‘நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீ உன் நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்!’ என்று ஜான் எஃப் கென்னடி முழங்கினார். மிகவும் பிரபலமான இந்த வாக்கியத்தை நாமெல்லாம் கேட்டிருப்போம். இந்த வரிகள் ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற எம்.ஜி.ஆர் பாடலில்கூட வரும்.

இந்த வசனம் கேட்கும் பொழுது வசீகரமாகவே இருக்கிறது. ஏறக்குறைய ரஜினியின் பன்ச் டயலாக் ரேஞ்சுக்கு ஆக்கிரமிக்கிறது. ஆனால் சிந்தனையைக் கொஞ்சம் பிரித்து யோசிப்போம். இங்கே நாடு என்ற ஒன்று எதனைக் குறிக்கிறது? நாடு என்று ஒன்று எதுவும் தனியாகக் கிடையாது. அதாவது நாடு என்ற ஒன்று உங்களுக்குத் தனியாக எதுவும் செய்ய முடியாது. உங்கள் வீட்டுக்குக் குடிதண்ணீர் வசதி செய்யாது. உங்கள் ஏரியாவில் குற்றங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளாது. உங்கள் ஏரியாவில் இருக்கும் மருத்துவமனை ஒழுங்காக நடைபெறும்படி பார்த்துக் கொள்ளாது. இவற்றை செய்யப்போவது ‘நாடு’ என்ற ஒரு கற்பனை வடிவம் அல்ல.

இவற்றை எல்லாம் செய்ய வேண்டியது அரசாங்கம் தான். குடிமகனாக உங்களுக்கு சௌகரியமான வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும். உங்கள் வாழ்வுத்தரம் மேம்பட வேண்டும் என்பதற்காகத் தான் நாம் அரசாங்கத்தை நியமிக்கிறோம். நாட்டுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு என்பது ஏறக்குறைய உங்களின் அரசாங்கத்துக்கும் உங்களுக்கும் இருக்க வேண்டிய உறவுதான்.

ஆனால் இந்த அரசு நிர்வாகம் எப்படி நடைபெற வேண்டும் என்பதில் இருவிதமான சித்தாந்தங்கள் இருக்கின்றன. குடிமக்களுக்கு இருக்கும் உரிமைகளை அரசு உணர்ந்து கொண்டு அவற்றைப் பேணி, உரிமைகளை அதிகரித்து பரிபாலனம் செய்வது. இன்னொன்று குடிமகன்களுக்கு இருக்கும் கடமைகளை அதிகரித்து, அவற்றைத் தொடர்ந்து குறிப்பிட்டு, அரசு சேவைகளுக்கு எல்லாம் அவற்றை நிபந்தனையாக வைப்பது. உரிமை-சார் நிர்வாகம் ‘Rights-based governance’, மற்றும் கடமை-சார் நிர்வாகம் ‘Duty-based governance’ என்று சொல்லலாம்.

உலகெங்கிலும் வலதுசாரி அரசுகள் கடமையை வலியுறுத்தும், எதிர்பார்க்கும் அரசுகளாகவே பெரும்பாலும் இயங்கி வந்திருக்கின்றன. நம் மத்திய அரசும் வந்த நாள் முதல் குடிமகன்கள் நாட்டுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாடம் எடுத்து அதற்கேற்ப திட்டங்கள் தீட்டுவதிலேயே கவனமாக இருந்து வந்திருக்கிறது.

நிலம்- கையகப்படுத்தும் சட்டம்

இந்த அரசு சென்ற முறை ஆட்சிக்கு வந்த உடனே செயல்படுத்த எண்ணிய முதல் சட்டம் நிலம்- கையகப்படுத்தும் சட்டம்தான். அதாவது விவசாய மற்றும் ஊரக நிலங்களை ‘தொழில் முன்னேற்றத்துக்கு’ வேண்டி அரசு எடுத்துக்கொள்ளுதல். அப்படி செய்வது நல்லதுதானே? நிலங்கள் கிடைக்காமல் தொழிற்சாலைகள் மற்றும் அரசு முன்னேற்றத் திட்டங்கள் எப்படி வரும் என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான். முந்தைய மன்மோகன் சிங் அரசு நில கையகப்படுத்தும் திட்டங்களில் ஊரக மக்களுக்கும் அங்கே வாழும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான நிறைய அம்சங்களை உள்வைத்து சட்டத்திருத்தம் செய்திருந்தது. நிலங்களைக் கிராமங்களிடம் இருந்து கையகப்படுத்த முயற்சித்த தொழிலதிபர்களுக்கு இந்த சட்டத்திருத்தம் தலைவலியாகவே இருந்து வந்தது. அவற்றை எல்லாம் நீக்கி விட்டு புதிய சட்டம் கொண்டு வரும் முயற்சியில்தான் மோடி அரசு முனைந்தது. அதாவது தங்களுக்கு ஒரு கிராமத்தில் நிலங்கள் தேவைப்படுகிறது என்றால் எந்த ஆய்வும், முன்னேற்பாடுகளும் தேவையின்றி அந்தக் கிராமத்தை அரசு கையகப்படுத்தலாம். இந்த சட்டத்திருத்தம் தொழிலதிபர்களுக்கு கரும்பாக இனித்தது. அதாவது சுருக்கமாக மன்மோகன் அரசு கொண்டு வந்தது நிலம் கையகப்படுத்தும் சட்டம்; மோடி அரசு கொண்டு வர முயன்றது நில அபகரிப்பு சட்டம்.

