பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அபிமானிகளுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு என்ன என்றால் ‘நேருவை விமர்சிப்பது’ என்று அவர்களைக் கேட்காமலே சொல்லி விடலாம். அவரின் பொருளாதாரக் கொள்கைகள் முதல், எட்வினா மவுண்ட்பேட்டன் உடன் அவருக்கு இருந்த நட்பு வரை கிண்டல் அடிப்பார்கள். விமர்சனமும் செய்வார்கள்.

அதிலும் குறிப்பாக மூன்று விஷயங்களில் நேரு மேல் இவர்களுக்கு தீராப்பகை இருக்கிறது. காஷ்மீர், சீனா மற்றும் பொருளாதாரம். இவற்றில் நேருவின் ‘தோல்விகள்’ இவர்களை உறுத்திக்கொண்டே இருக்கின்றன. பிரதமர் மோடி முதல்  கடைநிலை தொண்டர் வரை இவை மூன்றையும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

சரி, நேரு இவற்றில் தோற்று விட்டார் என்றே வைத்துக்கொள்வோம். மோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் இந்த மூன்று விஷயங்களில் புரிந்த சாதனைகளைப் பார்ப்போம்.

பொருளாதாரம்

நேரு சோஷலிசத்தைக் கொண்டு வந்து நாட்டைக் கெடுத்து விட்டார், தொண்ணூறுகள் வரை பொருளாதாரத்தில் இந்தியா பின்தங்கி இருந்ததற்கு நேருதான் காரணம் என்று பாஜகவினர் சொல்கிறார்கள். சொல்லப்போனால் இந்த விஷயத்தில் அவர் இறந்து அறுபது ஆண்டுகள் கழிந்தும் அவரைத் திட்டுவதை இவர்கள் நிறுத்தவில்லை. இன்றைக்கும் அது தொடர்கிறது.

நேரு காலத்தில் இந்தியாவின் சராசரி ஜிடிபி வளர்ச்சி 3.5 சதவிகிதமாக இருந்தது. இன்றைக்கு சர்வ சாதாரணமாக நாம் 8, 10 சதவிகிதம் என்று பேசுகிறோம். அதை வைத்துப் பார்த்தால் 3.5 ரொம்பக்குறைவுதான். ஆனால் பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவின் ஜிடிபி பெரும் வீழ்ச்சியில் இருந்தது. 1950 வரை நம் ஜிடிபி சராசரியாக 0.22 சதவிகிதம்தான் இருந்தது. அது தவிர சுதந்திரம் வந்த போதுதான் இரண்டாம் உலகப்போர், வங்கப் பஞ்சம், பிரிவினை கலவரம், அகதிகள் மறுகுடியிருப்பு இவற்றில் இருந்து தேசம் மீளுவதற்கு முயன்று கொண்டிருந்தது. 17 சதவிகிதமே படிப்பறிவு இருந்த, உணவுப் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருந்த தேசத்தில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு பெரும் செலவு செய்த இந்தியாவைப் பார்த்து மேற்குலகம் கைகொட்டி சிரித்தது. போதாக்குறைக்கு உலகப் போருக்காக இந்தியாவின் கஜானாவை பிரிட்டிஷ் அரசு காலி செய்து விட்டுப் போயிருந்தது.

இந்தப் பின்னணியில்தான் நேரு தன் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருந்தார். கனரகத் தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், உயர்நிலைக் கல்வி நிலையங்கள், கலைப் பண்பாட்டுக் கழகங்கள் என்று அவர் ஆட்சியில் கட்டப்பட்டன. வெற்றிகரமாக பொதுத் தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெற்று சட்டபூர்வமாக இந்தியாவின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

உண்மையில் நேருவின் தேவை அங்கே பொருளாதார வளர்ச்சிக்கு இருக்கவில்லை. தேசத்தைக் கட்டமைப்பதற்கு தேவைப்பட்டது. அதற்காக செலவுகள் செய்ய வேண்டி இருந்தது. அந்த செலவுகளை தயக்கமின்றி அவர் செய்தார். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. தொழிற்பேட்டைகள் உருவாகின. தான் நம்பிய சோஷலிசம் இந்தியாவை மீட்கும் என்று உண்மையிலேயே நம்பினார் நேரு. சொல்லப்போனால் அவர் மட்டுமல்ல, ராஜாஜி ஒருவரைத்தவிர ஒட்டு மொத்த இந்தியாவே அப்போது சோஷலிசத்தை நம்பியது. நேரு பின் நின்றது. (இந்தியாவின் தொழிலதிபர்களும் அப்போது மத்திய அரசு பொருளாதார திட்டமிடுதலையும், கனரக தொழிற்சாலைகள் அமைப்பதையுமே ஆதரித்தார்கள்.)

