வரலாறு என்பது மக்கள் தொகுதிகளின் கூட்டியக்கம்.சில செயல்களை நிகழ்த்துவது; அமைப்புகளை ஏற்படுத்துவது ஆகியவற்றைக் குறிக்கும். பொருளுற்பத்தி, கலை, காவியங்கள் என பல நிகழ்ந்தாலும் அவற்றுள் முக்கியமானது அரசியல் அமைப்பாகும். ஏனெனில் அரசியல் அமைப்புகளே மக்கள் திரளை ஒருமுகப்படுத்தி சமூக இயக்கத்தை சாத்தியமாக்குகின்றன. சமூக ஒழுங்கினை வடிவமைக்கின்றன. எனவேதான் வரலாறு என்பதன் மையத்தில் அரசு உருவாக்கம், அரசியல் அமைப்பு போன்றவை உள்ளன. இவ்வாறு மக்கள் தொகுதி முந்தைய காலங்களில் செயல்பட்டதைத் தொகுத்து, ஆராய்ந்து எழுதுதல் வரலாறு எழுத்தியல் என்பதாக அறியப்படுகிறது. வரலாறு என்ற அறிவுத்துறை இச்செயல்பாட்டில் ஈடுபடுகிறது.

பண்டைய காலங்களில் மானுட வரலாற்று கூட்டியக்கத்தின் முக்கிய வடிவம் போர் என்பதாக இருந்தது. ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக இருந்தவை ஒரு அரசனின்கீழ் திரட்டப்படுவது, சிறிய அரசுகள் எல்லாம் பேரரசின்கீழ் திரட்டப்படுவது போன்றவை போரின் மூலமாகவே நிகழ்த்தப்பட்டன. வரலாறு வாளால், ரத்தத்தால் எழுதப்பட்டது. ஆனாலும், வாளால் ஈட்டப்படுபவற்றை ஒழுங்கமைக்கவும், போர்களையே நெறிப்படுத்தவும் பல்வேறு கருத்தியல்களும், மத வழிபாட்டு முறைகளும், கலாசாரங்களும், தத்துவங்களும் தேவைப்பட்டன. வாளும், எழுத்தாணியும் பங்குதாரர்களாக இருந்தன என்றால் மிகையாகாது.
தமிழகத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அழிந்து, அதனை அழித்த பாண்டியப் பேரரசும் பதினான்காம் நூற்றாண்டில் அழிந்த பிறகு, விஜய நகர, மராத்திய, முகலாய பேரரசர்களின் தாக்கத்தால் அவற்றுடன் தொடர்பு கொண்டு உருவான அரசுகளே நான்கு நூற்றாண்டுகள் ஆட்சி செய்தன. இந்திய அளவிலும் இந்தப் பேரரசுகளின் சிதைவிற்குப் பிறகு வேறு பேரரசுகள் தோன்றவில்லை. ஐரோப்பியர்களின் வருகையும், அவர்களது ஆட்சி முறைகளும், ஆயுதங்களும் மெள்ள மெள்ள இந்திய அரசுகளை உள்ளிழுத்து, இறுதியில் இங்கிலாந்தின் நேரடி ஆட்சியின்கீழ் 1858ஆம் ஆண்டு மொத்த இந்திய துணைக்கண்டமும் வந்தது (சிறு சிறு தீவுகளான சமஸ்தானங்கள் சாரமற்ற சுயாட்சியை ஆங்கிலேயர் கட்டுப்பாடின்கீழ் பெற்றிருந்தன). அதற்கு முந்தைய ஆண்டு, 1857-இல், இந்திய மன்னர்கள் பலர் இணைந்து கிழக்கு இந்திய கம்பெனி என்ற ஆங்கில அதிகாரத்தை எதிர்த்து செய்த போர், அவர்கள் முற்றிலும் வீழ்த்தப்பட்டு தலைநகர் தில்லி ஆங்கிலேயர் வசமாவதில் முடிந்தது.

இங்கிலாந்தின் நேரடி ஆட்சியின்கீழ் இந்தியாவில் நவீன குடிமைச்சமூகம் உருவானது. சட்டங்கள் தொகுக்கப்பட்டு நீதிமன்றங்களின் கீழ் சட்டத்தின் ஆட்சி ஒழுங்குபடுத்தப்பட்டது. அரசு இயந்திரம் கட்டமைக்கப்பட்டு நவீன ஆட்சிமுறைகள் கால்கொண்டன. தொழில்களும், நகர்ப்புறங்களும் ஐரோப்பிய தொழிற்புரட்சியின் தொடர்ச்சியாக இந்தியாவில் உருவாயின. ஆங்கிலக் கல்வியும், அரசியல் பயிற்சியும் பெற்ற இந்தியர்கள் ஆங்கில ஆட்சியில் இந்திய மக்கள், இந்தியாவின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாகவும் ஆங்கில ஆட்சியிலிருந்து விடுபட்டு இந்தியர்கள் சுயாட்சியும், இறையாண்மையும் பெற வேண்டும் என்றும் கூறத்துவங்கினார்கள்.
இந்தக் கட்டத்தில் வரலாறு என்பது முக்கியமான ஒரு மாறுதலை அடைந்தது. அது என்னவெனில் மன்னராட்சி மக்களாட்சியாகியது. மன்னர்களை மையப்படுத்திய அரசுகளில் அதிகாரம் ஒரு புள்ளியில் குவிந்து, கருத்தியலும் அந்தப் புள்ளியினை ஒட்டி உருவாகி மக்களிடைய பரவலாவதே நடைமுறையாக இருந்தது. இதற்கு மதம் சார்ந்த நம்பிக்கைகளும், புனைவுகளும் உதவின. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மக்கள் பிரதிநிதிகள் கூடி சட்டமியற்றுவது, அரசாள்வது என்று ஐரோப்பாவில் உருவான நடைமுறை இந்தியாவிலும் பரவத் துவங்கியது. இதையே மக்களாட்சி என்று அழைக்கிறோம். இப்போது வரலாற்று உருவாக்கத்தில் அனைத்து மக்களுக்கும் பங்கு இருப்பதாக நம்பிக்கை உருவானது. இந்த நம்பிக்கையை மிகவும் பரவலாக்கியது மார்க்ஸியம்.

