“இறங்கலாம்.”

விமான உபசரிணிப்பெண் அபியைத் தோளில் தட்டி எழுப்பினாள். அவன் கண் விழித்தபோது விமானத்துக்குள் ஜன்னல்கள் மூடி, எல்லா விளக்குகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். அவனை இறக்கிவிட அவசரம் காட்டிய உபசரிணியோடு நின்ற வெள்ளைத் தொப்பி அணிந்த மத்திய வயசுக்காரனும் ‘எழுந்திருங்கள்’ என்று அபிக்குப் புரியவைக்கக் கையை உயர்த்திக் காட்டினான். விமானியாக இருக்கும்.

“இது எந்த ஏர்போர்ட்? நான் ஜகார்த்தாவுக்குப் போகிற பயணி. லண்டனிலிருந்து வருகிறவன்.” அபி தூக்கக் கலக்கத்தோடு சொல்லியபடி கோட் பாக்கெட்டில் போர்டிங் கார்டைத் தேடினான்.

“இது நீங்கள் மட்டுமில்லை, எல்லோருமே இறங்க வேண்டிய இடம்.” புன்னகை மாறாமல் உபசரிணி சொன்னாள். விமானத்தில் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை அபி கவனிக்கத் தவறவில்லை.

“இறங்கிவிட்டு சுகமாக இளைப்பாறிக்கொண்டு சாவகாசமாக எல்லாம் பேசலாமே? நீங்கள் வெளியேறியதும், நாங்கள் விமானத்தைக் கொண்டு போய் ஒப்படைத்து விட்டுப் போக வேண்டும். சீக்கிரம் ஆகட்டும், ப்ளீஸ்.”

உபசரிணி அபியை ஆதரவாக அணைத்துப் பிடித்து அவனுடைய கேபின் பேகேஜ் ஆன கான்வாஸ் சாக்கை உருட்டியபடி குறுகிய படிகளில் அவனோடு இறங்கி வந்தாள். நேரம் பிற்பகலாக இருப்பதைக் கவனித்தான் அபி.

“இது என்ன ஊர்?” அவன் தரையில் கால் வைத்துப் பின்னால் திரும்பிக் கேட்க, உபசரிணி வெகு வேகமாக அந்தப் படிகளில் ஏறி விமானத்துக்குள் நுழைந்து கொண்டிருப்பதைக் கண்டான். படிகள் நகர, அவள் தன் கைக்குட்டையை அபிக்கு எடுத்து வீசி, “நல்ல பிள்ளையா இருக்கணும். வந்துடுவேன்” என்றபடி விமானக் கதவுகளை விசையை இயக்கி அடைக்க விமானம் நகர்ந்தது.

வெயிலில் கிடந்த அந்த வெளியைப் பார்த்தான் அபி. அலையடிக்கும் கடல் நாலு பக்கமும் சூழ்ந்த சிறு தீவு என்று அனுமானம் செய்ய சிரமப்பட வேண்டியிருக்கவில்லை. ஒரு பெரிய விமானம் இங்கு வந்து திரும்பப் போயிருக்கிறது. ஆனால் ஆள் நடமாட்டமே இல்லாத விமானத் தளமாக இருக்கிறது என்பது ஆச்சரியத்தை உண்டாக்கியது. விமானம் ஓட்டி ஓட்டி அந்த விமானி சிறந்த அனுபவசாலியாக இருப்பான் என்பதால் இப்படி ஒற்றையனாக மெனக்கெட அவனுக்கு இயன்றிருக்கிறது என்று ஊகித்தான் அபி. அவ்வளவு திறமையுள்ளவன் அபியை இறக்கிவிட்டுப் போனபோது எங்கே இருக்கிறோம், வானிலை நிலவரம் என்ன, உள்ளூர் நேரம் என்ன என்றெல்லாம் அன்போடு அறிவித்திருக்கலாம். அபியை இப்படி விழிக்க விட்டிருக்க வேண்டாம். உபசரிணியும்தான். இன்னும் கொஞ்சம் அனுசரணையாக இருந்திருக்கலாம் அவள். நாளை ஜகார்த்தா போய்ச் சேர்ந்ததும் அந்த விமானக் கம்பெனிக்கும் கார்டியன் பத்திரிகைக்கும் இதை ஒரு குறையாக எடுத்துச் சொல்லி விளக்கமாக எழுதுவான் அபி. அதற்கு முன் நல்லபடிக்கு ஊர் திரும்ப வேண்டும். ஏதோ பெயர் தெரியாத விமான நிலையத்தில் எந்த நாடு என்று கூடத் தெரியாமல் நிற்பது அபாயகரமானது.

