முதலில் வெகுஜனவியம் என்ற கலைச்சொல்லை அறிமுகம் செய்ய வேண்டும். இது ஆங்கிலத்தில் பாபுலிசம் என்று கூறப்படுவது. இதன் வேர்ச்சொல் பீப்பிள் – இலத்தீன் மொழியில் பாபுலஸ். பாபுலர் என்ற வார்த்தையும் இதே மூலத்திலிருந்து கிளைத்தது. தமிழில் இதை மக்கள் என்றோ, ஜனங்கள் என்றோ கூறலாம். இந்த மக்கள் தொகுதியைக் குறிப்பிடும் வேறு இரண்டு கலைச்சொற்களும் முக்கியமானவை. அவை மாஸ், மல்டிட்டியூட் ஆகியவை. இவற்றை வேறுபடுத்த தமிழில் பாப்புலர் என்பதை வெகுஜன என்றும், பாபுலிசம் என்பதை வெகுஜனவியம் என்று கொள்ளலாம்; மாஸ் என்பதை வெகுமக்கள் என்றும், மல்டிட்டியூட் என்பதை மக்கள் திரள் என்றும் குறிப்பிடலாம் என்பதே என் எண்ணம். பாபுலர் சினிமா, பாபுலர் ம்யூசிக் ஆகியவற்றை வெகுஜன சினிமா, வெகுஜன இசை என்றே குறிப்பிட்டு வருகிறேன். மாஸ் என்பதை வெகுமக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளேன். மாஸ் மீடியா என்பதை வெகுமக்கள் ஊடகம் என்று கூறலாம். பாபுலர் என்பதற்கும், மாஸ் என்பதற்கும் என்ன வேறுபாடு? முக்கியமான வேறுபாடாக பல கோட்பாளர்கள் கொள்வது பாபுலர் என்பதில் உற்பத்தி, விநியோகம், நுகர்வு மூன்றும் உள்ளது. மாஸ் என்பதில் அதிகம் விநியோகமும், நுகர்வும் உள்ளது; உற்பத்தி முதலீட்டிய நிறுவனங்களிடம் சென்றுவிடுகிறது.

தமிழ் மொழிக்கு சமீபத்தில் நேர்ந்த மிகப்பெரிய அவலம் இந்த பாபுலர் என்பதை சிலர் பரப்பியம் என்று எழுதத்துவங்கியது. பரப்புதல் என்றால் கொள்கையைப் பரப்புவது என்பது போன்ற செயல். இது ஆங்கிலத்தில் ப்ரோபகண்டா என்று கூறப்படுவது. பாபுலர் ம்யூசிக் என்பது எதையும் பரப்புவது இல்லை. அது வெகுஜன இசை உற்பத்தி, விநியோகம், நுகர்வு என்ற மூன்று பரிமாணங்களிலும் நிகழ்வது. மாஸ் மீடியா என்பது கூட ஒற்றைச் செய்தியைப் பரப்புவது இல்லை. பல முரண்பட்ட செய்திகளும், கருத்துக்களும் பரவுவது. எனவே அதுவும் கூட ”பரப்பியச்” செயல்பாடு கிடையாது. ஒரு மொழியில் சிந்தனையை அழிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற அபத்தமான கலைச்சொற்களை உருவாக்கினால் போதுமானது. உதாரணமாக, வெகுஜனக் கலையில் இருக்கும் படைப்பூக்கத்தை பரப்பியம் என்ற வார்த்தை கொன்று விடுகிறது.

இதிலே அரசியலுக்கு வந்தால் வெகுஜன அரசியலைப் பரப்பிய அரசியல் என்று எழுதினால், மக்களின் செயலூக்கத்தை முற்றிலும் மழுங்கடித்து விடுவோம். காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு வெகுஜன இயக்கமானது வெகுஜனக் கலைகள் மூலமாக. மதுரகவி பாஸ்கரதாஸ் வெகுஜனக் கலைஞர்; எப்படியென்றால் அவர் மக்கள் இடையேயிருந்து தோன்றிய கலைஞர். அவரை ஒரு குறிப்பிட்ட பொருளில் வெகுமக்கள் கலைஞர் என்றுகூட சொல்லலாம் (ஆர்ட்டிஸ்ட் ஆஃப் த மாஸ்ஸஸ்). ஆனால் பரப்பிய கலைஞர் என்று சொன்னால் அபத்தமாக இருக்கும். அவர் எந்த ஒரு அமைப்பின் கருத்தியலையும் பரப்பியவர் அல்லர். அவருடைய கலைச்செயல்பாட்டின் பகுதியாக தேசிய உணர்வுகொண்ட பாடல்களையும் பாடினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் வெகுஜன சினிமா நாயகர்கள். வெகுமக்கள் ஊடக பிரபலங்கள். இவர்கள் அரசியல் கட்சிகளுக்குப் பிரசாரம் செய்திருந்தாலும், பரப்பிய கலைஞர்கள் என்று சொல்வது இவர்கள் திரைப்படங்களின் வெகுஜனக் கலைத்தன்மையை நிராகரிப்பது ஆகும்.

எனவே பாப்புலிஸம் என்ற முக்கியமான ஆங்கில அரசியல் கலைச்சொல்லை, வெகுஜனவியம் என்றே குறிப்பிட விரும்புகிறேன். வெகுஜனவியத்தின் தலைசிறந்த கோட்பாட்டாளர் அர்ஜெண்டைனாவைச் சேர்ந்த எர்னெஸ்டோ லக்லாவ் (Ernesto Laclau, 1935-2014) ஆவார். இவரது ‘வெகுஜனவியத் தர்க்கம்’ – பாபுலிஸ்ட் ரீசன் (2005) என்ற நூல் இன்றைய அரசியலைப் புரிந்துகொள்ள மிக முக்கியமான கோட்பாட்டாக்கம் என்று கூறலாம். இவர் கிராம்சியின் வழி நின்று, ஹெஜிமனி – கருத்தியல் மேலாதிக்கம் என்ற கோட்பாட்டை அரசியல் செயல்பாட்டின் மையமாகக் கொண்டு சிந்திப்பவர்.

