‘அசுரன்’ படம் பேசும் அரசியல் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். ஒரு திரைப்படமாக உருவாகும்விதத்தில் அது பயணித்திருக்கும் தடம் பற்றியே நான் இங்கே உரையாடுகிறேன். அசுரன் வர்க்க வேறுபாடு குறித்த கதை. படத்தில் சாதி இருக்கிறது. ஆனால் சாதிப் பெயர்கள் இல்லை. நிலம் இருக்கிறது. நில உரிமைக்கான போர் இருக்கிறது. ஆனால் அந்த நிலம் எங்கே என்பதற்கான குறிப்புகள் இல்லை. இவற்றைக் குறிப்பிடுவதற்கான சுதந்திரம் இன்றைய படைப்புச் சூழலில் இல்லை என்பது கசப்பான உண்மை.. ஒரு மதம்குறித்த விமர்சனத்தை வைத்தால் அந்த மதத்தினர் அனைவரும் புண்படுகிறார்கள். ஒரு சாதி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தால் அவர்கள் அந்தப் படத்தைத் தடை செய்கிறார்கள். இந்தப் பட்டியலில் அரசியல் கட்சிகளும் வணிக சங்கங்களும் காவல்துறையும் இன்னும் பலரும்கூட சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். எழுத்து வடிவ இலக்கியத்தைக்கூட யாரும் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் திரைப்படங்களை அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். அந்த அளவில் ஒரு திரைப்படத்தின் வீச்சை அவர்கள் முழுமையாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சி வீடுகளுக்குள் புகுந்த காலம் தொட்டு எழுத்து இலக்கியம் சிறுபான்மையினர் மட்டுமே நுகரும் வடிவமாக மாறிவிட்டது. திரைப்படம் வெகுமக்களின் இலக்கியமாக எப்பொழுதோ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது. இங்கு நாம் கொண்டாடுவது, நம்புவது, விவாதிப்பது எல்லாமே திரைப்படங்கள்தான். சமூக அவலங்களைச் சாட திரைக்காட்சிகள்தான் மீம்களாக வந்து உதவுகின்றன. திரைப்படப் பாடல்களை எழுதுபவர்கள் மட்டுமே அவர்களைப் பொறுத்தவரையில் கவிஞர்கள். திரைப்பாடல்கள் இல்லாமல் இன்று வீட்டு விழாக்கள் இல்லை. திரைக்கலைஞர்கள் இல்லாமல் பள்ளிக்கல்லூரி, விழாக்கள் இல்லை. திரைப்பட நடிகர்களே தலையலங்காரத்தையும் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலையும் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் அணியும் ஆடைகளே பெருவாரியான மக்களின் ஆடைகளாக மாறுகின்றன.
ராமாயணத் தெருக்கூத்துகளையும் காலட்சேபத்தையும் ஒரே ஒரு சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் எப்போதோ உண்டு செரித்துவிட்டது. இப்போது எஞ்சியிருப்பது அந்தக் கலைகளின் மரபு எச்சம்தான். ஆனால் பழைய அல்லது புதிய கலை வடிவங்களின் நோக்கம் என்னவோ ஒன்றுதான். ராமனின்மீது அசைக்கமுடியாத பக்தியை ஏற்படுத்துவது.
