குடியுரிமை (திருத்த) சட்டத்தினால் (CAA) என்னதான் பிரச்சினை என்ற கேள்வி நிறையப் பேருக்கு இருக்கிறது. ஹிந்துத்துவர்கள் இந்த சட்டத் திருத்தத்தை ஆவேசமாக ஆதரித்து, பல்வேறு லாஜிக்குகளைப் பயன்படுத்தி எழுதி, பேசி வருகிறார்கள்.

‘பல்வேறு லாஜிக்குகள்’ என்பதுதான் சரியான பதம். ஏனெனில், ஒரே ஒரு லாஜிக் என்பது அதில் கிடையாது. பல்வேறு வகைகளில் வாதிட்டு மட்டுமே இதனை ஒப்பேற்ற வேண்டும். நேரடியாக ஒரே வாதத்தில் அவர்கள் கேட்பதானால், ‘ஆமாம், இது இந்து ராஷ்டிரம்தான். அதைத்தான் நாங்கள் நிறுவ முயற்சிக்கிறோம். இப்போது என்ன சொல்லுகிறாய்?’ என்றுதான் கேட்க வேண்டும்.

சரி, அப்படி முகத்தில் அடித்தாற்போல கேட்காமல் சுற்றி வளைத்தாவது வருகிறார்களே என்றவரை நல்லது. அந்த அளவுக்கு இன்னமும் இவர்கள் வெட்கம்கெட்டுப் போய் விடவில்லை. அதுவரை ஆறுதல்.

அது ஒருபுறம் இருக்கட்டும், இந்தச் சட்டத்தில் அப்படி என்னதான் பிரச்சினை என்று சிலர் கேட்கலாம். முதலில் சுருக்கமாகப் பார்ப்போம்: இந்தச் சட்டம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து மத-ரீதியாக ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வரும் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்கிறோம் என்று சொல்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை : அந்த அகதிகள் முஸ்லிம்களாக இருக்கக்கூடாது. இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறித்துவர்கள் போன்றோருக்கு மட்டும் குடியுரிமை இங்கே கிடைக்கும்.

இதில் இருக்கும் முதல் பெரிய ஓட்டை, இந்தச் சட்டம் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக இருக்கிறது என்பதுதான். இந்தியா ஒரு செக்யூலர் தேசம். இங்கே ஒருவனின் அல்லது ஒருத்தியின் குடியுரிமைக்கான தகுதி அவர்களின் மதத்தைப் பொறுத்து இருக்கக் கூடாது. இதுவரை அப்படி இருந்ததில்லை.

இரண்டாவது ஓட்டை, இது தன்னிச்சையான முறையில் வரையப்பட்ட சட்டம். அதாவது arbitrarily drafted. இதுவும் அரசியல் சாசனப்படி விதிமீறல்தான். அப்படி என்றால் என்ன? ஒரு உதாரணம் பார்ப்போம்: பிக் பாக்கெட் அடிப்பது குற்றம் என்றும், அதற்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை என்றும் ஒரு சட்டம் வருகிறது. ஆனால் அந்தச் சட்டம், மைலாப்பூர்வாசிகளுக்கு செல்லாது என்றும் அதேசமயம் வண்ணாரப்பேட்டைவாசிகளுக்கு மட்டும் தண்டனை ஒரு வருடம் என்று விதிமுறைகளில் இருக்கிறது. அப்போது அதனை ஒப்புக்கொள்வோமா? அப்படிப்பட்ட சட்டத்துக்குத்தான் arbitrarily என்று பெயர். இது அரசியல் சாசனத்தைப் பொருத்தவரை முரணாகக் கருதப்படும்.

இதைத்தான் இந்தக் குடியுரிமை சட்டமும் செய்கிறது.

முதல் விஷயம்: இந்த சட்டத்தில் மூன்றே மூன்று நாடுகள் மட்டுமே சேர்க்கப்பட்டு இருக்கின்றன: பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ். இந்த மூன்று நாடுகள் மட்டும் இடம்பெற்றதன் லாஜிக் என்ன?

மத ஒடுக்குமுறைக்கு ஆளான அகதிகள் மட்டும் குடியுரிமைக்குத் தகுதி பெறுமாறு விதிமுறை இருக்கிறது. அரசியல் மற்றும் இதர ஒடுக்குமுறைகளை கணக்கில் எடுக்கவில்லை.

மத ஒடுக்குமுறை என்று சொன்னாலும் அந்த ஒடுக்குமுறை சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. சட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக தனியாகத்தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது, முஸ்லிம்களைத் தவிர இதர மதத்தைச் சேர்ந்தவர்கள் சும்மா வந்து நின்றாலே குடியுரிமை பெற்றுவிடலாம். இதை நான் சொல்லவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பலமுறை பல நேர்காணல்களில் குறிப்பிட்டு இருக்கிறார். சட்டமும் அதற்குத் துணையாகவே வடிக்கப்பட்டு இருக்கிறது.