அரசர்களும், பேரரசுகளும், போர்களும் வரலாறல்ல; அவையெல்லாம் உருவாகக் காரணமான உழைப்பு, பொருளுற்பத்தி, உற்பத்தியில் ஈடுபடும் வர்க்கங்களுக்கு இடையேயான மோதல் ஆகியவையே உண்மையில் வரலாற்றின் உந்துசக்திகள் என்று கூறியது மார்க்ஸியம். பூர்ஷ்வா என்ற முதலீட்டாளர்களின் வர்க்கம் மன்னர்களையும், பிரபுக்களையும் புறமொதுக்கி புதிய அரசமைப்பை உருவாக்கி விட்டதை புரட்சிகர மாற்றத்தின் முதற்படியாகவும். அதற்கு அடுத்த கட்டமாக தொழிலாளர்கள் கையில் அரசியல் அதிகாரம் வருவது என்பது தவிர்க்க முடியாத எதிர்காலமாகவும் மார்க்ஸியம் கருதியது.

குடிமக்களுக்கே அதிகாரம் என்று கூறிய சுதந்திரவாத மக்களாட்சி தத்துவமும், தொழிலாளர்களுக்கே அதிகாரம் என்று கூறிய மார்க்ஸிய தத்துவமும் இணைந்து – அதாவது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இணைந்து – புதியதொரு வரலாற்றுச் சூழலை கட்டமைத்தன. சுதந்திரவாதம் தனிச்சொத்துரிமையையும், மார்க்ஸியம் பொதுவுடைமை என்ற பொது சொத்துரிமையையும் முக்கிய அச்சுக்களாகக் கொண்டன. இந்த சூழலில் காலனீய ஆட்சியில் கட்டுண்டிருந்த பல பகுதிகள் புதிய தேசங்களாக உருவெடுத்தன. இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் இரண்டு உலகப் போர்கள் நடந்த பிறகு உலகம் முழுவதும் தேசிய அரசுகளாக பகுக்கப் பெற்று புதியதொரு வரலாற்றுக் காலம் துவங்கியது.

சுதந்திரத்தை எதிர்நோக்கிய இந்திய அரசியல்

இந்தியாவில் குடிமைச் சமூகம் ஆங்கில அரசிடம் சுயாட்சி உரிமைகளைக் கோரத்துவங்கி, மெள்ள மெள்ள இரட்டையாட்சி முறைக்கு வழிவகுத்தது. அதே சமயம் சில தீவிர விடுதலை விரும்பிகள் உடனடியாக அந்நிய ஆட்சி அகன்று இந்தியா முழு இறையாண்மை பெறவேண்டும் என நினைத்தார்கள். இவர்கள் சட்டத்திற்குப் புறம்பான கிளர்ச்சி வடிவங்களைக் கைக்கொண்டார்கள். இரண்டு பிரிவுகளும் இணைந்துதான் காங்கிரஸ் பேரியக்கம் விரிவடைந்தது.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மிதவாதம், தீவிரவாதம் இரண்டையும் கடந்து இந்திய சுதந்திரத்திற்கு ஒரு புதிய பொருள் கொடுத்தார் அவருடைய “ஹிந்த் சுவராஜ்” (1910) நூலில். அவர் என்ன கூறினார் என்றால் “ஆங்கிலேயர்கள் அன்னியர்கள்.-அவர்கள் ஆட்சிபுரியக்கூடாது- அவர்கள் இங்கிலாந்திற்குச் செல்ல வேண்டும்” என்பதைவிட இந்தியர்களின் வாழ்க்கை முறையின் மீது ஆங்கிலேய வழிமுறைகளைத் திணிக்கக் கூடாது என்பதே முக்கியம் என்றார். இந்தியர்கள் அவர்களின் கலாசாரப்படி வாழ உரிமையுடன் இருப்பதே உண்மையான சுயாராஜ்யம் என்றார். அவர் தொழிற்புரட்சி, முதலீட்டியம் ஆகியவை இந்தியாவிற்குப் பொருந்தாதவை என்று கருதினார். வாழ்க்கை பண்டமயமாவது, பொருளாதார மயமாவது ஆகியவற்றை ஆபத்தானதாகக் கணித்தார். காந்தியின் இந்த இந்தியாவின் தனித்துவம் குறித்த சிந்தனையும், கைராட்டை கதர் போன்ற செயல்முறைகளும், சுதந்திர வேட்கை மக்களிடையே பரவப் பெரிதும் காரணமானது என்றால் மிகையாகாது. அதாவது பொருளாதார வலிமை பெற்றவர்கள், சிவில் சமூகம், தீவிரவாதக் குறுங்குழுக்கள் ஆகியவற்றின் சுதந்திரக் கோரிக்கையைப் பரவலான மக்கள் கோரிக்கையாக மாற்றுவதில் காந்தி பெரு வெற்றி பெற்றார்.

மற்றொருபுறம் பொதுவுடைமை சிந்தனை ரஷ்யப் புரட்சியை (1920) தொடர்ந்து இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் பெரிய அளவு தொழில்கள் பெருகாத நிலையில், தொழிலாளர்களைத் திரட்டி முக்கிய அரசியல் சக்தியாக மாற்றுவது சாத்தியமாக இல்லாமல் இருந்தது. விவசாயமும் பெரிய நிலப்பிரபுக்களிடம் இருந்ததைவிட அதிகம் சிறு நிலவுடைமையாளர்களிடமே இருந்ததால் அங்கும் வர்க்க முரண் என்பது கூர்மைப்படவில்லை. இருப்பினும் புதிய அரசியல் சிந்தனை என்ற அளவில் பொதுவுடைமை சிந்தனையும் மக்களுக்கு ஆங்காங்கே அறிமுகம் ஆனது.

இந்தியாவில் மொகலாயப் பேரரசு, தக்காணத்து சுல்தான்கள், நிஜாம்கள் என பல்வேறு அரசு நிர்வாகமும் இஸ்லாமிய மதத்துடன் இணைந்து இருந்ததன் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களின் சார்பாக நவீன அரசியல் இயக்கங்களும் உருவாயின. இணைநிகழ்வாக உடனடியாக இந்திய சுதந்திரம் வேண்டிய தீவிரவாத தலைவர்கள் பலர் இந்து மத அடையாளத்தை அரசியல் அடையாளமாக மாற்றுவது அவசியம் என்று கருதினர். பொதுவாக இந்தியப் பண்பாடு என்ற அளவில் இந்து கடவுளர்களையும், மத வழிபாட்டு முறைகள், இலக்கியம், கலைகள், தத்துவம் போன்றவற்றைக் கொண்டாடுபவர்களும், இந்து அடையாளத்தை அரசியல் அடையாளத்தின் அச்சாணியாகப் பார்ப்பவர்களும் கலந்து முயங்கத் துவங்கினார்கள் (இந்தப் பிரச்சினையின் சிறந்த உதாரணங்கள் என சுப்ரமண்ய பாரதி, வ.வே.சு.ஐயர், பின்னாளில் வரதராஜுலு நாயுடு ஆகியவர்களைக் காணலாம்).