ஆனால் யாரும் எதிர்பாராத ஒன்றை காலம் நிகழ்த்தியது. காலப்போக்கில் ராமன் மறைந்து ராமனாக நடித்தவர் தெய்வமாகத் தொடங்குகிறார். அவர் பேசுவது, நிற்பது, நடப்பது என்று அத்தனையும் காவியமாகிறது. இப்போது நாயகன் தெய்வமாகிவிட்டபடியால் ஏற்கனவே இருந்த காப்பியங்கள் போதவில்லை. நாயக தெய்வத்திற்காக புதிய காப்பியங்கள் உருவாக்குவது அவசியமாகிறது. ஒரு தெய்வத்திற்கான காப்பியத்தில் தெய்வங்கள் அதிசயங்கள் செய்யவேண்டும். இல்லாவிட்டால் பக்தர்களும் பூசாரிகளும் கொதித்துப் போய்விடுவார்கள். பால் ஊற்றுவதும் கட் அவுட்டுக்கு மாலையிடுவதும் தெய்வ வழிபாடுகளின் நீட்சிதான். வெவ்வேறு தெய்வங்களின் பக்தர்கள் தங்கள் மதம்தான் பெரிதென்று சண்டையிட்டுக் கொள்வது இயல்புதானே? பக்தி எந்த அளவுக்கு முற்றுகிறதென்றால் அதில் சில தெய்வங்களை நாட்டின் முதல்வராக்கும் அளவுக்கு. இந்த விஷயத்தில் தெய்வத்துக்கேகூட வேறுவழியில்லை. மாற்ற வேண்டுமென்று அவர்கள் நினைத்தாலும் கோடிக்கணக்கிலான வியாபாரமும் பக்தர்களின் அன்பும் அவர்களை அனுமதிப்பதில்லை.
காலம் என்னவோ நிலையாக நிற்பதில்லை. காலத்தோடு மக்களும் மாறத் தொடங்குகிறார்கள். காப்பியங்களும் கடவுள்களும் மாறித்தானே ஆகவேண்டும். சிவந்த சருமம்கொண்ட சதைப்பற்றுமிக்க ராமனே ஜெயித்துக் கொண்டிருக்கும் கதைகள் உண்மையில் நடப்பதில்லை என்பதை பக்தர்கள் உணரத் தொடங்குகிறார்கள் அல்லது ராமர்கள் அனைவரும் நல்லவர்கள் இல்லை என்பதை உணர்கிறார்கள். நல்லவையும் அல்லவையும் அவரவர் நின்று நோக்கும் நிலையைச் சார்ந்ததென்று பக்தர்களில் ஒரு பிரிவினருக்குத் தோன்றுகிறது. ராவணனுக்கான பக்தர் கூட்டம் ஒன்று உருவாகிறது. அசுரனின் பக்கமிருந்து பேசும் காப்பியங்கள் மேடை ஏறாததன் அரசியல் பேசப்படுகிறது. மெல்ல ராவணர்கள் கடவுளாகிறார்கள். பில்லாக்களும் ரங்காக்களும் தங்களுக்கான நியாயத்தை முன்வைக்கிறார்கள். பதிலுக்கு மண்டோதரியைக் கடத்தினால் என்ன என்று ராமர் கேட்கிறார். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ராமரின் இதழில் புன்னகை மலர்கிறது. நாளடைவில் யார் கடவுள், யார் அசுரன் என்பதில் ஒரு குழப்பம் எஞ்சுகிறது. எல்லோருக்குமான நியாயத்தைப் பேசுபவன் இனி அவர்களுக்குத் தேவையில்லை.. தங்களுக்கான நியாயத்தைப் பேசுகின்றவன் அவர்களின் கடவுள். அவன் அசுரனாக இருந்தாலும் சரி. இந்த இடத்தில் நின்றுதான் அசுரன் என்ற படைப்பைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மேல் சாதி, கீழ்ச்சாதி என்பது ஒரு குறியீடு. பெயர் சொல்லாமலே அதைப் புரியவைத்துவிட முடியும். பேச்சு வழக்கின் மூலமாக அது எந்த நிலம் என்பதை உணர்த்த முடியும். எனது வெட்டாட்டம் நாவலின் ஒரு இடத்தில்கூட, அது எந்த மாநிலம் எந்த நகரம் என்ற குறிப்பு இருக்காது. ஆனால் அதைப் படித்த ஒருவர்கூட அதுகுறித்த சந்தேகத்தை எழுப்பவில்லை. கதையின் எந்தப் பகுதி யாரைப் பற்றியது என்பதை ஒவ்வொருவரும் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள். அசுரன் படத்திலும் அப்படியே நிகழ்ந்திருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு படைப்பாளி தனது படைப்புத் திறனை இதுபோன்ற விஷயங்களிலும் காட்ட வேண்டியிருக்கிறது. அதைத் தாண்டி ஒரு படைப்பாளி வீரமாக எதையும் செய்தால் போராட்டங்கள், நீதிமன்றம், இடப்பெயர்ச்சி என்று காலம் போகும். பரிசுகளாக சில நேரங்களில் துப்பாக்கிக் குண்டுகளும்.
