அசுரன் திரைப்படம் என்ற கலாசாரப் பிரதியின் அர்த்த தளங்கள்
எனக்கு பதினோரு வயதிருக்கும். கோவையில் சலிவன் வீதி, ராஜ வீதி, தெலுங்கு பிராமணாள் வீதி என்று பள்ளித் தோழர்களைக் காண சுற்றி வருவேன். அப்போது ஒரு சுவரில் “வாலி வதம் இனி நடக்காது” என்று எழுதியிருப்பதைப் பார்த்தேன். எனக்குப் புரியவேயில்லை. ராமாயணக் கதை நன்றாகவே தெரியும். பொன்னியன் செல்வன் உள்ளிட்ட நாவல்களைப் படித்திருந்தேன். ராஜாஜி, காமராஜ், பெரியார், அண்ணா என்றெல்லாம் தலைவர்களைப் பற்றி ஓரளவு தெரியும். சேலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் விட்டதாக, அந்தப் படங்களுடன் வெளியான துக்ளக் பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது தெரியும். துக்ளக் வாசகன். பார்ப்பனக் குடும்பம்.
ஆனால் “வாலி வதம் இனி நடக்காது” என்ற வாசகம் குழப்பமாகத்தான் இருந்தது. வாலி பிரச்சினைக்குரிய நபர். தம்பியின்மீது கோபம் கொண்டு விரட்டிவிட்டு, தம்பி மனைவியை சிறைப்பிடித்துவிட்டார். அவருடன் நேரில் நின்று சண்டையிட்டால் பாதி பலம் அவருக்குச் சென்றுவிடும்படி ஒரு வரம் வேறு வைத்திருந்தார். அதனால் ராமர் அவரை மறைந்து நின்று அம்பெய்திக் கொன்றார். அதற்கு விரிவான விளக்கமும் அவர் கொடுத்ததாக ஹரிகதை காலட்சேபம் செய்பவர்கள் சொல்வார்கள். நானும் படித்திருந்தேன். இதெல்லாம் கூட பிரச்சினையில்லை. அது என்ன “இனி”? அங்கேதான் எனக்குக் குழப்பம். ராமர் அப்படிக் கொன்றது தவறு என்றுகூட சொல்லலாம். இனி நடக்காது என்றால் என்ன பொருள் என்பதே என் குழப்பத்திற்குக் காரணம். ஒரு சிலரைக் கேட்டால் சிரித்தார்களே தவிர விளக்கவில்லை.
பல ஆண்டுகள் ஆயிற்று விளங்குவதற்கு. ஆனால் அதன் முக்கியத்துவம் புரிய மேலும் பல ஆண்டுகள் ஆயிற்று. கணிசமான வாசிப்பும், கல்வியும் தேவைப்பட்டது.
புராண இதிகாசங்களும், அரசியலும்
வேறு எந்த நாட்டிலும், சமூகத்திலும் தமிழகத்தில் நிகழ்ந்த அளவு புனைவுகளின் அரசியல் விவாதத்திற்கு உள்ளாகியிருக்குமா என்று தெரியவில்லை. அதாவது புராண, இதிகாசங்களைப் புனைவுகள் என்று எடுத்துக்கொண்டால் திராவிட அரசியலில் அது மிக முக்கிய பங்கை வகித்துள்ளது. அதன் பின்னணி என்ன என்று பொறுமையாகப் பரிசீலிக்க வேண்டும்.
தமிழில் சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியங்கள் போன்றவையெல்லாம் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் உள்ள கதைகள் பெருவாரியான மக்களிடம் பரவலாகப் புழங்கவில்லை. கோவலன் கண்ணகி கதைக்கு சில கதைப்பாடல் வடிவங்கள் இருந்தன என்றாலும், அவை மிகப்பரவலானவையா என்று தெரியவில்லை. பழையனூர் நீலி, நல்லதங்காள் கதை, வள்ளி திருமணம், நந்தனார் போன்ற சில கதைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவலாக இருந்தன. ஆனாலும் மகாபாரதம், ராமாயணம் அவற்றுடன் சேர்ந்த புராணக் கதைகளே மிகப் பரவலாக நிலவி வந்தன. பேச்சிலும் எழுத்திலும் அவை குறித்த பதிவுகள் எங்கும் விரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு விதத்தில் சொன்னால் மக்களின் கற்பனை வெளியை இந்த இந்து புராணக் கற்பனை மிகப்பரவலாக ஊடுருவியிருந்தது எனலாம்.
இந்து புராணக் கற்பனை என்று சொல்லும்போது வள்ளி திருமணம் போன்றவை இந்து புராணக் கற்பனைதானே என்று தோன்றும். ஆனால் அந்தக் கதைக்கு சமஸ்கிருத மூலம் கிடையாது. அது தமிழ்க் கற்பனை. அதே போல திருவிளையாடல் புராணமும் தமிழ்க் கதை. ஆனால் சமஸ்கிருத, பார்ப்பனீயக் கற்பனை என்பது வேறு வகையானது. அதில் முக்கியமானது தேவர்கள், அசுரர்கள் என்ற இருவகையான இனங்கள். நான் புராணங்களை நேரடியாகப் பயின்றதில்லை. சிறு வயதில் மஞ்சரி, கல்கி போன்ற பத்திரிகைகளில் படித்தது. சினிமாக்களில் பார்த்தது. ஹரிகதா காலட்சேபங்களில் கேட்டது போன்ற அறிமுகம்தான். நிறைய கதைகள் தெரியும். அந்த அளவு அறிந்ததை வைத்து யோசிக்கும்போது இந்த தேவர்கள், அசுரர்கள் வகைப்பாடு எப்படிப்பட்டது, அதன் அடிப்படை முரண் என்ன என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இது குறித்து இந்த மத ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் படித்தறியவில்லை. என்னுடைய சிந்தனைகளை மட்டும் இங்கே தொகுத்துக் கொள்கிறேன்.
