நடந்துமுடிந்த 2019 நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளித்தது என்பதைக் கூறத் தேவையில்லை. பாரதீய ஜனதாவின் இந்துத்துவம் ஒரு இஸ்லாமிய வெறுப்பு பாசிசக் கொள்கை; பிற்போக்குவாதமும், பார்ப்பனீய அடித்தளமும் கொண்டது என்பதன் அடிப்படையில் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளேன்; என்னாலான குடிமைச் சமூக நடவடிக்கைகளிலும் பங்கேற்றுள்ளேன். ஆனாலும் எது நடக்கக்கூடாதோ அது நடந்தேவிட்டது. பாரதீய ஜனதா வென்றுவிட்டது. முன்னிலும் அதிகமான ஓட்டு சதவீதம், பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படிக் கழியப்போகிறதோ என்று அச்சமாகவும், கவலையாகவும் இருக்கிறது.

அதனால் கையறு நிலைக்குச் சென்று புலம்பலாமா அல்லது யாரால் இப்படி நடந்தது என அரசியல்வாதிகள், கட்சிகள் மீது பழிபோட முனையலாமா அல்லது இன்னும் பல மதவாத, பாசிச ஆய்வுகளைச் செய்து மக்கள்மீதே பழி சுமத்தலாமா? இல்லை தோழர்களே, அதெல்லாம் பயனற்ற செயல்கள் என்றே நினைக்கிறேன். அரசியல் சிந்தனையாளர்களான நாம் முதலில் சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். நாம் என்ன எதிர்பார்க்கிறோம்? என்ன கற்பிதம் செய்கிறோம்? எப்படி சிந்தனையாக்கம் செய்கிறோம்? இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமான கேள்விகள்.

அரசியல் சிந்தனையாளர்களின் சுயபரிசீலனை என்று குறிப்பிடுவது அரசியல் சிந்தனையின் சுயபரிசீலனையைத்தான். குறிப்பாக, தேர்தலுக்குப் பின் இந்தியா குறித்து ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதப்பட்டு என் பார்வைக்கு வரும் எழுத்துக்கள் எல்லாமே பொதுவாக முதிர்ச்சியற்ற எழுத்துக்களாகத்தான் இருக்கின்றன. சில அபத்தமாக இருக்கின்றன. நிச்சயம் இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொள்ள ஆற்றல் அற்றவையாக இருக்கின்றன. ஆகா, அத்தனைப்பேரையும் குறை சொல்ல நீ யார்? பெரிய டாஷா (வசவுச்சொல்) என்று யாரும் கேட்கலாம்.

நான் யார்?

நான் சாதாரணமான ஒரு அரசியல் சிந்தனையாளன் மட்டும்தான். என் அரசியல் சிந்தனையை வடிவமைக்கும் சிந்தனையாளர்களின் பட்டியல் எந்த ஒரு சிறந்த உயர்கல்வி நிறுவனத்திலும் ஆய்வு மாணவர்கள் எதிர்கொள்ளும் சிந்தனையாளர்களின் பட்டியல்தான். சில பெயர்கள் கூடக் குறைய இருக்கலாம். தேவைப்பட்டாலன்றி பெயர்களை உதிர்ப்பதில்லை என்பதால் நான் பட்டியல் எதுவும் தருவதில்லை. தொடர்ந்து அனுதினமும் தேடித்தேடி வாசித்து வருகிறேன். என் வாசிப்பு போதாமையுடன் இருக்கலாம், என் சிந்தனை தவறான முடிவுகளை எட்டலாம். ஆனால் பொதுமன்றத்தில் இப்படி ஒரு கட்டுரையை எழுத எனக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் நான் அரசியல் தத்துவத்தைத் தொடர்ந்து பயின்று சிந்தித்து வருகிறேன். ஏற்பதும் மறுப்பதும் படிக்காமலேயே புறக்கணிப்பதும் எள்ளிநகையாடுவதும் உங்கள் உரிமை, சுதந்திரம். நான் அஞ்சாமல், யார் மனம் புண்படுமோ என்று கவலைப்படாமல் என் சிந்தனையை வெளிப்படையாக எழுதப்போகிறேன். சற்றே கோபமாகவே சில வரிகளை எழுதுவேன். ஆங்கிலத்தில் ராண்ட் (rant) என்பார்கள். அதனால் யார் கோபித்தாலும் சரி. தூற்றுவார் தூற்றலும், போற்றுவார் போற்றலும் எனக்கே உரியவை. ஏற்றுக்கொள்வேன்; தொடர்ந்து சிந்திப்பேன். எழுதுவேன்.

முதலில் இந்தப் பழிபோடும் மனோபாவத்தை கைவிடுவோம். ராகுல், அகிலேஷ், மாயாவதி, மமதா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால் யார் தலையாவது உருள வேண்டும் என்பது அபத்தமான ஒரு வெறி. அடுத்து ஐயோ மக்கள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டார்கள். மக்களாட்சி தன் சாத்தியங்களை இழந்துவிட்டது என்ற ஒரு புலம்பல். உலகம் முழுவதும் வலதுசாரிகள் கை ஓங்கிவிட்டது என்பார் ஒருவர்; இந்தியாவின் ஆன்மா இறந்துவிட்டது, பேய் பிடித்துவிட்டது என்பார் இன்னொருவர். இப்படி இப்படியாகப் பலப்பல மனக்குமறல்களை வாசித்த வண்ணம் இருக்கப் போகிறோம்.

ஆனால் எனதருமை அரசியல் சிந்தனையாளர்களே! ஒருவேளை இந்தத் தேர்தலில் மொத்த வாக்குகள் ஆங்காங்கே பத்து சதவீதம் இடம்மாறி, காங்கிரஸ் 150-, 200 தொகுதிகளும், மற்ற கட்சிகள் 150-, 200 தொகுதிகளும் வென்று, பாரதீய ஜனதா முழு பெரும்பான்மை பெறாமல் போயிருந்தால், கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நமக்கு மக்களாட்சியில் நம்பிக்கை வந்திருக்கும் இல்லையா? இந்தியாவின் ஆன்மா பொலிவுடன் ஜொலித்திருக்கும் இல்லையா? அப்போது நாம் எதை விவாதிக்க வேண்டும்?

அரசியலின் ஆழமான அமைப்புரீதியான பிரச்சினைகளையா?

அல்லது இந்த பத்து சதவீத ஓட்டுகள் எப்படி இடம்பெயர்ந்து பாரதீய ஜனதாவிற்கு சென்றது என்பதையா?

ஆழமான காரணங்களும், சமூக வேர்களும், அமைப்புரீதியான பிரச்சினைகளும் பாசிசம் தோற்றால் நம் பார்வையிலிருந்து காணாமல் போய்விடும்; பாசிசம் வென்றால் மேலே எழுந்துவந்து எல்லோரையும் துன்புறுத்தும் என்பதுதான் அரசியல் ஆய்வா என்று வியக்காமல் இருக்கமுடியவில்லை. நம்முடைய பிரச்சினை நோய் இருக்கக்கூடாது என்பதல்ல. அதன் அறிகுறிகள் வெளியே தெரியக்கூடாது என்பதுதான். நாம் கற்பித்துக் கொள்ளும் சில, பல சமூக உருவகங்கள் மாயா உலகமாக எழுந்து நம் கண்ணில் எந்த அவலமும்படாமல் மறைத்துவிட்டால் நாம் செக்யூலர், லெஃப்ட், லிபரல் இன்டெலக்சுவலாக, அதாவது இடதுசாரி, மதச்சார்பற்ற, சுதந்திரவாத சிந்தனையாளராக மகிழ்ந்து இருப்போம். சுருக்கமாக நம்மை இமசு சிந்தனையாளர்கள் என்று பெயர் வைத்துக்கொள்வோம்.

வலதுசாரி, மதச்சார்பற்ற, சுதந்திரவாத, (வமசு) சிந்தனையாளர் என்று ஒருவர் இருப்பதாக நான் நினைக்கவில்லை இருந்தாலும் அவர்களை நோக்கி நான் எழுதவில்லை. அத்தகைய வமசு சிந்தினையாளர்கள் பத்ரி சேஷாத்ரிபோல பாஜக ஆதரவாளர்களாகவே இருப்பார்கள் என்பதால் நான் அவர்களைப் பற்றி கவலைப்படப்போவதில்லை.

பொதுவாக இமசு மனநிலை மக்கள் எப்படியும் வாழலாம்; நாம் ஒன்றும் தலையிடமாட்டோம். ஆனால் அரசியலில் அவர்கள் தவறாக ஓட்டுப்போட்டு நம் கனவைக் குலைத்துவிட்டால் உடனே அவர்களை சபிப்போம். இந்தியா மதவாதத்தின் பிடியில் செல்கிறது என்று மனம் மருகுவோம் என்பதாகவே இருக்கிறது. யார் பெயரையும் உதாரணமாகச் சொல்வதைத் தவிர்க்கிறேன். நம் எல்லோரின் சுயபரிசீலனைக்கும்தான் நான் எழுதுகிறேன்.

மக்கள் யார்?