இங்கு ஒரு படைப்பாளி கத்திகள் நட்டுவைத்த ஒரு மைதானத்தின்மீது கயிற்றில் நடக்கிறான். குழந்தை, குட்டி, தயாரிப்பாளர், உயிர் என்று பல அச்சங்களையும் அவன் தோளில் சுமக்கவேண்டியிருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் என்ற ஒரு கனத்த பெட்டி வேறு முதுகில். இருந்தும் அவன் ஏன் குட்டிக்கரணம் போடவில்லை என்று அறிவார்ந்த சமுதாயம் கேட்கிறது. எப்படி முடியும்? ஆனால் முடிந்திருக்கிறது. அதற்கான வழியைத்தான் வெற்றிமாறன் காட்டியிருக்கிறார். அதற்கு அவருக்கு தனுஷ் என்ற பெரிய கம்பு உதவியிருக்கிறது. இரண்டு வளர்ந்த மகன்களுக்குத் தந்தையாக தனுஷ் நடித்திருக்கிறார். ஒரு மகனாக அவரே நடித்திருக்க முடியும். அதையும் தவிர்த்திருக்கிறார்கள். நெடுஞ்சாண் கிடையாக தெருக்களில் விழுந்து எழும் ஒரு நாயகனாக தனுஷ் திரைக்கடவுள்களின் அஸ்திவாரத்தை சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறார். அவருக்கான திரைபிம்பத்தை சிறிதேனும் அழித்துத்தான் இந்தக் காட்சியில் தான் நடிக்க முடியும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று தெரிந்தே அந்தக் காட்சியில் அவர் நடித்திருக்கிறார். பெரும் திரை பிம்பங்களின் அடுத்த பரிமாணத்திற்கான தொடக்கமாக இது இருக்குமென்று தோன்றுகிறது.
அசுரனின் கதை இந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு எழுத்தாளனின் மூளையில் ஏற்கனவே செழுமையடைந்தது. ஆனால் அது திரைக்கு நகரும்போது முற்றாக வேறு ஒரு வடிவத்தை அடையவேண்டியிருக்கிறது. திரைப்படமாகும் படைப்பு எழுத்தாளனின் கையை விட்டுத் தொலைவாகி விடுகிறது. ஓரளவு அதன் மையக்கருத்தை ஒட்டி மட்டுமே இருக்க முடிகிறது. ஒரு புத்தகத்துக்கான முதலீட்டுக்கும் திரைப்படத்துக்கான முதலீட்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. ஒரு வாசக மனநிலைக்கும், ரசிக மனநிலைக்கும் அதே அளவிலான வேறுபாடு உண்டு. வாடிக்கையாளர்கள் மாறும்போது பொருட்கள் தங்களை மாற்றிக் கொண்டுதானே ஆகவேண்டும்? மாற்றங்களைத் தவிர்க்க முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட வடிவத்தை அடைந்தால் அல்லது துறந்தால் மட்டுமே அது திரை அந்தஸ்தைப் பெறுகிறது. அந்த வகையிலும் மாற்றங்கள் அல்லது சமரசங்கள் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. அசுரன் ஒரு சாகசக் கதையாக மாற்றப்பட்டிருப்பது அப்படித்தான்.