அதுவுமின்றி, நேருவின் சோஷலிசம் என்பது மேற்கத்திய சோஷலிசம் இல்லை. சோவியத்தின் மத்திய திட்டமிடுதல், ஐரோப்பிய நலத்திட்டக்கொள்கைகள் இரண்டையும் இணைத்து, ஜனநாயக கட்டமைப்புகளோடு சேர்த்து தானாகவே ஒரு கொள்கை வடிவத்தை நேரு முன்னெடுத்தார். அதாவது அவரின் கொள்கை நேருவியன் சோஷலிசம் (Nehruvian Socialism) என்று குறிப்பிடும் அளவுக்கு தனித்த சிந்தனாவாதமாக இன்று உருப்பெற்று இருக்கிறது. அவர் அரசியல் தலைவர் மட்டுமின்றி பொருளாதார, அரசியல் தத்துவவாதியாகவும் திகழ்ந்தார். Not just a politician, but a learned political and economic philosopher.

சரி, நேரு பொருளாதாரத்தில் தோற்றார் என்று எக்களிக்கும் மோடியின் ரெக்கார்டை இப்போது பார்ப்போம்.

பொதுத்துறை

நேருவின் மேல் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவித்து வளர்த்தார். அவை அரசு கஜானாவை காலி செய்கின்றன. ஊழலின் மொத்த உருவமாகத் திகழ்கின்றன என்பது. இப்படி நடக்கும் என்று தன் காலத்தில் நேரு எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது ஒருபுறம் இருக்க, இன்றைய தேதிக்கு அவை பிரயோசனமில்லை என்றே பார்த்தாலும் அந்த விஷயத்தில் மோடி செய்ததுதான் என்ன?

தாராளமயம் துவங்கிய பிறகுதான் பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய கசப்புணர்வு மக்கள் மற்றும் பொருளாதார அறிஞர்கள் மத்தியில் பரவலாக ஆரம்பித்தது. அதையொட்டி, தொண்ணூறுகள் முதல் வந்த அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க ஆரம்பித்தன. மோடியின் அரசியல் குரு வாஜ்பாய் காலத்தில் இந்த விற்பனை வெகு ஜரூராக நடந்தது. ஆனால் மோடி? தன் ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்த தனியார்மயமாக்குதலில் மோடி எந்த அடியும் எடுத்து வைக்கவில்லை. எந்தப் பெரிய பொதுத்துறை நிறுவனமும் தனியார் மயமாகவில்லை. அம்பானி மற்றும் அதானிகளுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு உதவியது தவிர வேறு எந்தப் பெரிய தனியார் முதலீடும் இங்கே நடத்தப்படவில்லை.

ஜிடிபி

அடுத்தது ஜிடிபி வளர்ச்சி. இதில் இன்று வரை மன்மோகன் சிங்தான் சாதனையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் (ரெக்கார்ட் ஹோல்டர்.) அவர் ஆட்சியில்தான் இந்தியா இரண்டு இலக்க ஜிடிபி, அதாவது 10 விழுக்காட்டைத்தாண்டியது. உலகப் பொருளாதார வீழ்ச்சி 2008இல் இந்தியாவையும் பாதிக்கும் வரை அனாயசமாக 9% சராசரி பொருளாதார வளர்ச்சியை காட்டிக் கொண்டிருந்தார் சிங். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்குப் பிறகும்கூட தன் ஆட்சியின் கடைசி ஆண்டில் ஜிடிபி 7.5%க்குக்  கொண்டு வந்து நிறுத்தி விட்டுப் போயிருந்தார்.

மோடி ஆட்சியில் உலகப்பொருளாதார பாதிப்பு எதுவும் நடக்கவில்லை. அது தவிர, கச்சா எண்ணெய் விலையும் வெகுவாகக் குறைந்தது. கூட்டணி ஆட்சியின் அழுத்தங்கள் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி அமைத்த வசதி வேறு. இப்படி எல்லா விஷயங்களும் அவருக்கு சாதகமாகவே இருந்தாலும் அவர் ஆட்சியில் ஜிடிபி வெகுவாகக் குறைந்தது. 2016இல் 7.1%, 2017இல் 6.6% என்று குறைந்தது. இதனை சரிக்கட்ட வேண்டி மோடி அரசு ஜிடிபி கணக்கிடும் முறையையே மாற்றியது. பழைய கணக்கெடுக்கும் முறை தவறு என்று வாதிட்டு புது முறையில் ஜிடிபி கணக்கெடுக்கும் முறையை கொண்டு வந்தது இந்த அரசு. அதன்படி மன்மோகன் அரசின் சராசரி ஜிடிபி 6.9% சதமாக குறைக்கப்பட்டது. மோடி அரசின் சராசரி 7.35%ஆக உயர்த்திக் காட்டப்பட்டது.