இந்த நிலையில்தான் இந்தியாவிற்கு சுயாட்சி கொடுக்க வேண்டுமென்றால் எத்தகைய அரசமைப்பை உருவாக்குவது என்ற கேள்வி வலுவடையத் துவங்கியது. ஒரு பேரரசரை இனிமேல் உருவாக்க முடியாது என்பதாலும், இந்திய சுயாட்சி என்பது மக்களின் கோரிக்கையாக இருப்பதாலும் மக்களாட்சியே உகந்தது என்பதும் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளே ஆட்சி செய்வார்கள் என்பதும் தவிர்க்கவியலாத சாத்தியங்களாக இருந்தன. ஆனால் எத்தகைய பிரதிநிதித்துவம், எத்தனை சுயாட்சி பெற்ற அமைப்புகள் என்பதெல்லாம் கேள்விக்குரியனவாக மாறின.

அன்றைய இந்திய உபகண்டத்தின் அரசியல் பிரச்சினைகள் பல. அவற்றில் முதன்மையானது கல்வியறிவு என்பது பத்து சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கே இருந்தது. இதன் காரணமாக, ஜாதி ரீதியாக பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொண்டு வாழப்பழகியிருந்த மக்களிடம் பொதுவான குடிமையுணர்வு ஏற்படுவது கடினமாக இருந்தது, புலே, பெரியார், அம்பேத்கர் ஆகியவர்கள் தெளிவாக உணர்ந்து சொன்னபடி மக்களாட்சியின் முதல் எதிரியாக ஜாதி ஏற்றத்தாழ்வு இருந்தது. இந்திய சுய உருவாக்கமே ஜாதிய சுய உருவாக்கமாகத்தான் இருந்தபோது எப்படி பொதுவான குடிநபரை உருவாக்குவது என்ற கேள்வி பெரிய சவாலாக இருந்தது. மிக முற்போக்கான, கற்றறிந்த காங்கிரஸ் தலைவர், கட்சி உதவியுடன் துவங்கிய கல்விச்சாலையில் கூட பார்ப்பன சிறுவர்கள் தாங்கள் தனியே அமர்ந்துதான் உணவருந்துவோம் என்று கூறி நடைமுறைப்படுத்தியதால் பெரியதொரு சர்ச்சை மூண்டது. இப்படியாக அனைவருக்குமான பொதுவெளி, குடிமைச்சமூகம் ஆகியவையே உருவாக முடியாதபோது பொதுவுடமைச் சமூகம் எப்படி உருவாக முடியும் என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கு அடுத்த நிலையில் இந்தியா பல நிலப்பகுதிகளாக இருந்தது. பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் தொகுதிகள் இருந்தன. பல்வேறு மத நிறுவனங்களும், வழிபாட்டு முறைகளும் இருந்தன. இவற்றையெல்லாம் எந்த அடிப்படையில் இணைத்து ஒரே தேசமாக கட்டமுடியும் என்பதும் சவாலாகத்தான் இருந்தது.
இந்தியா முழுவதும் பரவியிருந்த சமஸ்கிருதம் அறிந்த பார்ப்பனர்கள், ஒரு பார்ப்பனீய இந்து மதத்தை ஐரோப்பியர், ஆங்கிலேயர் துணையுடன் இந்தியா முழுமைக்கும் பொதுவானதாக மாற்றினார்கள். குறிப்பாக, நவீன சட்ட உருவாக்கத்தில் இந்துக்களுக்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டு எல்லா நீதிமன்றங்களும் அவற்றைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைக்கு தீர்ப்புகள் கூறத் துவங்கினார்கள். இப்படி பார்ப்பன இந்து மத கருத்தியல் மேலாண்மை ஒன்று உருவாகி அதுவே இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றபோது, இஸ்லாமியர்கள் தாங்கள் சிறுபான்மையாகி இந்துக்களின் ஆதிக்கத்திற்குள் வந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தங்களுக்குத் தனி நாடு வேண்டுமென கோரத் துவங்கினார்கள்.

முதலிலேயே இந்திய உபகண்டம் முழுவதும் ஒற்றை இந்தியாவாக உருவாக்கப்படாமல் பல்வேறு நிலவியல் பிரதேசங்களாக உருவாகியிருந்தால் நாட்டை மத அடிப்படையில் இரண்டு கூறுகளாகப் பிரித்திருக்க வேண்டியதில்லை எனலாம். ஆனால் இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் கிறிஸ்துவ மதப்பிரிவுகளிலிருந்து பொதுச்சட்டங்களை உருவாக்கும் அனுபவத்தின் பின்னணியில் இந்தியாவிலும் பொதுவான குடிமைச்சட்டங்கள், அதற்கு அப்பாற்பட்ட தனி வாழ்க்கை சட்டங்கள் என உருவாக்கும்போது தனி வாழ்க்கைச் சட்டங்களை மத அடிப்படையில் உருவாக்கியதால் இந்து இந்தியா, இஸ்லாம் இந்தியா என்ற இரண்டு தேசங்களுக்கான சாத்தியம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது.

சுருக்கமாக இப்படிப் புரிந்துகொள்ளலாம். மக்கள் பரப்பில் சிறு பகுதியினரே கல்வி கற்ற நிலை. அவ்வாறு கற்ற செல்வாக்கு மிக்கவர்களால் ஓரளவு பரவலாக சில இயக்கங்களை மக்களிடையே உருவாக்க முடிந்த சூழல். அத்தகைய தலைமை தாங்கும் சமூகத் தட்டில் மேற்சொன்ன பல்வேறு அரசியல் சிந்தனைகளும், அடையாளங்களும் முரணுற்று மோதிக்கொண்டிருந்த பின்னணியில். ஆங்கில ஆட்சி முடிந்து சுயாட்சி வேண்டுமென்றபோது எத்தகைய சுயாட்சி, எத்துனை சுயாட்சி பிரதேசங்கள் என்பவை குறித்த கருத்து வேறுபாடுகள் என பலவும் நிலவின.

சரியாகச் சொன்னால் கடைசி மொகலாய அரசர் உள்ளிட்ட மன்னர்கள் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு முழுமையாக ஆட்சியை இழந்து இந்தியா நேரடியாக இங்கிலாந்து அரசாட்சியின்கீழ் வந்த 1858 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டிற்குள் உலக அளவிலும், இந்தியாவிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்து இந்தப் புதிய அரசியல் சூழல் மக்கள் தொகுதிகளை மையமாகக் கொண்டு உருவாகியது எனலாம்.