ஆங்கிலத்தில் இந்த போஸ்ட் என்ற முன்னொட்டின் விபரீதப் பரவலினால் இவரை போஸ்ட் மார்க்ஸிஸ்ட் என்று சிலர் குறிப்பிடுவர். பெரும்பாலான போஸ்ட் முன்னொட்டுகளைப் போன்றே இது பயனற்றதும், குழப்பம் தருவதுமான அடைமொழியாகும். மேற்குலகின் சிந்தனையில் ஏற்பட்ட ஒரு சொறி சிரங்கு போன்ற தொற்று வியாதி இந்த போஸ்ட் என்ற முன்னொட்டு என்றால் மிகையாகாது. நடைமுறை வாழ்க்கையில் தொடர்ச்சிகளே உண்டு. எதுவும் எதற்கும் “போஸ்ட்” ஆவதில்லை. அதாவது அதன்பின் இது என்று வரிசைப்படுத்துமளவு சிந்தனை துண்டிப்பு நிகழ்வதில்லை. போஸ்ட் கலோனியல் என்ற ஒரு சேர்க்கை மட்டுமே, காலனீய ஆட்சிக்குப் பிந்தைய தேச உருவாக்கத்தைச் சுட்டுவதற்கு சரியான விதத்தில் பயன்படக்கூடியது. இதை பிற்காலனீயம் என தமிழில் கூறுவதிலும் தவறில்லை. ஏனெனில் ஒருவகையில் காலனீய ஆட்சிக்குப் பிறகும், அதன் தாக்கங்களின் தொடர்ச்சியாகவும்தான் பிற்காலனீய சமூகங்கள் இயங்குகின்றன எனலாம். எனவே, லக்லாவ் கிராம்சிய சோஷலிஸ சிந்தனையாளர், அந்த சிந்தனை மரபின் தொடர்ச்சி என்றே நாம் கருதவேண்டும்.

லக்லாவின் சிந்தனையிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது வெகுஜனவியத்திற்கும், பாசிசத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதேயாகும். அதற்கு முன்னால் வெகுஜனவியம் என்பதற்கு இன்றைய ஊடக, அறிவுலகச் சொல்லாடல்களில் உள்ள பயன் என்ன, மதிப்பு என்ன என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தமிழகத்தில் சிந்தனையாளர்களின் எழுத்துக்களை எப்படி ஊடகங்கள் சார்ந்த பொதுமன்றம் பொருட்படுத்துவதில்லையோ, அதேபோலத்தான் மேற்குலகிலும் லக்லாவ் போன்றவர்களின் சிந்தனைகளை ஊடகப் பொதுமன்றம் பொருட்படுத்துவதில்லை. இவர் எழுத்துக்கள் கடினமாக இருக்கும். படித்துப் புரிந்துகொள்ள தத்துவப் பயிற்சி தேவைப்படும் என்பதே காரணம். இன்று ஆங்கில ஊடகத்தில் பாபுலிஸம் எனப்படுவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்றவர்களைக் குறிக்கவே அதிகம் பயன்படுகிறது. ஒரு கெட்ட வார்த்தையாக இருக்கிறது. ஏன் என்பதை முதலில் காண்போம்.

மக்களும், அதிகாரமும்

அதிகாரம் என்பது எந்த அளவு ஒரு சில புள்ளிகளில் குவிகிறது, எந்த அளவு பரவலாக மக்களிடம் சேர்கிறது என்பதே மக்களாட்சி என்ற நவீன அரசியல் சிந்தனையின் அளவுகோல். முன்னொரு காலத்தில் கிரேக்க நகர அரசுகளில் மக்களனைவரும் கூடி முடிவெடுப்பார்கள், சோழர் காலத்தில் குடவோலைச்சீட்டில் கிராம நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள் என்றெல்லாம் இருந்தாலும் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் சட்டம் இயற்றி தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வார்கள் என்பது மிகவும் சமீபத்திய சிந்தனை. அதிலும் வயது வந்தோர் அனைவரும் ஓட்டுப்போட்டு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நடைமுறைக்கு ஒரு நூறாண்டு கூட வயதாகவில்லை.

இந்த நடைமுறை உருவானபோது, உலகம் முழுவதும் அனைத்து நாடுகளில் சமூகம் பிளவுபட்டுத்தானிருந்தது. பல தலைமுறைகளாக நில உடைமை, பண வசதி ஆகியவற்றுடன் கல்வியில் தேர்ச்சியும் உடைய ஒரு சமூகப்பிரிவும், பெரும்பான்மையான அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மக்கள் தொகுதிகளும் இருந்தன. இந்த அன்றாடப் பிழைப்பாளர்களான சொத்துகளற்ற மக்களிடம் கல்வியறிவும், உலக இயக்கம் குறித்த தகவல்களும் இல்லை. ஊடகங்கள் இருந்தாலும் கூட, இவர்களுக்கு இவ்விதமான விஷயங்களில் ஈடுபாடு காட்டி கற்கும் அளவு வாழ்க்கை நிலையோ, பழக்க வழக்கமோ இல்லை. இப்போதும் கூட அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ, இந்தியாவிலோ, சீனாவிலோ இரண்டு கொரிய நாடுகளுக்கும் இடையிலான உறவு எத்தகையது, ஹியூகோ சாவேஸ் எப்படி வெனிஸுலாவில் மக்கள் தலைவர் ஆனார் என்றெல்லாம் விசாரித்தால் பெரும்பாலோனாருக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் செய்தித்தாள்களை தொடர்ந்து வாசிக்கும் மக்கள், குறிப்பாக கல்வித் தேர்ச்சி, இந்தியாவில் ஆங்கிலத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சில பல விஷயங்கள் தெரிந்திருக்கும் என எதிர்பார்க்கலாம். தி ஹிண்டு ஆங்கில நாளிதழையும், இந்து தமிழ் திசை நாளிதழையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த வேறுபாடு புரியும். இந்து தமிழ் திசை சில இலக்கிய கலாசார செய்திகளைப் பிரசுரித்தாலும், நாட்டு நடப்பு, உலக நடப்பு செய்திகள் என்பதைப் பொறுத்தவரை ஆங்கில நாளிதழுக்கு சிறிதும் தொடர்பின்றி மிகுந்த பாமரத்தன்மையுடனும், குறுகிய பார்வையுடனும் இருப்பதைப் பார்க்கலாம். முத்துராமலிங்கத் தேவர் குறித்த பல பாமரக் கற்பனைகளை சரிபார்க்காமல் வெளியிட்டு இந்த நாளிதழ் கண்டிக்கப்பட்டது ஒரு உதாரணம்.

