அறிமுகக் கட்டுரையும் கவிதைகள் மொழியாக்கமும்

2016ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மியான்மரில் ரோஹிங்கியா துன்புறுத்தல் நிகழ்ந்தது நாட்டின் வடமேற்கு பிராந்தியமான ராகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா மக்கள் மீது மியான்மரின் ஆயுதப்படைகளும் காவல்துறையும் பெரும் ஒடுக்குமுறையைத் தொடங்கின. பல்வேறு ஐக்கிய நாடுகள் அமைப்புகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், மனித உரிமைகள் குழுக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அரசாங்கங்களால், பர்மிய இராணுவம் மீது, இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை வைத்தது.  மேலும், சட்டவிரோத கொலைகள் உட்பட பரந்த அளவிலான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்து, கும்பல் கற்பழிப்பு, ரோஹிங்கியா கிராமங்கள், வணிக இடங்களில், பள்ளிகளில் தீ விபத்து மற்றும் சிசுக்கொலைகள் என்று பல்வேறு விஷயங்களை முன்வைத்தாலும், பர்மிய அரசாங்கம் ‘மிகைப்படுத்தல்’ என்று நிராகரிக்கிறது.  ரோஹிங்கியா இனப்படுகொலை என்பது இரண்டு கட்டங்களைக் கொண்ட முஸ்லிம் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான மியான்மர் அரசாங்கத்தின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களாகும். இது முதல் கட்டம் 2016 அக்டோபரில் தொடங்கி 2017 ஜனவரியில் முடிவடைந்தது மற்றும் இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 2017 இல் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. இந்த நெருக்கடி ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்களை அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்ல நிர்பந்தித்துள்ளது அவர்களில் பெரும்பாலோர் இந்தியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளுக்குச் சென்று மற்றவர்களுடன் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வுகளை வியட்நாம் போருக்குப் பின்னர் ஆசியாவில் நடந்த மிகப்பெரிய மனித வெளியேற்றம் என்று பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.

இவர்களில் பெரும்பாலோர் பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் அகதிகளாக உள்ளனர். இவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் / பிரெஞ்சு கவிஞர் ஷெஸர்  டோஜா-பிரிட்டிஷ் கவிஞரான ஜேம்ஸ் பைரன் (James Byrne) இருவரும் ஏப்ரல் 2019இல், ரோஹிங்கியா அகதிகளுடன் பணியாற்ற பங்களாதேஷ் சென்றனர். அங்கு அகதி முகாம்களில் முதல் படைப்பு எழுத்துப் பட்டறைகளை அமைப்பதே அவர்களின் நோக்கம். அங்கு நிகழ்ந்த கவிதை பயிற்சிப் பட்டறை நிகழ்வில், இவர்கள் இருவரும் இணைந்து தொகுக்கப்பட்ட, “நான் ஒரு ரோஹிங்கியா” என்னும் நூலிலிருந்து இந்த 2 கவிதைகளும் இங்கே மொழியாக்கம் பெறுகின்றன.

ரோஹிங்கியா கவிதைகளின் சக்திவாய்ந்த புதிய குரல்களைக் கொண்டாடவும் ஆவணப்படுத்தவும் முயலுகின்ற இந்த முக்கியமான புத்தகம், உயிர் பிழைத்தவர்களிடமிருந்து வெளிவந்த கவிதைக் குரல்.  இந்தத் தொகுப்பு நூல், ரோஹிங்கியா அகதிகளின் நிலை குறித்து ஒரு குரலாக மட்டுமல்லாமல், எதிர்காலம் சமநிலையில் இருக்கும் ஒரு சமூகத்தின் துணிச்சலான படியாகவும், இந்த சமூகத்தில் புதிய எழுத்தாளர்களுக்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்த புத்தகம் முக்கியமானது.

“உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கவிதை” என்னும் தனது கட்டுரையில், ஜேம்ஸ் பைரன் இவ்வாறு கூறுகிறார்:

சுமார் ஒரு மில்லியன் ரோஹிங்கியா அகதிகள் தற்போது காக்ஸ் பஜார் அருகிலுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர், அவர்கள் பரிதாபமாகப் பிழைக்கின்றனர், நிலையற்றவர்கள் மற்றும் அதிர்ச்சிக்குள்ளானவர்கள். முகாம்கள் மிகப்பெரியவையாக ஒரு சிறிய நகரத்தின் அளவு இருக்கின்றன.  இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு , 1797 மற்றும் 1799க்கு இடையில் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த கேப்டன் ஹிராம் காக்ஸ் தனது பெயரால் ஆயிரக்கணக்கான “புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு” “கழிவு நிலங்களை” ஒதுக்கித் தந்திருந்த நிகழ்வு ஞாபகம் வருகிறது.

முகாம்கள் மிகவும் நெரிசலானவை பலருக்கு உள்ளே செல்லக்கூட முடியாது. இதை எழுதும் நேரத்தில், மியான்மருக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் ஒரு கொடிய நிலத்தில் அல்லது இனப்படுகொலை மண்டலத்தில் சிக்கி இருநூறாயிரம் ரோஹிங்கியாக்கள் அடிக்கடி கொல்லப்படுகிறார்கள் அல்லது கைது செய்யப்படுகிறார்கள்.  காக்ஸ், முதலில் முகாம்களைத் தொடங்கும்போது, ராகைனிலிருந்து வருபவர்களுக்கு ஒரு அடைக்கல இடம் ஒன்றை உருவாக்க விரும்புவதாகக் கூறியது,  இன்று நீங்கள் முகாம்களைப் பார்வையிட்டால், ஐ.என்.ஜி.ஓக்கள் (சர்வதேச அரசுசாரா நிறுவனங்கள்) இருந்தபோதிலும், தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மக்களை நீங்கள் சந்திக்கிறீர்கள், தூசி வறண்ட, மண் அரிக்கும் நிலத்தில் வாழ்கிறவர்களாக, அவர்களின் குடிசைகள் ஆபத்தானவையாக, கொதிக்கும் வெயிலில் காற்று இல்லாதவையாக இருக்கின்றன.   இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில்,  ஷெஸர்  டோஜாவும் நானும் இருபது அகதிகளுடன் பணிபுரிய காக்ஸுக்கு வந்தோம், முகாம்களின்  இரண்டு நாள் அமர்வுகளில், கற்பனை மற்றும் உருவகத்தைச் சுற்றிலும் கருப்பொருளாக இருக்க முடிவு செய்தோம். எழுத்துப் பயிற்சிகள் கவிதை வடிவங்கள் மற்றும் ஒலியின் முக்கியத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது. எஸ்ரா பவுண்ட்,  டி.எஸ். எலியட், தாமஸ் டிரான்ஸ்ட்ரோமர்,  மினா லோய், எமிலி டிக்கின்சன் கவிதைகளைப் பற்றி பட்டறையில் விவாதித்தோம். மேலும், மியான்மரில் பர்மிய மொழியில் எழுதும் கவிஞர்களின் கவிதைவடிவங்களை முன்வைத்தும் விவாதித்தோம்.