பாஸ்போர்ட்டை கோட் பாக்கெட்டில் உள்ளே தள்ளி வைத்துக் கொண்டான். லக்கேஜை கரகரவென்று அதன் சக்கரங்களை நீட்டி வைத்து இழுத்தபடி அவன் நடக்க, கடல் சத்தம் நாலு புறத்திலும் இருந்து சூழ்ந்தது. ஒற்றை நாரை வானத்தில் இருந்தபடியே என்ன சமாசாரம் என்று விசாரித்துப் போனது. பிரம்மாண்டமான கடல் ஆமை ஒன்று விமான நிலையம் நோக்கி ஊர்ந்து போனது. பழைய துணிகள் குவியல் மேல் ஒரு வான்கோழி அமர்ந்திருந்தது.
விமான நிலையக் கதவுகள் தானே திறக்காமல் தடையாக நின்றன. அழுத்தத் திறக்க வேண்டி வந்தது அவற்றை. ஒன்றிரண்டு விளக்குகள் மட்டும் எரிந்த நிலையம் அது. “வருகை” என்ற பலகை தொங்கும் இருண்ட வழியில் மெல்ல நடந்தான் அபி. அது முடிந்த இடத்தில் வங்கிக் கிளை போல வளைந்து செல்வதாக மரத்தில் அமைந்த விசாரிப்பு மற்றும் கொடுக்கல் -வாங்கல் நடத்தும் கவுண்டர். நாற்காலிகள் ஒன்றிலும் யாரையும் காணோம்.
கோட்டுக்குள் கைவிட்டு ஒரு பவுண்ட் நாணயம் ஒன்றை எடுத்து கவுண்டரில் வைத்துத் தட்டியபடி ஹலோ என்றான் அபி. உள்ளே வரிசையாக தெரிந்த அறைகளில் இருந்து யாராவது வருவதை எதிர்பார்த்தான் அவன். வரவில்லை. குரலை உயர்த்தியும், கவுண்டரில் பலமாகத் தட்டிச் சத்தம் எழுப்பியும் அவன் களைத்துப் போகும் நேரத்தில் உள்ளே இருந்து முதியவராகத் தெரிந்த ஒரு அதிகாரி வந்து நின்றார்.

“வணக்கம், நான் விமோஏர் விமானத்தில் லண்டனில் இருந்து ஜகார்த்தா போகும் பயணி. இங்கே இறக்கி விட்டார்கள். ஊர் பெயர் கூட சொல்லவில்லை.” அவன் புகார் சொல்லியபடி போர்டிங் கார்டை பாஸ்போர்ட்டில் வைத்து நீட்ட, அவர் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டார். “இதுக்கெல்லாம் அவசியம் இல்லை” என்றும் ஆதரவாகக் கூறினார்.

“விமோஏர் பயணியா? ஆச்சரியம்தான்” அவர் ஒரு இருமலுக்குப் பின் சொல்ல, ஆர்வத்தோடு ஆம் என்றான் அபி. இவர் பேசும்போதே எங்கே வந்திருக்கிறேன் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தத் தீவு இது?

“அந்த விமானக் கம்பெனி நஷ்டத்தில் மூழ்கி இல்லாமல் போய் விட்டது. முந்தாநாள் நடந்த அசம்பாவிதம் அது. எந்த ரூட்டிலும் விமான சேவை அளிக்காமல் நிறுத்தி வைத்து விமானங்களையும் வந்த விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி. உங்களை எப்படி தங்கள் விமானத்தில் இங்கே கூட்டி வந்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.”