இந்த நிலையில் இப்படி உலக நடப்பும், நாட்டு நடப்பும் சரிவர அறிய இயலாத, போதுமான கல்வியும், பொது அறிதலும் அற்ற பெரும்பான்மை உழைக்கும், உதிரி பாட்டாளிவர்க்க மக்களை ஈர்க்கும் விதமாக அரசியல் செய்வது என்பது வெகுஜனவியம் எனப்படுகிறது. இவ்விதம் செய்பவர்கள் மக்களிடம் உள்ள அடையாளம் சார்ந்த அச்சங்களை, கற்பிதங்களைத் தூண்டிவிட்டு அவர்கள் ஆதரவைப் பெறுவதால் இது உண்மையான மக்களாட்சிக்கு எதிரானது, பாசிச அம்சங்கள் கொண்டது என்று கருதுவதாலேயே மேற்கத்திய ஊடகங்கள் பாபுலிசம் என்ற வெகுஜனவியத்தை இழிவான விஷயமாகப் பார்க்கின்றன. ஐயகோ, உலகம் முழுவதும் பாபுலிசம் பரவுகிறதே எனப் புலம்புகின்றன. குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் போன்ற மலினமான அரசியல்வாதி அமெரிக்க ஜனாதிபதி ஆனது அந்த நாட்டில் படித்த குடிமைச் சமூக மக்களிடையே பெரியதொரு வெட்கத்தையும், அவமானத்தையும் தோற்றுவித்துள்ளது. ஏன் டிரம்பிற்கு வெகுஜன ஆதரவு கிடைத்தது, ஏன் நரேந்திர மோடிக்கு வெகுஜன ஆதரவு கிடைத்தது போன்ற கேள்விகளுக்குப் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் இந்த நிகழ்வுகள் வெகுஜனவிய அரசியலின் தீய விளைவுகளாகவே பார்க்கப்படுகின்றன.

முற்போக்கு அல்லது இடதுசாரி வெகுஜனவியம்

இத்தகைய ஊடகங்களின் எதிர்மறை புரிதலுக்கு மாற்றாக எர்னெஸ்டோ லக்லாவ் முற்போக்கான அல்லது இடதுசாரி வெகுஜனவியம் சாத்தியம் என்று கருதுகிறார். எப்படியென்று புரிந்துகொள்ள அவருடைய அடிப்படை கருத்தாக்கங்களை நாம் உள்வாங்க வேண்டும்.

ஒரு “மக்கள்” என்ற கருத்தாக்கத்தைக் கட்டமைப்பதே அரசியலின் அடிப்படை செயல்பாடு. அது அமெரிக்க மக்கள், இந்திய மக்கள், தமிழ் மக்கள் என எதுவாகவும் இருக்கலாம். முதலில் அப்படி மக்கள் என்ற அடையாளத்தைக் கட்டமைக்க வேண்டும்.
மார்க்சியம் வர்க்க அரசியலை முன்னெடுத்ததால் இந்த மக்கள் என்ற கட்டுமானத்தை சரியாக அணுகவில்லை. வர்க்கம் என்பது முழுமையானதாக இருப்பதில்லை. அதற்குள் பல தளங்கள், பிரிவுகள் உள்ளன. நகர்ப்புற தொழிலாளியும், கிராமப்புற விவசாயியும் ஒரே விதமான பிரச்சினைகளை சந்திப்பதில்லை.

மக்களில் ஒரு பிரிவினர் தங்களுக்கான கருத்தியலை அனைவருக்குமான அரசியலாக மாற்றுவதே ஹெஜிமனி என்ற கருத்தியல் மேலாதிக்கம்.

அதிகாரம் தங்களிடம் குவிந்துள்ள சிறிய அளவிலான மேட்டுக்குடியினரின் கருத்தியலே நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதை மாற்ற, வெகுஜனவிய அரசியல் முற்படுகிறது.

அடித்தள மக்கள் தொகுதிகளை நாம் அவர்களுடைய கோரிக்கைகள் மூலமாகவே இனம் காண வேண்டும். ஓவ்வொரு மக்கள் தொகுதியின் கோரிக்கையும் வித்தியாசமானது. அதே சமயம் பல சமத்துவமான கூறுகளைக் கொண்டது. மாணவர்களின் கோரிக்கைகளில் ஒன்று கல்விக்கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்பது என்றால் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று, இடுபொருள்களின் விலை குறைய வேண்டும் என்பதாக இருக்கும். இதில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஆதாரமான உள்ளீட்டுப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பது சம அம்சம் கொண்டதாக இருக்கிறது.

இந்த சம அளவிலான கோரிக்கைகள் எல்லாம் ஒரு அணியில் திரண்டால்தான் மேட்டுக்குடி அரசியலின் மேலாதிக்கத்தை மாற்ற முடியும். எனவே இவையனைத்திற்குமான ஒரு பொதுக் குறியீடு, அடையாளம் வேண்டும். இந்தப் பொதுக் குறீயிடு உண்மையில் எதைக்குறிக்கிறது என்பது தெளிவில்லாமல் இருக்கும். உதாரணமாக ‘நீதி’ என்றால் என்ன என்பது திட்டவட்டமாக வரையறுக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அது ஒவ்வொரு மக்கள் தொகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட பொருளைத் தரும். இதை லக்லாவ் “வெற்றுக் குறியீடு” (Empty Signifier) என அழைக்கிறார்.

இந்த வெற்றுக்குறியீட்டின் மூலம் பெயர் அடையாளம் கொள்ளும் மக்கள், அந்த பரப்பிற்குள்ளாகவே மேட்டுக்குடியினருக்கும், அடித்தளத்திற்குமான எல்லைக்கோட்டை அரசியல் போராட்டத்தின் களமாகக் கொள்ள வேண்டும். இதை உள்முக எல்லை (Internal Frontier) என்று அழைக்கிறார் லக்லாவ்.

பல சமயங்களில் சமூக முரண்கள் பல வடிவங்கள் கொள்ளும் என்பதால் இந்த உள்முக எல்லை என்பது நெகிழ்ச்சியுள்ளதாக இருக்க வேண்டும். மாறிவரும் கோரிக்கைகள் சார்ந்த மக்கள் தொகுதிகளின் தன்மைக்கேற்ப அந்த எல்லைக்கோடு நகரும் தன்மையதாக இருக்க வேண்டும் என்கிறார். அதேபோல அந்த பொதுக் குறியீடும் மிதக்கும் குறியீடாக இருக்க வேண்டும் என்கிறார்.
இத்தகைய நகரும் உள்முக எல்லை, மிதக்கும் வெற்றுக் குறியீடு ஆகியவற்றின் மூலம் பல்வேறு கோரிக்கைகளைக் கொண்ட மக்கள் தொகுதிகளை ஒருங்கிணத்து சமூக முரண்களை சமன் செய்து, சமூக நீதியினை செயல்படுத்துவதே வெகுஜன அரசியல் என்று அவர் வரையறை செய்கிறார்.

வெகுஜனவியம் பாசிசமாவது எப்படி?