முதலில் மக்கள் என்பதை ஒற்றை அடையாளமாகக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எல்லா குழப்பங்களுக்கும் காரணம் இதுதான். நான் மக்களின் பன்முக அடையாளங்களைக் கூறவில்லை. அரசியல்ரீதியாக மக்கள் ஒரேபடித்தானவர்களாக இல்லை என்பதையே கூறுகிறேன். சிந்தனை வசதிக்காக இந்திய மக்களை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்வோம். பொருளாதாரரீதியாக மேம்பட்டவர்கள் ஐம்பது சதவீதம் என்று வைத்துக்கொள்வோம் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் சிந்திக்கத் தொடங்குவோம் புள்ளி விவரங்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்கள் ஐம்பது சதவீதம் என்று வைத்துக்கொள்வோம், பொருளாதார ரீதியாக மேம்பட்டவர்களை வலிய குடிமக்கள் என்றும், நலிவுற்றவர்களை எளிய குடிமக்கள் என்றும் கொள்வோம்.

வலிய குடிமக்களில் இந்தியாவின் பணக்காரர்கள் என்பவர்கள் அதிகபட்சம் இரண்டு சதவீதம் இருப்பார்கள்; இரண்டு சதவீதம் என்றாலே ஐந்து கோடிப்பேர் (தொழிலதிபர்கள், சி.இ.ஓக்கள், நிறுவன அதிபர்கள், பெருநில உடைமையாளர்கள் இத்யாதி). அதிக வசதியான உயர் மத்தியதர வர்க்கம், ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கம், இரண்டும் சேர்ந்து இருபது சதவீதம் என்று வைத்துக்கொள்வோம் (சொத்துக்கள் வீடு, வாசல், நிலம் உடையவர்கள்). வலிய குடிமக்களில் மீதமுள்ளவர்கள் மத்தியதர வர்க்கம் என்னும் ஓரளவு நிலையான, சுமாரான மாத வருவாய் உள்ளவர்கள். அதிகபட்சம் இதெல்லாம் சேர்ந்து ஐம்பது சதவீதம். இந்தப் பரப்பை குடிமைச் சமூகம் என்றும் கூறலாம்.

இன்னொரு ஐம்பது சதவீதமான எளிய குடிமக்கள் பற்றி நமக்குச் சரியாகத் தெரிவதில்லை. நகர்ப்புறங்களில் சேரிகளில் இருக்கிறார்கள். சில இடங்களில் நம் கண்ணில் படுகிறார்கள். நம் வீடுகளில் வேலை செய்ய வருகிறார்கள். கட்டுமானத் தொழிலில் ஒப்பந்தக் கூலிகளாக இருப்பதை நாம் பார்க்க முடியும். கிராமப்புறங்களில் விவசாயக் கூலிகள், உதிரி வேலைகள் செய்பவர்களாக இருக்கிறார்கள். நாம் செல்லும் மால்களில் துப்புரவு பணி செய்கிறார்கள். இடைவேளையில் பர்கர் அல்லது பாப்கார்ன் கொண்டுவந்து தருகிறார்கள். ஸ்வெட் ஷாப் எனப்படும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள். செங்கல் சூளைகளில், உப்பளங்களில் வேலை செய்கிறார்கள். இப்படி இப்படி. பொதுவாக நாம் நுகரும் பண்டங்களை வைத்து யோசித்தால் அது உற்பத்தியாகும் தொடர் சங்கிலியில் இவர்கள் இருப்பார்கள். உதாரணமாக, எல்லாக் கடைகளிலும் நமக்கு கிடைக்கும் சிப்ஸ், முறுக்கு போன்றவற்றை யாரோ எங்கோ வியர்வை வழிய தயாரித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். அத்தனை உருளைக்கிழங்கையும் யாரோ தோண்டியெடுத்து, லாரிகளில் ஏற்றி, சந்தைக்குக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் யாரும் இந்தக் கட்டுரையைப் படிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதால் நாம் என்று வலிய குடிமக்களையே குறிப்பிடுகிறேன். மிக அதிகபட்சம் போனால் ஐநூறு பேர் இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்கலாம். நானும் இதை வாசிக்கும் சாத்தியமுள்ள அந்த ஐநூறு பேரும் வலிய குடிமக்கள் என்னும் குடிமைச் சமூகப் பகுதியைச் சார்ந்தவர்கள்.

வலிய குடிமக்கள் ஐம்பது சதவீதத்தில் பெருமளவு ஆதிக்க ஜாதியினர், நிலவுடைமை ஜாதியினர் இருப்பார்கள். எளிய குடிமக்கள் ஐம்பது சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். இடஒதுக்கீடு, வேறு அரசியல் நடவடிக்கைகள் போன்றவற்றால் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி கொஞ்சம் பேர் பொருளாதாரம் மேம்பட்ட வலிய குடிமக்கள் பகுதியில் இருக்கலாம். அதேபோல சில ஆதிக்க ஜாதியினர், நிலவுடைமை ஜாதியினர் நலிந்த ஐம்பது சதவீதத்தில் இருக்கலாம். ஆனால் பெருமளவில் ஜாதிக்கும் இந்தப் பொருளாதார, அதிகார நிலைகளுக்கும் மிகக் கணிசமான தொடர்பு இருக்கிறது.

இதை வலிய, எளிய குடிமக்கள் தொகுதிகளை வர்க்கம் என்று குறிப்பிடுவது தவறு. ஏனெனில், இந்த இரண்டு மக்கள் தொகுதிகளில் பல அடுக்குகள் உண்டு; பலவிதமான அதிகாரப் படிநிலைகள் உண்டு. அது மட்டுமன்றி பொருளாதாரத்தில் நலிவுற்ற, அதிகாரமற்றவர்களை ஒரு வர்க்கமாகத் திரட்டுவது மிகவும் கடினம். உதிரிப் பாட்டாளிவர்க்கம் என்று கூறலாம். அது ஒரு வர்ணனை மட்டுமே. அவர்கள் பல்வேறு வாழ்க்கைச் சூழல்களில் இருப்பவர்கள். அரசியல் வலுவற்றவர்கள்.

கல்வி முதல் ஐம்பது சதவீதத்தினருக்கு கொஞ்சம் தரமாகவே கிடைக்கும். மற்ற ஐம்பது சதவீதத்திற்கு ஏதோ கிடைக்கிறது. ஆங்கிலம் கற்று, ஆங்கிலப் பத்திரிகைகள் படித்து, தொலைக்காட்சி விவாதங்கள் பார்ப்பவர்கள் அதிகபட்சம் போனால் ஐந்து சதவீதம் பேர் இருப்பார்கள். பிற இந்திய மொழிகளில் செய்தித்தாள், பத்திரிகை படிப்பவர்கள், தொலைக்காட்சி செய்திகள், அரசியல் விவாதங்கள் பார்ப்பவர்கள் அதிகபட்சம் இன்னொரு பத்து சதவீதம் பேர் இருப்பார்கள் எனலாம். இதெல்லாமே நான் மிகவும் தாராளமாகச் செய்யும் மதிப்பீடுதான். அதாவது அரசியல் புரிதல், அரசின் இயக்கம் குறித்த தகவல்கள், பொருளாதாரக் கட்டுமானம் குறித்த அறிதல் என்பதையெல்லாம் ஓரளவாவது கொண்டவர்கள் அதிகபட்சம் இருபது கோடி பேர்தான். ஆனால் மக்கள் தொகை 134 கோடி.

இப்படியான சமூகத்தை ஒரே கட்டமைப்பாகப் பிடிவாதமாக சிந்தித்துப் பார்த்தால் இது நிச்சயம் பிரமிட் போன்ற கட்டமைப்புதான். அதிகாரத்தின் உச்சியில் ஒரு மிகச்சிறிய எண்ணிக்கையினர் மட்டுமே இருக்கிறார்கள். மிக அதிகமான மக்கள் பரப்பினர் அடிமட்டத்தில் பெரிய பரப்பில் இருக்கிறார்கள். அதிகாரம் பெருமளவு பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுவதால் மேலே செல்லச் செல்ல ஆற்றல் பெருகும். இப்படி கூறுவது பொருளாதார வாதமல்ல. ஜாதி போன்றவற்றின் கலாச்சார அதிகாரம் எல்லோரையும் ஓரளவு பிரமிட்டின் மேற்பகுதிக்குக் கொண்டுவந்துவிடும். அபூர்வமாக ஒரு சிலர்தான் கீழே மாட்டிக்கொள்வார்கள். பல சமயங்களில் இது தாற்காலிகமானதாகவே இருக்கும்.

அமைப்புரீதியான பிரச்சினைகள்

நான் மேலே வர்ணித்த பிரமிட் வடிவ சமூக்கட்டுமானம் புதியதல்ல. எல்லோரும் அறிந்ததுதான். ஒரு சில வர்ணனைகள் வித்தியாசமாக இருக்கலாம் என்பதைத்தவிர அமெரிக்கா முதல் எல்லா நாடுகளிலும் இதுதான் நவீன சமூக அமைப்பு. சர்வதேச அளவிலும் இப்படித்தான் இருக்கிறது. முதலீட்டியம் உலக அளவில் இயங்குவதால், உலக முதலாளிகள் கூட்டமைப்பு என்பது பிரமிடின் உச்சியில்தான் இருக்கும். சரி, இதுதான் அமைப்பு, சிஸ்டம் என்றால் அதை எப்படி ஆராய்வது, எப்படிக் குறைகளைச் சரிசெய்வது என்பதெல்லாம் பெரிய கேள்விகள். நான் அதுகுறித்து அதிகம் எழுத விரும்பவில்லை. ஆனால் ஒரு சில முக்கியமான, ஏற்கனவே சுட்டிக்காட்டிய அம்சங்களை மீண்டும் தொகுத்துக்கொள்ள வேண்டும்.