இவையெல்லாம் சாசனப்படி arbitrarily என்று கருதி உச்சநீதிமன்றம் இதனை தூக்கி தூர எறியும் சாத்தியக்கூறு இருக்கிறது.

இப்போது ஒரு கேள்வி எழலாம்: பாகிஸ்தானில் எப்படி முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாவார்கள்? பங்களாதேஷில் எப்படி ஆவார்கள்? இதர மதத்தினர்தானே மதரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாவார்கள்?

அதற்குப் பதில்: பாகிஸ்தானில் முஸ்லிம் பிரிவுகள் நிறைய இருக்கின்றன. இவர்கள் நிறைய அடக்குமுறைகளுக்கு ஆளாகிறார்கள். பாகிஸ்தான் சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தேசம். இங்கே இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கியத்தில் இருந்து ஷியா முஸ்லிம்களின் மசூதிகள், வசிப்பிடங்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. சூஃபி தர்காக்களும் நிறைய தகர்க்கப்பட்டு கணக்கற்ற சூஃபி முஸ்லிம்கள் இறந்து போயிருக்கின்றனர். (இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தின்படி, தர்காக்கள் இஸ்லாத்துக்கு எதிரானவை [ஹராம்] என்று கருதப்பட்டு அவை தாக்குதலுக்கு உள்ளாகின்றன.)

இதுதவிர, பாகிஸ்தானில் அஹமதியா, இஸ்மாயிலி என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. இவர்கள் சற்றே வித்தியாசமான இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள். எனவே அடிப்படைவாத சுன்னி இஸ்லாத்துக்கு இவர்கள் ஆகாதவர்கள். பாகிஸ்தானிய சட்டம் இவர்களை முஸ்லிம்கள் என்றே கூட ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் தங்களின் வழிபாட்டுத் தலத்தை மசூதி என்று அழைத்துக்கொள்ளக்கூட இவர்களுக்கு அனுமதி இல்லை. அரசு வேலைகள் முதல் அரசு சலுகைகள் வரை இவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால், பாகிஸ்தானிய இந்துக்களைவிட கொடும் அடக்குமுறைக்கு ஆளாகி வருபவர்கள் இவர்கள்.

அப்படி கொடுமைகளை அனுபவிக்கும் அஹமதியாக்கள், இஸ்மாயிலிகள் இந்த சட்டத்தில் வரமாட்டார்கள்.

(இயற்பியலுக்கு நோபல் பரிசுபெற்ற அப்துஸ் சலேம் ஒரு அஹமதி. இவரே பெரும் தொல்லைகளுக்கு உள்ளானார். ‘நோபல் பரிசுபெற்ற முதல் முஸ்லிம்’ என்று இவர் கல்லறையில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசாங்கமே அதில் ‘முஸ்லிம்’ என்ற வார்த்தையை அழித்துவிட்டது.)

அடுத்ததாக பங்களாதேஷுக்கு வருவோம். மத ஒடுக்குமுறைக்கு இங்கே முஸ்லிம்களும் பெருமளவில் ஆளாகிறார்கள். மாற்றம், முன்னேற்றம்வேண்டி குரல் கொடுக்கும் முஸ்லிம்கள் இங்கே பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். தஸ்லிமா நஸ்ரின் ஒரு முக்கிய உதாரணம். பங்களாதேஷில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஹிந்துக்களை நடத்தும்விதம் குறித்து குரல் கொடுத்த இவர், அங்கிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். அதே போல, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விமர்சித்தும், நாத்திகம் குறித்தும் இணையத்தில் எழுதி வந்த நிறையப்பேர் அங்கே கொலையுண்டார்கள். ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக எழுதியவர்களும் குறிவைக்கப்பட்டார்கள். அதன் எதிரொலியாக கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வலைப்பூ (blog) எழுத்தாளர்கள் ஐரோப்பிய தேசங்களுக்கு தப்பி அங்கே அடைக்கலம் பெற்றார்கள். இவர்களில் 75 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள்தான்.

அடுத்த பிரச்சினை, இங்கே சேர்க்கப்பட்டிருக்கும் நாடுகள். ஏன், மூன்று இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் மட்டும் இருக்கின்றன? ஒன்று, இந்தியாவின் அண்டை நாடுகள் பட்டியலில் இருக்க வேண்டும் அல்லது காலனி ஆதிக்கத்தில் பிரிட்டிஷ் இந்தியாவுடன் இருந்த நாடுகள் இருக்க வேண்டும். அப்படி எந்த லாஜிக்கும் இதில் காணப்படவில்லை. பட்டியலில் இருக்கும் ஆப்கானிஸ்தான், பிரிட்டிஷ் இந்தியாவுடன் இருந்த பகுதி அல்ல. இந்தியாவுடன் எல்லையையும் கூடப் பகிரவில்லை. அண்டை நாடுகள் எனும் லிஸ்டிலேயே வரத் தகுதி இல்லாத நாடு இது. ஆயினும் அது இந்தச் சட்டத்தில் இருக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த, இன்றும் இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் பூட்டான், நேபாளம், மியான்மர் போன்றவை இந்தப் பட்டியலில் இல்லை.

