1934இல் சென்னை விக்டோரியா பப்ளிக் அரங்கில், பெரியார் தலைமையில், தோழர் குருசாமி இரணியனாக நடித்து மேடையேறிய நாடகம் இது. பாரதிதாசன் இதனைப் பெரியாருக்கு சமர்ப்பித்து உள்ளார். 1952 இல் பாரதிதாசன் பதிப்பகம் இதன் நான்காம் பதிப்பை வெளியிடுகையில் அதற்கு முன்னுரை எழுதிய பாரதிதாசன் அந்நூலின் சிறப்பான விற்பனை பற்றிக் குறிப்பிடுகிறார். ஆட்சியாளர்கள் இந்நாடகத்தைத் தடை செய்தது இதன் தேவையை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடுகிறார். அத்தகைய சிறப்புமிக்க நாடகம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

2013 இல் உருவான வெளிப்படை அரங்க இயக்கம் இதனைச் சாதித்துள்ளது. நாடகத்தை இயக்கியுள்ள இராமசாமியின் முதல் தமிழ் நாடகம் இது. புதுவையிலும், சிங்கையிலும் அரங்கம் பயின்று, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் பயிற்சியாளராக பணியாற்றி வருபவர். தனது குருவிநத்தம் கிராமத்தில் பண்பாட்டு செயல்பாடுகளுக்காக அவர் உருவாக்கியுள்ள வெளிதான் வெளிப்படை.

ஒரே தேசம், ஒரே பண்பாடு என ஒற்றைத்தன்மையைத் திணிக்கும் போக்கு வளர்ந்து வரும் சூழலில் இந்த நாடகம் அதனை எதிர்ப்பதற்கான வலுவான ஆயுதமாக மேடையேறி உள்ளது. தொன்மங்களை மறுவாசிப்பு செய்தல், காலனீய மறுப்புக்கான சக்தியாக இந்திய மொழிகள் அனைத்திலும் தொழிற்பட்டது. தமிழகத்தில் பெரியாரியச் சிந்தனை, செயல்பாடுகளின் வீச்சு காரணமாக அகவய காலனீயக் கூறுகளான சாதி, மத, மொழி ஆதிக்கங்களை எதிர்க்கும் போக்கு 1930களில் இருந்தே கால்கோள் கொண்டது. அதன் ஒரு வெளிப்பாடாக இரணியன் நாடகம் முகிழ்த்தது. தொடர்ந்து தமிழக அரசியலில் வேரூன்றிய திராவிட இயக்கத்தின் வாரிசுகள் அனைவரும் நாடகம், திரைப்படம் இரண்டையும் கையில் எடுத்தனர். “கூத்தாடிகள்” ஆட்சியைப் பிடித்தது பற்றி காழ்ப்பு கொண்ட ஆச்சாரியர்கள் பலர். புராணக்கதைகளைத் தழுவி நாடகங்கள் செய்த சங்கரதாஸ் சுவாமிகள், தொடக்க கட்ட நவீன நாடகங்களை உருவாக்கிய பம்மல் சம்பந்த முதலியார், சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், கிருஷ்ணசாமிப் பாவலர் போன்றோர் செய்துவந்த நாடகங்களில் இருந்து வேறுபட்ட உரைநடை, சமூகக் கருத்துக்கள் எனப் பெருமுழக்கமிட்ட நாடகங்கள் பெரியாரிய, திராவிட இயக்க நாடகங்கள்.

1970களின் இறுதியில் நவீன நாடகம் இந்திய தேசிய நாடகப் பள்ளி நடத்திய காந்தி கிராமம் பட்டறை, பாதல் சர்க்கார் வீதி இயக்கத்திற்காக நடத்திய முதல் பட்டறை மூலம் உயிர்ப்பு பெற்றது. இந்தப் புதிய நாடகம் தன்னை முற்றிலும் புதிதாகக் கருதியது. அக்காலகட்டத்தில் துணுக்குத் தோரணங்களாகச் சீரழியத் தொடங்கியிருந்த சபா நாடகங்களுக்கான மாற்று வடிவமாகத் தம்மைக் கட்டமைத்துக் கொண்டன. தமக்கு முந்தைய வடிவங்களை விமரிசித்துப் புதிய வடிவங்களைத் தேடுதல் வரலாற்றில் புதிதல்ல. ஆனால், நாடகத்தில் வீரியமாக இருந்த பெரியாரிய, திராவிட இயக்கப் படைப்புகளை அவற்றின் கருத்து நிலை, மொழிக் கூறுகள் காரணமாக ஓரங்கட்டத் தொடங்கியது நவீன நாடகம். எனவே, ‘வெறும் முழக்கங்கள்’, செவிக்கான நாடகங்கள் (காட்சிக்கு உகந்தவை அல்ல), அரசியல் ரீதியாக உடன் நிற்பவர் மட்டுமே பார்ப்பதற்கான நாடகம், கலைத் தன்மை குறைந்தவை எனப் பலவாறாக விமரிக்கப்பட்டன. பலன், அரங்கவியல் மாணவர் கூட பாரதிதாசன், சி. என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, புலவர் குழந்தை, தென்னரசு போன்ற நாடகாசிரியர்களைக் குறித்துக் கேள்விப்படுவது கூட கிடையாது. இத்தகைய சூழலில்தான் இரணியன் நாடகம் அரங்கேறியுள்ளது.