இந்திய தேசிய காங்கிரஸ் காந்தி, நேரு ஆகியோர் தலைமையில் பெருவாரியான மக்களின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் அமைப்பைக் குறித்து ஆங்கிலேயர்களுடன் பேசும் ஆற்றலைப் பெற்றிருந்தது. ஆனால் இவர்களின் பெரும்பான்மையினால் அன்னியப்பட்ட முஸ்லிம் லீக், ஜின்னாவின் தலைமையில் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் ஆற்றலைப் பெற்றது. அம்பேத்கர் தலித் மக்களின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தக்கூடியவராக உருவாகியிருந்தார். பெரியார் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பினாலும், ஆங்கிலேய ஆட்சியினையோ, காங்கிரஸ் தலைமையினையோ வலியுறுத்தும், வற்புறுத்தும் அளவு நிறுவன பலம் பெற்றிருக்கவில்லை. அவருடைய அக்கறையும் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்தை தகர்ப்பதிலேயே அதிகம் இருந்ததால் தனி நாட்டிற்கான கருத்தொப்புமையை தனவந்தர்கள், பார்ப்பனர்கள், நீதிக்கட்சி தலைவர்கள் ஆகியவரிடத்தில் கூட வலுவாக உருவாக்கமுடியவில்லை.

முஸ்லிம் லீக் வலுவான நவீன கட்சியாக செயல்படுவது பொறுக்காமல், அதனை எதிர்த்து செயல்பட ஒரு இயக்கம் உருவானது. மராத்திய பேரரசின் கடைசிக் காலத்தில் பார்ப்பன பேஷ்வாக்களின் ஆட்சியில் ஜாதியமைப்பு மிகக் கொடூரமானதாக கட்டமைக்கப்பட்டது. அந்த ஆட்சி வீழ்ந்த பிறகு அதில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த சித்பவன் பார்ப்பனர்கள் மற்றும் பிற பார்ப்பன சமூகங்கள் ஆங்கிலேயர்களையும், முஸ்லிம்களையும் எதிர்க்க இந்து அடையாள அரசியலே சரியானது என்று எண்ணி சில அமைப்புகளை உருவாக்கின. இந்து மகா சபா, ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் ஆகியவை அவை. முஸ்லிம் லீக்கின் தனி நாடு கோரிக்கை வலுத்தபோது அதற்கு எதிராக இவர்களும் பல இடங்களில் காலூன்றி வளர்ந்தார்கள். பல்வேறு இடங்களிலும் தோன்றிய மதக் கலவரங்கள் இவர்களுக்கு நீரூற்றி வளர்த்தது. புல்லை மேயும் மாடுகளின் தோலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிந்து குடித்து ஜீவிக்கும் ஒட்டுண்ணிகளைப் போல, காங்கிரஸ் பேரியக்கம் பல்வேறு மக்கள் தொகுதிகளை ஒருங்கிணைத்து இந்திய சுதந்திரத்தை வரலாற்று ரீதியாக உருவாக்கியபோது, அந்த வரலாற்று இயக்கத்தில் ஒட்டிக்கொண்டு, அந்த பன்மைத்துவ தேசிய உணர்வை இந்துத்துவா என்று இந்து அடையாள அரசியலுக்கு உறிந்து எடுத்துக் கொழுத்தன இந்த இயக்கங்கள். இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகள் உருவாக, இரண்டு நாடுகளுக்கும் மக்கள் குடிபெயர்ந்து செல்ல, கலவரங்கள் வெடிக்க, இறுதியாக காந்தியைக் கொன்று தங்கள் ஒட்டுண்ணி வாழ்க்கையில் மோட்சம் பெற்றன.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சூழல்

இந்தியா சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் மிகப்பெரிய நாடு தழுவிய அரசியல் கட்சியாக இருந்தது. அதனுள் பொதுவுடைமை ஈடுபாடு கொண்ட சோஷலிஸ்டுகளும், தனி உடைமை நம்பிக்கை கொண்ட சுதந்திரவாதிகளும், இரண்டிற்கும் இடைப்பட்டவர்களும் இருந்தார்கள். காங்கிரஸிலிருந்து பிரிந்து சோஷலிஸ்டு அல்லது கம்யூனிஸ இயக்கங்களுக்கு செல்பவர்களும், சோஷலிஸ்டு, கம்யூனிஸ இயக்கங்களிலிருந்து காங்கிரஸிற்கு வருபவர்களுமாக போக்குவரத்து இருந்தது. காங்கிரஸிற்குள் இந்து மத பண்பாட்டின்மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள் இருந்தார்கள். ஆனாலும் இவர்கள் இந்து அரசியல் அடையாளத்தை ஏற்காமல் இருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ். ஒரு சிறிய இயக்கமாக மட்டுமே இருந்தது. காந்தி கொல்லப்பட்ட பிறகு சிறிது காலம் தடை செய்யப்பட்டு இருந்தது. இதைத்தவிர ஜாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்கங்களும், பிரதேச நலன்களை முன்னெடுத்த இயக்கங்களும் இருந்தன.
ஜவஹர்லால் நேரு இந்த அனைத்துப் போக்குகளுக்கும் ஈடுகொடுத்து ஒரு தேசிய அரசையும், அரசியலையும் கட்டமைக்கும் ஆற்றலுடன் அமைந்தது பெரும் நல்வாய்ப்பாக இருந்தது. அவருக்கு மிகப்பெரிய வெகுஜன செல்வாக்கும் இருந்தது. அவர் பிரதமராக இருந்த 1947 முதல் 1964 வரையிலான பதினேழு ஆண்டுகளில் மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் பொதுத்தேர்தல்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நிகழ்த்தப் பெற்று, மக்கள் பிரதிநிதிகள் அரசமைக்கும் மக்களாட்சி முறை வலுவாகக் காலூன்றியது மிகப்பெரிய அரசியல் வெற்றி என்றால் மிகையாகாது.

இந்தக் காலத்தில் உலகம் தனி உடைமை சுதந்திரவாதமா, பொது உடைமை அரசு மையத்துவமா என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து பனிப்போர் என்ற புதிய பொருளாதாரப் போரில் ஈடுபட்டன. நேரு உள்நாட்டில் ஜனநாயக சோஷலிசம் என்ற கலப்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்ததுடன், சர்வதேச அரங்கில் அணிசேரா நாடுகள் என்ற வகையினையும் உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். இந்த முயற்சிகளின் வெற்றி தோல்விகள் விரிவான விவாதத்திற்கு உரியவை. ஆனால் இந்திய ஜனநாயகத்தைப் பல்வேறு சிந்தனைகளும் முரணுற்று கலந்து இயங்கும் ஒரு களமாக மாற்றியதற்கு அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.