அதாவது உங்களுக்கு பத்தாம் வகுப்பு மார்க் குறைகிறது. உங்கள் அண்ணனுடன் உங்களை ஒப்பிட்டு அம்மா திட்டுகிறாள். என்ன செய்வீர்கள்? மதிப்பெண் வழங்கும் முறையையே மாற்றி உங்கள் அண்ணனின் மார்க்கை உங்களுக்கு நிகராகக் குறைத்து விட்டு, இப்போ பார் என்கிறீர்கள்!

இப்படித்தான் இந்த அரசு செய்திருக்கிறது.

வளர்ச்சி ஆய்வுகள் / புள்ளி விபரங்கள்

சரி, ஜிடிபி தரவுகளை அரசு கட்டாயமாக பதிப்பித்தாக வேண்டும். வேறு வழியில்லை. ஆகவே இப்படி கணக்கிடும் முறையை மாற்றி தப்பித்து விட்டார்கள். ஆனால் மற்ற, ‘பிரயோசனமில்லாத’ அறிக்கைகள் எதற்கு என்று விட்டு விட்டார்கள். வேலை வாய்ப்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதை 2016இல் அரசு நிறுத்தி விட்டது. விவசாயிகள் தற்கொலை பற்றி மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து அறிக்கைகள் சமர்ப்பித்து வந்தது. அதையும் நிறுத்தி விட்டது. அதாவது அதிகாரபூர்வமாக 2016இல் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை.

ஆனால் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கசிகின்றன. அவற்றின்படி, ஊரகப்பொருளாதாரம் பெருமளவு நசிந்து போய் இருக்கிறது. நாற்பது வருடங்களில் இல்லாத வேலையின்மை பிரச்சினை இப்போது நிலவுவதாக தெரிய வருகிறது. மத்திய அரசு அதை மறுத்தாலும் அதற்கு மாறாக வேறு தரவுகள் எதையும் இதுவரை வழங்கவில்லை. இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமரும் பொத்தாம் பொதுவாக பிஎஃப் கணக்குகளை வைத்து ஏதோ பேசினாரே தவிர அவரும் அதிகாரபூர்வமாக எதையும் முன்வைக்கவில்லை. அந்த பிஎஃப் கணக்கும் கூட தவறு என்பது வேறு விஷயம். மொத்தத்தில் அரசிடம் வேலையின்மை பற்றிய எந்தத் தகவலும் இல்லை என்பதுதான் மிகவும் கவலைக்குரிய உண்மை.

அதேபோல பணநீக்கம் இந்தியாவின் பொருளாதாரத்தை, குறிப்பாக ஊரகப் பொருளாதாரத்தை நசித்தது என்று நிறைய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அரசுத்தரப்பில் இதுவரை பணநீக்கத்தின் விளைவு பற்றி, சாதக பாதகங்கள் பற்றி எந்த வெள்ளை அறிக்கையும் வரவில்லை.

அடுத்தது அரசு கொண்டு வந்த அதிரடி ஜிஎஸ்டி. இதிலும் சிறு / குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன என்று அதிகாரபூர்வமற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் அரசோ அது பற்றிய எந்தத் தகவலையும் தராமல் இருக்கிறது. ஜிஎஸ்டியின் பாதிப்புகள் பற்றி அரசு தரப்பில் ஏதாவது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா என்பதே தெரியவில்லை.

ஆக, பொருளாதார வளர்ச்சியில் நேருவை முறியடித்தார்களா இல்லையா என்பதே இந்த அரசுக்கு இப்போது தெரியாது. தகவல் ஏதாவது இருந்தால்தானே ஒப்பிடுவதற்கு?