ஏன் இவை இல்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை. பூட்டானில்கூட மத வழிபாட்டுக்கு சுதந்திரம் இல்லை. புத்த விகாரம் அல்லது ஹிந்துக்கோவில்கள் தவிர வேறு வழிபாட்டுத் தலங்கள் அங்கே கட்டிக்கொள்ள முடியாது.

மியான்மரில் வசிக்கும் முஸ்லிம் சிறுபான்மை இனத்தின் பெயர் ரோஹிங்கியா. அந்த தேசத்தின் பூர்வ குடிகளில் ஒன்றாக இவர்கள் இருந்தாலும் இவர்களுக்கு அங்கே குடியுரிமை கிடையாது. சொல்லொணா அடக்குமுறைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள். சமீபத்தில்கூட ராணுவத்தின் கொடும் தாக்குதல்களுக்கு தப்பி நிறையப் பேர் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கு ஓடிவந்தார்கள். ஆயிரக்கணக்கானோர் அதில் மரித்தும் போயினர்.

அடுத்ததாக, சீனாவின் சிங்கியாங் மாகாணத்தில் விய்கர் (Uyghur) என்ற முஸ்லிம் சமூகம் வசிக்கிறது. (ஆங்கில ஸ்பெல்லிங்கை வைத்து இவர்களை ‘உய்குர்’ என்று பெரும்பாலோனோர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.) ரோஹிங்கியாக்களைப் போலவே இவர்களும் கொடும் அடக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள். உரிமைகளுக்குப் போராடும் விய்கர்களை மாபெரும் சிறை வளாகங்களில் அடைத்துவைத்து இருக்கிறது சீனா. வெளியே இவற்றை ‘தொழிற்பயிற்சி மையங்கள்’ என்று அழைக்கிறார்கள். இந்தப் ‘பயிற்சி மையங்களுக்கு’ ஐரோப்பிய, அமெரிக்க ஊடகவியலாளர்கள் திருட்டுத்தனமாக போய் போட்டோ எல்லாம் எடுத்துப்போட்டு, அவை சந்தி சிரித்தது தனிக்கதை. அக்சய் சின் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தது. ஆனால் இது சிங்கியாங்கின் ஒரு பகுதியாக சீனாவால் சொந்தம் கொண்டாடப்படுகிறது. இந்த சர்ச்சை இன்னமும் தீரவில்லை. (இது பறிபோனதற்குத்தான் இந்துத்துவர்கள் நேருவை விடாமல் திட்டி மூக்கை சிந்திக்கொண்டு இருக்கிறார்கள்.) அதாவது, தங்கள் தேசத்தின் ஒரு பகுதி என்று இவர்கள் சொந்தம் கொண்டாடும் இடத்திலேயே ஒடுக்குமுறைக்கு ஆளாகுபவர்களுக்கு குடியுரிமை கொடுக்க இந்திய அரசு தயாராக இல்லை.

கடைசியாக, ஈழத் தமிழர்கள். இவர்கள் முக்கால்வாசிப்பேர் இந்துக்கள் என்றாலும் இவர்கள் குடியுரிமைக்கு தகுதியாக மாட்டார்கள். ஏனெனில் இலங்கையும் இந்தப் பட்டியலில் இல்லை. ஆனால் அண்டை நாடுகளில் ஒடுக்குமுறை என்று பார்த்தால் எழுபதுகளுக்குப் பின் கொடும் அடக்குமுறைக்கு உள்ளான ஒரே இந்து சமூகம் என்றால் அது ஈழத் தமிழர்கள்தான். சொல்லப்போனால், அறுபதுகளில் பாகிஸ்தானுடன் இருந்த பொழுது பங்களாதேஷில் இந்துக்கள் அடக்குமுறைக்கு உள்ளானாலும் சுதந்திரம் பெற்ற பிறகு தேசம் தன்னை செக்யூலராக அறிவித்துக் கொண்டு முடிந்த அளவு முன்னேற முயற்சி செய்துகொண்டிருக்கிறது. (போருக்கு முந்தைய காலகட்டத்தில் வங்காள முஸ்லிம்களும் பெரும் அடக்குமுறைகளை சந்தித்தார்கள்.)

