(நோபல் விருதாளர் பீட்டர் ஹேண்ட்கே அகமும் புறமும்)

(அறிமுகக் குறிப்புகளும், கவிதை மொழியாக்கமும்:-கௌதம சித்தார்த்தன்)

 

(தமிழ் இலக்கிய செயல்பாடுகளிலிருந்து முற்றாக விலகியிருந்த என்னிடம் தொலைபேசியில் பேசி, “ஒதுங்காதே, காணாமல் போவாய்..” என்கிற தேவதேவனின் கவிதையை எடுத்துச் சொல்லி, மிகவும் ஊக்கப்படுத்தி, மீண்டும் பழைய உற்சாகத்துடன் என்னை எழுத வைத்த கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

என் எழுத்துக்கள் தற்பொழுது சர்வதேச மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, பல்கேரியன், சீனம், போர்த்துகீஸ் ஆகிய மொழிகளில் மொழியாக்கமாகி வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி ஆகிய மொழிகளில் “பத்தி” எழுதிக் கொண்டிருக்கிறேன். என் பல்கேரிய நண்பர் வஸ்ஸிஸ்லாவா இந்தக் கட்டுரைக்கான விஷயங்களை அனுப்பி வைத்தார். அவருக்கு என் நன்றி!)

நோபல் பரிசுக் குழு தேர்வு உறுப்பினர் ஒருவர்மீது தொடுத்த பாலியல் புகார் காரணமாக கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. இரண்டு வருடங்களுக்கான விருதுகளும் இந்த ஆண்டு வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததால், இலக்கிய ஆர்வலர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு கூடியிருந்தது.

ஒவ்வொரு வருடமும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும் ஹாருகி முரகாமி, கூகி வா தியாங்கோ, அடோனிஸ், மிலன் குந்தேரா, மார்கரெட் அட்வுட், அன்னே கார்ஸன் ஆகியோருடன் இந்த ஆண்டு ரஸ்யாவின் லுட்மிலா உலிட்ஸ்கயா, அல்பேனியாவின் இஸ்மாயில் கதாரே, சீனத்தின் கேன் ச்சூ, ஹங்கேரியின் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை ஆகியோரும் முன்னணியில் இடம் பிடித்திருந்தனர். ஆனால், பெரிதும் ஊடகங்களால் கவனப்படுத்தாத, ஓல்கா டோகர்ஸுக் என்னும் போலந்து நாவலாசிரியருக்கு 2018ஆம் ஆண்டுக்கான விருதும், ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கேவுக்கு 2019ஆம் ஆண்டுக்கான விருதும் வழங்கப்பட்டிருப்பது பெரிதும் மகிழ்ச்சியையும் தேடல்தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓல்கா டோகர்ஸுக் என்னும் போலந்து பெண் எழுத்தாளர் கடந்த ஆண்டு மேன் புக்கர் சர்வதேச விருது பெற்றவர். (மார்கரெட் அட்வுட் தற்பொழுது இந்த 2019ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை பெர்னார்டின் எவரிஸ்டோ என்னும் பெண் எழுத்தாளருடன் பகிர்ந்து கொண்டார்.)

ஒவ்வொரு வருடமும், நோபல் விருது அறிவிக்கப்பட்ட உடன், பெரும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பும். இந்த வருடம், அந்த சர்ச்சையில் மாட்டிக் கொண்டவர், ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கே. இவரைச் சுற்றிலும் சதா பல்வேறு சர்ச்சைகள் இருந்துகொண்டே இருப்பது இவரது இலக்கிய வாழ்வின் சிறப்பு.

