இலங்கை முப்பதாண்டு காலமாக இன அழிப்பிற்கான யுத்தத்தில் சிதைந்த தீவு. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகள் ஆகின்ற தருணத்தில், இலங்கையின் இயல்பு நிலையையும், இனங்களின் வாழ்க்கை மற்றும் போராட்டத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது ஏப்ரல் 21 நிகழ்வு. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதக் கும்பலினால் இயக்கப்பட்ட உள்ளுர் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு ஒன்று இந்த நாசகாரப் பயங்கரத்தை நிகழ்த்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் அதன் அரசு ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைகளைத்தான் இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.
ஏப்ரல் 21. ஈஸ்டர் எனப்படும் உயிர்த்த ஞாயிறு தினம். உலகமெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் யேசு பிரான் உயிர்த்த நாளாக அத் தினத்தை நினைவு கூர்ந்து பிரார்த்திக்கின்றனர். அமைதியிழந்து, அவலங்களும் துயரங்களும் மிகுந்த இலங்கைத் தீவில் பிரார்த்தனையில் இருந்த மக்கள்மீதுதான் இக் கொடும் தாக்குதல் நடத்தப்பட்டது. 8.45 மணிக்கு முதல் குண்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயத்தில் வெடித்தது. அங்கு மாத்திரம், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். அடுத்து, நீர்கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயத்திலும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.
இதைத் தவிர, இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரபல விடுதிகள் மூன்றில் குண்டுகள் வெடித்தன. இதில் வெளிநாட்டவர்கள் பலர் சிக்கி உயிரிழந்தனர். இதுவரையில் 360பேர் இந்த தாக்குதலில் சாவடைந்துள்ளனர். அதில் 38பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் எழுபது வீதமானவர்கள் தமிழர்கள். இந்தத் தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும், இதனைத் தடுத்து நிறுத்த அரசு முயலவில்லை. ஈழத் தமிழ் மக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதால்தான் அவ்வாறு அரசாங்கம் அசமந்தமாக இருந்ததா?
இலங்கை முழுவதுமாக யுத்த காலத்திற்கு பின் நகர்ந்துள்ளது. எந்த சோதனைச் சாவடிகள் வேண்டாம் என ஈழ மக்கள் போராடினார்களோ அவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ராணுவத்தினர் பாதுகாப்பிற்காய் பெருக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லுவதற்கிடையில் மூன்று சோதனைச்சாவடிகளில் இறங்கி ஏற வேண்டிய நிர்ப்பந்தம். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆட்கள் வீடுகளுக்குள் முடங்கி வாழ்கின்றனர். எப்போது மீண்டும் குண்டுவெடிக்கும் என்ற பதற்றத்தில்தான் ஒவ்வொரு முகங்களும் உள்ளன. நிச்சயமின்மையையும் அச்சத்தையும் இக் குண்டு வெடிப்புகள் பெருக்கியுள்ளன.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களைப் பெருமளவுக்கு இந்த தாக்குதல் பாதித்ததுள்ளது. பர்தா அணிந்தபடி தமது நிறுவனங்களுக்குள் வரக்கூடாது என்று பல நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. அரச நிறுவனங்கள்கூட சுயாதீனமாக இந்த முடிவை அறிவித்துள்ளன. தாடி வைத்தவர்கள், குல்லா அணிந்தவர்கள் என்றாலே குண்டுகளைக் கொண்டு வருகின்றனரா என்ற அச்சம் அவர்களைத் தனிமைப்படுத்துகிறது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்க குழு ஒன்று செய்த இந்த நாசகார செயலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்கள்மீது பழிபோட இயலாது. ஈழ மக்கள் அவ்வாறு கருதவில்லை. குறித்த இயக்கத்தை அழிக்கக்கோரி, இஸ்லாமிய மக்களே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆனால் சிங்கள அரசு, குறித்த அடிப்படைவாத இயக்கத்தை ஈழ மக்களை அழிக்கவும் போரில் புலிகளை வெல்லவும் பயன்படுத்தியுள்ளதை அரசாங்கத் தரப்பினரே கூறுகின்றனர். இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இன்றைய அரசும் குறித்த இயக்கத்தை தமது ரகசிய தொடர்பில் பேணி வந்துள்ளனர். அது மாத்திரமின்றி இலங்கை புலனாய்வுக் கட்டமைப்பில், நிறைய முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டிருந்தார்கள். ஈழத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்வதில் குறியாக இருந்த சிங்கள அரசு இவ் இயக்கத்தை வளர்த்து விட்டமையும் பெரும் குற்றமாகும்.