அறுபதுகளுக்குப் பின்னால் உலகில் முதலீட்டியம், பொருளுற்பத்தி. வர்த்தகம் போன்றவை தொடர்ந்து புதிய வடிவங்களை எடுத்தன. இவை கம்யூனிஸ நாடுகளிலும் புகுந்து முதலீட்டிய முறைகளை அங்கும் நடைமுறைப்படுத்துவதில் வெற்றிகண்டன. அதே சமயம், தனி உடைமை சுதந்திரவாத அரசுகளும் மக்கள் நலனைப் புறக்கணிக்கமுடியாது என்ற நிலையில் வெல்ஃபார் ஸ்டேட் என்னும் மக்கள் நல அரசுகளே எங்கும் நிலைபெற்றன. இந்தியாவிலும் எல்லா கட்சிகளுமே வளர்ச்சி அரசியல், மக்கள் நலன் என்ற பொது அம்சங்களைக் கைக்கொண்டே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அப்படியானால் தேர்தல்கள் எந்த அடிப்படையில் நடக்கின்றன? எந்த முரண்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன என்று கேள்வி இன்று மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

உலக அளவில் இதுதான் நிலை என்றாலும், இந்திய அளவில் தேர்தல்களுக்கு வரலாற்று உருவாக்கத்தில் பங்கு உண்டா, 1952 முதல் 2019 வரையிலான அறுபத்தேழு ஆண்டுகளில், பதினேழு மக்களைவைத் தேர்தல்கள் எவ்விதமாக வரலாற்றை உருவாக்கியுள்ளன என்ற கட்டுரையின் மையக் கேள்விக்கு செல்வோம்.

அரசு அமைந்தபின் தேர்தல்

இந்தியா சுதந்திரம் பெற்று, அரசியல் நிர்ணய சபை ஒன்று உருவாக்கப்பட்டு, அரசியல் நிர்ணய சட்டம் இயற்றப்பட்டு, இந்தியா குடியரசாகிய பிறகுதான் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல், அதாவது யுனிவர்சல் அடல்ட் சஃப்ரேஜ் என்ற வயது வந்தோர் அனைவரும் வாக்களிக்கும் உரிமை பெற்ற தேர்தல் 1952 ஆம் அண்டு நடைபெற்றது. அதற்கு முன் நடந்த தேர்தல்களில் படித்தவர்கள், வரிசெலுத்துபவர்கள் என்று சில மக்கள் தொகுதிகள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம். அரசியல் நிர்ணய சபையும் அப்படி சிறிய மக்கள் தொகுதிகள் வாக்களித்துதான் உருவானது. அதன் பிற்கே அனைவரும் வாக்களிக்கும் முறை வந்தது.

ஒரு வகையில் இது முதலில் சட்டையைத் தைத்துவிட்டு பின்னர் அதற்குத் தக்கபடி உடலை வளர்த்திக்கொள்வது போலத்தான். அரசியல் நிர்ணய சட்டத்தில் சமத்துவம் மிக முக்கியமான லட்சியமாக முன்வைக்கப்பட்டது. ஜாதி ஏற்றத்தாழ்வு, மத வேற்றுமை, ஆணாதிக்கம் ஆகியவை கடந்த அனைத்து மக்களும் சம உரிமை பெற்ற குடிநபர்களே என்ற உயரிய லட்சியமே அரசியலின் அடிப்படை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் நாட்டில் கடுமையான ஏற்றத்தாழ்வுகள், குறிப்பாக ஜாதீய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம் ஆகியவை மிகப் பரவலான சமூக உண்மைகளாக இருந்தன.
அதையெல்லாம் சரி செய்து அ.நி.ச கூறியபடி சம உரிமை பெற்ற குடிநபர்களை உருவாக்குவதற்கு வாக்குச்சீட்டு என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. (இது நடந்து அறுபத்தேழு ஆண்டுகளுக்கு பின் முற்றிலும் தவறான காரணங்களுக்காக ஏ.ஆர்.முருகதாஸ் “ஒரு விரல் புரட்சியே” என்று பாட்டுப் போட்டு படமெடுத்தார். உண்மையிலேயே 1952-இல் துவங்கியது இந்த ஒரு விரல் புரட்சி). படிக்காதவர்கள், ஏழை எளியவர்கள் எல்லாம் தாங்கள் வரலாற்றில் பங்கெடுப்பதாக நினைத்து ஓட்டுக்களைப் போடும் சாத்தியம் உருவானது.

அதைத்தவிர ஜாதி படிநிலை அமைப்பைத் தகர்க்க கல்வியிலும், பணி இடங்களிலும் இட ஒதுக்கீடு என்ற புரட்சிகர திட்டம் ஒன்றும் அ.நி.ச-வில் இணைக்கப்பட்டது. அதற்கு முன்பே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கை இருந்தாலும், சில பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அ.நி.ச-வில் தாழ்த்தப்பட்டோருக்கான, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது மிக அவசியமான வரலாற்று உந்துசக்தியாக விளங்கியது. இதைப் பெரிதும் முன்னின்று சாதித்த விதத்தில் அ.நி.ச-வை எழுதும் குழுவிற்குத் தலைமையேற்ற பாபாசாகிப் அம்பேத்கர் நவீன இந்தியாவின் சிற்பிகளில் முக்கியமானவராகக் கொண்டாடப்படுகிறார்.

இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்திய தேர்தல்களின் அடிப்படை வரலாற்று பணி அதிகாரப் பரவல் என்று கொள்ளலாம். உண்மையிலேயே சம உரிமையுள்ள குடிமை சமூகத்தை உருவாக்க, அதிகாரத்தைப் பரவலாக்குவதே தேர்தல்களின் முக்கிய அம்சம். கிறிஸ்டோஃபர் ஜெஃபர்லோ போன்ற ஆய்வாளர்கள் சமீபத்தில் இந்த அடிப்படையில் இந்தியத் தேர்தல்களை ஆராய்ந்து எழுதி வருகிறார்கள்.

மூன்று விதங்களில் இந்திய அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான முரண்கள் இந்திய தேர்தல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றைக் கட்சிகளைக் கொண்டு அடையாளப்படுத்துவது கடினம் என்றாலும் ஓரளவு கட்சிகளின் முன்னுரிமைகளில் இவை அடையாளப்படுத்தப்படும்.
சோஷலிஸம் என்ற மக்கள் நலன் காக்கும் அரசு மைய பொருளாதார நடைமுறைகளுக்கும், தனியார் லாபம் என்பதை உந்துசக்தியாக்கிய முதலீட்டிய நலன் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்குமான முரண்.