ஒரு வகையில் பார்த்தால் தேவர்கள்தான் உலகின் ஆதார விசையாக இருக்கிறார்கள். ஆத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று அடிப்படை செயல்பாடுகளுக்கான மூன்று பெரு தெய்வங்கள் தவிர்த்து நெருப்பு, காற்று போன்றவையெல்லாம் அக்னி, வாயு என்று தேவர்களாகவே வடிவம் கொண்டுள்ளன. பூமியும் ஒரு பெண் என்றாலும், அவர் விஷ்ணுவிடம் அடைக்கலம் பெற்றவராக இருக்கிறார். செல்வங்களெல்லாம் குபேரனாக வடிவம் கொண்டுள்ளது. மரணம் காலனாக, எமனாக இருக்கிறது. அவர் வேறு டிபார்ட்மெண்ட் என்றாலும் தேவர்களின் பிரதேசத்தில்தான் இருக்கிறார். சந்திரன், சூரியன் எல்லாம் தேவர்கள்தான். அவர்கள் தலைவன் இந்திரன். தாய்லாந்தில்தான் இந்திரனை வழிபடுகிறார்கள். இந்தியாவிலோ, தமிழகத்திலோ இந்திரனை வழிபடுவதில்லை. மூன்று பெரு தெய்வங்களில் பிரம்மனும் பரவலாக வழிபடப்படுவதில்லை. சிவனும், விஷ்ணுவுமே பல்வேறு வடிவங்களில் வழிபடப்படுபவர்களாகவும் புராணங்களின் கதாநாயகர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கிடையே ஒரு போட்டியும், முரணும் கூட இருப்பது போலவும் கதைகள் உள்ளன. இந்த இரண்டு தெய்வங்களும் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பொதுவாகவே இருக்கின்றனர். ஆனால் தேவர்கள் சார்பாகத்தான் இருக்கின்றனர்.
இவ்வளவு சக்தி வாய்ந்த மனிதர்களுக்கும், அசுரர்களுக்கும் என்ன பிரச்சினை என்று தெளிவாக இல்லை. அசுரர்கள் எப்போதும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். அவர்கள் கடும் தவம் செய்து அசாதாரண ஆற்றல்களைப் பெறுகிறார்கள். அப்படி அவர்கள் ஆற்றல்களைப் பெரும்போது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் சிக்கியுள்ள மூன்றாவது இனமான மனிதர்களுக்கும் தொல்லைகள் தருகிறார்கள். மனிதர்கள் எப்போதும் அசுரர்களுடன் கூட்டணி வைப்பதில்லை. அவர்கள் தேவர்களுடன் மட்டுமே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறார்கள். பெரும் தெய்வங்கள் மானுட வடிவில் பிறக்கிறார்கள். ஆனால் அசுரர்களாகப் பிறப்பதில்லை.
தனிப்பட்ட அசுரர்களிடம் ஒரு சில பலவீனங்கள் இருந்தாலும், பொதுவாக அசுரர்களின் பிரச்சினை என்பது அரசியல் அதிகாரமாகத்தான் இருக்கிறது. தேவர்களுக்கு அடங்க மறுப்பது அல்லது தேவர்களையே கட்டுப்படுத்துவது என்பது போன்று அவர்கள் பிரச்சினை செய்கிறார்கள். விஷ்ணுவோ, சிவனோ அல்லது இருவருமோ தலையிட்டு அவர்களை வதம் செய்து மீண்டும் தேவர்களின் ஆட்சியை உறுதி செய்கிறார்கள். முக்கியமான உதாரணம் மாபலியின் கதை. அவர் நன்றாகவே அரசாள்கிறார்; இந்திரனையும் வென்று மேலுலகையும் ஆள்கிறார். தவறொன்றும் செய்வதில்லை. ஆனாலும் விஷ்ணு வாமன வடிவில் வந்து மூன்றடி மண் கேட்டு பின்னர் விசுவரூபம் எடுத்து மாபலியை பாதாளத்திற்கு அனுப்புகிறார். ஏன் அப்படி இந்திரன் சார்பாக அவர் இயங்க வேண்டும் என்று தெளிவாக இல்லை.
அசுரர்கள் உடல் ஆற்றலுக்கு உதாரணமாக கூறப்படுகிறார்கள். முரட்டுத்தனமும், விவேகமற்ற வன்முறை வேகமும் கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் அசுரர்களின் உடல் ஆற்றல் தேவைப்படுகிறது. அவர்களும், தேவர்களும் சேர்ந்து கடைகிறார்கள். ஆனால் அசுரர்களுக்கு அமுதத்தை தரக்கூடாது என்பதால் மஹாவிஷ்ணு மோஹினி அவதாரம் எடுத்து அவர்களை ஏமாற்றுகிறார். இப்படி அப்பட்டமாக அசுரர்களுக்கு எந்த நியாயமும் செய்யாமலேயே பல கதைகள் உள்ளன. ஆனால் ஒரு விஷயத்தில் திறமை வாய்ந்தவராக இருப்பவரை அசுரன் என்று கூறுவதும் பழக்கமாக இருக்கிறது. குறிப்பாக பார்ப்பனர்கள் மிகுந்த திறமையுடன் விளங்குவதை அசுரன் அல்லது ராட்சசன் என்று செல்லமாகக் குறிப்பிடுவார்கள். உதாரணமாக, கணிதத்தில் மிகுந்த ஆற்றலுடன் இருப்பவரை அவன் மாத்ஸில் அசுரன் என்பார்கள்.
தேவர்கள் அசுரர்களுக்கும் இடையில் வரும் மனிதர்களில் முக்கியமானவர்கள் பார்ப்பனர்கள். இவர்களுக்குத்தான் அசுரர்களால் பிரச்சினைகள் வரும். மேலும் ஒரு அசுரன் வேததத்தைக் கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டான் என்று ஒரு கதை உண்டு. ரிஷிகள் தவம் செய்யும்போது அசுரர்கள் இடையூறு செய்வார்கள். வேதம், யாகம் போன்றவற்றிற்கு எதிரானவர்களாகவும் அசுரர்கள் இருப்பார்கள். அரக்கர்களும் (ராட்சசன்), அசுரர்களும் வேறு வேறா, ஒன்றா என்பதும் தெளிவாக இல்லை. எனக்குத் தெரிந்து பலர் இரண்டையும் கலந்துதான் பயன்படுத்துகிறார்கள்.