உலகிலேயே மருத்துவமனைகள்மீது குண்டுகளை வீசிய அரசு இலங்கை அரசுதான். தேவாலயங்கள்மீது குண்டுகளை வீசிய அரசு, இலங்கை அரசுதான். பள்ளிக்கூடங்கள்மீது குண்டுகளை வீசிய அரசும் இலங்கை அரசுதான். குண்டுகள் வீசப்படக் கூடாத மனிதாபிமான – போர் தவிர்ப்பு வலயங்கள்மீது குண்டுகளை வீசி மக்களை அழிக்கும் பயங்கரவாதத்தை உலக பயங்கரவாதிகளுக்குப் போதித்ததே இலங்கை அரசுதான். ஈழமண்ணில் உள்ள நவாலி சென் பீற்றர் தேவாலயம் மீது சிங்கள அரசு 1995இல் குண்டுகளை வீசியபோது உருக்குலைந்த அந்தக் கோயில்தான் இன்று கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயத்தைப் பார்க்க நினைவுக்கு வருகின்றது. அக் கோயிலில் சிங்கள அரசின் விமானத் தாக்குதலில் 65 பேர் அந்த ஆலயத்திற்குள்ளேயே சிதறிப் பலியாகினர்.
அதைப்போல மன்னாரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற மடுத்தலம் மீது 1999இல் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 45 பொதுமக்கள் ஆலயத்தில் கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணம் நந்தாவில் அம்மன் ஆலயத்தில் நடத்திய குண்டு தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள். யாழ் நாகர் கோவில் பள்ளிமீது குண்டு வீசியதில், 21 பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். கிளிநொச்சி வைத்தியசாலைமீது குண்டுகளை வீசி அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். செஞ்சோலை சிறார் இல்லம்மீது குண்டுகளை வீசியதில் 54 மாணவிகள் கொல்லப்பட்டார்கள். இறுதி யுத்த காலத்தில் சிங்கள அரசு குண்டுகளை வீசாத இடங்களே இல்லை. அந்தளவுக்கு ஈழ மண்ணைப் போர் விமானங்கள் அழித்தது.
இலங்கையில் அரசில் ரீதியாகவும் இனங்களுக்கு இடையிலும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசியல் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. மக்களைப் பாதுகாக்க தவறியுள்ளமையை ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் விடுதலைப்புலிகள் ஒருபோதும் இவ்வாறான தாக்குதல்களை நடாத்தவில்லை, அவர்கள் தமது நோக்கத்தில் தெளிவாக இருந்தனர் என்று இலங்கை அரசு முதல் சர்வதேச சமூகம் வரை கருத்துக்களை கூறி வருகின்றன. உண்மையில் புலிகள் இயக்கம் இருந்திருந்தால், இந்தத் தாக்குதல் இடம்பெற்றிராது. மக்கள் அழிக்கப்பட்டிரார்.
விடுதலைப்புலிகள் ஈழத் தமிழ் மக்களை மாத்திரமல்ல, சிங்கள மக்களையும் பாதுகாத்திருப்பர். புலிகளின் வீரம் இலங்கைத் தீவையே பாதுகாக்க உதவும். இப் பயங்கரவாத தாக்குதல்கள் பயங்கரவாதம் என்றால் என்ன என்ற அறிவையும் தெளிவையும் சிங்கள மக்களுக்கு வழங்கியுள்ளது. அத்துடன் முஸ்லிம் மக்கள் என்றும் வடக்கு கிழக்கு தேசத்தின் மக்களே. அவர்களை வெறுப்பதும், அவர்கள்மீதான ஒடுக்குமுறைக்குத் துணை போவதும் ஈழ மக்களுக்கு உவப்பானதல்ல. ஈழத் தமிழ் மக்கள் நியாயமான போராட்டத்திற்காக பல ஒடுக்குமுறைகளை அனுபவித்தார்கள். ஆனால் முஸ்லிம் அவர்களுக்கு உடன்பாடற்ற ஒரு இயக்கத்தால் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கத் தொடங்கிள்ளார்கள் என்பதே கவலைக்குரிய விடயம். எப்படி இருப்பினும் இந்த நேரத்தில் முஸ்லிம் மக்களுக்குத் துணையாகத் தமிழ் பேசும் மக்களான தமிழர்கள் உள்ளனர்.
மட்டக்களப்பு சியோன் தோலயத்தில் குண்டு வைத்த குண்டுதாரி தன்னுடைய பெயர் உமர் என்றும் ஓட்டமாவடியில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளான். அவனை சந்தேகதித்து ஆலயத்திற்கு உள் அனுமதிக்க மறுத்த ரமேஸ் என்பவரும் இத் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயத்தில் குண்டு வைக்கச் செல்லும் குண்டுதாரி குழந்தை ஒன்றின் தலையை தடவிவிட்டுச் செல்லும் காட்சி பலரையும் உலுக்கியுள்ளது. பச்சிளங் குழந்தைகளை எல்லாம் அழிக்க இவர்களுக்கு எப்படி மனது வந்தது? மதம் என்னும் மிருகமாய் அவர்கள் மாறியுள்ளனர். இந்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரம் இலங்கைத் தீவில் அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் நிலத்திற்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை, உலக நாடுகளின் கூட்டு துரோகத்துடன் பயங்கரவாதத் தாக்குதல்களை நடாத்தி அழித்துவிட்டு, பயங்கரவாதத்தின் கோரத்தை இலங்கை எதிர்கொண்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கு, இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது நடாத்திய இதுபோன்ற பயங்கரங்களுக்கு நீதியை வழங்கி மன்னிப்பு கோர வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் உரிமையை அவர்களிடம் வழங்கி, அவர்களைப் பலப்படுத்தி உலகப் பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள இலங்கை அரசு முன் வரவேண்டும்.