CAA, அதாவது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கே இந்தக் கதி என்றால் இதனுடன் NRCஎன்பது இணையப்போகிறது. அப்போது விளைவு இதைவிட பயங்கரமாக இருக்கும். அதற்கு முன் NRCஎன்றால் என்ன என்று பார்க்கலாம். தேசிய குடிமக்கள் ஆவணம் (National Register of Citizens) என்ற இந்த திட்டம் அசாமில்தான் முதலில் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. பங்களாதேஷில் இருந்து முஸ்லிம்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறுகிறார்கள் என்ற புகார்கள் தொடர்ந்ததை அடுத்து குடிமக்கள் யார் யார், ‘வந்தேறிகள்’ யார் யார் என்ற கணக்கெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பிலேயே கணக்கெடுப்பும் நடந்தது. ஆனால் இதனை அசாம் தேர்தலுக்கு பாஜக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது. சட்டவிரோத குடியேறிகளை ‘கரையான்கள்’ என்று அமித் ஷா வர்ணித்தார். அவர்களை எல்லாம் கண்டுபிடித்து கப்பலில் ஏற்றி வங்காள விரிகுடாவில் கொண்டுபோய் வீசுவேன் என்று சூளுரைத்தார். மொத்தம் 1500 கோடி செலவழித்து அந்தக் குடிமக்கள் ஆவணம் தயாரிக்கப்பட்டது. மக்கள் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள். கார்கில் போரில் பங்கெடுத்து விருது பெற்ற போர் வீரர் ஒருவரும் இந்தப் பட்டியலில் விடுபட்டு தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பப்பட்டார். (பின்னர் விடுவிக்கப்பட்டார்.) முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அஹமதுவின் தம்பி மகன் இந்த லிஸ்ட்டில் விடுபட்டுப் போனார். இப்படி பல்வேறு குளறுபடிகள் நடந்து இறுதியில் வெளியான இந்த லிஸ்ட்டில் மொத்தம் 19 லட்சம் பேர் குடிமக்கள் அற்றோர் என்று அறிவிக்கப்பட்டனர். அதாவது, மொத்த அசாம் மக்கள் தொகையில் 5 சதவிகிதம். இப்போதுகூட இவர்களை எதுவும் செய்துவிட முடியாது. இவர்கள் Foreigners’s Tribunal எனப்படும் அந்நியர் தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்யவேண்டும். அதில் விசாரணை நடந்து தோற்றால் நீதிமன்றங்களை நாட வேண்டும். அதிலும் தோற்றால் மட்டுமே உண்மையில், குடிமக்கள் அல்லாதோர் (Truly Stateless) என்று கருதவேண்டும்.

சரி, தீர்ப்பாயத்தின் அப்பீல்மூலம் சுமார் ஐந்து லட்சம் பேர் தப்பிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீதிமன்ற வழக்குகள்மூலம் இன்னும் ஐந்து லட்சம் பேர் தப்பிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் இறுதியில் 10 லட்சம் மிஞ்சலாம். அதாவது, மூன்று சதவிகிதத்துக்கும் கீழ். இந்த மூன்று சதவிகிதத்துக்குத்தான் 1500 கோடி செலவாகி இருக்கிறது. அதாவது, அரசே செலவு செய்து பொதுமக்களை தெருவுக்குத் தெரு அலைய விட்டிருக்கிறது.

நமக்கே இவ்வளவுதானா என்று தோன்றும்பொழுது இதனை வைத்து அசாம், வங்காளம் முழுக்க பிரச்சாரம் செய்த அமித் ஷாவுக்கு இருக்காதா? இந்தக் கணக்கெடுப்பு சரிவர நடத்தப்படவில்லை என்று ஒதுக்கித் தள்ளி இருக்கிறார். NRCயை மறுபடி அசாமில் ‘ஒழுங்காக’ நடத்துவேன் என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமல்ல. இந்தியா முழுவதும் இந்தக் கணக்கெடுப்பு விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார்.

அதாவது, எந்த ஒரு திட்டம் ஒரு மாநிலத்தில் மக்களை அலைக்கழித்ததோ, நிச்சயமின்மையில் தள்ளியதோ அது தேசம் முழுக்க நடக்க இருக்கிறது. அசாமிலேயே 1500 கோடி செலவான இந்த ஆவணத் தயாரிப்பு திட்டம் தேச அளவில் கொண்டு வரப்பட்டால், கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி செலவாகலாம் என்று கணிக்கிறார்கள்.

அதுசரி, குடியுரிமைதானே? பாஸ்போர்ட்டை காட்டிவிட்டால் போகிறது, இது கூடவா பிரச்சினை என்று கேட்கலாம். அது அவ்வளவு சுலபமல்ல. பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுநர் லைசென்ஸ் போன்றவை எல்லாம் செல்லாது. ஆதார் என்பது அடையாள அட்டைதான், குடிமக்கள் என்பதற்கான நிரூபணமாக அதைப் பயன்படுத்த முடியாது. அதேபோல பாஸ்போர்ட்டும்கூட காசு கொடுத்து வாங்கி இருந்திருக்கலாம். எனவே, அதையும் தாண்டி ‘நீங்கள் இந்த ஊரில்தான் பிறந்தீர்கள், இன்னருக்குத்தான் பிறந்தீர்கள், அந்த இன்னாரும் இங்கேதான் பிறந்தார்,’ என்று நிரூபிக்க வேண்டும். உங்கள் அம்மா, அப்பா இருவரில் ஒருவர் இந்தியரல்லர் என்று முடிவு வந்தாலும் நீங்களும் இந்தியரல்லர் என்று ஆகும்.