“நான் யார் என்று என்னால் சொல்ல முடியவில்லை, என்னைப் பற்றிய தொலைதூர எண்ணம் என்னிடம் இல்லை, முன்னோடிகள் இல்லாதவன், வரலாறு இல்லாதவன், ஒரு நாடு இல்லாதவன், மேலும் அதை வலியுறுத்துபவன்” என்று சொல்லும் பீட்டர் ஹேண்ட்கே (ஜெர்மன் – 1942) ஆஸ்திரிய நாவலாசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். நாவல், கவிதைத்தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாடகங்கள் என 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார், புகழ்பெற்ற ஜெர்மன் திரைப்பட இயக்குனர் விம் வெண்டர்ஸ் இயக்கி, கேன்ஸ் உட்பட பல உயரிய விருதுகளை அள்ளிய படமான கீவீஸீரீs ஷீயீ ஞிமீsவீக்ஷீமீ இவரது திரைக்கதையாகும். அதில் இவரது மனைவி சோஃபி செமின் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஹேண்ட்கே முதன்முதலில் சர்ச்சையை ஏற்படுத்தியது, 1966 ஆம் ஆண்டில் தனது 24 ஆம் வயதில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் குழு – 47 என்னும் ணீஸ்ணீஸீt-ரீணீக்ஷீபீமீ கலைஞர்களுடன் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அதில் அவர் ஜெர்மன் நவீன இலக்கியத்தின் போக்கை “சொல்நேர்த்தியற்ற மலட்டுத்தன்மை” என்று காரசாரமாகத் தாக்கினார். சற்றும் நேர்மையற்ற முறையில், தன்னைக் கவனிப்பதற்காக எதிர்மறையாகப்பேசும் தரமற்றவர் என்று விமர்சகர்கள் வாதித்தனர். அதன் பின்னர், அவர் சர்வதேச கவனம் பெற்றார்.

அதேபோல் கடந்த ஆண்டு நடந்த நோபல் விருது கமிட்டியின் பாலியல் சர்ச்சைகளைக் கண்டித்து, ” இனிமேல், நோபல் விருது அமைப்பைக் கலைத்து விடுவது நல்லது” என்று கூறினார். இந்த ஆண்டு அவருக்கு நோபல் விருது கிடைத்திருப்பது எதிர்மறையின் முரண்!

பீட்டர் ஹென்ட்கே நோபல் பரிசு பெற்றதற்கான எதிர்வினைகள், அவரது இலக்கியத் தகுதி பற்றிக் குறை சொல்பவை அல்ல. மாறாக, அவரது சமூகம் சார்ந்த அறவுணர்வு குறித்தவை.

1996 ஆம் ஆண்டில், அவர் எழுதிய கட்டுரை நூல் கி யிஷீuக்ஷீஸீமீஹ் tஷீ tலீமீ ஸிவீஸ்மீக்ஷீs: யிustவீநீமீ யீஷீக்ஷீ ஷிமீக்ஷீதீவீணீ பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அந்தநூலில், 1990களில் நடந்த யுகோஸ்லாவியப் போரின்போது நடந்த விளைவுகளை எழுதியிருந்தார். அதில் செர்பியாவை பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரித்து அவர்களுக்கு ஆதரவு அளித்திருந்தார். செர்பிய சார்புடையதாகக் கருதப்படும் முன்னாள் யுகோஸ்லாவியாவில் நடந்த இன மோதல்கள் குறித்து எழுதிய அக்கட்டுரை நூல் இப்பொழுது மீண்டும், சர்ச்சையைத் தூண்டி வருகிறது. ஆனால், அவர் தேசியவாத பாகுபாட்டை மறுக்கிறார். அதற்குப் பதிலாக, தலைமுறை தலைமுறையாக நூற்றாண்டுகளாக பதுங்கியிருந்த இன வெறுப்பின் சிக்கல்களை அவிழ்க்கவும், பால்கனில் சமாதானம் சாத்தியமா என்பதைக் கண்டறியவும் தான் செயல்படுவதாகத் தெரிவிக்கிறார் (செர்பியா, போஸ்னியா, ஸ்லோவேனியா, குரோஸியா.. போன்ற பல சிறு சிறு நாடுகள் அடங்கிய பிரதேசம் பால்கன் என்று அழைக்கப்படுகிறது).

இந்தப் போர் குறித்து சுருக்கமாக :