அரசு என்பதை நாம் அரசு இயந்திரம் என்று அழைக்கிறோம். அடிப்படையில் இது அனைத்து சமூகத்தையும் கட்டுப்படுத்தும் அரசியல் நிர்ணய சட்டம் என்ற அருவமான சட்டத் தொகுப்பு. அதன் நிர்வாக வடிவமாகப் பல்வேறு துறைகள், அதிகாரிகளைக்கொண்ட மிக விரிவான அமைப்பு. பஞ்சாயத்து -நகர்மன்றங்கள் என்ற உள்ளூர் நிர்வாகம், மாநில அரசு, மைய அரசு என்று மூன்று தளங்களில் இந்த இயந்திரம் செயல்படுகிறது. ஆனால் உள்ளூர் நிர்வாகம் என்பதன் பங்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதிகாரம் பரவலாகாமல் அதிகம் மையப்படுவதாகவே தோன்றுகிறது. காவல்துறை, துணை ராணுவம் ஆகியவற்றைக்கொண்டு அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது. நீதிமன்றங்கள் குற்றவாளிகளைத் தண்டித்து வைக்கின்றன; இரு தரப்பாரிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்த்துவைக்கின்றன. அனைவரும் சட்டப்படி செயல்படுவதை உறுதிசெய்கின்றன.

இந்த அரசு இயந்திரத்தை நிர்வகிக்க, ஆட்சிசெய்ய தங்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படிப் பிரதிநிதிகளாக விரும்புவோர் அரசியல் கட்சிகளை உருவாக்குகிறார்கள். எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் நிறைய பேர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ அந்தக் கட்சி ஆளும் கட்சியாகிறது. அந்தக் கட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பவர் மாநில முதலமைச்சர், நாட்டின் பிரதமர் போன்ற முக்கிய பதவிகளில் அமர்கிறார்கள். அரசியல் அதிகாரம் என்பதும் பிரமிட் வடிவத்தில்தான் செயல்படுகிறது. உச்சியில் இந்த முதலமைச்சர், பிரதமர் போன்ற தனிநபர்கள் இருக்கிறார்கள். அரசு அதிகாரிகள், காவல்துறை, கட்சிக்காரர்கள் மூன்றும் மூன்று பட்டகங்களாக பிரமிட்டைக் கட்டமைக்க அதன் உச்சியில் இருக்கிறார்கள்.

பொருளாதார பிரமிட்டில் உச்சத்தில் இருக்கும் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர் அரசின் உச்சத்தில் உள்ள அரசியல் தலைவர்களுடன் இணைந்து இயங்குவார்கள். உண்மையில் இது ஒரே பிரமிட் என்றும் சொல்லலாம். நான் ஒரு சிறு நகரில் ‘செல்வாக்கான’ நபர், அதாவது சொத்துக்களும், நிறுவனங்களும் என்னிடம் இருக்கும் நபர் என்றால் அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் என் பேச்சிற்கு செவிசாய்ப்பார்கள். ஏனெனில் வலிய குடிமக்கள் பகுதியில் பிரமிட்டின் மேற்பகுதியில் இருப்பவன் என்பதுதான்.

சார்ல்ஸ் டெய்லர் என்ற சிந்தனையாளர் நவீன சமூக ‘உருவகங்களில்’ மூன்று அம்சங்கள் முக்கியமானவை என்கிறார். ஒன்று பொருளாதார ஒருங்கிணைப்பு; ஒருவரது பொருளாதார வளர்ச்சி பிறருக்கும் உதவக்கூடியது என்ற கருத்தாக்கம். மார்க்சியம் தனி உடைமையை மறுத்து பொதுவுடைமை வேண்டும் என்றாலும் அதில் இன்னமும் அதிகமாக ஒருவரது ஆற்றல்கள் அனைவருக்கும் பயன்படும் என்பதை நம்ப வேண்டும். கோர்ப்பசேவ் எழுதிய பெரொஸ்த்ரைகா நூலைப் படித்தால் பொதுவுடைமையில் எத்தகைய பிரச்சினைகள் இந்த நம்பிக்கையால் வரும் என்பதை புரிந்துகொள்ளலாம். எனவே தனி உடைமையா, பொது உடைமையா என்பது அடிப்படையில் அதிகாரம், முதலீடு இரண்டுமே ஒரு சில புள்ளிகளில் குவியக்கூடியது என்ற சமூக விதியில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவராது. சமகால சீனா பொதுவுடைமையா, தனியுடைமையா என்பதெல்லாம் பெரிய அளவில் ஆய்விற்கு உரியது. இங்கேயே ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளர், மாவட்ட கலெக்டர் அளவு முக்கியமானவராக இருக்கும்போது, சீன கம்யூனிஸ்டு கட்சிக்கும். அரசிற்கும் இடையில் ஆறு வேறுபாடுகளைக் காண்பதற்கு நிறைய முயற்சி வேண்டும். நான் இன்னமும் சமகால சீனா குறித்து அதிகம் படிக்கவில்லை. கலாசாரப் புரட்சியைக் குறித்து சிந்திப்பதே பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. அத்தகைய அரசு மையத்துவம் பயங்கரமானது.

இன்னொன்று, பொது மன்றம் என்ற அனைவரும் உரையாடலில் பங்கேற்கும் ஒரு கற்பித வெளி. மூன்றாவது, நம்மை நாமே ஆண்டுகொள்கிறோம் என்ற, “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற கற்பிதம். இதில் மற்ற கற்பிதங்கள் முன்னே பின்னே இருந்தாலும் கூட சமாளிக்கலாம்; ஆனால் இந்தப் பொருளாதார அம்சத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு மற்ற எல்லா அம்சங்களையும் கணிசமாகப் பாதிக்கக் கூடியது. முதலீட்டியமோ தாமஸ் பிக்கெட்டி என்ற நிபுணர் கூறுவது போல மேலும் மேலும் ஒரு சில புள்ளிகளிலேயே குவியக்கூடியதாக இருக்கிறது.

இன்று பொதுமன்றம் என்பது கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தும் ஊடகங்களால் நிரம்பியுள்ளது. புதிதாக சமூக ஊடகம் என்று ஒன்று தோன்றியுள்ளது – ஆனால் இது சந்தைக்கடை போன்றது. செய்திகளை, இணைப்புகளைப் பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் ஆழமான விவாதங்கள் எதுவும் நிகழ அதிகம் வாய்ப்பில்லை. அப்படி நிகழும்போது முதலீட்டியம் நிச்சயம் குறுக்கிடும் என எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் நம்மை நாமே ஆண்டுகொள்கிறோம் என்ற பொது சமூக உருவகம் பெயரளவில் மட்டுமே செயல்பட முடியும் என்பதும் தெளிவாகிறது.

அமைப்புரீதியாக என்ன செய்ய முடியும்?

அப்படியானால் அமைப்புரீதியாக எதுவுமே செய்ய முடியாதா என்றால் அது மிகவும் பிழையான கருத்து. அரசியல் என்பது வலிய குடிமக்களின் பொறுப்பு. அரசு யந்திரம், அரசியல் கட்சிகளை மட்டும் அதைக் கவனிக்கவிடாமல் பிரமிட் கோபுரத்தில் மேலே இருக்கும் 20%, அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் இன்னொரு 20% இரண்டிலிருந்தும் குடிமைச்சமூக அமைப்புகளை உருவாக்கி தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் பிரசாரங்கள். விவாதங்கள், சட்டரீதியான வழக்குகள், எதிர்ப்புகள் என இயங்கவேண்டும். தொடர்ந்து அரசின் செயல்பாடுகளை விவாதிக்க வேண்டும்; பேச வேண்டும். அரசியல் என்றால் தேர்தல் மட்டுமல்ல. குடிமைச்சமூகம் அரசின் செயல்களை விமர்சிக்கவும். தேவைப்பட்டால் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் முன்வரவேண்டும். எளிய குடிமக்கள்மீது வலியவர்களின் அழுத்தம் அதிகமானால் சமூகத்தில் வன்முறை பெருகும். அதனால் கூடியவரை எளியோரின் நலன்களை அரசு கணக்கில் கொள்ள வேண்டும் என்றால் வலியோரின் குடிமைச்சமூகம் அதில் தீவிர அக்கறை காட்டவேண்டும்.