ஜாதி வேறுபாட்டைக் களைந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசதிகாரம், பொருளாதார ஆற்றல் ஆகியவற்றை வழங்கும் நடைமுறைகள்; சமூகத்தில் நிலைபெற்றுவிட்ட ஆதிக்க சாதி நலன்களைக் காப்பாற்றும் நடைமுறைகள் ஆகியவற்றிற்கு இடையிலான முரண்.
இந்தியாவின் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் தொகுதிகளுக்கு சுயாட்சி உரிமைகளை அதிகம் வழங்கும் கூட்டாட்சி தத்துவம்; இந்தியாவின் மைய அரசிடம் அதிகாரங்களைக் குவித்து இந்திய ஒற்றுமையைப் பாதுகாக்கும் தத்துவம் ஆகியவற்றிற்கு இடையிலான முரண்.
சோஷலிஸம் என்னும் மக்கள் நலன் முன்னுரிமை, ஜாதி ஆதிக்க எதிர்ப்பு, கூட்டாட்சி தத்துவம் போன்றவை அதிகாரப் பரவலுக்கு உதவும் முற்போக்கு அரசியலாகவும், முதலீட்டிய நலனை மையப்படுத்திய வளர்ச்சி, ஆதிக்க சக்திகள் நலன் பேணுதல், மைய அரசிடம் அதிகாரம் குவித்தல் ஆகியவற்றைப் பிற்போக்கு அரசியலாகவும் கணிக்கலாம்.

நாம் முன்னர் கண்டபடி துவக்கத்தில் இந்தப் போக்குகள் பலவும் காங்கிரஸிற்கு உள்ளேயே இருந்தன. சோஷலிஸ்டுகள் காங்கிரஸிலிருந்து பிரிந்தார்கள். பின்னர் முதலீட்டிய வளர்ச்சி சுதந்திரவாதிகள் சுதந்திரா கட்சி என்ற பெயரில் பிரிந்தார்கள். இந்து அடையாளவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஜனசங் என்ற கட்சியை உருவாக்கி பின்னாலிருந்து இயக்கியது. கம்யூனிஸ்டு கட்சி சில பகுதிகளில் செல்வாக்குப் பெற்றது. மாநில அடையாளக் கட்சிகள் மொழிவாரி மாநில உருவாக்கத்திற்குப் பின் பல மாநிலங்களில் வலுப்பெறத் துவங்கின.

நேருவிற்குப் பின் (லால் பகதூர் சாஸ்திரி சில ஆண்டுகள் பிரதமாரக இருந்தபிறகு) இந்திரா காந்தி தலைவரானபோது காங்கிரஸ் தீவிரமாக சோஷலிஸப் பாதையைத் தேர்ந்தெடுத்த நிலையில், நில உடைமை சக்திகள் காங்கிரஸைப் பிளந்து சிண்டிகேட் காங்கிரஸை உருவாக்கின. பெருகும் முரண்பாடுகளை எதிர்கொள்ள இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்து பதினெட்டு மாதங்கள் எதேச்சதிகார ஆட்சி செய்தார். இதன் விளைவாக காங்கிரஸுடன் பல்வேறு கோணங்களில் முரண்பட்டிருந்த கட்சிகள் கருத்தியல் அவியலாக இணைந்து ஜனதா கட்சி 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. ஒரு புறம் இந்துத்துவ ஜனசங், மற்றொருபுறம் காங்கிரஸ் சோஷலிஸ்ட்டுகள், இடையே முதலீட்டிய சுதந்திர பொருளாதாரவாதிகள், விவசாய நல மாநிலத் தலைவர்கள் என்பன போன்றவற்றின் முரட்டுக் கலவையான ஜனதாவால் மூன்றாண்டுகள் கூட இணைந்து செயல்பட முடியவில்லை.

நெருக்கடி நிலை கொடுங்கோன்மைகளால் படுதோல்வியை சந்தித்த இந்திரா காந்தி மக்கள் ஆதரவுடன் மீண்டும் பிரதமரானார். கருத்தியல் கலவைகளை சரியான விகிதத்தில் கலந்து ஆட்சியை நடத்துவதில் காங்கிரஸே சரியான கட்சி என்று முடிவானது. நெருக்கடி நிலையை எதிர்த்துப் பதவி இழந்து ஜனதா கட்சியை ஆதரித்து நின்ற கலைஞர், “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று கூறியதன் மூலம் இந்த சிக்கலைக் கச்சிதமாகப் படம் பிடித்தார்.

பொதுவாக முதலீட்டிய நெருக்கடி, உலக அளவில் முதலீட்டியம் மேற்கொண்ட மறுவடிவமைப்பு, பனிப்போரின் முடிவு ஆகியவை காங்கிரஸ் கட்சியிலும் பல மாறுதல்களைக் கொண்டு வந்தன. தலைவர்கள் என்ற முறையில் இந்திரா காந்தி, அவர் மகன் ராஜீவ் காந்தி இருவரும் கொல்லப்பட்டு இறந்தனர். ஜாதி ஆதிக்கத்தை மேலும் தகர்க்க பிற்படுத்தப்பட்டோர் நலனை முன்னெடுப்பதும் இதையொட்டி மாநில நலன்களின் முன்னெடுப்பும் அதிகரித்தன. வி.பி.சிங் பிரதமராக இருந்த ஜனதா தள ஆட்சி, பழம்பெரும் சோஷலிஸ பிற்படுத்தப்பட்டோர் நல அரசியல்வாதி மண்டல் தலைமையில் அமைந்த கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது வட மாநிலங்களில், குறிப்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹாரில் புதிய அரசியல் சக்திகளின் வளர்ச்சிக்கு காரணமானது. ஜனதா தள ஆட்சியின் முரண்பாடுகளும் அதன் ஆட்சியைக் குறுகிய காலமே அனுமதிக்க, ராஜீவ் மரணத்தின் அனுதாப அலையில் 1991 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் வலுதுசாரி முதலீட்டிய பாதைக்கு காங்கிரஸைக் கொண்டு சென்றனர். இந்த நேரத்தில்தான் பனிப்போர் முடிந்து ஒற்றைத் துருவ உலகம் என்னும் புதிய உலக முதலீட்டிய கட்டமைப்பு துவங்கியது.