1991 முதல் 2001 வரை நடந்த புகழ்பெற்ற யுகோஸ்லாவியப் போர்கள் என்பவை, அந்த பிராந்தியத்திற்குள் அடங்கியிருக்கும் செர்பியன், போஸ்னியன், கொசோவன், ஸ்லோவேனியன், குரோஸியன். போன்ற பல்வேறு இன குழுக்களின் மோதல்கள், சுதந்திரப் போர்கள் மற்றும் கிளர்ச்சிகள் ஆகிய அம்சங்கள் கொண்டவை. இது யூகோஸ்லாவிய அரசின் உடைவுக்கு வழிவகுத்தது . பெரும்பாலான போர்கள் சமாதான உடன்படிக்கைகள் மூலம் முடிவடைந்தன, ஆரம்பத்தில் யுகோஸ்லாவிய மக்கள் ராணுவம் (ஜே.என்.ஏ.) பிரிவினைவாத அரசாங்கங்களை நசுக்குவதன் மூலம் முழு யுகோஸ்லாவியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முயன்றது, ஆனால் அது கட்டுக்கடங்காத சூழலில் செர்பியா ஸ்லோபோடன் மிலோசெவிச் அரசின் ஆளுமையின்கீழ் வந்தது. அதன் பிறகு அது செர்பிய ராணுவமாக மாறியது. அதன் பின், அனைத்து இனக்குழுக்களின் போராட்டங்களையும் மிக மோசமானமுறையில் கடுமையாக ஒடுக்கியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிக மோசமான போர் என்று விவரிக்கப்படும் இந்தப் போர்கள் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட பல போர்க்குற்றங்களால் குறிக்கப்பட்டன. இடைக்கால நீதிக்கான சர்வதேச மையம், இந்தப் போர்களில் 140,000 பேர் இறந்ததாக மதிப்பிடுகிறது. ஐ.நா தீர்ப்பாயத்தால் ஸ்லோபோடன் மிலோசெவிச் போர்க்குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இவரை ஆதரித்தும், யுகோஸ்லாவியப் போரில் செர்பியர்களை மிருகத்தனமான ஆக்கிரமிப்பாளர்களாக மேற்கத்திய செய்தி ஊடகங்கள் நியாயமற்ற முறையில் சித்தரித்ததாகவும் ஹேண்ட்கே வாதிட்டார். மேலும், இனமோதல்களைக் கட்டுக்குள் கொண்டுவர, நேட்டோவால் செர்பியா மீது தொடுக்கப்பட்ட குண்டுவெடிப்பை ஒரு போர்க்குற்றம் என்று ஹேண்ட்கே விவரித்தார், இதனால், செர்பிய போர்க்குற்றங்களைக் குறைக்க முயன்றதாக விமர்சகர்களால் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

அதுமட்டுமல்லாது, மேலும், 2006இல் ஸ்லோபோடன் மிலோசெவிச்சின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றினார் ஹேண்ட்கே. அந்த ஆண்டு ஹென்ரிச் ஹெய்ன் விருதுக்கு (50,000 யூரோ) ஹேண்ட்கே பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால், இந்த நிகழ்வின் காரணமாக, எழுந்த கடுமையான விமர்சனங்களால் ஹேண்ட்கே பரிசை ஏற்கவில்லை.

அதேபோல, 2014 ஆம் ஆண்டில், ஓஸ்லோவில் ஹேண்ட்கேவுக்கு இப்சன் பரிசு வழங்கப்பட்டது, ஆனால் இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும், நடுவர் குழுவினர் ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட, ஹேண்ட்கே மீண்டும் பரிசுத் தொகையை ஏற்கவில்லை.

“ஒரு கலைஞன் ஒரு முன்மாதிரியான மனிதர் மட்டுமே, அவரது வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பதை நீங்கள் காண முடிந்தால்” என்று பீட்டர் ஹேண்ட்கே ஒருமுறை கூறினார். மேலும், ஒரு கலைஞன் பல்வேறு தருணங்களில் வலிமிகுந்த பொழுதுகளைக் கடந்து செல்லவேண்டும் என்றும் கூறுகிறார்.

குழந்தைப் பருவப் பாடல்

குழந்தை குழந்தையாக இருந்தபோது

கைகளை ஆட்டிக்கொண்டே நடந்தது,

ஓடை ஒரு நதியாக இருக்க விரும்பியது,

நதி ஒரு நீரோட்டமாக இருக்கவும்,

இந்தக் குட்டை கடலாகவும்.

 

குழந்தை குழந்தையாக இருந்தபோது,

அது தான் ஒரு குழந்தை என்று அறியவில்லை

எல்லாம் ஆத்மார்த்தமானதாக இருந்தது,

எல்லா ஆத்மாக்களும் ஒன்று.

 

குழந்தை குழந்தையாக இருந்தபோது,

அதற்கு எதைப்பற்றியும் எந்தக் கருத்தும் இல்லை,

எந்தப் பழக்கமும் இல்லை,

அது பெரும்பாலும் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது,

ஓடியது,

அதன் தலைமுடியில் ஒரு சுழி இருந்தது,

மற்றும் புகைப்படம் எடுக்கும்போது எந்த முகங்களையும் உருவாக்கவில்லை.