நல்ல வேளையாக அப்போது அதற்கு எழுந்த பெரும் எதிர்ப்பு காரணமாக அந்த சட்டத்திருத்தம் கைவிடப்பட்டது. ஆனால் ஓரிரு ஆண்டுகளில் அதனைத் திரும்பவும் கொண்டு வர முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பொருளாதாரம்

பொருளாதார விஷயத்தில் மக்களின் கடமையை அரசு வலியுறுத்திய முக்கியமான சம்பவம் பண நீக்கம். ஒரே இரவில் தேசத்தின் குடிமக்கள் எல்லாரையும் தெருவுக்கு இழுத்து வந்த சம்பவம் அது. அதாவது கறுப்புப்பணத்தை ஒழிப்பது அரசின் கடமை அல்ல, குடிமக்களின் கடமை. அப்படி கள்ளப்பணம் ஒழிவதற்காக அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே விட்டுக்கொடுக்க வேண்டுமானாலும் செய்துதான் ஆகவேண்டும்.

மக்களும் வேறு வழியின்றி செய்தார்கள். கால் கடுக்க தெருவில் நின்றார்கள். திருமணங்கள் தடைப்பட்டன. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் தாமதமாகின. தொழில்துறை ஸ்தம்பித்தது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தார்கள். உற்பத்திப் பொருள்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்தார்கள். முதியோர்கள் வங்கி வாசலில் மயங்கி விழுந்து இறந்து போனார்கள்.

சரி, கறுப்புப்பணத்தை ஒழிப்பது என்பது மக்களின் கடமையும் கூட என்று வைத்துக் கொள்வோம். பெரும் தியாகங்கள் புரிந்து மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி விட்டார்கள்.

அப்படி எல்லாம் நடந்து குடிமக்களின் கடமைகளைப் பெற்றுக்கொண்ட அரசு அப்புறம் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களுக்கு அங்கே இருந்த கடமை என்ன? அந்த திட்டம் கொடுத்த பலன்கள் பற்றிய ஆய்வறிக்கையை மக்களுக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்தை எல்லாம் நாசப்படுத்தி கறுப்புப்பணம் ஒழிய உதவினீர்கள். இதோ அதன் பலன்கள் என்று அறிவித்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது? பணநீக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றிய எந்த ஆய்வுமோ அல்லது கொடுத்த பலன்கள் பற்றிய எந்த ஒரு சர்வேயுமோ நடத்தப்படவில்லை. அந்தத் தகவல்கள் மக்களுக்கு அளிக்கப்படவேயில்லை. மிக மிக அலட்சியமாக அந்த அத்தியாயத்தை அரசு கடந்து போனது.

அதே போல அதிரடியாக ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. குடிமக்கள் தங்கள் தொழில்களை உடனடியாக ஜிஎஸ்டிக்கு ஏதுவாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். தேசம் முன்னேற வேண்டுமானால் ஒரே தேசம் ஒரே வரிமுறை தேவை; அதனை உடனடியாக நிறைவேற்ற குடிமக்கள் தங்கள் தொழில் வளர்ச்சியைக் கொஞ்சமேனும் தியாகம் செய்துதான் தீர வேண்டும்.

மக்களும் செய்தார்கள். சிறு குறு தொழில்கள் பெரும் நசிவைக் கண்டன. ஆனால் இந்த ஜிஎஸ்டி கொடுத்த பலன்கள் என்ன? அடைந்த பாதிப்புகள் என்ன? அந்த பாதிப்புக்குத் தகுந்த பலன் கிடைத்ததா? அதாவது Cost Benefit Analysis எதுவும் அரசுத்தரப்பில் இருந்து செய்யப்பட்டதா என்றால், இல்லை என்ற பதில்தான் வரும். குடிமக்களிடம் இருந்து கடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அரசு வழக்கம் போல தனது கடமைகளைக் கண்டுகொள்ளாமல் கடந்து போய்விட்டது.