“விமானியே வலுக்கட்டாயமாக உபசரிணியுடன் சேர்ந்து என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக விமானத்திலிருந்து வெளியேற்றினார். இப்போது அவர்கள் பயணி இல்லாத விமானத்தை எங்கோ பறப்பித்துக் கொண்டு போகிறார்கள்.” அபி புகார் சொல்லும் தொனியில் சொன்னான். “இது என்ன ஊர்?” மெல்லக் கேட்டான்.

“இதுவா? நிறையப் பெயர் உண்டு. எனக்குப் பிடித்த பெயர் செரண்டிப். நீங்களும் அப்படியே சொல்லலாம். இங்கே பேச்சுக்கு அதெல்லாம் தேவைப்படாது.” அந்த வயசர் அபியை உள்ளே வந்து ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். “நிறைய பேக்கேஜ் கொண்டு வந்தீர்களா என்ன?”

“இல்லை, இது மட்டும்தான். சுங்கச் சோதனை கிடையாதென்றால் நான் போகலாமா? இங்கே ஏதாவது விமானக் கம்பெனியில் ஜகார்த்தா போக பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையில்லாத செலவு.”
அபி கிளம்ப அவசரம் காட்ட, “ஏன் பதட்டமடைகிறீர்கள்? இந்தக் கட்டடத்தின் வெளியேயோ அண்டையில் சுற்றி வரும் வீதிகளிலோ விமானக் கம்பெனி எதுவும் இல்லை.” என்றார் வயசர். “ஒன்று கூட இல்லையா? அப்புறம் நீங்கள் எப்படி பயணம் போவீர்கள்?” வியப்பு மாறாமல் கேட்டான் அபி.

“எங்கே போகணும்? ஏன்?” முணுமுணுத்தபடி உள்ளே போனார். அவர் திரும்பி வருவார் என்று ஒரு நிமிடம் நின்று பார்த்து, வராமல் போகவே லக்கேஜை உருட்டிக் கொண்டு விமான நிலையத்துக்கு வெளியே வந்தான் அபி. அங்கே இரண்டு ஈமுக்கள் ஓடிக் கொண்டிருந்தன. பெரிய கடல் ஆமை ஒன்று நகர்ந்து போனது. அபி ஏற்கனவே பார்த்ததாக இருக்காது இது.

வாகனப் போக்குவரத்தோ, மக்கள் கூட்டமோ இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது வீதி. தலைவர் யாராவது இறந்து திடீர் விடுமுறை அறிவித்திருக்கலாம் அல்லது கலவரம் ஏற்பட்டு தடை உத்தரவும், கண்டால் சுட்டுத் தள்ள அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.
“சவ அடக்கம் குறைந்த செலவில் இங்கே நடத்தித் தரப்படும்” என்று இரண்டு விளம்பரப் பலகைகள் நிறுத்திய கடையின் உள்ளே மனுஷ நடமாட்டம் தெரிய படி ஏறினான் அபி. அங்கே திறந்து வைக்கப்பட்ட சவப்பெட்டிகளுக்குள்ளே கடை ஊழியர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவன் வாசலிலும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் நின்று “ஒரு உதவி வேண்டியிருக்கு. கொஞ்சம் வர முடியுமா?” என்று மரியாதையோடு கேட்டான். உள்ளே வரச்சொல்லி அவர்கள் கை காட்டினார்கள். “சாப்பிடும்போது தொந்தரவு செய்கிறேன்” என்று குற்றபோதத்தோடு சொன்னான் அபி. “அது தவறில்லை. நீங்கள் அவரிடம் கேட்டால் உடனே உதவி கிடைக்குமே” என்று அந்த ஊழியர்கள் கை காட்டியது அறை ஓரமாகத் திறந்திருந்த இன்னொரு சவப்பெட்டியை. அதற்குள்ளே நின்றபடி உதட்டில் சாயம் புரட்டிக் கொண்டிருந்தாள் ஓர் அழகான இளம் பெண்.