சரி, நேருவை முறியடிப்பது இருக்கட்டும். நரசிம்ம ராவ், மன்மோகன் சிங், ஏன் அவர் குரு வாஜ்பாய் அரசின் பொருளாதார சாதனைகளைக் கூட மோடி அரசு முறியடிக்க இயலவில்லை. பொருளாதாரம் வீழ்ந்துவிடவில்லை, ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று நிலைநிறுத்துவதற்கே முட்டி மோதி கணக்கீடுகளை மாற்றி, அறிக்கைகளை எல்லாம் நிறுத்தி மூச்சு வாங்க வேண்டி இருக்கிறது.

அரசின் கொள்கை முடிவுகளின் விளைவுகளை அறிந்து கொள்ள, தரவுகளை ஆய்ந்து, அறிக்கைகள் பதிப்பிப்பதற்கு நேரு கடும் முயற்சிகளை மேற்கொண்டார். புள்ளியியல் துறை நிபுணரான அவரது நண்பர் மகலனோபிஸ் என்பவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு அவரை திட்டக்கமிஷன் தலைவராக்கி நிறைய முன்முயற்சிகளை எடுத்தார். இன்றைக்கு அவரை விமர்சிக்க நாம் பயன்படுத்தும் நிறைய தரவுகள் கூட கடும் முயற்சி எடுத்து அவரே உருவாக்கி விட்டுப் போனதுதான்.

ஆனால் இருந்த தரவுகளை எல்லாம் ஒளித்து விட்டு, மீதமிருப்பவைகளை மாற்றி விட்டு, ஆனால் கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் இந்த அரசு நேருவை விமர்சிக்க வாயை வேறு திறக்கிறது.

சீனா

அடுத்தது சீனாவிற்கு வருவோம். முதலில் எல்லைப்பிரச்சினை என்பது பிரிட்டிஷ் காலத்திய எச்சங்களில் ஒன்று. இந்திய எல்லைகளை வரைய முற்படும் போது காலனிய அரசு தன்னிச்சையாக சீனப்பகுதிகளையும் சிலவற்றை சேர்த்து வரைந்து கொண்டது. கொஞ்சம் முனகினாலும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து பலவீனமான சீனாவால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் மா சே துங் தலைமையில் ஒன்றுபட்ட, பலம் வாய்ந்த தேசமாக உருப்பெற்றதும் எல்லைகளை மாற்ற இந்தியாவிடம் மன்றாடியது. சீனப்பிரச்சனையை முடிந்தவரை தீர்க்க நேருவும் தன்னளவில் முயற்சி செய்தார். ஆனால் தலாய் லாமாவுக்கு இந்தியாவில் தஞ்சம் கொடுத்தது சீனாவின் கோபத்தை கிளறி, போரில் கொண்டு போய் விட்டு விட்டது.

நேரு செய்த துணிச்சலான விஷயங்கள் இங்கே இரண்டு: ஒன்று இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்காமல் சம அளவில் பேச்சுவார்த்தை களை நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாமே வெளிப்படையாக பொதுமக்கள், ஊடகங்கள் முன்னிலையில் நடந்தது. இரண்டாவது: சீனாவைப் பகைத்துக் கொள்வோம் என்று தெரிந்தும் தலாய் லாமா மற்றும் அவருடன் வந்த திபெத்தியர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.

சீனப்போரில் தோற்றோம் என்பதை நேருவின் தோல்வியாகப் பேசுகிறார்கள. அந்தப்போர் வரை இந்திய ராணுவம் ஏறக்குறைய பிரிட்டிஷ் விட்டு விட்டுப்போன நிலையிலேயே இருந்தது. ஏனெனில் போர் பற்றிய பெரிய கவலை நமக்கு இருக்கவில்லை. காந்தி தேசம் என்று உலக அளவில் பெயரெடுத்த நாடு, அஹிம்சை வழிப்போராட்டத்தை முன்னெடுத்து இதர காலனி நாடுகளுக்கெல்லாம் உதாரணமாக இருந்த நாடு, அதுவும் காந்தியின் சீடன் ஒருவர் ஆட்சியில் இருக்கும் போது ராணுவத்தை பலப்படுத்தி இருந்திருந்தால் பெரும் கேலியும் கிண்டலுமே கிடைத்திருக்கும்.

ஆகவே, சீனப்போருக்குப் பிறகுதான் ராணுவத்துக்காக மத்திய அரசு நிஜமாக செலவழிக்க ஆரம்பித்தது. 1960 வரை மொத்த ஜிடிபியில் 2 சதம் மட்டுமே ராணுவத்துக்கு செலவு செய்து வந்த இந்தியா 1963இல் 4.02 சதம் செலவு செய்தது. அது முதல் 3, 4 சதவிகிதம் என்ற அளவில் ராணுவத்துக்கு செலவு செய்வது தொடர்கிறது.