மேற்சொன்ன லக்லாவின் வரையறைகளை மனதில் கொண்டால், வெகுஜனவியம் பாசிசமாவது எப்படி என்பதையும் நாம் பிரித்துப் பார்த்து அணுகலாம். வெகுஜனவியம் உள்முக எல்லை என்பதை நெகிழ்வாகவும், நகரக்கூடியதாகவும் வைத்துள்ளது. பாசிசம் அதை இறுக்கமாக நிலைப்படுத்துகிறது என்பது முதல் அம்சம். இரண்டாவது அம்சம் பல்வேறு மக்கள் கோரிக்கைகளை சமப்படுத்தி ஒருங்கிணைக்கும் வெற்றுக்குறியீட்டை மிதக்கும் குறியீடாக வைத்துக்கொள்வது என்பதும் முக்கியமானது.

உதாரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எடுத்துக்கொண்டால் அவர் வெற்றுக்குறியீடாகக் கொள்வது அமெரிக்க தேச நலன், மக்கள் நலன் என்பதைத்தான். அவர் உள்முக எல்லையாகச் சுட்டுவது புலம்பெயர்ந்து வரும் லத்தீன் அமெரிக்க உழைப்பாளிகளை. இதன் மூலம் அவர் அமெரிக்க பாமர மக்களை, குடியேறும் அன்னியர்களை வெறுக்கச் செய்கிறார். அது அவரது வெகுஜனவியத்தை பாசிசத் தன்மை கொள்ளச் செய்கிறது. முசோலினியின் பாசிசம் இத்தாலியர்கள் எல்லோருடைய நலன்களும் ஒன்றுதான் எனக் கூறியது. அதையொட்டி வர்க்கமுரண்பாடு பேசும் கம்யூனிஸ்டுகள் இத்தாலிய நலன்களுக்கு எதிரானவர்கள் என்றார். உலகின் எல்லா பாசிசங்களுமே இந்தக் காரணத்திற்காக கம்யூனிஸ்டுகளை வெறுக்கும்.

இந்தியாவிலேயே பாரதீய ஜனதா கட்சியை எடுத்துக்கொண்டால் அது கம்யூனிஸ்டுகளைக் கடுமையாக வெறுக்கும். இத்தனைக்கும் இரண்டு பாராளுமன்ற கம்யூனிஸ்டு கட்சிகளும் இந்திய தேசியத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்பவை. ஆனாலும் அவை தொழிலாளர் மைய சிந்தனையைக் கொள்வதால், முதலீட்டிய நலன்களுடன் முரண்படுகின்றன. இது முதலீட்டியத்துடன் மக்களுக்கு இசைவை ஏற்படுத்த விரும்பும் பாசிசத்திற்கு எட்டிக்காயாக இருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது?

அவர்கள் உடனே இந்து என்ற அடையாளத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இஸ்லாமியர்களை அதற்கு வெளியில் இருப்பவர்களாக உள்முக எல்லையினை உருவாக்குகிறார்கள். சில நாட்களுக்கு முன்கூட இஸ்லாமியர்களை எப்படி உடல் அளவில் அடையாளம் காணலாம் என ஒரு பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பேசியுள்ளார். அவர்கள் இப்படி உடல்ரீதியாக இஸ்லாமியர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு எதிராக வெறுப்பரசியல் செய்து மக்களை ஒன்றுபடுத்துகிறார்கள். இதில் இந்து அடையாளம் என்பது வெற்றுக் குறியீடு என்றாலும் உள்முக எல்லை என்பது முழுக்க முழுக்க அடையாளம் சார்ந்து இறுக்கமாக நெகிழ்வற்றதாக நகர முடியாததாக இருக்கிறது. அதனால் இந்து என்ற குறியீடும் வெறும் அடையாளவாதமாக இருக்கிறது. அதன் உள்ளீடு வன்முறையாக, வெறுப்பாக மாறுகிறது.

நான் இளம் வயதில் 1982 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவ்ரஸ் கூட்டத்திற்குச் சென்றேன். என் நண்பர்கள் சிலர் அவர் பேச்சைக்கேட்டால் நான் அவர்கள் தத்துவத்தைப் புரிந்துகொள்வேன் எனக்கூறிக் கூப்பிட்டார்கள். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையை நான் எதிர்த்ததால், அதனை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளான நண்பர்களுடன் ஒரு உரையாடல் இருந்த காலம் அது. தேவ்ரஸ் இந்து என்ற வார்த்தைக்கு மிக விரிவான பொருளைக் கூறினார். அனைத்து உயிர்களையும் நேசிப்பவர்கள் என்பது போல விரிவான பொருள் கூறினார். அப்படிக் கூறி ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் இந்து அடையாளம் மிக விரிவான பொருள் கொண்டது, வெறும் பிறப்பு சார்ந்த அடையாளம் அல்ல என்றார். பின்னர் பேசிக்கொண்டே செல்லும்போது இந்து என்பது பிறப்பு சார்ந்த அடையாளம் என்றால்தான் என்ன தவறு என்றார். அந்தக் குறுகிய அர்த்தத்திலும் அது மேன்மையான பொருள் கொண்டது என்றார். எனக்கு உடனேயே இந்த முரண்பாடு துலக்கமாகப் புரிந்தது. இந்து என்பது ஒரு மிதக்கும் குறிப்பான், உயர் விழுமியங்களைக் குறிப்பது என்று சாகசமாகச் சொல்லிவிட்டு, அதை திட்டவட்டமாகப் பிறப்பு சார்ந்த அடையாளத்துடன் பிணைப்பதன் மூலம் பாசிசத்திற்கு வெகுஜன முலாம் பூசவதே நடக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். அந்த நண்பர்கள் தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்த அச்சமூட்டும் கதைகளைப் பரப்புவார்கள். பூமிக்கடியில் இருக்கும் எண்ணெய் மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து நகர்ந்து இந்தியாவிற்கு அடியில் வரப்போகிறது. அதனால் முஸ்லிம்கள் ஏராளமாக குழந்தைகள் பெற்று இந்தியாவில் பெரும்பான்மையாக மாற முயற்சிக்கிறார்கள் என்று கூறுவார்கள். இதெல்லாம் பெரும் அருவருப்பைத் தந்ததால் அந்த நட்புகளைத் துண்டித்துவிட்டேன். இதுதான் பாசிசம் வெகுஜனவியமாகத் தோற்றமளிக்கும் தன்மை. இவர்களது உள்முக எல்லை என்பது அடையாளம் சார்ந்து நிலைபெற்றதாக இருக்கும். அந்நியப்படுத்தப்படும் அடையாளத்தின் மீது வெறுப்பு மட்டுமே இருக்கும். இஸ்லாமியர்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போகக் கூடாது என்று கேட்பது சகஜமாக இருக்கும். அவர்களைக் கும்பலாகத் தாக்குவது, கொல்வது நியாயப்படுத்தப்படும். ஹிட்லர் விஷயத்தில் இது யூதர்களின் மீதான் வெறுப்பாக மாறியதும் காஸ் சேம்பர்களில் அவர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதும் மானுடத்திற்கான மகத்தான பாடம்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற முற்போக்கு வெகுஜனவிய இயக்கம்