அவளுக்கு சாயந்திர நேரத்துக்கான வாழ்த்து சொல்லிக் கைகூப்பினான் அபி. “நன்றி, ஆனால் இன்னும் பிற்பகல்தான்” என்றாள் அவள் உதட்டைத் துருத்தியபடி. அதுவும் பார்க்க ஓர் அழகாகத்தான் இருந்தது.

“நான் இங்கிருந்து எப்படி வெளியே போவது?” சுருக்கமாக விசாரித்தான் கருப்பு உடையணிந்த அவளிடம். “ஏன், என்ன சிரமம்? வந்தபடிக்கு அப்படியே திரும்பிப் போனால் போகிறது. இங்கே இருப்பது ஒரே ஒரு வாசல்தானே?” அவள் சிரிக்க, மற்ற பெட்டிகள் உள்ளிருந்தும் பலமான சிரிப்பு.

“அதில்லை, நான் இந்த ஊரிலிருந்து வெளியேற விமானம் எப்போது கிடைக்கும்?” அபியும் சிரித்தபடி கேட்டான். அழகான பெண்கள் அபத்தமாக நகைச்சுவை பகிர்ந்தபடி சவப்பெட்டி உள்ளே நின்றாலும் கூடச் சேர்ந்து சிரிப்பதே மரியாதை. ரத்தச் சிவப்பில் உதட்டுச் சாயம் தீட்டிக் கொள்கிறவள். அபி அலுவலகத்தில் இப்படிக் குறும்பான ஓர் இளம்பெண் உண்டு.

“இந்த ஊரிலிருந்து வெளியே போக எல்லா விதமான போக்குவரத்தும் கிடைக்கும். ஆனால் எது என்றைக்கு வரும், எப்போது வரும் என்று தெரியாது. இதைப் பற்றி நாங்கள் யாரும் கவலைப்படுவதில்லை. இங்கே வந்தால் எங்களைப் போல், எங்களோடு நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்கிறோம். சாப்பிடுகிறீர்களா?” அவள் கேட்டாள்.

அவள் குனிந்து சவப்பெட்டிக்குள் ஒரு நேர்த்தியான மரக் கிண்ணத்தில் நிறைத்து வைத்திருந்த எதையோ எடுத்து அன்போடு அபிக்குக் கொடுத்தாள். பூ மொட்டு மாதிரி, வாழைக் குருத்து மாதிரி இருந்த அதை விரலால் அழுத்த பிளந்து உள்ளே இருவசமும் மடிந்து சிவந்த இதழ்கள் தென்பட்டன.

“இது…” அபி தயக்கத்தோடு கேட்க, “இல்லை, பார்க்க அப்படி இல்லை. உங்களுக்குத் தோன்றுகிறதோ என்னமோ” என்று நாணத்தோடு சிவப்புச் சாயம் பூசிய உதட்டைக் கடித்துக் கொண்டு தலை தாழ்த்தினாள் அவள்.
காமம் தகிக்க ஆரம்பித்தால் வேலை கெட்டு விடும் என்று போதமாக, அபி அவள் கொடுத்ததை கோட் பையில் போட்டபடி வெளியேறினான். “சாப்பிடுங்கள்” என்று பின்னால் சவப்பெட்டிகள் உள்ளிருந்து ஒரே குரலாக வந்தது. அதில் பெண் குரல் சேரவில்லை என்பதைக் கவனித்தான் அபி.

