புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பெண்ணிற்குச் சிறப்பாகப் பிரசவம் செய்யப்பட்டதற்கு, ஒரு ஏழைப்பெண் அந்த மருத்துவமனைக்கு ஒரு மின்விசிறி அன்பளிப்பாய் அளித்த சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகுந்த கவனத்தைப் பெற்றது. அந்த மருத்துவர்களுக்குப் பாராட்டுக்களும் குவிந்தன. ஏன் இந்த சம்பவம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என்றால், மருத்துவர்களுக்கும்  மக்களுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டிருக்கிறது, மக்களுக்கு மருத்துவர்களின்மீதான நம்பிக்கை குறைந்து கொண்டிருக்கிறது, மருத்துவர்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிட்டார்கள் என்று இந்தியா முழுதும் தொடர்ச்சியாக சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், எந்தவித வசதிகளும் அற்ற ஒரு குக்கிராமத்தில் மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகள் எப்படி சிறப்பாக கையாளப்படுகின்றன, அந்த மக்கள் எப்படி மருத்துவர்களோடு இத்தனை இணக்கமாக இருக்கிறார்கள், அங்கு மருத்துவர்களை மக்கள் எப்படித் தங்களில் ஒருவராகப் பார்க்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியமாக இருக்கிறது.

தமிழகத்தின் அத்தனை மூலைகளிலும் ஆலங்குடியைப் போன்றே மிகச்சிறந்த மருத்துவர்களைக் கொண்ட ஒரு சுகாதார அமைப்பு இருக்கிறது. மருத்துவத்துறையில் தமிழ்நாடு ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்கு இத்தகைய வலுவான அடிப்படை மருத்துவக் கட்டுமானம்தான் காரணம். இப்படிப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் தமிழகத்தின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பின் ஆணிவேர்கள். இவ்வளவு வலிமையான மருத்துவக் கட்டமைப்பு ஒரே இரவில் உருவானதல்ல, இதற்குப் பின்னால் ஏராளமான கனவுகள் இருந்திருக்கின்றன இலட்சியங்கள் இருந்திருக்கின்றன, ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் மீதான கரிசனங்கள் இருந்திருக்கின்றன, அத்தனைக்கும் மேலாக சமூகநீதி செயல்திட்டங்கள் இருந்திருக்கின்றன.

50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் சமரசமற்ற சமூகநீதி சார்ந்த செயல்பாடுகளே நமது வலுவான மருத்துவக் கட்டமைப்பிற்குக் காரணம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டின் வழியாக வழங்கப்பட்ட உரிய பிரதிநிதித்துவமே இந்தக் கட்டமைப்பை உருவாக்கி யிருக்கிறது. ஒரு எளிய, விளிம்புநிலை குடும்பத்தில் இருந்து வரும் ஒரு மாணவனை மருத்துவராக்குவதின் வழியாக அந்த மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை மிக சுலபமாக நிறைவேற்றலாம் என்ற சுகாதாரத் துறையின் சூட்சுமத்தை நமது முந்தைய தலைவர்கள் உணர்ந்ததின் விளைவாக கடந்த ஐம்பதாண்டுகளில் ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவுகளுக்கு உயிரூட்டப்பட்டது. இன்றைய தமிழக மருத்துவத் துறை பெரும்பாலும் இப்படி சாதாரண குடும்பங்களில் இருந்து வந்த ஏராளமான மருத்துவர்களால் நிரம்பியிருக்கிறது. எளிய மக்களில் இருந்து வந்த மருத்துவர்களால்தான் மக்களிடம் மிக இணக்கமாக இருக்க முடியும் என்பதைத்தான் ஆலங்குடி போன்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நமக்கு சொல்கின்றன. எய்ம்ஸ், ஐ.ஐ.டி. போன்ற இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தாத நிறுவனங்களில் படித்து வரும் மாணவர்கள் பெரும்பாலும் இப்படி மக்களில் ஒருவராக இருப்பதில்லை, மக்களின் தேவைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, அவர்கள் தங்களது படிப்பை முடித்தவுடன் உடனடியாக வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகின்றனர்.