நம் நாட்டில் எந்த பிரச்சினை குறித்தும் பொதுமன்ற விவாதங்கள் விரிவடைவதில்லை. தொலைக்காட்சியில் நாலு பேர் ஒரு மணி நேரம் விவாதிப்பது பொதுமன்ற விவாதம் இல்லை. அது ஒரு போலி நாடகம். பட்டிமன்றம் போன்ற பொழுதுபோக்கு. அப்படியில்லாமல் ஒவ்வொரு நகரத்திலும், சிறு நகரத்திலும் பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, சில இடையீடுகளைச் செய்ய அமைப்புகள் நிறைய உருவாக வேண்டும். இதில் அரசியல் கட்சிக்காரர்கள் வருவார்கள்தான். வந்தால் அவர்களும் விவாதத்தில் பங்குபெறலாம். கட்சி சார்பு என்பது உறுப்பினர்களுக்கு இருக்கலாம். ஆனால் அமைப்பு பொது அமைப்பாக விவாதங்களையும், இடையீடுகளையும் செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற நபர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டால் குடிமைச் சமூக அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும். மழைக்காலத்திற்கு முன்னர் நீர்நிலைகள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டதா என்று அரசைக் கேட்க வேண்டும். சென்னையில் மீண்டும் மழை பெய்து பெருவெள்ளம் வந்தால் நகரம் பாதிக்கப்படாமல் உபரிநீர் வெளியேற என்ன திட்டம் என்று அரசுடன் உரையாட வேண்டும். பட்டியல் இன மாணவர்களுக்கான விடுதிகள் எந்த வசதியும் இல்லாமல் இயங்கினால் தலையிட்டு அவற்றை மேம்படுத்த தங்களால் ஆனதைச் செய்யவேண்டும்; அரசையும் நிர்ப்பந்திக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா, அவர்களுக்கு பாதுகாப்பு கையுறைகள், ஆக்ஸிஜன் மாஸ்க் ஆகியவை வழங்கப்படுகிறதா போன்ற விஷயங்களில் தீவிர அக்கறை காட்டவேண்டும். தொடர்ந்து விஷவாயு தாக்கி கழிவு நீர்ப்பாதைகள், கிடங்குகளை சுத்தம் செய்ய இறங்குபவர்கள் இறந்துபோவது சமூகத்தின் மனசாட்சியை உலுக்க வேண்டும். அது அரசின் பொறுப்பு என்று கைகழுவி விடக் கூடாது. அவர்கள் துப்புரவு செய்வது அனைவரின் ஆரோக்கியத்திற்காகவும்தான். சரியான தோல் சீருடைகளும், கையுறைகளும், பிராணவாயு முகமூடிகளையும் அவர்களுக்கு அளிக்கும்போதுதான் நாம் ஒரு வல்லரசாகக் கருதிக்கொள்ள முடியும். அணு ஆயுதங்களால் அல்ல.

மனித உரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஜாதி மனோபாவ ஒழிப்பு போன்றவற்றை சிவில் சமூகம் தீவிரமாக எடுத்துக்கொண்டு அமைப்புகளை ஏற்படுத்தி செயல்பட வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் என்பது போல ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும் அமைப்புகள் உருவாகத் துவங்கினால் மெள்ள, மெள்ள மாற்றங்களை ஏற்படுத்த இயலும். ஆனால் இன்றைய நிலையில் கடும் பிரச்சினை சிவில் சமூகம் இயக்கமற்று இருக்கிறது. ஊடகங்களிடம் மூளையையும், அரசியல் கட்சிகளிடம் செயலையும் ஒப்படைத்துவிட்டு வாளாவிருக்கிறது. எல்லா பிரச்சினைகளையும் அரசிடம் மட்டுமே விட்டு விடுகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி ஓட்டுப்போட்டால் போதும் என்பது போல நினைக்கிறது. நாம் பிரமிடைத் தலைகீழாக்க வேண்டாம். இருக்கும் அமைப்பினுள் அதிகாரத்தின் ஓட்டங்களை கூடியவரை மாற்றியமைத்தால் போதும். பிரமிட்டிற்குள்ளான அசைவுகளை சுலபமாக்கி, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எல்லா அரசியல் தத்துவங்களின் கனவும், லட்சியமும்.

மதநல்லிணக்கம் என்பதையும் குடிமைச் சமூகம் முன்னெடுக்க முடியும். “ஈஷ்வர் அல்லா தேரா நாம்” என்ற பாடல் வரியை மறந்து போக விடக்கூடாது. வீதியெங்கும் பாடிக்கொண்டு நடக்க வேண்டும். கூட்டுப் பிரார்த்தனைகளை செயல்படுத்த வேண்டும். எல்லா மதங்களிலும், ஜாதிகளிலும் மனித நேயத்தை கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒன்றுபடுத்த வேண்டும். வலுப்படுத்த வேண்டும். இதெல்லாம் நடக்க சாத்தியமற்றது அல்ல. கபீர் பெயரில் எவ்வளவோ நடந்துள்ளது, நடக்கிறது. நம்மாலும் ஒவ்வொரு ஊரிலும் செய்ய முடியும். மத அடையாளங்களை துறக்க வேண்டியதில்லை. ஆனால் அவற்றிடையே உள்ள வித்தியாசம் விரோதமாகாமல் பரிமளிக்க முடியும். ஏன் இத்தகைய இயல்பான சமூக ஆற்றல்கள் இன்று வற்றிப்போகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு காரணம், நம்மிடையே ஊடகங்கள் புகுந்துகொண்டு உறவுகளைத் துண்டித்து மாயச்சுவர்களை எழுப்புகின்றன. ஒவ்வொரு மதப்பண்பாட்டிலும் இருந்த ஆற்றல் மிக்க கூறுகள் மழுங்கடிக்கப்பட்டு, அடையாளவாத கூறுகள் வலுப்பெறுவதை குடிமைச் சமூகம் மட்டுமே தனக்குள் உறவுகளைப் பெருக்கி தடுக்க முடியும்.

குடிமைச் சமூகம் வலிய குடிமக்களின் அரசியல் பொறுப்பு. எளிய குடிமக்களால் இது போன்ற இடையீடுகளை செய்ய முடியாது. அவர்கள் பொருளாதார நிலை அவர்களுக்கு அமைப்பு கட்டும் சாத்தியத்தை, உபரி ஆற்றலை வழங்காது. ஆனால் குடிமைச்சமூகத்தினர் எல்லா பிரச்சினைகளுக்கும் அவர்களைக் காரணமாக்கப் பார்ப்பதுதான் அயோக்கியத்தனம். எளியவர்கள் பிச்சை எடுத்தாலும் தவறு, அதிக கூலி கேட்டாலும் தவறு, குற்றச்செயல் புரிந்தாலோ கேட்கவே வேண்டாம், ‘சமூக ஒழுங்கு’  ‘அறம்’ எல்லாம் சிதைந்துவிடும். இந்த வலிய குடிமக்களான சமூகத்தின் ஒரு பாதிக்கும், எளிய குடிமக்களான சமூகத்தின் மற்றொரு பாதிக்கும் உள்ள முரணை வர்க்க முரணாகப் பார்க்க முடியாது. எளிய குடிமக்களை ஒன்று திரட்டிப் போராடி, புரட்சி செய்தாலும் மீண்டும் அதிகாரம் சில புள்ளிகளில்தான் குவியும். நாம் சமூகத்தைப் பற்றிய மொத்தத்துவ உருவகங்களைக் கைவிட்டு, முதலீட்டிய உற்பத்தி முறையை முற்றிலும் கைவிட்டு, அரசற்ற நிலையை நோக்கி சென்றால்தான் அதிகாரக் குவிப்பைத் தவிர்க்க முடியும். அதற்கான சாத்தியங்கள் எதுவும் இந்த நூற்றாண்டில் இல்லையென உறுதிபடக் கூறலாம். அதனால் இந்த பிரமிட் வடிவத்தினுள் எப்படி அதிகாரத்தைக்கூடிய வரை பரவலாக்கலாம், மென்மையானதாக்கலாம், எளிய குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தலாம், அவர்களிடமிருந்து வலிய குடிமக்கள் பகுதிக்கு பலர் வருவதை எப்படி அதிகம் சாத்தியமாக்கலாம் என்பதையெல்லாம் தான் யதார்த்தமாக யோசிக்க வேண்டும். கற்பனா வாதமும், புரட்சிக் கோஷங்களும் எளிமையாக இருக்கலாம்; காரியத்திற்கு உதவாது.

குடிமைச் சமூகமும், அரசியல் சமூகமும்

அரசியல் சிந்தாந்தங்கள் பலவும், ஆய்வுகள் பலவும் குடிமைச் சமூகமே மொத்த சமூகமும் என்ற எண்ணத்திலேயே உருவாகின்றன. அதாவது எல்லோருமே வலிய குடிமக்கள் என்று கற்பிக்கின்றன. அது அப்பட்டமான பொய். அதனால் இமசு சிந்தனையாளர்கள் (இடதுசாரி, மதசார்பற்ற, சுதந்திரவாத சிந்தனையாளர்கள்) எதையாவது அபத்தமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

எளிய குடிமக்கள் கடவுளைத் தீவிரமாக நம்புவார்கள். தங்கள் சேமிப்பையெல்லாம் வைத்துக் காவடி எடுப்பார்கள்; ஆடு, கோழி பலி கொடுப்பார்கள்; கோயில் கட்டுவார்கள்; அதில் திருவிழா நடத்துவார்கள். அரசை முழுவதுமாக நம்புவார்கள். வலுவான அரசே தங்களுக்கான பாதுகாப்பைத் தரும் என்று நினைப்பார்கள். அரசியல் கட்சிகளைப் பல்வேறு அன்றாடப் பிரச்சினைகளுக்கும் சார்ந்து இருப்பார்கள்.