பட்டறைகளிலிருந்து நாங்கள் பெற்ற கவிதைகள் இந்த நூற்றாண்டில் செய்யப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றிய கவிதைகளை அளித்தன. நான் வேறொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ரோஹிங்கியா கவிதைகள் மிக்க கடுமையான தொனி கொண்டவை.  பட்டறையில் பங்கேற்பாளர்கள் சொல்லமுடியாதவற்றை பேச / எழுத முடிந்த விதம், அவர்களின் எழுத்தில் ஒரு சுதந்திர விழிப்புணர்வை வளர்க்க முயற்சித்தவிதம், பங்கேற்பாளர்கள் கவிதை அமர்வுகளின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் வரலாற்றை உருவாக்கும் தன்மையை டோஜாவும் நானும் விரைவாக உணர்ந்தோம், அவர்கள் வரலாற்றைக் குறிக்க விரும்பினர். நிச்சயமாக, ரோஹிங்கியாக்களின் தலைவிதியைப் பற்றி விசித்திரமாக அமைதியாகிவிட்ட ஒரு உலகில், ஒலிக்கும் அவர்களின் உரத்த குரல் இந்தக் கவிதை மையம். பட்டறைகளின் போது, சமூகம் என்ற சொல் நிறைய வந்தது மற்றும் பல கவிதைகள் கூட்டு அனுபவத்தைப் பற்றி பேசுகின்றன. பெரும்பாலும் கவிதையில் ரோஹிங்கியா என்ற வார்த்தையையோ அல்லது படைப்பின் தலைப்பையோ பயன்படுத்துகின்றன. ஒரு கூட்டு சமூகமாக, வேரூன்றிய சமூகமாக இருந்தவர்கள், அமைதியான அணுகுமுறை கொண்ட ரோஹிங்கியாக்களின் சமீபத்திய வரலாற்றின் பரிதாபத்திலிருந்து வெளிவரும் சமூகமாக  உணர்கிறது. காக்ஸ் பஜாரில், சமூகம் தொடர்ந்து இதுபோன்ற அடிப்படை நிலைமைகளைத் தக்கவைத்துக்கொள்வதால், அமைதியான சமூக வடிவிலான எதிர்ப்புகள் தங்களுக்குள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன என்று கூறலாம்.

காக்ஸில் பட்டறை துவங்கும் நாளுக்கு முன்பு, டோஜாவும் நானும் முகாம்களில் நடந்து சென்றோம், பள்ளி ஆசிரியர்களிடம் பேசியபோது, நான்கு மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வீடுகள் எரியும் படங்களை, ஹெலிகாப்டர்கள் தோட்டாக்களை ஷெல் செய்யும் படங்களை வரைந்து கொண்டிருப்பதாக எங்களிடம் சொன்னார்கள். மனதுக்கு மிகவும் துயரமாக இருந்தது என்கிறார் பைரன்.

“அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசாங்க அமைப்புகளும் எவ்வாறு சுகாதார மற்றும் அவசரகால நிவாரணங்களில் கவனம் செலுத்துகின்றன என்பதை நான் கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் முக்கியமான ஒன்று காணவில்லை. அது எழுதப்பட்ட இலக்கியம், கவிதை மற்றும் பாடல்களின் காப்பகங்கள் எங்கே? ” என்று கேள்விகளை முன்வைக்கும் கவிஞர் ஷெஸர் டோஜா, செப்டம்பர் 2017இல் ரோஹிங்கியா அகதி முகாமுக்கு லாப நோக்கற்ற நட்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் வருகை தந்து, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திட்டம் வந்தது.

“பட்டறையில் சுமார் 20 பங்கேற்பாளர்கள் இருந்ததாக நான் நினைக்கிறேன். கலாச்சார விதிமுறைகள் காரணமாக எந்தவொரு பெண் கவிஞர்களும் பட்டறையில் இல்லை” ”என்கிறார் டோஜா. சில பங்கேற்பாளர்கள் இதற்கு முன்பு கவிதை எழுதியதில்லை.

படைப்புகள் வெளியிடப்பட்ட பெரும்பாலான கவிஞர்கள் புனைபெயர்களைப் பயன்படுத்தினர் பெரும்பாலும் “ரோ” என்ற பெயரில் தொடங்கி. இது அவர்களின் சொந்த பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அவசியமாக இருந்தது என்று டோஜா விளக்குகிறார் குறிப்பாக மியான்மர் அரசுக்கும் அகதிகள் பிரதிநிதிகளுக்கும் இடையே அகதிகளை திருப்பி அனுப்ப பேச்சுவார்த்தை நடந்து வருகிற சூழலில் இப்படித்தான் இயங்க முடியும் என்கிறார் டோஜா.