தலாய் லாமா

இப்போது இன்றைய பிரதமருக்கு வருவோம். முதலில் துணிச்சல் பற்றிய கேள்வி. பிரதமரின் விரிந்த மார்பளவு குறித்து நம் எல்லாருக்கும் தெரியும்தானே. அது குறித்து பார்ப்போம். தலாய் லாமா தன் சகாக்களுடன் இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்து 60 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் திபெத்திய சமூகத்தினர் ‘இந்தியாவுக்கு நன்றி’ (Thank You India)

எனும் நிகழ்ச்சியை தில்லியில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சி சீனாவுக்கு கோபமூட்டக் கூடும் என்று சர்ச்சை கிளம்பியது. பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பியது. விளைவாக, அரசுக்கு சங்கடம் தருவிக்க வேண்டாம் என்று தலாய் லாமா அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்து விட்டு பின்னர் அவர் வசிப்பிடமான  தர்மஸ்தலாவில் சிறிய அளவில் அதனை நடத்தி முடித்துக் கொண்டார்.

அதாவது, சீனாவை நம்பி, அவர்களோடு நட்பு பாராட்ட முயன்ற நேருவின் அணுகுமுறை இவர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்திருக்கிறது. ‘இந்தி சீனி பாய் பாய்’ என்ற பதம் ஆர்எஸ்எஸ்சால் தொடர்ந்து கிண்டலடிக்கப்பட்டு வந்திருக்கிறது. (ஹேராம் படத்தில் இந்துத்துவ போராளி ஸ்ரீராம் அப்யங்கரும் இதனைக் குறிப்பிட்டு கிண்டலடித்து சிரிக்கும் காட்சி வரும்.) அதே சமயம், ஆரம்பம் முதலே சீனாவை சந்தேகப்பட்டு அவர்களோடு விரோதம் பாராட்ட வேண்டும் என்று சொல்லி வந்த படேல்தான் இவர்களின் ஆதர்ச புருஷராகப் பாராட்டப்படுகிறார்.

ஆனால் பாருங்கள், கடைசியில் நேருதான் சீனாவுக்கு எதிராக துணிச்சலான முடிவுகளை எடுத்து தலாய் லாமாவுக்கு தஞ்சம் கொடுத்தார். போரையும் எதிர்கொண்டார். மோடியோ சீனாவை விரோதித்துக்கொள்ள வேண்டாம் என்று தன் சொந்த ஊரான தில்லியிலேயே ஒரு நிகழ்ச்சி நடத்திக் கொள்ளக்கூட தலாய் லாமாவை அனுமதிக்கவில்லை. அந்த நிகழ்ச்சி நடந்திருந்தாலும் கூட போரெல்லாம் வந்திருக்காது. என்ன, சீனா தன் தூதரகத்தின் மூலம் ஒரு அதிகாரபூர்வ கண்டனத்தை தெரிவித்து இருந்திருக்கும். அவ்வளவுதான். ஆனால் அதற்கே கூட வம்பு வேண்டாம் என்று நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்து விட்டார் மோடி.

நேரு, மோடி இருவரில் யாருக்கு உண்மையிலேயே விரிந்த மார்பளவு இருந்தது என்ற முடிவை வாசகர்களுக்கே விட்டு விடுகிறேன்.

எல்லைப் பிரச்சினை

சரி, தலாய் லாமாவை விட்டு விடுவோம். அவரைத்தாண்டியும் சீன விஷயத்தில் நாம் தீர்க்க வேண்டிய எல்லைப்பிரச்சினை பாக்கி இருக்கிறது. அதில் ஒரு முக்கியமான கேள்வி: சீன எல்லை விஷயத்தில் பிரதமரின் நிலைப்பாடுதான் என்ன? எல்லைப்பிரச்சினையில் மோடி ஏதாவது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா என்பதே தெரியவில்லை. அதன் சான்றாக டோக்ளாம் சிக்கலை எடுத்துக் கொள்வோம்.