இட ஒதுக்கீட்டை சரியாக அமல்படுத்தாத வட மாநிலங்களின் மருத்துவத்துறை என்பது போதாமைகளால் நிரம்பியிருக்கிறது என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. எளிய மக்களுக்கு அங்கு அடிப்படை மருத்துவமனை என்பதே ஒரு கனவாகத்தான் இருக்கிறது. போதுமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் அங்கு இருப்பதில்லை, இருப்பதிலும் மருத்துவர் பற்றாக்குறைகள் இருக்கின்றன தலித் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் சரியாகப் போடப்படுவதில்லை, வேறு எந்த சுகாதார திட்டங்களும் எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்று சேர்வதில்லை என அவர்களின் சமத்துவமற்ற சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை செய்திகளாக நாம் பார்த்து வந்திருக்கிறோம். சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அருகே மருத்துவமனை இல்லாததால் கர்ப்பணி பெண்ணை தோளிலே சுமந்து கொண்டு 10 கிலோ மீட்டர் நடந்த கொடுமையை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அந்த மாநிலங்களில் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை. அதனால் அங்கு மருத்துவத்துறை என்பதே பெரும்பாலும் உயர்சாதி மருத்துவர்களால் நிரம்பியிருக்கிறது, அவர்களால் எப்போதும் மக்களிடம் இணக்கமாக இருக்க முடியாது, மக்களில் ஒருவராக இருக்க முடியாது என்பதைத்தான் அங்கு மருத்துவர்களின்மீது தொடர்ச்சியாக நிகழும் தாக்குதல்கள் காட்டுகின்றன.

நீட்டை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்றால் அது ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் கனவுகளை தகர்க்கக்கூடியதாய் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் “நீட் என்பது ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது எனத் தெரிந்தும் ஏன் மத்திய, மாநில அரசுகள் இதை நடைமுறைத்திக் கொண்டிருக்கின்றன?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. அதற்கு ஆதாரமாய் சில தரவுகளும் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களில் 95 சதவீதத்திற்கு மேலானவர்கள் தனியார் பயிற்சி நிலையங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக நீட்டிற்கான பயிற்சியை எடுத்து வந்த மாணவர்கள் என்கிறது அந்த ஆய்வு. மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட வருடங்கள் இந்த பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களே பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் தேர்வாகி இருக்கிறார்கள். இந்தப் பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றன. அப்படியென்றால் தனியார் பயிற்சி நிலையங்களில் படிக்க வசதியற்ற கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களால் நீட் என்னும் அரக்கனைத் தாண்டி மருத்துவக்கனவை அடையவே முடியாது என்பதுதான் உண்மை. இப்படி ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இருக்கும் நீட்டை ஏன் தடை செய்யவில்லை என உயர்நீதி மன்ற நீதிபதி கேள்வி எழுப்பியும் நமது மத்திய, மாநில அரசுகள் அதைப்பற்றி எந்த சலனமும் இல்லாமல் கடந்துவிட்டன.

இளங்கலை மருத்துவம் மட்டுமல்லாது மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டையும் நீக்கியிருக்கிறது மத்திய அரசு. சமீபத்தில் மருத்துவப்பட்ட மேற்படிப்பு இடங்களுக்கான அகில இந்திய நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது. மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி இதர பிற்பட்ட பிரிவினருக்கான (ளிஙிசி) 27 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசின்கீழ் இயங்கும் சில கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும், மாநிலத் தொகுப்பில் வழங்கப்படும் இடங்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால் அதே வேளையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கான (ணிகீஷி) பத்து சதவீத இட ஒதுக்கீடு எல்லா கல்லூரிகளிலும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. அப்படி என்றால் இது யாருக்கான அரசு என நமக்குத் தெரிகிறது.

ஒவ்வொரு வருடமும் அத்தனை மாநில அரசுகளும் ஐம்பது சதவீத முதுநிலை படிப்பிற்கான இடங்களை மத்திய அரசுக்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட 15000 இடங்கள் மாநில கல்லூரிகளில் உள்ள முதுநிலை படிப்பிற்காக மத்திய அரசிடம் கொடுக்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்டவருக்கான 27 சதவீத இடங்கள் அதாவது கிட்டத்தட்ட நாலாயிரம் இடங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும். இந்த இட ஒதுக்கீட்டை மறுப்பதன் மூலம் நாலாயிரம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் தங்களது மருத்துவ இடங்களை ஒவ்வொரு வருடமும் இழக்கிறார்கள். இந்த மாணவர்களை வஞ்சித்துவிட்டு உயர்சாதி மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை வஞ்சகமாக மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. ஒரு ஏழை, எளிய, பிறபடுத்தப்பட்ட மாணவர்களின் இடங்களை அவர்களிடம் இருந்து பறித்துவிட்டு, மாதம் ஐம்பதாயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்கும், ஆயிரம் சதுர அடி சொந்தமாக நிலம் வைத்திருக்கும் ஒரு அரிய வகை ஏழைக்கு அரசே அவர்களின் வீடு தேடி சென்று மருத்துவ சீட்டைக் கொடுக்கிறது என்பது உண்மையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் செய்யும் மிகப்பெரிய அநீதி இல்லாமல் வேறென்ன?