மொதத்தில் வேதம், பார்ப்பனர்கள், தேவர்கள் இவர்களுக்கெல்லாம் எதிராக அசுரர்கள் இருக்கிறார்கள். இந்த வேறுபாட்டிற்கு நிறைய குறியீட்டு அர்த்தங்களை இந்து மத ஆய்வாளர்கள், பௌராணிகர்கள் சொல்வார்கள். ஒரே மனிதரிடத்தில் அசுர குணம், தெய்வ குணம் இரண்டும் இருக்கும்; புராணக்கதைகள் குறியீடுகள்தான் என்றெல்லாம் நிறைய கூறப்படுவது உண்டு. பிரச்சினை என்னவென்றால் தேவர்களும் நிறைய தவறான விஷயங்களைச் செய்வார்கள். இந்திரன் அகலிகையை ஏமாற்றியது பிரபலமான கதை. ஒரு முழுமையான விளக்கத்தை இந்த வகைப்பாட்டிற்கு அவர்கள் குணநலன்களை வைத்துக்கொடுக்க முடியுமா என்பதும் ஐயமாகத்தான் இருக்கிறது.
தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே ஆரிய திராவிட இன வேறுபாட்டின் வெளிப்பாடாக தேவர்கள், அசுரர்கள் வகைப்பாட்டைப் பார்க்கத் துவங்கி விட்டார்கள் என்று தெரிகிறது. சென்ற ஆண்டு டில்லியில் நிகழ்ந்த திராவிடவியம் கருத்தரங்கில் முனைவர் சுந்தர் காளி இது குறித்துக் கட்டுரை வாசித்தளித்தார். ஆங்கில மாத இதழ் செமினார் வலைத்தளத்தில் ஆகஸ்டு 2018 இதழில் இந்தக் கட்டுரையை காணலாம். அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் உள்ளிட்டவர்கள் துவங்கிய புராண மறு வாசிப்பு பின்னால் வலுப்பட்டு, எதிர் கதையாடல்களை எழுதும் மரபு உருவானது. அசுரர்கள் எனப்பட்டவர்களை திராவிட மன்னர்களாக, ஆரியர்களின் சூழ்ச்சிக்கு ஆளானவர்களாக மாற்றி எழுதுவது நிகழ்ந்தது. பாரதிதாசனின் இரணியன் அல்லது இணையற்ற வீரன், புலவர் குழந்தையின் ராவண காவியம் போன்றவை முக்கியப் படைப்புகள்.
இவ்விதமாகப் புராணக் கற்பனையின் அடிப்படையாக ஆரியர்கள், திராவிடர்கள் என்ற இரண்டு இனங்களின் முரணை அடிப்படையாகக் கொண்டதால் அனைத்து புராண, இதிகாசக் கதைகளும் மறுவாசிப்புக்கு உள்ளாயின. இதில் குறிப்பாக ராமாயணம் முக்கிய பங்கு வகித்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை எங்கே இருக்கிறது என்பதைக் குறித்த சர்ச்சை உண்டு. அது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு இடம் என்ற வாதத்திற்கு சில வலுவான அடிப்படைகள் உள்ளன. ஆனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கம்பர் தமிழில் ராமாயணத்தை எழுதியபோது இலங்கையை நாம் இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கும் ஈழமாகச் செய்துவிட்டார். அதனால் ராமாயணக் கதை என்பதில் வடக்கு, தெற்கு என்ற தெளிவான புவியியல் அடையாளம் சேர்ந்துகொள்ள, ராவணன் நிச்சயம் திராவிடன் என்ற அடையாளம் வலுவடைகிறது. இலங்கையிலிருந்து திரும்பும்போது ராமேஸ்வரத்தில் ராமர் பூஜைகள் செய்தார் என்ற கதையும், ராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையில் சற்றே கரைகட்டினாற்போல உயர்ந்துள்ள கடலின் அடியிலுள்ள நிலப்பகுதியை ராமர் கட்டிய பாலம் என்று கூறுவதும் இப்போது கூடுதலாக நிகழ்கின்றன. வட இந்திய அரசன் ராமன், தென்னிந்திய அரசன் ராவணன் என்று ஒரு முரண் இந்த ஆரிய திராவிட வேறுபாடே தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான வேறுபாடு என்ற எண்ணத்தையும் வலுப்படுத்துகிறது.
இத்தகைய எதிர்வாசிப்புகள் இருந்தாலும், நன்மை ஙீ தீமை என்ற உலகளாவிய கதையாடல் முரணின் வெளிப்பாடாகவும் தேவர் ஙீ அசுரர் முரண் வாசிக்கப்பட்டதும், புரிந்துகொள்ளப்பட்டதும் நிகழத்தான் செய்தது. தெய்வ குணம், அசுர குணம் என்பன போன்ற வர்ணனைகள் இந்த முரணிற்கு வலுசேர்ப்பனவையாக இருந்தன. வெகுஜன அளவில் பொதுப்புத்தி அசுரர்கள் முற்றிலும் தீமையானதாக, ஈவில் எனப்படும் நன்மையின் நேர் எதிர் ஆற்றலாகப் பார்க்காவிட்டாலும், நன்மைக்கு முரண்படும் ஒன்றாகவே அசுரர்கள் என்ற கற்பனை விளங்குகிறது எனலாம். உதாரணமாக ஆர்.எஸ்.மனோகர் அசுர பாத்திரங்களை மையப்படுத்தி நாடகம் போடுவதும் எழுபதுகளில், எண்பதுகளில் பிரபலாமாக இருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். அவரும் பெரும்பாலும் சினிமாவில் வில்லன் நடிகராகத்தான் இருந்தார். இப்போது நம்மையறியாமலேயே சினிமாவிற்கு வந்துவிட்டோம்.