டோக்ளாம்

இந்தியா-பூடான் எல்லைப்பகுதியில் டோக்ளாம் என்ற சர்ச்சைக்குரிய பகுதியில் சீன ராணுவம் சாலைகள் கட்டமைப்பது தெரிய வந்தது. இது இந்தியாவுக்கும், குறிப்பாக பூடானுக்கும் ஆபத்தான நடவடிக்கையாக இருந்தது. பின்னர் இருதரப்பும் சமாதானமாகி விட்டார்கள் என்று அறிவிப்புகள் வந்தாலும் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிவிக்கப்படவே இல்லை. டோக்ளாம் மேல் தனக்கு இருந்த உரிமையையும் சீனா விட்டுக்கொடுத்ததாக எந்த அறிவிப்பும் வரவில்லை. பின்னர் அவ்வப்போது சீன ராணுவத்தின் இருப்பு அங்கே தொடர்வதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டே வந்து, கொஞ்ச காலத்தில் அப்படியே நம் நினைவில் இருந்து விஷயம் மறைந்து விட்டது.

பேச்சுவார்த்தை

பின்னர் சீன அதிபர் ஜி ஜிங்பின்னுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இது அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை என்று தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால் இந்தப் பேச்சுவார்த்தையின் விபரங்கள் எதுவும் இந்திய மக்களுக்கோ நாடாளுமன்றத்துக்கோ தெரிவிக்கப் படாது என்பதுதான் அர்த்தம். சொன்ன மாதிரியே எதுவும் தெரிய வரவில்லை. என்ன பேசினார்கள், ஏதாவது ஒப்பந்தங்கள் எட்டப்பட்டதா, எதுவும் தெரியாது.

சரி, நூறாண்டு கால விஷயங்கள் ஒரே அமர்வில் தீர்க்கப்பட்டு விடாது என்பது உண்மைதான், எனினும் அதன் தொடர்ச்சியாக மறு பேச்சுவார்த்தைகளோ, வேறு முன்னேற்றங்களோ நடந்ததாக நமக்குத் தகவலில்லை.

இப்போது நேருவின் அணுகுமுறையுடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்போம். சீனா பற்றிய தன் கொள்கையைத் தெளிவாக வரையறுத்து முன் வைத்திருக்கிறார். அந்தக்கொள்கை இந்தியாவின் நலனை ஒட்டியதாகவே இருந்திருக்கிறது. (சர்ச்சைக்குரிய பகுதிகளை விட்டுக்கொடுக்க நேரு சம்மதிக்கவில்லை.) அதற்காக தன் ஆட்சிக்காலம் முழுவதும் பல்வேறு பேச்சுவார்த்தைகள், சீனாவுக்கு பயணங்கள் என்று நடத்தி இருக்கிறார். அவை குறித்த விபரங்களை நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் சமர்ப்பித்து இருக்கிறார். அவற்றில் நடந்த பின்னடைவுகளை அவரே குறிப்பிட்டு வருத்தங்களும் தெரிவித்து இருக்கிறார். அதாவது, இன்று அவரை விமர்சிக்க அவரே பாய்ண்ட் பாயிண்டாக நமக்குக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் சீனா விஷயத்தில் மோடியை விமர்சிக்க எதுவுமே நம்மிடம் இல்லை. ஏதாவது தெரிந்தால்தானே பாராட்டுவதற்கோ விமர்சிப்பதற்கோ!

ஒரு விஷயத்தை குறிப்பாக இங்கே கவனிக்க வேண்டும்: சீனப்பிரச்சனையைத் தீர்க்க நேரு அளவுக்கு முயற்சி எடுத்த வேறு பிரதமர் யாரும் இல்லை. அதே சமயம் சீனப்பிரச்சனையில் மோடி என்னதான் செய்தார் என்பதற்கு ஒரு தகவலும் இல்லை. சீனா விஷயத்தில் இந்தியப் பிரதமர்கள் எடுத்த முயற்சிகளை அளவிட்டு வரிசைப்படுத்தினால் நேரு முதல் இடத்திலும், மோடி கடைசி இடத்திற்கு ஓரிரு இடங்கள் மேலேயும் இருப்பார் என்று கணிக்கிறேன். (அதற்குக் காரணம் குல்சாரி லால் நந்தா, தேவ கவுடா போன்றோர் எதுவும் முயற்சிக்கவில்லை.  அதற்கு அவர்களுக்கு போதிய அவகாசமும் இருக்கவில்லை.)

காஷ்மீர்

கடைசியாக காஷ்மீருக்கு வருவோம். இது நேருவின் தலையாய தவறாக பாஜகவினரால் தூற்றப்படுகிறது. நேருவுக்கு பதில் வேறு ஒருவர் இருந்திருந்தால் காஷ்மீர் சுமுகமாக இந்தியாவுடன் இணைந்திருக்கும் என்பது இவர்கள் நம்பிக்கை. கொஞ்சம் பாமரத்தனமான சிந்தனை இது என்று சொல்ல வேண்டியதில்லை.