அந்தக் குருத்தை உண்ணத் துவர்ப்புத் தட்டுப்பட்டது நாவில். இதை ஏன் தின்று தொலைத்தேன் என்று தன் மேலேயே வெறுப்பு. சவப்பெட்டிப் பெண் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அவளைப் பார்க்காமலேயே இருந்திருக்கலாம். இது என்ன ஊரோ, இங்கிருந்து வெளியேற வேண்டியதுதான் முதல் வேலை. அதை விட்டுவிட்டு என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறோமே என்று மனம் கண்டித்தது. அவன் முக்கிய வீதியிலிருந்து பிரியும் குறுகிய தெரு ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் நடக்கத் தொடங்கினான். விமானக் கம்பெனி இல்லாவிட்டால் டாக்சி வாடகைக்குத் தரும் நிறுவனம் அல்லது பஸ் போக்குவரத்து சேவை என்று ஏதாவது இருக்கக்கூடும். கேட்டால் சொல்லாமலா போய்விடுவார்கள்?

அந்தத் தெருவில் ஒரே மாதிரி வீடுகள் இருந்தன. உயர்ந்த நாலு படிகள் முடிந்த இடத்தில் கரகரவென்று சிமிட்டி போட்ட திண்ணைகள் ஓடும் மேலே கூரையும் வேயப்பட்டிருந்தன. எல்லா வீட்டு வாசல்களிலும் பெண்கள் உட்கார்ந்து தலை வாரிக் கொண்டிருந்தார்கள். திண்ணைகளிலும் பெண்கள்தான். பிற்பகலில் எல்லாப் பெண்களும் தலைவார வேண்டும் என்று ஏதாவது ஊர்க் கட்டுப்பாடு இருக்குமோ என்று சிந்தித்தபடி அவன் நடந்து போனான்.

தலைவாரி முடித்த பெண்கள் தலையிலிருந்து அகற்றிய உதிர்ந்த முடியையும் சிக்கான மயிரையும் சிறு குப்பையாகக் குவித்து அருகே வைத்திருந்தார்கள். அவர்கள் பேசியபடி அபியைப் பார்த்துக்கொண்டே அந்த மயிர்க்கற்றைகளை வாசலில் ஓரமாக இட்டுவிட்டு இன்றைய காரியம் முடிந்த திருப்தியோடு கதவடைத்து உள்ளே போனார்கள். இவர்களுக்கு இது தவிர வேறு பொழுதுபோக்கில்லை என்று அபிக்குப் பட்டது.

தெருக்கோடி வீட்டு வாசலில் முடிக் கற்றையை எறிந்து கொண்டிருந்த இளம் பெண்ணிடம் “டிராவல் நிறுவனம் ஏதும் உண்டா?” என்று விசாரித்தான் அபி. அவள் பக்கத்து வீட்டுக்குள் கூர்ந்து பார்த்து விட்டு தன் உதட்டில் விரல் வைத்து, ‘பேசாதே’ என்றாள். முடிக் கற்றையை முழுக்க எறிந்து விடாமல் பாதுகாப்பாக அதனுள் விரல் புதைத்தபடி தெருவின் அந்தக் கோடி வரை கூர்ந்து நோக்கியபின் அபியிடம் சொன்னாள்: – “இருட்டியதும் வா. சாப்பிட எதுவும் கொண்டு வராதே. நான் வேறு தினுசாகத் தின்னத் தருகிறேன். சேர்ந்து சாப்பிடலாம்.”

“நன்றி, வருகிறேன். போக்குவரத்து பற்றி கேட்டேனே?” அபி இப்படி எல்லாம் தொடர்ந்து நச்சரிக்கிறவன் இல்லைதான். என்றாலும் அங்கே இருந்து வெளியேறுவது தான் பெண் சுகத்தையும் நாவிலும் வயிற்றிலும் சுவையான உணவு நிறையும் திருப்தியையும் விட மிக முக்கியமானது என உணர்ந்தான்.

“போக்குவரத்து? என்னையும் கூட்டிப் போகிறாயா?” அவள் முடிக் கற்றையை அவனுடைய சட்டைப் பைக்குள் விளையாட்டாகத் திணித்தபடி கேட்டாள். நெருங்கி அவளை முத்தமிட்டு விட்டு, இந்தத் தெருவின் பெயர் என்ன என்று கேட்டான் அபி. “இது கடைசித் தெரு. முதல் தெரு என்றும் பெயர் உண்டு” என்றாள். “விமான நிலையத்தில் இருந்து வரும்போது கடைசித் தெரு. அப்படித்தானே?” அவன் தனக்குத் தெளிவு ஏற்படுத்திக் கொள்ள அதிகமான தகவல் சேர்த்துக் கேட்டான். விமான நிலையமே இங்கே இல்லை என்றபடி அவள் அபியை விழுங்கி விடுவது போல் பார்த்து உள்ளே போனாள்.