மேலே விவரித்த லக்லாவின் கோட்பாட்டு வெளிச்சத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தைப் பரிசீலித்தால் அதன் முற்போக்கான வெகுஜனவிய அரசியலைப் புரிந்துகொள்ளலாம். அதன் உள்முக எல்லை என்பது ஆரியத்தை, திராவிடத்திலிருந்து பிரிப்பது. பார்ப்பனர்கள் ஆரியர்கள் என அடையாளப்படுத்தப்பட்டதால், பார்ப்பனரல்லாதோர் இயக்கமாகவே நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகமும் செயல்பட்டது. ஆனால் இந்த ஆரிய, திராவிட வேறுபாடு கருத்தியல் மேலாதிக்கம் தொடர்பான முரணாகவே கருதப்பட்டதே தவிர, பார்ப்பனர்களைத் தனிப்பட்ட முறையில் வெறுப்பது என்பது முன்னெடுக்கப்படவில்லை. ஆரிய, பார்ப்பனீய கருத்தியல் என்பது ஜாதீய கருத்தியலாக கொள்ளப்பட்டது. திராவிட கருத்தியல் என்பது ஜாதி ஏற்றத்தாழ்வைக் கருதாத சமத்துவம் சார்ந்த கருத்தியலாக முன்வைக்கப்பட்டது.

நீதிக்கட்சி காலத்தில் பார்ப்பனர்கள் அரசுப் பதவிகள், நவீன கால அதிகார மையங்களான சட்டத்துறை, உயர்கல்வி, தொழில்துறைகள் ஆகியவற்றில் முதன்மை பெற்றிருந்த நிலையில், பிறருக்கும் அவற்றில் இடம் வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானதாக இருந்தது. ஆனாலும் அப்போதே இந்தக் கோரிக்கை தென்னிந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக உருப்பெற்றது. திராவிடர்கள், ஆரியர்கள் என்ற வித்தியாசமும் இதன் ஒரு பகுதியாக கூறப்பட்டது. திராவிடன் என்ற பெயரில் பத்திரிகையும் நடத்தப்பெற்றது.

பெரியார் காங்கிரஸிலிருந்து பிரிந்தபோது பார்ப்பனீயத்திற்கு எதிரான விரிவானதொரு கலாசாரப் போரை துவங்கினார். அவரது சுயமரியாதை இயக்கம் ஒரு கருத்தியல் மேலாதிக்கத்திற்கான போராட்டமாக இருந்தது. அதாவது பார்ப்பனீய கருத்தியல் மேலாண்மையைத் தகர்த்து, அதற்கு மாற்றாக ஒரு சமத்துவப் பார்வையைக் கருத்தியல் மேலாண்மையாக்கும் நோக்கில் செயல்பட்டது. இதன் பார்ப்பனீய எதிர்ப்பு உள்ளடக்கம் கருதியே 1944-ஆம் ஆண்டு தமிழர் கழகமாக அன்றி திராவிடர் கழகமாக உருப்பெற்றது.
நீதிக்கட்சி ஒரு குடிமைச்சமூக இயக்கம். சமூகத்தின் மேட்டுக்குடியினரால் முன்னெடுக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஒரு புரட்சிகர சமூக இயக்கம்; விமர்சன சிந்தனையை பரவலாக்குவதையே நாட்டமாகக் கொண்டது. இரண்டும் இணைந்து திராவிடர் கழகம் ஆனபோதும் அது திராவிட நாடு என்பதை ஒரு கருத்தாக்கமாக்க வலியுறுத்தியதே தவிர, அதை நோக்கி மக்களைத் திரட்டுவது சாத்தியப்படவில்லை.
திராவிட முன்னேற்ற கழகம் 1949-இல் தோன்றியபோது அது லக்லாவ் கூறுவதுபோல ஒரு மக்கள் அடையாளத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவையை உணர்ந்தது. இந்தி எதிர்ப்பு என்பது சமூகத்தின் பல கோரிக்கைகளையும் ஒருங்கிணைப்பதைக் கண்டதால், தமிழ் என்ற வெற்றுக்குறியீட்டினை அது கைக்கொண்டது. அதாவது சமூகத்தின் பல்வேறு மக்கள் தொகுதிகளின் கோரிக்கைகளை ஒருங்கிணைக்க தமிழ் மொழி என்பதே ஒரு குறியீடானது. தமிழர் நலன் என்பது அதன் பொருளானது. ஆனால் இதனுடன் இணைந்த உள்முக எல்லை என்பது தமிழர், தமிழரல்லாதோர் என்று வகுக்கப்படவில்லை. அது ஆரியர் – திராவிடர் என்றே வகுக்கப்பட்டது. அதன் மூலம் பார்ப்பனீய எதிர்ப்பே, சூத்திரன் என்ற பட்டத்தை களைவதே அரசியல் லட்சியமாகக் கொள்ளப்பட்டது. அதன் பொருட்டே தமிழ் என்ற பொது அடையாளமும் ஒரு குறியீடாகக் கொள்ளப்பட்டது.

இதன் மூலம் பல முக்கியமான சாத்தியங்கள் உருவாகின. வட இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும்போது காங்கிரஸ்காரர்களும், பார்ப்பனர்களும் சேர்ந்து குரல் கொடுப்பது சாத்தியமாயிற்று. ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ்காரர்களுடன் இணைந்து குரல் கொடுக்க முடிந்தது. பின்னர் காங்கிரஸ் ஆட்சியின் மெத்தனத்திற்கு எதிராக அதே ராஜாஜியுடன் கரம் கோர்க்க முடிந்தது. இதைத்தான் லக்லாவ் உள்முக எல்லையின் நெகிழ்வுத் தன்மையாகக் குறிப்பிடுகிறார்.

பார்ப்பனர்கள் அல்ல, பார்ப்பனீயமே எதிரி என்பதை பெரியாரும், தி.மு.க-.வும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்கள். நடைமுறையிலும் நிகழ்த்திக்காட்டியுள்ளார்கள். ஆனாலும் தமிழகத்தில் உள்ள மேட்டுக்குடி பார்ப்பனர்களும் சரி, வெளிமாநிலத்தில் குடியேறிய பார்ப்பனர்களும் சரி, அவர்கள் தரும் சித்திரத்தை நம்பும் அமெரிக்க ஐரோப்பிய கல்வியாளர்களும் சரி, பெரியாரும், தி.மு.க-.வும் பார்ப்பனர்களை வெறுத்த கட்சிகள், இயக்கங்கள் என்று இன்றளவும் கூறுகிறார்கள். தமிழகத்தில் ஜெயமோகன் என்ற பார்ப்பனரல்லாத இந்துத்துவவாதி இதைத் தொடர்ந்து கூறி வருகிறார்.