பாகிஸ்தான் என்கிற தனிநாட்டு சிந்தனையை முன்னெடுக்கும் போதே அதில் காஷ்மீரும் இருந்திருக்கிறது என்பதை இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் ‘P’unjab, ‘A’fghan, ‘K’ashmir, ‘S’indh மற்றும் Baluchistan இல் இருந்த ‘ஸ்தான்’ இவற்றை இணைத்துதான் பாகிஸ்தான் என்ற வார்த்தையே உருவாக்கப்பட்டது. (இது 1933லேயே அறிவிக்கப்பட்டது. அப்போது அது Pakstan  என்றுதான் எழுதப்பட்டது. அதில் ‘i’  பின்னர்தான் சேர்க்கப்பட்டு Pakistan  என்று ஆனது.)

அதாவது அவர்களைப் பொருத்தவரை காஷ்மீர் இல்லாமல் பாகிஸ்தான் முழுமையடையவே அடையாது. அப்படி இருந்ததால்தான் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க ஜின்னா பெருமுயற்சிகள் எடுத்தார். ஹைதராபாத், ஜூனாகாத் போன்ற பகுதிகள் இந்தியாவுடன் இணைந்த போது கூட பாகிஸ்தானில் எழாத பெரும் கொந்தளிப்பு, காஷ்மீர் இணைந்த போது அங்கே நடந்தது. இப்படி பாகிஸ்தானின் அடிமடியிலேயே கைவைத்ததுதான் நேரு செய்த சாதனை. அதுவே அவரின் தவறும் கூட. அதனை உணர்ந்துதான் அவர் பிரச்சினையை ஐநாவுக்கு கொண்டு போனார். பொதுவாக்கெடுப்பு நடத்தவும் இந்தியா ஒப்புக்கொண்டது.

நேருவும் காஷ்மீரும்

அதாவது நேருவுக்கு காஷ்மீர் மேல் இருந்த காதல்தான் பாதிக்குப் பாதியாவது காஷ்மீர் இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிருப்பதற்குக் காரணம். அதுதான் அவர் தவறும், சாதனையும் கூட. ஆயினும் தன் ஆட்சிக்காலம் முழுவதும் ஷேக் அப்துல்லா மூலமும், தானாகவும் இந்தப்பிரச்னைக்கு சுமுக முடிவு எட்டும் முயற்சிகளை முயன்று கொண்டே இருந்தார்.

வாஜ்பாயும் காஷ்மீரும்

நேருவுக்குப் பிறகு காஷ்மீர் பிரச்சனையில் குறிப்பிடத்தகுந்த முயற்சிகள் எடுத்த அடுத்த பிரதமர் வாஜ்பாய்தான். அவருக்கு முன் இருந்த பிரதமர்கள் எல்லாரும் இந்தப்பிரச்சினையை ‘அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுதான் தீர்ப்போம்,’ என்றே முழங்கி வந்தார்கள். அதாவது சாசனப்படி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, எனவே வாயை மூடிக்கொண்டு இந்தியாவுடன் தொடர்ந்து வாழுங்கள்  என்று அர்த்தம். ஆனால் வாஜ்பாய் மட்டும்தான் முதன் முதலில் ‘சாசனப்படி அல்ல, மனித நேயப்படி இதனை அணுகுவேன்’ என்று அறிவித்தார்.  ‘இன்ஸானியத், காஷ்மீரியத், ஜம்ஹூரியத்’ – அதாவது மனிதநேயம், காஷ்மீரியம், ஜனநாயகம் என்று இதற்கு அர்த்தம். இந்த கோஷம் காஷ்மீர் எங்கும் எதிரொலித்துப் பெரும் உணர்வுகளைக் கிளப்பியது. இந்தியா மீது காஷ்மீர் தலைவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.

மோடியும் காஷ்மீரும்

இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம். பிரதமராக பொறுப்பேற்ற போது மோடி காஷ்மீர் விஷயத்தில் வாஜ்பாய் அணுகுமுறையையே பின்பற்றுவேன் என்று முழங்கினார். ‘வசைகளும் தோட்டாக்களும் அல்ல, கட்டியணைத்தல்தான் நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்’ என்றார். அதைக்கேட்ட நமக்கெல்லாம் நம்பிக்கை பிறந்தது. வாஜ்பாய் விட்ட பணியை இவர் முடிப்பார் என்று நம்பினோம்.