தனி மனித அந்தரங்கம்

ஆதார் என்ற திட்டத்தை முடிந்த அளவு தங்கள் தேவைக்காக வளைக்கப் பார்த்தது இந்த அரசு. அது தனி மனித அந்தரங்கங்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்ற கவலைகள் புறந்தள்ளப்பட்டன. ஆதார் திட்டம் கொடுக்கும் பலன்கள் மட்டும் முன்னிறுத்தப்பட்டன. ‘தனி மனித அந்தரங்கம் என்ற ஒன்று கிடையவே கிடையாது, அப்படி ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை’ என்று அரசே நீதிமன்றத்தில் அஃபிடவிட்டில் சொல்லி விட்டது. அதாவது என்ன அர்த்தம்? பிரைவசி என்பது தனிமனிதனுக்குக் கிடையாது, தேச முன்னேற்றத்துக்காக நீங்கள் உங்கள் தகவல்களை அரசுக்குக் கொடுக்க வேண்டும்.

ஆனால் இந்த முறை நீதிமன்றம் அதற்கு செவிமடுக்காமல் தனி மனித அந்தரங்கம் என்பது அவர்தம் உரிமை என்று தீர்ப்பளித்தது. நமது படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்கும் உரிமை அரசுக்கு மறுக்கப்பட்டது. ஆனாலும் அதனை வேறு வேறு வழிகளில் செயல்படுத்துவதை அரசு முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தேசியப் பாதுகாப்பு

வாஜ்பாய் காலத்து பாஜக அரசு தீவிரவாதத்தை எதிர்கொள்ள பொடா சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் தனி மனித உரிமைகளில், குறிப்பாக சிறுபான்மையினர் வாழ்வியலில் பெரும் பாதிப்புகளைக் கொண்டு வந்தது. பின்னர் அது தூக்கி எறியப்பட்டது. மன்மோகன் அரசு அப்படி ஒரு கொடுங்கோல் சட்டம் தேவைப்படாமலேயே தீவிரவாத செயல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது. முன் எப்போதும் இருந்திராத அமைதியை காஷ்மீர் எல்லைப்பகுதியில் மன்மோகன் கொண்டு வந்து விட்டுச் சென்றார்.

ஆனால் என்ன ஆயிற்று? தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்கொள்கிறேன் என்று முழக்கமிடும் மோடி அரசில் எல்லை அத்துமீறல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வாஜ்பாய் காலத்து லெவலுக்கு மோசமானது. கடந்த இருபது ஆண்டு காஷ்மீர் வரலாற்றிலேயே மோசமான புல்வாமா தாக்குதலும் நடந்து முடிந்தது. ஆனாலும் அதனை திறமையாக தங்கள் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு வெற்றியும் பெற்றார்கள்.

தேர்தல் முடிந்ததுமே அமித் ஷா தேசிய புலனாய்வுக் கழகத்தின் எல்லைகளை விரிவுபடுத்த முனைந்தார். சட்டம் ஒழுங்கில் மாநிலத்தின் உரிமைகளின் மீது கை வைத்தது அது. அதாவது தேசப்பாதுகாப்புக்கு மாநிலங்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். சரி, சட்டம் ஒழுங்கு மத்திய நிறுவனத்திடம் இருந்தால் முன்னேற்றம் வரும் என்பதை எதன் அடிப்படையில் நம்புகிறார்கள்? தில்லியின் சட்டம் ஒழுங்கு மத்திய அரசிடம்தான் இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் தில்லியின் சட்டம் ஒழுங்கில் கொண்டு வரப்பட்ட முன்னேற்றங்கள் என்ன? குற்றங்கள் குறைந்ததா? குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்புகள் அதிகரித்ததா?

நமக்குத் தெரியாது. காரணம், குற்றங்கள் பற்றிய ஆய்வுகள் கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப்படவே இல்லை. தேசிய குற்றவியல் ஆய்வுக் கழகம் வருடா வருடம் பதிப்பிக்கும் குற்றங்கள் பற்றிய ஆய்வறிக்கை 2017 முதல் வெளியிடப்படவே இல்லை. அதாவது, வழக்கம் போல கடமைகள் குடிமக்களுக்கு மட்டும்தான்; அரசுக்குக் கடமைகள் என்று எதுவும் இல்லை.