சினிமாவில் நன்மை, தீமையின் புராண வடிவம்
தமிழில் மௌனப்பட சினிமா துவங்கியது மகாபாரதக் கதையான கீசக வதம் என்ற படம்தான். அந்த சமயத்தில் இசை நாடகங்கள் மிகுந்த பிரபலம் அடைந்திருந்தன. பாய்ஸ் கம்பெனி என்ற பதின்ம வயது சிறுவர்கள் நடிக்கும் குழுக்களும் பிரபலம் அடைந்திருந்தது. அவற்றில் பெரும்பாலும் புராண நாடகங்களே நடிக்கப்பட்டன. சினிமா பேசும்படம் ஆன பிறகும் நிறைய புராணப் படங்களே தயாரிக்கப்பட்டன. ராமாயணம், மகாபாரதம் சார்ந்த கதைகளும் நிறைய வந்தன. தேவலோகம், பாற்கடல், கைலாயம், நாரதர், அசுரர் சபை, தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தம் என்று களை கட்டியிருந்தது.
இந்த வகைப்படங்களின் கதையாடல் நன்மை, தீமை முரணில்தான் அமைந்தன. பொதுவாக கதையாடல் என்றாலே அது ஒரு முடிவை நோக்கிச் செல்ல வேண்டும். அந்த முடிவு தர்மத்தை உணர்த்துவதாகவோ, நிலைநிறுத்துவதாகவோ இருக்க வேண்டும். அப்படி முடியும்போது அது இன்பியலாகவோ, துன்பியலாகவோ முடியலாம். துன்பியலாக முடிவதில் இரண்டு வகைகள் இருக்கலாம். ஒன்று கதாநாயகனிடமே ஒரு குறை, பலவீனம் அல்லது பிழை ஏற்பட்டு அதன் காரணமாக அவன் வீழ்ச்சியடைவதன் மூலம் துன்பியல் முடிவும், அதன் மூலம் தர்மம் நிலைநாட்டப்படுவதும் நடக்கலாம். இன்னொரு முறையில் நல்லவனான கதாநாயகன் தியாகம் செய்து மரிக்கலாம்; அதன் மூலம் அவனது கொள்கை அல்லது இலக்கு மேலும் தொடர்ந்து பயணிக்கும் என்ற வரலாற்றுப் பார்வை உருவாகும். இந்த இரண்டுவகையும் இல்லாமல், கதாநாயகன் பல சாகசங்களைச் செய்து தர்மத்தை நிலைநாட்டலாம். அப்போது படம் மகிழ்ச்சியாக முடியும்.
இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதி யில், இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் வெகுஜன கதையாடல்களில் துன்ப முடிவுகள் தவிர்க்கப்படுவது அவசியமாக இருந்தது. உதாரணமாக ஹரிச்சந்திரன் பொய் சொல்ல மறுப்பதால் எல்லாவற்றையும் இழந்து பையனும் மரணமடைந்து அவனே சுடுகாட்டில் பையன் பிணத்தை எரிக்கவேண்டிய நிலை வரும். சந்திரமதி புலம்பல் என்பது சோகத்தை பிழிந்து தரும். ஆனால் ஹரிச்சந்திரன் அப்போதும் பொய் சொல்ல மறுப்பான். அதனால் விஸ்வாமித்திரர் பந்தயத்தில் தோற்க, தெய்வங்கள் தோன்றி பிள்ளையை உயிர்ப்பித்து இழந்த நாடு எல்லாவற்றையும் மீட்டுக்கொடுத்து எல்லாம் சுபமாக முடிந்துவிடும். அதைப்போலவே மதுரை வீரன், காத்தவராயன் போன்ற மரண தண்டனை விதிக்கப்பட்ட அடித்தள நாயகர்களும் அதன் பின்னும் தெய்வங்களால் உயிர்ப்பிக்கப்படுவதோடு மேலுலகிற்கு அழைக்கப்பட்டோ, அவர்கள் ஆன்மா தொடர்ந்து ஜீவிப்பதாகவோதான் கதைகள் இருக்கும். அதாவது மரணம் என்பது முடிவல்ல, மோட்சம் என்ற தொடக்கம் என்றே இருக்க வேண்டும். ஏன் கோவலன் கூட உயிர்ப்பிக்கப்படுவான். ஒரு நிகழ்த்து மரபில் உயிர்பெற்ற கோவலன் “எம்மை உயிர்ப்பித்தது கண்ணகியோ, மாதவியோ?” என்று கேட்பான் என்று நண்பர் ரவி கூறினார்.
இப்படி சோக முடிவுகள் தவிர்க்கப்படுவதற்குக் காரணம், கடவுளே மானுட உலகையும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என்ற சிந்தனையாக இருக்கலாம் என்பதே நாற்பதுகளில் ஒரு கருத்தாக இருந்தது. அதாவது மனிதன் தன் விதியைத் தானே தீர்மானிக்கிறான் என்ற எண்ணம் வந்தால்தான் மனிதன் தோல்வியடைவதோ, மரணமடைவதோ அதன் ஒரு பகுதியாக இருக்கும். கடவுள் அவன் செயல்களைக் கவனித்துக் கொள்ளும்போது அவன் மரணமடைந்தால் கடவுளுக்குத்தானே கெட்ட பெயர்? எனவே சோக முடிவுகள் கூடாது என்பது மானுட யத்தனத்திலும், வரலாற்றை மானுடர்கள் உருவாக்க முடியும் என்பதிலும் நம்பிக்கை பிறக்காததைக் குறிக்கிறது.
இன்னமும் சொன்னால் கதை மரணம் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டால்தான் வரலாற்றுக் காலம் பிறக்கும். இல்லாவிட்டால் அது புராண காலமாக, கடவுளின் காலமாகவே இருக்கும். மேற்கில் கிரேக்க நாடகங்களிலேயே துன்பியல் நாடகங்கள் துவங்கிவிட்டன. ஏனெனில் மனிதன் கடவுளிடமிருந்து பிரிந்து தன்னிச்சையாக நடப்பவன் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. கிரேக்கப் புராணங்களில் கடவுள்களும், மனிதர்களும் புழங்கும்போது மனிதர்கள் தன்னிச்சையாக செயல்படுவார்கள். ஆனால் இந்திய புராணங்களில் அப்படி மானுட யத்தனம் தனித்து இயங்குவதில்லை. அது விதியாகவும், கடவுள் சித்தமாகவும். திருவிளையாடலாகவுமே இருக்கிறது. அதனால்தான் ஒரு காப்பியம் என்ற வகையில் கோவலனின் பலவீனம் அவன் மரணத்திலும், கண்ணகியின் மரணத்திலும் முடிந்தாலும், கண்ணகி வானேகுவதாக உருவகம் இருந்தாலும், நாட்டார் கதை சொல்லலில், நிகழ்த்துதலில் கோவலன் உயிர்பெறுவது நடக்கிறது.