வலிய குடிமக்கள் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவார்கள், எளிய குடிமக்கள் அதைச் செய்ய முடியாது. நகர்ப்புறத்திற்கு குடிபெயர்பவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பிடங்களை உருவாக்கிக் கொள்வார்கள். குழந்தைகள் வேலைக்குச் செல்வது தவறு; அவர்களை வேலைக்கு அமர்த்துவதும் தவறு. ஆனால் எந்த ஒரு செங்கல் சூளைக்கும், சலைவக் கல் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் இன்னும் பல இது போன்ற அமைப்புகளுக்குச் சென்றாலும் நிறைய குழந்தைத் தொழிலாளர்களைப் பார்க்கலாம். நகரத்திலும் கூட உணவு விடுதிகளில் பார்க்க முடிகிறது. பாலியல் தொழில் சட்டத்திற்குப் புறம்பானது. ஆனால் மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்தத் தொழில் நிகழத்தான் செய்கிறது. குற்றம் என்பதாக மட்டுமல்ல. வாழ்வாதாரமாகவே பல சட்டத்திற்குப் புறம்பான செயல்களை எளிய மக்கள் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. இந்த அடிப்படையில்தான் சமூகத்தைக் குடிமைச் சமூகமென்றும், அரசியல் சமூகமென்றும் பிரிக்க வேண்டியுள்ளது.

சரியாகச் சொன்னால் குடிமைச் சமூக வலிய குடிமக்கள் சுயநலத்திற்காகத் தங்கள் உபரிகளை, நுகர்வைப் பெருக்கிக் கொள்ள சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவார்கள். அரசியல், சமூக எளிய குடிமக்கள் வாழ்வாதாரத்திற்காக சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவார்கள். பெரு முதலாளிகள் வங்கிக் கடனைச் செலுத்த முடியாவிட்டால், வெளிநாட்டிற்கு ஓடிவிடுவார்கள். விவசாயிகள் வங்கிக் கடனைச் செலுத்த முடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்வார்கள்.

வலிய குடிமக்கள் அரசை உருவாக்குகிறார்கள். எளிய குடிமக்கள் மக்களாட்சியில் அரசியலையே நம்பி இருக்கிறார்கள். இதனால் அரசியல் கட்சிகள் சட்டத்தின் வரையறைகளுக்குள் மட்டுமே நின்று செயல்பட முடியாது. சட்டம் சில சமயம் எளியவருக்கு ஆதரவாக இருக்கும்; பல சமயங்களில் எதிராக இருக்கும். எனவே சட்டம் சார்ந்த செயல்பாடு, சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடு இரண்டுமே அரசியலுக்கு இன்றியமையாதது. இப்போதெல்லாம் எளிய குடிமக்கள் தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையில் சமூகத்திற்கு உரிய பணம் அரசியல் கட்சிகளிடம் குவிந்துள்ளதால் தங்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறார்கள். குடிமைச் சமூகத்தினருக்கோ கடும் கோபம் வருகிறது. ஓட்டுக்குக் காசு வாங்குவதும் கொடுப்பதும் மக்களாட்சி தத்துவத்தையே சிதைப்பதாக அவர்கள் பொங்குகிறார்கள். எளிய மக்களுக்கோ இது ஒன்றும் புரிவதில்லை. அவர்கள் பணம் வாங்காமல் ஓட்டுப்போட்டால் மட்டும் ஏதாவது மாறிவிடுமா என்று அவர்களுக்கு வியப்பாக இருக்கிறது. உண்மையில் எல்லா கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பணம் கொடுப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். இந்த உண்மையை அங்கீகரிக்க இ.ம.சு. சிந்தனையாளர்களாகிய நாம் தயாராக இல்லை. சென்ற மாதம் தமிழகத்தில் அரசியல் கட்சி ஒன்று, அநேகமாக ஆளும் கட்சி என்று நினைக்கிறேன், ஒரு தொகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதியில் பணம் கொடுத்துவிட்டு, அருகிலிருந்த மற்றொரு குடியிருப்புப் பகுதியில் பணம் கொடுக்காமல் சென்று விட்டார்கள். அந்தப் பகுதி மக்கள் வெகுண்டெழுந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். வருவாய்த் துறை, காவல்துறை அலுவலர்களுக்கு இந்தப் போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்றே புரியவில்லை.

அரசியல் சமூகம் என்ற முக்கியமான வியக்தியை கோட்பாட்டாக்கம் செய்தவர்களில் என் ஆசிரியர் பார்த்தா சாட்டர்ஜி முக்கியமானவர். ஆனால் மேலே கூறிய பல செய்திகள் அவரை அடியொற்றி என்னுடைய சிந்தனைப்போக்கில் சொல்பவை. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் குறித்து அவர் என்ன நினைப்பார் என்று தெரியாது. என்னைப் பொறுத்தவரை இது தவிர்க்கவியலாத ஒரு பரிமாணம். வெகுஜன அரசியலின் நுட்பமான சிக்கல்களில் ஒன்று.

தேசியம், பாசிசம், வெகுஜனவியம்

அரசியலின் முக்கிய கேள்வி இந்த வலிய குடிமக்களையும், எளிய குடிமக்களையும் எப்படி ஒன்றிணைத்து சமூக இயக்கத்தை நிகழ்த்துவது என்பதுதான். காலம் காலமாக மத நிறுவனங்கள், கோயில்கள், பூசாரி வர்க்கத்தினர் இந்த ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கி வந்தார்கள். அரசர்களும் தங்கள் அரசாட்சியின் பலன்களை ஒருவாறு அனைவருக்கும் கிடைக்கச் செய்வதாக காண்பித்தார்கள். எளிய மக்களைப் புரந்து காப்பவர்களாக நில உடைமையாளர்கள், குறுநில மன்னர்கள், அரசர்கள் ஆகியோர் கருதப்பட்டார்கள். மக்களாட்சி என்ற கருத்தாக்கம் வளர்ச்சி கண்டபோது நாம் மேலே விவாதித்தபடி வேறொரு பிரச்சினையை உருவாக்கியது. அது இந்த சமூகத்தில் இப்படியான வலுத்தவர், இளைத்தவர் என்ற பிரிவினை கூடாது; எல்லோரும் சேர்ந்து தங்களையே ஆண்டுகொள்ளும் முறையையே பின்பற்ற வேண்டும் என முடிவு செய்தது. அதை உறுதி செய்வதற்காக வயது வந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது; ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிக்கும் அனைவரும் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற புதிய வழிமுறையைக் கொண்டுவந்தது. அனைத்து மக்களும் சேர்ந்ததுதான் தேசம் என்றும், தேசிய நலன் அனைவருக்கும் பொதுவானது என்றும், தேசத்தின் வரலாறு அனைவருக்கும் பொதுவானது என்றும் பலவிதமான கருத்தாக்கங்கள் தேசம் என்ற ஒற்றை உருவகத்தில் இணைந்தன.

எல்லோருக்கும் பொதுவான தேசம் என்றாலும், அது எப்படித் தன்னை நிர்வகித்துக்கொள்ள வேண்டும், தனது ஆற்றல்களை, வளங்களை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதில் பல்வேறு கருத்துக்கள், வேறுபாடுகள் தேசத்திற்குள் நிலவும்; ஆனால் விவாதங்கள் மூலம், பெருவாரியானவர்கள் கருத்தினைக் கண்டறிந்து செயல்படுத்தலாம் என்று நினைப்பது சுதந்திரவாதம். இதற்கு மாறாக தேசத்தின் நலனைப் பாதுகாக்க, தேசத்தின் உள்ளும் புறமும் இருக்கும் எதிரிகளை முறியடிக்க கருத்து மாறுபாடுகளோ, போராட்டங்களோ நிகழக்கூடாது, கருத்தொப்புமையை மட்டுமே வலியுறுத்த வேண்டும் என்று நினைப்பது பாசிசம். பாசிசம் தேசத்தை ஒற்றை அடையாளமாக உருவகித்து, அதற்கு எதிரியாக ஒரு அடையாளத்தை வெளியில் நிறுத்தி அந்த அடையாளத்தை அழிக்க வன்முறையைக் கையாள்வதை நியாயப் படுத்தி, அதன் மூலம் முழு ஆதிக்கத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் மேலும் செலுத்தும்.

தேசம் என்பது ஒன்றிணைந்து செயல்படும் ஆற்றல்; இந்த ஒன்றிணைப்பு பல்வேறு கருத்து மோதல்கள், முரண் இயக்கங்கள் ஆகியவற்றின் ஊடாக உருவாகட்டும் என்று நினைப்பது மக்களாட்சி சார்ந்த தேசியம்.

தேசம் என்பது ஒன்றிணைந்து செயல்படும் ஆற்றல்; அது எதிரிகளால் சிதைக்கப்பட்டுவிடும் என்பதால் கருத்தொருமிப்பை மட்டுமே வலியுறுத்தவேண்டும் என்று நினைப்பது பாசிசம்.

தேசியம், பாசிசம் இரண்டுமே மக்களை ஒற்றை சமூக உயிரியாகக் கட்டுவதுதான் என்றால் வெகுஜனவியம் என்பது என்ன?

