப்பும்முறை உருவாக வேண்டும். பதிப்பாளர்களின் பிரச்னையை எழுத்தாளர்கள் அறிந்துகொள்ளவும் இது பயன்படும். இதற்கான பொதுவான ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் அங்கே பதிவுசெய்து கொள்ளலாம். நூல்களின் அச்சு மற்றும் விற்பனை விவரங்கள் அங்கே பதிவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட எழுத்தாளர் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள வகைசெய்யலாம். பபாசி போன்ற அமைப்புகளும் எழுத்தாளர்களின் கூட்டமைப்புகளும் இணைந்து இப்படியான ஒரு வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் வேலையில் ஈடுபடுவது அவசியம்.இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நகைக்கலாம். சமூக வலைதளங்களில் மாறி மாறி கை நீட்டி சண்டையிடலாம். ஆனால் அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற சுறாக்கள் நீந்தும் கடலில் மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கும் புராதனமான கப்பலில் நின்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் அப்போது நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். யார் வெல்வார்கள் என்பதல்ல, எவ்வளவு நாட்கள் கப்பல் நம் கால்களுக்கடியில் இருக்கும் என்பதுதான் கேள்வி.