இத்தகைய சூழலில்தான் ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்தது. என்னவென்றால் முதலில் ராஜாராணி கதைகளிலும், பின்னர் சமூக கதைகளிலும் தீயவர்களை எதிர்த்துப் போராடி, பல ஆபத்துகளை சந்தித்து, சாகசங்களை செய்து அவர்களை ஒழித்துக்கட்டி சாகாமல் இருக்கும் தார்மீக சாகச கதாநாயகர்கள் தோன்றினார்கள். மேற்குலகில் கற்பனாவாத நாவல்களில் இவர்கள் உருவானார்கள். பின்னர் காமிக்குகள் என்ற சித்திரக்கதைகளிலும், திரைப்படங்களிலும் தோன்றினார்கள். உலகப் போர்கள், அதைத் தொடர்ந்த பனிப்போர், இப்போது தீவிரவாதிகளுக்கு எதிரான போர் ஆகிய அடிப்படைகளில் சாகச நாயகர்கள் தோன்றும் மேற்குலகை காப்பாற்றும் தார்மீகத்தில் இயங்கும் படங்கள் ஹாலிவுட்டில் பிரபலமாக விளங்கின. தமிழில் எம்.ஜி. ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். உலகில் வேறெங்கும் நிகழாத அளவு இந்த தார்மீக சாகச நாயகனை நிலைபெறச் செய்தார் எனலாம். அவர் கையாண்ட வழிவகைகள் மிகவும் சுவாரசியமானவை; விரிக்கில் பெருகும்.
எம்.ஜி.ஆர். பகுத்தறிவு வாதம் பேசிய கட்சியில் இருந்தார். அந்த கட்சி மானுட யத்தனத்தை நம்பியது. வரலாற்றை நம்பியது. ஆனால் எம்.ஜி.ஆரால் கொள்கைக்காக சாக முடியவில்லை. தியாகம் செய்ய முடியவில்லை. அவர் எப்போதும் வெல்ல வேண்டியவராகவே இருந்தார். அவர் மதுரை வீரனில் நடித்தபோது இந்தப் பிரச்சினை கூர்மைப்பட்டது. கதை மரபுகளின்படி மதுரை வீரன் சொர்க்கத்துக்குப் போகிறான். தெய்வங்களுடன் உறைகிறான் என்றுதான் முடிக்கவேண்டும். ஆனால் எம்.ஜி.ஆரோ பகுத்தறிவுக் கட்சியில் இருப்பதால் அப்படி நடிக்க மாட்டார். அவர் மரணமடைவதில் தயாரிப்பாளருக்கோ, இயக்குனருக்கோ மத நம்பிக்கை சார்ந்து பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். அப்படி மரணமடைந்தால் படம் ஓடாது என்பதுதான் பெரிய பிரச்சினை. அதனால் படத்தின் உதவி இயக்குனர் முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆரிடம் பேசி ஒரு சமரச ஏற்பாட்டை செய்தார். அதாவது எம்.ஜி.ஆர். வானத்தில் ஏறிச் செல்வதாக ஒரு தந்திரக் காட்சியை ஏற்கனவே எடுத்த காட்சிகளிலிருந்தே அமைத்துவிடுவதாக எம்.ஜி.ஆரிடம் பேசி ஒப்புதல் பெற்றார். அது உங்கள் படம், உங்கள் உரிமை என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.
தலித் வரலாற்று நாயகன்
தலித் என்ற சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பொருள் இருந்தாலும், தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட பட்டியிலன ஜாதியினரையும் அவர்கள் அரசியலையும் பயன்படுத்த இது உபயோகப்படுகிறது. ஒரு துன்பியல் நாயகன், வரலாற்றைத் துவக்கும் நாயகன் உருவாக தீண்டாமைக்கு ஆட்பட்ட தலித் நாயகனே பொருத்தமான களமாக உருவானதாகப்படுகிறது. சேரனின் பாரதி கண்ணம்மாவில், பார்த்திபன் காதலியின் சிதையில் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொள்ளும் முடிவு சேரனின் மனதில் தோன்றியதானாலும் அதன் வரலாற்றுத் தர்க்கம் கருதத் தக்கது. தமிழ் நவீனத்தின் துவக்கத்திலேயே நந்தனார் கதை முக்கியத்துவம் பெற்றது என்பதையும் நாம் காண வேண்டும். நந்தனார் பக்தர்; அவர் எரியுண்டாலும் மோட்சம் அடைந்தார். ஆனால் பார்த்திபன் உண்மையாக சிதையில் பாய்ந்து எரிந்து போனார்.
பாரதி கண்ணம்மா படம் வெற்றிபெற்றது. இந்த முடிவை மாற்றச்சொல்லி சேரனுக்கு மிகுந்த அழுத்தம் இருந்ததை அவர் பதிவு செய்துள்ளார். சேரன் முடியாது என்று பிடிவாதமாக இருந்துள்ளார். அவருடைய முதல் படம். பெரிய ரிஸ்க். கடைசியில் கே.எஸ்.ரவிகுமாரிடம் இறுதி முடிவு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரும் எப்படியோ ஒரு உள்ளுணர்வில் அந்த முடிவையே இருக்க அனுமதித்துவிட்டார். படம் வெற்றிபெற்றது.
இதற்கடுத்த மிகப்பெரிய பாய்ச்சல் பாலாஜி சக்திவேலின் காதல். படத்தின் பெயரிலேயே காதலை வைத்துவிட்டு, ஜாதியவாதிகள் காதலர்களைப் பிரித்து கதாநாயகனை அடித்துத் துவைத்து, அவன் சித்தம் கலங்கி திரிவதாகப் படம் எடுத்தார். அந்தப் படமும் பெருவெற்றியடைந்தது.