திராவிடர் கழகத்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் பார்ப்பனர்களை வெறுத்ததில்லை என்பதை ஒரு பார்ப்பனனாக என் வாழ்க்கை அனுபவங்களை வைத்தே விரிவாகக் கூறலாம். அது மிக விரிவான கட்டுரை ஆகிவிடும் என்பது மட்டுமல்லாமல், உணர்ச்சிக்காவியமாகவும் மாறிவிடும். நான் சில சமயம் புரியாமல் பேசும்போதும் திராவிட இயக்கத்தவர் பொறுமையாகப் பல விஷயங்களை விளக்கியுள்ளார்கள். அந்த நினைவுகள்தான் என்னை உணர்ச்சிவசப்படச் செய்கிறது.
அப்படி தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து விளக்குவதை விட வரலாற்று நிகழ்வுகளை வைத்துப் புரிந்துகொள்வதே பொருத்தமானது. தி.மு.க. ஆட்சியில் பார்ப்பனர்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மோசமாக நடத்தப்பட்டார்களா? வருவாய்த்துறை அதிகாரிகள் பார்ப்பனர்கள் என்பதற்காகப் பழிவாங்கப்பட்டார்களா? திரைத்துறையிலும், ஊடகத்துறையிலும், தொழில் துறையிலும் பார்ப்பனர்கள் ஏதேனும் பெரிய சிக்கல்களை சந்தித்தார்களா? அவர்களுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியாகவோ, ஆட்சியிலோ ஏதேனும் தீமைகள் புரிந்ததா? சோ ராமசாமியோ, கே.பாலசந்தரோ ஏதெனும் நெருக்கடிக்கு உள்ளானார்களா? சங்கர மடம் ஏதேனும் நலிவையோ, நெருக்கடியையோ சந்தித்ததா?

எதற்காக இதனை வலியுறுத்த வேண்டியுள்ளது என்றால் ஆரியர் – திராவிடர், பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் என்ற உள்முக எல்லைக் கருத்தியல் மேலாதிக்கம் சார்ந்த முரணாக வகுக்கப்பட்டதேயல்லாமல், அடையாளம் சார்ந்த வெறுப்பாக மாற்றப்படவில்லை.

மற்றொருபுறம் பார்ப்பனீயம் என்பது ஜாதீயக் கருத்தியல் என்பதால் எந்த ஜாதியும் உயர்வு தாழ்வு பார்ப்பது தவறு என்பதே உட்கிடக்கையாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் இது பெரிய சவாலாகவே இருந்தது எனலாம். பார்ப்பனரல்லாதோரில் வசதி படைத்தவர்கள் காங்கிரஸின் பக்கம் இருந்தார்கள். எளிய மனிதர்களே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள். அதனால் தமிழ் என்ற மிதக்கும் வெற்றுக் குறீயீட்டை இணைக்கும் கண்ணியாகக் கொண்டு ஜாதீய அடுக்குகளின் உள்முரண்பாடுகளைக் களைந்து தி.மு.க. வளர்ச்சியடைய முடிந்தது. ஒவ்வொரு ஜாதிக்குள்ளுமான பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஜாதிகளுக்கிடையிலான படிநிலை சார்ந்த ஏற்றத்தாழ்வு ஆகியவற்றைக் கடந்து சமத்துவக் கோரிக்கைகளை தொகுத்து, தமிழ் என்ற வெற்றுக் குறியீட்டைப் பொதுவாகக் கொண்டு, ஆரியம் – திராவிடம் கருத்தியல் முரணை நகரும் உள்முக எல்லையாகக் கொண்டு வெகுஜனவிய அரசியலை முன்னெடுத்தது தி.மு.க.
இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா அ.இ.அ.தி.மு.க-வின் பொறுப்பேற்ற பிறகு அவர் ஜாதி அடையாளத்தை மையப்படுத்தி தி.மு.க. எதிர்ப்பரசியல் செய்யவில்லை. அவர் பார்ப்பனர் என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அதை மையமாக வைத்து வெறுப்பரசியல் செய்யவில்லை என்பதே உண்மை. திராவிடர் கழகமும் செய்யவில்லை. இட ஒதுக்கீடு போன்ற சில விஷயங்களில் ஜெயலலிதாவின் செயல்பாடுகளைப் பாராட்டவே செய்தது திராவிடர் கழகம். பிறப்பின் அடிப்படையில் பார்ப்பன வெறுப்பு இயங்கவில்லை என்பதற்கு இதைவிட பெரிய நிரூபணம் தேவையா என்று புரியவில்லை.

எதிர்ப்புரட்சியும், பாசிசமும்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜாதியாதிக்க எதிர்ப்பு அரசியலில் ஒவ்வாமை கொண்ட நில உடைமைச் சக்திகள் திரளும் அமைப்பாகவே அ.இ.அ.தி.மு.க மெள்ள மெள்ள உருவெடுத்தது என்று கருதுவதற்கு இடமுண்டு. இதில் முக்கிய பங்காற்றியது முக்குலத்தோர் என்ற சமூகம். அதன் பிறகு வேறு பல நில உடைமைச் சக்திகளும் அதே வழியைப் பின்பற்றின. இட ஒதுக்கீடு, மக்கள் நல அரசியல் போன்றவற்றை தி.மு.க. போலவே அ.இ.அ.தி.மு.க-வும் பின்பற்றினாலும் பல வகைகளில் எதிர்ப்புரட்சி மனோபாவத்திற்கு இடமளிப்பதாகவே அ.இ.அ.தி.மு.க. செயல்பட்டு வந்திருப்பதை பொறுமையாக ஆராய்பவர்கள் காண முடியும் என்றே நினைக்கிறேன். உதாரணமாக, சமத்துவபுரம் போன்ற ஒரு திட்டத்தை அ.இ.அ.தி.மு.க. உருவாக்கியிருக்க சாத்தியம் உண்டா என்பதே கேள்வி. தி.மு.க. உருவாக்கிய வெகுஜனவிய அரசியல் வெளியில் பிற்போக்கு சக்திகளின் அணிதிரட்சியாக தன்னை நிறுவிக்கொள்வது அ.இ.அ.தி.மு.க-விற்கு சாத்தியமாயிற்று எனலாம்.