தகவல் அறியும் உரிமை

இதுவும் அரசுக்குத் தலைவலியான ஒரு விஷயமாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த RTI சட்டத்தை தவிர்த்துப் பார்த்தாலே கூட தங்கள் ஆட்சி பற்றி மக்களுக்கு ஏதாவது தெரிவிக்க வேண்டியது தங்கள் கடமை என்ற சிந்தனையே இந்த அரசுக்குக் கிடையாது. குடிமக்களுக்குத்தான் ஒரு உரிமையும் கிடையாதே? தகவல் மட்டும் அறிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்ற அளவில்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. வேலையின்மை பற்றிய வருடாந்திர அறிக்கை நிறுத்தப்பட்டு விட்டது (கடந்த ஆண்டு அறிக்கை வெளியே கசிந்து போய் அப்புறம் வேறு வழியின்றி வெளியிட்டார்கள்.) அதுவும் தெளிவாக தேர்தல் முடியும் வரை காத்திருந்து பின்னர்தான் அந்த அறிக்கை வெளிவந்தது.) விவசாயிகள் தற்கொலை பற்றிய அறிக்கையை மன்மோகன் அரசு தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதுவும் 2016இல் இருந்து நிறுத்தப்பட்டு விட்டது. பணநீக்கம் பற்றி, ஜிஎஸ்டி பற்றி எந்த அறிக்கையும் இதுவரை வெளிவரவில்லை. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே நாகாலாந்து பிரச்சினையில் உடன்படிக்கை எட்டப்பட்டு விட்டது என்று பெருமையாக அறிவித்தார்கள். ஆனால் அந்த உடன்படிக்கையின் ஷரத்துகள் என்னென்ன என்ற விஷயம் வெளியிடப்படவில்லை. சரி, கொஞ்ச காலம் கழித்து வரும் என்று எதிர்பார்த்தோம். இன்று வரை அது வெளியாகவில்லை. குற்றங்கள் பற்றிய ஆய்வறிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டன. போதாததற்கு பிரதமரும் எந்த ஊடக சந்திப்புகளும் நடத்துவதில்லை.

இத்தகைய போக்குகளின் மூலம் என்ன சொல்ல வருகிறது இந்த அரசு? நிர்வாகம் பற்றிய எந்த விஷயத்தை தெரிந்து கொள்வதற்கும், எந்தக் கேள்வி கேட்பதற்கும் குடிமக்களுக்கு உரிமை கிடையாது. அப்படித் தெரிந்து கொள்ள முயற்சிப்பதே தேசவிரோதச் செயல் என்கிற அளவில்தான் இயங்கி வருகிறது.

இதே சிந்தனாவாதத்தின் தொடர்ச்சிதான் ரேஷன் கார்டில் அரிசி வேண்டுமானால் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும், தேச ஒற்றுமைக்காக சிறார்கள் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், போன்ற அறிவிப்புகள்.

முடிவுரை

மோடியின் அரசு குடிமக்களின் கடமைகள் என்னென்ன என்று கவனமாகத் தேடிக்கொண்டே இருக்கிறது. அந்தக் கடமைகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு நினைவுறுத்தி அவற்றை அவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொண்டும் இருக்கிறது. ஆனால் அரசுக்கு இருக்கும் கடமைகள் பற்றிய கவலைகள் எதுவும் அவர்களுக்குப் பிரச்சினையாக இல்லை. அரசு தர வேண்டிய ஆதார சேவைகளில் கூட அவர்களிடம் பிரச்சினை வருகிறது. அதனால்தான் சத்துணவு, ரேஷன் போன்ற திட்டங்களை அமல்படுத்துவதில் பாஜக மாநிலங்கள் சுணக்கம் கொள்கின்றன.

முந்தைய மன்மோகன் அரசு உரிமை சார்ந்த நிறைய சட்டங்கள் மற்றும் திட்டங்களைக் கொண்டு வந்தது. ஊரக வேலை வாய்ப்பு திட்டம், ஆதாரக் கல்வி உரிமை சட்டம், ஆதார உணவு உரிமை, தகவல் அறியும் உரிமை போன்றவை. Rural Employment Act, Right to Education, Right to Food, Right to Information Act.. இவை யாவுமே உரிமைகள் சார்ந்தவை. இவை யாவுமே இன்றைய அரசால் கிடப்பில் போடப்பட்டோ அல்லது சரிவர அமல்படுத்தாமலோ பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. ஊரகப்பகுதியில் மாபெரும் புரட்சியை நிகழ்த்திய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் பற்றி ஆட்சிக்கு வந்த புதிதிலேயே மோடி கிண்டலும் கேலியும் அடித்து பேசி இருந்தார். அதற்கு ஏற்றபடி இந்த திட்டம் சரிவர நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமல் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இங்கே குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் என்று பெரிதாக எதுவும் கிடையாது. ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. புதிது புதிதாகக் கடமைகள் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். கடமைகளின் பட்டியல் நீளமாகிக் கொண்டே இருக்கிறது.

புரிய வேண்டிய தியாகங்களின் பட்டியலும் கூடத்தான்.