இந்த நிலையில் மாநிலக் கட்சிகள், பிற்படுத்தப்பட்டோர், தலித் அரசியல் முன்னெடுப்பு ஆகியவற்றினை எதிர்கொள்ள அயோத்தி ராமர் கோயில் பிரச்சினையை முன்னெடுத்து அரசியல் களத்தில் துரிதமாக பாசிசத்தின் வளர்ச்சியினை சாதித்தது ஆர்.எஸ்.எஸ்-.சின் இரண்டாவது அரசியல் அவதாரமாகிய பாரதீய ஜனதா கட்சி. மண்டலா, மந்திரா என்ற முரண்பாடாக இது பேசப்பட்டது. காங்கிரஸின் முதலீட்டிய நலன் அரசியல், பாரதீய ஜனதாவின் இந்து மதவாத அரசியல் இரண்டையும் தவிர்த்து மாநிலக் கட்சிகள். சோஷலிஸ, இடதுசாரிக் கட்சிகளின் மூன்றாவது அணி மறுபடி அரசமைத்தும் மீண்டும் அவர்களால் பெரும்பான்மையுடன், இணைந்து பணியாற்ற முடியாமல் போனது. முதலீட்டிய நலன்களுடன், மக்கள் நலவாழ்வுக்கான திட்டங்களையும் இணைப்பது, முதலீட்டிய வளர்ச்சியை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக மாற்றுவது என்ற திட்டத்தை எல்லா கட்சிகளுமே பின்பற்றத் துவங்கின. முதலீட்டிய நடவடிக்கைகளின் பெருக்கத்தில் அரசியல் கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்குபெற ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்தன. இந்துத்துவம், அதாவது இந்து அரசியல் அடையாள பாசிசத்தை எதிர்க்க பல்வேறு கட்சிகளும் இந்து மத நடவடிக்கைகளுக்கு அனுசரணையாக இருக்கவும் முற்படுகின்றன.

இந்தப் போக்குகளின் விளைவாக உண்மையில் கட்சிகளுக்கிடையே பெரிய கொள்கை வேறுபாடுகள் இருக்கின்றனவா? எல்லா கட்சிகளும் ஊழல், எல்லா கட்சிகளும் முதலீட்டிய வளர்ச்சி அரசியல், எல்லா கட்சிகளும் மக்கள் நலத் திட்டங்கள், எல்லா கட்சிகளும் மத நடவடிக்கை பாராட்டுதல் என்று பொதுவான அரசியலைப் பின்பற்றத் துவங்கியபின் தேர்தல்களுக்குப் பொருள் என்ன? வரலாற்று உருவாக்கம் என்று ஏதாவது தேர்தல் மூலம் நிகழ முடியுமா என்ற கேள்வி நடப்பு 2019 ஆண்டில் நிகழும் பதினேழாவது பாராளுமன்றத் தேர்தலின் முன்னால் பெரிதாக எழுகிறது. யார் திறமையாக ஆள்கிறார்கள், யார் குறைவாக ஊழல் செய்கிறார்கள். யார் மக்கள் குறைகளைக் கேட்டு சரி செய்கிறார்கள் என்றெல்லாம் ஒப்பீட்டளவில் பார்த்து நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதுதான் தேர்தலா என்ற கேள்வியும் எழுகிறது.

வரலாற்றின் இரு திசையில் பிரியும் பாதைகள்: 2019 தேர்தல்

அறுபத்திஏழு ஆண்டுகால தேர்தல்களின் வழியாக ஒரு முக்கியமான வரலாற்று நகர்வு நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் துவங்கிய இந்த நகர்வு இன்று பெரும்பாலான இந்திய மாநிலங்களுக்குப் பரவியுள்ளது. அது மாநிலக் கட்சிகளே அரசியிலின் மைய அச்சு என்ற நிலை. குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில், மாநிலக் கட்சிகளே அரசியலைத் தீர்மானிக்கின்றன. இவற்றில் சில மாநிலங்களில் இன்னமும் தேசியக் கட்சிகள் இருக்கின்றன. உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா அரசுதான் ஆள்கிறது. ஆனால் அங்கே மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து பாரதீய ஜனதாவை வீழ்த்த முன்வந்துள்ளன. கர்நாடகாவில் மாநிலக் கட்சி ஆண்டாலும், பாஜக, காங்கிரஸ் இரண்டுமே முக்கிய கட்சிகளாகத்தான் உள்ளன. வங்காளத்தில் மாநிலக் கட்சிக்கு மாற்றாக விளங்க கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாஜக மூன்றுமே விழைகின்றன. இப்படி பல்வேறு சூழ்நிலைகள் இருந்தாலும் மாநில அரசியல் என்பது தேசிய அரசியலை விட முக்கியத்துவம் பெறுவது என்பது மிக முக்கியமான வரலாற்று நகர்வு எனலாம். இது இந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றுவதிலேதான் முடியும் என்பது தெளிவு.

இதில் முதலீட்டிய சக்திகளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. மாநில அரசியல் என்பது அதிகம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதிக்கத்திற்குள் வருவது இயல்பாகிறது. அப்போது மக்கள் நல அரசியல் முக்கியத்துவம் பெற்று, முதலீட்டிய அரசியல் பலவீனமடைகிறது. எனவே இந்தியாவை இந்து அடையாள பாசிசத்தின்கீழ் ஒருங்கிணைப்பதன் மூலம்தான் இது போன்ற மக்கள் அதிகார அரசியலை ஒடுக்கி சுலபமாக முதலீட்டிய நலன்களைப் பாதுகாக்க முடியும். அதன் பொருட்டே நரேந்திர மோடியை ஒரு கார்ப்பரேட் பிராண்டாகவே முன்வைத்து செயல்பட்டனர். ஆனால் மாநிலங்களில் வேர்கொண்டுவிட்ட இந்திய மக்களாட்சி ஆற்றல் அவ்வளவு சுலபமாக இதற்கு பலியாவதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் புதிய தலைமையின்கீழ் தன்னை மக்கள் நலக் கட்சியாக, பழைய சோஷலிஸ வேர்களைக் கொண்ட கட்சியாகப் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறது. யுனிவர்ஸல் பேசிக் இன்கம் (அனைவருக்குமான குறைந்தபட்ச வருவாய் திட்டம்) என்ற புரட்சிகர திட்டத்தை அது அறிவிக்கிறது. ஏற்கனவே நூறு நாள் வேலைத்திட்டத்தின் மூலம் இதற்கான அச்சாரம் போட்டது காங்கிரஸ். மேலும் அந்தக் கட்சி மாநில அரசை மாநிலக் கட்சிகளின் வசம் விட்டு மத்தியில் கூட்டாட்சிக்கு தலைமை தாங்கவும் முன்வரும் சாத்தியமும் இருக்கிறது. ஏனெனில் அடிப்படையில் காங்கிரஸில் ஒரு பகுதியினராவது எல்லா காலங்களிலும் பன்மையைத் தங்கள் பலமாக்கிக்கொள்ளவே விரும்பி வந்திருக்கிறார்கள். இந்தியை மட்டுமே இந்திய ஆட்சி மொழியாகக் கொள்ள வேண்டும் என்ற நாசகாரத் திட்டத்தை காங்கிரஸ் முற்போக்காளர்கள் ஏற்க மறுத்திருக்கிறார்கள். மத அடையாளப் பன்மையையும் வலியுறுத்தியுள்ளார்கள்.