2017ஆம் ஆண்டில் நான் முகாம்களுக்கு முதன்முதலில் சென்றதை நினைவில் கொள்கிறேன். கப்பலின் விளிம்பில், மியான்மரின் எல்லையில் – ஒரு கிராமத்தை நிர்மூலமாக்கிய எரிந்த எச்சங்கள் என்னுள் நிழலாடின. இனப்படுகொலை ஒரு மக்களை அழிக்க மட்டுமல்லாமல், கலாச்சார அழிப்பையும் வகுப்புவாதத்தையும் தீவிரமாக்க முயல்கிறது. என் கேள்வி :  ஒரு கவிஞராக நான் என்ன செய்ய முடியும்? இவை அனைத்திலும் கவிதைக்கு என்ன அல்லது எங்கே இடம்?

நாங்கள் இருவரும் ரோஹிங்கியா கவிதை மற்றும் நாட்டுப்புற பாடல்களின் முதல் தொகுப்பை உருவாக்கியுள்ளோம். இது பாதிக்கப்பட்டவர்களின் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையில். மேலும், கவிதை போருக்கு எதிரானது மற்றும் அமைதிக்கான செயல்பாட்டின் ஒரு வழியாகக் கண்டுபிடிப்பது. இது வாழ்க்கையை மாற்றுவதற்கும், உண்மையில் உலகை எவ்வாறு மாற்றக்கூடும் என்பதைக் காண்பிப்பதற்கும் உதவும் ஒரு கலை வடிவம்.  21 ஆம் நூற்றாண்டில் வாழும் சாட்சிகளின் கவிதைகளை மறுவரையறை செய்வதற்கு ரோஹிங்கியா கவிஞர்கள் ஆர்வத்துடன் பணியாற்றினர். 

அவர்களுடன் பட்டறையில் பணியாற்றியபோது, அடுத்த தலைமுறை ரோஹிங்கியா கவிஞர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கண்டோம். வரலாற்றைக் குறிக்கத் தயாராக இருக்கும் அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள எதிர்மறையான பார்வைகளை மறுப்பதற்காக தங்களைத் தாங்களே உருவகமாக எடுத்துக் கொண்டனர். ஒரு சிலரே  ஏற்கனவே  கவிதை எழுதியிருந்தனர். மற்றவர்கள் முதன்முறையாக எங்களுடன் கவிதையில் இறங்கினர்- அளவிற்கு அப்பாற்பட்ட வலிமையைக் கண்டறிந்து, அவர்களின் கதைகளைப் பரந்த உலகிற்கு கேட்கும்படி கட்டாயப்படுத்தினர். ஒரு புதிய கவிதை உருவானது.- ரோஹிங்கியா கவிதைகள்  இன்று உலக இலக்கியம் வரை ஒலிக்கின்றன. பட்டறையில் பலவேறு உலக கவிஞர்களின் கவிதைகள் விவாதத்திற்கு வைக்கப்பட்டன. ஜேம்ஸ், முதல் நாள் முடிவில், வாலஸ் ஸ்டீவன்ஸின் ‘ஒரு கருத்த பறவையைப் பார்க்க 13 வழிகளைப் பற்றி’ பேசினார். ஆர்வத்துடன் கைகளை உயர்த்திய ஒரு கவிஞர், அதற்கு பதிலாக “பாஸ்போர்ட்டைப் பார்ப்பதற்கான 10 வழிகளை” எழுத முடியுமா என்று கேட்டார். நிச்சயமாக ஒரு நாள் சுதந்திரமாக இருக்க விரும்புவதைப் போல அல்லது உண்மையில் என்ன உணரக்கூடும் என்பதைக் கற்பனை செய்வதன் அர்த்தமும் உள்நோக்கமும் கொண்டது இந்தத் தீப்பொறி.