ஆங்கிலத்தில் இதை பாப்புலிசம் என்கிறார்கள். பாப்புலிசமும் எதிரிகளாக அன்னியர்களைக் கட்டமைத்தால் அது பாசிசம் போலத்தான் செயல்படும். ஆனால் இடதுசாரி வெகுஜனவியம் வித்தியாசமானது. அது எளிய குடிமக்களே ஒட்டுமொத்த சமூகமும் என்று உருவகத்து, வலிய குடிமக்களின் கருத்தியல் மேலாதிக்கத்தை தகர்க்க விழையும். இத்தகைய ஒரு செயலை அது மக்களாட்சி மூலம் செய்யவேண்டும் என்றால், அது சில புதிய பொது அடையாளங்களை உருவாக்க வேண்டும். சமூக நீதி என்பதை உரத்துப் பேச வேண்டும். எளியோரின் நியாயங்களை சமூக நியாயமாக மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும்போது எளிய குடிமக்கள், வலிய குடிமக்கள் ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்தும் பெருவாரியானவர்களைத் தங்கள் அணியினுள் கொண்டுவரவேண்டும். இதைச்செய்ய பல கவச்சிகரமான உத்திகளை, சொல்லணிகளை, நிகழ்கலை அம்சங்களைக் கையில் எடுக்க வேண்டும். எளிய மக்களுக்குப் புரியும் மொழியில் பேச வேண்டும் என்னும்போது அது இமசு சிந்தனையாளர்களுக்குப் பிடிக்காது. ”கவர்ச்சி அரசியல்” என்று இழிவாக நினைப்பார்கள்.

நடந்து முடிந்த தேர்தலில் நாம் முதலில் கற்க வேண்டியது, இந்தியா முழுவதும் பாசிச அரசியலின் கவர்ச்சிக்கு அடிபணிந்த போது தமிழகம் எதிர்த்து நின்றதற்குக் காரணம் இங்கே இடதுசாரி வெகுஜனவியம் வேரூன்றி இருந்ததுதான். அந்த வெகுஜனவியக் கட்சியின் பெயர் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட இயக்கம், குறிப்பாக தி.மு.க, இஸ்லாமியருக்கு எதிரான இந்து என்ற பாசிச பொது அடையாளத்தை பார்ப்பனர்- பார்ப்பன ரல்லாதோர் என்று வேறுபடுத்தி, பார்ப்பன ரல்லாதோரே மக்கள் என்று உருவகித்ததில், பார்ப்பனக் கருத்திய லால் கட்டப்பட்ட இந்து அடையாள வாதம் தமிழகத்திற்கு முழுவதும் அந்நியமா யிற்று. இன்றும் தமிழகத்தில் வலிய குடிமக்களில் சில ஜாதி களைச் சேர்ந்தவர்களை இந்துத்துவம் கவர்ந்திழுத்தாலும், எளிய குடிமக்களிடம் அவர்களால் அந்தக் கருத்தியலைக் கொண்டு செல்ல முடியவில்லை.

காங்கிரஸும் வெகுஜனவியக் கட்சிதான். காந்தி மேலாடை துறந்து, அரையாடை உடுத்தி, ஆசிரமத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்து எளிய குடிமக்களிடையே அந்தக் கட்சியை வேரூன்ற வைத்தார். காங்கிரஸ்காரர்கள் கதராடை அணிந்து தங்கள் ஆடம்பர பிம்பங்களைத் துறந்து மக்கள் முன் சென்றார்கள். அந்நிய ஆட்சிக்கு எதிரான தேசியத்தை, தேசத்தின் உள்ளே வலியோருக்கு எதிரான எளியோரின் வெகுஜனவியமாகவும் காந்தியால் உருவகம் செய்ய முடிந்தது. பிற தலைவர்களும் ஒத்துழைத்தார்கள். இது பொய் வேடம் என்று இமசு சிந்தனையாளர்கள் அன்றைக்கே விமர்சனம் செய்தார்கள் என்பதும் உண்மை. இன்றும் செய்வார்கள் என்பதும் உண்மை. அவர்கள் என்றுமே வெகுஜனவியத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். மிகை, பசப்பல், மழுப்பல், நாடகீயம் எல்லாம் வெகுஜனவியத்தில் இன்றியமையாதது. காங்கிரஸைப் பொறுத்தவரை இந்த ஏழ்மை ஒழிப்புக் கோஷங்கள் அதை வெகுகாலம் வெகுஜனவிய கட்சியாக வைத்திருந்தது. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் ஒருதுருவ உலகம் தோன்றி உலக முதலீட்டியம் புதுவலிவு பெற்றபோது காங்கிரஸ் நரசிம்ம ராவ் ஆட்சியில் அந்நிய முதலீட்டை அனுமதித்து, தாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுத்தபோது அதன் வெகுஜனவியம் வெளிறிப்போனது. அதற்கு முன்னரே, வி.பி.சிங். மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறையாக்கியபோது வட இந்தியாவிலும் வெகுஜனவியம் தமிழகத்தின் பார்ப்பனீய எதிர்ப்பு வெகுஜனவியத்திற்கு அருகே வந்தது. ஆனால் பார்ப்பனீயம் வெகுண்டது.

பாசிசம் சரியான சந்தர்ப்பத்தைக் கண்டது. வெகுகாலமாக அது பாதுகாத்து வந்த இந்து அடையாள, இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவத்தை பாப்ரி மசூதி இடிப்பின் மூலம் பெருவெடிப்பாக மாற்றி, மண்டல் வெகுஜனவியத்தை முறியடித்து, காங்கிரஸின் முதலீட்டிய வளர்ச்சி முனைப்பையும் கைப்பற்றி, பெருமுதலாளி நலன்கள் பாசிச தேசியம் ஆகியவற்றின் இணைப்பில் பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்தது. ஆனால் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த இஸ்லாமியப் படுகொலையால் அதிர்ச்சியுற்ற தேசம், மீண்டும் காங்கிரஸிற்கு காந்தி–நேரு குடும்பத்தின் தலைமைக்கு வாய்ப்பளித்தது. சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் புத்துயிர்ப்படைந்தது. அடுத்த பத்தாண்டு காலம் மன்மோகன் சிங் என்ற பொருளாதார நிபுணரின் தலைமையில் அரசு நடந்ததில் பொருளாதாரம் நிலைபெற்றதுடன், மக்கள் நல அரசு என்பதும் விரிவாக்கம் கண்டது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் நூறு நாள் வேலைத்திட்டம் என்ற என்.ஆர்.இ.ஜி.ஏ. இது கிராமப்புற எளிய குடிமக்களின் வாழ்வை எப்போதும் இல்லாத அளவு மேம்படச் செய்தது. ஆனால், வெகுஜன அங்கீகாரம் பெற்ற அரசியல் தலைவராக சோனியாவும், ஆட்சி அதிகாரத்தின் தலைவராக மன்மோகன் சிங்கும் பிளவுபட்டு நின்ற நிலை மக்களைக் குழப்பியது. வெகுஜன இறையாண்மை பிம்பம் இல்லாத ஒருவர் பிரதமராக இருப்பது எளிய குடிமக்களை ஈர்க்கவில்லை எனலாம்.

ஆனால் காங்கிரஸை அதுமட்டும் வீழ்த்தவில்லை. இமசு சிந்தனையாளர்கள் முழு மூச்சாக உதவினார்கள். வினோத் ராய் என்ற கணக்காயத் தலைவர் உருவாக்கிய மந்திர எண் 1,76,000 கோடி என்ற கற்பித இழப்பு கணக்கீட்டுத் தொகையை ஊழலின் பரிமாணமாக மாற்றி 2G ஊழல் என்று நாடெங்கும் பரப்பினார்கள். இப்படி ஒரு நஷ்டமோ இழப்போ ஏற்படவேயில்லை என்பதைக் கவனமாகப் பரிசீலிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம். இருவேறு வகையான டெண்டர் முறைகளைத் தவறாக ஒப்பிட்டு உருவாக்கப்பட்ட மந்திர எண் இது. பார்ப்பனீயத்தை எதிர்த்த தி.மு.க என்ற கட்சியின் மந்திரி ஒருவர், தமிழராகவும் தாழ்த்தப்பட்டவராகவும் காங்கிரஸ் கூட்டணி மந்திரிசபையில் இருந்து அதற்குப் பொறுப்பாளியாக சிக்கியது வசதியாகப் போயிற்று. சர்வதேச அளவில் இது பரப்பப்பட்டது.

2G அலைக்கற்றைகள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட முறையில் சில கேள்விக்குரிய வழிமுறைகள், முடிவுகள் இருந்தன; இருநூறு கோடி ரூபாய் பணம் கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாறியது சந்தேகத்திற்குரியதாக இருந்தது. ஆனால் இந்த சந்தேகங்களுக்கு தொடர்பே இல்லாத பிரம்மாண்டமான ஒரு கற்பித இழப்பீட்டுத் தொகை ஊழல் பணமாக மாற்றப்பட்டு 1.76.000 கோடி ஊழல் என்று ஊடகங்களாலும், அரசியல்வாதிகளாலும் நாடெங்கும் பரப்பப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஆ. ராசா எந்தத் தவறும் நடக்கவில்லை என்று உறுதியாக இருந்தார். ஜாமீனில் கூட வெளிவராமல் சிறையிலேயே இருந்தார். தானே வழக்கில் வாதாடினார். இறுதியில் எதையும் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் தேசத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் என்று ஒரு கற்பிதத் தொகையை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்து மோடி ஆட்சிக்கு வருவதற்கு அனைவரும் உதவி செய்தார்கள் என்பதுதான் உண்மை.