நீண்ட பிற்பகல் முடியும் போது தூறலோடு அந்தி வந்தது. அவன் திரும்ப முக்கிய வீதிக்கு லக்கேஜை உருட்டியபடி வந்தான். தெருவில் திரிந்து கொண்டிருந்த நாய்கள் அவனைத் தொடராமல், வழி விட்டு ஒதுங்கி ஓடின. ராப்பறவை ஏதோ தலையை ஒட்டி எச்சம் இட்டபடி பறந்து சென்றது.

மதுக்கடை என்ற அறிவிப்பு தொங்கிய இடத்தில் படி ஏறினான் அபி. குருத்துமணம் அடிக்கும் மதுவை அங்கே ஆண்களும் பெண்களுமாக கோப்பைகளில் வாங்கி வாங்கிக் குடித்து விட்டு உயர முக்காலிகளில் ஏதும் பேசாமல் சற்று நேரம் உட்கார்ந்து, வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அருவருப்பாக ஏப்பம் விட்டார்கள் அவர்கள் எல்லாரும்.

“கடைசித்தெரு கடைசி வீட்டு விருந்தா?” மதுவருந்திக் கொண்டிருந்த ஒரு கிழவி அபியைச் சுட்டிக்காட்டி பக்கத்தில் இருந்த இளம்பெண்ணிடம் கேட்டபடி கிண்ணத்தில் மதுவை உறிஞ்சினாள். “ஆமா, இன்னிக்கு அவள்தான் சாதிக்கணும். நேத்திலேருந்து தூங்கவே இல்லேன்னா. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கா. பரபரன்னு தலைவாரி அவசரமா உள்ளே போயிட்டா”. இளம்பெண் சொல்லியபடி அபியைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தாள். “விமானம் எப்போ வருதாம்?” ஒரு வழுக்கைத் தலையர் அவனை விசாரித்தபடி மதுவை கிண்ணத்தில் இருந்து சிறு கண்ணாடிக் குப்பியில் கவிழ்த்துக் கொண்டு அவனைக் கேட்டார். அபிக்குக் கோபம் திடீரென்று தலைக்கேறியது. லக்கேஜை அவனுடைய காலுக்கு முன்னால் நகர்த்தி வழுக்கைத் தலையரை விழுத்தாட்டினான். அவரைக் காலால் மிதித்து, “சொல்லுடா, எப்படி இந்தக் கழிப்பறையிலேருந்து வெளியே போகணும்?” அவர் சகஜமாக எழுந்து இன்னும் குடித்துக் கொண்டிருந்த கிழவியையும், அவளோடிருந்த இளம்பெண்ணையும் அழைத்துக் கொண்டு வெளியே நடந்தார். அந்த இளம்பெண் கூர்மையான பற்களுள்ள சிடுக்குவாரிச் சீப்பொன்றை அலங்காரமாகக் கூந்தலில் செருகியிருந்ததை அபி பார்த்தான்.

“சாப்பிட ஏதாவது கிடைக்குமா?” மதுக்கடைக்காரனிடம் அபி விசாரித்தான். சாப்பிட ஏராளம் உண்டு. என்றான் கடைக்காரன். சாப்பாட்டு ஓட்டல் ஏதும் அருகில் உண்டா என்று அடுத்துக் கேட்டான் அபி. சாப்பிட என்று தனி இடம் எங்கும் இல்லை என்று தெளிவுபடுத்தினான் மதுக்கடைக்காரன். குருத்து மது அருந்தும்போது சற்றே உண்பதும் நடக்கும் என்று பெருமையோடு குறிப்பிட்டான் அவன். வேறு எந்த வகை மதுவும் யாரும் குடிக்க மாட்டார்கள் என்றும் கண்டிப்பாகச் சொன்னான் அவன். குழந்தைகளும் அப்படித்தானாம்.