ஒட்டுமொத்த இந்துக்களுக்குமான கட்சி என தன்னை அழைத்துக் கொள்ளும் கட்சி பெரும்பாலான இந்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு உயர்சாதி இந்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை மட்டும் வஞ்சகமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. 10 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்காக அவசர அவசரமாக அனைத்துக்கட்சி கூட்டதிற்கு ஏற்பாடு செய்த எடப்பாடி அரசோ 27 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதை கள்ள மௌனத்துடன் கடந்து விட்டது.

உண்மையில் நாடு முழுவதும் மறுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக எத்தனை தீவிரமான குரல்கள் எழுந்திருக்க வேண்டும்? ஆனால் தேசிய அளவில் இது ஒரு சிறிய சலசலப்பைக்கூட ஏற்படுத்தவில்லை. வழக்கம் போல திமுக மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியைப் பற்றி மக்களவையில் கேள்வி கேட்டது அதன் நிமித்தம் வெளிநடப்பு செய்தது. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கக்கூடாதென்றும் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்னும் அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்று சொன்னதுதான் இது தொடர்பாக தேசிய அளவில் ஒலித்த ஒரே குரலாக இருந்தது. சமூக நீதியில் திமுக மட்டுமே எப்போதும் உறுதியாக இருக்கிறது, சமரசமற்று இருக்கிறது என்பதைத்தான் ஸ்டாலின் அவர்களின் அறிக்கை காட்டுகிறது.

திமுக தவிர பிற அரசியல் கட்சிகள் இதைப் பெரிய விவாதமாக மாற்றவில்லை என்பதைத் தாண்டி மக்களும் இதை பிரச்சினையாக கருதவில்லையோ என்றும் நினைக்க தோன்றுகிறது. மக்களைப் பொறுத்த வரையில் ‘இது ஏதோ மருத்துவ இடங்களுக்கான தேர்வு, நமக்கும் அதற்கும் தொடர்பில்லை’ என்ற மனப்போக்கு தான் இருப்பதாக தோன்றுகிறது. உண்மையில் நாம் இதை அத்தனை அலட்சியமாக கருதக்கூடாது. இது மருத்துவ இடங்களுக்கான தேர்வு மட்டுமல்ல, நமது மருத்துவக் கட்டமைப்பே இதை சார்ந்துதான் இருக்கிறது. நமது குழந்தைகளை, நம்மில் இருந்து வரும் ஒரு மாணவரை நமது மருத்துவ அமைப்பில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால் நாம் யாரிடம் சென்று மருத்துவம் செய்து கொள்வது? நமது கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் இருக்கும் பெருமபாலான மருத்துவர்கள் நம்மில் இருந்து உருவானார்கள். அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டால் அந்த மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு உயர்சாதி மருத்துவர்கள் நிரம்பிய ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையின் வாசலில் நாம் நமது மருத்துவத் தேவைகளுக்காக காத்திருக்க வேண்டி வரும். நம் மொழி பேசாத, நம்மில் இருந்து உருவாகாத ஒரு மருத்துவனால் ஒருபோதும் நம்மைப் புரிந்துகொள்ள முடியாது. அவன் மருத்துவத் துறையை ஒரு வணிகமாகவே பார்ப்பான். நாமும் ஐநூறு ரூபாய் கட்டிவிட்டு, அவன் பேசும் இந்தியை கேட்டுவிட்டு அவன் கொடுக்கும் விபூதியை வாங்கிப் பூசிக்கொண்டு வர வேண்டியிருக்கும்.

மருத்துவத் துறையில் இட ஒதுக்கீட்டை ஒழிப்பது என்பது மருத்துவக் கட்டமைப்பின் அடித்தளத்தையே பெயர்த்து எடுப்பதற்கு சமம். அப்படி அடித்தளத்தை சிதைக்கும் வேலையைத்தான் இன்றைய மத்திய அரசு செய்து வருகிறது. ஒரு நாள் நாம் பிரமாண்டமாய் எழுப்பி வைத்திருக்கும் நமது மருத்துவக் கட்டமைப்பு முற்றிலுமாக சிதைந்து போகும் அப்படி சிதையும்போது எழும் பேரிரைச்சலுக்கு சாட்சியமாக நமது இன்றைய காலத்து மௌனங்கள் இருக்கும்.