ஐந்தாண்டுகள் கழிந்தது. பாகிஸ்தானுடனோ, காஷ்மீர் தலைவர்களுடனோ எந்தப்பேச்சுவார்த்தையும் நடந்ததற்கு அறிகுறிகள் இல்லை. எந்த முன்னேற்றமும் எட்டப்பட்டதாக தகவல் இல்லை. திடுதிப்பென்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் பாகிஸ்தான் பயணம் செய்து நவாஸ் ஷெரிஃப் வீட்டுக்குப் போனதுதான் அவர் செய்த ஒரே அதிரடி. அதைத்தவிர எல்லாம் அப்படியே இருக்கிறது. எல்லை அத்துமீறல்கள் தொடர்கின்றன. சொல்லப்போனால் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஆண்டு மொத்தம் 2,836 எல்லை அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன. இது கடந்த பதினைந்து ஆண்டுகளை விட அதிகம். சென்ற காங்கிரஸ் ஆட்சியில் குறைந்திருந்த இந்த அத்துமீறல்கள், பாஜக ஆட்சிக்கு வந்ததும் வருடா வருடம் அதிகரித்து கடைசியில் கிட்டத்தட்ட மூவாயிரத்தை எட்டி இருக்கிறது.

இதுதான் காஷ்மீர் விஷயத்தில் பிரதமர் மோடியின் சாதனை. இதைத் தவிர்த்து அங்கே அவர் என்ன செய்தார் என்ற தகவல் என்னிடம் இல்லை. நேரு செய்த யாவையும் நம்மிடம் இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தை ஐநாவுக்குக் கொண்டு சென்றது தன் தவறு என்பதைக்கூட அவரே எழுதி விட்டுத்தான் போயிருக்கிறார். அதாவது அவரே ஒப்புக்கொண்ட விஷயத்தை வைத்துதான் அவரை விமர்சித்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் பாருங்கள், பிரதமர் மோடியை எந்த விஷயத்திலும் நம்மால் விமர்சிக்க முடியாது. ஏதாவது செய்தால்தானே பாராட்டுவதற்கோ விமர்சிப்பதற்கோ!

முடிவுரை

பொருளாதாரம், சீனா, காஷ்மீர் இந்த மூன்று விஷயத்திலும் நேரு தெளிவான கொள்கைகளை முன்வைத்து இயங்கினார். அதில் தன் முடிவுகளை வெளிப்படையாக எடுத்தார். அவற்றை மக்களுக்கு விளக்கினார். ஒரு ஜனநாயக அரசின் தலைவர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி நடந்து கொண்டார்.

ஆனால் பிரதமர் மோடி இந்த மூன்று விஷயங்களிலும் தன் கொள்கையைத் தெளிவாக விளக்கியதே இல்லை. (காஷ்மீர் விஷயத்தில் விளக்கியதற்கு மாறாக வேறு நடந்து கொண்டார்.) அவற்றில் தான் எடுத்த நடவடிக்கைகளை வெளிப்படையாக விவரித்ததே இல்லை. அவற்றின் விளைவுகளுக்கு பொறுப்பேற்கவும் தயாராக இல்லை.

ஆனால் நேரு நாட்டைக் கெடுத்து விட்டார் என்று குற்றம் சுமத்தவும், தனக்கு 56 இஞ்சு அளவு விரிந்த உறுதியான மார்பளவு இருப்பதை சொல்லிப் பெருமை பீற்றிக்கொள்வதிலும் தயங்குவதே இல்லை.

ஆனால் இன்றைக்கு பாஜக அபிமானிகள் என்ன செய்கிறார்கள்? தரவுகளற்ற, உணர்வுபூர்வமான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். தேசபக்தியைக் கிளறி விடுகிறார்கள். தேசத்தின் மேல் வெறும் பக்தி இருந்தால் மட்டுமே போதும் என்று இப்போது ஆகி விட்டது. அதாவது மோடி பொருளாதாரத்தை இந்த அளவு உயர்த்தி விட்டார் அல்லது  வேலை வாய்ப்பை அதிகரித்து விட்டார், காஷ்மீர் பிரச்சனையில் முன்னேற்றம் கொண்டுவந்து விட்டார், எனவே அவருக்கு வாக்களியுங்கள் என்று பேச முடியவில்லை.

எனவே நீங்கள் உண்மையான தேசபக்தராக இருந்தால் மோடிக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள்.