அந்த நிரூபணத்துக்கு பிறப்புச் சான்றிதழ், வட்டாட்சியர் சான்றிதழ், நிலப்பட்டா போன்ற விஷயங்கள் தேவைப்படும். யோசித்துப்பாருங்கள்: பிறந்ததேதி கூட சரிவரத் தெரியாத ஆட்கள்தான் இந்தியாவில் இருக்கிறார்கள். குறிப்பாக, ஊரகப்பகுதிகளில் பெரும் சிக்கல்களை மக்கள் சந்திக்கநேரிடும். அலுவலகம் மாற்றி அலுவலகங்கள் அலைய வேண்டி இருக்கும். போகிற வருகிற ஆபீஸருக்கு எல்லாம் லஞ்சம் கொடுத்துத் தொலைய வேண்டி இருக்கும். ஊர்விட்டு ஊர்வந்து வேலை செய்வோர் லீவு போட்டுவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பிப் போய் இந்த நிரூபணங்களை முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

அப்படியும் திருப்திகரமாக ஆவணங்களைக் காட்ட இயலாவிடின் அவர்கள் இந்தியரல்லர் என்று அறிவிக்கப்படுவார்கள்.

சரி, அப்படிக் காட்ட இயலாமல் போவதில் இந்துக்களும் இருப்பார்கள் அல்லவா, என்று கேள்வி எழுப்பலாம். இதில் ரஹீம் மட்டும் எப்படி பாதிக்கப்படுவார், ரமேஷும் பாதிக்கப்படலாமே? அதுவும் உண்மைதான். இதே உதாரணத்தை பார்ப்போம்: ஒரு கிராமத்தில் ரமேஷ், ரஹீம் இருவரும் இந்தியரல்லாதவர் என்று அறிவிக்கப்படுகிறார்கள். இரண்டுபேருக்குமே குடியுரிமை பறிபோகும் நிலை வருகிறது. இங்கேதான் CAAவின் தேவை வருகிறது. ரமேஷ் இந்தியரல்லாதவர் என்று ஆனாலும் அகதி என்ற அடிப்படையில் CAA சட்டத்தின்படி குடியுரிமை பெறுவார். அவர், தன் வாழ்நாளை அப்படியே தொடரலாம். ஆனால் ரஹீம் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்தாலும் CAAவின் பாதுகாப்பு இல்லாததால். வந்தேறி என்ற முத்திரை பெறுவார். இந்த இரண்டு சட்டங்களையும் இணைத்துவைத்து இந்தியாவில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை வந்தேறிகள் என்று சுலபமாக அறிவித்துவிடலாம்.

ஒருவேளை, எந்த ஆவணத்தை வேண்டுமானாலும் காட்டலாம் என்று அரசு அறிவிக்கிறது என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்படியும் இதில் பிரச்சினை வரும். ஏனெனில் எல்லாரிடம் எல்லா ஆவணங்களும் இருக்காது. கீழே கொடுத்திருக்கும் தரவுகளைப் பாருங்கள்

பிறப்புச் சான்றிதழ்:

2000ஆம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளில் 56% பேருக்குத்தான் பதியப்பட்டுள்ளது.

2015இல் பிறந்த குழந்தைகளுக்கும்கூட 89%தான் இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள். (Civil Registration system)

ஆதார் அட்டை:

மொத்தம் 90% இந்தியர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மோசம்: அஸ்ஸாம் 17%, மேகாலயா 29%, நாகாலாந்து 29%. (UIDAI, 2018)

பாஸ்போர்ட்:

இதுவரை கிட்டத்தட்ட 8 கோடி பாஸ்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. (MEA, 2018)

வங்கிக்கணக்கு:

மொத்தம் 80% இந்தியர்களிடம்தான் வங்கிக் கணக்கு இருக்கிறது. (RBI, 2017)

வாக்காளர் அட்டை:

மொத்தம் 92 சதவிகித வயதுக்கு வந்த இந்தியர்களிடம் மட்டுமே வாக்காளர் அட்டை இருக்கிறது. (Election Commission, 2017)

இடைநிலைப்பள்ளி சான்றிதழ்:

80% மக்களிடம் இடைநிலைப்பள்ளி சான்றிதழ் இருக்கலாம். 2004 வரை 51% பேரிடம்தான் இருக்கலாம். (HRD Ministry, 2016-17)

எந்தவகையில் பார்த்தாலும் கிட்டத்தட்ட, 10 முதல் 15 சதம் வரை மக்கள் விடுபட்டுப் போவார்கள். அதாவது, 13 முதல் 18 கோடிப்பேர் வரை இந்தியரல்லர் என்று ஆகும் சாத்தியக்கூறு இருக்கிறது. இதுவேகூட இந்த அடையாள அட்டைகள் எல்லாம் செல்லும் என்று அரசு அறிவித்தால்தான். அப்படி அமித் ஷா அறிவிக்கமாட்டார் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். எப்படி கழித்துக் கட்டுவது என்பதைத்தான் பார்க்கும் மனிதர் எப்படி சேர்த்துக்கொள்வது என்று யோசிப்பாரா என்ன?