எளிய குடிமக்கள் எதைப் புரிந்துகொள்வார்கள் என்பதுதான் இங்கே முக்கியம். இந்தக் கற்பனை எண் 1.76 லட்சம் கோடி அனைவரையும் சென்றடைந்தது. அமைச்சர் ராசாவின் வீட்டைச் சுற்றி ஐந்தடி அகலமுள்ள சுவர் கட்டப்பட்டதாகவும், அந்த சுவரின் நடுவில் இந்த லட்சம் கோடி ரூபாய் பணக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டதாகவும் ஒரு காய்கறி வியாபாரி திருச்சியில் என்னிடம் சொன்னார். வலிய குடிமைச் சமூகம் இந்த அபத்தமான மிகையான எண்ணைக் குறித்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவர்களும் கூசாமல் அந்த எண்ணையே எந்தக் கேள்வியும் கேட்காமல் உச்சரித்தார்கள். பொது அறிவுக்குப் பொருந்தாமல் இருப்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவ்வளவு பெரிய தொகையைக் கையூட்டாக ஒரு தொலைபேசி நிறுவனம் கொடுக்க முடியுமா என்பதைக்கூட யாரும் யோசிக்கவில்லை. தமிழகத்தில் 2011 தேர்தலில் தி.மு.க-.வையும், மத்தியில் 2014 தேர்தலில் காங்கிரஸையும் வீழ்த்த இந்த மாய எண் பிரசாரம் அருமையாக கைகொடுத்தது. இத்துடன் வேறு சில ஊழல் குற்றச்சாட்டுகளும் சேர்க்கப்பட்டு காங்கிரஸ் நாட்டையே சீர்குலைக்கும் ஊழல் ஆட்சி செய்வதாக பிரசாரம் செய்ய முடிந்தது. டெல்லியில் அன்னா ஹசாரே என்ற “பொதுநல” ஊழியர், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தது இ.ம.சு சிந்தனையாளர்களையும், அன்றாடம் காவல்துறையினரால் துன்புறும் எளிய குடிமக்களையும் ஒருசேரக் கவர்ந்தது. எங்கும் ஊழல் என்பதே பெரும் கவலையாக மாறியது. அன்னா ஹசாரே போராட்டத்திலிருந்து கிளைத்த ஒரு குடிமைச் சமூக, இமசு அணி ஆம் ஆத்மி என்ற கட்சியாக மாறி, டெல்லி மாநில அரசைக் கைப்பற்றியது.

இறுதியாக: 2019 பாராளுமன்றத் தேர்தலில் நடந்தது என்ன?

ஆதிக்க ஜாதியினரில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு என்ற ஒரு சட்டத்தை பாரதீய ஜனதா கட்சி சமீபத்தில் கொண்டு வந்தபோது தி.மு.க. தவிர வேறு எந்தக் கட்சிகளுமே அதை எதிர்க்கவில்லை என்பது நமக்கு எதை உணர்த்துகிறது? வெகுஜனவிய அரசியலின் முக்கியமான அடிப்படையை வட இந்தியாவின் எல்லாக் கட்சிகளும் தவற விடுகின்றன என்பதைத்தான் உணர்த்துகிறது. இது ஒரு தீமையின் வடிவமான சட்ட சீர்திருத்தம் (sinister Legislation) என்று பார்த்தா சாட்டர்ஜி எழுதினார். இட ஒதுக்கீடு என்பது கலாசார ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, கலாசார மூலதனம் இல்லாத சமூகத் தொகுதிகளுக்குக் கொடுக்கப்படும் சமன்செய்யும் முன்னுரிமைதானே தவிர அது ஏழ்மையைத் தீர்க்கும் திட்டம் அல்ல என்பது தெளிவு. ஆனால் வட இந்தியாவில் மண்டல் பரிந்துரைகளால் ஏற்பட்ட கசப்பை சரி செய்யவே இந்த அபத்தமான, அறிவிற்குப் பொருந்தாத சட்ட சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அது சமூக நீதி சிந்தனையின் அடிப்படைகளுக்கே முரணாக இருக்கிறது. ராகுல் காந்தி கோயிலுக்குப் போவதோ, தன்னை சிவபக்தன், பிராமணன் என்றெல்லாம் சொல்லிக்கொள்வதோ பிரச்சினை இல்லை. அதெல்லாம் வெகுஜனத் தலைவராக இருப்பதற்குத் தடையில்லை – வெகுஜனவியம் பாசிசம் ஆகிவிடாது. ஆனால் சமூகநீதி சிந்தனையில் பின்வாங்குவது அவருக்கும் பாரதீய ஜனதாவிற்கும் உள்ள வேறுபாட்டினை அழிக்கிறது. அவர் மட்டுமல்ல, அகிலேஷ் யாதவ், மாயாவதி, மமதா பானர்ஜி, சிபிஐ, சிபிஐ (எம்) என யாருமே இந்த சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராகப் பொங்கி எழவில்லை. ஏற்கனவேயுள்ள இட ஒதுக்கீட்டை மறுக்காதவரை வேறு யாருக்கு என்ன இட ஒதுக்கீடு கொடுத்தால் நட்டமென்ன என்று யோசிப்பது அரசியல் அறிவீனம் என்றால் மிகையாகாது. சமூகநீதி என்ற சிந்தனையின் அடிப்படைக்கே வேட்டுவைத்துவிட்டு எப்படி பாசித்துடன் மோதக்கூடிய வெகுஜன அரசியலைக் கட்டமைக்க முடியும் என்பதே முக்கியக் கேள்வி.

காங்கிரஸ் தன் பங்கிற்கு இரண்டு விஷயங்களை முக்கியமாக முன்னெடுத்தது. ஒன்று குறைந்தபட்ச ஊதியத் திட்டம் என்ற புரட்சிகர சிந்தனை. ஆனால் இது காகிதத்தில் இருப்பது; மோடியோ உடனடியாக இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத்தை அனைத்து ஏழை விவசாயிகளுக்கும் கொடுத்தே விட்டார். யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை எப்படிக் கணக்கிட்டார்கள் என்பதெல்லாம் யாருக்கும் புரியும் முன்பே, எப்படியோ தேர்தலுக்கு முன் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்று செய்துவிட்டார்கள். மூன்று தவணையாக வருடம் ஆறாயிரம் கொடுக்கும் இந்த திட்டத்தை விட, மாதம் பன்னிரண்டாயிரம் ரூபாய் வருமானத்தை உத்தரவாதம் செய்யும் திட்டம் பன்மடங்கு மேம்பட்டது என்றாலும், எளிய குடிமக்கள் மத்தியில் எந்த எதிர்காலத் திட்டத்தைவிடவும் கையில் வந்து சேர்ந்துவிட்ட பணமே பெரியதாக இருக்கும். காங்கிரஸ் அறிவித்த இந்த திட்டமும் தேர்தலுக்கு சற்றே முன்னதாக அறிவிக்கப்பட்டு கட்சி அணியினர் புரிந்துகொண்டு பிரசாரம் செய்யக்கூட அவகாசம் இல்லாமல் போயிற்று. பாரதீய ஜனதா கட்சி ஆதரவு முதலீட்டியத்தால் நடத்தப்பெறும் கைப்பாவை ஊடகங்களும் இந்தப் புரட்சிகர திட்டத்திற்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை.

அடுத்து ரஃபேல் விமானங்கள் வாங்குவதில் நிகழ்ந்த மாபெரும் தகிடுதத்தம். அனில் அம்பானிக்கு காண்ட்ராக்ட் கிடைப்பதற்காக ஏற்கனவே பேசியதை மாற்றி நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதுடன், பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டிற்கு விமானம் கட்டுவதற்கும், தொழில்நுட்ப பரிவர்த்தனைக்கும் கிடைக்க இருந்த அரிய வாய்ப்பு பறிபோயிற்று. ராகுல் காந்தி இதை அம்பலப்படுத்தினார். யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்ற முன்னாள் பாரதீய ஜனதா அமைச்சர்களும், பிரசாந்த் பூஷண் என்ற வழக்கறிஞரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். ஹிண்டு பத்திரிகை என்.ராம் பல முக்கிய ஆதாரங்களை வெளியிட்டார். ராகுல்காந்தி மோடி தன்னை சௌகிதார் (காவலாளி) என்று அழைத்துக்கொள்வதைப் பயன்படுத்தி சௌகிதார் சோர் ஹை (காவலாளி ஒரு திருடன்) என்ற கோஷத்தை முன்னெடுத்தார். இதில் என்ன பிரச்சினை என்றால் ஊடகங்கள் 1.76 லட்சம் கோடி என்ற மாய எண்ணை பிரபலப்படுத்தியது போல இதில் எதையும் பிரபலப்படுத்தவில்லை. தேசத்திற்கு மிகக் கடுமையான பொருளாதார இழப்பும், விதிமீறல்களும் இருந்தாலும் இதில் மோடி தனிப்பட்ட முறையில் பொருளாதார அனுகூலம் அடைந்தார் என்று கூறமுடியவில்லை. அனில் அம்பானிக்கு சாதகமாக இருந்தார் என்பதை எளிய குடிமக்கள் புரிந்துகொள்வது கடினம்.