இத்தகு துன்பியல் முடிவு என்பது, தோல்வி அல்லது மரணம் என்ற முடிவு, தார்மீக சாகசத்தன்மையின் புராணம் சார்ந்த அதீதத்தை கைவிட்டு மானுட வரலாற்றினுள் ஜாதீய தலித் ஒடுக்குமுறையை நிறுத்துவதாக இருந்தது. இது ஒரு உள்ளார்ந்த தர்க்கமாக பல படங்களில் இயங்குவதைப் பார்க்கலாம். உதாரணமாக, கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் அவர் பத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதில் வில்லனான அமெரிக்க கதாபாத்திரம் மரணமடைந்தே தீரவேண்டும். ஏனெனில் அவன் தீமையின் மொத்த உருவம். ஆனால் அவனைத் தவிர மரணமடையும் இன்னொரு பாத்திரம் பூவராகன் என்ற தலித் பாத்திரம். இந்த மரணத்தை தவிர்த்திருந்தாலும் பெரிய பிரச்சினை எதுவும் வந்திருக்காது. ஆனாலும் தலித் பாத்திரம் மண் அள்ளுவதற்கு எதிராகப் போராடும் பாத்திரம் மரணமடைவதில் அது வரலாற்றின் பரிமாணம் பெறுகிறது. மொத்தமான படத்தின் தார்மீக சாகச புராணத்தன்மையிலிருந்து இந்தப் பாத்திரம் மட்டும் விலகி தனியாகத் தெரிகிறது.
ரஞ்சித் மெட்றாஸ் படத்தில் இந்த விதியை மீறினார். ஆனால் அதில் நண்பர்கள் இருவரில் ஒருவர் துன்பியல் முடிவை சந்திக்க, மற்றவர் சாகசம் புரிந்து முடிவில் வரலாற்றைத் தொடர்கிறார் என்று சமன் செய்யப்பட்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஜாதி அரசியலின் பின்புலத்தில் இது குறிப்பான தலித் பிரச்சினையாக கதையில் உருவாகவில்லை. ஆனால் சில குறிப்புகளால் அதை உணர்த்த முயன்றிருந்தார்.
பின்னால் கபாலி, காலா இரண்டிலுமே அவர் கதாநாயகனின் மரணத்தைப் புதிய வடிவங்களில் சமன் செய்தார். கபாலியில் அது வில்லனை வதம் செய்த பிறகு, கதாநாயகனை நோக்கி கொலையாளி செல்வதைக் காட்டிவிட்டு, மரணத்தை ஒலிவடிவில் உணர்த்தியிருந்தார். காலாவில் மரணத்தை உணர்த்திவிட்டு ஆனால் கதாநாயகன் பலவண்ண கலவைகள் நடுவில் பல உருவங்களெடுத்து வருவதாக காட்சியமைத்து சமன் செய்தார்.
ரஜனிகாந்த் சாதாரண நடிகரல்ல. திரையில் கடவுளுக்கு ஒப்பான ஆற்றல்களைப் பெற்றவராக நடிப்பவர். தார்மீகம், சாகசம் இரண்டிலும் உச்சத்தை தொட்டவர். அவருடைய விரல் அசைவிற்கு அரங்கமே அதிரும்: ஸ்டீரியோ ஒலியமைப்பிலும் சரி, ரசிகர்கள் உற்சாகத்திலும் சரி. தெய்வ அருள் பெற்றவராக, தெய்வீகமானவராக, தெய்வ ஆற்றலையும்கூட ஓரளவு பெற்றவராக அவர் பல பிரம்மாண்ட வெற்றிப்படங்களில் தோன்றியவர். அவரை வைத்துப் படம் எடுத்தபோது கூட ரஞ்சித் அவருக்கு வரலாற்றுத் தன்மை கொடுக்க அவர் மரணிக்கும்படியான முடிவுகளை வைத்தார். நான் கபாலி குறித்து விரிவாக இந்தக் கோணத்தில் எழுதியுள்ளேன். அந்த கட்டுரையையும் இணைத்துப் படித்தால் மேலும் தெளிவாகும்.
நன்மை, தீமை உருவகம் என்பது தாண்டி, யதார்த்த வாழ்வின் ஜாதீய முரண் என்று வந்தால், கதாநாயகன் சாகசத்தை விட்டுவிட்டு, தார்மீகத்தை நிலைநாட்ட துன்பியல் முடிவை ஏற்க வேண்டும். இது கிட்டத்தட்ட ஒரு கதையாடல் விதியெனவும், இதை யாரும் மீற மாட்டார்கள் என்றும் நினைத்திருந்தேன்.
பரியேறும் பெருமாளில் துன்பியல் முடிவு தவிர்க்கப்பட்டு, ஒத்திப்போடல் என்ற புதிய உத்தி உருவானதே பெரும் வியப்பாக இருந்தது. ஓபன் எண்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எல்லோரையும் வெற்றிகரமாகக் கொல்லும் ஜாதிவெறிக் கொலையாளியிடம் இருந்து, கதாநாயகன் தார்மீக சாகச ஆற்றலால் தப்பிக்கிறான். அந்தக் கொலையாளி தற்கொலை செய்துகொள்கிறான். ஆனால் கதாநாயகன் வில்லன்களை வதம் செய்வதில்லை. காதலியையும் கரம்பிடிப்பதில்லை. எதுவும் மாறாது என்று தலித் நாயகன் சொல்ல, மாற்றங்கள் வரும் என ஆதிக்க ஜாதி வில்லன் சொல்ல, எதிர்காலத்தை திறந்து வைத்து படம் வரலாற்றை எதிர்நோக்கி முடிந்தது.