“மது அருந்தாமல் ஏதும் உண்ண முடியுமா?” அபி கேட்க, அப்படி விற்க அனுமதி இல்லை என்றான் கடைக்காரன். சரி, ஒரு கிண்ணம் குருத்து மதுவும், சாப்பிட ஏதாவது இருந்தால் அதுவும்.”

“வேகவைத்த மொச்சை, ஓட்ஸ் பாயசம், பன்றி மாமிசம் உருட்டிப் பொறித்த சாஜேஸ்கள், ஆம்லெட், ரொட்டி, ஆரஞ்ச் மர்மலெட், ஜாம், நீராவியில் வேகவைத்த அரிசியும் உளுந்தும் அரைத்துக் கலந்த தட்டுகள் எல்லாம் உண்டு” என்றான் அவன். அதெல்லாம் காலை உணவு இல்லையா என்று கேட்டான் அபி. இங்கே அப்படித்தான் என்று சொல்லியபடி அடுத்த வாடிக்கையாளனுக்கு தாராளமாக மது வார்த்தான் கடைக்காரன்.

நின்றபடி கொறித்து விட்டு கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் நாணயத்தை அபி கொடுக்க, ‘பரவாயில்லை’ என்று பெருந்தன்மையோடு மறுத்து விட்டான் கடைக்காரன். “மதுவை அப்படியே வைத்து விட்டீர்களே?” என்றபடி அவன் அந்தக் கோப்பையை தளும்பாமல் மேலே ஒரு மெல்லிய காகிதம் போட்டு மூடி இறுக்கக் கட்டி நீட்டினான். “முதல் தெரு முதல் வீட்டுப் பெண்ணுக்கு நான் கொடுத்ததாகச் சொல்லுங்கள். அவள் உச்சியில் இருக்கும்போது மிக இனிமையாக நாகநாதப்புள் போல் கூவுவாள். கேட்க மறக்காதீர்கள்” என்றான்.

அபி அந்த வீட்டுக்கு நடந்தபோது, அவனுக்குப் பழக்கமான, இன்றைய இரவை அவனோடு பங்கு போட்டுக் கொள்ளப் போகிறவள் வாசலுக்கு தலை சீவியபடி வந்தாள். முடிக் கற்றை இல்லாமல் வெறுங்கையை வீசிக் குப்பையை எறியும் பாவனையில் காட்டி விட்டு அபியைப் பார்த்தாள்.

“இந்த மது வேண்டாம் இதை ஓரமாக வை அல்லது கழிவறையில் ஊற்றி விட்டு வா” என்றபடி அவனுடைய இடுப்பை அணைத்து உள்ளே கூட்டிப் போனாள்.ஒரு பெட்டியில் இருந்து கேக்குகளை அவனுக்கு ஊட்டினாள். “நானே செய்த வாழைப்பழ கேக் இது” என்றாள். உப்பு பிஸ்கட்களையும் புளித்த காடி தடவிய ரொட்டித் துண்டுகளையும் அடுத்து உண்டார்கள்.

“சவப்பெட்டி விற்கும் கடையில் வேலை செய்யும், உன் சாயலில் ஒரு பெண்ணை சந்தித்தேன்” என்று பேச்சையும் அவளோடு சரசத்தையும் ஆரம்பித்தான் அபி. முடிந்தபிறகு விமானம் வகையறா பற்றி விசாரிக்கலாம்.