இதைத்தவிர எளிய குடிமக்கள் தொகுதிக்கு அவசியமான மூன்று அம்சங்களில் பிரச்சினை இருந்தது. முதலில் அவர்களுக்கு இறையாண்மை பண்புள்ள தலைவர் என்பது பிடிக்கும். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் 2014 தேர்தல் குறித்து எழுதும்போது தீர்மானகரவியம் (decisionism) என்ற கருத்தாக்கத்தைக் குறிப்பிட்டார். அதாவது தெளிவாகவும், திட்டவட்டமாகவும் முடிவெடுக்கும் ஆற்றல் ஒரு தலைமைப் பண்பாகக் கருதப்படுவதைக் கூறினார். தவறான முடிவாகவே இருந்தாலும் துணிந்து முடிவு எடுப்பதுதான் தலைமைக்கு அழகு என்று எளிய மக்கள் நினைப்பார்கள். அவர்கள் விவாதபூர்வமான மக்களாட்சி – டெலிபரெடிவ் டிமாக்ரசி – என்ற உயர் விழுமியத்தை உள்வாங்குவதில்லை. தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு இந்த தைரியலெட்சுமி பட்டம் இருந்ததை அறிவோம். அதனால் பணமதிப்பிழப்பு என்பது எதேச்சதிகார மோசடி நடவடிக்கையாக இருந்தாலும், அதனால் மக்கள் பெரும் அவதியுற்றாலும், துணிகர முடிவெடுக்கும் அஞ்சாநெஞ்சன் என்ற பிம்பத்தை நிலைநிறுத்த அது மோடிக்கு உதவியது என்பதுதான் துயரம். அதனுடன் சேர்ந்ததுதான் ஜிஎஸ்டி குளறுபடி, மேகத்தில் மறைந்து சென்று பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மேல் குண்டு போட்டது எல்லாம்.

இதற்கு மாற்றாக ராகுல் காந்திதான் பிரதமர் என்று தி,மு.க. தலைவர் ஸ்டாலினைப் பின்பற்றி எல்லா தலைவர்களும் கூறியிருந்தால், காங்கிரஸும் முன்நிறுத்தியிருந்தால் ஒரு போட்டியாவது இருந்திருக்கும். ராகுல் காந்தி தன் பாட்டியையும், தந்தையையும் தீவிரவாதிகளுக்குப் பறிகொடுத்தவர். அதற்கு முன்னால் இரண்டு தலைமுறையினர் சுதந்திரப் போரை தலைமையேற்று நடத்தியவர்கள். ராகுல் அந்தக் குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறை அரசியல் தலைவர். நவீன இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்கள் இந்த குடும்பத்தினர். எளிய குடிமக்கள் இந்தப் பாரம்பரியத்திற்கு நிச்சயம் பெரிய அளவில் மதிப்புத் தருவார்கள். ஆனால் இமசு சிந்தனையாளர்களுக்கு அஞ்சி இந்தப் பாரம்பர்ய பிம்பத்தை வலியுறுத்திப் பேச காங்கிரஸ் தயங்குகிறது. இமசு சிந்தனையாளர்கள் பாசிசத்தின் நுகத்தடியில் சிக்கி சீரழிந்தாலும், சிறைபட்டே அழிந்தாலும், வாரிசு அரசியலால் மக்களாட்சி கெட்டுவிடும் என்று பிதற்றுவதை நிறுத்தவே மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை எளிய குடிமக்கள் தொகுதி என்பதைப் பற்றிக் கவலையே கிடையாது. வெகுஜனவியம் என்றால் என்னவென்றும் தெரியாது. அதையும் பாசிசத்தையும் வேறுபடுத்தவும் தெரியாது.

இந்த இறையாண்மை பிம்பத் தலைமை என்பதற்கு அடுத்து மிகப்பெரிய சவால் கட்சி அமைப்பு. கட்சி அமைப்பின் வலைப்பின்னலும், தொண்டர்களும் செய்திகளை சமூகத்தின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் கொண்டு செல்லவேண்டும். மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கவேண்டும். தொலைக்காட்சியில் பேசுவதாலோ, தலைவர்கள் பெரிய கூட்டங்களில் பேசுவதாலோ மட்டும் செய்திகளைக் கொண்டு சேர்க்க முடியாது. ஏற்கனவேயுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தவிர, அமித்ஷா தங்கு தடையற்ற கோயபல்ஸ் பிரசாரத்தை செய்ய அணி அணியாக ஆட்களைத் தயார் செய்தார் என்று தெரிகிறது. இவர்கள் இந்தி- பிரதேசங்களில் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளதாகவும் தெரிகிறது. காங்கிரஸும் சரி, பிற கட்சிகளும் சரி அமைப்பு ரீதியான கட்டுமானத்திற்கு பாரதீய ஜனதா செலுத்தும் கவனத்தை செலுத்துகிறார்களா என்று தெரியவில்லை. முப்பத்துநான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட மாநிலத்தில் சி.பி.ஐ. (எம்) ஏதோ புதிதாகத் தொடங்கிய கட்சி போல ஏழு சதவீத ஓட்டுக்களை வாங்கியிருப்பதை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. அதைவிட அதிர்ச்சியளிப்பது அவர்கள் பலர் மமதாவை எதிர்க்க பாஜக-விற்கு ஓட்டளித்தார்கள் என்று கூறப்படுவது. அந்த அளவில்தான் இருக்கிறது கம்யூனிஸ்டு கட்சி அணியினரின் பாசிச எதிர்ப்பு பயிற்சி.

வெகுஜன அரசியலின் சமரசங்களை வெறுத்து தாங்கள் தூய அரசியல் செய்வதாக நினைக்கும் கம்யூனிஸ்டுகள் வர்க்க அரசியல் என்று அவர்கள் நம்பியதை தொழிற்சங்கவாதமாக குறுக்கி, அதிலும் கடும் அரசியல் நீக்கம் நிகழ்ந்து வலுவிழந்து போன பின்னும் தங்களிடம் கருத்தியல் பலம் இருப்பதாக கற்பித மாயையில் இருப்பார்கள். இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற பிரம்ம சூத்திரத்தை திறந்தே பார்க்காத பெருங்காய டப்பாவைப் போல எப்போதும் வைத்திருப்பார்கள். திறந்து பார்த்தால் தானே அதற்குள் எதுவுமில்லை என்று தெரியும். அதனால் அந்த முயற்சியில் ஈடுபட மாட்டார்கள். எனக்கு நல்ல தோழர்கள் பலர் இருப்பதால் அவர்கள் மனதைப் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். தமிழகத்தைப் பொறுத்த வரை பலர் இப்போது ஜாதி வேறுபாடு, தமிழன உணர்வு ஆகியவற்றை உள்வாங்கி திராவிட இயக்கத்தையும் மதிக்கத் தொடங்கியுள்ளது வரவேற்கத் தகுந்தது. தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது அவர்களுக்கும் நல்லது; தி.மு.க-.விற்கும் நல்லது.

இந்திய அளவில் பாரதீய ஜனதா முன்வைக்கும் இந்து என்ற இஸ்லாமிய எதிர்ப்பு பாசிச அடையாளத்திற்கு மாற்று என்ன என்பதே முக்கிய கேள்வி. தமிழகத்தில் பார்ப்பனீய எதிர்ப்பு என்ற வெகுஜனவிய சூத்திரம் வலுவான அடித்தளம் அமைத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் அதிலிருந்து காத்திரமான சமூக நீதி அம்சங்களை எடுத்துக்கொண்டு வட இந்தியக் கட்சிகள் எளிய குடிமக்கள் சார்பு அரசியலை முன்னெடுக்க வேண்டும். அனைவரும் தாராளமாக கோயிலுக்குப் போகலாம்; சாமி கும்பிடலாம்; பூஜைகள் செய்யலாம்; இவற்றிற்கும் இந்து என்ற அரசியல் அடையாளத்திற்கும் தொடர்பில்லை. வாரிசு அரசியல், தலைமை பிம்ப கட்டமைப்பு ஆகியவற்றைத் தவிர்க்கவே முடியாது. அதனாலும் பிரச்சினையில்லை. ஆனால், எளிய மக்கள் சார்பான சமூக நீதிக்கான உருவகங்களை, வெற்றுக்குறிப்பான், மிதக்கும் குறிப்பான்களை உருவாக்கியே தீரவேண்டும்.

அவர்களிடம் காந்தி என்ற முக்கியமான பிம்பம் இருக்கிறது. கோட்ஸேவின் வழித்தோன்றல்களை எதிர்கொள்ள காந்தியத்தை உயிர்ப்பிப்பது சிறந்த வழி. இருபத்துமூன்று ஆண்டுகள் (1925 – 1948) காந்தியைக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்த பெரியார் அம்பேத்கரோடும், ஜின்னாவோடும் இந்திய விடுதலை குறித்து விவாதித்த பெரியார். கோட்ஸேவால் காந்தி கொல்லப்பட்டதும் நாட்டிற்கே காந்தி தேசம் என பெயர் வைக்க வேண்டும் என்று கூறியதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பது கவலைக்கு உரியதுதான். விபரீதம்தான். ஆனால் அவர்கள் ஒரு பத்து சதவீத வாக்கின் இடப்பெயர்ச்சியில் வென்றிருப்பதை வைத்து மக்களெல்லாம் பாசிசமயமாகிவிட்டார்கள் என்று மறுகத் தேவையில்லை. இந்தக் கூற்றை விளங்கிக் கொள்ளும் பொருட்டே மிக விரிவான ஒரு சமூக, அரசியல் கட்டுமான அலசலை இக்கட்டுரை மேற்கொண்டது.