ஆனால் நாம் ஏன் NRCயையும் CAAவையும் இணைக்க வேண்டும்/ இரண்டும் தனித்தனி. இரண்டையும் இணைக்க முயல்வது பாஜக விமர்சகர்களின் தந்திரம் என்று பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இப்படி இரண்டையும் இணைத்துப் பேசியது நாமல்ல, முதலில் இணைத்துப் பேசியது அமித் ஷா. அதற்குப்பின் பலமுறை, பல இடங்களில் பேசியிருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு பதமாக ஒரே ஒரு சோறு. அதாவது, ஒரே ஒரு பேச்சை, மொழி பெயர்த்துக் கீழே கொடுத்திருக்கிறேன்.

‘நாம் Citizenship Amendment Bill கொண்டு வர இருக்கிறோம். இதன்படி அண்டை நாடுகளில் இருந்து வரும் இந்து, சீக்கிய, கிறித்துவ, பௌத்த, சமண அகதிகளுக்கு இங்கே குடியுரிமை கொடுத்து பாரதத்தின் குடிமகன்களாக ஆக்குவோம். மரியாதையை எதிர்பார்த்து நிற்பவர்களுக்கு மோடி அரசு அந்த மரியாதையை வழங்கும். பாரதத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த மரியாதை கிட்டும்.

முதலில் CABயைக்கொண்டு இந்து, சீக்கிய, கிறித்துவ, பௌத்த, சமண அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்போம். அதற்குப்பின் நாம் NRCயை அமலுக்கு கொண்டுவருவோம். நீங்களே சொல்லுங்கள். இங்கே ஊடுருவி இருக்கிறார்களே, இவர்களை துரத்த வேண்டுமா வேண்டாமா? (‘ஆமாம்’ என்று கூட்டம் கோஷமிடுகிறது.) அவர்களை எல்லாம் துரத்த வேண்டுமா வேண்டாமா? (ஆமாம், ஆமாம்)

எனவே, பாரதிய ஜனதா கட்சியின் அரசு முதலில் வந்திருக்கும் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்கும். அதற்குப்பின் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமாரி வரை, அஸ்ஸாமில் இருந்து குஜராத் வரை ஊடுருவி இருக்கும் ஒவ்வொருவரையும் தேடித்தேடி துரத்தி அடிக்கும் வேலையை இந்த பாஜக அரசு மேற்கொள்ளும். இந்த ஊடுருவர்கள் கரையான்களைப்போல இந்த தேசத்தை உறிஞ்சி வருகிறார்கள். இந்த மம்தா பானர்ஜி அரசோ, இந்த ஊடுருவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து இருப்பதற்கு காரணம், அவர்கள் இவர்களுக்கு வாக்கு வங்கியாக இருப்பதுதான். ஆனால் நமக்கோ, தேர்தல் வெற்றியெல்லாம் முக்கியமல்ல. வாக்கு வங்கியெல்லாம் முக்கியமல்ல. நமக்கு தேசப் பாதுகாப்புதான் முக்கியம், தேசப் பாதுகாப்புதான் முக்கியம்.’

இது, மே 1 2019 அன்று வங்காளத்தில் அவர் பேசியதன் தமிழாக்கம். இதனை அவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து எடுத்தாண்டிருக்கிறேன். அதற்குப்பிறகு இது போல அவர் பலமுறை பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சில் CAA வையும் NRCயையும் தெளிவாக இணைக்கும் அவரின் முயற்சியை தாண்டி நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், அவர் பயன்படுத்தும் வார்த்தைகள்தான். இந்து, கிறித்துவ, சீக்கிய பௌத்த, சமண மக்களை குறிப்பிடும்பொழுது ‘ஷரணார்த்தி’ என்ற பதத்தை பயன்படுத்துகிறார். அதற்கு ‘அகதிகள்’ அல்லது ‘தஞ்சம் வேண்டுவோர்’ என்று பொருள். அதற்குப்பின் இவர்கள் அல்லாத மக்களை, அதாவது முஸ்லிம்களை, குறிப்பிடும் பொழுது ‘குஸ்பேட்டியா’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இதன் அர்த்தம் ‘ஊடுருவி இருப்பவர்கள்’. ஆங்கிலத்தில் ‘Infiltrators’ என்று சொல்லலாம். சிலர் இதற்கு ‘illegal migrants’தான் அர்த்தம் என்று சொல்லக்கூடும், ஆனால் அதற்கு சரியான இந்திப்பதம் ‘அவைத் ஆப்ரவாசி’

அதாவது, இதர மதத்தைச் சேர்ந்தோர் கண்ணியமிக்க சொல்லால் மதிப்புடன் அழைக்கப்படுகின்றனர். இஸ்லாமிய மதத்தினர் மட்டும் கண்ணியமற்ற, அவதூறான சொல்லால் குறிக்கப்படுகின்றனர்.