இது தவிர எல்லா கட்சிகளிலுமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பங்கேற்பு அதிகரித்திருக்கிறது. ஜாதிகள் கலாசார அடிப்படைகளை மறந்து அரசியல் தொகுதிகளாக மாறுவதில் ஜாதியின் பொருளும், சமூகப் பயன்பாடும் மாறுமோ என்ற கேள்வியும் எழுகிறது. உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இணைந்துள்ளார்கள். குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானியும், ஹர்திக் படேலும் ராகுலுடன் கரம் கோர்த்தார்கள். இப்போது ஹர்திக் படேல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

ஜாதிகள் அரசியல் தொகுதிகளாக மாறுவது, மாநில அரசியல் வலுவடைவது இரண்டையுமே இந்து அடையாளத்தின் மூலம் விழுங்கி ஜீரணிக்க முயல்கிறது ஆர்.எஸ்.எஸ். பாசிசம். இதுவே இந்த தேர்தலின் முக்கிய வரலாற்று முரணாக விளங்குகிறது. எனவே முன்னெப்போதையும் விட இந்த தேர்தல் வரலாற்றைத் தீர்மானிக்க வல்லதாக இருக்கிறது என்பதே ஆழமாக அரசியலை அணுகி அலசும்போது நமக்குப் புலனாகக் கூடியது. பாரதீய ஜனதாவின் தோல்வி என்பது இந்தியாவில் அதிகாரப் பரவலும், முற்போக்கு அரசியலும் சாத்தியமாவதற்கு இன்றியமையாதது எனலாம்.

இந்திய அரசியல் வரலாற்றின் எதிர்கால சவால்கள்

இந்திய அரசியல் வரலாறு விரைவில் முற்றிலும் ஒரு புதிய தளத்திற்கு நகர வேண்டிய தேவை ஏற்படப்போகிறது. இன்று மேலோட்டமாக எல்லோருடைய அரசியலாகவும் உள்ள வளர்ச்சி அரசியல், மக்கள் நலன், அதிகாரப் பகிர்வு கடந்து புதியதொரு பரிமாணம் உருவாகிக்கொண்டுள்ளது. அது சூழலியல் சீர்குலைவு என்பதுதான். இப்போதைக்கு அரசியல் கட்சிகள் எதுவும் இதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதாக இல்லை.

இன்றைய நிலையில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஒரு ரூபாய் செலவிட வேண்டுமென்றால், மத்திய தர மக்களுக்கு இரண்டு ரூபாயும், முதலீட்டிய குவியங்களுக்கு ஐந்து ரூபாயும், அரசிற்கு மூன்று ரூபாயும் தேவைப்படுகிறது. மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள எளிய மக்களுக்கு சிறிய அளவில் வாழ்க்கைத் தரத்தை வழங்க, மிகப்பெரிய அளவில் உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. இது இயற்கைச் சூழலின் மீது மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகிறது.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மணல் கொள்ளை தலைவிரித்து ஆடுகிறது; அதனால் நிலத்தடி நீரின் அளவு கடுமையாகக் குறைந்து வருகிறது. இது ஒரு சிறிய உதாரணம்தான். இந்திய அளவிலும், உலக அளவிலும் கூட இன்றுள்ள பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து காப்பாற்ற முடியாது. பெருகும் மக்கள் தொகையும், அதிகரிக்கும் நுகர்வும், அழிந்து வரும் இயற்கை வாழ்வாதாரங்களும் மெள்ள மெள்ள மானுடத்தை அழிவுப்பாதையில் செலுத்தி வருகின்றன.
இதனால் பெருமளவு முதலில் பாதிக்கப்படப்போவது எளிய மக்கள்தான். குடிநீர் பஞ்சம் வந்தால் பணக்காரர்களோ, உயர் மத்தியதர வர்க்கமோ பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்களிடம் அதை சமாளிக்கும் அளவு உபரி சொத்து இருக்கிறது. மத்திய தர வர்க்கம் சிறிது பாதிக்கப்பட்டாலும் பிழைத்துக்கொள்வார்கள். எளிய உழைக்கும் மக்கள்தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பஞ்சம் கூட தலை தூக்கும் என்றுதான் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள். கங்கையே வறண்டு போனால் என்ன ஆகும் என்று கேட்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பரிசீலித்து மக்களைக் காக்க இன்றே யோசிக்குமளவு அரசியல் கட்சிகள் எதுவுமில்லை. இப்போதைக்கு எல்லோரும் பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் என்பது போன்ற கனவுகளையே துரத்துகிறார்கள். இங்கிலாந்தின் நேரடி ஆட்சியில் 90 ஆண்டுகள், அதன்பின் சுதந்திர நாடாக 67 ஆண்டுகள் ஆகிய ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி நுகர்வுப் பின்னலை உருவாக்கிவிட்டோம். இதன் உள்ளார்ந்த ஆபத்தை உணர்ந்தவராக காந்தி இருந்தார். இங்கிலாந்து போன்ற சிறிய நாடு தொழில் உற்பத்தி மயமானதற்கே உலகம் முழுவதும் தாக்கம் இருந்தால், இந்தியா, சீனா போன்ற பிரம்மாண்டமான நாடுகள் தொழில் உற்பத்தி மயமானால், வெட்டுக்கிளிகள் தாக்கிய வயலாக உலகம் அழிந்துபடும் என்றார்.

மீண்டும் அந்த காந்திய விழிப்புணர்வு சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் மக்களாட்சியும், அதிகாரப் பரவலும் நீடித்தால் ஆபத்துக் காலத்தில் ஏழைகள் கைவிடப்படாமல் காப்பாற்றப்பட வாய்ப்பு இருக்கலாம். ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களில் அரசு நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது அதையும் உத்தரவாதமாக நம்பமுடியவில்லை. அதே சமயம் மக்களாட்சியையும், தேர்தலையும் விட்டால் ஓரளவாவது வரலாற்றைக் கையகப்படுத்த நமக்கு வேறு வழிகளும் இல்லை. எனவே குறைந்தபட்சம் பாசிச பிற்போக்குவாதத்திற்கு எதிராக வாக்களித்து எதிர்கால சாத்தியங்களைச் சந்திப்பதுதான் ஒரே தேர்வு.