இன்று தமிழக அரசியலின் பிரச்சினை இதுதான். சொத்துக்கள் இல்லாத உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது ஒருவகை வெகுஜனவிய அரசியல் என்றால், அந்த மக்களை ஒவ்வொரு ஜாதியிலும் சொத்துள்ளவர்கள் ஜாதிரீதியாக அணிதிரட்டி அடையாள அரசியல் செய்ய முற்படுவது இன்னொருவகை அரசியலாக இருக்கிறது. ஜாதீயம் என்ற கருத்தியல் எதிர்ப்பு, ஜாதி அடையாளங்களின் மோதல்களாக, தலித் விரோதமாக, வெறுப்பாக சரிவுறுகிறது. இன்றைக்கும் இந்தப் போக்கினுள் முழுமையாக விழுந்துவிடாத கருத்தியல் முனைப்புக் கொண்ட கட்சியாக தி.மு.க. இருக்கிறது. ஆனால் தேர்தல் அரசியலில் அது கடுமையான எதிர்ப்புரட்சி அடையாளவாத சவால்களை சந்திக்கத் திணறுகிறது. முற்போக்காளர்களோ இரண்டு கட்சிகளையும் சமப்படுத்தி ஒன்றெனவே பேசுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் தி.மு.க அடையாளங்களுக்கு வெளியே ஒன்றிணைப்பை விழைந்த வெகுஜனவியக் கட்சி. வேறு பல கட்சிகள் அடையாளங்களை அடிப்படையாகக் கொள்ளும் வெகுஜனவிய பிற்போக்கு கட்சிகளாகின்றன.

உதாரணமாக, பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக்கொள்வோம். துவக்கத்தில் அது முற்போக்கு சிந்தனைகள் மிக்க அடித்தள மக்கள் கட்சியாகவே வன்னியர் சங்கத்திலிருந்து உருமாறியது. ஒரு சந்தர்ப்பத்தில் வன்னியர்கள் – ஆதிதிராவிடர்கள் இடையில் நிலவிய சமூக முரணைக்களைய முற்பட்டு விடுதலை சிறுத்தைகளுடன் சேர்ந்து தமிழ் பாதுகாப்பு இயக்கமெல்லாம் கண்டது. அதன் உள் ஒதுக்கீடு கோரிக்கையை கலைஞர் கருணாநிதி ஏற்றதும் அதன் அரசியல் குறிக்கோளில் முக்கியமானது நிறைவேறிவிட்டது. தொடர்ந்து அரசியல் செய்யும்போது அதனால் ஒரு வெகுஜனவிய கட்சியாக பொதுமைப்பட முடியாமல் இரண்டு பெரிய கட்சிகளுக்கிடையே நசுங்கியபோது, அது அடையாளவாதக் கட்சியாக, எதிர்ப்புரட்சி வன்னியர் கட்சியாக மாறி, தலித் சமூகத்திற்கு எதிராக வெளிப்படையாக இயங்கத் தொடங்கிவிட்டது. தமிழர் அரசியல் இன்று சந்திக்கும் ஆபத்துகளில் ஒன்று இது.

மற்றொரு பெரிய ஆபத்து சீமானின் நாம் தமிழர் கட்சி. இதன் முன்னெடுப்பும் கருத்தியல் சார்ந்ததாக இல்லாமல் அடையாளம் சார்ந்ததாகவே இருக்கிறது. முக்கியமாக, இது கலப்பற்ற தமிழ் அடையாளத்தைக் கோருகிறது. அதாவது எல்லா காலங்களிலும் தமிழ் மட்டுமே பேசியவர்களே தமிழர்கள், மற்றவர்கள் வந்தேறிகள் என்று கூறுகிறது.

தி.மு.க. தமிழை ஒரு மிதக்கும் வெற்றுக்குறியீடாகக் கொண்டதால் வேறு மொழிகள் பேசுபவர்கள் கூட தமிழர் அரசியலில் பங்கெடுப்பது சாத்தியமாயிற்று. குறிப்பாக, தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினர் தமிழ் தேசிய அரசியலில் தீவிர பங்கெடுப்பதை அனைவரும் அறிவார்கள். அறுபத்தைந்தாம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில், இந்தி பேசும் மார்வாரி இளைஞர்களும் பங்கு கொண்டார்கள் என்பது கள ஆய்வில் அறியக் கிடைக்கிறது. இங்கே தமிழ் என்பது ஒரு நிலப்பகுதியின் மக்கள் உரிமைக்கான குறியீடாக விளங்குகிறது.

ஆனால் நாம் தமிழர் கட்சி தமிழ் அடையாளத்தை ஒரு ஆதி அடையாளமாக, ஆதிமூலச் சொல்லாடலாக (Originary Discourse) மாற்றுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான டொனால்ட் டிரம்ப்பின் முழக்கங்களுக்கும், சீமானின் வந்தேறிகள் குறித்த முழக்கங்களுக்கும் வேறுபாடு கிடையாது. அந்த வகையில் தமிழின் முதல் பாசிசக் கட்சியாக விளங்குகிறது நாம் தமிழர் கட்சி.

நண்பர் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரனும், நானும் புதுடெல்லியில் திராவிடம் குறித்த கருத்தரங்கத்தை சென்ற ஆண்டின் துவக்கத்தில் ஒழுங்கமைத்தோம். அதன் பெரும்பகுதி உரைகளைத் தமிழில் நிகழ்த்தும் வண்ணம் சென்னையில் பிற்பாடு நண்பர் சுபகுணராஜன் ஒழுங்கமைத்தார். இந்தக் கருத்தரங்கங்களில் ரவீந்திரனின் தன் கட்டுரையில் தமிழர் என்ற அடையாளம் எவ்வாறு பன்மடையும் தன்மை கொண்டிருந்தது என்பதை வில்லியம் கனோலி என்ற அரசியல் தத்துவயியலாளரின் சிந்தனைகளை அடியொற்றிப் பேசினார். அதற்கு எதிராக எப்படி சீமானின் வடுகர்கள் குறித்த பேச்சுக்கள் அமைகின்றன என்பதையும் கவலையுடன் குறிப்பிட்டார்.

சீமான் மட்டுமில்லாமல் ஜெயமோகனும் தமிழகத்தின் பிரச்சினை ஒரு சில நூற்றாண்டுகளைத் தவிர வரலாறு நெடுகிலும் வடுகர்களின் ஆதிக்கத்தில் இருந்ததுதான் என்று எழுதியிருப்பதை ரவீந்திரன் சுட்டிக்காட்டினார். இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவம் செமினார் ஆங்கில இதழின் இணையதளத்தில் உள்ளது. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலை எழுதிய பெங்களூர் குணாவின் அடையாளவாத தமிழ் தேசிய சிந்தனைக்கும், சீமானின் அரசியலுக்கும், ஜெயமோகன் கட்டமைக்கும் தமிழக வரலாற்றிற்கும் உள்ள தொடர்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியவை.