 

குழந்தை குழந்தையாக இருந்தபோது,

இந்தக் கேள்விகளுக்கான நேரம் இது:

நான் ஏன் நான், ஏன் நீ இல்லை?

நான் ஏன் இங்கே இருக்கிறேன், ஏன் அங்கு இல்லை?

நேரம் எப்போது தொடங்கியது, இடம் எங்கே முடிகிறது?

சூரியனுக்குக் கீழான வாழ்க்கை என்பது ஒரு கனவு மட்டும்தானா?

நான் பார்ப்பது, கேட்பது மற்றும் வாசனை செய்வது

இந்த உலகில் முன்வைக்கப்படும் ஒரு உலகியல் மாயை மட்டுமா?

தீய செயல்களின் உண்மைகளை மக்களுக்குக் கொடுங்கள்.

தீமை என்பது உண்மையில் இருக்கிறதா?

நான் என்பது இருக்க முடியுமெனில், நான் யார்?

நான் வருவதற்கு முன்பு நான் இல்லை,

அதுவும், ஒரு நாளின் நானெனில், நான் யார்,

இனி நான் யார்?

 

குழந்தை குழந்தையாக இருந்தபோது,

மூக்கு முட்ட கீரை, பட்டாணி, அரிசிப் புட்டு,

மற்றும் வேகவைத்த காலிஃபிளவர் என்று

அனைத்தையும் சாப்பிட்டது, அது வேண்டும் என்பதால் மட்டுமல்ல.

 

குழந்தை குழந்தையாக இருந்தபோது,

அது ஒரு முறை ஒரு விசித்திரமான படுக்கையில் விழித்தது,

இப்போது மீண்டும் மீண்டும் அதேபோல் எழுகிறது.

அதன்பின் எதிர்ப்பட்ட மக்கள் பலரும் அழகாகத் தெரிந்தனர்,

இப்போது ஒரு சிலருக்கே அந்த அதிர்ஷ்டம் வாய்க்கிறது.

 

இது சொர்க்கத்தின் தெளிந்த படத்தைக் காட்சிப்படுத்துகிறது,

அதிகபட்சமாக யூகிக்க முடியும் இப்போது,

வெறுமை நிலையின் உருவாக்கமின்மையை

மற்றும் இன்று சிந்தனைகள் நடுங்குகின்றன.

 

குழந்தை குழந்தையாக இருந்தபோது,

இது உற்சாகத்துடன் விளையாடியது,

இப்போது, அது போலவே எழுச்சியையும் கொண்டுள்ளது,

ஆனால் அது அதன் சூழலைப் பொறுத்தவரை மட்டுமே.

 

குழந்தை குழந்தையாக இருந்தபோது,

சாப்பிடப் போதுமானதாக இருந்தது, ஒரு ஆப்பிள், ரொட்டி,

அது இப்போதும் கூட.

 

குழந்தை குழந்தையாக இருந்தபோது,

பெர்ரிப் பழங்கள் கைகளை நிரப்பியது போல

இப்போதும் செய்கின்றன.

புதிய அக்ரூட் பருப்புகள் நாக்கில் பச்சையான சுவையை ருசித்தது போல,

இப்போதும் செய்கின்றன.

ஒவ்வொரு மலை உச்சியிலும் இருந்தது

இன்னும் மலை உச்சிக்கான ஏக்கம்,

ஒவ்வொரு நகரத்திலும்,

இன்னும் பெரு நகரத்திற்கான ஏக்கம்,

அது இன்னும் அப்படியே,

மரங்களின் மிக உயர்ந்த கிளைகளில் தாவி செர்ரிகளைப் பறித்தது

அந்த எழுச்சி இன்றும் உள்ளது,

அந்நியர்களுக்கு முன்னால் நெளிப்படும் ஒரு கூச்சம்,

இப்போது கூட உள்ளது.

முதல் பனித் தூவலுக்கான காத்திருப்பு,

இப்போதும் அந்த வழியில் காத்திருக்கிறது.

 

குழந்தை குழந்தையாக இருந்தபோது,

ஒரு மரத்திற்கு எதிராக குத்தீட்டி போன்ற ஒரு குச்சியை எறிந்தது,

அது இன்றும் அங்கே ஆடிக் கிலுங்குகிறது.

 – பீட்டர் ஹேண்ட்கே