இந்த ரோஹிங்கியா கவிஞர்கள், மீதமுள்ள மனிதகுலத்தின் வெளிச்சத்திற்கு ஒரு கண்ணாடியை வைத்திருக்கிறார்கள். அவர்களின் துன்பக் கவிதைகள் மற்றும் காக்ஸ் பஜாரின் இனப்படுகொலை மண்டலம் மற்றும் அகதி முகாம்களின் எழுச்சிக்குரல்கள். மிகவும் ஒடுக்கப்பட்டவர்களின் அவலத்தின் வார்த்தைக்கான செய்தி அறிக்கைகளை விட அவர்களின் பாடல்கள் மிகவும் துல்லியமானவை. உலகம் அமைதியாக இருக்கக்கூடாது, இந்தக் கவிதைகளை உலகம் கேட்கட்டும் என்கிறார் ஷெஸர் டோஜா

 

ரோஹிங்கியா கவிதைகள்

ஏதோ ஒன்றுக்கு நான் பயப்படுவது குறித்து.

                                                         – ஸகி ஓவைஸ்

 

வெறுப்பு மிக்க மேகங்களால் மூடப்பட்ட

வானத்தின்ஒரு பசி கொண்ட  நட்சத்திரம் நான்.

 

பகல்நேரத்தில் நிழலாடும்

*ஒரு தங்க மீன் தாவரம் நான்.

 

குருட்டுச் சுவரின் எல்லையில் முணுமுணுக்கும்

ஒரு சமையலறை ஈ நான்.

 

வேலியின் குறுகிய எல்லைக்குள் ஒடுங்கும்

ஒரு தாய்க்கோழியின் சிறகுக்கு கீழ் ஒரு குஞ்சு நான்.

 

மனிதாபிமானமற்ற சிறைக் கூண்டில் அடைக்கப்பட்ட

ரங்கோன் வீதியின் ஒரு புறா நான்.

 

சுதந்திரக் காற்றைத் தொலைத்த

*மயூ நதியில் பாயும் நீர் நான்.

 

அடிப்படை உரிமைகள் மறுத்த

பிரபஞ்சத்தில்ஒரு மனிதன் நான்.

 

இனம்புரியாத ஒன்று குறித்து அஞ்சும்

யாரோ ஒருவன் நான்.

குறிப்புகள் :

*தங்கமீன் போன்ற தோற்றத்துடன் கூடிய பூக்கள் மலரும் ஒரு வகைச் செடி. இது தென்கிழக்கு அமெரிக்காவிற்கும் பர்மா மற்றும் இந்தியாவிற்கும் சொந்தமானது,  அதிக வெப்பத்தைத் தாங்காத  வீட்டுத் தாவரங்களான இவை, அறையை ஈரப்பதத்தின் கதகதப்புடன் வைத்திருக்கும் தன்மை கொண்டவை.

*மியான்மரின் அடையாளச் சின்னங்களில் ஒன்று  இந்த மயூ நதி.

உடைந்த கண்ணாடி

                                           – ரோ மெஹ்ரூஸ்

 

நான் பேசும் கண்ணாடியை எழுப்புகிறேன்.

பயம்  உறைந்த துப்பாக்கி குண்டின்

அவலத்தை நோக்கி

எனக்கு தைரியம் இல்லை

கண்ணாடியைப் பார்க்க  

திரும்பிப் பார்க்கும் கண்ணாடியை . 

குண்டு என் தலையை நோக்கிப் பறந்தது.

நான் கீழே தவ்வியவாறு ஓடினேன்

குண்டு கண்ணாடியை நொறுக்குகிறது,

சில்லுகள் தரையெங்கும் சிதறுகின்றன.

இன்று, நான் கண்ணாடியைப் பார்க்கிறேன்

காரின் சாளரத்தில்,

முடிதிருத்தும் கடையில்.