பொதுவாகவே நான் காதலுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தார்மீக சாகச கதாநாயகன் இன்றியமையாத தேவையில்லை என்று எண்ணினேன். அங்காடித் தெரு போன்ற படங்களின் வெற்றி அந்த எண்ணத்தை உறுதிப்படுத்தியது. ஒரு பெரிய வெற்றிப் படத்தை தார்மீக சாகச நாயகன் இல்லாமல் கொடுக்க முடியும் என்று தோன்றியது. அதனால்தான் கதாநாயகனின் மரணம் என்ற கட்டுரையை எழுதினேன். அதன் பொருள் தார்மீக சாகச நாயகப் படங்களே எடுக்கப்படாது என்பதல்ல. அவ்வாறு இல்லாத கதாநாயகன் பலவீனமாக இருக்கும். யதார்த்தமான சூழல்களை எதிர்கொண்டு கையறு நிலையில் இருக்கும் கதையாடல்கள் திரையில் காணமுடியும் என்று தோன்றியது. பாலாவின் பரதேசி திரைப்படமும் நல்ல உதாரணம். பழைய கதாநாயக மைய விஜய் படங்கள் போன்றவை ஒருபுறமும், பலவித கதையாடல்கள் கொண்ட வரலாற்றுத் தன்மை கொண்ட படங்கள் மறுபுறமும் வர வாய்ப்புண்டு என்று எண்ணினேன். எதிர்பாராமல் வேறொன்றும் நிகழ்ந்துள்ளது என்றுதான் அசுரன் படம் பார்த்தவுடன் தோன்றியது.
தார்மீக சாகச தலித் நாயகன்
வெற்றிமாறனின் அசுரன் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது எனலாம். அது என்னவென்றால் வரலாற்று நாயகனான தலித் தார்மீக நாயகனை, நன்மை தீமை முரண் சார்ந்த தார்மீக சாகச கதாநாயகனாக சித்தரித்துவிட்டது.
உத்தம வில்லன் படத்தில் நாசர் நரசிம்ம வேடம் தரித்து நகத்தில் விஷம் தடவி, இரண்யன் வேஷத்தில் இருந்த கமலஹாசனைக் கொல்ல நினைக்க, திடீரென்று அரிப்பு ஏற்பட்டு தானே சொரிந்துகொள்ள நரசிம்ம அவதாரம் இறந்துவிடும். இரணியன் பிழைத்து விடுவான். இப்படி நகைச்சுவையாக நடந்த ஆள்மாறாட்டம் போல, யாரும் தெளிவாக உணரும் முன்னமே தலித் வரலாற்று நாயகனை, தார்மீக சாகச நாயகன் இடத்திற்கு நகர்த்திவிட்டுவிட்டது அசுரன். என்னுடைய தத்துவார்த்த நோக்கில் இது மிகப்பெரிய பாய்ச்சல் என்றுதான் சொல்லவேண்டும்.
திரைப்படத்தின் கதையைக் கவனமாகப் பார்த்தால் நான் சொல்வது விளங்கும். மிகத் தெளிவாகப் படத்தின் பிரச்சினை ஜாதீய ஒடுக்குமுறை என்பது நிறுவப்படுகிறது. சிறு விவசாயியின் நிலத்தை தொழிற்சாலைக்காக வற்புறுத்தி வாங்குவது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், மூத்த மகனைக் கைது செய்த பிறகு விடுவிக்கக் கோரும் தனுஷிற்கு விதிக்கும் தண்டனை, ஊரார் காலில் விழவேண்டும் என்பது மிகக் கொடுரமான ஜாதீய இழிவுபடுத்தலாகவே பதிவாகிறது. இந்த நிலையில் யதார்த்த சூழ்நிலை நிகழ்வாகவும், காட்சியாகவும் சிறப்பாகவே பதிவாகிறது. அதற்குப் பழிதீர்க்க யாரும் பார்க்காத நேரத்தில் ரகசியமாக ஆதிக்க ஜாதி வெறியனைச் செருப்பால் அடிக்கிறான் விடுதலையாகி வந்த மகன். இதுவும் மிகவும் முக்கியம். பகிரங்கமாகச் செய்யப்பட்ட அவமானத்திற்கு, ரகசியமாகப் பழி தீர்க்கிறான். ஆனால் அதை அந்த ஜாதி வெறியனால் தாங்க முடியவில்லை. அதனால் அவனைக் கொடுரமாக கொன்றே விடுகிறான். கொதித்துப் போன அவன் அம்மா, பழிவாங்க வேண்டும் எனத் துடிக்கிறாள். சின்ன மகன் ஜாதி வெறியனைக் கொலை செய்துவிடுகிறான். அப்போதும் தனுஷ் ஏற்ற பாத்திரம் சிவசாமி பலவீனமான மனிதனாகவே இருக்கிறார். காட்டில் மறைந்து வாழ்கிறார்கள். கொல்லப்பட்டவரின் மகன் பழிவாங்கத் துடிக்கிறான். அவன் ஏவலில் கொலையாளிகள் தேடி வருகிறார்கள். மகனை ஆபத்து சூழ்ந்தவுடன் விசுவரூபம் எடுக்கிறார் தனுஷ். யாரென்று தெரிகிறதா, இவன் தீயென்று புரிகிறதா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல சன்னதம் வந்தவரைப் போல பலரையும் வெட்டுகிறார்.
இதற்குப் பின்னர்தான் அவருடைய இறந்தகாலம் கூறப்படுகிறது. அதில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்கக் கூடாது என்ற ஜாதீய ஒடுக்குமுறையும், பஞ்சமி நிலத்தைக் கேட்டால் குடிசைகளைத் தீவைத்து கொளுத்துவது என்ற வன்கொடுமையும் நிகழ்கிறது. தனுஷ் வெகுண்டெழுந்து அதற்குப் பொறுப்பான அனைவரையும் கொன்று தீர்க்கிறார்.