திராவிட இயக்கத்தின், குறிப்பாக தி.மு.க.வின் வெகுஜனவிய அரசியல் ஆரியம் என்ற பார்ப்பனீய கருத்தியல் எதிர்ப்பினை அச்சாணியாகக் கொண்டதால் அதன் தமிழ் அடையாளம் ஒரு முற்போக்கு குறியீடாக, திராவிட அடையாளத்தின் சிறப்பாக, தெக்கண பிறைநுதலின் தரித்த நறும் திராவிட திலகத்தின் வாசனையாக விளங்கியது. அது யாரையும் விலக்கவில்லை.

தி.மு.க. தமிழைக் குறியீடாக, மிதக்கும் வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்தியது என்று சொல்லும்போது அதன் பொருள் அது தமிழ் மொழியின் சிறப்புகளை அறியவில்லை என்பதல்ல. அந்த மொழி பேசுபவர்களின் ஆதி அடையாள அரசியலாகத் தமிழ் அடையாள அரசியலை மாற்றவில்லை என்பதையே நேர்மறையாகக் குறிக்கிறோம். வள்ளுவரின் பெருமையை நிலைநாட்டியது முதல், சிலப்பதிகாரத்தின் சிறப்பை முதன்மைப்படுத்தியது, செம்மொழி அங்கீகாரம் பெற்றது ஈறாக தமிழ் வளர்ச்சிக்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளது. ஆனால் ஒருபோதும் திராவிடம் என்ற அடையாளத்தைக் கைவிட்டு தமிழ் அடையாளம் என்று மாறவில்லை.

இதற்கு பெரியார் கன்னடர், கருணாநிதி தெலுங்கர் என பல அற்பக்காரணங்களை சொல்லத் துணிபவர்கள் உண்டு. ஆனால் உண்மையான காரணம் வெகுஜனவியத்தின் முற்போக்குத் தர்க்கம் பார்ப்பனீய எதிர்ப்பில் அடங்கியுள்ளதுதான்.

இன்று இந்த உள்முக எல்லையை, ஆரியம்- திராவிடம் என்ற கருத்தியல் பிரிவின் எல்லையைத் தமிழர்கள் என்ற அடையாளம் கொண்டவர்கள், பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என மாற்றும்போது பார்ப்பனீய எதிர்ப்பின் முனை மழுங்கும். ஏற்கனவே தலைதூக்கியிருக்கும் ஜாதி அடையாள ஆதிக்க அரசியல் சக்திகளுக்கு ஆற்றல் பெருகும். மேலும் இது சுலபமாக இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொள்ளும். ஏனெனில் ஆதி தமிழ் அடையாளம் முருகன் முப்பாட்டன் என்று மாறும்போது, அது இந்து அடையாளத்திற்கு இணக்கமாக மாறும்.

சீமானின் தலைமை பிம்பம், அவரது பகுத்தறிவுக்குப் பொருந்தாத பேச்சு, அதன் உணர்ச்சிகரமான ஈர்ப்பு என பல ஆபத்தான பாசிசக் கூறுகள் இருந்தாலும், தமிழ்நாட்டின் பொதுப்பிரச்சினைகள் பலவற்றில் அவர் உரக்கக் குரல் கொடுப்பதால் அவரை ஒரு முற்போக்கு அரசியல் சக்தியாக இளைஞர்கள் கருதுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.

சீமானின் அரசியலின் அச்சாணியாக இருப்பது விடுதலைப்புலிகளுடன் அவருக்கு இருந்ததாக சொல்லப்படும் தொடர்பு. இலங்கையில் நிகழ்ந்த துயரம் நம் எல்லோரையும் உணர்வுரீதியாக பாதித்தது. ஆனால் எவ்வளவுதான் தமிழ் ஈழ அனுதாபியாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் பின்பற்றிய கற்பனாவாத அணுகுமுறையை விமர்சிக்காமல் பாராட்டுவது ஆபத்தானது. அரசியலைப் போராக மாற்றிய பிறகு, போரை யதார்த்த சூழல்களைக் கணக்கில் கொள்ளாமல், கற்பனாவாத நோக்கில் நடத்தினால் எப்படிப்பட்ட துயரை சந்திக்க வேண்டி வரும் என்பதற்கான பாடமே இலங்கையில் நடந்தது. அந்த ரொமாண்டிசிசம் என்ற கற்பனாவாதத்தின் உச்சகட்ட வெளிப்பாடே சீமான். இறுதிக்கட்ட போரின்போது அவர் பேசிய உரை ஒன்றின் காணொளியைக் கண்டேன். அதில் அவர் போர் நிறுத்தம் கோருவது தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு அல்ல, சிங்கள மக்களை அழிவிலிருந்து காப்பாற்றவே போர் நிறுத்தம் கேட்கிறோம் என்று ஆவேசமாகப் பேசினார். அதற்கும் மக்கள் கைதட்டினார்கள்.

என்னுடைய நண்பர்களான பிற இந்திய மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களெல்லாம் போர் நிறுத்தம் நிகழாவிட்டால் ஆயுதமேந்தாத ஈழத்தமிழ் குடிமக்கள் எவ்வளவு அழிவை சந்திக்க வேண்டியிருக்குமோ என்று எண்ணிப் பதறிக்கொண்டிருக்கையில், தமிழர் நலனுக்காக அரசியல் பேசும் ஒருவர் இப்படி ஒரு கற்பனாவாத ஆவேச உரையை நிகழ்த்துவதைக் கண்டபோது எப்படிப்பட்ட ஒரு ஆபத்தினை தமிழர் அரசியலின் எதிர்காலம் சந்திக்கப் போகிறது என்று எண்ணி அஞ்சாமல் இருக்க முடியவில்லை.

அந்தக் கற்பனாவாதமும், அடையாளவாதமும் தமிழகத்தில் வேரூன்றாது என்றுதான் நம்புகிறேன். அதன் பொருட்டே திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் வலுவுடன் அதன் வெகுஜனவிய அரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன். ஆனால் தேர்தல் அரசியல் சமரசங்கள் இல்லாத அரசியல் தூய்மை என்ற பெயரில் பாசிசம் உள்நுழையும் சாத்தியங்களை அலட்சியப்படுத்தக் கூடாது. அதை நாம் கருத்தியல்ரீதியாக எதிர்த்துப் போரிட வேண்டும். அதற்கான சிறு பங்களிப்பாக இந்தக் கட்டுரை அமையும் என நம்புகிறேன்.