1952 இல் எழுதிய முன்னுரையில், “அப்போது நான் எழுதிய இரணியனில், இப்போது மாணவர்க்குப் பிடிக்காதது ஒன்றுண்டு. அது வடசொற்களைக் கலந்திருப்பதுதான். அப்பிழையைத் திருத்திப் படித்துக் கொள்ளும் ஆற்றல் மாணவர்களிடம் உண்டு” என்று எழுதினார் பாரதிதாசன். நாடக வடிவம் காலத்திற்கேற்ப மாறும் வடிவம் என்பதை உணர்ந்த சொற்கள் அவை. இப்போது எழுபதாண்டுகள் கடந்த நிலையில் இன்றைக்கேற்ற சொற்களாக இந்நாடகத்தை மாற்றுவதில் நெறியாளர் சி. இராமசாமி வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த த. விவேகானந்த ராசா நாடகத்தை இன்றைய தேவைக்கேற்ப உருவாக்கி யுள்ளார். எந்த வகையிலும் மூல நூலின் பொருள்கோடல் சிதையாத வண்ணம் இதைச் செய்துள்ளார். கூத்து வடிவம் தந்த கட்டியக்காரன், பல வேடங்கள் புனையும் நெகிழ்வு ஆகியவை கதை நகர்த்தலுக்கான உத்திகளாகப் பயன்படுகின்றன. நாடக மொழியாக இதனை மாற்றுவதில் களரி உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் உதவியுள்ளன. மிகக் குறைந்த மேடைப் பொருட்களைக் கொண்டு, இசை, உடல் மொழி மூலம் காட்சிகள் உருவகப்படுத்தப் பட்டன. தொடக்கம் முதலே பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக ஆக்கும் ப்ரெக்டிய பாணி விரிந்தது. பிரகலாதன் இளவரசுப் பட்டம் ஏற்கும் விழாக் காட்சியில், வாண வேடிக்கை பார்வையாளர்கள் மத்தியில் எழ, நாமெல்லாம் அக்காட்சிக்குச் சாட்சிகள் ஆனோம். ஒளியமைப்பு மாத்திரம் இன்னும் சிறப்பாக இருந்திருப்பின், சென்னையில் ஸ்பேசஸ் அரங்கில் ஜூலை 21 அன்று மாலை நடந்த நிகழ்வு, மனதில் முழு நிறைவைத் தந்திருக்கும்.

நடிகர்களுக்கு இந்நாடகம் பெரும் சவால். இருவர் தவிர பிற ஆறு நடிகர்களும் கதைசொல்லிகளாகவும், வேறு பல பாத்திரங்களை ஏற்பவர்களாகவும் நொடிக்கு நொடி மாற வேண்டியிருந்தது. இரணியனாக நடித்த ப்ரேம்நாத், மஹரிஷியாகப் பாத்திரம் ஏற்ற சுதன் ஆகிய இருவரும், முழுக்க பாத்திரத்தை உள்வாங்கிச் செய்தனர். இரணியன் நம் காலத் தலைவனாக, மிக்க மதிப்புடன் வெளிப்பட்டார். லீலாவதியாக அனுஷா, சித்ரபானுவாக டெல்ஃபின் ஆகிய இருவரும் பல பாத்திரங்களாகப் பங்காற்றினர். அக்கால நாடகவடிவில் மேலோங்கியிருந்த பெண் பாலினம் குறித்த சிக்கல்களைத் தாண்ட இவர்கள் இருவரும் பல பாத்திரங்கள் ஏற்றது உதவியதெனலாம். திருப்பத்தூரை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் தேசிய நாடகப் பள்ளியில் அரங்கப் படிப்பு முடித்துத் திரும்பியுள்ளார். அவர் நடிப்பில் தெரிந்த முதிர்ச்சி நிறைவாக இருந்தது. மாணிக் பிரகலாதன் ஆகவும், வேறு பல பாத்திரங்களாகவும் இயல்பான ஓட்டத்தில் வெளிப்பட்டார். பாபுவின் உடல்மொழி காட்டிய நகைச்சுவை மனதில் நிற்கிறது. நேதாஜி மிகை நடிப்பற்று, சரளமான தமிழில் நம் மனதைத் தொட்டார். மேடைக்குப் பின் உழைத்த பெரும் படை இளைஞர்கள் கூட்டம்.

திரைப்படத்தில் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், அரங்கத்தில் செய்வதற்கும் பெரும் வேறுபாடு உண்டு. நீதிமன்றங்கள் வந்து பஞ்சாயத்து செய்ய முடியாத நாடக வடிவில், மக்களைச் சென்றடைவது, நேரடித் தொடர்பு மூலம் சாத்தியம். விவாதங்களை அடக்கும் கண்காணிப்பு எங்கெங்கும் பரவும் இந்நாளில் இரணியன் போன்ற நாடகத்தை பட்டி தொட்டியெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும். மக்களோடு நேரடியாக உரையாடலைத் தொடங்க வேண்டும். அதனைச் செய்ய நாடகக் குழு தயாராகி விட்டது. அதனை நமதாக்கிக் கொண்டு சொந்தம் கொண்டாட இயக்கங்களும், அமைப்புகளும் முன்வர வேண்டும்; வருவார்கள் என நம்புகிறேன்.

தமிழ் நாடக வரலாற்றை மீள் பரிசீலனைச் செய்ய வைத்த குழுவிற்கும், இராமசாமிக்கும் எனது மனதார்ந்த வாழ்த்துக்கள்!