இந்த மீள்நினைவு காட்சிகள் முடிந்தவுடன் தனுஷும் மகனும் கோர்ட்டில் சரணடைய முடிவு செய்கிறார்கள். ஆனால் அதற்காகச் செல்லும்போது அவர்களைக் கொல்ல எதிரிகள் காத்திருக்கிறார்கள். எனவே வக்கீலை வைத்து போலீஸ் சாட்சியாக சமரசம் பேசுகிறார். அவர் நிலத்தை அவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார். பதிலுக்கு அவர்கள் இரன்டாவது மகனை எதுவும் செய்யக்கூடாது. இதை ஒப்புக்கொண்ட வில்லன் குடும்பம் ரகசியமாக இரண்டாவது மகனைக் கொலை செய்ய முயல்கிறது. மீண்டும் விசுவரூபம் எடுக்கிறார் தனுஷ். அந்தக் குடும்பத்தையே வெட்டி சாய்க்கிறார். இரண்டு ஜாதிக்காரர்களும் பிரச்சினையை இரண்டு குடும்பங்களுக்குள் நடந்ததாக வைத்துக்கொள்ள முடிவு செய்து ஜாதி மோதலைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இரண்டு குடும்பங்களுடன் நின்றாலும் நிகழ்ந்தது ஜாதிப்போர்தான். ஜாதி ஆதிக்கத்தால், ஜாதி வெறியால் நிகழ்ந்த வன்கொடுமைகளும், அதற்கான எதிர்ப்பும்தான்.
தனுஷ் விசுவரூபம் எடுக்கும் தருணங்களில் மட்டும் படம் யதார்த்தமான சித்தரிப்பிலிருந்து விலகி, நன்மை தீமை தார்மீக சாகசத் தன்மை கொள்கிறது. அந்த நகர்வின் வேகத்தில் புராணத்தன்மையும் கொள்கிறது. புராணத்தில் நன்மை தீமை முரணும் இருக்கிறது. தேவர்கள், அசுரர்கள் என்ற முரணும் இருக்கிறது. திராவிட இயக்க அரசியல் அசுரர்களுடன் அடையாளப்படுத்திக்கொண்டு பார்ப்பனர்களையும், அவர்களுடைய சமஸ்கிருத புராணக் கடவுளரையும் எதிர்த்துள்ளது. அசுரன் என்ற தலைப்பின் மூலம் இந்தப் படம் அந்த அரசியல் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கிறது.
இந்தப் படத்தின் யதார்த்த மீறல், வரலாற்று நாயகனைத் தார்மீக சாகச நாயகனாக, புராண நாயகனாக மாற்றுவது முழு பிரக்ஞையுடன் செய்யப்பட்ட அழகியல் நகர்வாகத்தான் பார்க்கவேண்டும். வணிகத்திற்கு உதவுவதால் அது அழகியலற்றுப் போய்விடாது.
புராணங்கள் நமக்குக் காட்டுவது என்னவென்றால் இரண்டு சக்திகள் மோதும்போது நடுவில் யாரும் இருப்பதில்லை. அவர்கள் ஏதோவொரு பக்கம் இணைகிறார்கள். புராணங்களின் மானுடர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் அசுரர்கள் பக்கம் சாய்வதில்லை. விதிவிலக்கான சில நர அசுர உறவுகளை இங்கு பேசத் தேவையில்லை. பொதுவாக இடையில் உள்ள மானுடர்கள் ஆதிக்க சக்திகளான தேவர்களுடன் இணைகிறார்கள் என்பதே பொதுநிகழ்வு.
பார்ப்பனரல்லாத இடைநிலை ஜாதிகள் தலித்துகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் பேணும் வேற்றுமை அவர்களைப் பார்ப்பனீயத்தின் எல்லைக்குள் நிறுத்துகிறது. பார்ப்பனர்களுக்கு எதிரான திராவிட எதிர்கதையாடலான அசுரர்களின் அடையாளத்தை தலித்துகளுக்கு நீடிக்கும்போது இந்த சார்பின் வரலாற்று முரண் தெளிவாகிறது. திராவிட அரசியலின் நோக்கம் தெளிவடைகிறது.
கடந்த பத்திருபது ஆண்டுகளாக ஜாதி மறுப்பை, பார்ப்பனீய எதிர்ப்பைக் கருத்தியல் மேலாதிக்க தகர்ப்பிற்கான யுத்தமாகச் செய்துவந்த திராவிட இயக்கத்தை, இடைநிலை ஜாதிகளின் இயக்கம், தலித்துகளுக்கு எதிரான இயக்கம் என்று சொல்லும் பார்ப்பன தப்பித்தல் வாதம் தலைதூக்கி இருந்தது. இதன் மூலம் தலித் தொகுதிகளைத் தனிமைப்படுத்துவதும், திராவிட இயக்கத்தின் முற்போக்கு பாத்திரத்தை மறுத்து அதைப் பலவீனப்படுத்துவதுமான இரண்டு நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற கணக்கும் செயல்பட்டு வந்தது. இந்த ஆசையை சீர்குலைக்கும் விதமாக பார்ப்பனீயம் இந்துத்துவ பாசிசமாகத் தலையெடுத்ததில் திராவிட இயக்கம் தன் விரிந்த கருத்தியல் தளத்தை, தனது கருத்தியல் மேலாதிக்க தகர்ப்பிற்கான யுத்தத்தை புதுப்பிக்கத் துவங்கிவிட்டது.
வெகுஜன திரைப்பட உருவாக்கமும் சரி, அதன் வெற்றியும் சரி எப்போதுமே இதுபோன்ற பரந்துபட்ட பொதுப்புத்தியின் களத்தில் நடக்கும் கருத்தியல் மேலாதிக்கத்திற்கான போரையே பிரதிபலிக்கும். அந்த வகையில் தெளிவான ஒரு தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான படத்தினை, தார்மீக சாகச கதாநாயகனை மையமாகக் கொண்டு எடுத்து அதற்கு அசுரன் என்று பெயரும் வைத்ததில் புராணங்களுக்கான எதிர்கதையாடலின் ஆற்றல் மீண்டும் வீறுகொண்டு எழுகிறது.
அதனால்தான் இந்தக் கட்டுரைக்கு தலைப்பு “அசுர வதம் இனி நடக்காது” என்று வைத்தேன். எதிர் கதையாடல்களின் நீண்ட மரபில் புதியதொரு துவக்கம் இந்தத் திரைப்படம் என்பதே என் உறுதியான எண்ணம். அர்த்த தளங்கள் என்பவை வாசிப்பின் மூலம் உருவாகும் தன்மை கொண்டவை. படைப்பு நம்மிடம் சாவிகளையே கொடுத்திருக்கிறது. பயன்படுத்தாவிட்டால் சாவிகள் பயனற்றவையே.