இதில் எல்லாவற்றையும்விட முக்கியமான ஒரு கேள்வி, அந்த ‘ஊடுருவர்கள்’ என்ன ஆவார்கள் என்பதுதான். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். NRC வந்துவிடுகிறது; மிக மிகக் குறைந்தபட்ச எண்ணிக்கையாக 10 கோடிப் பேர் இந்தியரல்லர் என்று ஆகிறது. அதில் 5 கோடிப் பேர் இந்து, சீக்கிய, பௌத்த, கிறித்துவ, சமண மதத்தினர். அவர்கள் CAAவின் துணைகொண்டு குடியுரிமை பெற்றுவிடுகிறார்கள். மீதி 5 கோடி முஸ்லிம்கள் (‘ஊடுருவர்கள்!’) வந்தேறிகள் என்ற முத்திரை பெற்று குடியுரிமை இழக்கிறார்கள்.

அவர்கள் நிலை என்னாகும்? இதுதான் ஆகப்பெரிய கேள்வி. அவர்களை நாடு கடத்த முடியாது. அசாம் கணக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுதே அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பங்களாதேஷ் பலமுறை சொல்லிவிட்டது. இதற்குமுன்புகூட தங்கள் குடிமக்கள் எல்லை தாண்டி இந்தியா நுழைந்ததாக பங்களாதேஷ் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டதே இல்லை.

உச்சகட்டமாக, அப்போது டாக்கா பயணித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘NRC என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், அதற்கும் பங்களாதேஷுக்கும் சம்பந்தம் இல்லை,’ என்று கூறி இருக்கிறார். அப்படி என்றால், அந்த 19 லட்சம் பேர் பங்களாதேஷ் போக மாட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் குழப்பம் போதாதென்று பங்களாதேஷின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமென் ஒரு பேட்டியில் பேசுகையில் NRC பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஜெய்சங்கர் தன்னிடம் உறுதி அளித்து விட்டதாக ஊடகச் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

நம்முடன் நல்ல நட்புடன் இருக்கும் பங்களாதேஷ் கதியே இது என்றால், பாகிஸ்தான் பற்றி கேட்கவே வேண்டாம். அதையும் இம்ரான் கான் தெளிவுபடுத்திவிட்டார். CAA மூலம் குடியுரிமை இழக்கும் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லிவிட்டார்.

இப்போது அவர்கள் கதி என்னாகும் என்று யோசிப்போம்:

நாடு கடத்துவது: இது வேலைக்காகாது என்று மேலே பார்த்துவிட்டோம். கோடிக்கணக்கான ‘அகதிகளை’ ஏற்றுக்கொள்ள எந்தச் தேசமும் முன்வராது.

தடுப்புக் காவல் முகாம்கள் (Detention Centres) அமைத்து அதில் அவர்களை அடைப்பது: சரி, ஐந்து கோடிப் பேர் கொள்ளும் அளவுக்கான முகாம்கள் எங்கே அமைக்கப் போகிறோம்? அதற்கு ஆகும் செலவு என்ன? ஐந்தாறு கோடி என்றால் கிட்டத்தட்ட தமிழ்நாடு மக்கள்தொகை அளவு வருகிறது. ஒரு மாநிலத்தையே காலி செய்து அங்கே முகாம் அமைக்க வேண்டி இருக்கும். அப்புறம், அந்த முகாம்களில் இருந்து மக்கள் தப்பிக்காமல் பார்த்துக்கொள்ள காவல் செலவும் எவ்வளவு ஆகும்? அவர்கள் எவ்வளவு காலத்துக்கு அங்கேயே இருப்பார்கள்? சில ஆண்டுகளா அல்லது வாழ்நாள் முழுமையா? இந்த ஐந்து கோடிப் பேர் சும்மா இருக்கப் போவதில்லை. இனப்பெருக்கம் செய்யத்தான் போகிறார்கள். அதாவது ஐந்து கோடி என்பது ஆறு, ஏழு, எட்டுக் கோடியாக பெருகும். அப்போது என்னாகும்?