“காசு?” அபி கேட்டான். “என்னத்துக்கு?” என்றபடி உறையைப் படுக்கை அடியிலிருந்து, படுத்தபடி எடுத்துக் கொடுத்தாள். அவர்கள் முயங்க, கூடலின் இடையே அவள் தலையில் வைத்திருந்த சீப்பை அவனிடம் கொடுத்து தனக்குத் தலை சீவி விடச் சொன்னாள்.
“இப்போ.. நான்” அபி தடுமாற, ‘உன்னால் முடியும்’ என்றாள். முயன்று பார்க்கச் சொன்னாள்.
அவளுக்குத் தலைவாரியபடி“போகம் முந்தாமல் இருக்கவா?” என அபி கேட்டான். “போகமே இதுதான்” என்றாள், அவன் தோளில் சீப்பின் பல் பதித்து.
இயங்கி முடியும் நேரத்தில் சட்டென்று கதவு திறக்க அரை இருளில் நின்றவளை அபி உடனே அடையாளம் கண்டு கொண்டான். சவப்பெட்டி விற்கும் பெண்.“மன்னிக்கவும்” என்றாள் அவள் வாசலில் நின்றபடி

“என் இளைய சகோதரிதான் இவள்.” அபியின் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பிக் கொண்டு, அவன் உதடுகளில் முத்தமிட்டுச் சொன்னாள் அந்த கடைசித் தெரு முதல் வீட்டுக்காரி. வாசலில் இருந்து மெல்லிய குரல் கேட்டது.

“இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் போக்குவரத்து நீங்கள் வந்திறங்கிய இடத்துக்கு வந்து சேரும். சீக்கிரம் போங்கள். அக்கா, எனக்குப் பசி பிராணன் போகிறது. கேக்கும். பிஸ்கோத்தும் வேண்டாம். சாப்பிட வேறு ஏதாவது?” தமக்கையைக் கேட்டபடி கதவை அறைந்து சார்த்திப் போனாள் வந்தவள்.

“போகணுமா? எதுக்கு? சவத்தை தள்ளு. அவள் அள்ளி சவப்பெட்டியில் போட்டுக் கொள்ளட்டும். வா இன்னொரு முறை சீப்பை எடுத்துக்கொள்”. இன்னும் திருப்தியடையாதவள் அவனைத் தன்னோடு அணைத்து இழுத்தாள்.
அவளுக்கு நன்றி சொல்லி விட்டு எழுந்தான் அபி. அவள் தலையில் இருந்து சீப்பை எடுத்து உடுப்பில் துடைத்துவிட்டு அவனிடம் கொடுத்தாள். “உன் ஆபீஸ் சகாவுக்கு கொடு. சிவப்பு லிப்ஸ்டிக்கை விட பவள நிறம் நன்றாக இருக்கும் என்று அவளுக்குச் சொல்.” அவள் படுத்து உறங்கத் துவங்கினாள்.

ஓட்டமும் நடையுமாக அபி விமான நிலையத்துக்கு வந்தபோது அங்கே ஜகஜோதியாக விளக்குகள் எரிந்தன. ஆனால் விமானம் ஏதும் இல்லை. பக்கத்தில் இரையும் கடலில் பெரிய விசைப் படகு அல்லது சிறு கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நின்றது. கப்பலிலோ நிலையத்திலோ யாரும் தென்படவில்லை.

கவுண்டருக்கு உள்ளே இருட்டான அறையில் இருந்து வந்தவன் அபி முதலில் சந்தித்த வயசன் அதிகாரி. “உன் கப்பல்தான். போய் ஏறிக் கொள்” அவன் அவசரமாகக் கையசைத்து அபியை முன்னால் ஓட வைத்தான். இரும்புச் சங்கிலிகள் விலக கப்பல் நகர ஆரம்பித்தபோது அபி சுற்றும் பார்த்தான். யாரும் இல்லாத கப்பல் அது. எஞ்சின் இயக்கம் பலமாகக் கேட்டபடி இருக்க, தலைக்கு மேலே பெரிய சத்தம். கப்பல் கடலுக்குள் விரைந்தபோது வானில் விமானம் தட்டுப்பட்டது. அது செரண்டிப் தீவில் இறங்கிக் கொண்டிருந்தது.

தலையில் சீப்போடு பெண்களோ குருத்து மதுவோ கிடைக்குமா என்று கப்பலில் நடந்து தேட ஆரம்பித்தான் அபி.