இதற்குமுன்பும் பலர் இப்படியான கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். படங்கள் எடுத்திருக்கிறார்கள். மரபுகளை உடைத்திருக்கிறார்கள். அந்த இடிபாடுகளின்மீது ஏறித்தான் அசுரன் நிற்கிறதென்பதை இங்கே மறுக்க முடியாது. ஆனால் ஒரு பெரிய இயக்குநரும் நடிகரும் இணைந்து இதைச் செய்து கூடவே அதை வணிகரீதியிலான வெற்றிப் படமாகவும் ஆக்கியிருப்பதுதான் கவனிக்கத்தக்கது. இதன் பின்னணியில் ஒரு சாமர்த்தியமான உழைப்பு இருக்கிறது. இதை வெறும் கற்பனைக் கதையாக பலர் கடந்துவிடும் ஆபத்து இருக்கிறதுதான். நீதிமன்றத்தால் மொத்தமாகத் தடை செய்யப்படும் ஆபத்தை விட அந்த ஆபத்து சற்றுக் குறைவானதாகவே தோன்றுகிறது. ஒரு சிறிய நடிகரை வைத்து சிறிய முதலீட்டில் இதைவிட உண்மையாக எடுக்கலாம். ஆனால் அது எத்தனை பேரைச் சென்றடையும் என்ற கேள்வி முக்கியமானது. சொல்லாமல் ஒதுங்குவதை விட, ஒருசிலருக்கு மட்டும் காத்திரமாகச் சொல்வதை விட, சற்றே லாவகமாக ஒரு பெரிய கூட்டத்திடம் கொண்டு சேர்த்துவிட்டார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
ஒரு படைப்பாளி சமரசங்களைச் செய்து கொள்வது சரியல்ல, அது மிகச்சிறிய அளவில்கூட என்பது தூய்மைவாதிகளின் விவாதமாக இருக்கிறது. ஆனால் அது கட்டற்ற படைப்புச் சுதந்திரம் நிலவும் மேற்கு நாடுகளில் மட்டும் ஓரளவு நடைமுறையில் இருக்கிறது. அப்படி ஒரு நிலை இங்கும் இருக்கவேண்டும். அதுதான் அனைவரின் விருப்பமும் கூட. ஆனால் திரைக்கடவுள்கள் உட்பட பல்வேறு கடவுள்களும், காப்பியங்களும், எளிதில் மனம் புண்பட்டுவிடக்கூடிய பிஞ்சு உள்ளங்களும் நிறைந்த ஒரு மண்ணில் அத்தகைய அரசியல் அல்லது பண்பாட்டுச் சூழல் இல்லை என்பது அப்பட்டமான உண்மை. அப்படிப் பார்த்தால், சென்சார் போர்டு என்ற ஒரு விஷயத்தையே முதலில் இங்கே நாம் எதிர்க்க வேண்டியிருக்கும். ஆனால் இன்றைய சூழலில் அதிகாரபூர்வமற்ற சிலநூறு சென்சார் போர்டுகள் இருபத்துநான்கு மணி நேர இயக்கத்தில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி இந்த நெளிவு சுளிவுகளுக்கிடையேதான் இன்றைய படைப்பாளிகள் இயங்கி வருகிறார்கள். எப்படியாவது தாங்கள் சொல்ல நினைப்பதைச் சொல்ல முனைகிறார்கள். தனுஷ், வெற்றிமாறன் போன்றவர்கள் கயிற்றில் நடந்து நெருப்பு வளையங்களில் குட்டிக்கரணம் அடித்து அசுரன் போன்ற படைப்புகளை சாத்தியமாக்குகிறார்கள். இது இன்னும் பலருக்கான துணிச்சலைத் தர ஒரு தொடக்கமாகலாம். எந்த சமரசத்தையும் செய்யாத படைப்புகளுக்கான அரசியல் வணிகச்சூழல் உருவாகலாம். அதுவரை தூய்மைவாதிகள் மன்னிப்பார்களாக.