குடியுரிமை பறித்து அப்படியே விடுவது: அவர்களை முகாம்களில் அடைக்காமல் குடியுரிமை மட்டும் பறித்துவிடுவது. அதாவது வாக்குரிமை, ரேஷன் அட்டை, ஆதார் போன்றவை அவர்களிடம் இருந்து பறிக்கப்படும். அரசு வேலைகள், அரசு சேவைகள் எதுவும் அவர்களுக்குக் கிட்டாது. அவர்கள் ஒரு ப்ரீபெய்ட் சிம் கார்டுகூட வாங்க முடியாது. இதையும் யோசியுங்கள். ஒரு ஐந்து கோடிப் பேர் இந்தியாவில் எந்த உரிமையும் இன்றி வாழ தள்ளப்படுகிறார்கள். அவர்கள் என்னாவார்கள்? எப்பேர்ப்பட்ட குற்றங்கள் புரிவதற்கு இவர்கள் தள்ளப்படுவார்கள். இவர்களில் அநீதிக்கு எதிரான புரட்சிப்படை வேறு உருவாகும். அதன்மூலம் எப்பேர்ப்பட்ட அழிவு வேலைகள் அரங்கேறும். அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை கண்காணித்து சரி செய்ய எப்பேர்ப்பட்ட படைகள் தேவைப்படும்?

அவர்களை கட்டாக கப்பலில் ஏற்றி வங்காள விரிகுடாவில் வீசி எறிவது. இதைத்தான் அமித் ஷா ஒரு தேர்தல் உரையில் குறிப்பிட்டார். ஒரு தேசம் ஐந்து கோடிப்பேரை கடலில் வீசி எறிவதன் பின்விளைவுகளை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். அதனை வேறு விவரித்து நான் அவமானப்பட விரும்பவில்லை.

இப்படிப்பட்ட ஒரு அவலத்துக்கு எதிராகத்தான் தேசம் தெருவில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கிறது. இந்த அவலத்தை ஆதரித்துதான் பாஜகவினர் வாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். போரிடுவோரை அவமானப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தெருவில் இறங்கிப்போராடுவோர் எல்லாரும் சட்டவிரோத வந்தேறிகள் என்று இகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

கடைசியாக ஒரு விஷயம்: வங்கதேசப் போருக்குமுன் பாகிஸ்தானிய ராணுவத்தின் கைகளில் வங்கதேச இந்துக்கள் பெரும் அடக்குமுறைக்கு ஆளானார்கள். அவர்கள் லுங்கியை எல்லாம் கழட்டி ‘காட்ட’ சொன்னார்கள் என்ற படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு உணர்ச்சி பொங்க இந்துத்துவர்கள் எழுதிவருகிறார்கள். அது, போருக்கு முன். ஆனால் இவர்கள் மாய்ந்து மாய்ந்து ஆதரிக்கும் இந்தச் சட்டமும் அதையேதான் செய்கிறது! ஒடுக்குமுறைக்கு தப்பி வீடு வாசலையெல்லாம் விட்டு ஓடிவரும் மக்களை லுங்கியை கழட்டி காட்டச் சொல்கிறது. ஆகவே, இவர்கள் எந்த அடக்குமுறையை பார்த்து உணர்ச்சி வசப்படுவதாக நடிக்கிறார்களோ அதே அடக்குமுறையை இங்கே கட்டவிழ்த்துவிட முயற்சிக்கிறார்கள்.

இதுதான் விஷயம். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் முயற்சியின் முக்கிய அடி எடுத்துவைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த அடி, தேசிய குடிமக்கள் பதிவேடு – National Register of Citizens. இதுவும் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவிலேயே இருக்கும் ஒவ்வொரு குடிமகனும், தான் இந்தியன்தான் என்று நிரூபிக்க அலையவேண்டி இருக்கும். எப்போது நம்மை கேம்புக்கு இழுத்துச் செல்வார்களோ என்று 20 கோடி முஸ்லிம்களும் தினம் தினம் தவித்துக் கொண்டிருக்க வேண்டும். இது குடியுரிமைச் சட்டம் கிடையாது. இந்து ராஷ்டிர சட்டம். இந்தியாவை இந்து நாடாக மாற்ற முனையும் சட்டம். இன்னும் குறிப்பாக, இந்து பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றும் திட்டம்.

சரி, இந்து பாகிஸ்தானாக நாமும் மாறுவதில் என்ன தவறு என்று கேட்கலாம். பொருளாதாரத்தில் நாசமாய்ப்போவதில், மேலை நாடுகள் அடிக்கடி எச்சில் துப்பி, அதை வெட்கமின்றி துடைத்துக்கொண்டு கடப்பதில், சில நூற்றாண்டுகள் பின்னே போய் வசிப்பதில், தீவிரவாதத்துக்கு பிளாட் கட்டி கொடுப்பதில், நாடு நாடாக போய் திருவோடு ஏந்தி நிற்பதில், எந்த வெட்கம் மானமும் நமக்கும் இல்லை என்றால் நாமும் மாறலாம்.

அதெல்லாம் இல்லை, நவீன தேசமாக நாம் மாறவேண்டும். இந்தியாவை 22ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு போக வேண்டும், கடும் உழைப்பில் ஈட்டிய சமூகப் பொருளாதார முன்னேற்றங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை மேலும் பெருக்க வேண்டும் என்று விரும்பினால் இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமரத்தனமான பிற்போக்குச் சிந்தனைகளோடு அரசு கொண்டுவர முயலும் இதனை தடுத்து நிறுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.